இதழ் - 67
|
பண்டைய நாழிகை காட்டிகள்
ரிஷியா
|
|
|
நம் பண்டைத் தமிழர்கள் பலவகையான செயற்கைக் கருவிகளைப் பொழுதுகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர். பொழுதை அளந்தறிவதற்கும், நேரத்தைச் சொல்வதற்கும் 'நாழிகைக் கணக்கர்' என்போர் அக்காலத்தில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய குறிப்புகளை இனி காணலாம்.
நாழிகைக் கணக்கர், குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கூறும் நிகழ்வை 'முல்லைப்பாட்டு' தனில் விளக்கமாகக் காணலாம்.
பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள் தொழுது கான்கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப
(முல்லைப்பாட்டு : 55-58)
நாழிகையை அளந்து இத்துணை என்று அறியும் பொய்பேசாத நாழிகைக் கணக்கர்கள், மன்னனைக் கையால் தொழுதபடியே கண்டு வாழ்த்திக் 'கடல் சூழ்ந்த உலகத்தே பகைவரை வெல்லச் செல்கின்றவனே, உன்னுடைய நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்துணை காண்' என அறிவுறுப்ப - என்பதாம் இதன் விளக்கம்.
குறுநீர்க் கன்னல் என்பது நீர் நிறைந்த கலத்தின் அடியில் துளையிட்டு, அதன் வழியே ஒரேசீராக நீர் கசிந்து இறங்கும் நேரத்தைக்கொண்டு, நாழிகைகளைக் கணக்கிட உதவிய கருவி, சிறுசிறு துளியாக நீர் ஒழுகி வந்த காரணத்தினால் இந்தக் காலம் காட்டும் கருவியைக் குறுநீர்க் கன்னல் என்று வழங்கினர்.
மேலும், நாழிகைக் கணக்கர் பற்றிய ஒரு குறிப்பினை மதுரைக்காஞ்சியிலும் காணலாம்.
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப இமிழ்முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப
(மதுரைக்காஞ்சி : 671-672)
வரிக்கூத்து முதலிய வேதாளிக்கூத்தினை ஆடுவோர் தத்தம் துறைக்கு உரியவற்றை இசைப்ப, நாழிகை சொல்லார் நாழிகைச் சொல்ல, பள்ளியெழுச்சி முரசம் முழங்க, ஏறுகள் மாறுபட்டு முழங்க... - என்பதாம் இதன் விளக்கம்.
நனிநாகரிகம் மிக்க தமிழர்கள் வேறு பல செயற்கைக் கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
நீர்க் கன்னலைப் போலவே நீருக்கு மாற்றாக மணலைப் பயன்படுத்தும் கன்னல்களும் இருந்திருக்கின்றன.
காலேந்திரம், கடிகையாரம் போன்ற கருவிகள் பற்றிய குறிப்பினைப் பெருங்கதை என்னும் நூலில் காணலாம்.
செயற்கைக் கருவிகளை மட்டுமா பாங்குறப் பயன்படுத்தினார்கள் தமிழர்கள்? இயற்கைக் கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். இனிவரும் கட்டுரைகளில் காணலாம்.
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|
|