http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 36

இதழ் 36
[ ஜூன் 16 - ஜூலை 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

நமக்கு நாமே
அபிமுத்தன் திருமடம்
கதை 10 - மதுரகவி
திரும்பிப் பார்க்கிறோம் - 8
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்
எவ்வுள் கிடந்தான்
ஜப்பானில் பொ.செ தீம்பார்க் போல
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2
Links of the Month
சங்கச்சாரல் - 18
இதழ் எண். 36 > ஐராவதி சிறப்புப் பகுதி
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2
ஐராவதம் மகாதேவன்
கல்வெட்டில் திருக்குறள்

எல்லிஸ் துரை திருவள்ளுவர் மீதும் திருக்குறளின் மீதும் கொண்டிருந்த பற்றுக்கு எடுத்துக்காட்டாக இரு அரிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சென்னை நகரில் 1818-ல் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சென்னைக் கலெக்டராக எல்லிஸ் துரை பெரு முயற்சி செய்து நகரில் 27 இடங்களில் குடிநீர் கிணறுகளை தோண்ட ஏற்பாடுகள் செய்தார். அக்கிணறுகளில் ஒன்று இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது. இக்கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்து ஒரு கல்லில் எல்லிஸ் துரை 1818-ம் ஆண்டில் ஒரு நீண்ட கல்வெட்டை வெட்டி வைத்தார். (இக்கல்வெட்டு இப்பொழுது தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது.) அதில்

....சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
ஆழியில் இழைத்த வழகுறு மாமணி
புனகடல் முதலாக புடகலளவு
நெடுநிலந்தாழ நிமிர்ந்திரு சென்னப்
பட்டணத் தெல்லீஸனென்பவன் யானே
பண்டார காரிய பாரஞ்சுமக்கையிற்
புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமை திருவள்ளுவனார்
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய
"இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு"
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து...

என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார். மேலும் எல்லிஸ் துரை அக்காலத்தில் சென்னப்பட்டணத்து பண்டார காரிய பாரம் சுமந்திருந்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அக்காலத்தில் நாணய சாலை பண்டாரத்தின் (treasury) மேற்பார்வையில் செயல்பட்டு வந்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரில் உள்ல எல்லிஸ் துரையின் கல்லறையின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. இதில் "எல்லீஸன் என்னும் இயற்பெயருடையோன்"

'....திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ் செப்பி
யருள் குறணூலுளறப்பாலினுக்குத்
தங்கு பல நூலு தாரண கடலைப் பெய்
திங்கி லீசுதனி லிணங்க மொழிபெயர்த்தோன்....'

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அவருக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் இருந்த மிகுந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றது.

திருவள்ளுவரின் திருமேனியே!


பிரிட்டிஷ் அருங்காட்சியக திருவள்ளுவர் காசுகள் முன்புறம்



பிரிட்டிஷ் அருங்காட்சியக திருவள்ளுவர் காசுகள் பின்புறம்



எனவே எல்லிஸ் துரை 1810-19-ம் ஆண்டுகளில் சென்னைக் கலெக்டராக பணியாற்றி வந்த பொது பண்டார காரியத்தையும் செய்து வந்தார் என்றும் அதே சமயத்தின் திருக்குறளை முற்றிலும் ஓதி உணர்ந்து அதன் அருமை பெருமைகளை அறிந்து அதற்கு ஆங்கிலத்தில் ஓர் உரை எழுதினார் என்றும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரிய வருகின்றது. எல்லிஸ் துரை தமது அரசு பணியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருக்குறளை இயற்றிய திருவள்ளுவப் பெருமானின் திருவுருவத்தைக் கும்பினி அரசின் பெரிய தங்க நாணயமான இரட்டை வராகனின் பதிப்பிக்க ஏற்பாடுகள் செய்தார் என்று நம்ப இடமிருக்கிறது.

சென்னையில் உள்ள ஆவணக் காப்பகத்துள் நான் ஆய்வு செய்த பொது, சென்னை நாணய சாலையில் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயங்களின் மாதிரிகள் பெட்டிகளில் வைக்கப்பட்டு அவற்றுடன் சென்னை அரசு மூலமாகக் கல்கத்தாவிலிருந்த மத்திய அரசுக்கும் லண்டனில் செயல்பட்ட கும்பினி டைரக்டர்களின் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்ட குறிப்புகள் கிடைத்தன. ஆயினும் அக்கடிதங்களுடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியல்களின் நகல்களோ, காசுகளின் வரைபடங்களோ கிடைக்காததால் இவ்வாண்டுகளில் அச்சிட்ட இரட்டை வராகன்களில் இதுவும் ஒன்றா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் இக்காசுகள் லண்டனிலும் கல்கத்தாவிலும் உள்ள அருங்காட்சியகங்களில் மட்டுமே கிடைப்பதால் அவை மேற்கூறியவாறே அந்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

அச்சிடப்படும் இந்தத் தங்க நாணயம் புழக்கத்திற்காக ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்பது கடினமே. ஒருக்கால் இக்காசின் மாதிரிகள் கல்கத்தாவில் இருந்த மத்திய அரசுக்கும், லண்டனில் இருந்த கும்பினி ஆணையத்துக்கும் போய்ச் சேரும் முன்னர், இனிமேல் வராகன்களை அச்சடிப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்; அல்லது திருவள்ளுவப் பெருமானின் அருமை பெருமைகளை உணராது, மத்திய அரசும் கும்பினி நிர்வாகமும் இக்காசை வெளியிடும் திட்டத்தை நிராகரித்திருக்கலாம். மேலும் ஆவணங்கள் கிடைத்தால்தான் இப்பிரச்னைக்குத் தெளிவான விடை கிடைக்கக் கூடும்.

அக்காலத்திய நாணய சாலை ஆவணங்கள் இப்பொழுது மிகவும் சிதிலமாகவும் இன்னும் சீர்படுத்தப்படாமலும் இருப்பதால் அவற்றை முற்றிலும் ஆய்வு செய்ய இயலவில்லை. எனினும் கிடைத்துள்ள எல்லாச் சான்றுகளையும் தொகுத்து ஒருங்கே நோக்கினால் இத்தங்க நாணயத்தின் திருக்குறளுக்கு உரை கண்ட எல்லிஸ் துரையின் செல்வாக்கால் திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. சென்னை ஆவணக் காப்பகத்தில் மேலும் தேடினால் இம்முடிவுகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

திருவள்ளுவரின் திருவுருவ அமைப்பு


மயிலாப்பூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை



திருவள்ளுவரின் தற்கால தோற்றம்.


இக்காசில் காணப்படும் திருவுருவத்தையும் சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சுமார் 14-15-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் இக் கற்சிலையை பற்றி தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் சா.கிருஷ்ணமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார்:

"இச்சிலையின் உருவம் பீடத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. தியான நிலையில் வலக்கை சின் முத்திரையுடன் அக்க மாலை ஏந்தியும், இடக்கை ஓலைச்சுவடி ஏந்தியும், இச்சிலை காணப்படுகிறது. இவ்வுருவத்தின் தலையை முடிந்த கொண்டையும், முகத்தில் நீண்ட தாடியும் உடலில் ஓடும் பட்டையான அங்கியும், இடையில் ஆடையும் அணி செய்கின்றன." இன்று தமிழக அரசின் மூலம் பிரபலமாகி இருக்கும் திருவள்ளுவரின் திருவுருவப் படமும் ஏறத்தாழ இக் கற்சிலையின் அமைப்பை ஒத்துள்ளது எனலாம்.

இக்காசில் கணப்படும் திருவுருவத்திற்கும் மற்ற இரு உருவகங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கண்கூடாகத் தெரிகின்றன. ஆயினும், ஒரு முக்கிய வேறுபாடும் பளிச்சென்று தெரிகிறது. காசில் உள்ள முனிவரின் திருவுருவத்தில் தலை மழித்தும், முகத்தில் தாடி மீசை இன்றியும் குறிப்பிடத்தக்க வேறுபாடாகும்.

திருவள்ளுவர் சமணரா?

இக்காசில் முனிவரின் தலை மீதுள்ள குடையையும், மழித்த தலையையும், முகத்தையும் காணும் போது இவரை உருவகப்படுத்தியவர்கள் இவர் ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. திருக்குறளில் 'ஆதி பகவன்', 'மலர்மிசை ஏகினான்', 'அறவாழி அந்தணன்' போன்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்.

வேண்டுகோள்

வள்ளுவப் பெருந்தகையின் திருவுருவத்தைத் தாங்கி நிற்கும் பொற்காசு ஓர் அரிய கலைப் பொக்கிஷம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும் நான்கு தங்க நாணயங்களில் இரண்டு லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் நமக்கு எட்டாக்கையில் உள்ளன. நம் நாட்டிலேயே கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற இரு காசுகளில் ஒன்றையாவது நிரந்தரக் கடனாகப் பெற்று அக்காசை திருவள்ளுவப் பெருமான் அவதரித்த சென்னை மாநகரின் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கோருகின்றேன்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.