Issue No. 50
இதழ் 50 ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008
|
சிறைப்பட்டது ஒரு சிட்டுக்குருவி
இரா.
கலைக்கோவன்
|
|
|
'அவரைச் சந்தித்தது அப்போதுதான்! கடலுக்குச் சென்று தந்தை கொணர்ந்து இட்ட மீன்களைக் கடற்கரை மணல் மேட்டில் காயவைத்து வற்றலாக்கிக் கொண்டிருந்த அந்த நாளில்தான்! மீன்களைக் கொத்தவந்த பறவைகளை ஓட்டியவாறே புன்னையின் இனிய நிழலில் நாம் தங்கியிருந்தோமே, அந்த நேரத்தில்தான்! பார்வைகள் கலந்து உள்ளங்கள் ஒன்றியதும் அவரோடு சேர்ந்து நிகழ்த்திய விளையாட்டுகள்தான் எத்தனை எத்தனை!
கடற்கரையில் சுழித்திறங்கும் நண்டுகளின் வளைகளைக் கலைப்பதில் ஈடுபட்டோம்! புலிநகக் கொன்றை மரத்தில் தாழைக் கயிற்றால் செய்த ஊசலைக் கட்டி ஒருவர் தள்ள, ஒருவர் அமர்ந்து மாறிமாறிச் சுகம் கண்டோம்! கீழ்க்காற்று கொணர்ந்து குவித்த மணலில் கைசேர்த்துக் குரவையிட்டோம்! அந்தத் தழுவல் அலுத்தபோது வெள்ளிய நுரையை வீசி, 'வா! வா' என்றழைக்கும் கடல் அலைகளில் ஆயம் சூழ நீந்திக் களித்தோம். அழகிய பல பூக்களைப் பறித்துத் தழையுடன் மிடைந்து ஆடைகளாக்கி விருப்பம் போல் உடுத்தி மகிழ்ந்தோம். கடற்சோலைகள் கதைகதையாகப் பேசுமாறு அங்குத் தங்கியிருந்தோம்.
இருவர் மகிழ்வு ஊருக்குப் பிடிக்குமா? வம்பு பேசுவதையே தொழிலாகக் கொண்டுள்ள இந்த ஊர்ப் பெண்கள்தான், 'சும்மா' இருப்பார்களா? ஊர்ப் பேச்சு என் வீட்டுக் கதவையும் தட்டியது. அம்மாவின் செவிகளில் செய்தி விழுந்தது. பாகனால் தேர்ந்தெடுக்கப்பட் ட அழகிய குதிரை பூட்டப்பட்ட தேரொன்று நிலாப் போல் பரவிக் கிடக்கும் கடற்கரை மணலில் பகல் இரவு பாராமல் சுற்றி வருகிறது எனும் அந்தக் கொடிய செய்தி கேட்டவுடன் என் தாய், கெட்டிக்காரி, புரிந்துகொண்டாள், அனுபவம் இருக்கும் இல்லையா! சிறைப்படுத்தினாள் இந்தச் சிட்டுக்குருவியை! இனி, எப்போது, எப்படி அந்த சுகங்கள்?'
சங்கக் காதலர்களின் விளையாட்டு வரலாறு பேசும் இந்தப் பாடல் உலோச்சனாருக்குச் சொந்தமானது.
அகம் 20.
தோழி கூற்று
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது.
திணை : நெய்தல் ஆசிரியர் : உலோச்சனார்
பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, கொண்டல் இடு மணல் குரவை முனையின் வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் பல் பூங் கானல் அல்கினம் வருதல் கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை, எல்லையும் இரவும் என்னாது, கல்லென வலவன் ஆய்ந்த வண் பரி நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|