http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[ 95 Issues ]
[ 1159 Articles ]
Home     About US     Facebook     Font Problems    
சேரர் கோட்டை
(தொடர்)


அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
சேரர் கோட்டை
அத்தியாயம் 01

இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
மணியிலங்கு நெடுமாட மதில் விழிஞம்


இராஜகேசரி - முதல் பாகத்தில் தோன்றிய இருமுடிச்சோழரான பரமன் மழபாடியார் அடுத்தடுத்த பல நாட்களுக்கு அம்பலவாணர் கம்பன் அரையனாரிடமும் மதுரவாசகியிடமும் சொல்லிய மிக நீண்ட அனுபவத்தை ஒரே நாவலாக வாசகர்களுக்கு வழங்குகிறோம்.


***********************************************************************************************






கிபி 988ல் தமிழகம் - கேரளம் (மலைநாடு)


அந்தக் கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பட்சத்துத் திரையோதசியானது அஞ்ஞானமாகிய மெளன இருளில் ஆழ்ந்து கிடந்தது. இன்னும் இரண்டு நாட்களில் அமாவாசை என்பதாலோ என்னவோ நிலவு பெரிதும் தேய்ந்துபோய் ஏதோ பெயருக்கு அவ்வப்போது மேகக்கூட்டங்களிலிருந்து தலையைக் காண்பிப்பதும், அடுத்த கணம் கடல் நீரில் தெரிந்த தன்னுடைய இளைத்த பிம்பத்தைக் கண்டு தானே வெட்கி ஒளிவதுமாய் கண்ணாமூச்சியாட்டம் காட்டிக்கொண்டிருந்தது. கடலின் மேற்பரப்பிலும் வழக்கமான பெளர்ணமி ஆரவாரங்களைக் காணோம். கரைக்கு அருகிலேயே உருவாகியிருந்த இளம் அலைகள் மெல்ல மெல்ல எம்பி எழுந்து மடங்கிக்கொண்டிருக்க ஆழத்தில் உருவாகியிருந்த ஒரு சில கிழட்டு அலைகள் தட்டுத் தடுமாறிக் கரைசேர்ந்துகொண்டிருந்தன.

கடலும் கரையும் சந்திக்கும் இடத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் தென்பட்டன. அவற்றில் பல படகுத்துறையில் அமைந்திருந்த மரக்கால்களில் நீளமான கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்தன. அடடா ! அந்தப் படகுகளில்தான் எத்தனை வகை... கட்டுமரப் படகுகள், கொதும்பு வள்ளம் (1) என்று மலைநாட்டு மொழியில் அழைக்கப்பட்ட அகழ்மரப் படகுகள், நீள் கட்டைப் படகுகள், நீண்ட சட்டங்களால் பிணைக்கப்பட்ட பிணைப் படகுகள்.... அவற்றுக்குக் குறுக்கே நீள அகலங்களில் செல்லும் தாம்புக் கயிறுகள்.. ஓ ! இப்போது புரிகிறது. இவையெல்லாம் சற்று தூரத்தே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருக்கும் மரக்கலங்களிலிருந்து சரக்குகளை இறக்கிக் கரையேற்றப் பயன்படும் சரக்குப் படகுகள் போலும். வேறு வேறு தேசங்களிலிருந்து கிளம்பி நெஞ்சு நிமிர்த்திப் பாய்மரத்தை விரித்துக்கொண்டு தைரியமாக கடலில் நூறு நூறு காதங்களைக் கடந்து வந்திறங்கியிருக்கும் அந்த மாபெரும் கலங்களை சற்று மரியாதையுடனே நோக்குகிறோம். இத்தனை இருளில் அக்கலங்களை நம்மால் சரிவரப் பார்க்கமுடியாதது நமது துரதிருஷ்டம்தான். என்றாலும் ஒரு சில கலங்களில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த கலவிளக்கு வெளிச்சத்திலிருந்து அவற்றின் பிரம்மாண்டத்தை நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.

(1) இவ்வகைப் படகுகள் பெருத்த அடிமரங்களைக் குடைந்து செய்விக்கப்பட்டன

இயற்கையாகவே சந்திரப் பிறைபோன்ற அமைப்பைப் பெற்றிருந்த அந்த அழகிய கடற்கரையில் இந்தப் பின்னிரவு நேரத்திலும் ஆட்களின் நடமாட்டம் கணிசமான அளவிற்கு இருந்தது. மணலில் ஆங்காங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வணிகச் சாத்து சரக்குகளும் (2) அவற்றிற்கு அப்பால் அமைந்திருந்த சுங்கச் சாவடியும் சிறிது தூரத்தில் பழைய கம்பீரத்தை விட்டுவிடாமல் ஆவேசத்துடன் எரிந்து வெளிச்சம் கொண்டிருக்கும் கலங்கரை விளக்கமும் அந்தக் கடற்கரைப் பகுதி ஒரு துறைமுகப் பட்டினம்தான் என்பதை சந்தேகமற நமக்கு உணர்த்துகின்றன.

(2) வணிகக் குழுக்கள் சாத்துக்கள் என்றழைக்கப்பட்டன


"ஆழி முந்நீர் அகழ் ஆக
அகழ் வானத் தகடு உறிஞ்சும்
பாழி நீள் மதில் பரந்தோங்கிப்
பகலவனும் அகல ஓடும்
அணியிலங்கையின் அரணிதாகிய
மணியிலங்கு நெடுமாட மதில் விழிஞம்....."


என்று பாண்டியப் பேரரசர் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபரின் சீவரமங்கலத்துச் செப்பேடுகள் புகழ்ந்தேத்தும் கேரள நாட்டின் விழிஞம் துறைமுகம் இதுதானா ! என்று ஒருகணம் வியந்துபோகிறோம்.

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் எத்தனை போக்குவரத்து நிலவிவந்தது என்பதை நினைத்தால் இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நாட்களிலெல்லாம் மத்தியத் தரைகடல் பகுதியிலிருந்து புரவிகளோடும் மற்ற ஐசுவரியங்களோடும் வந்திறங்கும் அராபியக் கப்பல்களே நூற்றுக்கணக்கில் குவிந்திருக்கும். அவற்றைத் தவிர கீழ்த்திசை நாடுகளான சாவகம், கடாரம், தாமிரலிங்கம், ஜம்பூத்வீபம், சொர்ணத்தீபம், இலங்காசோகம், மாப்பளம், சீனம் முதலிய நாடுகளிலிருந்து வாணிபத்திற்காக வந்திருக்கும் இதரக் கப்பல்கள் எண்ணிலடங்கா. இவற்றுக்கிடையில் பாண்டிநாட்டின் முத்து வாணிபக் கப்பல்கள் வேறு... அடடா - அந்தக் கலங்களிலிருந்தெல்லாம் எத்தனையெத்தனை விசித்திரமான பொருட்கள் வந்திறங்கும் ! அவற்றைக் கரையிறக்கும் பணியில் எத்தனையெத்தனைபேர் ஈடுபட்டிருப்பார்கள்... முன்னிரவு பின்னிரவு காலை மாலை என்று நாளின் எல்லாப் பொழுதுகளிலும் ஒரே கூட்டமும் கூச்சலுமாகவல்லவா இந்த இடம் காட்சியளித்துக்கொண்டிருக்கும்... இந்தத் துறைமுகத்தின் சுங்கச் சாவடியில்தான் எத்தனையெத்தனை அரசாங்க ஊழியர்கள் பணியில் இரவு பகலாக ஈடுபட்டிருப்பர் ! அவர்களின் அருட்கருணையாகிய செஞ்சாந்து முத்திரைக்காக நாட்கணக்கில் தவமிருக்கும் சரக்கு மூட்டைகள்தான் எத்தனையெத்தனை...

இன்று நிலைமை சற்று மாறித்தான் போய்விட்டது. முன்பு நூற்றுக்கணக்கான கலங்கள் நின்ற இடத்தில் இன்று இருபது முப்பது கலங்களைத்தான் காணமுடிகிறது. பாவம், அவையும் பழைய வாசனையை விட்டுவிடாமல் பிடிவாதமாகப் பாரசீகத்திலிருந்து உயர்ஜாதிப் புரவிகளை ஏற்றிக்கொண்டு வந்திருக்கும் அராபியக் கப்பல்கள்தான். கீழ்த்திசை வாணிபத்தை ஒரேயடியாக நாகைப்பட்டினமும் மாமல்லையும் காயல் பட்டினமுமல்லவா விழுங்கிவிட்டன. முத்து வாணிபத்தைப் புகார் தத்தெடுத்துக்கொண்டுவிட்டது. இன்றுவரை விழிஞத்தில் தாக்குப்பிடித்து நின்றுகொண்டிருப்பவர்கள் மலைநாட்டின் குதிரைச் செட்டிகள் (3) மட்டும்தான்..மற்ற வகை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வணிகர்கள் பலரும் நஷ்டம் தாங்க முடியாமல் வேறு வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். எதைச் சொல்வது எதை விடுவது.... எல்லாம் தலைவிதி !

(3) குதிரை வணிகர்கள் குதிரைச் செட்டிகள் என்றே அழைக்கப்பட்டார்கள். குறிப்பாக மலைநாட்டின் குதிரைச் செட்டிகளைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் உள்ளன





விழிஞம் துறைமுகம்



அந்தத் துறைமுகத்தின் ஒரு ஓரத்தில் அமைந்திருந்த இயற்கையான மண்மேட்டில் கம்பீரமாய் ஓங்கியெழுந்து நின்றது அந்தப் கோட்டை. வானம் தீட்டியிருந்த கருநீலப் பின்னணியில் அக்கோட்டையின் சாளர வாயில்களும் திட்டிவாசல் மதில்களும் வில்லம்பு மாடங்களும் ஒரு நிழலோவியமாய் விரிந்திருக்கக் காண்கிறோம். சொல்லப்போனால் அந்தத் துறைமுகப் பகுதியிலேயே பழம் பெருமை சிறிதும் குன்றாமல் தலைநிமிர்ந்து நிற்பது அந்தப் பழங்காலக் கோட்டை ஒன்றுதான். (4)

(4) இந்தப் பழங்கோட்டையின் எச்சங்கள் 2006ல் கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரால் கண்டறியப்பட்டுள்ளன. இவரிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசி சில தெளிவுகள் பெற்றோம்

"பழங்காலக் கோட்டை" என்று காரணத்தோடுதான் குறிப்பிடுகிறோம்.

ஏறக்குறைய நூறு நூற்றியிருபது வருடங்களுக்கு முன்னால் - விழிஞம் கொட்டிக் கொழித்த காலத்தில் - இக்கோட்டை ஆய்வேள்கள்(5) என்றழைக்கப்பட்ட அரச வம்சத்தாரிடம் இருந்து வந்தது. சங்ககாலம் முதற்கொண்டு வழிவழியாகத் தென்னகத்தை ஆண்டுகொண்டிருந்த அத் தொல்பழங்குடியினர் கட்டியதாலோ என்னவோ அந்தக் கோட்டையை சற்று செருக்குடன் நிமிர்ந்து நிற்பதுபோல்தான் பார்ப்பவர் எவருக்குமே தோன்றும். அரசாங்கம் வலிமையுடையதாக இருந்ததால் வியாபாரம் செழித்தது. மலைநாட்டில் விளைந்த மிளகும் தேனும் மான்கொம்புகளும் இதரப் பொருட்களும் விறுவிறுப்பாக வேற்று சந்தைகளில் விலைபோயின. விழிஞத்தின் தேசிகப்பாடியில் (6) அந்த நாட்களிலெல்லாம் இரவு பகலென்கிற வித்தியாசமே தெரியாமல் ஒரே போக்குவரத்தாயிருக்கும். யாருடைய கண்பட்டதோ... "மணியிலங்கு நெடுமாட மதில் விழிஞம்" ஸ்ரீமாற ஸ்ரீவல்லபரின் படைகள் தொடுத்த கடுத்தாக்குதலுக்குத் (7) தாக்குப்பிடிக்க முடியாமல் பணிந்தது. அதற்குப்பிறகு எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்.... என்றாலும் பழைய நிலையை விழிஞத்தால் அடையவே முடியவில்லை. அதற்குப் பின்வந்த ஆண்டுகளில் ஆய்வேள் வம்சத்தினர் படிப்படியாக ஏறக்குறைய அழிந்தொழிந்த பிறகு விழிஞம் கோட்டையையோ துறைமுகத்தையோ சரிவர ஆதரிப்பார் யாருமில்லை. இன்றைய தேதியில் பெயருக்கு இது சேரமான் பெருமாளின் ஆதிக்கத்தில் உள்ளதாகவும் அவருடைய சார்பில் வேணாட்டரசால் நிர்வகிக்கப்படுவதாகவும் சொல்லிக்கொள்பவர்கள் உண்டு.

(5) கடையெழு வள்ளல்களுள் ஒருவராக ஒரு ஆய்வேள் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறார்
(6) பன்னாட்டு மொழிபேசும் பல தேசத்து வணிகர்கள் புழங்கிய பகுதி தேசிகப்பாடி என்று குறிப்பிடப்பட்டது
(7) இத்தாக்குதல் கிபி 788ல் நடந்ததாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


பழம் பெருமை மிக்க அக்கோட்டையின் பெருங்கதவுகளில் அமைக்கப்பட்டிருந்த திட்டிவாயிற் கதவம் வழியாக உள்ளே நோக்குகிறோம். அடடா ! என்ன ஆச்சரியம் ! வழக்கமாக ஆள் அரவம் சிறிதுமற்ற அந்தக் கோட்டையில் பேச்சுக் குரல்கள் லேசாகக் கேட்பதுபோலில்லை ? மெல்லிய நடமாட்டங்கள்கூடத் தென்படுகின்றனவே... எதற்கும் சற்று எச்சரிக்கையாகவே அணுகுவோம். கோட்டை வாயிலையொட்டி அமைந்திருக்கும் நெடுவீதியைக் கடந்ததும் நம் கண்களுக்குத் தட்டுப்படுவது ஒரு பெரிய மாடமாளிகை. அந்தக் காலத்தில் ஆய்வேளரசரின் திருமாமணியம்பலமாகத் (8) திகழ்ந்தது இந்த மாளிகைதான் போலம். இருளில் அதன் நீள அகலங்களை நம்மால் சரிவர அனுமானிக்க முடியவில்லை. என்றாலும் அந்த மாளிகையின் முன் மண்டபமும் அவற்றைத் தாங்கிக்கொண்டிருக்கும் தூண்களும் அந்த மண்டபத்தின் முன்றிலையொட்டி அமைக்கப்பட்டிருந்த நீண்ட மூங்கில் பந்தலும் நன்றாகவே தெரிகின்றன.

(8) விருந்தினர்களை அரசர்கள் வரவேற்று உபசரிக்கும் மாளிகை

அந்தப் பந்தலின் கீழ் அமைந்திருந்த விரிப்பில் இருபது அல்லது முப்பது மனிதர்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். கம்பீரமாக அவர்கள் அமர்ந்திருக்கும் தோரணையும் அந்த இருளிலும் அவர்களின் அங்கங்களில் பளபளக்கும் அணிமணிகளும் அவர்கள் சாதாரண மனிதர்களல்ல என்பதை நமக்கு உணர்த்திவிடுகின்றன. ஒரு சிலர் நீண்ட தலைப்பாகையும்கூடத் தரித்திருக்கிறார்கள். அவர்களின் கண்கள் அடிக்கடி மாளிகையின் உட்பகுதியை ஆவலுடன் நோக்குவதிலிருந்து எவருடைய வருகையையோ அவர்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதாக யூகிக்கிறோம்.


***********************************************************************************************


கூட்டத்தின் முன்னணியில் அமர்ந்திருந்தவர் சங்கடமாகக் கையைப் பிசைந்துகொண்டார்... "என்ன, தலைவர் வருவதற்கு இத்தனை தாமதமாகின்றதே ! அப்போதே மாளிகைக்கு வந்து சேர்ந்துவிட்டதாகத் தகவல் வந்ததே !"

"வேணாடுடையவரே ! உமது அவசரம் எனக்கும் புரிகிறது - அவர் காரணமில்லாமல் தாமசிக்கமாட்டார்... "

"காரணமில்லாமல் தாமசம் செய்கிறார் என்று நான் சொல்லவில்லை - உள்ளே என்னதான் நடக்கிறதென்று தெரியவில்லை - கூட்டத்தை முடித்துக்கொண்ட கையோடு நான் பனங்கனாவில் (9) அரண்மனைக்குப் புறப்பட்டாக வேண்டும்.. சில அவசர வேலைகள் வந்துவிட்டன..."

(9) இந்த அரண்மனை கொல்லத்தில் அமைந்திருந்தது

"கவலைப்படாதீர்கள் - இன்னும் சிறிது நேரத்தில்.... அதோ, அவரே வந்துவிட்டார்...அடடா ! வள்ளுவ நாடாழ்வாருக்கு நூறு வயது !"

இருளடைந்திருந்த அந்த மாளிகையின் உட்பகுதயிலிருந்து பெரிய மனிதர் ஒருவரும் அவருக்கு உதவியாளனைப்போல் காணப்பட்டவன் ஒருவனும் மண்டபத்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார்கள். வள்ளுவ நாடாழ்வார் என்றழைக்கப்பட்ட அந்தப் பெரியவர் சற்றே வயது முதிர்ந்தவராகத் தெரிந்தார். என்றாலும் நடையிலும் தோரணையிலும் ஒரு தனி மிடுக்குத் தெரிந்தது. அவருடைய வலது தோளிலிருந்து சரேலென்று கீழிறங்கிய நீண்ட பட்டு அங்கவஸ்திரமானது அவருடைய கம்பீர நடைக்கு ஏற்றாற்போல் ஆடி அசைந்தது. மிகக் கூர்மையான அவருடைய கண்கள் அந்த அடர்ந்த இருளைக் கிழித்துவிடும் வீரியத்துடன் அங்குமிங்கும் அலைபாய்ந்தன.

மெதுவாகவே நடந்து பந்தலை அடைந்தவர், கீழே விரிக்கப்பட்டிருந்த திண்டில் கம்பீரமாக கால் மடக்கி அமர்ந்து அனைவரையும் ஒருமுறை நிமிர்ந்து ஏற இறங்கப் பார்த்தார்.

"நண்பர்களே ! தாமசத்திற்கு மன்னிக்க வேண்டும்... ஒரு முக்கிய விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது... கூட்டத்தைத் துவங்கலாமா ?"

"ஆஹா உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம் - உடனடிதாகத் துவங்கிவிடலாம் !"

உதவியாளன் வெற்றிலையைப் பக்குவமாக மடித்துக்கொடுக்க அதனை வாயில் ஒரு ஓரத்தில் அதக்கிக்கொண்டு பேசத்துவங்கினார் வள்ளுவனார்.

"நண்பர்களே ! என்னுடைய பிரத்யேக அழைப்பிதழை மதித்து இத்தனை தூரம் கிளம்பி வந்ததற்கு மிகுந்த வந்தனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒரு சிலர் பல நாட்களாகப் பயணப்பட்டு இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன். ஆனால் இந்தக் கோட்டையைத் தவிர வேறு எந்த இடத்திலும் இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதில் எனக்கு விருப்பமில்லை ! என் அழைப்பை மதித்து இங்கே வந்து கூடியிருக்கும் அத்தனை நாடுவாழிகளுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொளத்து நாடுடையவரும் மூஷிக வம்ச மரபில் வந்தவரும் நம்மில் மிக மூத்தவருமான கண்டன் காரியார் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதாக இருந்தது - துரதிருஷ்டவசமாக கடைசி நிமிஷத்தில் அவருக்குச் சில சிக்கல்கள் வந்து சேரவே என்னைத் தலைமையேற்கச் சொல்லி முறியனுப்பிவிட்டார். அழைப்பிதழ் இல்லாமல் இந்தக் கூட்டத்தில் ஒருவருமில்லையே ? அப்படி எவராவது இருந்தால் உடனடியாக எழுந்து நிற்க வேண்டும் - இல்லையேல் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் !"

கூட்டத்தில் சற்றே இளவயதினனாகக் காணப்பட்டவன் ஒருவன் எழுந்தான்.

"ஐயா ! அழைப்பிதழ் எனக்கு அனுப்பப்படவில்லை - என் தந்தையாருக்குத்தான் அனுப்பப்பட்டது..."

"யாரது, வீரக்குறும்பொறையர் மகன்தானே நீ ? குடும்பத்தின் முதுக்குறுவல்லவா (10) நீ ? எனக்கு முன்பே தகவல் வந்துவிட்டதப்பா - தந்தை நன்றாக உள்ளார் இல்லையா ?"

(10) குறும்பர் அரச குடும்பத்தில் மூத்த இளவரசர் முதுக்குறுவல் என்று குறிப்பிடப்பட்டார்

"அஞ்சைக்களத்து (11) அப்பன் அருளால் சுகமாக இருக்கிறார் ஐயா ! சில காரணங்களால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவியலவில்லை..."

(11) சேரநாட்டின் புகழ்பெற்ற சைவத்தலமான திருவஞ்சிக்களம். "அஞ்சைக் களத்துள்ளார் ஐயாறுள்ளார்..." என்பது அப்பர் பெருமானின் பதிகம்

"அறிவேன் - ஓலையில் விபரமாக எனக்கு எழுதியமுள்ளார். அவரை மிகவும் விசாரித்ததாகத் தெரியப்படுத்துங்கள். நண்பர்களே ! மிக மிக முக்கியமான அந்தரங்கமான சில விஷயங்களைப் பற்றி நேரில் மனம் விட்டுப் பேசுவதற்காகத்தான் உங்களை இத்தனை தூரம் வலுக்கட்டாயமாக வரச்சொன்னேன். நான் முக்கிய விஷயங்களைப் பேசத்துவங்குமுன் உங்களில் யாருக்காவது ஏதாவது கேள்விகள் உள்ளனவா ?"

"நாலுதளிக்காரர்களுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்படவில்லையோ ?"

"இல்லை - அவர்கள் நமக்கு ஓலையனுப்பாமல் பெருஞ்செல்லூரிலும்(12) தளிப்பரம்பரையிலும் இரண்டு இரகசியக் கூட்டங்கள் நடத்திவிட்டார்கள் என்கிற செய்தி எனக்கு வந்து சேர்ந்தது. நமக்கும் அவர்களுக்கும் உள்ள சிறிய விரோதங்களைப் பாராட்டுவதற்கான நேரம் இதுவல்லவென்றாலும் இம் முதல்கூட்டத்திற்கு அவர்களை அழைப்பதை காரியார் விரும்பவில்லை ! நாம் இன்றைக்கு எடுக்கப்போகும் சில முக்கிய முடிவுகளைப் பொறுத்தே அவர்களிடம் நாம் இனிக்கொள்ளப்போகும் உறவு அமையும் !"

(12) சங்க காலந்தொட்டுப் புகழ்பெற்றிருந்த மலைநாட்டுக் கோநகர்

கூட்டத்தின் பின்னணியில் சில பேச்சுக்குரல்கள் மெதுவாகக் கேட்டன.

"யாரது பின்னால் பேசுவது ? எதுவாக இருந்தாலும் கூட்டத்திற்கு முன்வந்து தைரியமாகப் பேசலாம் !" என்று முழங்கினார் வள்ளுவ நாடாழ்வார்.

"ஒன்றுமில்லை ஐயா ! இருள் மிகவும் கவிந்துள்ளதே - ஒரு தீப்பந்தத்தை வேண்டுமானால் கொண்டுவரலாமா என்று இவர் கேட்டுக்கொண்டிருந்தார்...."

"நண்பர்களே ! மிக முக்கியமான ஒரு காரணத்தின் பாற்பட்டுத்தான் இக்கூட்டத்தை இத்தனை இருட்டில் நடத்துகிறோம். வழக்கமாக அழகிய தோப்புத் துரவரங்களில் அகிற்புகையும் சந்தனமும் நெருப்பில் கமழக் கமழ நடத்தப்பெறும் நமது கூட்டங்கள் இந்தப் பாழடைந்த கோட்டையில் மிக மிக இரகசியமாக நடத்தப்பெறுவதே நமது நிலைமையை ஓரளவிற்கு உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கும். என்றாலும் முழுச் செய்தியையும் நான் கூறும் வரை பொறுப்பீர்களாக.. வேறு யாராவது ஏதாவது கேட்கவேண்டியுள்ளதா ?"

"ஒரு சில கேள்விகள் உள்ளன - என்றாலும் முதலில் நீங்கள் பேசிவிடுங்கள். பின்னர் கேள்விமுறைகளை வைத்துக்கொள்ளலாம்.." - வேணாட்டுடையவர் என்றழைக்கப்பட்ட கோவர்தன மார்த்தாண்டர் சட்டென்று அவருக்கு பதிலளித்தார்.

"அப்படியானால் சரி, நான் சொல்லவந்ததைச் சொல்லத் துவங்குகிறேன்.."

(தொடரும்...)

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events
சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா
சிறப்பிதழ்கள்
Special Issues
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்
புகைப்படத் தொகுப்பு
Photo Gallery
சேரர் கோட்டை
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter