இதழ் - 42
|
அலர் எழுந்தது! அவர் பிரிந்தார்!
இரா.
கலைக்கோவன்
|
|
|
1. அலர் எழுந்தது! அவர் பிரிந்தார்!
மிகமிக இரகசியமாகச் சந்தித்தே காதல் வளர்த்தோம். 'பேய் தான் கண்ட கனவைக் கூறாது' என்பார்களே, அது போல, மாண்பமைந்த நுட்பமான எங்கள் காதலையும் மறை பொருளாகவே காத்து வந்தோம். யாரும் அறிந்திருக்கவில்லை என்ற எங்கள் நம்பிக்கையில் இடிவிழுந்தது!
வெற்றி பொருந்திய வேலையும் வீரம் மிக்க படையையும் உடைய பொறையன் பசிய பொன்னாலான அணிகலன்களை அணிந்த மார்பினன். தெய்வம் விரும்பி உறையும் பரந்துபட்ட கொல்லிமலை அவன் ஆட்சிக்குட்பட்ட இடம். அலையும் மேகங்களும் அந்த மலையை விரும்பி மகிழ்வுடன் உரசிப் பொழிவித்த மழை கொல்லியின் உச்சியில் இருந்து அருவியாய்க் கொட்டுகிறது! அந்த நீர்வீழ்ச்சியில்தான் எத்தனை பேரொலி!
நெஞ்சமே! அந்த ஒலியினும் பெரிதாய் ஊர்ப் பேசியது, 'நானும் அவரும் காதலிக்கிறோம்!' என்று. அலராய் எழுந்த அந்தப் பேச்சைத் தொடர்ந்தே அவர் பிரிந்தார். - அகம் 303.
2. குருவிகள் போல் வருவாரோ!
பறம்புமலைக்குரிய பாரி உரைத்தற்கரிய பெரும்புகழ் வேந்தர். பொருளில் வறுமையும் அறிவில் வளமையும் மிக்க அறிஞர்கள் வரின், அப்பெருந்தகை, அவர்களைப் போற்றி மலை போன்ற யானைகளையும் நல்ல அணிகலன்களையும் வழங்கி மகிழ்வார்.
அவர் மலையில் வாழும் குருவிகள் வரிசையாகப் பறக்கும் இயல்பின. காலையில் பறம்பு நீங்கிப் பறக்கும் அவை, வளைந்த புறத்தினை உடைய சிவந்த நெற்கதிர்கள் சாய்ந்திருக்கும் இடங்களை வயல்வெளிகளில் தேடித் தெரிந்து அவற்றைச் சேமிக்கும். துன்பம் தரும் மாலை தொடங்கும் நேரம், நாளெல்லாம் சேமித்த நெற்கதிர்களுடன் அந்தக் குருவிகள் பறம்பிற்கு மீளும்.
மட நெஞ்சமே, காலையில் நீங்கி மாலையில் மீளும் அந்தக் குருவிகளைப் போலவே நம்மைப் பிரிந்த காதலரும் வந்திடுவார் என்று நினைத்து மகிழ்கிறாயே, இது என்ன பேதைமை! -அகம் 303.
3. சுரம் கடப்பேன் என்ற சுந்தரி!
யாரும் அறியாமல் தான் வைத்திருந்தோம். எப்படியோ வெளிப்பட்டுவிட்டது! 'எங்கள் காதல்' ஊர்ப் பேச்சானது. வெட்கிய அவரோ விரைந்து பிரிந்தார். காலை பறந்து மாலை திரும்பும் பறம்புக் குருவிகளாய், போனவர் வந்திடுவார் என்று எதிர்பார்த்த நெஞ்சமும் ஏமாந்தது. இனியும் பொறுத்தல் இயலாது!
அவர் கடந்து சென்ற வழியில் வற்றல் மரங்கள் மிகுதி. அம்மரங்களில் உறையும் சிள்வண்டுகள், கூட்டமாய்ச் செல்லும் உப்பு வணிகர்தம் எருதுகளின் கழுத்து மணிகள் ஒலிப்பதைப் போல் பேரொலி செய்வன. நீர் வற்றிப் போகும்போது அந்நீர்நிலை மீன்கள் உயிரைக் காத்துக் கொள்ளப் பக்கத்து நீர்நிலைக்குப் பாய்வது போல அவரைத் தேடி நானும் அந்தப் பாலைநிலத்தைக் கடக்கத்தான் வேண்டும்! - அகம் 303.
பாடல்
303. தலைவி கூற்று
திணை : பாலை
இயற்றியவர் : ஔவையார்
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, பேஎய் கண்ட கனவின், பல் மாண் நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை மா இருங் கொல்லி உச்சித் தாஅய், ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் புலம் கந்தாக இரவலர் செலினே, வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! ஐயம் தெளியரோ, நீயே; பல உடன் வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|
|