http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > கலைக்கோவன் பக்கம்
புதிரான புதுமை
இரா. கலைக்கோவன்

தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் தலைமையிடம் பெறத் தகுதியுடைய வேந்தர்களாய் நால்வரைக் குறிப்பிடலாம். அவர்களுள் இருவர் பல்லவர். இருவர் சோழர். ஏறத்தாழக் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சோழப்பெருவேந்தர் கோச்செங்கணானே தமிழ்நாட்டுத் திருக்கோயில் வடிவமைப்பில் புதிய சிந்தனைகளை விதைத்த முதற்கலைஞர். நிலத்தளவில் அமைந்த கோயில்களை, வெற்றுத்தளத்தின் மீதேற்றி மாடக்கோயில்களாக்கி மகிழ்ந்த அம்மன்னரின் சாதனைக்குச் சான்றாய் இன்றும் அக்கட்டுமானத்தில் பல திருக்கோயில்க காணக்கிடைக்கின்றன.

வடதமிழ் மண்ணில் செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இல்லாமல் கல்லில் கோயிலெடுத்த முதற் பெருமையைப் பல்லவ அரசர் மகேந்திரவர்மர் பெறுகிறார். விசித்திரசித்தரென்றும் சித்திரகாரப்புலியென்றும் கல்வெட்டுகள் அழைத்து மகிழும் இப்பெருமகனின் கைவண்ணத்தில் எழுந்த குடைவரைகள் அவர் காலத்துக் கலைத்திறமும் வளர்நிலையும் காட்டிக் கண்சிமிட்டுகின்றன. பெருந்தூண்களும், தாமரைப் பதக்கங்களும், தோரண வடிப்புகளும், சுவரளாவிய சிற்பங்களும் என அவர் காலத்துக் கலைமலர்வுகளை அவனிபாஜனம், லலிதாங்குரம் குடைவரைகளில் கண்டு மகிழலாம்.

கல்கண்ட இடத்தில் கோயிலெடுத்த நிலையை மாற்றி, எடுக்க விரும்பிய இடத்திற்குக் கற்களைக் கொணர்ந்து, கட்டுமானம் செய்து, கலை மரபில் புதியதோர் உத்தியைக் கையாண்டவர் அத்யந்தகாமரென்று அறியப்படும் ராஜசிம்மப் பல்லவர். காற்றும் மழையும் காலத்தின் கைகளும் கூடக் கலைக்கமுடியாது தோற்றுப்போன கடற்கரை வளாகச் சிம்மேசுவரங்களும், பல்லவர்களைப் பூண்டோடு அழிக்கும் நோக்கோடு படை நடத்திவந்து காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றிய சாளுக்கிய விக்கிரமாதித்தரின் சிந்தனை கலைத்து, அவர் காதலாகிப் போகும்படி கனவுகள் வளர்த்த கச்சிப்பேட்டுப் பெருங்கற்றளியும் அந்நயனமனோகரர் இந்நாட்டுக்கு அளித்திருக்கும் கலைமேருகள். இந்த விநாடி வரை அந்தக் கலை இமயங்களின் அத்தனை அழகுகளையும் எந்த மொழியிலும் யாரும் வடிக்கவில்லை.

இராஜராஜீசுவரம், தஞ்சாவூரைத் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் தலை நிமிரச் செய்த தன்னிகரற்ற பெருங்கோயில். தென்கிழக்கு ஆசியாவிலேயே இப்படியோர் எழிற்கோயில் எழுந்ததில்லையெனக் கலையறிஞர்கள் வியந்து போற்றும் இருநூற்றுப் பதினாறடி உயர விமானம்! இரண்டு கோபுரங்கள்! ஈரடுக்குச் சுற்று மாளிகை. வரலாற்று ஏடுகளில் இந்திய அளவில் 'மகா'வாகக் கருதப்படும் நான்கு பேரரசர்களுள் ஒருவரான இராஜராஜர் எழுப்பிய இந்தக் கருங்கல் கட்டுமானந்தான், தமிழர்கள் மிகப்பெரும் பொறியியல் அறிஞர்களென்று பிரிட்டானியக் கலைக்களஞ்சியத்தை எழுத வைத்துள்ளது.'தட்சிணமேரு' என்றும், 'தேவாலயங்களின் சக்ரவர்த்தி' என்றும் பொருத்தமுறப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பெருமைக்குரிய திருக்கோயிலைக் கண்டு வியக்காதவரும் காணவிரும்பாதவரும் இந்தக் காசினியில் இல்லை. இதை எழுப்பிய நித்தவினோதர்தான் எத்தனை பேராற்றலாளர்! பெரிதினும் பெரிது நினைத்து, பெருமைக்கே கோயிலெடுத்த அந்தப் புகழ்வேந்தின் கட்டுமானம் மட்டுமின்றி, வாழ்க்கையும் கூடப் புதிரான புதுமைதான்.

அரிஞ்சயருக்கும் கல்யாணிக்கும் பிறந்து, அழகில் மன்மதனாய் விளங்கிய இரண்டாம் பராந்தகரின் இளைய புதல்வர் இராஜராஜர். நிலவே வடிவெடுத்து வந்தாற்போல், சங்கு சக்கர ரேகைகளுடன் இவர் பிறந்த போது, இனி ஆதிசேடனுக்குச் சுமை நாங்களே என நாணத்தோடு நாட்டியமாடினராம் நாகப் பெண்டுகள். காஞ்சிப் பொன்மாளிகையில் காற்றோடு கலந்த சுந்தரரின் ஆவி நீங்காப் பொன்மானாய் வானவன்மாதேவியும் வளர் தீப்புக, மணிமகுடம், மன்னர் யாரென்று கேட்டது. மக்களெல்லாம் அருமொழிதான் அரசர் என்று அகங்குளிர விழைந்தும், அரசு ஒழுங்கின் அறமறிந்த அருமொழி, தந்தை வழி சிற்றப்பர்க்கு மகுடந்தந்தார். மதுராந்தகர் மன்னரானது இப்படித்தான். விட்டுக்கொடுத்த வித்தகரே தன்னைத் தொடர்ந்து அரியணை ஏறவேண்டும் என வழியமைத்த உத்தமர், பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு பதவி துறந்தபோது அரியணை சிலிர்த்துக் கொண்டது. அதற்குத் தெரியாதா அடுத்து அமரப்போகும் அரிமா இந்த உலகத்தின் புதிரான புதுமையென்று!

கி.பி 985! கிறிஸ்துவுக்கு முன்னும் கிறிஸ்துவுக்குப் பின்னும் என எத்தனையோ நூறு, நூறு ஆண்டுகள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கின்றன. ஆனால் 985 வந்துபோன ஆண்டன்று. வாராது போல் வந்த மாமணியை அரியணையேற்றிய ஆண்டு. வரலாற்றுப் பக்கங்களில் காலம் மகிழ்ந்து குலாவி முத்தமிடத் தொடங்கிய முதலாண்டு. திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் இராஜராஜரை உரிமைகொள்ள உவந்து தவிக்கத் தொடங்கிய ஆண்டு. இந்த நிலத்தில் கலியால் படிந்த கறைகளையெல்லாம் அகற்றவென்றே அரியணைப் படிகளில் திருவடி பதித்த இராஜராஜருக்குப் பாற்கடலே குடையானது. வெற்றி, மரபு வழி வீடானது. தாமரைகளை மலர்விக்கும் எழுகதிரோனாய்க் கற்றறிவாளர் திருக்கூட்டத்தில் திகழ்ந்த இப்பேரரசர் பெருமையைப் பெருமைப்படுத்திய பெருந்தகை.

தமிழ்நாட்டின் திசை விளக்குகளாய்த் திகழும் திருக்கோயில்களில் இராஜராஜர் காலத்தில் வெட்டப்பட்ட எண்ணற்ற கல்வெட்டுகள், இருபத்தொன்பது ஆண்டுகள் தமிழ் மண்ணையாண்ட இந்த இளநிலவின் இதயம் காட்டுகின்றன. வீரம் விளைந்த நிலத்தில் விவேகமும் விதைக்கப்பட்ட வித்தகம் கூறுகின்றன. பார்வை பட்ட இடமெல்லாம் புலிக்கொடி பறக்குமிடமான பக்குவம் பேசுகின்றன. சொல்லச் சொல்ல இமயமாய் வளரும் தரவுகளின் வரலாற்று வெளிச்சத்தில், 'மானுடம் வென்றதம்மா' என்று இம்மாமனிதரின் ஆட்சித்திறனை, மக்கள் நலம் நாடிய மாண்பின் உச்சத்தைக் கொண்டாடிக் கூத்திடுகின்றன. அந்தத் திருக்கூத்தின் முதலங்கம் அவர் வெற்றிகள்.

'Rajaraja the Great' என்று வரலாறு போற்றுகிறதே, அந்த 'Great' என்ற சொல்லுக்குப் பல்கலைக்கழக அகராதி பல பொருள்கள் தருகிறது. அறிவாற்றலில் சிறந்த, அருந்திறல் வாய்ந்த, முதன்மையான, வழக்கத்திற்கு மேற்பட மிகுதியான, உயர் பண்புத் திறங்கள் வாய்ந்த எனும் இப்பொருள்கள் அத்தனையுமே அருமொழிக்குப் பொருந்தும். Readers Digest வெளியிட்டுள்ள 'சரியான சொல்லைப் பயன்படுத்துங்கள்' என்னும் நூல், Great என்ற சொல்லுக்குப் பொருள் தரும்போது, சமுதாய நிலை கொண்டோ, சிறப்புத் திறமைகளால் சாதனைகள் படைக்கும் ஆற்றல் கொண்டோ, தனித்து அடையாளப்படுத்தப்படும் மேன்மை நிலையே Great என்று குறிப்பிடுகிறது.

தலையாய இந்திய வரலாற்றறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் இராஜராஜரை Great என்றழைத்து, அப்படியழைக்க நேர்ந்தமைக்கான காரணங்களையும் அதற்கான விளக்கங்களையும் தம்முடைய ஈடிணையற்ற நூலான சோழர்களில் வரிசைப்படுத்தியுள்ளார். ஆற்றலும் அறிவுத்திறமும் வாய்ந்த அருமொழி அரியணை அமர்ந்ததும் சோழர்களின் பேராற்றலும் பெருஞ்சிறப்பும் நிரம்பிய நூற்றாண்டு தொடங்குவதாகவும், அருமொழி அரியணை ஏறியபோது சிறிய நாடாக இருந்த சோழநாடு அவர் ஆட்சியில் நன்கிணைக்கப்பட்ட விரிவான பேரரசாக வளர்ச்சியுற்றதாகவும் கூறும் சாஸ்திரியார், இப்பேரரசு நன்கு வடிவமைக்கப்பட்டுத் திறம்பட நிர்வகிக்கப்பட்டதாகவும், பல களங்களைப் பார்த்த வலிய படை அப்பேரரசைக் காத்து நின்றதாகவும் சொல்கிறார். இக்காரணங்கள் யாவும் அருமொழியின் அரசியல் திறம் காட்டுவதென்னவோ உண்மைதான். ஆனால் அத்திறம் மட்டுமா அவரைப் பெருமைக்குரிய பேரரசராய் அடையாளப்படுத்துகிறது? அல்லது அத்திறம் வாய்ந்த பேரரசர்கள் இராஜராஜருக்கு முன் தமிழ்நாட்டில் இருந்ததில்லையா?

முதலாம் ஆதித்தர் அரியணை அமர்ந்தபோது சோழநாடு சிறியதொரு நாடாகவே இருந்தது. இன்னுஞ் சொல்லப்போனால் அப்போது 'சோழநாடு' என்ற வளையத்திற்குள் இருந்தவை தஞ்சாவூரும் சிராப்பள்ளியும் மட்டுமே. ஆதித்தரின் போர்த்திறமே தொண்டைநாட்டையும் கொங்குநாட்டையும் சோழநாட்டுடன் இணைத்தது. அவர் மகன் முதலாம் பராந்தகர் பாண்டிப் பெருநாட்டையும் ஈழத்திருநாட்டையும் சோழப்பேரரசுடன் இணைத்தார். இந்த இருவராலும் வளர்ந்த பேரரசு தக்கோலத்தால் தடுமாறியபோதும், அதைக் கண்டராதித்தரும் இரண்டாம் பராந்தகரும் கருத்தாய் நின்று நேர் செய்தமையால்தான், காஞ்சிபுரம் அரண்மனையிலிருந்தவாறு, ஊரகம் கோயிலுக்கான திட்டங்களைச் செப்பேட்டு வழி உத்தமர் சீரமைக்க முடிந்தது. இந்தப் பெருநிலப்பரப்பில்தான் இராஜராஜரின் ஆட்சி தொடங்கியது.

இராஜராஜரின் மெய்க்கீர்த்தியும் உலா இலக்கியங்களும் இராஜராஜரைத் தொடர்ந்து அரியணையேறிய சோழப் பெருவேந்தர்கள் வழங்கிய செப்பேடுகளின் மரபுவழித் தரவுகளும் இராஜராஜரின் தொடர் வெற்றிகளைப் பற்றிப் பரணிபாடுகின்றன. காந்தளூர்ச் சாலை, வேங்கி, கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி, குடமலைநாடு, கொல்லம், கலிங்கம், ஈழம், இரட்டபாடி, ஏழரை இலக்கம், முந்நீர்ப் பழந்தீவுகள், விழிஞம், உதகை எனத் தென்னாட்டின் பெரும்பகுதியை அவரது படைகள் வெற்றியால் வளைத்து எல்லைக் கோடுகளை நகர்த்திப் போட்டன. இது ஓர் அசுர சாதனைதான். ஆனால் இதைவிடவும் பெரும் நிலப்பகுதியை வென்றவராயிற்றே இராஜேந்திரர்!

வெற்றிகள் மட்டுமே ஒரு மன்னரைப் பெருமைக்குரியவராக்குவதில்லை. வெற்றிகள் நிலையானவையுமல்ல. ஆனால் அந்த வெற்றிகளுக்கு முன்னும் பின்னும் அவற்றைப் பெற்றவர் நடந்து கொள்ளும் பாங்கே அவர் புகழுக்குப் புடம் போடுகிறது. அருமொழி தொடங்கிய எந்தப் போரும் 'நாடு பிடிக்க' நடத்தப்பட்டதன்று. சோழர் தூதுவன் சிறைப்பட்டதால் கேரளம் தாக்கப்பட்டது. 'உதகையைத் தீ உய்த்த உரவோன்' என உலாப் பாடுமளவிற்கு அப்போரில் கடுமையிருந்தது. வெற்றி கண்ட ஊரைப் பேய்க்களமாக்குவதும் அவ்வூர் நிலங்களை விளையமுடியாதபடி களரும் திடலுமாக்குவதும் தமிழர் மரபுதான். அதைப் புகழ்ந்து பாடுவதும் சங்க வழக்குதான். மரபொட்டியே மரபு மீறலுக்குத் தந்த தண்டனைதான் உதகை எரிப்பு என்றாலும், அருமொழிக்கு அதில் மகிழ்ச்சியில்லை. அதனால்தான் பின்னுலாக்களில் பேசப்படும் உதகை அவருடைய மெய்க்கீர்த்தியில் இடம்பெறவில்லை. உதகையின் எதிரொலியில் காந்தளூர்ச் சாலையும் கொல்லமும் கொடுங்களூரும் புலிப்படை கண்டு புனிதமாயின.

தக்கோலப் பாடத்தால் தற்காப்பு நோக்கில் மேலைச் சாளுக்கியர் தாக்குதல் தவிர்க்க, கங்கபாடி நுளம்பபாடிப் போர்கள். வழியில் சிக்கியவை குடமலைநாடும் தடிகைபாடியும். உரிமப்போர்களால் வாடிய வேங்கியில் சக்திவர்மரை அரியணை இருத்தவே இராஜராஜரின் ஆந்திரப் படையெடுப்பு. அடைக்கலமாய் வந்து, அய்யாற்று வளாகத்து வடகயிலாயம் கோயிலுக்கு அள்ளி அள்ளி வழங்கிய சக்தியின் தம்பிக்கு மகட்கொடை தந்து, வேங்கி உறவை வலிமைப்படுத்தியது இராஜராஜரின் இராஜதந்திரம். அந்த ஈடுபாட்டில் விழுந்ததுதான் கலிங்கம். உறவுக்கு உதவப்போய் உட்கொள்ளப்பட்ட அந்நாடு வேங்கிக்கு வரவு. எதிரிகளைத் தாக்கிட நினைப்பார்க்கோ சோழர்களால் காட்டப்பட்ட தர்ஜனி.

ஏழரையிலக்கத்துக் கைகளால் வேங்கி பற்றப்படாதிருக்கப் பாற்கடலை மந்தரமலை கடைந்தது போல் மேலைச் சாளுக்கியப் படையை நிலைகுலையச் செய்து சத்யாஸ்ரயனை எறிந்து இராஜாஸ்ரயனான இப்பெருமகனின் யானைகள், தங்கள் கொம்புகளால் கீறி விளையாடிய கீற்றுக் கோடுகள் துங்கபத்திரைக் கரையின் மணல்மேடுகளில் இராஜேந்திரர் காலத்திலும் காணப்பட்டதாகக் கரந்தைச் செப்பேடுகள் களித்துரைக்கின்றன.

முக்கூட்டாய் இருந்த பாண்டிய, சேர, ஈழ அரசர்களை முறியடித்தது தவிர்க்க முடியாதது. தமையரும் தந்தையும் கொண்ட வெற்றியை இழப்பதுவோ வீரம்? நாட்டைச் சூழ நிற்கும் எதிர் அரண்களைத் தம் அரண்களாய் மாற்றிக் கொள்வதுதானே விவேகம்! கரைத்து விடலாமெனக் கைசேர்த்துக் கொண்டவர்களைக் காலம் நோக்கிக் கருகச் செய்த அரசியல் வல்லமையும் சிங்கங்களை அவ்வவற்றின் குகைகளிலேயே சந்தித்து வெற்றி கொண்ட வீரத்திருவும் இராஜராஜரின் வரலாற்று முத்திரைகள்.

இந்த வெற்றிகளெல்லாம் வெறியால் பெற்றவையல்ல. எல்லைகளை விரித்துக் கொள்ளும் விழைவால் விளைந்தவையல்ல. மக்கள் நலம், நாட்டு நலம் கருதியும் அடைக்கலந் தேடிய அக்கம்பக்கத்து அரச மரபுகளுக்கு அன்புடன் உதவியும் பெறப்பட்டவை. இந்த வெற்றிகளைத் தாம் பெற்றதாகச் சொந்தம் கொண்டாடாத பெருந்தன்மை இராஜராஜருடையது. தஞ்சை கொண்ட கோப்பரகேசரியும், தொண்டை நாடு பரவின இராஜகேசரியும், மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரியும், மதுரை கொண்ட இராஜகேசரியும் முற்சான்றுகளாக இருந்தபோதும், தலை கொண்டதைப் புகழ் விளக்காய்த் தூக்கிப் பிடித்த தமையனாரின் தம்பிதானென்ற போதும், வெற்றிகளைத் தமக்குரிமையாக்கிக் கொள்ளாமல், தாமே பெற்ற பீடுகள் போல் பகட்டிக் கொள்ளாமல், அது மரபுதானென்ற போதும் அதிலிருந்து விலகித் தம்முடைய திருவடி தேடிவந்து தவமிருந்த வெற்றிமகளைத் தம் பெரும்படைக்கே மணமுடித்த மாண்புமிக்கவர் இராஜராஜர். பெருமைகளைக்கூட, தலைவரென்பதால் அவை தமக்குரியன என்றாலும், பெற்றுத் தந்தவர்களுக்கே விட்டுக் கொடுத்த தகைமையாளர். அதனால்தான் அவர் வெற்றி வரிசையை இலக்கணம், மெய்க்கீர்த்தி எனக் கொண்டு சட்டமிட்டுப் பார்த்தது.

பிற மெய்க்கீர்த்தியாளர்கள் தாம் வென்ற நாடுகளுடன், தோற்ற மன்னர்களின் பெயர்களையும் கீர்த்தியாக்கிக் களித்தபோது, இராஜராஜர் நாடுகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றுத்தேவை கருதி வரிசையாக்கினார். மெய்க்கீர்த்தியில் இரண்டு இனப் பெயர்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. சிங்களர், செழியர். இங்கும் மன்னர்கள் சுட்டப்பெறவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. ஈழமும் மதுரையும் சோழ ரத்தத்தோடு தொடர்புடையன. இராஜராஜரின் கொள்ளுப் பாட்டனார் காலத்திலிருந்து இந்த இரண்டு இனத்தாருடனும் தொடர்ப் போர்கள். இழந்தவை ஏராளம். இருந்த போதும், உறுத்திய நினைவுகளால் இனங்குறிக்கப்பட்டதே தவிர, ஏளனமோ, எக்களிப்போ எள்ளளவும் இல்லை. மாறாக, 'முரட்டெழில் சிங்களர்' என்றும் 'தேசுகொள்ளப்பட்ட செழியர்' என்றும் மிகுந்த மரியாதையுணர்வுடந்தான் இவ்விரு இனங்களும் குறிக்கப்படுகின்றன.

தன்மபாலனை வெம்முனை அழித்து, மகிபாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித்தருளி, அவர்தம் பெண்டிர், பண்டாரம் கொண்ட முதல் இராஜேந்திரர், மானாபரணன், பசுந்தலை பொருகளத்தரிந்து, வீரகேரளனை முனைவயிற் பிடித்துத் தன் ஆனைக்கிடுவித்து, அத்திவாரணக் களிற்றால் அவரை உதைப்பித்தருளி, வீரசலாமேகன் தவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிந்த முதல் இராஜாதிராஜர், சாமுண்டராயன் சிரத்தினை அறுத்து, அவர் மகள் நாகவையை முகத்தொடு மூக்கு வேறாக்கிய வீரராஜேந்திரர் என வெற்றியின் ஈட்டத்தால் விளைந்த வன்முறைப் புகழ்பாடும் மெய்க்கீர்த்திகளின் முன்னே, சிங்களர், செழியர் எனத் தோற்றவர்களைக் கூட, தொடர்ந்து துன்பப்படுத்திச் சூரியவம்சத்தின் குருதி குடித்தவர்களைக் கூட, மதிப்பு விளி தந்து பெருமை கொள்கிறது அருமொழி கண்ட திருமகள் மெய்க்கீர்த்தி.

'தன் எழில் வளர் ஊழி'! எத்தனை தன்னம்பிக்கை இராஜராஜருக்கு. அவருக்கு முன்னரும் பின்னரும் வேறு யாரும் பெற்றிராத தன்னம்பிக்கை. அந்தத் தன்னம்பிக்கைக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. திண்திறல் வென்றித் தண்டொரு காரணம். மனங்கொண்ட உரிமை உண்மையாக உதவியது அந்தப் பெரும் படைதானே! அரசனுக்கு எழில் அவன் வீரமும் வெற்றிகளுந்தான்!. தொட்டதெல்லாம் விளங்கிய தீரம் இராஜராஜருடையது. நினைத்ததெல்லாம் முடித்த நித்தவினோதராக அவர் அமைந்ததற்கு, அந்த வீரமும், அதன் பின்புலமாக வெற்றிகளையே விளைவித்த அவர் படையும், அந்த வெற்றிகளுக்கு அடித்தளமிட்ட அருமொழியின் விவேகமும் ஒன்றன்பின் ஒன்றாய் விசுவரூபமெடுத்ததைத்தான், 'எழில் வளர் ஊழி' யெனும் வாமன வார்த்தைகள் வாகாய்ப் படம்பிடிக்கின்றன.

வீழ்நாள் படாமை நன்றாற்றின் என்ற வள்ளுவச் சிந்தனையில் விளைந்ததுதான் 'எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே' என்னும் தொடரமைப்பு. தொழத்தக்க அளவில் ஆண்டுகள் விளங்க வேண்டுமானால், அந்த ஆண்டுகளின் ஒவ்வொரு திங்களும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும் எத்தனை பயனுள்ளவையாக மலர்ந்திருக்க வேண்டும்! பயனுள்ள நாள்களையே பயந்த ஊழியென்பதால்தான் அது எழில் வளர் ஊழியாய் அமைய முடிந்தது.

ஊழிக்குப் பதின்மூன்று பொருள்கள் தருகிறது மதுரைத் தமிழ்ப் பேரகராதி. அவற்றுள் வாழ்க்கையும் ஒன்று. தம் வாழ்க்கையை வீர வாழ்க்கையாய், வீழ்நாள் இலாத வாழ்க்கையாய், மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்படும் வாழ்க்கையாய் அமைத்துக் கொண்டதால்தான் இராஜராஜரால், அதை எழில் வளர் வாழ்க்கையாய் வினைத்தொகையாக்க முடிந்தது.

"ஸ்வஸ்திஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டெழில் சிங்களவர் ஈழமண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ இராஜகேசரி
வர்மரான ஸ்ரீஇராஜராஜ தேவர்"this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.