http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 29

இதழ் 29 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2006 ]
ஓவியர் சில்பி சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

மறக்கப்பட்ட மாகலைஞன்
கதை 9 - ஆலங்காரி
திரும்பிப் பார்க்கிறோம் - 1
பிரான்மலைக் குடைவரை
வேண்டாத வதந்திகள்
சில்பியே சிகரம்
Some portions of Early Tamil Epigraphy
தேவை வாசகர்கள் சேவை
Master’s Strokes
Links of the Month
இதழ் எண். 29 > சிறப்பிதழ் பகுதி
சில்பியே சிகரம்
கோகுல் சேஷாத்ரி

(நன்றி - தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997)


கருவிலேயே திருவுடையவர்களாகப் பிறப்பவர்களின் புகழ் காலத்தால் மறையாதது. ஆழமான உழைப்பின் பலன்களை எந்தக் கறையானும் அரித்துவிட முடியாது. நோக்கத்தில் உயர்வையே நாடிச் செல்லும் எண்ணத்தின் நுட்பம் மாபெரும் நோன்பாகவே மலர்ந்திருக்கும். வளையாத முதுகு, கண்ணாடி கேட்காத கண்கள், தீர்க்கமான பார்வை. அதிலும் தெளிவில் முதிர்ந்ததோர் மோன நிலை. தூரிகையைத் தாங்கிய விரல்கள் தொட்ட கோடுகளெல்லாம் உயிர் பேசும். அதிகம் சிரிக்கத் தெரியாவிட்டாலும் அரைப் புன்னகையில் உதடுகள் பிரியாத ஒரு அழகு மலர்ச்சி. அகன்ற நெற்றியில் அடுக்காக மூன்று திருநீற்றுக் கோடுகள். நெற்றியின் நடுவில் அகன்ற குங்குமப் பொட்டு.







ஒரு ஓவிய மாமேதையின் பெருமைக்குரிய திருவடிவம்தான் இது. எல்லோருக்கும் உரியவராகிவிட்ட "சில்பி"தான் அவர்கள்.

அவரது கைவண்ணத்தால் கவரப்படாத தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள மூர்த்திகளே கிடையாது என்று சொல்லலாம். எல்லோரது இல்லங்களையும் கோயில்களாக்கிய பெருமை அந்தத் திருக்கரங்களுக்கே உண்டு.

இந்த நன்முத்தைப் பெற்றெடுத்த பெரும்பேறு நாமக்கல்லுக்கு 1919ம் ஆண்டில் உரியதானது. சிறுவனின் பெயர் சீனிவாசன். இளவயது முதலே இதர பாடங்களைவிட ஓவியத்துறையிலேயே உள்ளத்தை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டவன் சீனிவாசன். தேசியப் பெருங்கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்கள் மிகச்சிறந்த ஓவியரும் கூட. சீனிவாசனுடைய திறமைகளை நன்கு கவனித்த கவிஞரவர்கள் சென்ன எழும்பூரிலுள்ள ஓவியக் கலைக்கல்லூரியில் சேர்த்து, அவனது செயலாக்கத் திறனை முழுமையாக்கிக்கொள்ளும்படி அறிவுரை கூறினார்.

ஆறாண்டுகள் நீண்ட பயிற்சியில் அவரது ஆர்வத்தையும் தகுதியையும் கல்லூரி முதல்வர் திரு.டி.பி.ராய் செளத்திரி அவர்கள் மதிப்பிட்டு சீனிவாசனுடைய தேர்ச்சியை இருமடங்காக்கி இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு உயர்த்தினார். பேனாவும் மையும் கொண்டு எழுதும் சித்திரக் கோடுகள் அவருக்கு எளிதில் கைவந்தன. எல்லோரும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்த அந்தச் சித்திரங்கள் திரு.செளத்ரி அவர்களால் பெரிதும் புகழப்பட்டது. மேல்நாட்டு ஓவியர்கள் பலரையும் மிஞ்சக்கூடிய வகையில் சீனிவாசனின் ஓவியங்கள் அமைந்திருந்ததாக அவர் புகழ்ந்தார்.

சீனிவாசன் மாணவனாக இருந்தபோது ஓவியர் "மாலி" அவர்களின் கேலிச்சித்திரங்களால் மிகவும் கவரப்பட்டார். அதே போன்று பின்னாளில் சீனிவாசனின் ஓவியங்கள் மாலியையும் மிகவும் கவர்ந்தன. இந்தப் பிணைப்பே சீனிவாசன் இருபத்தியிரண்டு ஆண்டுகள் ஆனந்த விகடனில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

இயல்பாகவே சீனிவாசனுக்கு மனித முகங்களைத் தீட்டுவதினும் கட்டிடங்களை ஓவியங்களாக்குவதிலேயே அதிக ஆர்வமிருந்தது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மாலி சீனிவாசனுக்கு "சில்பி" என்னும் பெயர் சூட்டி, தெய்வ வடிவங்களையும் திருக்கோயில்களையும் மட்டுமே தீட்டும் பணிக்கு ஆயத்தம் செய்தார்.

கல்லிலே சிற்பி செதுக்கியுள்ள சிற்பங்களுக்கு மூன்று பரிமாணங்கள் மட்டுமின்றி இழைந்த ஒருவகை உயிர்ப்பும் உண்டு. புகைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் பரிமாணங்கள் நிழலாக நிலைத்திருக்கும். ஆனால் உயிர்ப்பு உள்ளூர உணரமுடியாமல்தான் இருக்கும். அந்தக் குறையைக் களைந்து முழுமையான நிறைவுள்ள சிற்பங்களை - குறிப்பாக தெய்வ சித்திரங்களை - சில்பி அவர்களால் மட்டுமே வரைய முடிந்தது.

பக்தி, தூய்மை, பரவசம் ஆகிய மூவிழைப் பின்னலே உணர்வாக அவர் வரைந்த படங்களில் தெய்வம் தானே நிலைத்து நின்றது. அமைதியான சூழ்நிலையில் பக்தர்கள் தரிசனம் முடிந்து ஏகாந்தமான வேளையில் கர்ப்பகிருகத்தில் இருக்கும் தூண்டா விளக்கின் மயங்கிய ஒளியில் சில்பி அவர்களால் அவ்வளவு தெளிவாக அந்த அருள் முகத்தை எப்படி வரைய முடிகிறது என்கிற அதிசயத்திற்கு சில்பி கொடுக்கும் விளக்கம் "வண்ணத்தின் கலவைகளை சரியான அளவில் அமைத்துக்கொள்வதுதான் என் செயல். காட்சி கொடுக்கும் அந்த தெய்வந்தான் என் விரல்களோடு இணைந்து தன்னை எழுதி வைத்துக் கொள்கிறது. படைப்பின் முழுமைக்கும் காரணம் அந்தப் பரம்பொருள்தான். நான் வெறும் கருவி !"

கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்தியை வரையுமுன்பு அதன் ஆபரணங்களைத் தனியே ஒரு தாளில் முதலில் வரைபட நகல் எடுத்து, அந்தந்தக் கற்களின் வண்ணங்களையும் குறித்துக்கொண்டு, மூர்த்தியைப் பூர்த்தி செய்யும்போது அந்தந்த ஆபரணங்களை வரைந்து தானே அதனைப் பூட்டியதைப்போல் பரவசமடைவார். இந்தப் பரவசத்தை தெய்வம் சில்பிக்கு அளித்ததால்தான் அந்த சான்னித்தியத்தை சித்திரங்களில் நம்மால் நன்கு உணர முடிகிறது. தனது படங்களை வரைந்து முடித்தவுடன் மறைந்துவிட்ட காஞ்சி முனிவர் பரமாச்சாரியாரிடம் எடுத்துச் சென்று அவரது பூரண ஆசியுடன் வீட்டுக்குக் கொண்டுவந்து விசேஷ பூஜைகள் செய்வார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய பின்பு பவன்ஸ் ஜர்னலில் பணிபுரிந்தார். மேலும் கலைமகள், தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, அமுதசுரபி ஆகிய பல தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் அவர் நிறையக் கோயில் சிற்பங்களை வரைந்துள்ளார்.

சில்பி அவர்களின் குடும்பம் சிறியது. அவர் பணிகளில், அவர் அனுஷ்டித்த ஆசாரக் கிரமங்களுக்குக் குறையாமல் அவருக்கு உதவி புரிந்தவர் மனைவி திருமதி பத்மா அவர்கள். ஒல்லியான வடிவம், குறையாத புன்னகையை சீதனமாகக் கொண்ட குளிர் முகம், விருந்தோம்பலில் தனக்குத்தானே நிகராக விளங்கிய அன்னபூரணி. சிறிய வயதிலேயே உடல் நலிவுற்று 1968ல் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டார். அவர்களது ஒரே மகன் மாலி என்கிற மகாலிங்கம். ஒரே பெண் சாரதா.

இவ்வளவு பெரிய மேதை தன் கலையை பின்தொடரத் தக்கதொரு சீடனை நீண்ட நாட்கள் தேடிக்கொள்ளவில்லை. 1981ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 14ம் நாள் - பொங்கலன்று ஒரு அதிசயம் நடந்தது. பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன். பால்மணம் கமழும் பளிங்கு முகம். தன் தந்தையுடன் சில்பியைக் காண வருகிறான். கிரிதரன் என்னும் அந்தச் சிறுவனின் படங்களைப் பார்த்த சில்பி கிறங்கிப் போகிறார். அவன் வயதில் தான்கூட அத்தனை நுட்பமாகப் படம் வரைந்ததில்லையென்று கூறி அவனை வாயார வாழ்த்துகிறார்.

தனது கலைப்ப(¡)ணிக்குத் தகுதியுள்ளதொரு இளஞ்செல்வன் வாரிசாகக் கிடைத்ததையெண்ணி மிகவும் பூரித்துப் போனார் சில்பி. தனது மனைவியின் பெயரான பத்மாவையும் தன்னுடைய இயற்பெயரின் ஈற்றுப்பகுதியான வாசனையும் இணைத்து கிரிதரனுக்குப் பத்மவாசன் என்னும் பெயரைச் சூட்டினார். "எங்களின் இருவரது ஆசியும் உன் பெயராகவே என்றும் நிலைத்து, பத்மத்தில் வாசம் செய்யும் பிரம்மனாகவே - முதற் படைப்பாளியாகவே உன் புகழ் நின்று நிலைக்கட்டும்" என வாழ்த்தினார். அந்தச் சிறுவன்தான் இன்று பிரபல ஓவியரான திரு.பத்மவாசன். கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் புதிய சித்திரம் தீட்டித் தமிழக சித்திரக்காரர்களின் வரிசையில் அழியாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள திரு பத்மவாசனின் படங்களில் கமழும் இறைத்தன்மைக்கு சில்பியே மூலகாரணம்.

தனது வாழ்க்கைப்பணிகள் முடிந்த பின்பு - அதாவது கோயில்களிலுள்ள தெய்வ மூர்த்தங்களைப் படம் எழுதி முடித்த பின்பு - அர்த்தமில்லாத வாழ்க்கை அவலங்களில் உழன்றுகொண்டிருக்கக்கூடாது - இறைவனின் திருவடிகளை விரைவில் அடைந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார் சில்பி. குடும்ப வாழ்க்கையிலும் தனது குழந்தைகளிடமும் பற்று வைத்திருந்தாலும் மனதளவில் ஒரு துறவியைப்போலத்தான் வாழ்க்கை நடத்திவந்தார் அவர்.

வாழும் நாட்களில் அவரை நன்கு பெருமைப்படுத்தத் தவறிய தமிழ்ச் சமுதாயம் அவர் வரலாறாகிவிட்ட இன்றைய நிலையிலும் அவரது பெருமைகளையும் அருமைகளையும் வரும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறி அவர்கள் திறமைகளை சீரமைக்க ஏன் முன்வரமாட்டேன் என்கிறது என்பதுதான் இன்னமும் பெரும்புதிராக உள்ளது. காலம் மாறட்டும். கண்கள் திறக்கட்டும். கடமை விளங்கட்டும். கருதியதை முடிக்கட்டும்.

சிகரங்கள் அசையாமல் அமைதியைக் காத்துக்கொண்டு உயரத்தின் எல்லையை ஒட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால் உணர்வால் உயர்ந்த சிகரம், உண்மையால் உயர்ந்த சிகரம், உறுதியால் உயர்ந்த சிகரம், உத்தமப் பண்புகளால் உயர்ந்த சிகரம், ஒழுக்கத்தால் உயர்ந்த சிகரம், உழைப்பால் உயர்ந்த சிகரம் - ஒப்பற்ற கலைச் செல்வரான சில்பி சீனிவாசன்தான்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.