Issue No. 41
இதழ் 41 நவம்பர் 16 - டிசம்பர் 15, 2007
|
தமிழர் திருமணத்தில் தாலி?
இரா.
கலைக்கோவன்
|
|
|
'அன்று அந்த ஊரில் எனக்குத் திருமணம். சுற்றமும் உறவும் கூடியிருந்து நெய் நிறைந்து வெந்த வெண்சோற்றை உண்டு மகிழ்ந்தது. ஒளியுடைய வானம் களங்கமற விளங்க, திங்களை உரோகிணி கூடிய குற்றமற்ற நற்போதில், மணத்திற்கெனக் கூடுதல் அழகு செய்த அந்த இல்லத்தில் இறைவனை வழிபட்டு மணப்பெண்ணை நீராட்டினர் உறவு மகளிர். அப்போது மண முழவு ஒலித்தது. பெரிய முரசும் அந்நன்நிகழ்வை ஊருக்குச் சொல்லுமாறு போல ஒலியலை எழுப்பியது. நீர் புகுந்து எழுந்த இளமகளின் எழில் கண்ட நீராட்டு மகளிர் தங்கள் கண்ணே பட்டுவிடுமோ என்றஞ்சி ஓடி மறைந்தனர்.
மெல்லிய பூவையுடைய வாகையின் இலையை முதிய கன்றொன்று பறித்துண்ட பள்ளத்தில் படர்ந்திருக்கும் அறுகு, மழைக்கால முதல் பெயலுக்கு ஈன்ற நீலமணியை ஒத்த கரிய இதழை உடைய குளிர்ச்சி பொருந்திய அரும்புகளை, வெள்ளிய நூலால் சேரக் கட்டிச் சூட்டித் தூய உடை பெய்து, மேகம் முழங்கினாற் போல ஒலி நிறைந்த திருமணப்பந்தலில் வந்து நின்ற இழையணி சூட்டிய அவள் முகத்தில் வியர்வை அரும்பியது. அந்த வியர்வையை நீக்கிய உறவினர் தலைநாள் இரவில் அவளை என்னிடத்துச் சேர்த்தனர்.
என் உயிருக்கு உடம்பாக வாய்த்த கற்பிற் சிறந்த அவள், உடல் முழுவதும் கசங்காத புத்துடையால் போர்த்தியிருந்ததால் புழுக்கம் காரணமாக வியர்த்திருந்தாள். வியர்வை நீங்குமாறு காற்று உட்புக வாய்ப்பாகச் சற்றே உடைவிலக்கு என்று அன்பும் ஆர்வமுமாய் அவளைப் போர்த்தியிருந்த ஆடையை அகற்றினேன். உறை நீங்கிய வாளாய் அவள் மின்னிளாள். சட்டென்று ஆடை அகற்றப்பட்டதால் உடலை மறைக்கும் வகை அறியாளாய் மலர்களைச் சூடிய தன் பெருங் கூந்தலைக் கொண்டு மறைத்தற்குரிய உடற்பகுதிகளை மறைத்துக்கொண்டு வெட்கம் மலர, நாணியவாறே வேண்டினாள் ஆடையை.'
விற்றூற்று மூதெயினனார் காட்டும் சங்ககால மருத நிலத்துத் திருமணக் காட்சியின் தலைவன் உரை இது. (அகம். 136) தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா, இல்லையா என்பதற்கு இல்லை என்பதே மறுமொழி. ஆனால், இன்னாள் தாலி போல அன்னாளில் இழையணி என்னும் அணிகலன் மணமகளுக்கு மணநாளில் அணிவிக்கப்பட்டிருக்கலாமோ எனக் கருதுமாறு மூதெயினனார் பாடலடிகள் அமைந்துள்ளன. அணிவித்தவர் யார் என்பதற்குப் பாடலில் தடயமில்லை.
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|