Issue No. 64
இதழ் 64 அக்டோபர் 15 - நவம்பர் 15, 2009
|
வரங்கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே!!!
சு.சீதாராமன்
|
|
|
காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள் ஆச்சி லாதபளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான் பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின் வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே
என்று ஆளுடைய பிள்ளையார் ”மாளிகை சூழ்மழ பாடி” என்றும் இதர பாடல்களில் “மாமழபாடி” என்றும் அழைக்கிறார்
இது திருவையாற்றிற்கு வடமேற்கே சுமார் 6 கி.மீ. தூரத்தில் கொள்ளிடப்பேராற்றின் வடகரை மற்றும் மேற்கரையிலும் எழிலாக அமைந்துள்ளது (படம் பார்க்க)

இறைவரின் திருப்பெயர் வயிரத்தூண்நாதர்
இறைவியாரின் திருப்பெயர் அழகம்மை
திருநந்திதேவர் திருவையாற்றிலிருந்து எழுந்தருளி - சுயசை அம்மை யாரை மணஞ்செய்துகொண்ட தலம். சுந்தரமூர்த்தி நாயனார், திரு வாலம்பொழிலில் எழுந்தருளியிருக்க, மழபாடி இறைவன், அவரது கனவில் தோன்றி, `சுந்தரா’ என வாஞ்சையுடன் அழைத்து “மழபாடிக்கு வர மறந்தனையோ?`` என்று வினவ, உடனே சுந்தரர்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
என்று சுந்தரரும்,
தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய் தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய் பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய் ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய் இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய் மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே
என்று அப்பர் பெருந்தகையும் பதிகம் பாடி வழிபட்ட மாமழபாடியாம்.
சேரர் கிளையினராகிய மழவர் இவ்வூரில் உறைந்தமையால் இப்பெயர் பெற்றது. சிவபெருமான் மழுநிர்த்தஞ்செய்த தலமாதலாலும் மழுவாடி ஆயிற்று என்பர். அப்பர் பெருமானின் பாடல் வரிகளுடன் இத்திருக்கோயிலின் சிற்பங்களை கண்டு இன்புறுமாறு வாசகப் பெருமக்களை அழைக்கிறோம்



வழக்கத்திற்கு மாறாக உமையை வலப்பக்கம் கொண்டருளியுள்ளார்


இவ்வாறு இத்திருக்கோயிலில் பழமையான கண்கவரும் சிற்பங்கள் இருந்த போதிலும் கோயிலை முழுமையாகச் சுற்றி வந்து நாம் கண்ட காட்சி நம்மை மகிழ்ச்சி கொள்ளச்செய்வதற்குப் பதில் வருத்தத்தையே ஏற்படுத்தியது. திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டபோது,கோயிலின் கட்டுமாணத்தை முழுவதுமாக புதியதாக மாற்றி நம்முடைய பாரம்பரிய கலைச்சின்னங்களைப் புதிய தலைமுறை கண்டு மகிழாவண்ணம் மாற்றம் செய்து விடுகின்றனர். உதாரணமாக இத்திருக்கொயிலின் அதிஷ்டானம் கீழ்க்கண்டவாறு கண்ட பாதத்தில் சிற்பங்கள் பெற்று இருந்திருக்கும். (இருந்தமைக்குச் சான்று இக்கட்டுரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது)

ஆனால்,

அப்படியானால் இங்குள்ள சிற்பங்கள் எங்குச் சென்றிருக்கும்?. கோயில் வளாகத்திற்குள் கேட்பாரற்று உடைந்து கிடக்கும் கோலத்தைப் பாருங்கள்

வேறொரு சிற்பத்தை மடப்பள்ளிக்கருகில் அமைந்த விநாயகர் திருமுன் முன் சம்மந்தமில்லாமல் பதித்திருக்கிறார்கள். அப்படியானால் இச்சிற்பங்கள் புனர் நிர்மாணத்தின் போது நல்ல நிலையில் இருந்துள்ளன. கோயில் புனரமைப்புப்பணியில் ஈடுபட்டோர் காட்டிய அலட்சியத்தினாலும் அதிகாரிகளின் முறையான மேற்பார்வையின்மையினாலும் நம்முடைய பாரம்பரியச்சின்னத்திற்கு ஊறு விளைந்துள்ளது.

திருச்சி டாக்டர் இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் டாக்டர்.இரா.கலைக்கோவன் எழுதிய “சோழர்கால ஆடற்கலை” புத்தகத்தை படித்து அதில் அவர் விவரித்திருந்த திருமழபாடி சிவனின் ஊர்த்தவஜானு சிற்பத்தைக் காண விழைந்தோம். கண்டறிந்த இடத்தை கீழ்க்கண்ட படத்தில் காண்க.மேலும் அச்சிற்பத்தின் இயல்புத்தன்மையை மாற்றி அதில் பல வண்ணம் பூசியுள்ளார்கள்


இத்திருக்கோயிலில் நேர்ந்துவிட்ட இது போன்ற தவறுகள் மேலும் தொடராமலிருக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முயற்சியெடுத்து நம்முடைய கலைப் பாரம்பரியத்தை அழிந்து விடாமல் பாதுகாக்க வராலாறு.காம் சார்பில் வேண்டிக்கொள்கிறோம்.

வரங்கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே!!!
|
|
|
|
வீடியோ தொகுப்பு
Video Channel
|
|
|
|
|
|
|
|