www.varalaaru.com
A portal for
South Indian History
 
73 இதழ்கள்...
1009 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
சேரர் கோட்டை
அத்தியாயம் 03

இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
விபரீத விவாதங்கள்


இராமவளநாட்டின் நாடுவாழியும் வயதில் மூத்தவருமான இராமச் செல்லர் எழுந்து நின்றார்.

"ஏன் எழுந்திருக்கிறீர்கள் - அமர்ந்தபடி பேசலாமே ?"

"ஒன்றுமில்லை - வயதாகின்றதல்லவா ? நீண்ட நேரமாகத் தரையில் அமர்ந்திருந்ததால் கால்கள் மரத்து விட்டன - அதனால் சிறிது நேரம் நின்றுகொண்டே பேசுகிறேன். காந்தளூரோடு பல்வேறு விவகாரங்களிலும் சம்மந்தப்பட்டவன் என்கிற முறையில் சோழனின் இந்த அநியாயமான திட்டம் எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. நூற்றாண்டுகளுக்கும் முற்பட்ட நிறுவனம் அது. அதனையா தாக்கப்போகிறார்கள் ? சிவ சிவா ! சோழர்களின் கோபத்திற்கான முறையான காரணத்தை என்னால் சரிவர அனுமானிக்க முடியவில்லை. என்றாலும் இதன் பின்னணியில் இருக்கும் சில முக்கிய தகவல்களை என்னால் பகிர்ந்துகொள்ள முடியும். வள்ளுவனார் அனுமதித்தால்...."

"அனுமதி அது இதுவென்று பெரிய வார்த்தைகளெல்லாம் பேசுகிறீர்களே ! தாராளமாகச் சொல்லுங்கள்...."

"நண்பர்களே ! காந்தளூரில் இன்று இயங்கிவரும் வலியசாலையானது ஏறக்குறைய நூற்றைம்பது அல்லது நூற்றியெழுபது ஆண்டுகளுக்கு முன்னாளில் இப்பகுதிகளை ஆண்டுவந்த ஆய்வேள் குலத்தினரால் துவங்கப்பட்டது. மலைநாட்டில் துவங்கப்பட்ட மிகப் பழமையான சாலை நிறுவனம் அதுதான். காந்தளூர்ச் சாலை செயல்படத் துவங்கி ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் மூழிக்குளத்திலும் திருவல்லவாழிலும் கடைசியாக பார்த்திவசேகரபுரத்திலும் சாலைகள் துவங்கப்பட்டன. இவை மூன்றுமே காந்தளூர் மரியாதையைத்தான் (16) தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு இயங்குகின்றன. எத்தனையோ வீராதி வீரர்கள் இச்சாலைகளில் இன்றுவரை பயின்று வந்திருக்கிறார்கள். தென்னகம் இதுவரை கண்டிராத புதுப்புது தனுர்வேத வித்தைகள் இங்கே கண்டறியப்பட்டுள்ளன. நமது அரசர்களாக விளங்கும் குலசேகரப் பெருமாள் வம்சத்தாருக்கு வழிவழியாக சேனாதிபதிகளாக இருந்து வருபவர்கள் காந்தளூரிலும் பார்த்திவசேகரபுரத்திலும் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்தான்..."

(16) முன்மாதிரி என்பதை "மரியாதை" என்றும் சொல்லால் குறிப்பிட்டார்கள். காந்தளூர் மரியாதை என்கிற சொற்றொடர் ஆய்வேளரசர் கோக்கருந்தடக்கனின் பார்த்திவசேகரபுரச் செப்பேடுகளில் காணப்படுகிறது

"கேட்பதற்கு நன்றாக இருக்கிறது... ஆனால் நமது நாடுவாழிப் படைகளை நீண்ட காலம் அவர்கள் பயிற்றுவிக்க ஒப்புக்கொள்ளவில்லையென்பதை இராமவாழியாரிடன் நினைவூட்டுகிறேன்.... பன்னெடுங்காலமாக சாலைகளின் வித்தைகள் சட்டர்களுக்கும் பட்டர்களுக்கும்தான் உரியனவாக இருந்தன. கடந்த பத்திருபது வருடங்களில்தான் வெளிவீரர்களை சட்டப் பெருமக்கள் பயிற்றுவிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்...."

"ஒரு சில நேரங்களில் பழையவற்றைக் கிளறாதது நல்லது... அவர்கள் அவ்வாறு மறுத்ததற்கும் தகுந்த காரணங்கள் இருந்தன. சாலாபோக நிலங்கள் சம்மந்தமாக அவர்களுக்கும் நமக்கும் நீண்டநாள் பிரச்சனை இருந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பேருண்ணாவின் அட்டிக்கோல் (17) பிரச்சனையிலும் நாம் அவர்களுக்கு எதிராகத்தான் நின்றோம். அவற்றையெல்லாம் மறந்துவிட்டு நமது வீரர்களைப் பயிற்றுவிக்க அவர்கள் ஒப்புக்கொண்டதே ஒரு நல்ல முன்னேற்றம்தான். உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் - சாலைப் பட்டர்கள் கற்றுக்கொடுத்தபின் நமது வீரர்களின் வாள்வீச்சும் வில்வித்தையும் பன்மடங்கு முன்னேறியிருக்கின்றனவா இல்லையா ?"

(17) வருடாந்திர வரி

"இராமவாழி சொல்வது உண்மைதான் - இன்றைய நிலையில் அத்தகைய பயிற்சி மட்டும் இல்லையென்றால் நமது ஆட்கள் உண்டு உறங்கி உடம்புகொழுத்துக்கொண்டிருப்பார்கள்...."

வள்ளுவனார் சட்டென்று குறுக்கிட்டார்... "சாலைக்கும் நமக்கும் இருக்கும் உறவு பற்றிய விவாதங்களை அப்புறம் வைத்துக் கொள்ளலாம், இராமவாழியாரே ! சோழனின் தாக்குதல் திட்டத்திற்குப் பின்னாலிருக்கும் தகவல்களை...."

"சொல்கிறேன்... சொல்கிறேன். அதற்கு முன்னால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இச்சாலைகளை ஆய்வேளிர் முதன் முதலில் துவங்கியபோது அதனை அவர்கள் மலைநாட்டுக்கு மட்டும் உரியதாக நினைக்கவில்லை. தென்னகத்தின் அரசுகள் அனைத்திற்குமே தேவையான பயிற்சிபெற்ற மாராயர்களையும் பிரம்மாதி ராஜர்களையும் உருவாக்குவதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. சாலை மாணாக்கர்கள் திரைராஜ்ஜிய விவகாரங்களில் (18) பயிற்சி பெற்றதால் நமது சேரநாடில் மட்டுமல்லாது சோழநாட்டிலும் பாண்டிநாட்டிலும்கூட அவர்களின் புகழ் பரவியிருந்தது. நமது தம்புராட்டி கோக்கிழானடிகள் பராந்தகச் சோழரைக் கைப்பிடித்த சில காலத்தில் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம் (19) உருவாக்கப்பட்டது. அப்போது பல்வேறு மலைநாட்டு அந்தணர்கள் அங்கு குடியேறினார்கள். தில்லைச் சிற்றம்பலம் மற்றும் பழுவூர் என்று தமிழகத்தின் இரண்டு இடங்களில் மட்டும் வேரூன்றியிருந்த மலைநாட்டவரை மூன்றாவது கேந்திரத்திலும் வேரூன்றச் செய்தது தம்புராட்டியாரின் இணையில்லாத இராஜதந்திரம். அது மட்டுமல்ல - கடலையொத்த பிரம்மாண்டமான வீரநாராயண ஏரியை இராஜாதித்தர் தோண்டுவித்தபோது அதில் தோள்கொடுத்து நின்றது நமது நாட்டின் வீரர்கள்தான். இராஜாதித்தரின் படையில் மலையாளச் சேனை என்று ஒரு தனி சேனையே இருந்தது. அதன் சேனானி நாயகமாக இருந்தவர், இதோ ! இங்கு அமர்ந்திருக்கும் கீழ்மலை நாடுவாழியின் முப்பாட்டனார் மழுவக்கோனார் அடங்கன் சாத்தனார் ! ஒட்டுமொத்தப் படைகளுக்கும் சேனாதிபதியாக இருந்தவரும் நமது வள்ளுவ நாடாழ்வாரின் பெரிய பாட்டனார்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.... அடடா ! அவர்தான் எத்தனை பெரிய மனிதர் ! தக்கோலத்துப் பெரும்போரில் தான் காக்கவேண்டிய இளவரசரைக் காப்பாற்றத் தவறிவிட்டோம் என்பதற்காக வாழ்வையே துறந்து துறவறம்பூண்டுவிட்ட வீரரல்லவா அவர்...."

(18) இதுவும் பார்த்திவசேகரபுரச் செப்பேட்டுச் சொற்றாடர்தான்
(19) இந்நாளில் காட்டுமன்னார் கோயில் என்ற பெயரில் அமைந்திருக்கும் ஊர்


இந்தத் தகவல்களெல்லாம் அங்கிருந்த பலருக்கும் முன்பே தெரிந்திருந்தன என்பது அவர்களுடைய முகபாவங்களிலிருந்து தெரிந்தது. என்றாலும் பெரியவரான இராமவாழியாரை மதித்து அவர்கள் பொறுமையாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

"பழுவூர்க் குடும்பத்தின் செல்வாக்கு பராந்தகருக்குப் பின் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. பழுவூர் அரசர்களும் நன்றி மறவாமல் ஒவ்வொரு போரிலும் தமது வீரசைனியங்களுடன் கலந்துகொண்டார்கள். குறிப்பாக இரண்டாம் பராந்தகரான சுந்தரச் சோழர் காலத்தில் பழுவூர்க் குடும்பம் மிகுந்த செல்வாக்குடன் விளங்கி வந்தது. உத்தமச் சோழர் காலத்திலும் மரியாதைக்குக் குறைவில்லை...."

பழுவூரைப் பற்றிப் பெரியவர் இராமவாழியார் மெய்மறந்து பேசிக்கொண்டிருக்கும்போது வள்ளுவனாரின் கண்களிலில் ஒரு ஒளி மின்னி மறைந்தது.

"...என்றாலும் மதுராந்தகரின் காலத்தில் பழுவூரைவிட மிகப் புகழ்பெற்று விளங்கிய மலைநாட்டவர் கேந்திரமாக வீரநாராயணபுரம் மாறிவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் இரவிநீலி பட்டதிரியின் குடும்பத்தார்தான். தம்புராட்டியார் வீரநாராயணபுரத்தை உருவாக்கும்போது இந்த அனந்தபுரத்திலிருந்து கிளம்பிச்சென்ற பல குடும்பங்களில் ஒன்றுதான் இரவிநீலி பட்டதிரியின் குடும்பம் ! காந்தளூர்ச் சாலை துவங்கிய ஆச்சாரியர்களுள் ஒருவராக அந்தக் குடும்பத்தின் முப்பாட்டனார் அறியப்படுகிறார். பன்னெடுங்காலமாக அந்தக் குடும்பத்திற்கும் ஆரிய சாலைக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது. பாண்டியரிடமும் சோழரிடமும் நீலி வம்சத்துப் பிள்ளைகள் அமைச்சர்களாகவும் பிரம்மாதிராயர்களாகவும் இருந்திருக்கிறார்கள்... காந்தளூர் மரியாதையை முன்மாதிரியாகக் கொண்டு தில்லைக்கருகில் கீழ்ச்சாலை (20) என்கிற பெயரில் ஒரு சாலையும் துவங்கப்பட்டது. சிக்கல் எங்கு ஆரம்பித்ததென்றால்...."

(20) இன்றளவிலும் இது கீழ்ச்சாலை என்கிற பெயராலேயே அறியப்படுகிறது

தற்செயலாக வள்ளுவ நாடாழ்வாரின் முகத்தை நோக்கிய இராமவாழியாரின் முகம் கறுத்தது. வள்ளுவனாரை இராமனார் நீண்ட காலமாக அறிவார். அந்த முகத்தின் பல்வேறு உணர்வுகளும் அவருக்கு அத்துப்படி. தாம் தற்சமயம் பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கும் விஷயம் பெரியவருக்கு அத்தனை பிடித்தமானதாக இல்லை என்பது இராமவாழிக்குப் புரிந்தது. குறிப்பாக இரவிநீலி குடும்பத்தார் பற்றிய தகவல்கள்.... "அனாவசியமாக இவர்களிடம் வீரநாராயணபுர விவகாரங்களைப் பகிரங்கமாக்க வேண்டாம். அதனால் பல்வேறு தொல்லைகள் வந்து சேரும்...." என்பதான எச்சரிக்கையை வள்ளுவனாரின் முகபாவம் அவருக்கு எடுத்துக்கூறியது.

பேச்சை மாற்றுவதற்கு சிறிது அவகாசம் தேவை என்பதால் தொண்டையைச் செருமிக்கொண்டு "தண்ணீர் உள்ளதா ?" என்று கேட்டார் இராமவாழியார்.

அதற்குள் கூட்டத்தில் சலசலப்புத் தோன்றிவிட்டது.

"இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் காரணம் நீலியார் குடும்பம்தான் ! நாராயணபுரத்தில் என்ன இராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்..."

"அதுதான் அவர்களைத் தண்டித்தாயிற்றே - ஒட்டுமொத்தக் குடும்பத்தாரிடமிருந்து பொன் விளையும் பூமியைப் பிடுங்கிக்கொண்டு நாடுகடத்தியாயிற்றே ! அதற்குப்பிறகும் என்ன படையெடுப்பு வேலை வேண்டிக்கிடக்கிறது ?"

"அடடா, வீராணத்து ஏரி பாயும் அந்த நிலங்களைப் பார்க்க வேண்டுமே ! நீலியாரின் வீட்டில் நித்தம் அரிசிச் சோறுதான்...."

"ஒருவேளை நீலிக் குடும்பத்தார் அனந்தபுரத்துச் சாலையில் இரகசியமாக வந்து அடைக்கலம் புகுந்துள்ளார்களா என்ன ? அவர்கள் கொல்லநாடு சென்றுவிட்டதாகவல்லவா கேள்விப்பட்டேன் ?"

"அவர்கள் எங்கிருந்தால் என்ன ? அவர்களின் வேலையைத் தீர்க்க வேண்டுமென்றால் சோழநாட்டிலேயே தீர்த்திருக்கலாமே ? இத்தனை தூரம் விட்டுப் பிடிப்பானேன்...."

என்றெல்லாம் பேச்சுக்கள் கூட்டத்தாரிடையே எழுந்தன. இத்தகைய பேச்சுக்கள் வள்ளுவ நாடுவாழிக்கு அறவே பிடிக்கவில்லையென்பது அவரது முகத்தில் தெரிந்தது. தேவையில்லாமல் தேனிக்கூட்டைக் கலைத்ததுபோன்ற வேலையை இராமவாழியார் செய்துவிட்டார் !

"நண்பர்களே ! அமைதி ! நமக்கு அதிக அவகாசமில்லை.... பழைய விவகாரங்களைப் பேசிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு சாலைத் தாக்குதலை சமாளிக்க நாம் என்னென்ன ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதைப் பற்றி விபரமாகப் பேசியாக வேண்டும்...."

சிறிது நேரம் ஒரு சங்கடமான மெளனம் கவிந்தது.

புரைக்கிழ நாடாழ்வாரான அடிகள் புரைக்கிழார் எழுந்தார். அவருக்கும் வள்ளுவனாருக்கும் என்றைக்குமே ஒத்துக்கொண்டதில்லை. ஒருவர் கிழக்கு என்றால் மற்றவர் மேற்கு என்பார். அவர் பேச எழுந்ததைப் பார்த்ததுமே வள்ளுவனாரின் முகம் மேலும் கருத்தது.

"அதெப்படி ? சோழன் ஏன் சாலையைத் தாக்குகிறான் என்பததைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் நமது வீரர்களை களத்தில் நிறுத்தச் சொல்கிறீர்களா ? நாடுவாழிகளே - இந்த விவகாரத்தின் அடி முடி இரண்டையும் புரிந்துகொள்ளாமல் இதைப் பற்றி மேற்கொண்டு பேசுவது சிரமமானது..."

வள்ளுவனார் சற்று சிரமத்தின் பேரில் தன்னுடைய கடும் கோபத்தை அடக்கிக்கொண்டார். அவருடைய கோபமெல்லாம் பெரியவர் இராமவாழி மீது திரும்பியது. அவரைப் பேசவிட்டதே தவறு என்கிற எண்ணம் அவருக்கு உறுதிப்பட்டது.

"இதைத் தெரிந்துகொள்வது கடினமா என்ன ? நண்பர்களே ! காந்தளூரைக் தாக்கித் தரைமட்டமாக்கிவிட்டால் அங்கிருக்கும் சட்டப் பெருமக்களும் பட்டர்களும் வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துவிடுவார்கள். அவர்களது மனோநிலையும் பெரிதும் பாதிக்கப்படும். அதற்குப்பிறகு கேரளத்தின் வீரர்களுக்கு அவர்கள் பயிற்சியளிப்பதை முழுவதும் நிறுத்திவிடுவார்கள் என்பது திண்ணம். படிப்படியாக திருவல்லவாழ்ச் சாலை, பார்த்திவசேகரபுரச் சாலை என்று அழித்துவிட்டு இறுதியில் மூழிக்குளத்தையும் தரைமட்டமாக்கிவிட்டால் இந்த மலைநாட்டில் அதற்குப் பின்னர் எந்தப் போர்ப்பயிற்சி கேந்திரங்களும் தோன்றாது. வீரர்களைப் பயிற்றுவிக்க எந்தச் சட்டனும் முன்வரமாட்டான். பெருமாளின் சேனானி நாயகங்களாக விளங்கும் பலரின் தைரியமும்கூட பாதிக்கப்படும். இவ்வாறாகப் போர்ப்பயிற்சி கேந்திரங்களை அழித்து முடித்துவிட்டால் சில நாட்களில் அருமொழித் தேவனோ அவனுடைய மகனோ கேரள சிங்காதனத்தில் சிரமமில்லாமல் அமர்ந்து விடலாம் - இதுதான் அவன் திட்டம் !"

"சோழர்கள் தம் படைகளுடன் நமது பூமியில் கால்பதிக்கும்போது நமது வீரக் கரங்கள் பூப்பறித்துக்கொண்டிருக்குமா என்ன ?"

"ஆஹா ! அப்படிச் சொல்லுங்கள் கோவர்ந்தன மார்த்தாண்டரே !"

"வலுச்சண்டைக்குச் சோழன் வந்தால் அவன் குலத்தை வேருடன் அழிப்போம் ! நமது நாட்டின் பழம் பெரும் சாலையைக் காப்போம் !"

"நன்றாகச் சொன்னீர்கள் கீழ்மலையாரே ! நண்பர்களே ! நம் நாட்டை நெருங்கிக்கொண்டிருக்கும் பகைவனை அழிக்கும் நேரம் நெருங்கிவிட்டது - தினவெடுத்த தோள்களுக்கும் துருப்பிடித்த வாள்களுக்கும் வேலை வந்து விட்டது...."

"வள்ளுவ நாடுவாழியார் சற்று பொறுக்க வேண்டும் ! முதலில் இது கேரள தேசத்தை - நமது மலைநாட்டை - கைப்பற்ற நடைபெறப்போகும் தாக்குதலா - அல்லது தனிப்பட்ட முறையில் சாலையை மட்டும் குறிவைத்து நடைபெறப்போகும் சண்டையா என்பதில் எனக்குத் தெளிவேற்படவில்லை. கேரளத்தை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றுவது அவர்களின் திட்டமெனில் நாம் அனைவரும் கூடி அவர்களை அழித்தொழித்தாகவேண்டும் - அதில் சந்தேகமில்லை. ஆனால் சாலை மட்டுமே தாக்கப்படப்போகிறது எனில் அதன் முழுப்பின்னணியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மலைநாட்டின் புகழ்பெற்றதொரு கல்வி கேந்திரம் தாக்கப்படப்போகிறதெனில் அதனைக் காக்கவேண்டிய பொறுப்பு நம்மினும் ஆயிரத்தவர் படைகளுக்குத்தான் அதிகம் என்பது என்னுடைய எண்ணம். நாம் நமது ஒட்டுமொத்தப் படைகளையும் இங்கு வந்து குவிப்பதற்குமுன் நிலைமையை சீராக அலசி ஆராயவேண்டியிருக்கிறது.... சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் நாம் - அதாவது நாடுவாழிகள் மட்டும் - கூடிப் பேசி முடிவெடுக்கக்கூடிய விஷயமே அல்ல இது !"

புரைக்கிழார் பேசிக்கொண்டே போக, வள்ளுவ நாடுவாழியின் முகம் அஷ்ட கோணல்களையும் அடைந்தது. மற்ற நாடுவாழிகள் மட்டும் அங்கில்லாமல் இருந்திருந்தால் அந்தக் கணமே புரைக்கிழாரின் கழுத்தை நெறித்துப் போட்டிருப்பார் அவர். நிலைமை அவருடைய கட்டுக்கு மீறிச் சென்றுகொண்டிருந்தது.

"...ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால்...."

"சொல்லுங்கள்..." என்று சொல்ல வாயெடுத்த வள்ளுவனாரின் முகம் சட்டென்று மாறிற்று. புரைக்கிழார் மேற்கொண்டு பேசப்போக, வள்ளுவ நாடாழ்வார் தன்னுடைய உதட்டில் வேகவேகமாகக் கையை வைத்து "உஸ்...." என்றார். பின்னர் மெதுவான குரலில் "எவரும் சப்தம் செய்யாதீர்கள் - அதோ அந்த மாளிகையின் மஹாமண்டபத்திற்குப் பின்னால் ஏதோ நிழல் அசைவதைப் போலில்லை ?"

"என்ன சொல்கிறீர்கள் ? இந்தப் பாழைடைந்த கோட்டைக்கு இந்த விடியல் நேரத்தில் எவராவது...." - அவர் வாக்கியத்தை முடிக்கவேயில்லை. ஏனெனில் வள்ளுவர் கைகாட்டிய திசையில் ஏதோ ஒரு கல் புரளும் சப்தம் அவர்கள் அனைவருக்குமே தெளிவாகக் கேட்டது.

"நண்பர்களே ! இதுதான்.... இதுதான் நமது தானைத் தலைவர் எழுதியிருக்கும் இரண்டாவது பயங்கரச் செய்தி ! நாம் ஒற்றறியப்படுகிறோம் நாடுவாழிகளே... இரவு பகலாக - ஒவ்வொரு நாளும் - நமது ஒவ்வொரு அசைவுகளும் மிகத் துல்லியமாக வேவு பார்க்கப் படுகின்றன.... ஆனால் இத்தனை இரகசியமாகக் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு அந்த ஒற்றன் வருவானென்பதை நானே எதிர்பார்க்கவில்லை... நண்பர்களே ! உங்கள் கைக்குறுவாள்களையும் வேல்களையும் உருவிக்கொள்ளுங்கள் ! வாயிற்காவலர்களுக்கு அதிகம் சப்தம் செய்யாமல் எச்சரிக்கை செய்யுங்கள் - அவனை இன்றிரவிற்குள் நாம் பிடித்தேயாக வேண்டும்..."

நாடுவாழிகளின் முகத்தில் சட்டென்று ஒரு பரபரப்பு பரவியது. அனைவரும் தத்தம் ஆயுதங்களை உருவிக்கொண்டார்கள். அதிலொருவர் தன்னுடைய இடையில் கட்டியிருந்த நீண்ட வாளை உருவப்போக, மற்றவர் "வேண்டாம் - சப்தம் அதிகமாக வரும் !" என்று அவருடைய கையை மறித்தார்.

அனைவரும் மகாமண்டபத்தின் பின்புறத்தை மெல்ல நெருங்கினார்கள். வள்ளுவனார் கைநீட்டி சைகை செய்ய, அதில் ஒரு குழு வடக்காகவும் மற்றது தெற்கேயும் பிரிந்து மகாமண்டபத்தை அணுகியது. அவர்கள் நெருங்க நெருங்க "ஹூம்...ம்...." என்ற மெல்லிய முனகல்கள் கேட்கத் துவங்கின.

வள்ளுவநாடாழ்வாரின் முகம் லேசாக மாறிற்று. மகாமண்டபத்தை வேகவேகமாக நெருங்கலானார் அவர்.

"ஏன் நீங்கள் மட்டும் செல்கிறீர்கள் ?" என்று எவரோ கேட்டு முடிப்பதற்குள் நாடுவாழியார் மகாமண்டபத்தின் பின்கட்டை அடைந்துவிட்டார். அவரைப் பின்பற்றி அனைவரும் அவசர அவசரமாக அந்தப் பகுதியை அடைந்தார்கள்.

"...ஏதோ ஒரு உருவம் போலில்லை ? அடே, யாரது மரியாதையாக வெளியே வா !"

"ம்....ம்....."

"அடேய், வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டாயா.... கொஞ்சம் இருங்கள்...." - அவர் சட்டென்று அந்த இருட்டுக்குள் நுழைந்துவிட்டார்.

"அட, யாரப்பா நீ ? உன்னை இப்படிக் கட்டிப் போட்டது யார் ? ஓ ! வாயில் துணி அடைக்கப்பட்டுள்ளதா... இதோ ! அவிழத்து விடுகிறேன்...."

"பிரபுவே ! என்னை மன்னிக்க வேண்டும் !" என்று அலறினான் அவன். "நான் கோட்டையின் தெற்கு வாயிற்காப்போன் ஐயா ! நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில்....அவன் வந்து...."

"உஸ்.... சிறிது நேரம் சப்தம் செய்யாதே ! நண்பர்களே - தூரத்தில் குதிரை பிளிரும் சப்தம் கேட்கவில்லை..?"

கேட்டது. அதனைத் தொடர்ந்து புரவியின் குளம்படி சப்தங்களும் கோட்டைக்குப் பின்னால் அமைந்திருந்த தெற்கு வாயில் பகுதியிலிருந்து மெதுவாகக் கேட்டது.

"தப்பிவிட்டான் நண்பர்களே ! அந்த ஒற்றன் தப்பிவிட்டான்...." - புருவங்கள் நெரிபட பற்களைக் கரகரவென்று கடித்த வள்ளுவனார் அந்த மாளிகையின் இருளடைந்த சாரளத்தை நோக்கினார். இருளோடு இருளாக அருவமாக நின்ற எவருடனோ அவரது கண்கள் சங்கேத பாஷையில் பேசியதைப்போல் தெரிந்தது.

(தொடரும்...)


வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter