http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 17

இதழ் 17
[ நவம்பர் 16 - டிசம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கருத்தரங்குகள் - சில கருத்துக்கள்
பழுவூர் - 6
சிற்பக்கலை ஆய்வு - ஓர் அறிமுகம்
கல்வெட்டாய்வு - 12
ஸ்ரீநிவாச நல்லூர் பயணம் - 3
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
Gopalakrishna Bharathi-3
சங்கச் சிந்தனைகள் - 5
இதழ் எண். 17 > பயணப்பட்டோம்
தக்கோலம் ஜலநாதீஸ்வரம்
ம.இராம்நாத்
முன்னுரை
தக்கோலம் என்றதும் அங்கு பராந்தக சோழன் காலத்தில் கிபி 949ல் நடந்த பயங்கரப் போர்தான் பலருக்கும் ஞாபகம் வரும். இங்குதான் பராந்தகனின் முதல் மகனும் பட்டத்து இளவரசனும் வீராதி வீரனுமான இராஜாதித்தன் களத்திலேயே வீர சுவர்கமடைந்து யானைமேல் துஞ்சியத் தேவர் என்று அழியாப் புகழ் பெற்றான். ஆனால் இப்போர் நடப்பதற்குப் பலகாலம் முன்னரே தக்கோலம் ஒரு சிவ ஷேத்திரமாகப் பெருமையுற்றிருந்தது. திருஊறல் மஹாதேவர் என தேவாரத்தில் குறிக்கப்படும் இத்தலத்துப் பெருமான் திருஞானசம்மந்தரால் பாடப்பெற்றிருக்கிறார்.

இன்றைக்குத் தக்கோலத்திற்குச் சென்றால் நல்ல வேளையாக இராஷ்ரகூடப் படைகளின் யானைகளையும் புரவிகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டியதில்லை. மாறாக ஜலநாதீஸ்வரம் என்ற பெயருடன் ஒரு அருமையான பல்லவர்காலக் கோயில் நம்மை எதிர்கொண்டழைக்கிறது ! திரு ஊறல் மஹாதேவர் பல்லவர், பாண்டியர், சோழர் என அனைத்து மன்னர்களுக்கும் அவர்களுக்கிடையே நிலவும் பகையைப் பொருட்படுத்தாமல் சமமாகக் கருதி அருள் புரிந்து அவர்கள் அனைவரையுமே இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய வைத்துள்ளார். இங்குள்ள பல்லவர் மற்றும் சோழர் கால கல்வெட்டுக்கள் அதற்குச் சான்று.

மேலும் தக்கோலத்தில்தான் இராஜராஜன் எனும் மாமன்னனின் பாட்டனார் 'அரிஞ்சயச்சோழர்' சாளுக்கியர்களுக்கு எதிரான போரில் பாடி வீடு அமைத்து, அதே போரில் மரணத்தை தழுவினார். அரிஞ்சிகை ஈஸ்வரம் என்ற பெயரில் இராஜராஜர் அவருக்குக் கட்டிய பள்ளிப்படை இன்றும் உள்ளது.

இத்தனை பெருமைகளையும் பெற்று சென்னைக்கு அண்மையில் - அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் - அமைந்துள்ள தக்கோலத்திற்குச் செல்வோமா ?

கோபுரம் - நுழைவாயில்

பிரதிவரியுடன் கூடிய ஜகதி, உருள் குமுதத்துடன் கூடிய பத்மபந்த அதிஷ்டானம், மற்றும் கர்ணகூடுடன் கூடிய உள்ள வெள்ளை வர்ண ஐந்து நிலை கோபுரம், சிறிது தொலைவில் வேறு வேலையாகச் சென்றுகொண்டிருப்போரையும் வா வா வென்று அழகாக அழைக்கும்.





கோபுரம் - கல்ஹார அமைப்பு


உள்ளே நுழைந்தாலோ "வாருங்கள்! வாருங்கள்!! நான் மட்டும் இங்கே தனிமையிலே இருக்க, நீங்களாவது கோவிலையும், இறைவனை பார்க்க வந்தீர்களே !" என்று நந்தித்தேவர் நம்மை வரவேற்க்கிறார். ஆகமொத்தம் உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக இத்தனை வரவேற்பு தடபுடல்களையும் தாண்டியாகவேண்டும்.





அர்ஜூனன் பாசுபதாஸ்திர படலம்

இறைவன நாம் மனதை ஒருமுகப்படுத்தி தரிசிக்க வேண்டும் என்பது போல, நுழையும் போதே நமது கண்ணில் அர்சுனன் - பாசுபாதாஸ்தரம் பெற ஒற்றை காலில் தவம் செய்யும் காட்சியும், அர்சுனன் பாசுபாதாஸ்தரம் பெறும் காட்சியும் இங்கு குறுவடிவமாகக் (miniature) காணமுடிகிறது.

கோவிலின் அமைப்பு
கோபுரவாசலினுள் நுழைந்தவுடன் நந்திதேவர், நுழைவாயிலின் இடது பக்கம் தற்போது கோசாலையாக உள்ள இடம், வெற்று மண்டபம், பக்கவாட்டில் உள்ள அம்மன் சன்னிதி மற்றும் கல்வெட்டுக்களுடன் கூடிய தூண்களைக் காண முடிகிறது. நந்தியைத் தாண்டி விரியும் பெருமண்டபத்தின் பின் சிவபெருமான் குடிகொண்டுள்ள கருவரை அமைந்துள்ளது. (பார்க்க படம்)





கோயில் அமைப்பு


கருவரை

கருவரையில் உள்ளவர் நம்மை கவனிக்க வேண்டுமே என்று உள்ளே சென்றால், உள்ளே நாம் கவனிக்க வேண்டியவர்களோ பலராக இருக்கின்றனர் !





பிள்ளையார் மற்றும் வடபுற வாயிற்காவலர்


இங்குள்ள பிள்ளையார் பல்லவர் காலத்தை சேர்ந்த்தவர். வலது புறத்தில் உள்ள வாயிற்காவலருக்கு கீழே தலையில் மகுடம் தரித்து, வலது கையில் தந்த எழுத்தாணியுடன் லளிதாசனத்தில் அமர்ந்த வண்ணம் அருள்புரிகிறார். துதிக்கை இடது பக்கம் மடக்கிய நிலையில் உள்ளது. துதிக்கையின் இடது புறம் உள்ள தந்தம் வியாசரின் புண்ணியத்தில் உடைந்துள்ளது.

கருவரையின் இருமருங்கிலும் நிற்கும் வாயிற்காவலர்கள் பல்லவர்காலக் கலைக்கு சான்றுகூறி நிற்கிறார்கள்.





இடப்பக்க காவலர்


கருவரைக் வாயிற்காவலர்கள்

ஒய்யாரமாக ஒரு காலை சற்று மடக்கி, ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி கண்களால் மிரட்டியபடி நம்மை இரு வாயிற்காவலரும் வரவேற்கின்றனர். இருவருக்குமே மகுடத்திற்குப் பின் பகுதியில் கொம்புபோல ஒன்று இரு பக்கங்களிலும் காட்டப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் இதுபோன்ற கொம்பு வடிவில் வாயிற்காவலரின் தலையில் தெரிபவை உண்மையில் சூலத்தின் கூரான இரு முனைகள் என்று அறிஞர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைக்கொண்டு இவ்வகை வாயிற்காவலரை சூலத்தேவர் - அதவாவது சிவபெருமானின் ஆயுதமான சூலத்தின் மனித வடிவ வெளிப்பாடு - என்று கொள்வது மரபு. இதைப்போன்ற ஆயுத புருஷர் தத்துவத்தை வைணவத்திலும் காணலாம்.

ஆனால் தக்கோலத்தைப் பொறுத்தவரை இங்கிருப்பவர்களை சூலத்தேவர்களாக அடையாளம் காணுவதில் சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் பொதுவாக வாயிற்காவலரில் சூலத்தேவராக ஒருவர் மட்டுமே காட்சியளிப்பார் - மற்றவருக்கு தலையில் கொம்புகள் - அல்லது சூல முனைகள் தெரியாது. மேலும் சூலத்தேவரை உறுதியாக அடையாளப்படுத்த சில இடங்களில் அவருடைய மகுடத்தில் சிறு சூலமும் காட்டப்பட்டிருக்கும். பனைமலை தலகிரீசுவரர் கோயில் வாயிற்காவலர் (சூலதேவர்) இதற்கு நல்ல உதாரணம். ஆனால் தக்கோலத்திலோ இருவருக்குமே கொம்புகள் காட்டப்பட்டுள்ளன. ஆக மேற்கொண்டு தகவல்கள் கிடைக்கும்வரை இவர்களை கொம்புகள் உடைய வாயிற்காவலராகவே கொள்ளவேண்டியுள்ளது.

இடப்பக்கத்தில் உள்ளவர் தலையின் இரு பக்கமும் கொம்புகளுடன், மகுடமணிந்து, காதுகளில் பனைஓலை குண்டலத்துடன் காட்சி தருகிறார். இடது காதில் உள்ள பனை ஓலை குண்டலத்தில் ஒரு சிறிய பறவையை காணமுடிகிறது - ஆந்தையாக இருக்கலாம். நான்கு கைகளிளும் வளை அணிந்து, நம்மை பயமுறுத்த வேண்டும் என்பது போல் இரண்டு முன் கைகளிலும் புலிமுக தோள்வளை தரித்துள்ளார். வலது பின்கை இறைவனை நோக்கியும்(பதக்க ஹஸ்தம்) போற்றி முத்திரையும், வலது முன்கை உருள் பெருந்தடியில் தாங்கியபடியும் இருக்க, இடது பின்கை விஸ்மயத்திலும், இடது முன்கை தர்ஜினி முத்திரை காண்பிக்கும் நிலையிலும் உள்ளது. இவரது தலைக்கு அருகில் இடது பக்கத்தில், படமெடுத்த நிலையில் ஒரு பாம்பை காணலாம். கழுத்தில் மிகுந்த வேலைப்படுகளுடன் கூடிய சரப்பளியும், உருத்திராட்ச மாலையும் தரித்துள்ளார். கலை நயத்துடன் கூடிய மலராலான-முப்புரிநூல் கவனிக்கத்தக்கது. வயிற்று பகுதிக்கு மேலே உதரபந்தம் காணமுடிகிறது. ஆடையில் எந்த ஒரு கலைநயமிக்க வேலைப்பாடுகளையும் காணமுடியவில்லை.

வலது பக்கத்தில் உள்ளவரின் வலது பின்கை விஸ்மயத்திலும், வலது முன்கை தர்ஜினி முத்திரையும், இடது பின்கை இறைவனை நோக்கியும் (பதக்க ஹஸ்தம்) போற்றி முத்திரையும், இடது முன்கை உருள் பெருந்தடியைத் தாங்கிய நிலையிலும் உள்ளது. தலைக்கு அருகில் வலது பக்கத்தில், படமெடுத்த நிலையில் ஒரு ஐந்து தலை பாம்பை காணலாம். இவரும் கலை நயத்துடன் கூடிய வஸ்திர-முப்புரிநூல் தரித்துள்ளார்.

இருவரையும் ஒரு அவசர ஒப்பீடு செய்ததில் கீழ்க்கண்ட ஒற்றுமைகளைக் காண முடிந்தது.

- இருவருக்கும் தலையில் இரு பக்கமும் கொம்புகள் உள்ளன.
- இருவருக்கும் தலையில் சிம்ம முகத்துடன் கூடிய மகுடம் அணிந்துள்ளனர்
- இருவருக்கும் காதுகளில் பனைஓலை குண்டலம், நான்கு கைகளிளும் மூண்று வளையல்கள். கழுத்தில் மிகுந்த வேலைப்படுகளுடன் கூடிய சரப்பளியும், கண்டிகை அல்லது சவடி தரித்துள்ளனர். வயிற்று பகுதிக்கு மேலே உதரபந்தம் காணமுடிகிறது.
- இருவரின் விரல்களில் உள்ள வேலைப்பாடு கவனிக்கத்தக்கது. மிகவும் நேர்த்தியாக உள்ள விரல்களில் நகங்களையும் காணமுடிகிறது.
- இருவருக்கும் தோலால் ஆன ஆடையே தரித்துள்ளனர். கால் முட்டிக்கு கீழே செல்லாமல் ஆடை இருந்தால் அது வழக்கமான பருத்தி ஆடையாக கருதலாம். இதுவே சற்று தடித்து காண்பித்தால் அது தோல் ஆடை என கருதலாம்.
- இருவருக்கும் கோரைப்பற்கள். அற்புதமான அரைஞாண் கயிறு, இடைக்கட்டு. (இதில் ஒரு புதிய சேர்க்கையாக தற்காலத்துக் கரப்பான்பூச்சி).கால்களில் கழல்கள் பூண்டுள்ளனர்.
- இருவருமே ஒரு காலை நேராக நீட்டி மறு காலை மடக்கி நின்றபடி காணப்படுகின்றனர். இந்த அமைப்பு நிலையை நாம் வேறு பல கோவில்களிலும் காணமுடிகிறது.





சோமாஸ்கந்தர் தொகுதி


கருவரையின் வாயிற்படிகளின் மேல் காணப்படும் சோமாஸ்கந்தர் தொகுதி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பல்லவர்காலப் படிமவியல் வரலாற்றில் இதற்குத் தனியிடம் உண்டு. இச்சிற்பத்தொகுதி அபராஜிதப் பல்லவர் காலத்தை சேர்ந்ததாக ஆய்வாளர் இரா.கலைக்கோவன் கருதுகிறார் (பார்க்க புத்தகம் - பெண் தெய்வ வழிபாடு, பக்கம் - 37 )

சோமாஸ்கந்தர் தொகுதி - (வலமிருந்து இடமாக ) பூதகணம், குதிரை வீரன், அமர்ந்த நிலையில் நந்தி, மேலே சூரியன், சிவபெருமான், பால முருகன், உமை, சந்திரன், பூதகணம்.

பூதகணங்கள் இரண்டிற்கும் முப்புரிநூல், உதரபந்தம் மற்றும் விரிந்த சடை. இருவருமே இடது கையை தடியின் மேலே தாங்கி நிற்கின்றனர். இடப்புறத்து கணத்திற்கு தடியைத் தவிர முகத்தில் தாடியும் உண்டு ! தாடியுடன் கூடிய கணத்தைக் காண்பது சற்று அரிதுதான்...

நந்தியும், சூரியனும் ஈசனை நோக்கிய வண்ணம் உள்ளனர். சூரியனுக்கு முப்புரிநூலும், கழுத்தில் மாலையும், வலது கையில் மலரும் உண்டு. சிவபெருமான் தலையில் மகுடமும், காதுகளில் பனை ஓலை மற்றும் மகர குண்டலம் அணிந்து நான்கு கைகளிளும் வளைகளோடு காட்சி தருகிறார். வலது பின்கையில் மழு. இடது பின் கையில் அக்க மாலை. வலது முன்கை அபயத்திலிருக்க இடது முன்கையில் கபாலம் ஏந்தப்பட்டிருக்கிறது. மார்பில் புரளும் அழகிய முப்புரிநூலில் பிரம்ம முடிச்சும் காணப்படுகிறது. புலிக்கச்சுடன் கூடிய ஆடை அணிந்து சுகாஸனத்தில் அமர்ந்துள்ளார்.

உமை - இறைவனை நோக்கி அமரமுற்படுவது போல, சற்று இடப்புறமாக திரும்பிய நிலையில் அமர்ந்துள்ளார். வலது கையில் கடக முத்திரையும் இடது கையை ஆசனத்தில் ஊன்றியபடியும் வைத்துள்ளார், கழுத்தில் உருத்திராட்ச மாலையும், காதுகளில் குண்டலமும் காணப்படுகின்றன.

இவர்கள் இருவருக்குமிடையில் பாலமுருகன் - அழகாக சிரித்த முகத்துடன் அமர்ந்துள்ளார். முருகனுக்கு தலையில் சென்னியும், மார்பில் சன்னவீரமும் அணிவித்துள்ளனர். இருவர் மடியிலும் அமராமல் நடுவில் முருகன் அமர்ந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

உமைக்கு அருகில் சந்திரனும், அவருக்கு கீழே முன்பு நாம் கண்ட தாடி மீசை பூதம்உள்ளது.

கருவரையில் சிவபெருமான் லிங்க உருவில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறார்.





பூதவரி


கருவரையின் முன்புறத்தில் அமைந்துள்ள பூதவரியை கவனிப்போம். குரங்கு முக பூதம், கணநாதர், பந்தை உருட்டி விளையாடும் பூதங்கள், குடை பிடிக்கும் பூதங்கள், சங்க நாதம் செய்யும் பூதம், இரட்டை கின்னரி வாசிக்கும் பூதம், புல்லாங்குழல் வாசிக்கும் பூதம், மத்தளம் வாசிக்கும் பூதம் என எத்தனை வகையான பூதங்கள் ! பூதவரியின் தொடர்ச்சியாக கண்ணப்ப நாயனாரின் கதையும் கல்லில் வடிக்கப்பட்டுக் காவியமாகி இருக்கிறது.

(அடுத்த இதழில் நிறையும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.