Issue No. 53
இதழ் 53 நவம்பர் 16 - டிசம்பர் 17, 2008
|
ஆரத் தழுவ நீயிருந்தால் அமைதியாகப் பெற்றிடுவேன்!
மு.
நளினி
|
|
|
'Animal Planet', 'Discovery Channel' இவற்றில் மட்டுமே காட்டு மிருகங்களின் பிள்ளைப்பேற்று நிகழ்வைக் கண்டிருந்த கண்களை, நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்க் கோயில் திருச்சுற்றில் திகழும் சிற்பமொன்று வியப்பால் விரியவைத்து. யானை ஒன்று குட்டி ஈனும் நிகழ்வை அற்புதமான திரைக்காட்சி போல அங்குச் சிற்பமாக்கியுள்ளனர் தமிழ்நாட்டுச் சிற்பாசிரியர்கள்.
பிள்ளை பெறும் யானையைச் சூழநின்று பரிவோடு அதைக் கவனிப்பனவாய் மூன்று யானைகள் காட்டப்பட்டுள்ளன. தாய் யானையின் முன் நிற்கும் முதல் யானையும் பெண் யானையே. பிள்ளைப் பேற்று வலியால் தவிக்கும் தாய் யானையின் துளைக்கையைத் தன்னுடைய துளைக்கையால் ஆதரவாகத் தழுவியுள்ள இந்த முதல் யானையைச் செவிலியாகக் கொள்ளலாம். தன் தழுவலுக்கேற்ப அது தலை உயர்த்தியுள்ள அழகு சொல்லுந்தரமன்று. அதன் முகத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பரிவுணர்ச்சி மனித மகப்பேற்றுச் சிற்பங்களில்கூடக் காணவியலாத ஒன்றாகும்.
தாய் யானையின் வலப்புறம் இருக்கும் ஆண் யானை அதன் துணை போலிருக்கிறது. குட்டியை ஈனும் துணையின் உடலைத் தன் துளைக்கையால் வளைத்துத் தழுவி ஆதரவாய் நிற்கும் அந்தப் பாங்கே அதன் உறவை எளிதாய் உணர்த்திவிடுகிறது. பிறப்பை எளிதாக்குவதற்காகப் பின் கால்களை அழுத்தியவாறு, உடலின் பிற்பகுதியைச் சற்றே இறக்கலாக்கி, முக்கி முனகும் தாயின் துன்பத்தைக் குறைக்குமாறு, மற்றொரு யானை, மகப்பேறு எளிதாக நிகழ்வதற்கு வாய்ப்பாக, தாயின் வாலைத் தன் துளைக்கையால் தூக்கிப் பிடித்துள்ளது. பிள்ளைப்பேற்றின்போது விரியும் பிறப்புறுப்புத் தசைகளின் ஆற்றலை, இந்தத் தூக்கிப் பிடிக்கும் பணி மேம்படுத்திடும் என்பதை அறிந்திருக்கும் அந்த யானை மருத்துவி போலும்!
ஈனலுக்கேற்ப விரியும் தாய் யானையின் பிறப்புறுப்பிலிருந்து வெளி உலகத்தை எட்டிப் பார்க்கும் குட்டி யானை பாதி உடல்வரை வெளிவந்துவ்ிட்டது. நெகிழ்ந்து தவழும் அதன் இளந்துளைக்கையும் இலேசாய்க் குனிந்த தலையும் துவண்டன போல் காட்டப்பட்டிருக்கும் முன் கால்களும் சிற்பாசிரியரின் பார்வை அனுபவமே அங்குச் செதுக்கலாகியுள்ளது என்பதைக் கூறாமல் கூறுகின்றன.

தமிழ்நாட்டுக் கோயில்கள் வெறும் இறைத்தலங்கள் மட்டுமன்று; அவை தமிழரின் அனுபவப் பிழிவுகளைப் பதிவுகளாய்க் கொண்டிலங்கும் வரலாற்றுக் களங்கள் என்பது இந்த யானை ஈனலாலும் உறுதிப்படுகிறது.
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|