Issue No. 41
இதழ் 41 நவம்பர் 16 - டிசம்பர் 15, 2007
|
கண்ணப்பர் கால் வைத்தாரா?
மு.
நளினி
|
|
|
திருமீயச்சூர் திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றிருந்தோம். தூங்கானை மாட விமானம் பெற்ற அக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குச் சொந்தமான பாடல் பெற்ற தலம். அருமையான சிற்பங்கள் பல இங்கு உள்ளன. அவற்றுள் கண்ணப்பரின் சிற்பமும் ஒன்று.
வெறும் சடங்குகள் சார்ந்த ஆகம வழிபாடே உயர்ந்த வழிபாடு என்று கருதிக் கொண்டிருந்த சிவகோசரியாருக்குக் கண்ணப்பரின் இறையன்பையும் பத்திமை எது என்பதையும் உணர்த்துவதற்காக இறைவன் தம் கண்கள் ஒன்றிலிருந்து குருதி பெருகச் செய்தார். இறைவனுக்குப் படைப்பதற்காகக் காதலுடன் வேட்டையாடித் தேர்ந்த இறைச்சி கொணர்ந்த கண்ணப்பர், கடவுளின் கண்ணிலிருந்து குருதி வழியக் கண்டதும் தடுமாறி, நிலைகுலைந்து, பலவும் சிந்தித்துப் புலம்பி, இறுதியில் தம் கண்களில் ஒன்றை அகழ்ந்து, குருதி வழிந்த இறைவன் கண்ணில் பொருத்த, அவ்வளவில் குருதி நின்றது.
அத்துடன் மகிழ்வுறாத இறைவன் தம்முடைய அடுத்த கண்ணில் குருதி பெருகச் செய்தார். கண்ணப்பர் இப்போது திகைக்கவில்லை. தம்மிடம் 'மருந்து' இருப்பதை அறிந்தவராதலால், அடுத்த கண்ணையும் அகழ்ந்து வைக்கக் கருதி, இரண்டாவது கண்ணும் போய்விட்டால் பார்வை இழந்துவிடுவோம் என்பதை அறிந்த நிலையில், அடையாளத்திற்காகக் குருதி வழிந்த இறைவன் கண்ணில் தம் காலொன்றை வைத்தவாறு, கண்ணகழ முயற்சித்தார். அவ்வளவில், சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட கை, 'நில்லு கண்ணப்ப' என்று தடுத்துக் கண்ணப்பரை ஆட்கொண்டதாகச் சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.
முதற் கண்ணை அகழ முற்பட்ட நிலையிலேயே இறைவன் கண்ணப்பரைத் தடுத்தாட்கொள்வது போல் அமைந்த சிற்பங்களைப் பெரியபுராண காலத்திற்கு முற்பட்ட சோழர் கோயில்களில் காணமுடிகிறது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், திருக்கழுக்குன்றம் கீழ்க்கோயில், மேல்பாடி அரிஞ்சிகையீசுவரம் என இக்கோயில்களின் எண்ணிக்கை பலவாகும். திருமீயச்சூரும் அக்கோயில்களின் வரிசையில் சேர்வதை அன்று கண்டோம். இங்குள்ள கண்ணப்பர் சிற்பத்தில் தரையில் கருடாசனத்தில் அமர்ந்தபடி அம்பால் தம் கண்ணொன்றை அகழ்கிறார் கண்ணப்பர். எதிரே உள்ள சிவலிங்கத்தில் கையொன்று வெளிப்பட்ட நிலையில் உள்ளது. முதற் கண்ணை அகழும்போதே தடுத்து நிறுத்தும் சிவபெருமானின் அணுக்கத்தை இச்சிற்பம் வெளிப்படுத்துகிறது.
கண்ணப்பருக்கும் சிவபெருமானுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த அன்பு மருத்துவத்தைத் தம் கற்பனையாற்றலாலும் கவி வல்லமையாலும் பன்மடங்கு மேம்படுத்திக் காட்டக் கருதிய சேக்கிழார், இலக்கிய ஆசிரியர்களுக்கு உலகம் வழங்கியிருக்கும் உரிமையைப் பயன்படுத்தி, இறைவன் இரு கண்களிலும் குருதி வெளிப்படுத்தினாற் போல் நிகழ்ச்சியைப் பெருக்கிக் கண்ணப்பர் சிவலிங்கத்தின் மேல் கால் பொருத்தக் காரணம் உருவாக்கி, அவர் கால வழிபாட்டுச் சூழல்களில் இருந்த வேற்றுமைகளுக்கு முடிவு காண முயன்றுள்ளார் என்பதை மீயச்சூர் சிற்பம் நிறுவுவது காண்க.
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|