http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 10

இதழ் 10
[ ஏப்ரல் 15 - மே 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றாய்வுப் பணிகளில் வரலாறு டாட் காம்
பகவதஜ்ஜுகம் - 1
கதை 5 - காளி நீலி
நன்றியுடன் நகரிலிருந்து . . . !
பழுவூர்-3
கல்வெட்டாய்வு - 8
கட்டடக்கலைத்தொடர் - 8
சமய சாசனம்
நார்த்தாமலையை நோக்கி... - 2
The Origin and Evolution of Amman Worship
சங்கச்சாரல் - 9
பெண் தெய்வ வழிபாடு
இதழ் எண். 10 > கலையும் ஆய்வும்
சமய சாசனம்
மு. நளினி
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளுள் பெரும்பான்மையன கொடைக் கல்வெட்டுகளாகவே இருந்தபோதும், அவை வழங்கும் வரலாற்றுத் தரவுகள் கணக்கிலடங்காதன. ஒவ்வோர் ஊர்க்கோயிலிலும் ஒரு கல்வெட்டாவது புதிய தடத்தில் அமைந்துவிடுவதுஅ அய்வுக்களத்திலிருப்போரின் அன்றாட அநுபவமாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டம் தவத்துறைக்கு அருகிலுள்ள நகர்க்கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது, அப்படியொரு புதிய தடத்தில் பாதம் பதிக்கக் கல்வெட்டொன்று வழியமைத்தது.

நகரிலுள்ள அப்பிரதீசுவரர் கோயிலின் பெருமண்டபத் தாங்குதளத்தின் வடபுறம் வெட்டப்பட்டுள்ளது இக்கல்வெட்டு. 1962-63ல் நடுவணரசின் கல்வெட்டாய்வுத் துறையால் படியெடுக்கப்படுச் சுருக்கம் மட்டும் வெளியாகியுள்ள இக்கல்வெட்டின் பாடத்தைப் படித்தறியும் முயற்சியில்தான் சமயசாசனம் முழுமையாக வெளிப்பட்டது.

சோழப்பெருவேந்தரான மூன்றாம் குலோத்துங்கரின் பத்தாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1188) வெட்டப்பட்டிருக்கும் இக்கல்வெட்டு, 'ஸ்ரீமஹாஹேஸ்வர சாசனம்' என்றும் அழைக்கப்பெறுகிறது. காவிரியின் வடகரையில் இருந்த இராஜராஜ வளநாட்டின் கீழ் இணைக்கப்பட்டிருந்த பல நாடுகளுள் மீமலை நாடும் ஒன்று. இந்நாடு பல சிற்றூர்களின் இணைவால் உண்டானது. அத்தகு சிற்றூர்களுள் ஒன்றே ஸ்ரீமாஹேஸ்வர நல்லூரான மேலைத்திருவாசல். கோயிலுக்குக் கொடையளிக்கப்பட்ட ஊர் என்பதால் இவ்வூரைக் கல்வெட்டுத் தேவதானம் என்று அறிமுகப்படுத்துகிறது.

கி.பி. 1188ல் இவ்வுர்த் தாயிலும் நல்லீசுவரம் உடையார் கோயிலில் நாற்பத்தெண்ணாயிரவன் என்ற பெயரில் அமைந்திருந்த திருக்காவணத்தில் பெருங்கூட்டம் ஒன்று கூட்டப்பெற்றது. இக்கூட்டத்தைக் கூட்டியவர்கள் தாயிலும் நல்லீசுவரத்து ஸ்ரீருத்ர, ஸ்ரீமாஹேசுவரப் பெருமக்கள். இப்பெருங்கூட்டத்தில் பங்கேற்கப் பல மண்டலத்து மாஹேஸ்வரர்களும் வந்திருந்தனர். சைவத் திருக்கூட்டங்களில் உள்லடங்கிய சங்கேத முதலிகளும் ஸ்ரீவீரபத்திரர்களும் மண்டபத்தில் நிறைந்திருந்தனர். நாடு, நகரம், பதினெண் விஷயம் சார்ந்தவர்களும் கூடியிருந்தனர். இக்கூட்டத்தில் சண்டேசுவரர் பெயரால் நிறைவேற்றப்பட்டதே சமய சாசனம்.

இந்த சமய சாசனம் இரண்டு பிரிவுகளை உள்ளடகியுள்ளது. முதற்பிரிவு நிலக்கொடை ஒன்றைச் சுட்டுகிறது. இரண்டாம் பிரிவு இரண்டு தனியர்களுக்கு அநுமதிக்கப்பட்ட சிறப்பு மரியாதைகளை உள்ளடக்கியுள்ளது. கொடையும் மரியாதைகளும் யாருக்கு வழங்கப்பட்டன? ஏன் வழங்கப்பட்டன? இவ்வினாக்களுக்கான விடைகளை கல்வெட்டின் தொடக்கத்திலேயே காணமுடிகிறது.

மழநாட்டின் கீழை முறியில் உள்ளடங்கியிருந்த மணற்கால் (தற்போது மணக்கால்) விருதராஜ பயங்கர சதுர்வேதிமங்கலமென்று அறியப்பட்ட சிற்றூராகும். தில்லைநாயகன் பெரிய நாயனான திருத்தவத்துறை ஆச்சார்யன் தொழிலால் தச்சர். இவருக்கு பிராமண ஊரான மணற்காலில் தொழில்முறை சர்ந்த நிலப்பேறு இருந்தது. கல்வெட்டில் இந்நிலப்பேறு 'தச்சாச்சார்ய காணி' என்று குறிப்பிடப்படுகிறது. இவருடைய தம்பி என்னா உடையார். தில்லைநாயகனும் என்னாவுடையாரும் இணைந்து தாயிலும் நல்லீசுவரத்தில் இறைவன் எழுந்தருளுவிக்கப்பட்ட காலம்வரை சமய காரியமாற்றியதாய்க் கொண்டாடும் கல்வெட்டு, அச்சமய காரியத்திற்கு தட்சிணையாக, சமயப் பிரசாதமாக ஊரொன்று வழங்கப்படதகவலைத் தருகிறது.

மீமலை நாட்டிலிருந்த நாராயணபுரம் எனும் ஊரின் பெயரை ஸ்ரீமாஹேஸ்வரநல்லூர் மேலைத் திருவாசலாக்கி, சமயப் பிரசாதமாக, சிற்பாசாரியக் காணியாக பெரியநாயனுக்குக்ம் என்னா உடையாருக்கும் வழங்கிய திருக்காவணப் பேரவையினர், ஊரின் எல்லைகளையும் கல்வெட்டில் முரையாகப் பதிவுசெய்துள்லனர். குத்துவாய்க்கால் கிழக்கெல்லையாகச் சுட்டப்படுகிறது. தென்னெல்லை காவிரியாறு. வடக்கெல்லை பச்சைமலை. மேற்கெல்லையாகக் குறிக்கப்படும் இடம் கல்வெட்டில் தெளிவாக இல்லை.

மேலைத்திருவாசல் ஊரைச் சிற்பாசிரியக் காணியாகப் பெற்ற பெரிய நாயன் அவ்வூருக்கான வரியினங்களான திருவாசல் பணி, தேவை, குடிமை ஆகியவற்றைச் செலுத்திக் கொண்டு, தனக்குரிய பேற்றினைப் பெற்றுக் கதிரும் நிலவும் உள்லவரை ஊரை அநுபவிட்துக் கொள்ள திருக்காவணத்தார் ஆவணம் வழிசெய்துள்ளது.

அத்துடன் நிற்காது அண்னன் தம்பி இருவரும், போகம் ஒன்றுக்கு மாடக்கோயில் நெல்லு ஆளுக்கு ஒரு கலமும் கூடக்கோயில் நெல்லு ஆளுக்குத் தூணிப்பதக்கும் பெற வழிசெய்யப்பட்டது. மாடக்கோயில் நெல், கூடக்கோயில் நெல் என்னும் சொல்லாட்சிகளின் பொருளை அறியக்கூடவில்லை.

இந்த சமய பிரசாதத்துடன், 'சமய தரங்களும்' இவர்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி இருவரும் புலித்தோல் மேவின தண்டு, பட்டுக்குடை, பரிவட்டம் பெற்றனர். செல்லுமிடமெல்லாம் வரவேற்பும் உபசரிப்பும் பெறும் தகுதியும் அவர்கட்குத் தரப்பட்டது. இந்த சமய பிரசாதத்திற்கோ, சமய தரங்களுக்கோ யாரேனும் இடையூறு செய்தால் அவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு ஸ்ரீவீரபத்திரர்களிடம் ஓப்புவிக்கப்பெற்றது.

அப்பிதீசுவரர் கோயிலில் இச்சமய சாசனம் தவிர இரண்டாம் இராஜாதிராஜர் காலக்கல்வெட்டுகள் இரண்டும் மூன்றாம் குலோத்துங்கர் காலக் கல்வெட்டு ஒன்றும் மாறவர்மர் குலசேகரர் கல்வெட்டு ஒன்றும் உள்ளன. இராஜாதிராஜரின் கல்வெட்டுகளுள் ஒன்று மெய்க்கீர்த்தி மட்டும் பெற்றுள்ளது. மற்றொன்று இராஜாதிராஜரின் ஆறாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் வழி நகர், கலார்க்கூற்றத்தின் கீழிருந்த ஊராக அறியப்படுகிறது. நகர்க்கோயிலின் வரவினங்கள் கோயில் நடைமுறைச் செலவுகளுக்குப் பற்றாமல் இருந்தமை உணர்ந்த அப்பகுதி ஆட்சியாளர் அகளங்கநாடாழ்வான் என்பார், மன்னரிடம் கோயிலுக்குத் தேவதான இறையிலியாகச் சிறிது நிலம் இடப்பெறவேண்டுமென்று பரிந்துரைத்தார். அதனை ஏற்ற மன்னர் கலார் கூற்றத்தின் கீழிருந்த நெற்குப்பைக் கண்டத்தைச் சேர்ந்த திலதக்குடி எனும் ஊரில் பதினைந்தே முக்கால் வேலி மாகாணி நிலத்தைக் கோயிலுக்குத் தேவதான இறையிலியாக அளிக்க உத்தரவிட்டார். மன்னரின் வாய்மொழி உத்தரவு அரச ஆணையாக எழுத்து வடிவில் உருப்பெறுமாற்றை இக்கல்வெட்டு விரித்துரைக்கிறது. அரச ஆணையை ஓலையாக எழுதியவர் திருமந்திர ஓலை மீனவன் மூவேந்த வேளான்.

இந்த இறையிலி நிலத்தால் கோயிலுக்குக் கிடைத்த நெல்லின் அளவு நூற்று முப்பத்து நான்கு கலமும் முக்குறுணியும் என அளவிடப்பட்டுள்ளது. ஓலையைப் புரவு வரியினர் (வருவாய்த்துறை) பதிவு செய்து, புரவுவரி ஸ்ரீகரண நாயகம், புரவுவரி ஸ்ரீகரணத்து முகவெட்டி எனும் இருநிலை அலுவலர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மூன்றாம் குலோத்துங்கரின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுச் சிற்றூர் ஒன்றின் துயரக்கதையைப் பகிர்ந்துகொள்கிறது. பெலங்காவூர், பாச்சில் கூற்றத்தின் கீழிருந்த பிராமணர் குடியிருப்பாகும். இவ்வூர்ப் பெருங்குறி மகாசபை நிலத்துண்டொன்றை விற்றதற்கான ஆவணமே கல்வெட்டாகியுள்ளது. பெலங்காவூர் நில உடைமையாளர்கள் சிலர் தங்கள் நிலங்களுக்குச் சஸ்ரீஇயான நீர்வரத்து இல்லாமல் போனமையால், பயிர்கள் நலிய, தாங்கள் சபைக்குச் செலுட்த்ஹவேண்டிய வரியினங்களைச் செலுத்த மாட்டாமல் ஊரிலிருந்து வெளியேறினர். இந்தச் செய்தியைக் கல்வெட்டு, 'வெட்டியும் சிறப்பும் காணியாளர் ஆற்றமாட்டாமையும் புற்றடைத்துப் பாழா வருகையாலும், இசுரகடை நீர்தட்டி இளம் பயிராய் சாவியாதலாலும் இவூர் காணியாளர் சிலர் நிலை நில்லாதே போதையாலும்' எனக் கூறி வருந்துகிறது.


காணியாளர்கள் வரி செலுத்தாமல் ஊரை நீங்கியதால், சபையின் மேல் சுமையேறியது. இச்சுமையைச் சரிசெய்ய சபை சிறிதளவு புன்செய் நிலமும் ஓடைநிலமும் விற்க நேர்ந்தது. விற்கப்பட்டநிலத்தின் அளவு, எல்லைகள், முந்து உரிமையாளர்கள் பற்றிய தரவுகள் நிலவிலை ஆவணத்தில் உள்ளன. இவற்றுள் கிழக்கெல்லையாகக் குறிக்கப்படும் 'கொட்டுக் குழி' இவ்வூர்க்கோயிலில் 'கொட்டு' நிகழ்த்த உவச்சர்க்குத் தரப்பட்ட நிலத்துண்டாகலாம்'

கோமாறவர்மரான குலசேகரதேவரின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் வெட்டப்படுள்ள கல்வெட்டு, நகரை வடவழி நாட்டின் கீழிருந்த விக்கிரமபுரத்து அகரம் ஸ்ரீபோசள வீரசோமீசுவர சதுர்வேதிமங்கலத்துப் பிடாகையாகக் குறிப்பிடுகிறது. வீரசோமீசுவர சதுர்வேதிமங்கலத்து சபையார் நகர்க்கோயில் மண்டபத்தில் கூடி, அகர பட்டர்களில் ஒருவரான கோமடத்து அனந்த நாராயணபட்டர், நகர்க்கோயில் நம்பிமார் கையில் ஆஸ்ரய லிங்கமாக எழுந்தருளுவித்த வாசரதீச்வரமுடையாருக்குத் தேவையான அமுதுபடி (சோறு), சாத்துபடி (மாலை மற்றும் அபிடேகப்பொருட்கள்)J, வெஞ்சனம் (காய்கறிகள்), திருப்பரிசட்டம் (இறைத்திருமேனிக்கு அணிவிக்கும் ஆடை), திருவிளக்கு ஆகிய்வற்றிற்கான முதலாக் அநகரில் அனந்த நாராயணர் பெயரில் இருந்த நிலப்பகுதி ஒன்றைத் திருநாமத்துக்காணியாக்கித் தந்தனர். இந்நிலம் ஊர்க்கீழ் இறையிலியாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலத்தைப் பயிர் செய்ய்ம் வேளாளர் குடியிருக்க, வெள்ளான் தெருவில் அனந்த நாராயண பட்டர் விலைக்குப் பெற்றுத் தமக்குரியமையாகக் கொண்ட மனை ஒன்று வழங்கப்பட்டது. இம்மனை இருந்த தெரு, 'வெள்ளான் தெருவில் தெற்குத் தெருவில் தென்சிறகில் கீழைத் தெரு' என்று கல்வெட்டில் குறிக்கப்படுவது நோக்கத்தக்கது. மனை நிலங்களும் அளக்கப்பட்டிருந்தன என்பதற்கும் அதற்கான அளவுகோல்களும் வழக்கிலிருந்தன என்பதற்கும் இக்கல்வெட்டுச் சான்றாகிறது. திருநாமத்துக்காணியாகத் தரப்பட்ட இம்மனையின் புழக்கடையில் தென்னை மரங்கள் இருந்தன. இம்மரங்களின் பயன்கொண்டு இறைவனுக்குத் திருமுழுக்காட்டவும், படையலிடவும் ஒப்புக்கொள்லப்பட்டது.

'ஊர்க்கீழ் இறையிலி' என்னும் சொல்லாட்ச்சி, ஊரார் வரிசெலுத்தும் பொறுப்பேற்ற மானிய நிலத்தைக் குறிப்பதாகும். நிலங்களிலிருந்து பெறப்பட்ட வரிகளாகக் கடமை, குடிமை, வெட்டி, காவேரிக்கரை நாரணம் உள்ளிட்ட விநியோகங்கள், தேவைகள், சபா விநியோகம் ஆகியன குறிக்கப்படுகிண்றன. ஊர் வழியில் கமுகுத் தோட்டமும் குளமும் பெருமாள் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியொன்றும் இருந்தம்கையைக் கல்வெட்டின் இறுதித் தொடர் தெரிவிக்கிறது.

விமானத்தின் தாங்குதளத்தின் மேற்குப் பகுதியிலிருந்து படிட்த்ஹறியப்பட்ட கல்வெட்டுப் பெரிதும் சிதைந்துள்லது. இக்கல்வெட்டால் கோயிலில் முருகன் திருமேனியொன்று நிறுவப் பெற்றதையும் திருக்காமக்கோட்டநாச்சியார் அமைக்கப்பட்டதையும், அவ்வம்மையின் வழிபாட்டிற்காகத் திருநாமத்துக்காணியாக நிலப்பகுதியொன்று கொடையாகத் தரப்பட்டதையும் அறியமுடிகிறது. இக்கல்வெட்டின் கையெழுத்தாளர்களுள் பலர் மழநாட்டுப் பெருமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கொடைக்கல்வெட்டுகளில், அக்கொடையைக் காப்பாற்றுவார் பெறும் நன்மைகளும் கொடைக்குத் தீங்கு நினைப்பார் பெறக்கூடிய துன்பங்களும் சொல்லப்பட்டிருக்கும். கொடையை நிறைவேற்றாதாரும், கொடைக்குத் தீங்கு நினைப்பாரும் துரோகிகளாக அறிவிக்கப்படுவர். சிவத்துரோகம், ராஜ துரோகம் என்பன கல்வெட்டுகளில் பரவலாக இடம்பெற்றுள்ளன. 'பிரம துரோகம்' என்னும் சொல்வழக்கை முதன் முதலாக அப்பிரதீசுவரர் கோயில் கல்வெட்டொன்றிலேயே காணமுடிந்தது. பெருமண்டபத்தாங்குதளத்தின் கிழக்குப் பகுதியிலிருக்கும் கோதண்டராம தீட்சிதரின் நிலக்கொடைக் கல்வெட்டில் இச்சொல்வழக்கு இடம்பெற்றுள்ளது.

கால்நடை வளர்ப்பாரும், பராமரிப்பாரும் கல்வெட்டுகளில் மன்றாடிகள் என்று குறிக்கப்பெறுவர். கோதண்டராமரின் கல்வெட்டு, 'எடயன்' என்கிறது. மன்றாடியிலிருந்து இடையர் என்ற சொல் வழக்குப்பெறும் காலகட்டமாக இதைக் கருதலாம். இக்கல்வெட்டு அட்சய ஆண்டு (1986 அல்லது 1746) ஆவணித்திங்கள் இருபத்தேழாம் நாளில் வெட்டபட்டுள்ளது. கோயில் நிவந்தக்காரர்களைக் 'கோயில் தொழில்முறை ஊழியர்' என்று குறிப்பிடும் இக்கல்வெட்டிலிருந்த் சில நிலப்பெயர்களும் கிடைத்துள்லன.

ஊர்ப்பிள்ளையார் கோயிலின் முன்னால் நிலத்தில் புதைந்திருந்த கல்வெட்டுப் பலகையை அகழ்ந்து படித்தபோது, பிள்லையார் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையை அறியமுடிந்தது. கல்வெட்டுப் பெரிதும் சிதைந்திருந்தமையால் விரிவான தரவுகளைப் பெறக்கூடவில்லை.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.