http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[ 96 Issues ]
[ 1164 Articles ]
Home     About US     Facebook     Font Problems    
கட்டிடக்கலை ஆய்வு
(தொடர்)


அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
கட்டடக்கலை ஆய்வு - 3
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
ஆதிதளம். (ஆதிதாளமல்ல. அதை இராகமாலிகையில் லலிதா விளக்குவார்.)

குடைவரை, ஒற்றைக்கல் தளி, கட்டுமானக்கோயில் ஆகிய மூன்றுக்கும் தாங்குதள அமைப்பு பொதுவாக இருந்தாலும், ஆதிதளமானது ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாதிரி காணப்படும். இந்த இதழில், குடைவரையை மட்டும் காண்போம். அதுவும் குறிப்பாகக் குடைவரைகளின் முன்னோடி முதலாம் மகேந்திரவர்மர் (சிவகாமியின் சபதத்தில் வருபவரேதான்!) உருவாக்கிய குடைவரைகளையும், கட்டடக்கலை உறுப்புக்களை வைத்து அவற்றின் கால வரிசையைத் தீர்மானிப்பது பற்றியும் காண்போம்.

தாங்குதளத்தின் உச்சி உறுப்பான உபரிகம்பிலிருந்து இந்த ஆதிதளம் ஆரம்பமாகிறது.



மேலே காட்டப்பட்டிருப்பது தளவானூரில் மகேந்திரர் அமைத்த சத்ருமல்லேசுவராலயம். பாதபந்தத் தாங்குதளத்தில் ஆரம்பித்து, கூரை உறுப்பான கபோதத்தில் முடியும் இக்குடைவரையை உதாரணமாகக் கொண்டு, ஆதிதளத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கீழிருந்து உபானம் (படிக்கட்டுக்கள் தரையுடன் சேருமிடம்), ஜகதி, எண்பட்டைக்குமுதம், கம்புகளுடன் கூடிய கண்டபாதம், பட்டிகை ஆகியவை நமக்குத் தெரியும். அதிலிருந்து ஆரம்பித்து, கூரை உறுப்பான கபோதம் (இக்கால ஜன்னல்களுக்கு வைக்கும் sun shade போன்ற அமைப்பு) வரையிலுள்ள பகுதிக்குப் பெயர் முகப்பு (facade). அடுத்த இரண்டு பத்திகளைப் படித்ததும் இன்னும் தெளிவாகப் புரியும்.

இந்த வாயிற்காவலர்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்குக் கோட்டம் என்று பெயர். இந்தக் கோட்டங்கள் முகப்பில் சேராது. அவர்களுக்கு நடுவில் இரண்டு தூண்கள் இருக்கின்றன. மகேந்திரர்தான் மரம், உலோகம் ஆகிய எதையும் பயன்படுத்தவேயில்லையே? பிறகெப்படி கம்பி வைத்த ஜன்னல் வந்தது என்று கேட்காதீர்கள். அவை தொல்லியல் துறையின் உபயம். அந்த ஜன்னல்கள் இருக்குமிடம்தான் அங்கணம். அதாவது, இரு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி. இந்தக் கோஷ்டங்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது உங்களுக்கு? அங்கணங்களை அடைத்து அதன்மேல் சிற்பங்களைப் புகுத்தியிருப்பது போல் தெரியவில்லை? அதேதான். இருதூண்களுக்கிடைப்பட்ட பகுதியை அடைத்திருந்தால் கோஷ்டம். அடைக்காமல் திறந்த நிலையிலிருந்தால் அது அங்கணம். இது பக்தர்கள் அதிக அளவில் சென்று வருவதற்காக அமைக்கப்பட்டது. என்ன ஒரு Fire Evacuation Plan பாருங்கள்!!

இந்த முகப்பில் எத்தனை தூண்கள் உள்ளன? கோட்டங்களுக்கு இருபுறமும் தலா இரண்டு தூண்கள். நடுவில் இரண்டு. ஆக மொத்தம் ஆறு தூண்கள். சரி. நடுவிலிருக்கும் இரு தூண்களுக்கும் கோட்டங்களின் இருபுறமுமிருக்கும் இரு தூண்களுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா? நன்றாக உற்றுப்பாருங்கள். நடுவிலுள்ள தூண்களைச் சுற்றி வரமுடியும். கோட்டங்களுடன் அமைந்த தூண்களைச் சுற்றி வரமுடியாது. இந்த வேறுபாட்டைக் குறிக்கும் வகையில் நடுத்தூண்களை முழுத்தூண்கள் (Pillars) என்றும், கோட்டத்தூண்களை அரைத்தூண்கள் (Pilasters) என்றும் அழைக்கலாம். குடைவரைகளில் இரண்டே இரண்டு அரைத்தூண்கள் மட்டும் பக்கத்திற்கொன்றாக இருக்கும். அவ்வாறு ஒட்டியிருக்கும் அரைத்தூண்களின் அளவு, தோராயமாக முழுத்தூணின் நான்கில் ஒரு பாகம் இருக்கும். அதுதான் 4 X 1/2 = 1 (முதல் இதழில் கேட்கப்பட்டிருந்த கணக்கு). அதாவது, நான்கு அரைத்தூண்களின் அளவு ஒரு முழுத்தூணின் அளவு.

இடது கோட்டத்தின் இடது புறமும் வலது கோட்டத்தின் வலது புறமும் உள்ள தூண்களை அரைத்தூண்கள் என்பதை விட, அணைவுத்தூண்கள் என அழைப்பதே சரி. காரணம், கோட்டத்தை அணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால் இடது கோட்டத்தின் வலது புறமும் வலது கோட்டத்தின் இடது புறமும் உள்ள அரைத்தூண்களும்கூட அணைவுத்தூண்கள்தானே என்று கேட்கலாம். மிகவும் சரி. அவையும் கோட்டத்தை அணைக்கும் வகையில் அமைந்திருப்பதால் அணைவுத்தூண்கள்தான். அதே சமயம், முகப்பின் இரண்டு எல்லைகளில் வரவேண்டிய அரைத்தூண்களாகவும் செயல்படுவதால், அவற்றிற்கு இரண்டு பெயர்களும் பொருந்தும்.

இந்தத் தூண்களில் ஏதோ அலங்காரங்கள் காணப்படுகின்றனவே? அவை என்ன? எத்தனை வகையான தூண்கள் இருக்கின்றன? அவற்றின் உறுப்புகள் என்னென்ன?

தூண்களில் நான்கு வகைகள் உண்டு.

1. சதுரம் அல்லது நான்முகத்தூண் அல்லது பிரம்மகாந்தத்தூண்
2. கட்டு அல்லது எண்பட்டைத்தூண் அல்லது விஷ்ணுகாந்தத்தூண்
3. கட்டு அல்லது பதினாறு பட்டைத்தூண் அல்லது இந்திரகாந்தத்தூண்
4. வட்டம் அல்லது ருத்ரகாந்தத்தூண்

ஒரு தூண் மேற்சொன்ன ஏதோ ஒரே ஒரு வடிவத்தில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரே தூணில் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் கூட வரலாம். மேலே உள்ள தூண்கள் கீழே சதுரமாகவும், நடுவில் எண்பட்டையாகவும், மேலே மீண்டும் சதுரமாகவும் அமைந்திருப்பதால் அதை, சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலமைந்த முழுத்தூண் என முழுமையாக வரையறுக்கலாம். அப்படியானால் அந்த அரைத்தூண்கள்? அவை நான்முக அரைத்தூண்கள். இந்தத் தூண்களின் நீட்சிதான் பாதபந்தத் தாங்குதளத்தின் கண்டப் பகுதியில் காணப்படும் பாதங்களாகும்.



தூண்களுக்கு தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை போன்ற பல உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை மகேந்திரர் குடைவரைகளின் முழுத்தூண்களில் காணக்கூடவில்லை. இருப்பினும், சில குடைவரைகளில் முழுத்தூணுக்கும் போதிகைக்கும் இடையே அமைந்துள்ள மெல்லிய பகுப்பைப் பிற்கால உறுப்பான பலகையின் தொடக்கத் தோன்றலாகக் கொள்ளலாம் என்பது அறிஞர்களின் கருத்து. சீயமங்கலத்திலுள்ள அவனிபாஜன பல்லவேசுவர கிருகத்தின் முகப்பிலுள்ள கோட்டத்தில் காணப்படும் அணைவு அரைத்தூண்கள் தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை என அனைத்து உறுப்புகளும் கொண்டுள்ளன. மகேந்திரரின் ஏனைய குடைவரைகளில் இல்லாமல், இதில் மட்டும் இவை காணப்படுவதால், இது காலத்தால் பிற்பட்டது. அதாவது, மற்ற குடைவரைகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டது என்று கூறுகிறோம்.

சில குடைவரைகளின் தூண்களில் தாமரைப்பதக்கங்களைக் காணலாம். சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலமைந்த தூணின் இரு சதுரங்களிலும் இவை காணப்படுகின்றன. சில இடங்களில் இந்தப் பதக்கங்கள் சதுரமாகவும் சில இடங்களில் வட்டமாகவும் இருக்கும். பல்லவர் மட்டுமல்ல, பாண்டியர் காலக் குடைவரைகளில் கூட இந்தப் பதக்கங்கள் அமைந்துள்ளன. முகப்பு அரைத்தூண்களில் கூட இந்தத் தாமரைப்பதக்கம் வரும். மகேந்திரவாடி, மாமண்டூர் மற்றும் சீயமங்கலத்தில் இந்தத் தாமரைப்பதக்கங்கள் இடம்பெற்றிருந்தாலும், மேற்சதுரங்களில் புடைப்புச் சிற்பம் காணப்படுவதால், சீயமங்கலம் காலத்தால் பிற்பட்டது என்று கொள்ள நமக்கு மற்றொரு சான்று கிடைக்கிறது. இச்சிற்பத்தில் சிவபெருமான், உமை மற்றும் நந்தி ஆகியன இடம்பெற்றுள்ளனர். ஆக, முதன்முதலில் வடிக்கப்பட்ட ரிஷபாரூடர் சிற்பம் இதுவெனக் கொள்ளலாம்.



தூணுக்குக் கைகள் முளைத்து, அவை கூரையைத் தாங்கி நின்றால் எப்படி இருக்குமோ அந்த அமைப்புக்குப் போதிகை என்று பெயர். போதிகை தாங்கி நிற்கும் உறுப்பு உத்தரம். இன்றும் பழங்காலத்து வீடுகள் சிலவற்றில், மரத்தூண்களுக்கும் தாழ்வாரங்களுக்கும் (உத்தரத்தின் மற்றொரு பெயர்தான் தாழ்வாரம்) இடையே இதுபோன்ற போதிகைகளைக் காணலாம். இதில் தரங்கப் போதிகை (மேற்பரப்பு சாதாரணமாக இல்லாமல் அலை அலையாக இருக்கும்), பட்டையுடன் கூடிய தரங்கப்போதிகை (அலைகளுக்கு நடுவில் சிறிய பட்டை இருக்கும்), வெட்டுப்போதிகை, பூமொட்டுப்போதிகை எனப் பல வகைகள் இருக்கின்றன. இந்தப் போதிகையின் வகையைக் கொண்டு, அக்கட்டுமானத்தின் வயதைத் தோராயமாகக் கூறிவிடலாம். அது எப்படியென்று கட்டுமானக்கோயில்களை விவரிக்கும்போது காணலாம்.

உத்தரத்திலிருந்து கூரை உறுப்புகள் ஆரம்பமாகின்றன. படத்தில் உத்தரத்திற்கு மேல் காட்டப்பட்டிருக்கும் வாஜனம் என்ற உறுப்பு தாங்குதளத்திலுள்ள உபரிகம்பைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தாற்போல் அமைந்து, உத்தரத்தையும் கூரையையும் இணைக்கும். சில கோயில்களில் இந்த வாஜனத்திற்கும் கூரைக்கும் இடையில் பூதவரி அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பூதவரி இருக்கும் உறுப்புக்குப் பெயர் வலபி. இந்த வலபியிலிருக்கும் பூதகணங்களை வைத்துத்தான் அந்நாளில் வழக்கத்திலிருந்த பல்வேறு இசைக்கருவிகளையும் சமூக நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கின்றனர் சிற்பிகள்.



சாதாரணமாகக் கூரை வீடுகளின் கூரையானது வெளிச்சுவருக்குச் சற்று வெளியே நீட்டிக் கொண்டிருக்குமல்லவா? அதுபோல, மகேந்திரரின் காலத்தில் இருந்த செங்கற்றளிகளிலும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கூரை இருந்திருக்க வேண்டும். அதுதான் கபோதம் என்றழைக்கப்படும் உறுப்பு அமையக் காரணமாக இருந்திருக்க வேண்டும். குடைவரை முகப்பின் மேற்புறத்தில், தற்போது ஜன்னல்களுக்கு அமைக்கப்படும் sun shade போலச் சற்று வளைந்து அமைந்திருக்கும். முழுமையான கபோதமாக நாம் காண முடிவது, தளவானூர் சத்ருமல்லேசுவராலயத்தில்தான். இது கூடுவளைவுகள், கந்தர்வத்தலைகள், மகரங்கள், தலைப்புகள், தோரணங்கள் (இவற்றைப் பற்றி வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்) ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் குடைவரையிலும் மண்டகப்பட்டு லக்ஷிதாயதனத்திலும் மகேந்திரவாடி மகேந்திர விஷ்ணுக்கிருகத்திலும் கபோதம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிகிறது. இருப்பினும் முழுமையடையவில்லை. சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரகிருகத்தில் பாறையின் மேற்பகுதி நீண்டிருந்தாலும் திருத்தமான கபோதமாக வடிவமைக்கப்படவில்லை. ஆகவே, தளவானூர் சத்ருமல்லேசுவராலயம் இந்நான்கு குடைவரைகளுக்கும் காலத்தால் பிற்பட்டது எனக்கொள்ளலாம்.

மண்டகப்பட்டில் இது முதல் குடைவரை என்பதற்கான கல்வெட்டுச் சான்றே நமக்குக் கிடைத்திருப்பதால், எந்த சந்தேகமுமின்றி அதை முதலாவதாகக் கொள்ளலாம். அடுத்து கபோதம் முழுமையடையாமலிருப்பதால் பல்லாவரமும் மகேந்திரவாடியும் இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெறுகின்றன. தூண்களில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களால் சீயமங்கலம் நான்காமிடமும் முகப்புத் தாங்குதளம், கபோதம் ஆகியவற்றால் தளவானூர் ஐந்தாமிடமும் பெறுகின்றன.

ஆனால் மகேந்திரர் அமைத்தவை ஏழு குடைவரைகளாயிற்றே? மீதி இருக்கும் மாமண்டூர் மற்றும் சிராப்பள்ளிக் குடைவரைகள் எந்த இடத்திற்கு உரியன? பல்லாவரம் மகேந்திரவாடி ஆகியவற்றுள் எது இரண்டு மற்றும் மூன்றாமிடத்துக்கு உரியன? இந்தக் கேள்விகளுக்கு, குடைவரையின் மற்ற அங்கங்களான முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை, சுவர் ஆகியவை விளக்கம் பெறும் அடுத்த இதழ்கள் விடை சொல்லும்.

(இந்தக் கட்டுரையின் தரவுகளுக்கு உறுதுணையாக இருந்தவை டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய வெளியீடான வரலாறு ஆய்விதழ் தொகுதிகள் 9, 10, 11, 12 & 13).

(தொடரும்)

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events
சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா
சிறப்பிதழ்கள்
Special Issues
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்
புகைப்படத் தொகுப்பு
Photo Gallery
சேரர் கோட்டை
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter