ஆச்சாரியார் ஆலோசனை
ஆதவன் கிழக்கில் எழுந்து ஒரு பொழுது முடிந்த பின்னரும் அந்த அறையில் வெளிச்சம் அதிகமாகப் பரவியிருக்கவில்லை. அதற்குக் காரணம் அந்த அறையின் ஒரே சாரளம் சற்று உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததுதான் எனக்கொள்ளலாம்.
அது மிக எளிமையான அறை. அதன் மேற்குப் பகுதியில் புத்த பகவானின் சிறிய திருவுருவமொன்று ஒரு மேடையில் எழுந்தருளியிருந்தது. அவருக்கருகிலிருந்த குத்துவிளக்கில் சிறியதொரு சலனமும் இல்லாமல் சுடர் எரிந்துகொண்டிருந்தது. "சலனங்களை அகற்றிவிட்டால் மனதில் அமைதி கிட்டும்" என்னும் பகவானின் போதனையை அது தன்னால் முடிந்தவரையில் உபதேசிக்கிறது போலும். அந்த விளக்கின் ஒளியில் அந்த சிறிய விக்கிரகம் சொல்லமுடியாததொரு சோபையில் ஒளிர்ந்தது. பகவானின் புன்னகை அந்த அறை முழுவதும் பரவியிருப்பதைப் போன்றதொரு பிரமை ஏற்பட்டது.மேடையில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த நறுமண வத்தி மெல்லப் புகைந்துகொண்டிருந்தது. வத்தியின் சாம்பல் கொட்டி மேடை அசுத்தமாகிவிடக்கூடாது என்பதற்காக சந்தனக் கட்டையால் செய்யப்பட்டிருந்த சிறிய பெட்டிக்குள் அந்த வத்தி ஏற்றப்பட்டிருந்தது (31) . ஒரு சில நறுமணங்கள் நுகர்ந்த உடனேயே நாசியைத் தாக்கி மனதை கிறுகிறுக்கவைத்து காமாந்தகாரத்தைக் கிளம்பும். ஆனால் அந்த அறையில் பரவியிருந்த மெல்லிய சுகந்தமானது மனதைத் தெளியவைத்து சித்தத்தை திடமாக்கும் ஆற்றல் பெற்றிருந்தது.
(31) இன்றும் பல்வேறு பெளத்தர் வீடுகளில் இவ்வாறு பெட்டிக்குள் வத்தியை ஏற்றி வைக்கும் வழக்கம் தொடர்கிறது
மேற்கண்டவாறெல்லாம் வர்ணித்தும் நம்மால் அந்த அறையில் குடிகொண்டிருந்த ஆன்மீகச் சூழலை முழுமையாக விவரிக்கமுடியவில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அங்கே புறப்பொருட்களைத் தவிர கண்ணுக்குத் தெரியாமல் வேறொரு சக்தி ஆக்கிரமித்திருந்தது. நூற்றாண்டுகளாக அங்கே மகாதபஸ்விகளான பெளத்த குருக்கள் அல்லும் பகலும் தியானம் செய்து அந்த அறைக்குள் ஏதோ ஒருவிதமான சூழலை உண்டாக்கியிருந்தார்கள். கள்ள மனதுடன் உள்ளே நுழைபவனைக்கூடக் கனியவைத்து பகவானின் திருப்பாதங்களில் பணியவைத்துவிடும் அற்புதமான ஆற்றல் அந்த அறைக்கு இருந்ததுபோல் தோன்றியது.
அறையின் மத்தியில் - புத்த பகவான் படிமத்திற்கு நேரெதிரே இரண்டு பலாமர ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அந்த ஆசனங்களில் ஒன்றில் வயதான பெளத்த பிட்சு ஒருவரும் மற்றொன்றில் தாடி மீசை வைத்துக் கொண்டையைப் பின்னால் முடிந்துகொண்டிருந்த இள-மத்திய பிராயத்திலிருந்த ஒருவரும் பத்மாசனமிட்டு தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். காவியுடை தரித்து கைகள் குறுக்கே படிய அமர்ந்திருந்த வயதான பிட்சுவின் முகத்தில்உறுதியும் அன்பும் அற்புதமாகக் கனிந்திருந்தன. அடிக்கடி அவரது முகத்திலிருந்து மெல்லிய புன்னகை பூத்து மடங்கியது. முதுமை அவரது முகத்தில் கோடுகள் வரைந்திருந்தாலும் அவை ஒரு தேர்ந்த ஓவியனின் சரியான தூரிகைத் தீற்றல்களைப்போல மிக அழகாக அந்த முகத்தில் படிந்திருந்தன.
சற்றே உற்று நோக்கினால் அவருடைய கண்கள் அரைகுறையாக மூடியிருக்க கவனம் முழுவதும் மூக்கு நுனியில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை உணரலாம். காற்று அவருடைய நாசியின் ஒரு துவாரத்தில் மட்டும் நுழைந்தது. சிறிது நேரம் அடிவயிற்றில் தங்கியது. பின்னர் மற்றொரு துவாரம் வழியாகச் சீராகப் பிரிந்தது. நாசியின் துவாரங்களை கரங்களை வைத்து மூடாமலே அவரால் கட்டுப்படுத்த முடிந்தது (32) . கைகள் ஒன்றின்மேல் ஒன்று வைக்கப்பட்டிருக்க இரண்டு கட்டை விரல்களின் நுனிகளும் சந்தித்துக்கொண்டிருந்தன.
(32) பார்க்க - பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கான உரை, சுவாமி விவேகானந்தர், இராமகிருஷ்ண மடம் வெளியீடு
யோகத்தில் ஆழ்ந்து கனிந்திருக்கும் இந்த பிஷுவே விஹாரையின் ஆச்சாரியரான மகா காசியப தேரராக இருக்கவேண்டுமென்று யூகிக்கிறோம்.
கிட்டத்தட்ட இதே ஆழ்ந்த தியான நிலையில்தான் அந்தச் சீடரும் தெரிந்தார். ஆனால் இவரது முகத்தில் அன்பையும் கருணையையும் தவிர ஒரு அசாத்தியமான வீரக்களையும் பொங்கியது. வீரம் மட்டுமா.....? தைரியம், மனவுறுதி, மனத்திண்மை என்று எல்லையில்லாத ஆண்மையின் பல்வேறு உணர்வுகளுமல்லவா மாறி மாறி அந்த முகத்திலிருந்து சுடர்விடுகின்றன.... அடடா, இவரது முகத்தை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போலல்லவா இருக்கிறது ! தேஜஸ், ஓஜஸ் என்றெல்லாம் வடமொழியில் சொல்கிறார்களே - அது இவரது முகத்தில் பொலிந்துகொண்டிருப்பதுதானோ ?
கூர்மையான நாசிக்குக் கீழ் நன்கு முறுக்கிய மீசை. கருத்த புருவங்கள். அவை சட்டென்று அவ்வப்போது மெல்ல நெறிபட்டன - பின்னர் விலகின. வாய் எதையோ தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தது. சற்று நெருங்கிக் கேட்டோமானால் அது சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரம் என்பதை உணரலாம். அடடா, பெளத்த விகாரையில் அமர்ந்துகொண்டு சிவ நாமத்தை ஜபம் செய்துகொண்டிருக்கிறாரே இந்த வீரர் ! மிக வித்தியாசமான மனிதர்தான்....
அடர்ந்திருக்காமல் மெல்லிதாகக் தாடையிலிருந்து கிளம்பி காதுகளை அடையும் தாடி... ஒரு கொண்டையாகப் பின்தலையில் சுருட்டி முடிக்கப்பட்டிருக்கும் நீண்ட தலைமயிர்....காதுகளில் மிகப் பெரிய முத்துத் தோடுகள்... பாண்டி முத்துப்போலத்தான் தெரிகிறது. ஒரு அளவிற்கு மேற்பட்ட முத்துக்கள் அகப்பட்டால் முத்துக்குளிப்பவர்கள் வாணிபத்திற்குத் தரக்கூடாதாம்.... நேராகப் அரசரிடம் கொண்டு போய்க்கொடுத்துவிடவேண்டுமாம்... அவர் என்ன கொடுக்கிறாறோ அதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்ப வேண்டியதுதான். இப்படிப்பட்ட அரிய முத்துக்களைக் காதணிகளாக அணிந்துள்ள இந்த வீரர் பெரிய மனிதராகத்தான் இருக்க வேண்டும்.
மூச்சுக்காற்று அவருடைய நுரையீரல்களைச் சீராகத் தொட்டுவிட்டு மீண்டுகொண்டிருக்கின்றன. கரங்கள் இரண்டும் விறைப்பாக நீண்டு சின் முத்திரையில் முடிந்தன.
யுகயுகாந்திரங்கள் என்று சொல்லத்தக்க ஒரு நாழிகை நேரம் கழிந்தது.
ஆச்சாரிய பிஷூ மெல்லக் கண்களைத் திறந்து தனது சீடரின் முகவதனத்தை நோக்கினார். சீடரின் புருவங்கள் மெல்ல நெறிபடுவதை அவரது கண்கள் மங்கிய ஒளியிலும் கண்டுபிடித்துவிட்டன. அழகிய புன்னகையொன்று அந்த வயதான முகத்தில் மலர்ந்தது.
தன்னருகே வைக்கப்பட்டிருந்த வெண்கல மணியில் ஒரு குச்சியினால் அடித்து "டிங்..." என்றொரு மெல்லி ஓசை எழுப்பினார் ஆச்சாரியர். ஆழ்ந்த தியானப் பயிற்சிகளில் ஈடுபடும் பிஷுக்களின் பயிற்சி நேரம் முடிந்துவிட்டது என்பதைத் தெரிவிக்க அவர் பயன்படுத்தும் மணி அது. அந்தச் சிறிய ஓங்கார சப்தமானது மனதிற்கு அதிக அதிர்ச்சி தராமல் தியானத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சுயநினைவுக்கு மெல்லக் கொண்டு வரும் (33) .
(33) பெளத்தத் தியான முகாம்களில் இந்த வழிமுறை இன்றளவும் பின்பற்றப்படுகிறது
சீடரின் கண்கள் மிக மெதுவாகப் பிரிந்தன. எதிரே புன்னகையுடன் அமர்ந்திருக்கும் ஆச்சாரியாரைக் கண்டதும் அவரது வதனத்திலும் முறுவல் பூத்தது.
"குருதேவா...."
"சக்ரவர்த்திகளே (34)...."
(34) 987ல் வெளியிடப்பட்ட உடையார்குடியின் இரவிதாசன் கல்வெட்டில் இராஜராஜர் தன்னை சக்ரவர்த்தியாக முதன்முதலில் பிரகடனம் செய்துகொள்கிறார்
"அடடா, நீங்கள் ஒருவராவது என்னைப் பழைய பெயரிட்டு உரிமையுடன் அழைக்கக்கூடாதா ?"
அதற்கு பதில் சொல்லாமல் ஆச்சாரியார் மெல்லத் தலையைக் குனிந்துகொண்டார்.
"ஏன் குருதேவா ? என்ன தயக்கம் ? அதில் ஏதாவது சிரமம் உள்ளதா என்ன ?"
"பழைய பெயரிட்டு உன்னை அழைப்பதில் எனக்குச் சிரமம் ஒன்றுமில்லை - ஆனால் தயக்கங்கள் இருக்கின்றன.... உன்னைச் சுற்றி ஒரு கூட்டம் வந்துவிட்டதையா ! அந்தக் கூட்டம் உன்னைச் சுற்றிலும் ஒரு வேலியை உருவாக்கிவிட்டது. அது ஒரு வகையில் தேவைதான் என்பதை நான் பரிபூரணமாக உணர்கிறேன் - என்றாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இன்று காலையில் திருமெய்க்காப்பு வீரர்கள் விஜயம் செய்து விஹாரையின் பல்வேறு பகுதிகளையும் சோதித்தார்கள். என்னுடைய முழுச் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டுதான் செய்தார்கள் - என்றாலும் பிஷுக்களுக்கு அது சற்று சிரமமானதாகவே இருந்தது. நீ வருவதற்கு இரண்டு நாழிகைகள் முன்புகூட உன் உடன்கூட்டத்தார் தனியாக வந்து என் அறை முழுவதையும் சோதித்தார்கள்.. "
"ஆஹா ! உங்கள் அறையிலா சோதனையிட்டார்கள்....."
"ஆமாம்... சோதனை முடிந்தபின் ஒருவன் வாயிலிலோடு காவலுக்கு நின்றுகொண்டுவிட்டான். நீ உள்ளே நுழைவதற்கு இரண்டு வினாடிகளுக்கு முன்புதான் மாயமாக மறைந்தான்..."
"அடடா ! தங்களை முன்புபோல விஹாரையில் சந்திக்கவேண்டும் என்கிற ஆசையில் வந்து உங்களுக்கெல்லாம் வீண்சிரமம் கொடுத்துவிட்டேன்...."
"அருள்மொழி !" - ஆச்சாரியார் சற்று நிதானித்தார்.
அருள்மொழி ! அருள்மொழி ! அந்த ஒற்றை வார்த்தை நமது காதுகளில் ரோமாஞ்சனத்தை உண்டாக்குகிறது.... அருள்மொழி ! சோழநாட்டின் குஞ்சு குளுவானிலிருந்து வயதான கிழவர்கள்வரை கேட்டவுடன் சிலிர்த்துப் போகும் பெயர் அது..... சோழசைனியத்தின் வீரர்கள் தத்தம் வாயில் உச்சரித்தபடி காடுகளையும் மேடுகளையும் நாடு நதிகளையும் உற்சாகமாகக் கடக்கும் பெயர் அது..... ஒரு மிகப் பெரிய பேரலைபோல சோழநாட்டை உய்விக்கச் சில காலத்திற்குமுன்பு உருக்கொண்ட மகாசக்தியின் பெயர் அது....
இவரா ! இவர்தானா சோழநாட்டின் மகத்தான கதாநாயகராக விளங்கும் அருள்மொழித் தேவர்.... ஆஹா ! ஆச்சாரியாரைப் பின்பற்றி நாமும் இவரை அருள்மொழியென்றே அழைக்கிறோமே ! தில்லையின் மூவாயிரவர் இவருடைய திருமுடியில் வழிவழியாக வந்த சோழ மகுடத்தை ஏற்றிவைத்து புனித நீரைச் சொரிந்து இவரது காதுகளில் இவருடைய புதிய அபிஷேக நாமத்தை ஓதினார்களே... அது என்ன ? இராஜராஜ சோழ தேவர் ! உடையார் ஸ்ரீ இராஜராஜ சோழ தேவர் !
சில காலத்திற்கு முன் உற்சாகம் மிகுந்த இளைஞராய் இவரைச் சோழநாட்டிலும் இலங்கையிலும் சந்தித்திருக்கிறோம்... அப்போது அவர் சோழ இளவரசராகக்கூட இல்லை.... சாம்ராஜ்ஜிய பாரங்களில்லை... சுற்றிக் காவல்கொள்ள உடன்கூட்டத்தாரும் திருமெய்க்காப்பும் இல்லை.... அதனால்தானோ என்னவோ ஒரு பறவையைப்போல அவரும் நாமும் விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியாய் சுற்றித் திரிந்துகொண்டிருந்தோம்....
அப்பப்பா ! அந்த இளைஞருக்கும் இன்று நாம் காணும் மனிதருக்கும் எத்தனை வித்தியாசங்கள்....! சோணாட்டின் காடு மேடுகளிலும் வயல்வெளிகளிலும் வாஞ்சையோடு துள்ளித்திரிந்துகொண்டிருந்த ஒரு உற்சாக வாய்க்கால் மகாநதியாகிவிட்டது. நதி என்றவுடன் அதன் ஆழம், அகலம் நீளம், கரைகள் என்று எல்லாம்தான் உண்டு. ஆனால் அந்த நீரை ஒரு வாய் அள்ளிச் சுவைப்பவர்கள் பழைய வாய்க்காலின் சுவை இன்னும் மாறாமல் அந்த நதியில் ஒளிந்துகொண்டிருப்பதை உணர்வார்கள்...
இவரைக் கண்டவுடன் ஏன் மனது இத்தனை பிசைந்து போகிறது ? கண்களில் ஏன் கண்ணீர் கட்டிக்கொள்கின்றன ? கட்டித்தழுவி "ஐயா.. நலமா ?" என்று கேட்க ஏன் இதயத்திற்கு இத்தனை ஏக்கமுண்டாகிறது ? இது என்ன மாய மந்திரம் ? ஏறக்குறைய நமது நிலையில்தான் அந்த ஆச்சாரியாரையும் காண்கிறோம்.... உலக பந்தங்களையெல்லாம் துறந்து நிற்கும் அந்தத் துறவிக்கே இந்த நிலையென்றால் நாமெல்லோரும் எம்மாத்திரம் ?
"அருள்மொழி.... நீ இங்கு முன்புபோல் வந்ததில் பிஷுக்கள் அத்தனை பேருக்கும் மெத்த மகிழச்சி. இந்த மகிழ்ச்சிக்குமுன் அந்தச் சிறிய சிரமங்களெல்லாம் காற்றில் பறக்கும் தூசாகிவிட்டன..."
"ஆஹா ! நீங்கள் அருமொழி என்று வாய் நிறைய அழைக்கும்போது என் தந்தையாரின் ஞாபகம் வந்துவிடுகிறது. நீங்களும் அக்கனுமாவது முன்புபோலவே என்னை அழைக்கவேண்டும். விஹாரயைப் புதுப்பிக்கும் திருப்பணிகள் உங்களுக்குத் திருப்தி தரும் வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதா ?"
"புத்த பகவானின் பெருஙகருணையினால் நான் எதிர்பார்த்தததைவிடப் பன்மடங்கு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குரவன் இராஜராஜ மாராயர் பக்கத்திலேயே இருந்து வேலைகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்...பல்லவராயர் முடிகிறபோதெல்லாம் வந்து விசாரித்துவிட்டுப் போகிறார்... தஞ்சைக் கோயிலின் பிரதான சைத்ரிகரைக் கொண்டுவந்து விதானத்தின் பழைய சித்திரங்களைக்கூடப் புதுப்பித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார் - இதைவிட வேறு என்ன வேண்டும் எங்களுக்கு ?"
"என்ன இருந்தாலும் இந்த விஹாரையை ஓரளவிற்கு மேல் சீர் செய்ய முடியாது ஆச்சாரியரே ! கட்டிடத்தின் பல பகுதிகள் சீர் செய்யவியலாத அளவிற்குப் பழமையடைந்துவிட்டன. மேலும் கடலன்னை என்றாவது நம் மீது கோபம் கொண்டு அன்றொருநாள் நாகநன விகாரையை விழுங்கியதைப்போல் இதையும் விழுங்கிவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது.... சிறிது காலம் செல்லட்டும். நாகையில் விண்ணை முட்டும் கோபுரத்துடன் ஒரு அருமையான பெளத்த சேதியம் கட்டித் தருகிறேன்.... நீங்கள் உங்கள் சீடர்களுடன் அங்கு இடம் பெயர்ந்துவிடலாம்...."
"பகவானின் அருளால் அந்தத் திருப்பணியை நிறைவேற்றும் வலிமை உனது கரங்களுக்கு உண்டாகட்டும் ! பார், உன்னுடன் இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உன் வீட்டாரின் நலனை இன்னமும் நான் விசாரிக்கவில்லை.... தஞ்சை - பழையாறையில் எல்லோரும் சுகம்தானே ?"
"எல்லோரும் சுகம்தான் ! சுத்தமல்லி உங்களை மிகவும் விசாரித்தாள். என்னுடன் தானும் வருவதாக மிகவும் பிடிவாதம் பிடித்தாள். அவளை சமாதானப்படுத்திவிட்டுக் கிளம்புவதற்குள் உன்பாடு என்பாடு என்றாகிவிட்டது.... சிறிய குந்தவைக்கு வழக்கம்போல விளையாட்டு புத்தி ! நான் கிளம்புவதை கவனிக்கக்கூட அவளுக்கு நேரமில்லை..."
"அந்த முரட்டுப் பயல் என்ன செய்துகொண்டிருக்கிறான் ?" - ஆச்சாரியாரின் முகத்திலிருந்த முறுவல் சற்று பெரிதாக விரிந்தது.
"ஆஹா ! அவன் இப்போது நன்றாக வளர்ந்துவிட்டான். இளம் கன்றல்லவா ? பயமறியாமல் துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கிறது. அவனுடைய முரட்டுத்தனத்தை வீர விளையாட்டுக்களில் திருப்பிவிட்டுவிட்டேன். எந்நேரமும் வாள்பயிற்சி, வில்வித்தை, சிலம்பம் என்று கடகத்திலேயே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறான்... சிறிது காலம் கழித்து அவனை உங்களிடம் விட்டுவிடலாமென்று உத்தேசம். அவனுக்கு நுண்கலைகளையும் தியானத்தையும் தாங்கள் போதிக்க வேண்டும். தமிழ், பாலி மற்றும் வடமொழிகளில் அமைந்துள்ள இலக்கியங்களை எனக்குத் தாங்கள் சிறுவயது முதல் கற்றுக்கொடுத்ததுபோல் அவனுக்கும் கற்றுத்தர வேண்டும். அவனுக்குக் கலை மற்றும் ஆடல் பாடல் விஷயங்களில் என்னளவிற்குப் பித்துப் பிடிக்காவிட்டாலும் ஓரளவிற்கு நாட்டமிருக்கிறது. அதனை சீரமைக்க உங்களால்தான் முடியும். உங்களுக்குத்தான் அந்தப் பொறுமை உண்டு... அடடா ! அந்த நாட்கள் மீண்டும் திரும்பக்கூடாதா ! இந்த இராஜ்ஜிய விவகாரங்களை¨யெல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டு உங்களின் திருவடி நிழலில் அமர்ந்து பகவானின் உபதேசங்களைக் கேட்கும் நாள் மீண்டும் வாராதா..."
"அருள்மொழி ! உனக்கென்று சில கடமைகள் உள்ளன.... சில என்று குறிப்பிடுகிறேன், உண்மையில் பல கடமைகள் உள்ளன. உன்னைப் போன்றவர்களால் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் வண்ணம் அரிய பெரிய காரியங்களைச் செய்ய முடியும். சாதிக்க முடியும். அதனால்தான் புத்த பகவான் உன்மேல் கருணை கொண்டு துறவறத்தில் அதிகம் ஈடுபடுத்தவில்லை. சாம்ராஜ்ஜிய ஆசையே இல்லாமல் பறந்துகொண்டிருந்த உன்னை இராஜ்ஜியபாரம் ஏற்கும்படி செய்ய வைத்ததும் அவருடைய பெருங்கருணைதான்..."
"பகவானின் கருணை கடந்த மூன்று வருடங்களாக என் தலையை எந்நேரமும் அழுத்திக்கொண்டிருக்கிறது !" - அவர் தலைக்கு மேல் ஒரு பாறாங்கல் வைக்கப்பட்டிருந்ததைப்போல் பாவனை செய்தார்.
"அந்த பாரத்தை யாராவது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அருள்மொழி ! நல்லவர்கள் அதனை ஏற்கத் தவறினால் அது அல்லாதவர்களிடம் போய்ச்சேர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருந்துன்பங்களை விளைவிக்கும் ! மகானாகிய அசோகச் சக்ரவர்த்தி அதனால்தான் கடைசிக்காலம்வரை இராஜ்ஜிய பாரத்தை ஏற்றார்... துறவறம் பூண்டுவிடவேண்டும் என்று மிக ஆழமாக ஆசைப்பட்டாலும் தன்னுடைய கடமையை மனதில் நிறுத்தி கடைசிவரை நாட்டையாண்டார்... அறச் செயல்கள் பலவும் புரிந்தார்... நீயும் அவருக்கு சிறிதும் இளைத்தவனல்ல....."
"ஐயா ! கடல் போல சாம்ராஜ்ஜியம் விரிந்திருந்தும் கலிங்கப் போரின் கடுமையைக் காணச் சகிக்காமல் போரே இனி வேண்டாம்.. என்று புத்தபகவானின் சரண கமலாலயங்களை உறுதியாகப் பற்றிய அந்தச் இராஜ ரிஷி எங்கே, கையகல சோழ சாம்ராஜ்ஜியத்தை வைத்துக்கொண்டு அல்லாடும் நான் எங்கே..."
"போர் என்பது ஷத்திரிய தர்மம் அருள்மொழி ! துறவிக்குக் துறவு சுதர்மமாவதைப்போல் வீரனுக்கு வீரமே தர்மம் ! அதனைத் தடுக்க முடியாது.... முடிந்தவரை தவிர்க்கப் பார்க்கலாம். ஆனால் போரிலும் அறத்தைக் கடைபிடிக்கவேண்டும். அதுதான் முக்கியம். குறிப்பாகப் போரில் சம்மந்தப்படாத பெண்டுகளுக்கும் குழந்தைகளுக்கும் மதஸ்தாபனங்களுக்கும் ஒருபோதும் துன்பங்கள் விளைவிக்கக்கூடாது..."
அருள்மொழித் தேவர் தலையைக் குனிந்துகொண்டார். அவருடைய கண்கள் மிக நீண்ட நேரம் மூடிப் பின் திறந்தன.
"ஆச்சாரிய ! உங்களிடம் ஒரு முக்கிய ஆலோசனை பெறவே இங்கு வந்தேன். துரதிருஷ்டவசமாக அது ஒரு போர் சம்மந்தப்பட்டதுதான். இராஜ்ஜியம் இருக்கும் நிலைமை நீங்கள் அறியாததல்ல ! வேறு வழியில்லை என்கிற கட்டத்தை அடைந்ததும்தான் நான் இந்த இராஜ்ஜியபாரத்தை ஏற்க முன்வந்தேன். மகாவீரர்களான விஜயாலயரும் ஆதித்தரும் பராந்தகரும் இராஜாதித்தரும் தங்கள் உதிரத்தைச் சிந்தி ஸ்தாபிதம் செய்த இந்தப் பொன்னாடு என் கண்களின் முன் கூறுபட்டு சிதைவதைக் காணச் சகிக்காமல்தான் இராஜ்ஜியபாரம் என்னும் மிகப் பெரிய சுமையை தாங்குவதற்கு ஒப்புக்கொண்டேன். எனக்கு இறைவன் வைத்த முதல் சோதனை மதுரைப் போரின் வடிவில் வந்தது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றுமொரு பெருஞ்சோதனையை வைத்துவிட்டான் இறைவன்....."
வாயிற் கதவம் மென்மையாகத் தட்டப்பட்டது.
"யாரது ?" என்றார் ஆச்சாரியார்.
ஒரு பிஷு மெளனமாக உள்ளே நுழைந்தார். குனிந்த தலை நிமிராமல் "பெளர்ணமி பூஜைக்கு நேரமாகிவிட்டது..." என்றார்.
"இதோ வந்துவிடுகிறேன் ! அருள்மொழி - மன்னிக்க வேண்டும். இந்த மண்டல பூஜையை என்னால் தவற விடமுடியாது. மிக முக்கியமான முகூர்த்தம் இது. அதனால்..."
"அடடா, மன்னிப்பு என்றெல்லாம் பெரிய வார்த்தை பேசுகிறீர்களே ! நான் என்றைக்கும் உங்களின் சீடன்தான். இன்று மாலை உங்களை சந்திக்கவியலுமா ? இன்னும் இரண்டு நாட்களின் தாங்கள் காம்போஜம் கிளம்பப்போவதாக நீங்கள் விடுத்த முறியைப் படித்துவிட்டுத்தான் அவசர அவசரமாக உங்களை சந்திக்க வந்தேன்...."
"ஓ ! அப்படியா ! சரி, இன்று மாலை ஆதவன் மறைந்து ஒரு ஜாம நேரம் கழிந்ததும் நீ நேராக இதே அறைக்கு வந்துவிடு..."
"என்னுடன் பல்லவராயரையும் வேறு சிலரையும் கூட்டிக்கொண்டுவர அனுமதிக்க வேண்டும் சுவாமி !"
"தாராளமாக ! பூசனையில் நீயும் கலந்து கொள்கிறாயா ?"
"இல்லை சுவாமி ! பகவானை வணங்கிவிட்டுக் கிளம்பிவிடுகிறேன் - நண்பர்கள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்..."
"சென்று வா ! மாலை சந்திப்போம் !"
எழுந்திருப்பதற்குமுன் குனிந்து ஆச்சாரியாரின் திருவடி அட்டித் தொழப் (35) போனவரைத் தடுத்து அப்படியே கட்டியணைத்துக்கொண்டார் ஆச்சாரியாரான மஹா காசியப தேரர்.
(35) திருவடி அட்டித் தொழுவது என்பது சோழர்காலச் சொற் பிரயோகம். தஞ்சை இராஜராஜேஸ்வரத்தின் முதலாம் இராஜராஜர் கல்வெட்டொன்றில் இப்பிரயோகத்தினைக் காணலாம்
(தொடரும்...)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|