http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 63

இதழ் 63
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பார்வைகளைப் பண்படுத்தும் பயணங்கள்
மதுரகவி நந்தவனம் பொதுநல வழக்கு - சில விளக்கங்கள்
மதுரகவி நந்தவனம் அழித்தொழிப்பு - ஒரு வேண்டுகோள்
கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள்
திருநந்திக்கரைக் குடைவரை
கழுகுமலைப் பயணக்கடிதம் - 4
அன்பே! நீயின்றி
இதழ் எண். 63 > கலையும் ஆய்வும்
கல்வெட்டுக்கள் காட்டும் நந்தவனங்கள்
கோகுல் சேஷாத்ரி
தமிழகமெங்கிலும் மன்னர்களாலும் பெருமக்களாலும் ஊர்தோறும் அமைக்கப்பட்ட திருக்கோயில்கள் ஒவ்வொன்றுமே தத்தமக்குரிய நந்தவனங்களுடன் திகழ்ந்தன என்பதற்கு அவ்வவ்வூர்க் கல்வெட்டுக்களே சான்றாதாரங்களாகி நிற்கின்றன. இவை திருநந்தவனங்கள் என்றும் திருமாலைப்புறங்கள் என்றும் அழைக்கப்பட்டன. மலர்களை மாலையாக்கும் இடம் திருப்பூ மண்டபம் எனப்பட்டது. மாலைகள் திருமாலைகளாக அறியப்பட்டன. நந்தவனங்களைப் பேணிப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அவற்றில் பூக்கும் மலர்களிலிருந்து மாலைகள் தொடுக்கவும் பணியாளர் அமர்த்தப்பட்டனர். இவர்கள் நந்தவனத் திருத்துவார் என்றும் நந்தவனக்குடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு வாழ்வூதியங்களாக நிலங்களும் மானியங்களும் வழங்கப்பட்டன. நந்தவனங்கள் சிறியதாக இருக்கும் பட்சத்தில் அவை தனிமனிதர்களாலும் பெரியதாக அல்லது பலதாக இருக்கையில் பருதையார் / சபை அல்லது ஊரோமாலும் தோட்ட வாரியங்களாலும் நிர்வகிக்கப்பட்டன.



நூறாண்டுகள் கழிந்து இன்றும் நல்நிலையில் செயல்படும் மதுரகவி நந்தவனம்


திருநந்தவனங்கள் பற்றிப் பேசும் பலப்பல கல்வெட்டுக்களில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு ஈண்டு நோக்குவோம்.

பரமன் பாம்பணையில் பள்ளிகொண்டுள்ள திருவரங்கம் திருக்கோயில் கல்வெட்டுக்கள் அங்கு அமைந்திருந்த பல்வேறு நந்தவனங்கள் பற்றிய செய்திகளை இனிதே இயம்புகின்றன. இந்நந்தவனங்களுள் 19ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஒரே ஒரு நந்தவனத்தைத் தவிர வேறு எதுவும் இன்று காணுமாறு இல்லை.

திருவரங்கம் மூன்றாம் பிரகாரம் தெற்குச் சுவற்றில் கி.பி.1126ல் நடைபெற்ற ஒரு நிலப்பரிமாற்றத்தைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு, இங்கு அமைக்கப்பட்ட நிதியாபரணன் நந்தவனம் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்நந்தவனத்தை ஏற்படுத்துவதற்காக அரங்கன் திருக்கோயிலின் ஸ்ரீகாரிய அதிகாரியான வளவநாராயண மூவேந்த வேளார், கிளியூர் நாட்டின் புளியங்குடியைச் சேர்ந்த புளியங்குடியான் அரையன் ஆதித்ததேவனான ஏநாடி அரையனுக்கு நிலத்தை விற்றுள்ளார். இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள திதி மற்றும் நட்சத்திர விபரங்களைக் கொண்டு இக்கல்வெட்டு குறிப்பிடும் தேதி ஜனவரி 18, திங்கட்கிழமை, கி.பி. 1126 எனக் கணித்துள்ளார்கள். (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 24, எண் 113. A. R. No. 38 of 1948-49)

அதே திருவரங்கம் மூன்றாம் பிரகாரத்தில் கிழக்குச் சுவற்றில் அமைந்த முதலாம் குலோத்துங்கர் காலத்தைய கல்வெட்டு அருள்மொழி இராஜாதிராஜன் எனும் வாணாதிராஜரால் அமைக்கப்பட்ட திருப்பூ நந்தவனம் பற்றிப் பேசுகிறது. கல்வெட்டின் பல பாகங்கள் அழிந்துள்ளன. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 24, எண் 27. A. R. No. 112 of 1932-39). மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மற்றொரு முதலாம் குலோத்துங்கர் காலக் கல்வெட்டு சேனாபதிகள் இளங்கோவேளாரால் அமைக்கப்பட்ட கிடாரங்கொண்டவிளாகம் எனும் நந்தவனத்தைக் குறிப்பிடும். இவரது சிறப்புப் பெயரான இராஜேந்திரசோழக் கிடாரத்தரையர் எனும் பட்டப்பெயரும் நந்தவனத்தின் பெயரும் ஆய்வுக்குரியன. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 24, எண் 32)

அதே திருவரங்கம் மூன்றாம் பிரகாரம் வடக்குச் சுவற்றில் அமைந்துள்ள மூன்றாம் இராஜராஜர் காலத்துக் கல்வெட்டு, பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த செவ்விருக்கை சக்ரபாணி நல்லூரின் அரையன் வீரதமுட்டனான குறுக்குள்ளராயர் அமைத்த திருப்பூ நந்தவனம் பற்றிக் குறிப்பிடும். இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1224. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 24, எண் 152. A. R. No. 128 of 1938-39)

இவ்வாறு திருவரங்கம் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் மூன்று சுவர்களில் நந்தவனங்கள் பற்றிய கல்வெட்டுக்கள் இருப்பதை நோக்கும்போது சோழர் காலத்தில் மூன்றாம் பிரகாரத்தின் மூன்று பக்கங்களிலுமே பல நந்தவனங்கள் அமைந்திருந்தனவோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இம்மூன்றாம் பிரகாரக் கல்வெட்டுக்களுள் பல முதலாம் குலோத்துங்கர் காலத்தவை.

திருவரங்கம் இரண்டாம் பிரகாரம் கிழக்குச் சுவற்றில் இருக்கும் கல்வெட்டு திருவரங்கனுக்குத் திருமாலைகள் அளிக்கும் நந்தவனங்களை உருவாக்க பாரதாயன் ஆண்டான் சீரண்ட பட்டனும் அரிதன் ஸ்ரீ கோவிந்தப்பெருமாளான வேதநெறிகட்டினான் பிரமராயனும் முறையே 10000 காசுகளும் 5000 காசுகளும் கோயிலார்க்கு அளித்த செய்தியைக் குறிப்பிடும். வீரநரசிம்மர் காலக் கல்வெட்டான இது கி.பி. 1233 காலத்தைச் சார்ந்தது. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 4, எண் 501. A. R. No. 54 of 1892)

திருவரங்கம் ரெங்க மண்டபத்தின் மேற்குச் சுவற்றில் வெளியாண்டாள் சன்னிதிக்கு அருகே பொறிக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய கல்வெட்டு, 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் வாழ்ந்த ஸ்ரீ மதுரகவிப்பிள்ளை எனும் பெரியவர் பற்றியும் அவரது வாழ்க்கை வரலாற்றையும் திருவரங்கத்தில் அவர் மினவும் முனைந்து உருவாக்கிய திருநந்தவனம் பற்றியும் உருக்கமான தகவல்களை முன்வைக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாழ்பட்டுப் போயிருந்த திருவரங்கனின் பிரணவாகார விமானத்தைப் பெருமுயற்சி செய்து புனரமைத்த பெரியவர் இவர். தமிழகத்திலேயே திருநந்தவனக்குடி ஒருவரின் வாழ்க்கையை முகப்பூச்சின்றி முன்னிறுத்தும் ஒரே கல்வெட்டு இதுதான். அதேபோல தமிழகத்திலேயே கல்வெட்டில் இடம்பெற்றுள்ள ஒரு நந்தவனம் உயிருடன் நல்நிலையில் இருக்கும் ஒரே இடமும் திருவரங்கம்தான். ஆம். இன்றைய தேதிவரை மதுரகவி நந்தவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நந்தவன வளாகத்திற்குள்ளேயே மதுரகவியவர்களின் சமாதித் திருக்கோயிலும் அமைந்துள்ளது சிறப்பானது. (கல்வெட்டுப் பாடம் இதுவரை எந்தத் தொகுதியிலும் வெளியிடப்படவில்லை.)

வைணவர்களின் தலையாயக் கோயிலுக்குரியதைப்போல் சைவர்களின் முக்கியக் கோயிலான சிதம்பரத்திலும் நந்தவனங்கள் பற்றிப் பேசும் கல்வெட்டுக்கள் உண்டு.

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தின் வடக்குச் சுவற்றில் அமைந்த கல்வெட்டு தேவரடியார்கள் பிள்ளையார் சிற்றிடை அரிவையும் இரங்கல்மீட்ட பிள்ளையாரும் திருக்காமக்கோட்டத்துப் பெரியநாச்சியாருக்கு (அதாவது சிவகாமியம்மைக்கு) மலர்கள் அளிப்பதற்காக நிவந்தித்த நந்தவனத்தையும் அதனைப் பராமரிப்பதற்காக இரண்டு பணியாளர்களை அமர்த்தியதையும் பற்றிப் பேசுகிறது. இந்நிவந்தத்தைச் சிதம்பரம் திருக்கோயில் அதிகாரிகளை கொண்டு கல்லில் வெட்டியவர் சோழகோன் எனும் அதிகாரியாவார். (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 12, எண் 151. A. R. No. 304 of 1913). இதே சோழகோன் ஆணையினால் வெட்டப்பட்ட மற்றொரு சிதம்பரம் கல்வெட்டு, கோப்பெருஞ்சிங்கரின் 19ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். இது பூபலசுந்தரச் சோழநல்லூரில் அமைந்திருந்த சொக்காச்சியான் காமுகு திருநந்தவனம் பற்றிப் பேசுகிறது. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 12, எண் 215)

திருச்சி முசிறி தாலுக்கா ஸ்ரீநிவாசநல்லூரின் திருக்கொருக்குத்துறைப் பெருமானடிகள் திருக்கோயில் கல்வெட்டு, பிரம்மதேயமான மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த (கல்வெட்டு மயீந்திரமங்கலமென்று குறிப்பிடுகிறது) பணச்சன் துவேதி நாராயாணன் காளி என்பார் ஈசானக்குடியில் அமைந்திருந்த திருநந்தவன நிலத்தைக் கோயிலுக்கு விற்ற செய்தியைக் குறிப்பிடுகிறது. இது காலத்தால் சற்று முற்பட்ட முதலாம் ஆதித்த சோழர் காலத்தைய கல்வெட்டாகும். (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 13, எண் 158)

வட ஆற்காடு வாலாஜாப்பேட்டைக்கருகில் உள்ள திருப்பாற்கடல் கரபுரீசுவரர் திருக்கோயில் கல்வெட்டு நந்தவனங்களைப் புரப்பதற்காக அமைக்கப்பட்ட தோட்ட வாரியம் பற்றிப் பேசும். இங்கு அமைந்திருந்த காவிதிப்பாக்கமான அவனிநாரணச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையினர் இத்தோட்ட வாரியத்தையும் பிற வாரியங்களையும் அமைத்துள்ளனர். இக்கல்வெட்டு பராந்தகச் சோழர் காலத்தைய உத்தரமேரூர்க் கல்வெட்டுடன் ஒப்பு நோக்கத்தக்கது. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 19, எண் 179 (A.R. No. 688 of 1904)

இராமநாதபுரம் திருப்பத்தூர் திருத்தளீசுவரர் திருக்கோயில் கல்வெட்டு, இறைவனுக்குக் கருமுகை மலர்கள் அளிப்பதற்காக அவ்வூர் மூலப்பருதையாரிடம் அருவியூரான தேசிஉய்யவந்த பட்டினத்தைச் சேர்ந்த வடுகன் உய்யவந்தான் என்பவர் அளித்த பொற்காசுகளைக் குறிப்பிடுகிறது. இந்நந்தவனம் கிளைத்தோண்டியூரன் நந்தவனம் என்றழைக்கப்பட்டது. குறிப்பிட்ட வகையான மலர்களை அளிப்பதற்கென்று கொடுக்கப்பட்ட நிவந்தம் எனும்வகையில் இக்கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 14, எண் 238 (A.R. No. 97 of 1908)

விருதாசலம் விருத்தகிரீசுவரர் கோயில் கல்வெட்டு, கோப்பெருஞ்சிங்கரின் 6ம் ஆட்சியாண்டில் திருமுதுகுன்றமுடைய நாயனார்க்கு (அதாவது இறைவனுக்கு) பூக்கள் மாலைகள் முதலியனவற்றைக் கொடுக்க கூடல் நாட்டில் ஊற்றுக்குறிச்சியான ஆதனூரில் அமைந்த அழகியபல்லவன் தோப்பு என்றழைக்கப்பட்ட நான்கு மா நிலத்தை கூடலைச் சேர்ந்த (இன்றைய கூடலுர்) ஆளப்பிறநந்தான் அழகியசியன் என்பார் நிவந்தமளித்த செய்தியைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1234(தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 12, எண் 121 (A.R. No. 83 of 1918)

நாகப்பட்டினம் கீழ்வேளூரில் அமைந்துள்ள மாடக்கோயிலான அக்ஷயலிங்கேஸ்வரர் திருக்கோயில் கல்வெட்டு இரண்டாம் இராஜராஜர் காலத்தில் (கி.பி. 1163) இறைவனுக்காக ஒரு நந்தவனம் அமைக்க பெரும்பற்றப்புலியூர் விநாயக பட்டன் மனைவியாரான ஆவுடையாள்சாணியும் அவரது முதுகனான (காப்பாளர் என்று பொருள் கொள்க) குரவசேரியின் ஸ்ரீமூலத்தானம் உடைய பட்டன்னும் எடுத்த முயற்சிகளைக் கூறுகிறது. இதற்காக அவர் சாத்தங்குடியில் அமைந்த செந்தாமரைக்கண்ணன் கொல்லை எனும் நிலத்தை வாங்கித் திருக்கோயிலுக்கு நிவந்தமாக அளித்துள்ளார். நிவந்தமளித்த இருவரும் திருவாரூர் திருமூலட்டானத்து இறைவனை வழிபடுபவர்கள் என்பதாகக் கல்வெட்டு உள்ளது . இவர்கள் அத்திருக்கோயிலில் (ஸ்ரீமூலட்டானத்தில்) பணிபுரிந்தவர்களாக இருக்கலாம். ஒரு பிரபலமான திருக்கோயிலைச் சேர்ந்த பணியாளர்கள் வேறொரு கோயிலுக்குத் தன்மமளிப்பது சற்று வித்தியாசமான நிகழ்வாக உள்ளது. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 19, எண் 558 (A.R. No. 515 of 1904)

உக்கல் விஷ்ணு பட்டாரகர் திருக்கோயிலில் உள்ள முதலாம் இராஜராஜரின் 14ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 999) பெற்றான் ஆதித்தன் என்பவர் அருகருகே அமைந்த இரண்டு துண்டு நிலங்களை வாங்கி அவற்றில் ஒரு நந்தவனம் அமைக்கப் பணித்த செய்தியைச் சொல்கிறது. குறிப்பிட்ட அளவுள்ள நிலம் நந்தவனம் அமைக்கத் தேவைப்படும் பட்சத்தில் பலரிடம் நிலம் வாங்கி ஒரே தானமாக அளிக்கும் பழக்கம் இருந்தது இக்கல்வெட்டினால் தெரிகிறது. (தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3, எண் 3).

சமீபத்தில் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் மேற்கொண்ட திருவலஞ்சுழி ஆய்வில் வலஞ்சுழியில் வியாழகஜமல்லன் எனும் பெயரில் ஒரு நந்தவனம் இருந்தது தெரியவருகிறது. இந்நந்தவனத்தில் அமர்ந்து உணவருந்திய முதலாம் இராஜேந்திர சோழர் சில நிவந்தங்களைக் கொடுத்துள்ளார். தன்னுடைய தந்தையார் முதலாம் இராஜராஜர் பூண்டிருந்த சிவபாதசேகரன் எனும் பெயரைப்போல இராஜேந்திரரும் சிவசரண சேகரன் எனும் சிறப்புப் பெயர் கொண்டிருந்தார் என்பதை அறிமுகப்படுத்தும் மிக முக்கியமான கல்வெட்டு இது. (பார்க்க வலஞ்சுழி வாணர் புத்தகம்).

இந்துக்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களும் நந்தவனங்கள் ஏற்படுத்தியுள்ளனர். பழைய பல்லாவரத்தில் ஒரு கிணற்றுக்கருகில் அமைந்த கல்வெட்டு, ஷேக் முஸா மிய்யா சாஹிப் எனும் முஸ்லிம் பெரியவர் சத்திரம் சாவடிகளமைத்து பூரம் பாக் எனும் நந்தவனத்தையும் ஏற்படுத்தினார் எனக் குறிப்பிடும்.(தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 10, எண் 780 (A.R. No. 55 of 1909)

இவ்வாறாக, ஏராளமான நந்தவனங்களைப் பற்றிய செய்திகளைக் கல்வெட்டுக்கள் இயம்புகின்றன. இந்த நந்தவனங்கள் அமைக்கப்பட்ட நிலங்கள் இன்று இருந்தாலும் அவை ஆக்கிரமிப்பாளர்களாலும் ஊர்மக்கள் அலட்சியத்தாலும் அழிந்தே போய்விட்டன.

கல்வெட்டுக்களில் தர்மம் கொடுக்கும் பெரியவர்கள் இத்தன்மம் காப்பார் அடி என் தலை மேலென என்று பிற்காலச் சந்ததியரின் கால்களில் வீழ்ந்து வணங்கி அந்த தர்மர்த்தைக் காப்பாற்றுக என்று இறைஞ்சி நிற்கின்றார்கள். சாதாரண மனிதர் முதல் பேரரசர்கள் வரை இவ்வாறே இறைஞ்சுகிறார்கள்.

நாமென்ன செய்தோம்?

காலப்போக்கில் காலில் வீழ்ந்து கிடக்கும் அந்தப் பெரியவர்களின் இறைஞ்சல்களை உதாசீனத்திலும் அலட்சியத்தாலும் எட்டி உதைத்தோம்.

நந்தவனங்களை ஒவ்வொன்றாக அழித்தோம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.