சேரர் கோட்டை
(தொடர்)
|
சேரர் கோட்டை அத்தியாயம் 04
கோகுல் சேஷாத்ரி
|
|
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
|
பெளத்தப் பெருநகர்
அந்த வெண்புரவிகள் இரண்டும் வல்கித நடையில் மெல்ல இணையாக இராஜபாட்டையில் நடந்துகொண்டிருந்தன. இரண்டிலும் அரசாங்க அலுவலர்களைப்போலத் தெரிந்த இருவர் ஆரோகணித்திருந்தார்கள். அவர்களுடைய ஆடை அணிமணிகள் அத்தனை விலையுயர்ந்தவையாகக் காணப்படாமல் எளிமையுடன் தெரிந்தாலும் தோற்றத்தில் ஒரு வீரப்பொலிவு திகழ்ந்தது. வலது புறத்துப் புரவியில் ஆரோகணித்திருந்தவர் இருவரில் மிக மூத்தவராகக் காணப்பட்டார். அவருடைய தலையை ஒரு பெரிய பட்டுத் தலைப்பாகை அணி செய்தது. அவரது அடர்ந்த புருவங்களின் கீழ் அமைந்திருந்த மிகச் சிறிய ஆனால் மிக மிகக்கூர்மையான கண்கள் தன்னைச் சுற்றிலும் விரிந்த காட்சிகளை கவனமாக உள்வாங்கிக்கொண்டன. தீர்க்கமான நாசிகள் சீராக விடைத்து அடங்கின. அவரது முகத்தை அலங்கரித்த பெரிய மீசை காதுகள் வரை படர்ந்திருந்தாலும் அதனால் அவருடைய தோற்றப்பொலிவு சிறிதும் பாதிக்கப்படாதது ஆச்சரியம்தான். கருமை பொங்கிய மீசையில் ஆங்காங்கே வெண்ணிற நரைமயிர்கள் பூத்துக் குலுங்கின.

கிபி 988ல் சோழ மண்டலம்
அவர் தனக்கு முன் மாட்டுவண்டியில் சென்றுகொண்டிருந்த ஒரு சிறுவனின் சேட்டைகளை இரசிக்கலானார். மிகவும் சுறுசுறுப்பான பையனாகத் தெரிந்தான் அவன். ஒரு மாட்டு வண்டியில் ஓரிடத்தில் அமர்ந்து பயணிப்பதென்பது அவனுக்கு இயலாத காரியமாக இருந்தது. வண்டியில் அமர்ந்திருந்த அனைவரின் தொடைகளையும் மிதித்தபடி அவன் வண்டியின் முன்னும் புறமும் அலைந்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் இம்சை தாங்க முடியாமல் அவனுடைய தகப்பனார் "உட்காரப்போகிறாயா இல்லையா ?" என்று ஒரு அதட்டல் போட்டார். அவ்வளவுதான் ! நிலைமை முன்னைவிட மோசமாகிவிட்டது. "கோ!" வென்று பெருங்குரலெடுத்து அழத்துவங்கிவிட்டான் அந்தச் சிறுவன். அமைதியான காலை வேளையை அந்த வறட்டு அழுகைச் சப்தம் நாராசமாகக் கலைத்தது.
அவர் மெல்ல சிரித்துக்கொண்டே புரவியின் பிடறியைத் தடவிவிட்டார்.
"என்ன ஐயா, சிரிக்கிறீர்கள் ?" - பக்கத்திலிருந்தவர் மெல்ல அவரை வினவினார். இப்போதுதான் இடப்புறத்தில் வந்துகொண்டிருப்பவரைக் கவனிக்கிறோம். இவருக்கும் தலையில் தலைப்பாகை - மீசை - நல்லவேளை, இவரது மீசை அத்தனை பயமுறுத்தவில்லை. இவரும் பார்ப்பதற்கு வீரராகத்தான் தெரிகிறார் - ஆனால் கூடவே சற்று அடக்கமும் கட்டுப்பாடும் தெரிகின்றன. வயதில் சற்று இளையவராகவும் காணப்படுகிறார். ஒரு செளகரியத்திற்காக இவரை இளையவர் என்று இப்போதைக்கு அழைப்போம்.
"ஒன்றுமில்லை - முன்னால் நடந்துகொண்டிருக்கும் கூத்தை நீங்கள் கவனிக்கவில்லையா ?"
"இல்லை ஐயா ! ஏதோ நினைப்பில்...."
"ஆஹா ! அதுதான்.... அதுதான் வாழ்வின் மிகப்பெரிய விசித்திரம். பிரச்சனை என்றுகூடச் சொல்லலாம். மணியனாரே ! வாழ்க்கை நம் கண்களின் முன்னர் இந்தக் கணத்தில் இந்த இடத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது இறந்த காலத்திலோ எதிர்காலத்திலோ இல்லை - நிகழ்காலத்தில் இருக்கிறது. அதனால்தான் மனத்தை எப்போதும் கூர்மையாக - கவனம்பிசகாமல் வைத்துக்கொள்ளவேண்டுமென்று பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்....."
அந்த இளையவர் பதில் பேசவில்லை. மெல்லத் தலையைக் குனிந்துகொண்டார்.
"ஆஹா ! மனிதன் எதை எதையோ தேடி வாழ்க்கை முழுவதும் அலைந்துகொண்டிருக்கிறான். ஆனால் வாழ்வானது அவனுடன் எந்நேரமும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டேயிருக்கிறது. அது எங்கோ தொலைவில் இருக்கிறதென்று நினைத்துக்கொண்டு அன்றாடம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறான் அவன். அந்தோ ! அந்தப் பயணம்தான் வாழ்க்கை என்பதை அவன் அறிவதேயில்லை.... இதோ இந்த இராஜபாட்டைதான் வாழ்க்கை - இதில் நடந்தும் ஊர்ந்தும் சென்றுகொண்டிருக்கும் ஜீவராசிகளெல்லோரும்தான் இந்தக் கணத்தில் நமது வாழ்வின் அங்கங்கள். இதோ, நம்மைச் சுமந்துகொண்டு செல்கிறதே - இந்தப் புரவிமட்டும்தான் இந்தக் கணத்தில் நம்முடைய பந்தம். நமது மூச்சுக் குழல்களை இந்தக் கணத்தில் நிரப்பிக்கொண்டிருக்கிறதே காற்று - இதுதான் இறைவனின் இந்தக் கணத்திற்குரிய அருள். வரப்பிரசாதம். அற்புதமான இந்தக் காலைக்காற்றை அனுபவியுங்கள். சுறுசுறுப்புடன் நாகையை நெருங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு வகையான இந்த மனிதர்களைக் கவனியுங்கள். அதோ - தனது வணிகச் சரக்குகளைத் துறைமுகத்துக் கப்பலில் ஏற்றிவிடும் முனைப்புடன் சென்றுகொண்டிருக்கும் நானாதேசி வணிகர்களைக் கவனியுங்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக வாழ்வின் அநித்தியங்களிலிருந்து ஒதுங்கி புத்தர் பெருமானின் சரணகமலாலயங்களில் மனதைப் பதித்து வாழ்வின் பற்றுதலை நீக்கிய புத்த பிக்குகளைக் கவனியுங்கள். அடடா, அந்த பிக்குகளின் கூட்டத்தில் சப்பை மூக்குடனும் சிறிய கண்களுடனும் காணப்படும் சீனத் துறவிகளைக் கவனியுங்கள் - பெளத்தமானது எத்தனை தூர தூர தேசங்களிலெல்லாம் பரவி நிற்கிறது ! அதற்குப்பின்னால் காரோணத்து மகாதேவர் திருக்கோயிலுக்குச் சென்றுகொண்டிருக்கும் பாசுபத மஹாவிரதிகளின் கூட்டத்தைக் கவனியுங்கள். வாழ்க்கைதான் எத்தனை பெரியது ! எத்தனை வகைகளை உள்ளடக்கியது ! மணியரே ! நம் கண்ணெதிரே விரியும் அற்புதமான இந்த வாழ்க்கையை விட்டுவிட்டா எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருக்கிறீர்கள் ?"
ஓரிரு நிமிடங்கள் மெளனமாகக் கழிந்தன. மணியனார் என்றழைக்கப்பட்ட அந்த இளையவர் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார் போலும். அவருடைய கண்கள் புரவியின் கடிவாளத்திற்குக் கீழ் அவர்கள் கடந்துகொண்டிருந்த நிலத்தை வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தன.
"என்ன யோசனை...."
"ஒன்றுமில்லை... தாங்கள் சொன்னதைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். மனமானது சதா சர்வகாலமும் குரங்கைப்போல் பல்வேறு இடங்களுக்கும் தாவிக்கொண்டிருக்கிறது. சிறிது நேரம் தஞ்சையிலிருக்கும் என் குடும்பத்தாரிடம் இருந்தது. பின் என் பாட்டனார் இருக்கும் திருமறைக்காட்டிற்கு சம்மந்தமில்லாமல் சென்றது. அப்புறம் பழையாறை - காஞ்சி - ஏதேதோ நினைவுகள்..."
"ஆஹா ! இந்த மனம் இருக்கிறதே... அதனைக் கட்டுப்படுத்துவது மிக மிகக் கடினமான செயல். அதனால்தான் எல்லா மதங்களிலும் விதவிதமான தியானப் பயிற்சிகளை சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்... குறிப்பாக பெளத்த மதத்தில் இதற்கென்று...."
"ஏதேது... இராஜராஜப் பல்லவராயரே ! விட்டால் அரசாங்கம் - குடும்பம் எல்லாவற்றையும் துறந்து புத்த சங்கத்தில் சேர்ந்துவிடுவீர்கள் போலிருக்கிறதே !"
இராஜராஜப் பல்லவரையர் என்னும் பெயரைக் கேட்டதும் சிறிது அதிர்ந்துதான் போகிறோம். இவரா ? இவரா அவர் ? மதுராந்தகரான உத்தமச் சோழர் காலந்துதொட்டு சோழசாம்ராஜ்ஜியத்தின் மேன்மைக்காகப் பாடுபட்டவரும் சோழ இளவரசர் அருமொழித்தேவர் "இராஜராஜர்" என்ற அபிஷேகநாமத்துடன் சிங்காதனமேறிய சில நாட்களிலேயே இராஜராஜப் பல்லவராயர் என்னும் சிறப்புப் பெயருடன் மகாசோழ சைனியத்தின் சேனாபதி பொறுப்பேற்றுக்கொண்டவரும் சோழர் தொல்குடியின் மூத்த தூண்களுள் ஒருவருமான அம்பலவாணர் பழுவூர் நக்கனான விக்கிரமச் சோழ மாராயரா (21) இவர் !
(21) மாராயன் என்பது மாஅரையன் - மாவரையன் என்பதன் திரிபு
"ஆஹா ! அதுதான் முடிகிற காரியமாக இல்லை. துறவு என்பது அத்தனை எளிதான செயல் அல்ல மணியனாரே. அதிலும் என்னைப்போன்று மிகக்கடுமையான அரசாங்கச் சுழல்களிலும் குடும்ப சாகரத்திலும் சிக்கித் தவித்தே வாழ்க்கையைக் கழித்தவிட்ட பலருக்கு துறவு என்பது எட்டாக் கனிதான். ஆனால் நல்லவேளையாக புத்தபெருமான் அதற்கும் வழிசொல்லியிருக்கிறார்...."
"அடடா, எதற்கெடுத்தாலும் புத்தர் பெருமான்தானா ?"
"என்ன செய்வது ? நாம் நெருங்கிக்கொண்டிருக்கும் கோநகரின் பெருமை அப்படி ! இந்த நாகநகரமானது தொன்றுதொட்டே பெளத்தர்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பதை நீங்கள் அறிவீர்களல்லவா ?"
"புத்தரும் பெளத்தர்களும் அவர்தம் உபதேசங்களும் ஒரு பக்கம் இருக்கட்டும் - நாகையில் குறிப்பாக எந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறோமென்பதை இப்போதாவது நான் தெரிந்துகொள்ளலாமா ?"
"துரதிருஷ்டவசமாக அதிலும் கருணாமூர்த்தியான புத்தர் பெருமான் சம்மந்தப்பட்டிருக்கிறார் !"
"என்ன சொல்கிறீர்கள் ?"
"நாம் ஒரு புத்தவிகாரைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் நண்பரே ! அசோகச் சக்ரவர்த்தியின் காலந்தொட்டு பெருமையுடன் விளங்கும் பதரதிட்ட விஹாரைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம்...."
"என்ன, அந்தச் சீன விகாரைக்கும் கடற்கரைக்குமிடையில் பாழடைந்து கிடக்குமே - அந்த விஹாரையையா குறிப்பிடுகிறீர்கள் ?"
"பாழடைந்து கிடந்த விஹாரைக்கு மறுவாழ்வு வந்தாயிற்று. புதுப்பிப்புத் திருப்பணிகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விகாரையின் மத்தியிலிருக்கும் சேதியம் முழுவடிவம் பெற்றுவிட்டது. என்றாலும் சக்ரவர்த்தியவர்களுக்கு இன்னும் திருப்தியேற்படவில்லை. அந்த விகாரையின் ஆச்சாரியரும் மிகப் பெரிய ஞானியுமான மகாகாசியப (22) தேரருக்காகவாவது ஒரு புதிய விகாரை கட்டிக்கொடுக்கவேண்டும் என்று என்னிடம் பல முறை சொல்லிவிட்டார்...."
(22) புத்தபகவானின் நேரடிச் சீடர்களுள் ஒருவராக மஹாகாசியபர் அறியப்படுகிறார். ஜென் என்கிற பெயரில் பின்னாளில் சீனத்திலும் ஜப்பானிலும் புகழ்பெற்ற பெளத்தப் பிரிவின் முக்கிய குருவானவர் இவரே. நமது கதையில் குறிப்பிடப்படும் ஆச்சாரியார் அவருடைய பெயரைத் தரித்திருந்ததாகக் கொள்க.
"ஏதேது, உங்களுக்கு முற்றியிருக்கும் புத்தப் பைத்தியத்தை சக்ரவர்த்தியவர்களுக்கும் பரப்பிவிட்டுவிட்டீர்கள் போலிருக்கிறதே ! பல்லவராயரே, தயவு செய்து வேறு எதைப்பற்றியாவது பேசுவோமா ?"
" ஆஹா ! தாராளமாகப் பேசலாம். பெளத்தத்தைப் பற்றிப் பேசினால்தான் உங்களுக்குப் பிடிக்கவில்லை... காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் மகாதேவரைப் பற்றி வேண்டுமானால் கூறுகிறேன், கேளுங்கள் ! காரோணம் என்பது காயா ரோஹணம் என்பதன் திரிபு. காயா ரோஹணம் என்பதை அரோகணிக்கும் காயம் என்று புரிந்துகொள்ள வேண்டும். காயம் என்றால் உடம்பு. ஆரோகணித்தல் என்றால் மேலேறுதல். இந்தக் காயத்தோடு - அதாவது பூத உடலோடு - கைலாசபதியை அடையும் பாசுபத மார்க்கத்தைத்தான் இங்கு குடிகொண்டிருக்கும் இறைவன் தத்துவார்த்தமாக உபதேசிக்கிறார். மூத்த திருப்பதிகம் பாடிய காரைக்காலம்மை தன்னுடலுடனே கைலாயமடைந்தார். அவ்வளவு ஏன் ? இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம்பியாரூரரான சுந்தரரும் சேரமான் பெருமாளும்கூட தத்தம் காயங்களுடன் கயிலயங்கிரியை அடைந்தனர். கழற்றறிவாரான சேரமான் பெருமாள் திருக்கயிலாய ஞான உலாவில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...."
"சிவ சிவா ! ஆனாலும் உங்களுக்கு பக்தி முற்றிவிட்டதென்று நினைக்கிறேன். பேசாமல் அரசாங்கப்பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு...."
"....நேராகக் குவளாலபுரத்திற்குச் (23) சென்று அன்னையின் பாதங்களைச் சரணடைந்துவிடுவேன்... அரசர் விட்டால்தானே !"
(23) இன்றைய கோலார். கர்நாடகத்தில் உள்ளது.
"வேடிக்கைப் பேச்செல்லாம் கிடக்கட்டும், யாரைப் பார்ப்பதற்காக இத்தனை தூரம் சென்றுகொண்டிருக்கிறோம் ? என்னதான் நடந்துகொண்டிருக்கிறது நாட்டில் ?"
"அதனை விரைவில் புரிந்துகொள்வீர்கள் மணியனாரே ! வெகு விரைவில் அதனைப் புரிந்து கொள்வீர்கள் ! அதோ வானவன்மாதேவிச் சத்திரம் வந்துவிட்டது. குதிரையை வாயிலில் கட்டிவிட்டு ஸ்நான பானங்களை விரைவில் முடித்துக்கொள்ளுங்கள்... ஏறக்குறைய இரண்டு நாழிகை நேரத்தில் விஹாரைக்குக் கிளம்பச் சொல்லி உத்தரவு !"
"யாருடைய உத்தரவு ?"
"அதனைத் தெரிவிக்கும்படி உத்தரவாகவில்லை !"
பொய்க்கோபத்துடன் முகத்தை சட்டென்று திருப்பிக்கொண்டார் இளையவர்.
***********************************************************************************************
நாகதேசமென்று நாகநாடென்றும் தொல்பழங்காலந்தொட்டு நாகை புகழ்பெற்றிருந்தது. அதன் அழகான துறைமுகத்தில் தூரதூர தேசங்களிலிருந்தெல்லாம் கப்பல்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. கீழ்த்திசை நாடுகளிலிருந்து கிளம்பும் வாணிகக் கப்பல்கள் வாரக்கணக்கில் கடலில் பிரயாணம் செய்து நைந்துபோய் ஒரு வழியாய் நக்காவரத்தை (24) அடையும். அங்கே ஓரிரு நாட்கள் தங்கி சிரம பரிகாரமெல்லாம் முடிந்தபின் மூச்சுப்பிடித்துக்கொண்டு பாய்மரத்தை விரித்துக் கிளம்பினால் ஒரு பகலில் நாகையை அடைந்துவிடலாம்.
(24) இன்றைய அந்தமான் நிக்கோபார் தீவுகள்
"உற்றவர்க் குறுப்பறுத் தெரியின் கணுய்த்தலை யன்ன தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய் நற்றவர்க்கிடமாகின்றது நாகையே..."
என்றும் மொழிக்கேற்ப நற்றவத்தில் சிறந்த பெளத்தர்களின் புண்ணிய பூமியாகப் பன்னெடுங்காலந்தொட்டே அக்கோநகர் அறியப்பட்டது. அசோகச் சக்ரவர்த்தியின் புத்திரர் இந்நகரில் கட்டிய பதர திட்ட விஹாரையே நாகையின் பெளத்தவிகாரைகளுள் மிகப்பழமையானது எனலாம். பண்டைய பர்மிய நூல்களில் இந்நகரே பதரதிட்டா என்றுதான் அறியப்பட்டது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பெளத்தத்தின் சிறந்த ஆச்சாரியர்களுள் ஒருவராகக் கருதப்படும் தருமபால தேரர் இந்தப் புண்ணிய விஹாரையில் தங்கியிருந்து நெட்டிபகரண்ணட்டகதா என்னும் நூலை பாலிமொழியில் எழுதினார்.
பின்வந்த காலகட்டங்களில் பல்வேறு விகாரைகளும் நகரில் எழுந்தன. நாகநன விஹாரை (25) அதில் புகழ் பெற்றது. நாகர் அன்ன விகாரை என்பதே நாகநன விகாரையாக மருவிவிட்டது. இரண்டாம் நரசிம்மவர்மரான இராஜசிம்ம பல்லவர் காலத்தில் சீன வணிக யாத்ரீகர்களுக்காக மற்றுமொரு விஹாரை கட்டப்பட்டது. இது கிட்டத்தட்ட சீனாவில் காணப்படும் பெளத்தக் கோயில்களைப்போல் ஒரு குகை வடிவத்தில் இருந்திருக்கலாமென்பது ஆய்வாளர்களின் யூகம். இதன் இயற்பெயர் மறைந்துபோய் நம் கதை நடக்கும் காலத்தில் சீனர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. பல்லவ அரசரின் அனுமதிபெற்று சீனத்து அரசர் கட்டிய கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. (26)
(25) முதலாம் குலோத்துங்க சோழரின் ஆனைமங்கலச் செப்பேடுகள் இந்த விகாரையைக் குறிப்பிடுகின்றன
(26) நாகைக்கும் சீனத்துக்குமான வணிகத் தொடர்பு பின்னர் பன்னெடுங்காலத்திற்கும் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 14ம் நூற்றாண்டு வரைகூட சீனத்து வணிகர்கள் நாகைக்கு போக்குவரத்து வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது.
பின்னாளில் முதலாம் இராஜராஜசோழர் இந்த நகரில் சைலேந்திர அரசர்களின் வேண்டுகோளுக்கிணங்க "ஸ்ரீ சைலேந்திர சூளா மணிபத்ம விகாரை"(27) என்றொறு புகழ்பெற்ற புத்தத் திருக்கோயிலை எழுப்பினார். அதன் மிகப் பெரிய அளவின் காரணமாக இராஜராஜப் பெரும்பள்ளி என்று பெயர்பெற்றது. அவருடைய மைந்தர் - வீராதி வீரர் இராஜேந்திரர் காலத்தில் "இராஜேந்திரப் பெரும்பள்ளி" என்று மற்றொரு திருக்கோயில் எழுப்பப்பட்டது. அது மட்டுமா ? இராஜராஜர் சூளாமணிபத்ம விகாரைக்கு பள்ளிச்சந்தமாக ஆனை மங்கலம் முதலான கிராமங்களை விட, அந்த நிவந்தங்கள் அவரது காலத்திற்குப் பின் தாமிரப் பட்டயங்களில் பொறிக்கப்பட்டு காலகாலங்களைக் கடந்து "லெயிடன் பட்டயங்கள்" என்னும் பெயரில் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டன.
(27) கிட்டத்தட்ட பதினெட்டாம் நூற்றாண்டுவரைகூட பிழைத்திருந்த இந்த வரலாற்றுப் பொக்கிஷம் கிறிஸ்தவ சபையினரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (அரசாங்கத்தின் அனுமதியுடன் !) இடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வரலாற்றாய்விற்கு ஈடு இணையற்ற பணி புரிந்திருக்கும் ஆங்கில அரசாங்கம் இதனை இடிக்க அனுமதி கொடுத்தது துரதிருஷ்டவசமானதே. இன்று அந்த இடத்தில் புனித ஜோசப் கல்லூரி செயல்பட்டு வருகிறது

இடிக்கப்பட்ட பெளத்தக் கோயிலின் கோபுரம். இதுவே இராஜராஜப் பெரும்பள்ளியாக இருக்கலாம். 17ம் நூற்றாண்டு வரைபடம்
இவ்வாறாக பல்வேறு விதங்களிலும் பெளத்தத்துடன் நெருக்கமான பிணைப்பைப் பெற்றிருக்கும் இந்நகரை பெளத்தப் பெருநகர் (28) என்று நாம் அழைத்ததில் பிழையில்லையே ?
(28) பின்னாளில் நாகை வெள்ளிப்பாளையத்தில் அகழ்வாராய்சிகள் நடைபெற்றபோது முந்நூற்றுக்கும் மேற்பட்ட புத்தர் படிமங்கள் வெளிக்கொணரப்பட்டன
இவ்வாறாகப் பண்டைய காலந்தொட்டுப் புகழ்பெற்றிருந்த நாகை நகரில் கோவேந்தன் பேரங்காடியின் இரைச்சல்களைக் கடந்து கடற்கரையையும் கரிகால் வளவன் பெருவீதியையும் இணைக்கும் சந்திப்பில் அமைந்திருந்த பதர திட்ட விஹாரையை நமது நண்பர்கள் வந்து சேருமுன் அடைகிறோம். அடடா ! இந்த விஹாரைதான் என்ன அழகு ! ஏறக்குறையப் பத்து நூற்றாண்டுகளைக் கண்டுவிட்டாலும் இதன் கம்பீரம் சிறிதும் குறையவில்லையே !
புதுப்பிக்கும் திருப்பணி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருப்பதாக முன்னர் பல்லவராயர் குறிப்பிட்டாரே - அவற்றைக் கண்முன்னர் காண்கிறோம். விகாரையின் ஒரு சில பகுதிகளில் மூங்கில் கழிகளிட்டுப் பிணைக்கப்பட்ட சட்டங்களில் நின்றபடி ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். வெண்சுண்ணத்தை ஒரு சிலர் சுவற்றில் குழைத்துக் குழைத்து ஒருசிலர் தீட்டிக்கொண்டிருந்தனர். வேறு சிலர் செங்கல் திருப்பணிகளில் மும்முரமாக இருந்தனர். அவர்களது வேலைகளை மேற்பார்வை பார்ப்பதற்கும் அதிகாரிகள் பரபரப்புடன் அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்கின்றனர்.
விஹாரைக்கு வெளியே புத்தபகவானின் தரிசனத்துக்காகப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அக்கூட்டத்தை வரிசைப்படுத்தி விஹாரைக்குள் அனுப்பும் பணியை சில இளம் பிக்குகள் ஏற்றிருந்தனர். வெளிநாட்டு யாத்ரீகர்கள் ஒருசிலருடன் அவர்களது மொழியிலேயே தமிழகத்து பிக்குகள் அளவளாவுவதைக் கண்டு பூரித்துப் போகிறோம். பக்தர்களில் பலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து குழுமியிருக்கும் வணிகர்கள் என்பதை அவர்களது தோற்றமே எடுத்துக்காட்டி விடுகிறது. வணிகர்களைத் தவிர காவியுடையுடுத்திய வெளிநாட்டு பிக்குகளின் குழுக்களையும் அந்தக் கூட்டத்தில் கணிசமான அளவில் பார்க்கலாம். அவர்கள் ஒருசிலர் கையில் தாமரை மலர்களையும் நறுமண வத்திகளையும் கூடக் ஏந்தி நிற்கின்றனர்.
நல்லவேளையாக விஹாரையின் வெளிச்சுற்றில் வேலைகள் பரவலாக நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் மத்தியில் அமைந்திருந்த முக்கிய சேதியத்தில் பணிகள் முற்றுப்பெற்றுள்ளன. அதனால்தான் விகாரையின் முக்கிய தெய்வமான - உய்யக்கொண்ட நாயகர் (29) என்ற பெயரால் அழைக்கப்பட்ட - வெண்கல புத்தர் பெருமான் திருவுருவத்தை பக்தர்களால் சிரமமனின்றி தரிசனம் செய்ய முடிகிறது.
(29) நாகை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஒரு புத்தப் படிமத்தில் இப்பெயர் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவருகிறது

நியூயார்க் நகரின் அருங்காட்சியகத்தில் காணப்படும் நாகை பெளத்தப் படிமம். இதன் கீழ்தான் உய்யக்கொண்ட நாயக்கர் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது
இந்த காவியுடை உடுத்திய பக்தர் கூட்டத்தினோடு நாமும் சப்தம் செய்யாமல் நுழைவோம். பத்மாசனத்தில் அரைக் கண்கள் மூடி ஒரு தெய்வீகப் புன்னகையுடன் ஆழ்ந்த தியானத்தில் வீற்றிருக்கும் உய்யக்கொண்ட நாயகரை நாமும் கீழ்த்திசை நாடுகளில் வழிபாட்டு முறைப்படி மண்டியிட்டு தலைகுனிந்து வணங்கிவிட்டு அவசர அவசரமாக சேதியத்தின் வடவாயிலுக்கருகில் அமைந்திருக்கிறதே - அந்த அறைக்குள் சப்தம் செய்யாமல் நுழைவோம்.
அது பதர திட்ட விஹாரையின் தலைமை ஆச்சாரியரான பிட்சு மஹா காசியப தேரரின் அந்தரங்க அறை.
(தொடரும்...)
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|