இதழ் - 10
|
கல்வெட்டாய்வு - 8
மா.
இலாவண்யா
|
|
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
|
சென்ற இதழில் கொடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்த கல்வெட்டு வரிகளை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் படித்ததை கீழுள்ள வரிகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளவும்.
1) ஸ்வஸ்திஸ்ர் மதிரை கொண்ட கோப்பரகேசரிபன் 2) மற்கு யாண்டு யஉ ஆவது பிரமதேயம் ஈசான 3) மங்கலத்துப் பாரதாயன் நாராயண நக்க 4) நேன் திருச்சென்துரைக் கற்றளி பரமேசுவரர்க்கு 5) சந்திராதித்தவல் உண்ணாழிகையில் நொன்தா விள 6) க்கெரிய நான் குடுத்த நிலமாவது எங்கள் பிர 7) மதேயம் நீர் நிலத்து அல்லூர் வாய்க்காலின் 8) கீழை முக்கால் விளாகத்து என் காற் செய் ஊர் 9) அறிஞ்ச பன் நான்கெல்லையில்லகப்பட்ட உண்ணிய 10) ம் ஒழிவின்றி திருநொன்தா விளக்குக்கு குடுத்தேன் பாரதாய 11) ன் நாராயண நக்கனேன் நான் சாந்தியபுறமாகக் குடுத் 12) த நிலமாவது அல்லூர் வாய்க்காலின் மிய்வாய் 13) க்கால் கொகிள_காற் செய்யில் அரை மாவும் பள்ள 14) த்து தென்னுலவாய் காற்செய் கூற்றில் ஒரு மாவரை.
கல்வெட்டு செய்தியாவது - "இவ்வளவு மாதங்களாகக் கல்வெட்டுக் கட்டுரையை படித்துக்கொண்டிருக்கிறோமே. எங்களுக்கு இக்கல்வெட்டுச் செய்தியைக்கூடவா புரிந்துகொள்ள முடியாது?" என்று கேட்கிறீர்கள் இல்லையா? இருந்தாலும் நீங்கள் படித்துப் புரிந்துகொண்டது சரிதான் என்று தெரிந்தால் மிகவும் சந்தோஷம் அடைவீர்கள் தானே. அதற்காகவேனும் இங்கு செய்தியைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். மேலும் கல்வெட்டில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லுமே ஒரு வரலாற்றுச் செய்தியை நமக்குத் தருகிறது. அப்படி நாம் அறியக் கூடிய, இக்கல்வெட்டில் உள்ள செய்திகளைப் பார்க்கலாம்.
இக்கல்வெட்டு மிக நீளமான மெய்கீர்த்தியுடன் தொடங்கவில்லை என்றாலும் அம்மன்னருக்கு உரிய பட்டம் அல்லது அடைமொழியுடன் தொடங்குகிறது. "மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்" என்பது முதலாம் பராந்தகனைக் குறிக்கும். அவரது பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இது. (ய என்றால் பத்து, உ என்றால் இரண்டு)
திருச்செந்துறை என்று இன்று வழங்கப்படும் ஊரானது சோழர்கள் காலத்தில் ஈசானமங்கலத்து பிரமதேயமாக வழங்கப்பட்டது. இப்பிரமதேயத்தைச் சேர்ந்த பாரதாயன் நாராயண நக்கன் என்ற பெயருடைய ஒருவர், திருச்செந்துறை இறைவனுக்கு அளித்த நிலக்கொடையைப்பற்றிய தகவலைத் தருகிறது இக்கல்வெட்டு.
பிரமதேயம் என்பது பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட வரிநீக்கப் பட்ட நிலங்களைக் கொண்ட ஊராகும். திருச்செந்துறைக் கற்றளி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் பராந்தகன் காலத்திலேயே திருச்செந்துறை ஒரு கற்றளியாக அதாவது கருங்கற்களால் கட்டப்பட்ட கோயிலைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. அக்கோயிலுக்குச் சென்று கோயில் கட்டமைப்பை ஆராய்ந்தால், இப்பொழுது இருக்கும் கற்றளி, பராந்தகன் காலத்தியதா அல்லது அதற்குப் பின் புனருத்தாரணம் செய்யப்பட்டதா என்பது விளங்கும்.
மேலும் நாராயண நக்கன் என்னும் பெயரை ஆராய்ந்தால் நமக்கு அக்கால சமுதாயத்தில் நிலவிய ஒழுக்கங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. நக்கன் என்ற சொல்லை சிவபெருமானின் அடியவர் என்று குறிக்கும் வகையில் பலரும் அக்காலத்திலே தங்கள் பெயருடன் இணைத்து மகிழ்ந்தனர். இரா. கலைக்கோவன் மற்றும் மு. நளினி அவர்கள், தங்களின் தளிச்சேரிப் புத்தகத்தில் நக்கன் என்ற சொல்லிற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளனர்.
நக்கன்
இராஜராஜீசுவரத்துத் தளிச்சேரிகளில் குடியமர்த்தப்பட்ட நானூறு பெண்களும் தங்கள் இயற்பெயருக்கு முன்னால் நக்கன் என்னும் சொல்லைப் பொதுப்பெயராகக் கொண்டிருந்தனர். நக்கன் என்ற சொல் சிவபெருமானைக் குறிப்பதாகும். திருமுறை ஆசிரியர்கள் இச்சொல்லால் சிவபெருமானை அழைத்து மகிழ்வதைத் தேவாரப் பதிகங்களில் காணமுடிகிறது.* சங்க இலக்கியங்களிலோ, இரட்டைக் காப்பியங்களிலோ, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலோ பயின்று வராத இச்சொல்லை முதன்முதலாகப் பதிக அடிகளிலேயே பார்க்க முடிகிறது. பரங்குன்றத்துப் பராந்தகன் நெடுஞ்சடையன் கல்வெட்டில் நக்கன் கொற்றி குறிக்கப்படுகிறார். ** நக்கன் என்ற சொல் பயின்று வரும் காலத்தால் முற்பட்ட கல்வெட்டாக இதைக் கொள்ளலாம்.
கோயிற்பணிகளுக்கென்றே தங்களை அர்பணித்துக்கொண்ட மக்கள், நக்கன் என்ற முன்னொட்டைத் தங்கள் இயற்பெயருடன் இணைத்துக்கொண்டார்கள். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்துவதைப் பல கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. முதலாம் இராசராசரின் மனைவியான பஞ்சவன்மாதேவியும், முதலாம் இராசேந்திரரின் துணைவியான பஞ்சவன்மாதேவியும் பழுவேட்டரையர் பெண்கள். இவர்கள் இருவருமே தங்கள் பெயருடன் நக்கன் என்ற முன்னிட்டைக் கொண்டிருந்தனர். *** சேரமானின் தேவியாராகப் பழுவூர்க் கல்வெட்டுகளில் இடம்பெறும் அக்கார நங்கையாரும் தளித்தேவனார் மகளாக, நக்கன் என்ற முன்னொட்டோடு குறிக்கப்படுவது இங்கு எண்ணத்தக்கது.****
அடிக்குறிப்புகள்: * முதல் திருமுறை, தருமபுர ஆதீன வெளியீடு, 1953, பக். 383. ஐந்தாம் திருமுறை, தருமபுர ஆதீன வெளியீடு, 1961, பக். 184. ** SII.14, ins.3. *** ARE 385 - 1924; 464-1918. **** SII.13, ins. 153, 154.
பாரதாயன் நாராயணன், நக்கன் என்ற அடைமொழியைக் கொண்டிருப்பதால் நாராயணன் என்னும் திருமாலின் பெயரைக் கொண்டிருந்தாலும் அவர் சிவபெருமானின் அடியவர் என்பது தெளிவாகிறதல்லவா. அதனால் அக்காலத்திலேயும் சில சைவர்கள் திருமாலிடம் துவேஷம் பாராட்டவில்லை, அவரின் நாமத்தை தங்கள் பெயராகக் கொண்டிருந்தனர் என்பதாகப் புலப்படுகிறது.
சந்திராதித்தவல் என்பது சந்திரனும் ஆதித்தன் அதாவது சூரியன் உள்ள வரையிலும் என்று பொருள்படும். அதாவது தான் கொடுத்த நிலத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு, சந்திரனும் சூரியனும் நிலைத்திருக்கும் வரையில், இக்கோயிலில் நொந்தா விளக்கு ஏற்றப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் நிலக்கொடை அளிக்கப்படுகிறது.
நீர்நிலம் என்பது போதுமான அளவு நீர் கொண்ட, அரிசி போன்ற தானியங்களின் விளைச்சலுக்கு ஏற்ற நிலமாகும். அத்தகைய நீர்நிலம் அல்லூர் வாய்க்காலருகில் அரை மாவும், தென்னுலவாய் அதாவது தெற்குபக்கம் ஒரு மாவரையும் பரமேசுவரரின் உண்ணாழிகை அதாவது கருவறை முன்மண்டபத்தில் நொந்தாவிளக்கெரிக்க கொடுக்கப்பட்டுள்ளது.
தானம் செய்தாலும் அதிலும் நல்லதையே தானம் செய்தார்கள் அக்காலத்தில். ஏதோ விளைச்சலுக்கு பயன்படாத நிலமாக இல்லாமல் நல்ல நீர் நிலமாக இறைவனுக்கு அளித்தனர். இன்றோ அதற்கு நேரெதிராக கோயிலின் நிலத்தை தன்நிலமாக சொந்தம் கொண்டாடும் நிலை.
சரி கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டைப் படித்து உள்ளீட்டுப்பகுதியிலிடவும்.
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|
|