http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 8

இதழ் 8
[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
மத்தவிலாசப் பிரகசனம் - 5
நாளிதழ்களில் வரலாறு டாட் காம்
சீவரமுடையார் குடைவரையும் கல்வெட்டுகளும்
பழுவூர் - 1
கல்வெட்டாய்வு - 6
இராஜராஜரின் வெற்றிகள்
கட்டடக்கலைத் தொடர் - 7
யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
நார்த்தாமலையை நோக்கி...
அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்
Genesis of Vimana in Pallava Art
சங்கச்சாரல் - 7
இதழ் எண். 8 > கலையும் ஆய்வும்
இராஜராஜரின் வெற்றிகள்
மு. நளினி

வள்ளுவப் பெருந்தகையின் பொருட்பால் இறைமாட்சியுடன் தொடங்குகிறது. இதிலுள்ள பத்துக் குறட்பாக்களும் ஒரு மன்னர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கண வரையறைகளாக அமைந்துள்ளன. இந்தக் குறட்பாக்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த தமிழ்நாட்டு மன்னர்கள் பலராவர். நெல்லிக்கனி ஈந்த அதியனில் தொடங்கி நேற்றைய மருது பாண்டியர்கள் வரையிலான இந்தப் பட்டியல் மிக நீளமானது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுக் காலப் பழமை வாய்ந்த தமிழ்நாட்டின் பெருமைக்குரிய வரலாற்றுப் பாதையில் புகழோடு தோன்றிப் புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்த இத்தகு பெருந்தகையாளர்களுள் சிகரமாய் நிற்பவர் முதலாம் இராஜராஜர். ஒரு மன்னருக்கு வேண்டிய அத்தனை பண்பு நலன்களையும் பெற்றுத் திகழ்ந்த இப்பெருவேந்தரின் வெற்றிகள் எத்தகையவை? வரலாறு வெளிச்சமிட்டு வியக்கவைக்கும் அந்த வெற்றிகளை நிரல்பட அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் இனிய நோக்கமாகும்.

போர் வெற்றிகள் நாட்டின் எல்லைகளை விரிக்கவும், தோள்வலி காட்டவும், வீரமண்ணில் பிறந்தவர் நாங்கள் என முழங்கிக் குடிப் பெருமை மெய்ப்பிக்கவும் அமைந்தவை. இதனால் பொன்னும் பொருளும் குவியலாம். கொண்டி மகளிரின் எண்ணிக்கை கூடலாம். வென்ற நிலங்களில் இந்த மண்ணின் அடையாளங்கள் சிறக்கலாம். வரலாறு, இவர் வெற்றி வேந்தர், வெற்றி வேந்தர் என்று பக்கம் பக்கமாய்ப் பேசலாம். ஆனால் அது மட்டுமே ஒரு பேரரசரை மக்கள் நெஞ்சில் நிலை நிறுத்துவதில்லை.

கங்கை கொண்ட சோழரான முதலாம் இராஜேந்திரரைவிடச் சிறந்த வெற்றிகளை இராஜராஜர் பெற்றுவிடவில்லை. இமயத்தில் கொடி பொறித்த சங்க மன்னர்களினும் சிறந்த வீரச் சாதனைகளை இராஜராஜர் செய்துவிடவில்லை. முதலாம் ஆதித்தர் பெற்ற போர் அனுபவங்களோடு ஒப்பிடும்போது இராஜராஜரின் போர்க்களங்கள் வரலாற்றுத் திருப்புமுனைகளாகக் கருதப்படமாட்டா. காந்தளூர்ச் சாலையில் கலமறுத்துத் தொடங்கிய இராஜராஜரின் போர்கள், செழியரைத் தேசு கொண்டதையே பெருமைக்குரிய நிகழ்வாக முத்திரையிட்டு முடிந்து விடுகின்றன. கங்கம், நுளம்பம், தடிகை எனப் பாடிகள் பல வெல்லப்பட்டிருந்தாலும் அவை பேரரசில் எத்தனை காலம் இருந்தன, எந்த நிலை வகித்தன என்பதற்குச் சான்றுகள் இல்லை.

இந்நிலையில் இந்தக் கள வெற்றிகள்தான் இராஜராஜரின் பெருவெற்றிகள் எனக் கருதுவது எவ்விதத்தானும் பொருந்துவதாகாது. இராஜராஜரின் புகழிற்குக் காரணமான வெற்றிகள் வேறு புலம் சார்ந்தவை. அவை விரிவான ஆய்வுக்கு உரியவை.

தமிழகத்துக் கலை வரலாற்றில் நிகரற்ற புகழ் பெற்ற இமயங்களாய் நான்கு மன்னர்களைக் குறிப்பிடலாம். படியேறிச் செல்லும் மாடக்கோயிலை அமைத்துக் கோயிற்கலை முறையில் முதல் புரட்சியைத் தோற்றுவித்த கோச்செங்கணார் முதலாமவர். மலைகளையும் பாறைகளையும் துளைத்து எழிலார்ந்த குடைவரைகள் உருவாகக் காரணமாக இருந்த விசித்திரசித்தரான மகேந்திரப் பல்லவர் இரண்டாமவர். மலையில்லாத இடங்களிலும் கற்களையடுக்கிக் கோயில் எழுப்பலாமென்பதை உலகுக்கு உணர்த்திய அத்யந்தகாமரான இராஜசிம்மப் பல்லவர் மூன்றாமவர். கற்கோயில்களின் முடிசூடா மன்னனாக இந்த இராஜராஜீசுவரத்தை எழுப்பிய முதலாம் இராஜராஜர் நான்காமவர். இந்த நால்வருக்கும் தமிழ்நாடு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. என்றாலும் கோச்செங்கணாரையோ, மகேந்திரப் பல்லவரையோ, இராஜசிம்மரையோ நினைத்துப் பார்க்காத மக்கள் இராஜராஜரை மட்டும் இத்தனை நேசிப்பது ஏன்?

அதுதான் இராஜராஜருடைய உண்மையான வெற்றி. இன்றைக்கும் மக்களால் நினைக்கப்படும் நிலையில் வாழ்கிறாரே, அந்த அழிவில்லாத வாழ்க்கைதான் இராஜராஜரின் மகத்தான வெற்றி. அந்த வெற்றியை இராஜராஜருக்குப் பெற்றுத் தந்தவை அவருடைய களங்களல்ல. அவர் வளர்த்த கலைகள்; அவர் பெற்றிருந்த பண்புள்ளம்; அவரது வரலாற்றுணர்வு.

இராஜராஜரின் பண்புள்ளத்திற்கு இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகளே சான்றுகளாய் நிற்கின்றன. கோயிலுக்குத் தாம் கொடுத்த கொடைகளைக் கல்லில் வெட்ட ஆணை பிறப்பித்தபோது, 'நாம் குடுத்தனவும் நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும்' என்று அப்பெருமகன் சொல்லியிருக்கும் பாங்கு இந்த உலகத்தின் எந்தக் கல்வெட்டிலும் காணமுடியாத பண்பு வெளிப்பாடாகும். மகளிர்க்குச் சமத்துவம் காட்டியிருக்கும் மாண்பு பாரதியின், பாரதிதாசனின் பாடல்களைத்தான் நினைவூட்டுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில்கூடப் பெண்ணுரிமையைப் பெண் சமத்துவத்தைப் பாடவேண்டிய நிலைதான் இந்த மண்ணில் இருந்தது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு பெருவேந்தர் அந்த இரண்டையும் மிக இயல்பாகத் தாம் போற்றி வாழ்ந்ததைக் கல்வெட்டாக்கிக் காட்டியிருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். சமதர்மம் பேசும் இந்த நாளில் கூட அதை நோக்கிய பயணம் இல்லை. ஆனால் 'குடுத்தார் குடுத்தனவும்' என்ற இராஜராஜரின் ஆணைவரி, மன்னரோடு மக்களை ஒக்க நிறுத்தி, அந்தச் சமுதாய ஏந்தலின் சமதர்மம் காட்டுகிறது.

கலைப் படைப்புகளைக் காலப் படைப்புகளாய் உருவாக்கித் தந்த இராஜசிம்மரையும் வென்றுவிட்ட கலைப் பெருமையை இராஜராஜர் பெற்றதற்குக் காரணமே இந்த இராஜராஜீசுவரம்தான். காஞ்சிபுரத்து இராஜசிம்மேசுவரம் போலவோ, தாராசுரத்து இராஜராஜேசுவரம் போலவோ இங்கு அற்புதமான சிற்பங்களில்லை. இதன் கட்டட அமைப்புக்கூட காஞ்சிபுரத்து இராஜசிம்மேசுவரத்திடம் கடன் பெற்றதுதான். என்றாலும், இத்திருக்கோயிலில் உலக அரங்கில் புகழின் உச்சியில் வைத்துப் போற்றப்படுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. அந்தக் காரணங்களுக்கெல்லாம் ஆதியாய், அடிப்படையாய் நிற்பது இராஜராஜரின் 'எதையும் பெரிதாகச் செய்யும்' பெரும்பண்புதான்.

இந்த வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலும் முருகன் கோயிலும் அதையொட்டிய மண்டபமும், அம்மன் கோயிலும், சபாமண்டபமும் பிற்காலத்தவை. அவற்றைப் பார்வையிலிருந்து அகற்றி இந்த வளாகத்தை ஒருமுறை நினைத்துப் பார்த்தால், அப்போது விளங்கும் இராஜராஜீசுவரத்தின் சிறப்பும் பெருமையும். ஈடு இணையற்ற அதன் கம்பீரமும், தனித்ததொரு எழுச்சியாய்ப் பெருவெளியின் நடுவே, விண் தொட உயர்ந்த இந்த விமானம் இராஜராஜரின் காலக்கனவு. இது போலொரு கட்டடம் இந்த மண்ணில் இதுவரை வந்ததில்லை. இனி வரப்போவதுமில்லை.

எப்படிச்செய்தால், எதைச்செய்தால் பொருத்தமாக அமையுமோ அப்படி, அதை முறை பிறழாது நன்கு திட்டமிட்டுச் செய்ததாலேயே, இராஜராஜீசுவரம் முழுமையடையாத போதும், இந்த நாட்டின் முத்தாய்ப்பான கலைச்சின்னமாக மகிழ்ந்து கொண்டாடப்படுகிறது. பல தனிச்சிறப்புகளைக் கொண்ட இந்தத் திருக்கோயிலின் தலையாய பெருமைகளாய் ஐந்தைக் கூறலாம். ஒன்று இதன் விமானம். இதன் கட்டட அமைப்பு உலகுக்கே அதிசயம். இன்றளவும் விளங்காத புதிர். இரண்டாவது, பழந்தமிழ் இலக்கியங்களுக்கு இக்கோயிலில் கிடைத்திருக்கும் சிற்ப வெளிப்பாடுகள். நக்கீர தேவரின் திருக்கண்ணப்ப தேவர் திருமறம், சேரமான் பெருமாளின் ஆதியுலா, பாரத வெண்பா, சுந்தரரின் திருநொடித்தான் மலை திருப்பதிகம் என இந்த இலக்கிய வரிசை மகத்தானது. மூன்றாவது, இங்குள்ள ஆடற்கரணச் சிற்பங்கள். இவற்றைப் பரத நாட்டியச் சிற்பங்கள் என்று ஆடல் பற்றி அறியாதவர்கள் பிழையாகச் சொல்லுவர். இவற்றுக்கும் பரதநாட்டியத்திற்கும் எள்ளத்தனை தொடர்புமில்லை. இவை பரதரின் நாட்டிய சாத்திரம் பேசும் தாண்டவ லட்சணப் பகுதியிலுள்ள கரண இலக்கணங்களுக்கான, கல்லில் வடித்த விளக்கங்கள். தமிழ்நாட்டில் முதன் முதலாகத் தாண்டவ லட்சணத்தைத் தொடராகக் கல்லில் வடித்த பெருமை இராஜராஜரையே சாரும். ஆண்டவனே ஆடுவதுபோல் அமைந்த கரணத்தொடரும் இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இது ஒன்றுதான்.

நான்காவது இங்குள்ள ஓவியங்கள். பத்தாம் நூற்றாண்டின் வரலாறு பேசும் இந்த ஓவியங்கள் இராஜராஜரின் இலக்கிய ஈடுபாட்டை, சமய உணர்வை, உள்ளத்தின் எழுச்சிகளைத் தெள்ளத் தெளிவாய் வெளிப்படுத்துகின்றன. ஐந்தாவது இங்குள்ள கல்வெட்டுகள். இவை போல் விரிவான கல்வெட்டுகளை, வரலாற்றுக்குப் பயன் தரும் பல தகவல்களை வழங்கும் கல்வெட்டுகளைத் தமிழகத்தின் வேறெந்தத் திருக்கோயிலும் இத்தனை எண்ணிக்கையில் இத்தனை நீளமாய்ப் பார்ப்பது இயலாது. இந்தக் கோயிலின் தளிச்சேரிக் கல்வெட்டு ஒன்று போதும். 55.78 மீட்டர் நீளத்தில் எழுபத்து மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு, இக்கோயிலில் பணியாற்றிய 617 அலுவலர்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. இது வழங்கும் பிற செய்திகளை டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்விதழான வரலாறு ஐந்தாம் இதழ் விரிவான ஆய்வு நோக்கில் கட்டுரையாக்கித் தந்துள்ளது.

அளப்பரிய தம் பண்புள்ளத்தாலும், முயன்று முனைந்து உருவாக்கிய தேவாலயங்களின் சக்கரவர்த்தியான இராஜராஜீசுவரத்தாலும், வரலாற்றை வழங்கி நிற்கும் இக்கோயில் கல்வெட்டுகளாலும் காலத்தை வென்று நிற்கும் இராஜராஜரின் மெய்ப்புகழே அவரது வெற்றிச் சாதனை. இந்த மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கும் அந்த மாமனிதருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் இரண்டுண்டு. இடைக்காலத்தில் நுழைக்கப்பட்ட, கல்வெட்டுகள் கண்காட்டாத 'பிரகதீசுவரம்' என்ற தேவையற்ற பெயரை அகற்றி, இராஜராஜர் வைத்த பெயராலேயே இக்கோயிலை 'இராஜராஜீசுவரம்' என்றழைப்பது முதற்கடமையாகும்.

இத்திருக்கோயில் வளாகத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது இரண்டாம் கடமையாகும். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையும் இக்கோயில் நிர்வாகமும், இங்கு வரும் மக்களும் ஒருங்கிணைந்து முயன்றால் இது எளிதாய் முடியும். தளிச்சேரிக் கல்வெட்டு உட்படப் பல அரிய கல்வெட்டுகள் சுற்றுச் சுவர்களில்தான் உள்ளன. இவற்றைப் படிக்கக்கூட இப்பகுதிக்குப் போக முடியாதபடி கோயில் கழிவுகள் இவ்விடத்தைப் பாழ்படுத்தி வரும் சூழல் மாறவேண்டும். சதயத் திருநாள் கொண்டாடுவதை விட இராஜராஜருக்கு நாம் செய்யக்கூடிய பெருந்தொண்டு அவர் கட்டிய இந்த ஒப்பற்ற கலைப் பேழையின், கட்டட அதிசயத்தின் சுற்று வளாகத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான். அறிவியல் நோக்கிலும்கூட இது முக்கியமாகிறது.

இராஜராஜரின் வெற்றி இந்தத் திருக்கோயிலென்றால், அதைத் தூய்மையாக, யாரும் நடமாடக் கூடிய சூழலில் வைத்துக் கொள்வதே நம் வெற்றியாகும். அதுவே அம்மன்னருக்கு நாம் காட்டும் நன்றியுமாகும்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.