இதழ் - 66
|
சேரர் கோட்டை - அத்தியாயம் 85
கோகுல் சேஷாத்ரி
|
|
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
|
திருமூல சாக்கியர் “அம்மா! திருமூல சாக்கியர் வசித்து வரும் வீடு இதுதானா?”
“இல்லை. அதோ, நான்கு வீடுகள் தள்ளி... முன்புறம் தட்டோடு புனைந்து... வாயிலில் ஒரு தென்னைமரம் கூடக் காணப்படுகிறதே? அந்த வீடுதான்.”
அந்த எளிமையான வீடு சாக்கியரின் சொந்த வீடல்ல, ஒரு உறவுக்காரரின் இல்லம் என்பதையும் வைத்தியத்திற்காகச் சிறிது காலமாக அங்கே தங்கியிருக்கிறார் என்பதையும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள். சாக்கியர் சிறிது காலமாக நரம்புத் தளர்ச்சியினாலும் சித்த சுவாதீனமின்மையினாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். வெண்பரிசாரத்தில் அமைந்துள்ளதொரு வைத்தியசாலையில் இது போன்ற வியாதிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதைக் கேள்விப்பட்டு இரண்டு மண்டலங்களுக்கு இங்கேயே தங்கிச் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். பிராயம் அதிகமாகிவிட்டதால் உடல் மருத்துவத்தை ஏற்க மறுப்பதாகவும் இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சையில் பெருத்த முன்னேற்றம் ஏற்படவில்லையென்றும் கேள்வி.
பல்லக்கு மற்றும் பரிவாரங்களை வாயிலிலேயே நிறுத்தி வைத்து விட்டு நால்வர் மட்டும் அந்த இல்லினுள் நுழைந்தார்கள்.
“அம்மா..” என்று மெல்லக் குரல் கொடுத்தார் பிஷு.
“யாரது.. வைத்தியரா? அதற்குள் புறப்பட்டு வந்துவிட்டீர்களா என்ன?” என்று உள்ளிருந்து ஒரு இளவயதுப் பெண்ணின் குரல் வந்தது. அதனைத் தொடர்ந்து முற்றத்தின் வாயிலில் ஒரு மூன்றடிச் சிற்றுருவம் அவர்களை எட்டிப்பார்த்தது.
அந்தச் சிறுமியைப் பார்த்து ஆனந்த தேரர் மெலிதாகப் புன்னகை பூத்தார். அவ்வளவுதான். “அம்மா! அம்மா! இது வைத்தியர் தாத்தா இல்லை - வேறு யாரோ..” என்று அலறியபடி அது உள்ளே சென்று மறைந்தது.
அதனைத் தொடர்ந்து “யாரது? ஆண்பிள்ளை எவருமில்லாத இந்த நேரத்தில்?” என்கிற கேள்வியுடன் வெளிப்பட்டது ஒரு பெண்டு. இவள்தான் அந்தச் சாவூர்ப் பரஞ்சோதியாரின் பெண் போலும். வீட்டில் இருப்பது பெண் பிள்ளை மட்டும்தான் என்பதையறிந்ததும் பிஷுவை விலக்கிக்கொண்டு தம்புராட்டியார் தட்டுத்தடுமாறி முன்வந்தார்.
“அம்மா! நாங்கள் மாளிகைப்புரத்து வீட்டைச் சேர்ந்தவர்கள். நாலாம் வெளியில் கூத்துக்கட்டும் திருமூல சாக்கியரைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறோம்..”
“மாளிகைப்புரத்து வீடா? அந்த அரண்மனைக்கு நான் பலமுறை வந்திருக்கிறேனே? தங்களை ஒருமுறை கூடச் சந்தித்ததே இல்லையே? ”
“நான்தானம்மா அந்த வீட்டின் தற்போதையத் தம்புராட்டி. சிற்சில காரணங்களால் மாளிகையில் வசிப்பதில்லை..”
அந்தப் பெண்ணின் முகத்தில் சட்டென ஒரு வியப்புக் கலந்த மகிழ்ச்சியும் மரியாதையும் தென்பட்டன. “அடடா.. தாங்கள்தான் மாளிகைப்புரத்து வீட்டின் தம்புராட்டியாரா? வாயிலிலேயே நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டேனே? வரவேண்டும், வரவேண்டும். நான் அந்தக் குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவரான சாவூர்ப் பரஞ்சோதியாரின் பெண் மாணிக்கம். உள்ளே வாருங்கள்..” என்று இரு கரங்கள் கூப்பிப் பணிவுடன் வரவேற்றாள் அந்தப் பெண். அவளைத் தொடர்ந்து அனைவரும் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள்.
மங்கிவரும் மாலைநேர வெளிச்சத்தில் அந்த வீட்டினுள் விரிந்த காட்சி அவர்களின் இதயங்களை உருக்குவதாக அமைந்திருந்தது. முற்றத்தில் விரிக்கப்பட்டிருந்த கட்டிலொன்றில் சாக்கியர் படுத்துக்கொண்டிருந்தார். படுக்க வைக்கப்பட்டிருந்தார் என்று கூற வேண்டுமோ? அவரது உதடுகள் இடைவிடாமல் எதோ பொருளற்ற வார்த்தைகளை உச்சரித்தவண்ணம் இருந்தன. விழிகள் உத்திரத்தில் - ஏதோ அந்தகாரத்தில் சஞ்சரிப்பதுபோல் நிலைபெற்று நின்றன. தம்மைச் சூழ்ந்திருக்கும் பொருளற்ற உலகிலிருந்து நெடுதூரம் விலகித் தமக்கென்று புதிதாய் ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் சந்தோஷமாகச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தவர்போலும் காணப்பட்டார் சாக்கியர்.
“அவருக்கு இன்று ஓரங்கக் கூத்துக் கட்டச் சொல்லிக் கோயிலாரிடமிருந்து அழைப்பு வந்தது. அதனால் அங்கே சென்றிருக்கிறார். இந்த நேரம் பார்த்துப் பாட்டன் திடீரென்று ஏதேதோ பிதற்றத் துவங்கிவிட்டார். அதனால் பயந்துபோய் வைத்தியருக்கு ஆள் அனுப்பினேன். இப்போதுதான் பிதற்றல் சற்று நின்றிருக்கிறது...”
மற்றவர்களை விலக்கிக்கொண்டு முன்னேறிய தம்புராட்டியார், மெல்லச் சாக்கியரை நெருங்கி அவரது தலைமாட்டினருகே அமர்ந்து கொண்டார். அவரது கரங்களைப்பற்றி மணிக்கட்டைப் பிடித்து நாடி பார்த்தார். கழுத்து, மார்பு, நெற்றி, புஜங்கள் என உடலின் பல பாகங்களையும் தொட்டுத்தடவிச் சோதித்தார். “எலுமிச்சைப் பழம் வீட்டில் இருக்கிறதா அம்மா?”
“இதோ, கொண்டு வருகிறேன்...”
பழத்தை மெல்லக்கசக்கி அதன் மணத்தை நாசிக்கருகே கொண்டு செல்ல, சில வினாடிகளில் சாக்கியரின் முகத்தில் சற்று தெளிவு பிறந்தது. ஆனால் உதடுகள் மீண்டும் துடிக்க ஆரம்பித்துவிட்டன.
“பல சமயங்களில் பாட்டன் பேசுவது இன்னது என்பதைக்கூட அறிய முடிவதில்லை. சிற்சில சமயங்களில் மொழியே மாறி விடுகிறது. சம்ஸ்கிருதம் - தமிழ் - மலையாளம் என்று மாற்றி மாற்றிப் பிதற்றல்கள். சம்ஸ்கிருத்ததில் இவருக்கு இத்தனை பரிச்சயம் உண்டு என்பதே எங்களுக்குத் தெரியாது. என் கணவருக்கு அந்த மொழியில் அத்தனை தூரம் பரிச்சயமில்லை...” என்றாள் மாணிக்கம்.
தம்புராட்டியாரின் முகபாவம் தீவிரமான யோசனையைக் காட்டிக் கொண்டிருந்தது. உதட்டளவில் ஒரு முறுவல் அவரது வதனத்தில் ஒட்டியிருந்தாலும் அது தமது சிந்தனையின் தீவிரத்தை மறைத்துக்காட்டும் முயற்சியேயொழிய வேறில்லை என்றுதான் மழபாடியாருக்குத் தோன்றியது. ஒரு கதவம் அடைபட்டால் வேறொரு கதவம் திறக்குமென்பார்கள். நமக்கோ ஒரு கதவம் திறந்தால் மற்றொன்று முகத்திலடித்தாற்போல மூடிக்கொள்கிறது. ஹூம்... எல்லாம் விதி.
“அவரது நினைவுகள் மிகப் பழையதொரு காலகட்டத்திற்குச் சென்று விட்டதுபோல் காண்கிறதம்மா. அவ்வப்போது நமது உலகிற்கு அவர் வந்து போவதோடு சரி. மற்றபடி மிகப்பெரும்பான்மையான சமயங்களில் அவர் தமது பழைய கூட்டாளிகளுடன்தான் நேரத்தைக் கழித்து வருகிறார். முதுகுத் தண்டுவடம் வழியாக மூளைக்குச் செல்லும் சிற்சில நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் இம்மாதிரியான பக்க விளைவுகள் நேர்வதுண்டு.”
“மிகப்பழைய காலகட்டமென்றால்? ஏறக்குறய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னாலா?”
“ம்ஹூம். அதற்கும் முன்னால். சம்ஸ்கிருதமும் மலைமொழியும் சரளமாகப் புழங்கிய காலகட்டம். சாக்கியருக்குப் பிராயம் எண்பது இருக்குமா?”
“தை பிறந்தால் எண்பத்தி ஐந்து முடிந்து...”
அவள் தனது பதிலைச் சொல்லி முடிக்குமுன் ஒரு முறை சாக்கியர் புரண்டு படுத்து - “நிஷ்ஷிமம் நிகிலேஷ்வழம்...” என்று பிழறினார். அந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்டதும் தம்புராட்டியாரின் முகத்தில் அபூர்வமானதொரு பிரகாசம் கண நேரத்திற்குத் தோன்றி மறைந்தது. அடுத்த கணம் பரபரவென்று தமது முகத்தை அவருக்கருகே கொண்டு சென்று அவரது காதுகளில் அவர் கூறிய வார்த்தைகளையே திரும்ப உச்சரிக்கலானார் தம்புராட்டியார் - “நிஷ்ஷிமம் நிகிலேஷ்வழம்...”
“ம்ஹூம்...” - சாக்கியரின் தலை இடமும் வலமுமாக ஆடியது. “நிஷ்ஷிமம் நிகிலேஷ்வழம்...”
“நிஷ்ஷிமம் நிகிலே......” ம்ஹூம். இந்தமுறை துவங்குவதற்குள்ளாகவே மீண்டும் பலமான மறுத்தலிப்பு.
தம்புராட்டியார் சற்றே நிதானித்து அவர் கூற முயலும் ஸ்லோகத்தை வாய்விட்டுக் கூறாமல் கவனமாக மனதிற்குள் ஒருமுறை உச்சரித்துப் பார்க்க முற்படும் போதுதான் கிழவரின் எதிர்பார்ப்பு என்ன என்பதையே அவரால் உணர முடிந்தது. பாவம்! சாக்கியரால் தான் சொல்ல வரும் ஸ்லோகத்தைச் சரிவர உச்சரிக்க முடியாமல் நாவு மேலே சென்று இழுத்துக் கொண்டு விடுகிறது. அதனால், கேட்பவர்களாவது அந்தச் சொற்களின் பொருளை உணர்ந்து பிழையில்லாமல் சரியாக உச்சரிக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார் போலும்.
சம்மந்தமேயில்லாமல் திடீரென்று ஸ்ரீ வல்லபப் பெருஞ்சாலையின் பழைய நாஞ்சில் நாட்டு ஆசான் ஒரு கணம் மனதில் அவசரமாக வந்து போனார். வடமொழி உச்சரிப்பிற்கு மிகப் பிரத்யேக முக்கியத்துவம் கொடுத்தவர் அவர்தான். அப்படியானால்... சாக்கியர்...
“நிஷ்ஷிமம் நிகிலேஷ்வழம்...” என்றார் கிழவர் மீண்டுமொரு முறை. சந்தேகமேயில்லை. நமது சம்சயம் சரியானதுதான். கிழவர் உண்மையில் கூறவருவது என்னவென்பது புரிந்துவிட்டது.
“நிஸ்ஸீமம் நிகிலேஸ்வரம்...” என்று அவரது காதுகளுக்கு அருகில் சென்று மெல்லப் புகன்றார் தம்புராட்டியார்.
சட்டென்று கிழவரின் முகம் கணநேரப் பிரகாசத்தைக் காட்டியது.
“நிஷ்ஷிமம் நிகிலேஷ்வழஹ... பழஷிவஹ..”
“நிஸ்ஸீமம் நிகிலேஸ்வரஹ பரசிவஹ... யாரவது நான் சொல்லிக்கொண்டு வருவதைக் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்..”
“ரஷேத் ஷகத் ஷர்வஷா..”
“ரஷேத் ஜகத் ஸர்வதா?”
“ரஷேத் வாழிஷி ஷேகழாம்..”
“ரஷேத்... ???”
“ரஷேத் வாழிஷி மேகழாம்..” என்று தனது பிழறலை முடிந்தவரை திருத்திக்கொண்டார் கிழவர்.
“ஓ! ரஷேத் வாரிதி மேகலாம்..”
“ஸ்வஷயிஷா ஷீவல்லபோ மேஷியீம்..”
பளீரென்று ஓராயிரம் மின்னல்கள் தம்புராட்டியாரை ஒருசேர வந்து தாக்கின. “ஷீவல்லபோ..” என்று கிழவரால் உச்சரிக்கப்படும் வார்த்தை உண்மையில் “ஸ்ரீவல்லபோ” என்பதாகும். அப்படியானால்??? நிஜமாகவே சாக்கியர் முனகிக்கொண்டிக்கும் சூத்திரம் தாம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்துபோய் விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கும் துதி ஸ்தோத்திரமேதானா? இதனைப் பிழையில்லாமல் எழுதிக்கொள்ள வேண்டுமே?
“உங்களில் யார் நான் சொல்லிக்கொண்டு வருவதைக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
“நான்தானக்கா எழுதிக்கொண்டு வருகிறேன்..” என்று பதில் புகன்றார் பிஷு. பரவாயில்லை. உதயன் எழுதினால் பிழையில்லாமல் எழுதுவான். அவன் சாலையின் மாணாக்கனல்ல என்பது சற்று உறுத்துகிறதுதான். என்றாலும் ஆபத்துக்குப் பாவமில்லை.
“ஸ்வஷயிஷா ஷீவல்லபோ மேஷியீம்..” என்றார் கிழவர் பொறுமையிழந்து.
“ஸ்வதயிதா ஸ்ரீவல்லபோ மேதினீம்..”
“நிஷ்ஷிமம் நிகிலேஷ்வழஹ...”
ஒ! ஒவ்வொரு ஈறடியையும் இரண்டிரண்டு முறை உச்சரித்தாக வேண்டுமல்லவா? அதனால்தான் மீண்டும் முதலிலிருந்து துவங்குகிறார் போலிருக்கிறது. எங்கே.. ஒரு முறை உச்சரித்துப் பார்ப்போமா?
“நிஸ்ஸீமம் நிகிலேஸ்வரஹ பரசிவஹ.. ரஷேத் ஜகத் ஸர்வதா. ரஷேத் வாரிதி மேகலாம்.. ஸ்வதயிதா ஸ்ரீவல்லபோ மேதினீம்.”
‘எல்லையில்லாது விரிந்து பரவும் இப்பிரபஞ்சத்தை அனைத்திற்கும் ஈஸ்வரனாக விளங்கும் பரமசிவன் காக்கட்டும். கடலைத் தனது இடையணியாகக் கொண்ட நிலமகளை, அவளது காதலனான திருமகள் கேள்வன் காக்கட்டும்.’
நிச்சயம் ஒரு பெரிய துதிப்பாடலின் முதலிரண்டு அடிகள்தாம் இவை. சாக்கியர் இருக்கும் நிலையில் மற்ற அடிகளனைத்தையும் அவரால் ஞாபகத்திற்குக் கொண்டுவர இயலுமா?
இயலாது என்பது அவரைப் பார்க்கும்போதே தெரிந்தது. அந்தப் பாடலின் மற்ற அடிகளனைத்தையும் மறந்து போனவராக - பரிதாபமாக விட்டத்தை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார் அவர். வாய் மட்டும் அந்த விட்டுப்போன அடிகளைத் தொட்டுப் பிடித்துவிடும் ஆசையில் தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
சட்டென்று தலையைத்திருப்பி வைத்துகொண்டு ஒரிரு கணங்களுக்கு யோசனையில் ஆழ்ந்த தம்புராட்டியார், ஒரு முடிவுக்கு வந்தவராக மீண்டும் கிழவரை நெருங்கினார். ஒரு முயற்சி. ஒரேயொரு கடைசி முயற்சி. செய்துபார்த்துவிட வேண்டியதுதான்.
“மூழிக்குள குரோஹோ பௌத்ரஹ..”
தமது செவிப்புலன்களுக்கு மிக அருகே ஓதப்பட்ட அந்த வார்த்தைகளைக் கிழவரின் காதுகள் கவனமாக உள்வாங்கிக் கொண்டன. அவரது புருவங்கள் தீவிர சிந்தனையின் காரணமாக நெறிபட்டன.
“ஸ்ரீகிருஷ்ண தனுஜோ மஹான்..”
இந்த முறை கிழவரின் தலை அப்புறமும் இப்புறமும் ஆடி மறுப்புக்கான அறிகுறியைக் காட்டவே தம்புராட்டியார் துணுக்குற்றார். இது தவறான சுலோகமா என்ன? அல்லவே? பெட்டியில் எழுதப்பட்டிருந்ததைத்தானே சொன்னோம்? ஒரு வேளை... நாம் நினைத்ததைப்போல் அது பண்டைய குருஸ்துதியின் பகுதியில்லையோ? வேறு ஏதாவது தனிஸ்லோகமோ? அடடா...
கிழவரின் முகத்தில் சிற்சில மாற்றங்கள் தெரிந்தன. சட்டென்று கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டார் அவர்.
“மாணிக்கம்! கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா.. இவர்களெல்லாம் யார்?” - அவரது குரல் மிகவும் பலகீனமாக ஒலித்தது.
“பாட்டா.. கொஞ்ச நேரத்தில் எங்களையெல்லாம் என்ன பாடு படுத்தி விட்டீர்கள்? அப்பாடா - கடைசியில் ஒரு வழியாக உங்களுக்கு நினைப்பு இப்போதாவது திரும்பியதே! அதனை நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். பாட்டா.. இவர்தான் மாளிகைப்புரத்து வீட்டின் தம்புராட்டியார். இவர்களெல்லோரும் அவருடன் வந்திருப்பவர்கள். நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். நான் உள்ளே சென்று தண்ணீரும் கஞ்சியும் கொண்டு வருகிறேன்.”
“தாங்கள்தான் மாளிகைப்புரத்து வீட்டின் தம்புராட்டியாரா? வரவேண்டும்... வரவேண்டும்...” - உடலின் தொய்வை மீறிக்கொண்டு உயர்ந்த கிழவரின் கரங்கள் இயல்பாகக் குவிந்தன. “தங்களை மிகச்சிறிய பிராயத்தில் மூத்த தம்புரான் மடியில் நாலாம் வெளியில் கூத்துக்கட்டும் நேரத்தில் பார்த்ததுண்டு. அடடா.. பார்த்து எத்தனை வருடங்களாகின்றன? அந்தச் சிறு பிராயத்திலேயே எத்தனை களையாக.. அம்சமாக இருப்பீர்கள் தாங்கள்?”
“ஐயா.. தங்களைச் சந்தித்ததில் எங்களுக்கு மெத்த மகிழ்ச்சி. தாங்கள் அந்தக் காலத்தில் கட்டிய கூத்துக்களும் வேடங்களும் இன்னமும்கூடக் கண்களிலேயே நிற்கின்றன. அடடா! அல்லி அருச்சுன்னையும் இராவணன் கர்வபங்கத்தையும் இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது... என்னவொரு பாவம்! எப்படியொரு அவிநயம்!”
“அதெல்லாம் ஒரு காலம் அம்மா. பழங்காலம். போகட்டும். தாங்கள் இந்த ஏழையைச் சந்திக்க வீடு தேடி வரவேண்டுமா என்ன? ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே...”
“இல்லை ஐயா! வயதிலும் அறிவிலும் பெரியவரான தங்களைத் தேடி நாங்கள் வந்ததே முறை. தங்களிடம் முக்கியமானதொரு உதவி கோரி இத்தனை தூரம் வந்திருக்கிறோம்.”
“உதவியா? என்னிடமா?”
“ஆமாம். தற்போது நான்தான் பண்டைய ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலையைப் பராமரித்து வருகிறேன். இந்தக் குழந்தைகளிருவரும் என்னிடம் களறி அப்பியாசித்து வருகின்றனர்...”
“மிக்க சந்தோஷம் தாயே! மிக்க சந்தோஷம். என் காலம் முடிவதற்குள்ளாகவே அந்தப் பெருஞ்சாலை ஷீணித்து அழிந்துபோய்விடுமோ என்று பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளை. என் வயிற்றில் பாலை வார்த்தாய். சீக்கிரம் கேட்கவேண்டியதைக் கேட்டுவிடு. மீண்டும் மயக்கம் வரும் போலத் தெரிகிறது...”
“சாலை வளாகத்தில் இந்த மாணவர்களால் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெட்டி கண்டறியப்பட்டது. அதன் மேல் ஒரு சுலோகம் முழுமையில்லாமல் எழுதப்பட்டிருந்த்து. அந்த சுலோகத்தின் கடைசி அடி தெரிந்தால்தான் பெட்டியைத் திறக்க முடியும். சாலையின் பழைய மாணாக்கரான தங்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று நம்பித்தான் உங்களிடம் வந்தோம்.”
“எங்கே, அந்த சுலோகத்தைச் சொல் பார்க்கலாம்?”
“மூழிக்குள குரோஹோ பௌத்ரஹ. ஸ்ரீகிருஷ்ண தனுஜோ மஹான். தஸ்ய இயம் பலராமஸ்ய புஸ்திகா அப்யாஸ-கர்மணஹ. ஸ்ரீவல்லப மஹாசாலோ குரோஹோ....” - மளமளவென்று தயக்கமேயில்லாமல் மனப்பாடமாகத் தம்புராட்டியார் ஒப்பிப்பதைக் கண்டு நண்பர்களிருவரும் தலையைக் குனிந்து கொண்டார்கள். ஏனெனில் இருவருக்குமே அந்த சுலோகங்கள் அப்போது மறந்து விட்டிருந்தன.
“இது மஹாசாலையின் மிகப்பழைய குருஸ்தோத்திரமாயிற்றே அம்மா? நாஞ்சில் நாட்டு ஆசான் புதிய குருக்களின் பெயர்களையல்லாம் இதில் சேர்த்துத் திருத்தி அமைத்தாரே?”
“அப்படியா? அவ்வாறெனில் இதன் கடைசி அடி என்னவென்பது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா?”
“..அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்...எங்கே, மீண்டும் ஒருமுறை கூறு..”
“மூழிக்குள குரோஹோ பௌத்ரஹ...”
“ம்ஹூம். அவ்வாறு துவங்காது. இது சுலோகத்தின் இரண்டாவது அடியாக இருக்க வேண்டும். மூழிக்குளத்து குருவின் பெயரனெனில்...”
“பலராம ஆசான்தான்..”
“அவரது பெயர்தான் மூன்றாவது அடியில் வந்துவிடுகிறதே? அவர் எந்த வீட்டைச் சேர்ந்தவர் என்று வினவினேன்..”
“அது தெரியாதே ஐயா!” “அது இந்த சுலோகத்தின் முதல் அடியில் குறிக்கப்பட்டிருக்கும். அது தெரியாமல் மற்ற அடிகளை அனுமானிப்பது கடினமாயிற்றே அம்மா? ஆஹ்.. எனக்கு மீண்டும் மயக்கம் வரும்போலத் தெரிகிறதே...”
“தயவு செய்து சற்று முயற்சி செய்து பாருங்களேன்?”
கிழவரின் கண்கள் அரை மயக்கத்தில் சொருகிக்கொண்டன. அவர் பழையபடி தன்னுடைய சொப்பன உலகத்திற்குச் சென்றுவிட்டார் போலும். தேவி! இதென்ன சோதனை? என்று தம்புராட்டியாரின் மனம் அரற்றியது. கண்களில் நீருடன் கிழவரை நெருங்கி அந்த சுலோகத்தை மீண்டுமொருமுறை கூறிலுற்றார் அவர்.
“மூழிக்குள குரோஹோ பௌத்ரஹ... ஸ்ரீகிருஷ்ண தனுஜோ மஹான்..”
கிழவரின் உதடுகள் துடித்தன. பின் கீழ்க்கண்ட வார்த்தைகள் திக்கித்திணறி அவரது வாயினின்றும் வெளிப்பட்டன.
“கௌண்டின்ய கோத்யஜ்ய ஷீமான் கோட்டைத்தழிஹி க்ஷுஹாழ்ஷிஷஹ..”
“கௌண்டின்ய கோத்ரஜ்ய தீமான் கோட்டைத்தளிஹி கிருஹார்சிதஹ..” என்று தம்புராட்டியார் திருத்திச் சொன்னார். ஆஹா! இவைதாம் சற்று நேரத்திற்கு முன் நினைவிற்கு வரவில்லை என’ கிழவர் குறிப்பிட்ட முதலிரண்டு அடிகள்! நனவுலகில் ஞாபகத்திலில்லாத விஷயம் கனவுலகில் அகப்பட்டுவிட்டது. மனித மனதின் விசித்திரங்களை யாரால் புரிந்துகொள்ளவியலும்? கிழவர் தொடர்ந்து நடுங்கும் குரலில் மனப்பாடமாக அனைத்தையும் சொல்லிக்கொண்டு போனார். இறுதி அடி வந்தது.
“ஷீவல்லப மஹாசாழோ குழோஹோ..”
தம்புராட்டியாருக்கு மூச்சே ஒரு கணம் நின்றுவிட்டது.
“தன்ழிப் பிழஷாபதே..” என்று முடித்தார் கிழவர்.
தன்விப் பிரஜாபதே! பெட்டியைத்திறக்கப்போகும் மந்திரச் சொற்கள் இவைதான். தன்விப் பிரஜாபதே. வில்லாளி உலகின் பிரம்மன். அவ்வளவுதான். தம்புராட்டியாரால் தமது கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை.
“நழஷிங்க நாடகம்.. நழஷிங்க நாடகம் பாழுங்கள்...” என்றார் கிழவர் திடீரென்று.
“நரசிங்க நாடகமா? அப்படி ஒரு நாடகத்தைக் கேள்விப்பட்டதே இல்லையே?”
“இன்று அவர் கட்டப்போகும் கூத்துக்குத்தான் இரணிய வதம் அல்லது நரசிங்க நாடகம் என்று பெயர். பாட்டனின் பெயர் சொல்லும் நாடகங்களுள் அதுவுமொன்று. பழைய கூத்து மரபைப் பாட்டன் புதுமையாக மாற்றியமைத்ததாகக் கூறுவார்கள். இவர் கட்டப்போகும் கூத்தும் பாட்டனின் நடையை ஒட்டித்தான் அமைந்திருக்கும்.” என்றாள் மாணிக்கம்.
“அதனை எதற்காக வேலை மெனக்கெட்டு நாங்கள் பார்க்கவேண்டுமென்று கூறுகிறார்?”
“அது தெரியவில்லையே அம்மா? வந்தது வந்தீர்கள் - நாடகத்தையும் பார்த்துவிட்டுப் போகவேண்டியதுதானே?”
“நானெப்படி நாடகத்தைப் பார்ப்பது? கேட்கத்தான் முடியும். இவர்கள் மூவரும்தான் நாடகத்தைப் பார்க்க வேண்டும்...”
அது மிகவும் துரதிருஷ்டமானதொரு சூழ்நிலை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அந்த நாடகத்தில் அவர்களுக்கு மிகவும் தேவையான ஒரு முக்கியச் செய்தி இருந்தது. நாடகத்தைப் பார்க்க முடிந்த மூவருமே அந்தச் செய்தியை உணரும் திறன் பெற்றிருக்கவில்லை. செய்தியை அறியக்கூடிய மனம் பெற்றிருந்த தம்புராட்டியாராலோ நாடகத்தைப் பார்க்க முடியவில்லை. இவ்வாறாக விதி அன்று சதி செய்து அந்த இரகசியத்தை அவர்கள் புரிந்துகொள்ளாமல் தடுத்தது.
கிழவர் எதற்காகத் தம்மை அந்த நாடகம் பார்க்கச் சொன்னார்? எனும் கேள்வியை அன்றிரவு தனக்குத்தானே பலமுறை வினவிக் கேட்டுக்கொண்டார் தம்புராட்டியார்.
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|
|