http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 55

இதழ் 55
[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
மணியான மணி
திரும்பிப்பார்க்கிறோம் - 27
கழுகுமலை பயணக் கடிதம் - 1
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2
Silpi's Corner-07
Thirumeyyam- 2
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
கோட்டகாரம்
இதழ் எண். 55 > பயணப்பட்டோம்
கழுகுமலை பயணக் கடிதம் - 1
ச. கமலக்கண்ணன்
இடம் : திருநெல்வேலி,
நாள் : 25 - டிசம்பர் - 2008.

அன்புள்ள லலிதாராம்,

உனது முகத்தில் வியப்புக் குறிகள் தோன்றுவதை ஊகிக்க முடிகிறது. நேற்று மதியம்தான் தொலைபேசியில் பேசினோம்! அதற்குள் ஒரு மடலா? என்று கேட்பது புரிகிறது. கழுகுமலைப் பயணத்திற்கு உன்னால் வரமுடியாமற்போனது குறித்து எங்கள் அனைவருக்கும் வருத்தம்தான். நீ மட்டுமல்ல; கோகுலும் பால.பத்மநாபனும் ரிஷியாவும்கூட வரமுடியவில்லை. பாவம் திரு. பத்மநாபன். இன்று காலைவரை வரமுடியும் என்று எண்ணியிருந்தவர், திடீரென்று வந்த சொந்த அலுவல் காரணமாக வரமுடியவில்லை என மிகவும் வருந்தினார். எனவே, உங்கள் நால்வருக்காகவும் மற்றும் வரலாறு.காம் வாசகர்களுக்காகவும் இப்பயணத்தைச் சுடச்சுடக் கடிதங்களாக எழுதிவிடலாம் என்று எண்ணித்தான் இக்கடிதம்.

நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில் திருச்சியை வந்தடைந்தேன். இப்பயணத்திற்காக நமக்கு வாய்த்த சாரதியோ மிகவும் கெட்டிக்காரர் மட்டுமன்று; நம்மைப்போலவே இளையராஜா விரும்பியும்கூட. இப்பயணம் முழுவதும் அவரது இளையராஜா MP3 தொகுப்பில் அனைவரும் சொக்கிப்போனோம். திருச்சியை அடைந்ததும் நேராக முனைவர். இரா. கலைக்கோவனின் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன். அங்கு தோழி ரிஷியாவைச் சந்திப்பதாகத் திட்டம். சீதாராமனும் வந்து சேர்ந்தார். அங்கு எதிர்பாராதவிதமாக திரு. வேலாயுதம் என்ற ஓர் இனிய நண்பரைச் சந்தித்தேன். டாக்டரின் நண்பர். திருச்சியில் ஒரு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு. சமீபத்தில் டாக்டருடன் சில பயணங்களில் உடன் சென்றிருக்கிறார். நமது மின்னிதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறார். நம் குழுவினரைச் சந்திக்கப் பெருவிருப்புக் கொண்டிருப்பதாக டாக்டர் கூறினார். சற்று நேரத்தில் வந்தவுடன் டாக்டர் அறிமுகப்படுத்தி வைத்தார். முதல்முறை சந்திக்கிறோம் என்ற தயக்கமே இல்லாமல், நீண்ட நாட்கள் கழித்துச் சந்திக்கும் நண்பர்கள்போல் மிக நெருக்கமாக உணர்ந்தோம். உலகறிந்த மனிதர். எல்லாத் துறைகளைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார். வரலாறு.காம் மின்னிதழை மேம்படுத்த நிறைய ஆலோசனைகளை வழங்கினார். இலாவண்யா மருத்துவமனைக்கு வருவதாக இருந்து பிறகு வரமுடியாமல் போய்விட்டதால் அவரிடம் தொலைபேசியில் பேசினார். டாக்டரின் வானொலிச் சொற்பொழிவுகளை இன்னும் பலருக்கு அறிமுகப்படுத்தவும் திட்டம் தீட்டி வருகிறார்.

சற்று நேரம் கழித்து ரிஷியாவும் வந்தார். ஏற்கனவே தொலைபேசியில் பேசியிருக்கிறோம் என்றாலும், நேரில் மிக அமைதியாகக் காணப்பட்டார். ஒருவேளை டாக்டர் உடனிருப்பதால் வாளாவிருந்தாரோ என்னவோ! தொலைபேசியில் எப்போதும் சரவெடிதான். அவர் வாசித்த சங்க இலக்கியம் தொடர்பான சில நூல்களை அன்பளிப்பாகத் தந்தார். நன்றியுடன் பெற்றுக்கொண்டேன். முல்லைப்பாட்டு ஒன்றில் நீர்க்கடிகாரம் (Water Clock) பற்றிய குறிப்பு வருவதைக் குறித்து வைத்திருந்து டாக்டரிடம் உறுதிப்படுத்திக் கொண்டார். விரைவில் அது பற்றிய தகவலை இலக்கியச்சுவையில் எதிர்பார்க்கலாம். சீதாராமன் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, வந்ததிலிருந்து இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர். ஏதோ பழைய பாக்கி போலும். எப்போதும் பேச்சு பேச்சாகத்தான் இருக்கவேண்டும். எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சமாதானப்படுத்திவிட்டு, இரவு உணவுக்குச் சங்கம் உணவகத்திற்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். விடுதியின் பெயர் மட்டும்தான் சங்கம் என்று இதுநாள் வரையில் எண்ணியிருந்தேன். உள்ளே நுழைந்த பிறகுதான் அவ்வெண்ணம் தவறென்று புரிந்தது. அவ்விடுதியிலுள்ள உணவகத்தின் பெயர் 'செம்பியன்'. உள்ளே நுழைந்தால், வானதி மற்றும் குந்தவையிடம் சீனத்துப் பட்டு விற்கும் அருள்மொழி யானைமேல் வீற்றிருந்து வரவேற்றார். திரும்பிய பக்கமெல்லாம் வரலாற்றுச் சித்திரங்கள். பெரியகோயில் கட்டுமானப் பணியும் ஒரு சித்திரமாக இடம்பெற்றிருந்தது.

ரிஷியா நேற்றுப் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி டாக்டரிடமிருந்து 'பல்புகள்' வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தார். அவரது திருக்குறள் பயிற்சிதான் உச்சம். கிட்டத்தட்ட நம் தஞ்சாவூர் பரிசுத்தம் விடுதி அனுபவத்துக்கு நிகரானது. அன்றுபோலவே சிரித்துச் சிரித்துச் சரியாகச் சாப்பிடவே முடியவில்லை. போதாக்குறைக்கு கிறிஸ்துமஸ் பாடல்கள் வேறு பாடப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தத் தாளங்களைக் கேட்டால் நீ எப்படி விமர்சனம் செய்வாய் என்று அனைவரும் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுக் களித்தோம். பாரதிதாசன் பல்கலையில் திருக்குறள் தொடர்பாகப் பட்டயப் படிப்பு ஒன்று ஆரம்பித்தார்களாம். ஆர்வம் கோளாறாக, ரிஷியா அதில் சேர்ந்துவிட்டார். படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் என்று சில ஆயிரங்களைச் செலவு செய்ததுதான் மிச்சம். ஒரு வகுப்புகூட எடுக்கவில்லையாம். ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி விட்டார்களாம். அந்தக் கட்டணத் தொகையை வரலாறுக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தால், தன்னிடம் இருக்கும் திருக்குறள் உரையையே கொடுத்திருப்பேனே என்று டாக்டர் அவரைக் கலாய்த்துக் கொண்டிருந்தார். உணவை முடித்துவிட்டுப் பிறகு ரிஷியாவை அவரது இல்லத்தில் இறக்கி விட்டுவிட்டு நமது ஆஸ்தான விஜய் லாட்ஜுக்கு நானும் சீதாராமனும் வந்து சேர்ந்தோம்.

அடுத்தநாள் காலை 6 மணிக்கே கிளம்பவேண்டும் என்று டாக்டர் எச்சரித்திருந்ததால், விரைவாகவே உறங்கி விடலாம் என்று முடிவுசெய்து படுக்கைக்குச் சென்றோம். இருப்பினும் நித்திராதேவிக்கு எங்களைத் தழுவ விருப்பமில்லாததால், வெகுநேரம் வரை சொந்தக்கதை சோகக்கதை பேசிக்கொண்டிருந்தோம். தனது கட்டுமானத் தொழிலில் அரசும் அரசியலும் எப்படியெல்லாம் விளையாடுகின்றன என்று விளக்கமாகக் கூறினார் சீதாராமன். ஒருவழியாக நித்திராதேவியைக் கெஞ்சிக் கூத்தாடித் துணைக்கழைத்துக் கண்ணை மூடினால், அதற்குள் விடிந்து விட்டிருந்தது. விடுதிக்காரர்கள் எழுப்பி விட்டதையும் மறந்து தூங்கிக் கொண்டிருந்த எங்களை இலாவண்யாவின் கைப்பேசி அழைப்பு எழுப்பியது. ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி விட்டதாகவும் இன்னும் சற்று நேரத்தில் விஜய் லாட்ஜுக்கு வந்து சேர்ந்து விடுவதாகவும் தெரிவித்ததையடுத்து, அவசர அவசரமாகக் கிளம்பினோம்.

விடுதியை விட்டு வெளியே வரவும், டாக்டர், நளினி மற்றும் சுமிதாவை ஏற்றிக்கொண்டு நம் சாரதி டவேராவைக் கொண்டுவந்து நிறுத்துவதற்கும் சரியாக இருந்தது. சுமிதாவை நாம் ஏற்கனவே பனைமலையில் சந்தித்திருக்கிறோம் என்றாலும், அப்போது அவ்வளவாக உரையாட வாய்ப்புக் கிட்டவில்லை. வண்டி மதுரையை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்க, நம் கேள்விக்கணைகள் டாக்டரை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தன. கடந்த மூன்று நான்கு மாதங்களில் நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறிமுடித்தார் டாக்டர். அவரது மதுரைப் பயணங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. மீனாட்சியம்மன் கோயில் கோபுரங்களின் கட்டுமானத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்தினோம். இரண்டாம் பாண்டியப் பேரரசு காலத்திய கோபுரங்களான அவற்றில் பயன்படுத்தப்பட்ட மரங்கள் இன்னும் சிதையாமல் அப்படியே இருப்பதாகக் கேட்டு வியந்தோம். நாளை மறுநாள் திரும்பி வரும்போது நேரம் இருந்தால் மேலே ஏறிப் பார்க்கலாம் என்று முடிவுசெய்து கொண்டோம். பிறகு பேச்சு ஐராவதியின் பக்கம் திரும்பியது. நமது குழுவின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் வெகுவாகப் பாராட்டினார். பலன் கருதாது உழைத்ததனால்தான் இத்தகைய வெற்றி சாத்தியமாயிற்று என்றார். மேலூரில் காலை உணவு முடித்துக் கிளம்பிய பின்னரும் தொடர்ந்த அர்த்தமுள்ள அரட்டை, அருப்புக்கோட்டை அருகே பாறைக்குளம் என்ற ஊரில் வண்டி நின்ற பிறகுதான் அடங்கியது.

இந்தப் பாறைக்குளம்தான் ரமண மஹரிஷி பிறந்த இடம். இங்குள்ள கோயிலில் நாயக்கர்கால வேலைப்பாடமைந்த முகமண்டபம் இருக்கிறது. அதிலுள்ள சில சிற்பங்கள் மிகவும் விசித்திரமாக இருந்தன. ஒரு பறவையைப் பிடித்திருக்கும் குரங்கு, நிர்வாணத் தோற்றத்தில் குழலூதும் கண்ணன், போதைப்பொருளைப் புகைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாமியார், பிறகு போதையின் காரணமாக அவர் அடையும் இன்பநிலை என நமது 'சுடச்சுட'வில் இடம்பெறத் தேவையான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தன. 12 மணிக்கு நடையைச் சாத்திவிட்டாலும், கோயில் ஊழியர்களின் விரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் நின்று, நிதானமாகப் புகைப்படங்களைச் சுட்டுவிட்டே இடத்தைக் காலிசெய்தோம்.




பறவையைப் பிடித்து வைத்திருக்கும் குரங்கு





சிவபெருமானின் சில ஆடல்தோற்றங்கள்



தலைக்குமேல் சிங்கத்தைச் சுழற்றும் அரக்கன்



நிர்வாணக் கோலத்தில் கண்ணன்



ஊக்கா பாத்திரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணும் புகைக்கும் சாமியாரும்



புகைத்தபிறகு தோன்றும் பரவசநிலை



பாறைக்குளம் அருகே திருச்சுழி என்ற இடத்தில் ஒரு குடைவரை இருக்கிறது. வழக்கம்போல ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் பழங்காலக் குடைவரையை அடைய நாம் படும் அத்தனை சிரமங்களையும் பட்டு, 'யாரும் போகாத இடத்துக்கு இவர்கள் எதற்காகச் செல்கிறார்கள்?' என்ற ஊர்மக்களின் வியப்புக்கு நடுவேதான் குடைவரையை அடைய முடிந்தது. குடைந்தவர் பெயர் சுட்டும் கல்வெட்டோ காலத்தை வெளிப்படுத்தும் கட்டடக்கலைக் கூறுகளோ எதுவும் இல்லாத இக்குடைவரை பாண்டிய நாட்டின் நடுப்பகுதியில் அமைந்திருப்பதாலேயே பாண்டியர் குடைவரை என்ற தகுதியைப் பெறுகிறது. போதிகைகள்கூட இல்லாத எளிய அமைப்பில் இருக்கிறது. தூண்கள் முற்றுப்பெறவில்லை. இதன் காலம் சுமார் கி.பி. எட்டாம் நூற்றாண்டாகலாம் என்றார் டாக்டர். காலத்தைக் கணிக்க எந்த உறுப்புமே இல்லாதபோது எப்படி எட்டாம் நூற்றாண்டு என்கிறீர்கள் என்று கேட்டோம். இதன் எளிய தன்மையை வைத்துத்தான் என்றார். காலம் செல்லச் செல்ல அலங்கார உறுப்புகள் அதிகரித்துக் கொண்டே வருவது கட்டடக்கலையை வைத்துக் காலத்தைக் கணிக்க உதவுகிறது. எத்தகைய உறுப்பு எந்தக் காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லது மாற்றப்பட்டது என்று முன்கூட்டியே நன்கு அடையாளப்படுத்தப்பட்ட குடைவரைகளை வைத்து அறிந்து வைத்துக்கொண்டு, புதிய குடைவரைகளின் காலத்தை அறியலாம். இக்குடைவரையில் எந்த உறுப்புமே உருப்பெறவில்லை. எனவே, இது பாண்டியர்களின் தொடக்கக் காலமாகத்தான் இருக்கவேண்டும் என்றார். பிற்காலத்தில் கட்ட ஆரம்பித்து, பாதியிலேயே நிறுத்தியிருக்கலாம் அல்லவா? என்றொரு கேள்வியை வீசினோம். அதற்கும் பொருத்தமானதொரு பதில் வந்தது. இரண்டு காரணங்களால் அவ்வாறு கூறமுடியாது. முதலாவது காரணம், முன்புறமிருந்து உள்நோக்கிச் செதுக்கிகொண்டு செல்லும்போது, முகப்பு உறுப்புகளாவது முழுமை பெற்றிருக்கும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. எனவே, குடைவரை உறுப்புகள் முழுமைநிலையை அடைவதற்குமுன் இக்குடைவரை அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இரண்டாவது காரணம், அப்படிப் பாதியிலேயே நிறுத்தப்பட்ட, எந்த உறுப்பும் முழுமை பெறாத பிற்காலத்திய குடைவரை எதுவும் இந்தப் பகுதியில் இல்லை. எனவே, இது முற்காலத்தைச் சேர்ந்ததுதான் என்று உறுதியாகக் கூறலாம். அருமையான இயற்கைச் சூழலில் இருக்கும் இக்குடைவரைக் கோயில் வழிபாட்டில் உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் காதலர்களுக்கும் புகலிடமாக விளங்குகிறது.




திருச்சுழி குடைவரை முகப்பு





முழுமையடையாத முகப்புத் தூண்கள்



கருவறை





இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் குடைவரை



சிகரத்தைத் தேடிய சிகரம்



திருச்சுழியின் சீரிளமை கண்டு திறம்வியந்த சீதாராமன்



பார்த்தவுடனேயே குளிக்கத் தோன்றும் குளம்


பிறகு மதிய உணவை முடித்துக்கொண்டு கழுகுமலை செல்லும் வழியில்தான் எட்டையபுரம் இருக்கிறது என்றார்கள். எனவே, நம்ம ஆளு பிறந்த இடத்தைத் தரிசித்துவிட்டுப் பயணத்தைத் தொடரலாம் என்று அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்து, அக்னிக்குஞ்சு தோன்றிய வீட்டை அடைந்தோம்.




எட்டையபுரத்தை ஏற்றம்கொள்ளச் செய்த எழில்மாளிகை


அடுத்த மடலில் சந்திப்போம்.

அன்புடன்

கமல்this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.