http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 45

இதழ் 45
[ மார்ச் 16 - ஏப்ரல் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

குறத்தியறை
திரும்பிப் பார்க்கிறோம் - 17
அப்பர் என்னும் அரியமனிதர் - 2
இராஜராஜனின் வாசுதேவனே நம:
கழனி சூழ் பழனம் பதி
Alathurthali in Malayadipatti
1000 ரூபாய்த் திட்டம்
நினைத்தது நடந்தது
இதழ் எண். 45 > இதரவை
1000 ரூபாய்த் திட்டம்
ச. கமலக்கண்ணன்
நண்பர்களுக்கு வணக்கம்.

1000 ரூபாய்த் திட்டத்தில் ஆர்வம் கொண்டு அதைப்பற்றித் தெரிந்துகொள்ள விழைந்தமைக்கு நன்றி. ஏற்கனவே சில தலையங்கங்களில் இதுபற்றிச் சுட்டியிருந்தாலும், முழுமையாக விளக்க வேண்டும் என்று கருதி இங்கு தொகுத்துத் தருகிறோம். இதுவரை இதைப்பற்றிக் கேள்விப்பட்டிராமல், முதல்முறையாக அறியும் நண்பர்களுக்கு இதன் பின்னணியையும் இதுவரை நடந்தவற்றையும் கூறவேண்டியது அவசியமாகிறது. இது சீட்டுக் கம்பெனிகள் போல் எங்கள் திட்டத்திற்கு ஆள்பிடிக்கும் முயற்சியல்ல. ஒத்த விருப்புடையவர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் எதுவும் சாத்தியமே என்பதை உணர்த்தும் ஒரு எடுத்துக்காட்டே. வரலாற்றாய்வுக்கு உதவ விரும்பும் நண்பர்களுக்கு வழிகாட்டும் ஒரு செயல்முறை விளக்கமே.

'மனிதன் ஒரு சமுதாய விலங்கு' என்ற கூற்று நம் வாழ்வில் இடம்பெறும் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் நிரூபணமாவதைக் காண்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியிலும் வாழ்விலும் ஒவ்வொரு கணத்திலும் சமுதாயம் என்ற சுற்றுச்சூழல் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. தனிமனிதன் இதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறான். அவ்வாறு ஏற்றுக்கொண்ட தாக்கங்களை நல்வழியில் திருப்பி, அதன்மூலம் பயன்பெறுவது அத்தனிமனிதனின் திறமை. தன்னுடைய முயற்சி ஏதுமின்றி நல்லவிதமாகப் பலனளிக்கும்போது இறைவன் அருளால் நிகழ்ந்தது என்று கொண்டாடும் மனிதமனம், எதிர்மறையாகப் பலனளிக்கும்போது, சமுதாயத்தை நோக்கித் தனது சுட்டுவிரலை நீட்டுகிறது. ஆனால், அப்படி ஒருவிரலை முன்னோக்கி நீட்டும்போது மற்ற மூன்று விரல்கள் தன்னை நோக்கியிருப்பதை உணர்வதில்லை. இத்தகைய எதிர்விளைவுக்கு இச்சமுதாயத்தின் அங்கமான தானும் ஒரு காரணம் என்ற உண்மையை உணரத் தலைப்படுவதில்லை. இதை உணரும் ஒருசிலரே 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று பக்குவமடைகிறார்கள்.

இதனால் பயனடையும் சிலர், இத்தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்பி, கோயில்களிலும் பூஜைகளிலும் செலவழிக்கிறார்கள். இதைத் தவறென்று சொல்வதற்கில்லை. மனத்திருப்தி மட்டுமல்லாது, கலைகள் வளர மறைமுகமான உதவியாகவும் சிலசமயம் இது அமைந்து விடுகிறது. இதைவிட, இத்தாக்கத்தை ஏற்படுத்த நேரடிக் காரணியாக இருந்த சமுதாயத்திற்கு நன்றியையும் அது மேம்படத் தன்னாலான பங்களிப்பையும் ஒவ்வொரு மனிதனும் செய்தாலே அது மறைமுகமாக இறைவனுக்குச் செய்யும் தொண்டேயாகும். 'சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டு சிவபெருமானுக்கே செய்தது போலாகும்' என்று பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுவதும் இதைத்தான். சமுதாயம் என்பது தனியாக இல்லை. நீங்களும் நாங்களும் சேர்ந்ததுதான் அது. உயிருள்ள மனிதர்கள் மட்டுமின்றி, கலைகள், வாழ்வியல் நெறிகள், அன்பு, உதவி போன்ற கண்ணுக்குத் தெரிகின்ற, தெரியாத பல பொருட்களையும் உள்ளடக்கியது. நாம் அன்றாட வாழ்வில் சமுதாயத்திலிருந்து சில வசதிகளை, உதவிகளைப் பெறும்போது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டியதும் நம் கடமையன்றோ?

இதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளை உள்ளடக்கிய சமுதாயத்துக்கு நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உதவமுடியும். இதில் ஒரு கூறுதான் வரலாறு என்பது. தான் வாழும் சமுதாயத்தின் உடல் நலனில் அக்கறை கொண்டவர்கள் இரத்ததானம் மற்றும் உடலுறுப்புகள் தானம் செய்கிறார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் கோயில்களில் அன்னதானம், திருப்பணிகள் போன்றவற்றைச் செய்கிறார்கள். அறிவுச் செல்வம் பெருகவேண்டும் என்பவர்கள் கல்விச்சாலைகளை நிறுவுதல், எழுத்தறிவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இளமையில் வறுமை மிகக்கொடியது என்று உணர்ந்தவர்கள் சிறுவர் இல்லங்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள். கலைகள் வளரவேண்டும் என்று விரும்புவோர் கலைஞர்களை ஊக்குவித்தும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும் உதவுகிறார்கள். அதேபோல், வரலாற்றில் ஆர்வம் மிக்கவர்கள் வரலாற்றாய்வுகளை மேற்கொண்டு அல்லது மேற்கொள்ள உதவிசெய்து, அடுத்த தலைமுறைக்குச் சிதையாமல் பாதுகாத்து வழங்க வேண்டியது அவர்களின் கடமையல்லவா?

வரலாறு என்பது ஏதோ நேற்றோடு முடிந்துவிட்ட ஒரு விஷயமல்ல. நாளைய வாழ்வுக்கு உதவும் நேற்றைய அனுபவமே வரலாறு. ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்வதற்கு அனுபவம் என்பது எத்தகைய அத்தியாவசியமான ஒன்று என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஏன் இந்த அனுபவத்திற்கு இத்தனை முக்கியத்துவம்? நேற்றுச் செய்த ஒரு செயலை மீண்டும் நாளை செய்யும்போது நேற்றுச் செய்ததைவிட மேம்படச் செய்யமுடிவதால்தானே? நேற்றுச் செய்த செய்முறையையும் பின்விளைவுகளையும் கடந்த காலம் என்றெண்ணிப் புறந்தள்ளியிருந்தால் அந்த மேம்பாடு சாத்தியமாகியிருக்குமா? ஒரு தனிமனிதனின் நேற்றைய வாழ்வியல் நிகழ்வுகள் அனுபவங்களாகின்றன என்றால், ஒரு சமூகத்தின் நேற்றைய வாழ்வு வரலாறாகிறது. எனவே, வரலாற்றை உருவாக்குவதும் பாதுகாப்பதும் ஒவ்வொரு மனிதனின் கடமை. இதைப் பாதுகாக்கப் பல வழிகள் இருக்கின்றன.

உடலுழைப்பாலும் பொருளாலும் உதவுவது பெரும்பாலும் ஆர்வமுடைய எல்லோராலும் முடியக்கூடியது. ஆனால், இன்றைய உலகில் பொருளை ஈட்டப் பெரும் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதால் உடலுழைப்பை நல்குவது என்பது பெரும்பாலானோர்க்கு முடியாததாக இருக்கிறது. ஆனால், உழைப்பைத்தர முன்வரும் பொருள்வசதி குறைந்தோர்க்குப் பொருளுதவி செய்வதன்மூலம் இந்த இயலாமையை ஈடுகட்டலாம். வரலாற்றைச் செழிக்கவைக்கும் விருப்புடைய பல்வேறு தரப்பினர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இரண்டுபேர். உழைப்பைச் செலவிட்டு நேரடியாகக் கள ஆய்வு மேற்கொள்ளும் வரலாற்று ஆய்வாளர்கள் முதல் தரப்பினர். ஆர்வமிருந்தும் நேரம் கிடைக்காத, பொருளுதவி செய்யத் தயாராக இருக்கும் ஆர்வலர்கள் இரண்டாம் வகையினர். வரலாற்று ஆய்வாளர்களில் சிலர் வசதியான பின்புலத்துடன் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் ஆய்வுகளுக்கும் ஆய்வுகள் நூல்வடிவம் காண்பதற்கும் தடையாக இருப்பது பொருளாதாரமே. இந்த இரு பிரிவினரையும் இணைக்கும் நோக்கத்தில் எழுந்த சிந்தனைதான் இந்த 1000 ரூபாய்த் திட்டம்.

ஓர் ஆய்வாளர் ஒரு கோயிலை ஆய்வு செய்யப் போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு, உணவு, புகைப்படம் எடுத்தல், அக்கோயில் தொடர்பான நூல்களை வாங்குதல், பிற ஆய்வாளர்களுடன் கலந்துரையாடத் தொலைபேசிச் செலவு, கருத்தரங்குகளுக்குக் கட்டுரைகள் அனுப்பத் தபால் செலவு என ஒரு நாளைக்குச் சராசரியாக 1000 முதல் 2000 ரூபாய் வரையும், ஒரு தலைப்புக்குச் சுமார் 20000 முதல் 30000 ரூபாய் வரையும் செலவாகிறது. ஆய்வில் சேகரித்த தரவுகளைக் கட்டுரைகளாக்கப் பெருமளவிலான நேரத்தைச் செலவிட நேர்கிறது. கட்டுரைகள் நூலாக்கம் பெற அச்சகச் செலவிற்குச் சுமார் 35000 முதல் 40000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, சுமார் 10000 ரூபாய் மாத ஊதியம் பெறும் ஓர் ஆய்வாளரால் குடும்பச் செலவுகள் மற்றும் வருங்காலத்திற்கான சேமிப்பு போக இத்தகைய பெருந்தொகையைச் சேமிக்க ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகலாம். இப்படித் தன் வாழ்நாளில் மூன்று அல்லது நான்கு நூல்களை வெளியிட்டால் மிகப்பெரிய சாதனை. சில சமயங்களில் வேண்டுமானால் தெரிந்தவர்களிடம் வாகனங்களைக் கடன்வாங்கியோ, உறவினர் இல்லத்தில் உணவருந்தியோ, நண்பர்கள் வீட்டில் தங்கியோ, ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால், எல்லா நேரங்களிலும் இது சாத்தியமில்லை. இத்தகைய செலவுகளுக்கு அஞ்சி, விரைவான ஓரிரு பயணங்களினால் முழுமையுறாத, பிழையான தகவல்களுடனும், நூலாக்கச் செலவுகளைக் குறைப்பதற்காகத் தெளிவில்லாத புகைப்படங்களுடனும் மலிவான தரத்திலும் பதிப்பித்து வெளியிடும் அவலமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வரலாற்றை நேசிப்பவர்கள் இத்தகைய நூல்களைப் பார்த்து இரத்தக்கண்ணீர் வடிக்கும் கொடுமையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்பிரச்சினைகளுக்கு எங்களால் யோசிக்க முடிந்த தீர்வுதான், புலவர்களுக்கும் புரவலர்களுக்கும் இடையே பாலம் அமைக்கும் இந்த 1000 ரூபாய்த் திட்டம்.

கடந்த ஜூன் 2004 வாக்கில், முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களுடனான ஒரு பயணத்தின்போது, தமிழக வரலாற்றைப் பற்றி இதுவரை வெளிவந்த நூல்களைப் பற்றிய பேச்சு வந்தது. அவர் கூறிய பதில் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒவ்வொருமுறை கலைஞர் முதலமைச்சராகும்போதும் மு.வரதராசனார், கே.கே.பிள்ளை போன்ற அறிஞர்களைத் தலைவராகக்கொண்டு தமிழக வரலாற்று வல்லுநர்குழு அமைத்துத் தமிழக வரலாற்றைத் தொகுக்கும் பணியைத் தமிழக அரசு மேற்கொள்கிறது. ஆனாலும் இப்பணி முழுமையடையவே இல்லை. புதிய கண்டுபிடிப்புகள் சேர்க்கப்படுவதில்லை. இவ்வளவு ஏன்? தமிழகத்தின் அனைத்து ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தும், தேவைக்குமேல் தரவுகள் குவிந்திருந்தும், தஞ்சைப் பெரியகோயிலின் முழுமையான வரலாறு இன்னும் தொகுக்கப்படவேயில்லை. இந்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத்துறை (ASI - Archaeological Survey of India), தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை (Tamilnadu State Archaeology Department), தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தனியார் அமைப்புகளான தமிழ்நாடு தொல்லியல் கழகம், டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் முதலான அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் இருந்தும் ஏன் இத்தகைய நிலை என்று கேட்டபோதுதான், மேற்சொன்ன செலவுகளைப் பற்றிய தகவல்கள் தெரியவந்தன.

இன்று தமிழக வரலாற்றை ஆய்வுசெய்யும் அறிஞர்களைவிட, ஆய்வுக்குப் பொருளுதவி நல்கவிரும்பும் நல்ல உள்ளங்களே அதிகளவில் தேவைப்படுவதை உணர்ந்தோம். வரலாற்றாய்வாளர்களுக்கு மேற்கண்ட செலவுகளில் ஏதாவது ஒன்றைக் குறைக்க உதவி செய்தாலும் மிக்க பயன் தரக்கூடியதே. ஃபோர்டு, இன்ஃபோசிஸ் போன்ற சமூக ஆர்வம் கொண்ட பெரும் நிறுவனங்கள் புகழ்பெற்ற ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்ய முன்வந்தாலும், அனைத்து ஆய்வாளர்களுக்கும் இது வாய்ப்பதில்லை. திரு.வெள்ளையாம்பட்டு சுந்தரத்தின் சேகர் பதிப்பகம் போன்ற சில பதிப்பகத்தார் வரலாற்றாய்வு நூல்களுக்கு முன்னுரிமை தந்து பதிப்பிக்கும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் கதை, கவிதை போன்று பரவலான வாசகர் வட்டத்தைப் பெறாத துறைகளில் அவ்வளவாகக் கவனம் செலுத்துவதில்லை. அவரவர் வயிற்றுப் பிழைப்பு அவரவர்க்கு. அப்படியே வெளியிட்டாலும், அரசு நூலகங்களுக்கு அந்நூல்கள் எடுத்துக்கொள்ளப்படாவிடில், ஆய்வாளர்களுக்குப் பணம் தருவதில்லை.

இக்குறையைப்போக்க என்ன வழி என்று ஆலோசித்தபோதுதான், 'நீங்கள் ஐந்துபேர் மாதம் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் சேமித்து வந்தால், ஆறேழு மாதங்களில் ஒரு புத்தகம் வெளியிட முடியும்' என்ற வழியைக் காட்டினார் முனைவர் இரா.கலைக்கோவன். நாங்கள் ஐவரும் (கமலக்கண்ணன், இராமச்சந்திரன், இலாவண்யா, கோகுல் மற்றும் சுந்தர் பரத்வாஜ்) சேர்ந்து முதல் வெளியீடாக முனைவர்கள் மு.நளினி மற்றும் இரா.கலைக்கோவன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்ட 'பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலை ஜனவரி 2005ல் வரலாறு.காம் அரையாண்டு நிறைவுச் சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கூ.இரா.சீனிவாசன் அறக்கட்டளைப் பொழிவு நிகழ்வுகளுடன் சேர்த்துத் தஞ்சைப் பெரியகோயில் வளாகத்தில் வெளியிட்டு, முப்பெரும்விழாவாகக் கொண்டாடினோம். அன்று எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவை வார்த்தைகளில் வடிப்பது கடினம். ஊர்கூடித் தேர் இழுக்கும் முயற்சியில், தேரை நிலையிலிருந்து வெளிக்கொணர்ந்து இயங்க வைத்துவிட்டோம் என்று உளம் பூரித்தோம். இது தொடரவேண்டுமே என்று இராஜராஜீசுவரத்துப் பெருவுடையாரை வேண்டிக்கொண்டோம்.

இது அடுத்தடுத்த ஆண்டுகளில் 'கோயில்களை நோக்கி', 'வரலாறு ஆய்விதழ் - 17', 'மதுரை மாவட்டக் குடைவரைகள்' என்று வளர்ந்தபோது, நட்டவிதை மரமாகிப் பயன்தருவதைக் கண்டு பெரிதுவக்க முடிந்தது. நூல் பதிப்பிற்கு மட்டுமின்றி, திருவலஞ்சுழி ஆய்வுப் பயணங்களுக்கும் பொருளுதவி வழங்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. வலஞ்சுழி ஆய்வில் நாங்கள் பங்குகொள்ளும்போது பயணச்செலவுகளை நாங்களும், பங்குபெறாத சமயங்களில் திரு.சுந்தர் பரத்வாஜும் ஏற்றுக்கொண்டதை நூலாசிரியர்கள் மறவாமல் பதிவு செய்துள்ளார்கள். இவை மட்டுமின்றி, மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் ஆய்வுப் பணிகளும் கட்டுரையாக்கமும் எளிதாகும் வகையில், எங்கள் நண்பர் யக்ஞநாராயணனுடன் சேர்ந்து மையத்தின் கணிணியை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தினாலேயே சாத்தியமாயிற்று. நாங்கள் செய்தனவற்றைப் பெருமையாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக இவற்றைப் பட்டியலிடவில்லை. பெருமைக்குரிய செய்கைகள்தானென்றாலும், சிறுதுளி எப்படிப் பெருவெள்ளமாக முடியும் என்பதை விளக்கவே கூறினோம்.

சாதாரணமான எங்களாலேயே இவை சாத்தியமாகும்போது, வாசகர்களில் நிச்சயம் எங்களைவிட வசதியானவர்கள் இருப்பார்கள். இன்றைய கணிணி யுகத்தில், குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாயைத் தங்கள் ஊதியத்திலிருந்து ஒதுக்கக்கூடிய வசதி படைத்தவர்கள் வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்க வாய்ப்புண்டு. திட்டத்தின் பெயர்தான் ஆயிரம் ரூபாய்த் திட்டமேயொழிய, ஐநூறு, இருநூறு, நூறு ரூபாய்த் திட்டங்களும் சாத்தியமே. ஏன், இரண்டாயிரம், ஐயாயிரம் ரூபாய்த் திட்டங்களைக்கூட வசதியுள்ளவர்கள் துவக்கலாம். எங்கள் வசதிக்கு ஆயிரம் ரூபாய் என்று தீர்மானித்துக் கொண்டோம். நாங்கள் நடத்தும் திட்டத்தில்தான் சேரவேண்டும் என்பதில்லை. ஒத்த விருப்பமுடைய நண்பர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து இச்சேமிப்பை ஆரம்பிக்கலாம். இதுவரை எங்களை நேரில் சந்திக்காத அல்லது எவ்வகையிலும் தொடர்பு கொள்ளாத நண்பர்கள் எங்கள் திட்டத்தில் சேர்வதாக இருந்தால், அவர்களுக்கு எங்களை எந்த அளவுக்கு நம்பமுடியும் என்ற சந்தேகம் ஏற்படுவது இயற்கையே. ஆனால், இச்சந்தேகத்தினால் நண்பர்களின் ஆர்வம் குன்றிவிடக்கூடாது என்பதால்தான், அவரவர் குழுக்களாகச் சேர்ந்து நடத்தலாம் என்ற மாற்றுவழியையும் பரிந்துரைக்கிறோம். இதுவரை இத்திட்டத்தை நாங்கள் நடத்தியதன்மூலம் பெற்ற அனுபவத்தை நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் வழிமுறைகளைக் கீழே தருகிறோம்.

1. திட்டத்தின் குறிக்கோள்.

எந்தவொரு திட்டத்திற்கும் ஒரு குறிக்கோள் அவசியம் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். இத்திட்டத்திற்கு, எந்த ஆய்வாளருக்கு உதவப் போகிறோம் மற்றும் எந்த வகையில் உதவப்போகிறோம் என்ற கேள்விகளுக்கு விடை காண்பதன் மூலம் குறிக்கோளை நிர்ணயிக்கலாம். எந்த ஆய்வாளருக்கு உதவி தேவை என்பதை எவ்வாறு கண்டறிவது? வரலாற்று நூல்களை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்குச் சில ஆய்வாளர்கள் அறிமுகமாகியிருப்பார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் அணுகுமுறை கவர்ந்திருக்கும். அப்படிப்பட்டவரை நேரடியாகத் தொடர்புகொண்டு, எந்த மாதிரியான உதவி அவருக்குத் தேவைப்படும் என்று கேட்டறியலாம்.

2. திட்ட உறுப்பினர்கள்

மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் ஒத்த பதிலைக் கொண்டவர்கள் மற்றும் நண்பர்களில் ஒருவர் முன்மொழியும் பதிலை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் இதில் சேரலாம். சில நேரங்களில், நண்பர், நண்பருக்கு நண்பர், அவருக்கு நண்பர் என்று சங்கிலித்தொடர் போல் அமைந்து விடுவதும் உண்டு. இப்படித்தான் இலாவண்யாவின் நண்பரான திரு. சாந்தகுமார் அவர்கள் எங்கள் குழுவில் இணைந்தார். திட்டம் ஆரம்பிக்கப்பட்டபிறகு, புதிதாக இணையும் உறுப்பினர்களுக்குத் திட்டத்தின் குறிக்கோளையும் ஆய்வாளர் தொடர்பான விவரங்களையும் விளக்குதல் நலம்.

3. குழுத்தலைவர்

இத்தகைய தன்னார்வலர் குழுவுக்கு யார் தலைமை தாங்குவது என்பது மிகப்பெரிய சிக்கல். ஆனால், கண்டிப்பாக ஒருவர் தலைமை தாங்கித்தான் தீரவேண்டும் என்பதில்லை. எங்கள் குழுவை எடுத்துக்கொண்டால், தலைவர் என்று யாருமில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியை எடுத்துக்கொண்டு செய்கிறோம். நிதி நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர் அல்லது குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் அல்லது ஆய்வாளருடன் நெருங்கிய தொடர்புள்ளவர் என்ற காரணிகளைக்கொண்டு இவரைத் தேர்ந்தெடுக்கலாம்.

4. திட்ட மதிப்பு

இது ஆய்வாளருக்குத் தேவைப்படும் உதவியின் அளவையும் உறுப்பினர்களின் வசதியையும் பொறுத்தது. அனைத்து உறுப்பினர்களும் ஒரே தொகையை மாதந்தோறும் சேமிப்பது நல்லது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறுக்கிடாத நட்பு வளையத்தில் இருப்பவர்கள் என்றால், அவரவர் வசதிப்படி சேமிக்கலாம்.

5. திட்டத்தின் காலம்

இதுவும் ஆய்வாளருக்குத் தேவைப்படும் உதவியின் அளவைப் பொறுத்தது. பயணச்செலவுகளுக்கு என்றால், குறுகிய காலத்திட்டமாகவும், நூல் பதிப்பித்தல் என்றால் நீண்டகாலத் திட்டமாகவும் இருக்கலாம். நாங்கள் தொடர்ந்து சேமித்து வைத்துக்கொண்டு, முனைவர் கலைக்கோவன் அவர்களின் ஆய்வுகளுக்குத் தேவைப்படும்போது உதவலாம் என்று தீர்மானித்துக் கொண்டுள்ளோம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆய்வாளர் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் பட்சத்தில், இதுபோலவும் செய்யலாம்.

6. இணைதலும் விலகுதலும்

உறுப்பினர்கள் திட்டத்தில் தொடரமுடியாத சூழ்நிலையில், திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளவும் பொருளாதார நிலைமை சீரானபின் மீண்டும் இணைந்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கவேண்டும். எல்லோரும் தன்னார்வலர்கள் என்பதால், கண்டிப்பாகப் பணம் கொடுத்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது. ஆரம்ப எண்ணிக்கை நடுவில் குறைந்தாலும், தளர்ச்சியடையாமல் தொடர்ந்து நடத்தினால், மேலும் நண்பர்கள் சேர வாய்ப்புண்டு. திட்டத்தில் சேர்வதற்கும் விலகுவதற்கும் ஒரு குறிப்பிட்ட மாதத்தைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்வது நல்லது. நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்வதையும் மே மாதத்தில் விலகுவதையும் விதியாக வைத்திருக்கிறோம்.

இங்கே குறிப்பிடப்பட்டவையெல்லாம் எங்கள் அனுபவத்தால் தெரிந்துகொண்டவை. குழு உறுப்பினர்களுக்குள் இருக்கும் நட்புறவைப் பொறுத்து இதில் மாற்றமோ, தளர்ச்சியோ, சேர்க்கையோ செய்யலாம். அது அந்தந்தக் குழுவைப் பொறுத்தது. நாம் உதவ விரும்பும் சில சமயங்களில் அந்த ஆய்வாளருக்கு நம் உதவி தேவைப்படாமல் போகலாம். அப்போது, குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசித்து வேறொரு ஆய்வாளரைத் தேர்ந்தெடுக்கலாம். பட்ட காலிலேயே படும் என்பது தீமைகளுக்கு மட்டுமின்றி, இதுபோன்ற ஆக்கபூர்வமான செயல்களுக்கும் பொருந்தும். நல்லெண்ணத்துடன் ஒருவர் இதை ஆரம்பித்தாலும், நாளடைவில் ஒத்த விருப்புடைய நண்பர்கள் இதில் இணைவார்கள். அதுவும், இணையம் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய உளப்பாங்குடைய நண்பர்களைக் கண்டறிதல் மிக எளிது. மடலாடற்குழுக்களும் (Yahoo and Google Groups) வலைப்பதிவுகளும் (Weblogs) இன்றைய தலைமுறைக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம். திறந்த மனதுடன் கூடிய கருத்துப் பரிமாற்றமே நல்ல நண்பர்களைக் கொண்டுசேர்க்கும்.

ஒன்று படுவோம்!
உழைக்கும் மக்களுக்கு உதவுவோம்!!
வரலாற்றை வாழவைப்போம்!!!

நன்றி
கமல்
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.