www.varalaaru.com
A portal for
South Indian History
 
72 இதழ்கள்...
1004 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
இதழ் - 67
தலையங்கம்
மாமன்னர் கிருஷ்ண தேவராயர்
சுடச்சுட
இத்திருமலை செய்வித்தார்
கதைநேரம்
சேரர் கோட்டை - அத்தியாயம் 86
கலையும் ஆய்வும்
கோவணநாடகம்

திருவரங்கத்து வைகாசித் திருவிழா

அன்னபிராயம் செய்த நாள்கொடை
இதரவை
தமிழிலிருந்து வந்ததா ஜப்பானிய மொழி?
இலக்கியச்சுவை
பண்டைய நாழிகை காட்டிகள்
இத்திருமலை செய்வித்தார்
தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையினர் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் பிப்ருவரி 21, 22 இருநாட்களும் தேசியக் கருத்தரங்கொன்றை அமைத்திருந்தனர். தளிச்சேரிக் கல்வெட்டுப் பற்றிய கட்டுரையை அக்கருத்தரங்கில் படித்தளிப்பதற்காக மேற்கொண்ட பயணம் தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள திருவிளையாட்டம் மாடக்கோயிலையும் தொட்டது. முளைத்தெழுந்த நாயனார் கோயிலாகக் கல்வெட்டில் அழைக்கப்படும் இப்பெருமுளை (திருவிளையாட்டத்தின் பழைய பெயர்) மாடக்கோயில் நண்பர் பால. பத்மநாபனின் கண்டுபிடிப்பாகும். திரு. ஜெயசங்கரின் பராமரிப்பில் நல்ல முறையில் விளங்கும் இக்கோயில் விமான வெற்றுத்தளத்தின் தெற்குச் சுவரில், மாடக்கோயிலைக் கட்டுவித்த பெருமகனாரின் உருவச்சிற்பத்தையும் அவரது பணியையும் பெயரையும் சுட்டும் சோழர் காலக் கல்வெட்டையும் களஆய்வின்போது கண்டறிந்தோம். எதிரிலிசோழரான பல்லவராயராக அறிமுகமாகும் இப்பெருந்தகை வணங்கிய கைகளுடன் நின்றகோலத்தில் காட்சிதருகிறார். இடுப்பாடை நன்கு சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. தலையில் முடியப்பட்ட கொண்டை. 'இத்திருமலை செய்வித்தார்' என்ற எளிமையான சுட்டலுடன் மிகப் பெரிய விமானத்தைக் கட்டியவராகப் படம்பிடிக்கப்பட்டிருக்கும் இப்பெருந்தகை எளிமையின் மொத்தவடிவமாகக் காட்சிதருவது நெகிழச்செய்கிறது.





மூன்றாம் குலோத்துங்கர், மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டுகளும் இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டன. இங்குள்ள தென்திசைக் கடவுள் சிற்பத்தைத் தொண்டை மண்டலத்துக் கூடகிழான் திருநட்டப்பெருமான் துணைவியார் செந்தாழ்வியும் அவர் மகள் பெரிய நாச்சியும் எழுந்தருளுவித்ததாகக் கூறும் மூன்றாம் இராஜராஜரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பெருமுளையை ஜயங்கொண்ட சோழ வளநாட்டு விளைநாட்டு பிரமதேயமாக அடையாளப்படுத்துகிறது. ஐப்பசி விஷுவன்று இவ்விறைவனுக்கு படையல், வழிபாடு அமைக்க வாய்ப்பாக இப்பெருமாட்டிகள் 1500 காசுகளைக் கோயில் பண்டாரத்தில் கொடையாகச் செலுத்தியதாகவும் கல்வெட்டுத் தகவல் தருகிறது.

தூங்கானை மாட விமானமாக விளங்கும் இம்மாடக்கோயிலில் மகன், மகளுடன் காகக் கொடி கொண்டு அமர்ந்திருக்கும் ஜேஷ்டாதேவியின் சிற்பமும் உள்ளது.

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter