Issue No. 50
இதழ் 50 ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008
|
மரண தண்டனை
மு.
நளினி
|
|
|
திருக்கோயில்களில் வரலாற்றைப் பதிவு செய்வது சிற்பிகள் காலம் காலமாகக் கடைப்பிடித்துவரும் பழக்கம். ஜூலை 2008ல் நாங்கள் கள ஆய்வு மேற்கொண்ட திருக்கோயில் ஒன்றின் விமானக் கீழ்த்தளத்தின்தாங்குதளக் கபோதக்கூடு வளைவொன்றில் இதுநாள்வரை கண்டிராத சிற்பக்காட்சியைக் கண்ணுற்று அதிர்ந்து போனோம்!
யானை எல்லோருக்கும் பிடித்த விலங்கு. குழந்தைகள் கூட நேசிக்கும் அந்த யானையைப் பழங்காலத்தில் கொலைக் கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். யானை காலால் மிதித்துக் கொல்வது மிகக் கொடிய தண்டனைகளுள் ஒன்றாக அக்காலத்தே அமைந்திருந்தது. இந்தக் காட்சியைத் திரைப்படங்களில் பார்க்கும்போது, இது போன்ற தண்டனைகள் இருந்திருக்குமா என்று வியந்திருக்கிறோம்! அந்த வியப்பைக் களைவது போல் இந்தக் கபோதக் கூடு சிற்பம் மரண தண்டனையை நிறைவேற்றும் யானை ஒன்றைப் படம்பிடித்துள்ளது.

கீழே விழுந்து கிடக்கும் மனிதன் குற்றம் செய்தவன் போலும்! இரு கைகளையும் உயர்த்தியபடி வலித் துன்பத்தால் துடிக்கும் அந்த மனிதனின் முகம் யானைக்குப் பயந்து வலத்திருப்பமாய் உள்ளது. யானையின் முன் கால்களுள் ஒன்று விழுந்து கிடக்கும் மனிதனின் தலையை நசுக்க உயர்ந்துள்ளது. மற்றொரு முன் கால் அம்மனிதனை உதைக்கும் முயற்சியில் உள்ளது. தலையை நன்கு குனிந்து, துதிக்கை சுருண்டு மேலேகுமாறு தந்தங்களை அந்த மனிதனின் உடலில் பாய்ச்சிக் கொன்று கொண்டிருக்கும் அந்த வேழத்தின் மேல், கைகளைப் பிசைந்தபடி அதன் பாகன். பாவம்! கொலைக்கு உடந்தையாக இருக்கிறோமே என்ற துன்பம் போலும். அரச தண்டனையை நிறைவேற்றும் கருவியாக இருந்த போதும் மனித மனம்தானே! மரணத்திற்கு ஒரு நொடியாவது வருந்தும் அல்லவா!
பின் கால்களில் சதங்கைகளும் முகபடாமும் முதுகில் விரிப்பும் கொண்டுள்ள அரச யானையின் கொலை வெறியை அதன் கண்களிலும் தலையை அது குனித்துள்ள பாங்கிலுமே சிற்பி நன்கு அடையாளப்படுத்திவிடுகிறார். மரண தண்டனைதான் எப்படியெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|