http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 45

இதழ் 45
[ மார்ச் 16 - ஏப்ரல் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

குறத்தியறை
திரும்பிப் பார்க்கிறோம் - 17
அப்பர் என்னும் அரியமனிதர் - 2
இராஜராஜனின் வாசுதேவனே நம:
கழனி சூழ் பழனம் பதி
Alathurthali in Malayadipatti
1000 ரூபாய்த் திட்டம்
நினைத்தது நடந்தது
இதழ் எண். 45 > பயணப்பட்டோம்
கழனி சூழ் பழனம் பதி
சு.சீதாராமன்

"மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிட நான் கடவேனோ"


என்று "அப்பர் என்ற அரிய மனிதரும்"


"வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெரு தேறிப்
பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே"


என்று "ஆளுடைய பிள்ளையாரும்" "திருப்பழனம்" திருக்கோயிலில் பதிகம் அருளிச் செய்துள்ளனர்.





திருப்பழனம் கும்பகோணம் திருவையாறு சாலையில் திருவையாறிலிருந்து 3 கி.மீ தொலைவில் காவிரியாற்றின் வடகரையில் 50 வது திருத்தலமாக இயற்கை அழகுடன் கூடிய அழகான கிராமமாக அமைந்துள்ளது. திருவையாற்றிலிருந்து வரும் பொழுதும், குடந்தையிலிருந்து வரும்பொழுதும் ஊருக்குள் நுழைவதற்கு முன் நம்மை சாலையின் இருமருங்கிலும் எழிலுடன் அமைந்த தென்னை மரங்கள் வரவேற்கின்றன.தென்னையும்,வாழையும்,கரும்பும் உள்ள "கழனி"கள் ஊரைச்சுற்றி அமைந்துள்ளன.

திருநாவுக்கரசர் காலத்தில் இப்பதி இன்னும் அழகுடன் பொலிந்திருக்க வேண்டும். இது திருவையாற்று ஸப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பூதி அடிகளுடைய அவதாரத் தலமாய திங்களூர் இதற்கு அண்மையில் உள்ளது. இங்கு வழிபட வந்த அப்பர் அடிகள் இத்தலப் பதிகத்தில்

"வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே"


என்று அப்பூதிநாயனார் திருப்பெயரை அமைத்து அருளிச்செய்தார்கள். விடந்தீர்த்த பதிகமாகிய "ஒன்று கொலாம்" என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமானதலம் இது.





இறைவன் பெயர் ஆபத்சகாயர். அம்மையின் பெயர் பெரிய நாயகி. திங்களூர்-அப்பூதிநாயனார்-அப்பர் அடிகள் என்றவுடன் "திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்" ஞாபகத்திற்கு வந்தது. எங்காவது கண்ணில் படுகிறதாஎன்று துழாவியதில் நுழைவாயில் கோபுரத்தில் சுதைச்சிற்பமாக "திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தலை" கண்டு களிப்புற்றோம்

இனி இக்கோயிலின் அமைப்பைக் காண்போம்.

இக்கோயிலின் உள்ளே நுழைந்து ஆபத்சகாயரை தரிசித்து ஒரு சுற்று வலம் வரலாம் என்று எண்ணி மகா மண்டபத்திலிருந்து வெளியேறி ஒரு சுற்று வலம் வரும் போது நாம் காணும் காட்சி நம்மை அசர வைக்கும். இவ்வளவு அழகான திருக்கோயில் இன்னும் தொல்லியல் துறையின் கண்களில் படாமல் போனது நம் அனைவரின் துரதிஷ்டமே என்று எண்ணிக்கொண்டோம். நல்ல நிலையில் உள்ள திருக்கோயில், பராமரிப்புக் குறைவினால் ஆங்காங்கே செடிகள் முளைத்து கோயிலின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்து மனம் பொறுக்காமல் இச்செய்தியை டாக்டர் இரா.கலைக்கோவன் ஐயா அவர்களிடம் தெரிவித்தேன்.அவரும் மனம் வருந்தியதோடு நீங்களே உங்கள் ஆட்களுடன் சென்று அங்குள்ள "களை"களை அகற்றிவிடுங்கள் என்று அன்புக்கட்டளை இட்டுள்ளார். இம்மாத இறுதிக்குள் அப்பணியைச் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். இறைவன் திருவுள்ளம் இரங்க வேண்டும்.





நிலதில் விதை தூவி நீர் விட்டு பராமரிக்கப்படுகின்ற பயிர்கள் கூட இவ்வளவு செழிப்புடன் வளர்வதில்லை. இப்பாறையில் விதை தூவி இவ்வளவு செழுமையுடன் பயிர் செய்தது யார் என்று எண்ணும் போது வியப்புதான் மேலிடுகிறது. (படம் பார்க்க்கவும் - பாறையில் வேர் விட்ட செடி பூத்துக் குலுங்கும் காட்சி). சரி நம் ஆதங்கப்படுவதை சற்று நிறுத்திவிட்டு இத்திருக்கோயிலின் அமைப்பை ஆராயப்புகுவோம்.

இத்திருக்கோயிலின் அதிஷ்டானம், உபானம், ஜகதி, எண்பட்டைக்குமுதம் கண்டம், பட்டிகை மற்றும் வேதிகைத் தொகுதி பெற்று பாதபந்த தாங்குதளமாக அமைந்துள்ளது. விமானம் இரண்டு தளங்களுடன் கூடிய நாகர விமானமாக அமையப்பெற்று எழிலுடன் காட்சியளிக்கிறது.





உபானம் 2.5"(two and half inches) உயரமும், ஜகதி 14.5" உயரமும் எண்பட்டைக் குமுதம் 13" உயரமும், குமுதத்திகும் கண்டத்திற்கும் இடைப்பட்ட கம்பு 2" உயரமும் கண்டத் தொகுதி 4" உயரமும், கண்டத்திற்கும் பட்டிகைக்கும் இடைப்பட்டகம்பு 2" உயரமும், பட்டிகை 5.5" உயரமும்,பட்டிகைக்கு மேல் உள்ளகம்பு 2" உயரமும் அதற்கு மேல் வேதிகைத் தொகுதி 8" உயரமும் (சாலைப்பத்தியில் மட்டுமே வேதிகைத்தொகுதி உள்ளது) அதற்கு மேல் முதல் தள முடிவில் உள்ள கபோதத்தின் அடிப்பகுதி வரை 90.5" உயரம் ஆகக் கூடுதல் விமானத்தின் முதல் தள உயரம் 12'(Twelwe feet) ஆகும்.





கருவறையின் மேற்குப் பகுதியில் கர்ணப்பத்தி இருமருங்கிலும் 6'3" (six feet and three inches) அகலமும் , பஞ்சரப்பத்திஇருமருங்கிலும் 3'2" அகலமும், சாலைப்பத்தி 5'10" அகலமும் ஆகக் கூடுதல் விமானத்தின் முதல் தள அகலம் மேற்குப் பகுதியில் 24'8.5" ஆகும்.

கருவறையின் தெற்குப் பகுதியில் கர்ணப்பத்தி இருமருங்கிலும் 6'4" (six feet and four inches) அகலமும் , பஞ்சரப்பத்திஇருமருங்கிலும் 3'3" அகலமும், சாலைப்பத்தி 5'10" அகலமும் ஆகக் கூடுதல் விமானத்தின் முதல் தள அகலம் தெற்குப் பகுதியில் 25' ஆகும்.இரண்டு புறமும் உள்ள அகலத்தின் வேறுபாடு 3.5"(three and half inches) மட்டுமே. இந்த வேறுபாடு ஒரு அடியில் நான்கில் ஒரு பங்கைக் காட்டிலும் சற்று கூடுதலாகும். இவ்வளவை முழுமைப்படுத்தினால் பக்கத்திற்கு 25' கொண்ட சதுர வடிவ விமானமாகக் கொள்ளலாம்.

கருவறை மற்றும் அர்த்தமண்டபதிற்கிடையில் "அந்தராளம்" அமைந்துள்ளது. இந்த அந்தராளம் ஒரு கோட்டம் போலும் அமைந்துள்ளது. இதன் தெற்குப் பகுதியில் சிற்பம் இல்லாமலும் வடக்குப் பகுதியில் ஒரு "தேவன்" சிற்பமும் பெற்று அமைந்திருக்கிறது. தெற்கு,மேற்கு மற்றும் வடக்குப்பகுதிகளில் அமைந்த கர்ணப்பத்திகளில் எவ்வித சிற்பங்களும் காணப்படவில்லை

கருவறையின் தென் பகுதி பஞ்சரப்பத்தியின் இரு மருங்கிலும் இரண்டு தேவ சிற்பங்களும், கருவறையின் மேற்குப் பகுதி பஞ்சரப்பத்தியின் இரு மருங்கிலும் சிற்பங்கள் இல்லாமலும்,கருவறையின் வடக்குப் பகுதி பஞ்சரப்பத்தியின் வலது புறம் ஒரு சிற்பமும், இடது புறம் இல்லாமலும் அமையப்பெற்றுள்ளது.



தென் பகுதி சாலைக் கோட்டம்


கருவறையின் தென் பகுதி சாலைக் கோட்டத்தின் நடுவில் சுகாசனத்தில், ஜடாமகுடமும் நெற்றிக்கண்ணும் பெற்று சிவனும் இடப்பக்கத்தில் தட்சிணாமூர்த்தியும் வலப்பக்கத்தில் கஜசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர்.



கங்காதரர்


கருவறையின் மேற்குப் பகுதி சாலைக் கோட்டத்தின் நடுவில் சுகாசனத்தில் தாமரை பீடத்தில் சிவன் அமர்ந்துள்ளார். சிவனின் வலப்பக்கத்தில் கங்காதரரும் இடப்பக்கத்தில் லிங்கோத்பவரும் உள்ளனர். கருவறையின் வடக்குப் பகுதி சாலைக் கோட்டத்தின் நடுவிலும், இடப்பக்கத்திலும் சுகாசனத்திலும் வலப்பக்கத்தில் உத்குடி ஆசனத்தில் யோகப்பட்டையுடனும் சிவனே காட்சியளிக்கிறார். அனைத்து சாலைக் கோட்டங்களிலும் நடுவிலமைந்த சிவன் ருத்ரகாந்தத் தூண்களால் அணைவு பெற்றும், கோட்டத்தின் இரு மருங்கிலும் உள்ள சிவன் ஒருபுறம் பிரம்மகாந்தத் தூண்களாலும்,ஒருபுறம் ருத்ரகாந்தத் தூண்களாலும் அணைவு பெற்று அழகுடன் அமர்ந்துள்ளார்.



மகேஸ்வரி


இத்திருக்கோயிலின் இரண்டாம் தளத்தில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வண்ணம் சப்த மாதர்களில் நான்கு பேர் நான்கு சாலைக் கோட்டங்களிலும் அமைவு பெற்றுள்ளனர். கிழக்கே நான்கு தலையுடன் கூடிய பிராமியும் , தெற்கே சென்னி,கரண்ட மகுடம் பெற்று கெளமாரியும்,மேற்கே வாராகியும் வடக்கே ஜடாபாரமும் மண்டை ஒட்டுடனும் மகேஸ்வரியும் அமைந்துள்ளனர். இந்நான்கு சாலைக் கோட்டங்களும் இருமருங்கிலும் விருத்த "ஸ்புடினிதம்" பெற்று எழிலுடன் காட்சியளிக்கின்றன.சாலைக் கோட்டங்களின் இருமருங்கிலும் அமைந்த கர்ணகூடுகளில் நின்ற நிலையில் எழிலான பெண் சிற்பங்கள் அமைந்துள்ளன.

இத்திருக்கோயிலின் இரண்டாம் தளத்திற்கு மேலே அமைந்துள்ள மகாநாசிகையின் நான்கு கோட்டங்களிலும் சிவனாரே நின்ற நிலையில் எழிலுடன் காட்சியளிக்கிறார்.



அம்மையப்பர்


கிழக்குக் கோட்டத்தில் உமாசகிதரும் ,தெற்குக் கோட்டத்தில் வீணாதரரும், மேற்குக் கோட்டத்தில் அம்மையப்பரும் வடக்குக் கோட்டத்தில் சந்திரசேகரரும் மிக்கஎழிலுடன் காட்சியளிக்கின்றனர். இந் நான்கு சிற்பங்களும் 4' உயரமும் 1'6" அகலமுமாக அமைந்துள்ளன. இந் நான்கு கோட்டங்களும் ருத்ரகாந்தத்தூண்களால் அணைவு பெற்றுள்ளன. இந் நான்கு கோட்டத்திலும் அமைந்த நாசிகைக்கூடுகளில் நான்கு வெவ்வேறு விதமான ஆலய வடிவங்கள் தெளிவுடன் காட்டப்பட்டுள்ளன.

இத்திருக்கோயிலில் காணப்படும் சிற்பங்கள், மற்றும் மாலைத்தொங்கல்கள் மிக்க அழகுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ளன. இவைகளை இந்நிலையில் மேலும் வீணாகமல் பராமரித்து வந்தாலே போதும். இக்கோயில் சந்தேகமில்லாமல் ஒரு கலைப் பெட்டகம். தொல்லியல் துறையும் , சுற்றுலாத்துறையும் கவனம் செலுத்தினால் இத்திருக்கோயில் மேலும் மெருகேறும் என்பதில் ஐயமில்லை.


-திருச்சிற்றம்பலம்-

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.