கதைக்களம் - ஒரு அறிமுகம்
இந்தக் கதையில் இதுவரை நடந்துள்ள சம்பவங்களையும் இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும் சரிவரப் புரிந்து கொள்ள அந்நாளைய சேர - சோழ - பாண்டி மண்டலங்களின் அரசியல் பின்னணியை வாசகர்களுக்கு சற்று விரிவாகவே விளக்கவேண்டியது நமது கடமையாகின்றது.
தென்னாட்டின் அந்நாளைய அரசியல் நிலவரம் சேர - சோழ - பாண்டியர் என்று அறியப்படும் முப்பெரும் சக்திகளாலும் அவர்களுக்குக் கீழ் தத்தம் பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த குறுநில மன்னர்களாலுமே வரையறுக்கப்பட்டது. இவர்களுக்குள் நிரந்தர நட்போ பகையோ என்றுமே இருந்ததில்லை. மாறிவரும் சூழலுக்கேற்ப இவர்கள் தங்களுக்குள் கூட்டுச் சேர்ந்துகொண்டார்கள்.. அல்லது சண்டையிட்டார்கள். ஒரு சாராருடைய வலிமை கூடும்போது மற்றவர்கள் இணைந்துகொண்டு அவர்களை எதிர்த்தார்கள். நிலைமை மாறியதும் இணைந்துகொண்டவர்கள் விலகினார்கள்.
தென்னாட்டிற்கு வடக்கே அமைந்திருந்த தேசங்கள் தமிழகத்தை வளைக்கத் தருணம் பார்த்துக் காத்திருந்தன. பலகீனமான சமயங்களில் ஆதாயம் தேடின. ஏதாவது ஒரு சக்தியுடன் இணைந்துகொண்டு மற்றதை எதிர்த்தால் தமது இராஜ்ஜியத்தைப் பெரிதாக்கிக்கொள்ள முடியுமா என்று சதா சர்வகாலமும் சிந்தித்தன. ஈழ மண்டலம் தமிழகத்தின் அரசியலில் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து சம்மந்தப்பட்டு வந்தது. இலங்கை அரசர்கள் பெரும்பாலும் பாண்டியர்களுடனோ சேரர்களுடனோ இணைந்துகொண்டு மற்றதை எதிர்த்தார்கள்.
இந்த அலகிலா விளையாட்டினால் மண்டலங்களின் எல்லையில் அமைந்திருந்த மக்கள் எத்தனை அவதிக்குள்ளாகியிருப்பார்கள் என்பதை வாசகர்களே ஊகித்தறிந்துகொள்ள வேண்டியதுதான்.
நமது கதை நடக்கும் காலத்தில் சோழரும் சேரரும் ஈழத்தவரும் ஓரளவிற்கு வலிமையோடு திகழ்ந்தார்கள். தமிழகத்திற்கு வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலம் குன்றிப் போயிருக்க, மேலை சளுக்கர் பலம் வளர்ந்துகொண்டே வந்தது. இவர்களைத் தவிர கங்கர்கள் - பாணர்கள் - வைதும்பர்கள் - நுளம்பர்கள் - இலாடர்கள் என்று எண்ணிலடங்காத குறுநிலச் சக்திகள் வேறு களத்தில் விளையாடிக்கொண்டிருந்தன.
***********************************************************************************************
அடுத்ததாக இந்தக் கதையின் முக்கியக் களமாகத் திகழப்போகும் சேரநாட்டின் அரசியல் மற்றும் சமுதாய அமைப்பைப் பற்றிப் பேசுவோம்.
சங்க காலமென்று அறியப்படும் கிமு 2ம் நூற்றாண்டிலிருந்து கிபி 3ம் நூற்றாண்டுவரை தமிழகத்தின் ஒரு பகுதியாக சேரநாடு என்றே அறியப்பட்டிருந்த கேரளமானது, சங்கத்திற்குப் பின் வந்த காலகட்டங்களில் மெல்ல மெல்ல தனக்கென்று தனியானதொரு அரசியல் மற்றும் கலாச்சாரப் பின்னணியை உருவாக்கிக்கொண்டது. சங்க காலத்திற்குப் பின்வந்த களப்பிரர் ஆட்சி கேரளத்தில் பரவியதாகத் தெரியவில்லை. களப்பிரருக்குப் பின் தமிழகத்தில் பல்லவர் ஆதிக்கம் மலர்ந்த அதே காலகட்டத்தில் மலைநாடான கேரளத்தில் பெருமாள் வம்சத்தினரின் ஆட்சி உருவாகியது. இக்குலத்தின் மிக மூத்த மன்னராக அறியப்படும் குலசேகரப் பெருமாள் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராவார். திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இவருடைய பக்திப் பனுவல்கள் "பெருமாள் திருமொழி" (36) என்றே அறியப்படுகின்றன. குலசேகரப் பெருமாளுக்குப் பின் சேர வம்சத்தில் குறிப்பிடத்தக்க மன்னராக விளங்கியவர் 64 நாயன்மார்களுள் ஒருவரான கழற்றறிவார் ஆவார். இவருடைய இயற்பெயர் மறைந்துபோய் சேரமான் பெருமாள் என்றே பக்தி இலக்கியங்களில் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறார். உண்மையில் சேரமான் பெருமாள் என்னும் பெயர் சேர அரசின் பெருமாள் வம்சத்து மன்னர்கள் அனைவருமே தரிந்திருந்த பட்டப் பெயராகும்.
(36) பெருமாள் திருமொழியில் இராமபிரானுக்குத் தனி மகத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதும் சேர அரசர்கள் இரவி வம்சத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரவி என்றால் சூரியன் என்று பொருள். இராமபிரானும் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவரே. மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே என்னும் புகழ்பெற்ற பாடல் பெருமாள் திருமொழியாகும் !

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகரப் பெருமாள்
சேரமான் பெருமாள் தேவார மூவரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் காலகட்டத்தைச் சார்ந்தவர். இருவரும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். இவரது காலகட்டத்தில்தான் கேரளத்தின் தலைநகராக விளங்கிய மகோதயபுரத்திற்கு அருகில் அமைந்திருந்த திருவஞ்சைக்களம் என்னும் சைவத்தலம் புகழ்பெற்றது. அப்பர் பெருமானால் வைப்புத்தலமாகப் பாடப்பெற்ற அஞ்சைக்களம் நம்பியாரூரரால் முறைப்படி பாடல்பெற்ற தலமாகியது.

திருவஞ்சைக்களம்
நம்பியாரூரரான சுந்தரர் தனது பூத உடலுடன் தேவ கஜமான அயிரவாரணத்தில் கையிலைக்குப் புறப்பட, அவரது பிரிவைத் தாங்கமுடியாத சேரமான் பெருமாள் தனது அசுவத்தின் காதுகளில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்துப் பறக்க வைத்தார் என்பது பெரிய புராணம் சுட்டும் செய்தி (37) . கயிலையை அடைந்ததும் சுந்தரர் திருநொடித்தான் மலைத் திருப்பதிகத்தையும் பெருமாள் திருக்கயிலாய ஞான உலாவையும் அரங்கேற்றம் செய்து பெம்மானை மகிழ்விக்கின்றனர். தமது அரசர் திடீரென்று மறைந்துபோய்விட்டதை அறிந்த சேர மன்னரின் உடன் நின்ற பரிவாரத்தார், தாம் தம் கடமையிலிருந்து வழுவியதாகக் கருதி தற்கொலை செய்து கொண்டார்களாம்... சேக்கிழார் பெருமான் சொல்கிறார் !
மேற்கூறிய இரண்டு சேர அரசர்களையும் அவர்தம் வாழ்வையும் பக்தி இலக்கியங்கள் பாங்குறப் பதிவு செய்திருந்தும் கல்வெட்டுக்கள் / செப்பேடு சாசனங்கள் முதலான மூல வரலாற்றுச் சான்றுகள் இவர்தம் காலகட்டங்களில் கிடைக்காததால் இராஜசேகரர் (38) (கி பி 800 - 844) என்னும் அரசரையே வரலாற்று வெளிச்சம் சுட்டும் முதல் அரசராக கேரள வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கின்றனர். இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் புகழ்பெற்ற மன்னரான ஸ்தாணு இரவி என்பவராவார். இவரது காலத்தில் சேரநாடு பலம் பொருந்திய நாடாக விளங்கிற்று. இவர் சோழநாட்டில் அந்நாளில் எழுச்சியுற்று விளங்கிய முதலாம் ஆதித்த சோழருடன் நெருக்கமான உறவு பூண்டிருந்தார். ஸ்தாணு இரவியின் அவையை அலங்கரித்த சங்கரநாராயணர் என்னும் வானவியல் வல்லுனர் எழுதிய சங்கரநாராயணீயம் என்னும் வானவியல் நூல் அந்நாளைய சேரர் தலைநகரின் அமைப்பையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. இதனைப் பின்னர் வரப்போகும் அத்தியாயங்களில் விரிவாகக் காண்போம்.

சேரமன்னர் பாஸ்கர இரவிவர்மன் திருவடியால் வெளியிடப்பட்ட திருக்கோடித்தானம் கல்வெட்டு
ஸ்தாணு இரவியைத் தொடர்ந்து விஜயராகவர், கோதா இரவி வர்மர் (கி பி 883 - 913) இந்து கோத வர்மர் (கி பி 944 - 962) எனத் தொடர்ந்த சேர அரச வம்சத்தில் நம் கதை நடக்கும் காலமான கி பி 988ல் மன்னராக விளங்கியவர் மனுகுலாதித்தரான பாஸ்கர இரவிவர்மன் திருவடியாவார். மிக இளம் பருவத்திலேயே மணிமகுடம் தரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் பாஸ்கரர் முறையாகத் தன்னை மன்னராக அறிவித்துக்கொண்டது தாம் இருபத்தி ஐந்தாம் பிராயத்தை அடைந்த ஆண்டான கி பி 979ல்தான். இவருடைய ஆட்சியாண்டு இரண்டு கட்டங்களில் - அதாவது இருபத்தைந்து வயதிற்கு முன் / இருபத்தைந்திற்குப் பின் - என்று பதிவாக்கப்பட்டுள்ளதால் குழப்பமடைந்த ஆய்வாளர்கள் இரண்டு பாஸ்கர இரவிவர்மர்களை முன்னிறுத்துவது பிழையானது என்று தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
(37)இந்த வரலாறு முதலாம் இராஜராஜரின் காலகட்டத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது தஞ்சை பெரிய கோயிலின் பிரம்மாண்டமான சோழர்கால ஓவியத்தாலும் திருவலஞ்சுழி ஷேத்திரபாலர் திருக்கோயில் குறுஞ்சிற்பத்தாலும் உறுதியாகின்றது. (38)கேரளத்தின் செப்பேடுகளுள் மிகப் பழமையானதாக அறியப்படும் வாழப்பள்ளி செப்பேடுகள் இம்மன்னரின் 12ம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றவை
***********************************************************************************************
பெருமாள் அரசர்களின் வலிமைவாய்ந்த படையாகத் திகழ்ந்தது ஆயிரத்தவர் படையாகும். இப் பெரும்படையின் தலைவர் படைமேல் நாயர் என்றறியப்பட்டார். வல்லோப்பள்ளி, தையப்பள்ளி, கிளிக்கொத்தா மற்றும் கத்தொளி என்னும் நான்கு படைவீடுகளும் இப்படையினருக்குத் தலைமையேற்றன. நிசும்ப சூதனியான துர்க்கா தேவியைக் குல தெய்வமாகக் கொள்ளும் அந்நாளைய படைவீரர் மரபின்படி இவர்கள் கொடுங்கோளூரான மகோதயபுரத்தில் அருள்பாலித்துவந்த (39) பகவதி தேவியை தம் தெய்வமாகக் கொண்டாடினார்கள். மீனமாதத்தில் வரும் கொடுங்கோளூர் பரணி என்னும் திருவிழா இவர்களுக்குரியதே.
ஆயிரத்தவர் படைகளைத் தவிர சேரமானின் அணுக்கமான திருமெய்க்காப்புப் படையாகத் திகழ்ந்தது "உடன் நின்ற பரிவாரத்தார்" என்றும் சேவகர் அல்லது சாவீர் என்றும் அழைக்கப்பட்ட தற்கொலைப் படையாகும் (40) . இப்படையின் நோக்கங்கள் ஏறக்குறைய சோழரின் உடன்கூட்டத்துப் படைகளையும் பாண்டியரின் தென்னவன் ஆபத்துதவிகள் படையினரையும் ஒக்கும். இவர்களுடைய அதிகாரங்களையும் கடமைகளையும் செயல்பாடுகளையும் வெளிநாட்டுப் பயணிகள் பலரும் வியந்து துல்லியமாகப் பதிவுசெய்திருக்கின்றனர். அரசன் காலையில் துயிலெழுவது முதல் பள்ளியறைக்குச் செல்வது வரை அவரது ஒவ்வொரு செயல்பாட்டிலும் இப்படையினரின் தலையீடு இருந்தது. கண்காணிப்பு இருந்தது. பாதுகாப்பு இருந்தது. உயிரைக் கொடுத்தாவது அரசரைக் காப்பது - ஒருவேளை சக்தி மீறிப்போய் அரசனைப் பறிகொடுக்க நேர்ந்தால் அவருடன் தாமும் பிராணத்தியாகம் செய்வது என்னும் பயங்கரமான சபதத்தை இப்படையினர் ஏற்றிருந்தனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசனுக்காக தனது உயிரையும் கொடுக்க முன்வருபவருக்குப் பிரத்யேக அதிகாரங்கள் ஒவ்வொரு இராஜ்ஜியத்திலும் இருந்ததில் வியப்பில்லையல்லவா ?
(39) இன்றளவிற்கும் இக்கோயில் கேரளத்தின் புகழ்பெற்ற திருக்கோயில்களுள் ஒன்றாக விளங்குகிறது (40) இவ்வகைப் படையினரைப் பற்றிய குறிப்புக்கள் தொன்றுதொட்டு வழங்கிவருவதை வரலாற்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். கெளடில்யரின் அர்த்தசாஸ்த்திரம் இவர்களை ஆசன்னா என்றும் தசாவர்க்கிகா என்றும் குறிப்பிடும்
***********************************************************************************************

கேரளத்தின் அந்நாளைய நாட்டுப் பிரிவுகளைக் கோடிட்டுக் காட்டும் பண்டைய படம் - நாற்பதுகளில் வெளியான ஒரு அரிய நூலிலிருந்து. (நூல் உதவி - என்னுடைய தந்தையார்)
பெருமாள் வம்சத்து அரசர்கள் தங்களைக் "கேரளாதி நாதர்", "சக்ரவர்த்திகள்" "கோனேரின்மை கொண்டான் கோ" என்று பற்பல பெயர்களிட்டு அழைத்துக்கொண்டாலும் அவர்களது அரசியல் பலமும் அதிகாரமும் குறுகியதொரு எல்லைக்குள்தான் படர்ந்து கிடந்தது என்பதாகக் கேரளத்து வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் மலைநாட்டின் அரசியல் பலத்தை நிர்ணயித்தது அதன் பல்வேறு கூறுகளாக அமைந்திருந்த நாடுகளும் அந்தந்த நாடுகளில் தத்தம் அதிகாரத்தைச் செலுத்திய நாடுவாழிகளுமேயாவர். இவர்களைக் கிட்டத்தட்ட தமிழகத்தின் குறுநில மன்னர்களுக்கு ஒப்பிடலாம்.
கேரளத்தின் வடக்கே அமைந்திருந்த கொளத்துநாட்டில் துவங்கி புரைக்கிழநாடு, குறும்பொறை நாடு, இராமவளநாடு, குட்டநாடு என்று விரிந்து தெற்கில் வேணாடு, வள்ளுவநாடு, குறுநாடு, படப்பாநாடு, முடாலநாடு மற்றும் நாஞ்சில் நாட்டில் முடியும் இந்தப் பண்டைய நிலப்பரப்புகள் கிட்டத்தட்ட பதினெட்டாம் நூற்றாண்டுவரைகூட வழக்கில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை இன்றைய வட்ட- மாவட்டப் பகுதிகளோடு ஏறக்குறைய ஒப்பிடலாம்.
நாடுவாழிகள் என்றும் நாடுடையவர்கள் என்றும் அழைக்கப்பட்ட இம்மரபினர் வம்சாவழியாக தத்தம் பகுதிகளில் ஆட்சி செலுத்தினர். மகோதயபுரத்தின் சேரமான் பெருமாளின் ஆதிக்கத்திற்கு இவர்கள் உட்பட்டவர்களாகக் காட்டிக்கொண்டாலும் இவர்களுக்கென்று ஆள், அம்பு, படைபலம், அதிகாரம், வருமானம் என்று எல்லாம் இருந்தன. போர்க்காலங்களில் பெருமாளுக்குத் தோள்கொடுத்துத் தத்தம் படைகளை அனுப்பும் கடமை இவர்களுக்குண்டு. பல்வேறு நாட்டுப் பகுதிகளைக் கொண்டிருந்த இந்தக் கூட்டத்தில் வள்ளுவ நாடாழ்வார் கணிசமான அதிகாரங்களைப் பெற்றிருந்தார்.
***********************************************************************************************
இவ்வாறாகக் கேரளத்தின் முக்கிய அரசியல் மற்றும் சமுதாய சக்தியாக நாடுவாழிகள் விளங்கினார்களெனில் அவர்களை ஈடுகட்டும் மற்றொரு வலிமைவாய்ந்த பிரிவினராகக் கேரளத்தின் நம்பூதிரி அந்தணர்கள் வளர்ந்திருந்தார்கள். ரிஷிபர்யனான (41) பார்க்கவ இராமன் தன்னுடைய வலிமை வாய்ந்த கோடாரியைக்கொண்டு ஸ்தாபிதம் செய்த பிரம்ம ஷேத்திரமாக மலைநாட்டை கேரள அந்தணர்கள் கொண்டாடினார்கள். இவர்களின் மூத்த குடியிருப்புக்கள் கேரளமெங்கிலும் முப்பத்தியிரண்டு கிராமங்களில் (42) வேரூன்றியிருந்தன. இவற்றுள் பெருஞ்செல்லூர் முதலான பண்டைய கிராமங்கள் சங்ககாலம் தொட்டுப் புகழ் பெற்றிருந்தவை.
கேரள அந்தணர்கள் தத்தம் கிராமங்களின் பண்டைய ஆகம நூல்களையொட்டிக் கோயில்கள் அமைத்தார்கள். ஊரின் மேற்கில் விஷ்ணுபட்டாரகருக்கான மேற்றளியும் கிழக்கில் சிவ தளியும் தோன்றின. கோயில்களுக்கு நிலங்கள் நிவந்தங்களாகக் கொடுக்கப்பட்டன. கோயிலின் வழிபாடுகளைக் கண்காணிக்கவும் ஊரை நிர்வகிக்கவும் மகாசபை என்னும் அமைப்புக்கள் தோன்றின. இவற்றுள் அரசியல் வலிமை வாய்ந்த அமைப்பாக உருவானது மகோதயபுரத்தின் நாலுதளிச் சபை என்றழைக்கப்பட்ட அமைப்பாகும்.
மகோதகையின் நான்கு திக்குகளிலும் அமைந்திருந்த மூழிக்குளம், ஐரணிக்குளம், பரவூர் மற்றும் இரிஞ்ஞாலக்குடை என்னும் அந்தணக் கிராமங்களில் அமைந்திருந்த கீழ்த்தளி (43), மேற்றளி, நெடியதளி, சிங்கபுரத்தளி என்னும் நான்கு திருக்கோயில்களின் தளியதிகாரிகளைக் கொண்டிருந்ததொரு அமைப்பாகும் இது. ஒவ்வொரு கோயிலிலிருந்தும் இரண்டு தளியதிகாரிகள் இந்த அமைப்பில் செயல்பட்டார்கள். நாலுதளிச்சபை சேரமான் பெருமாளின் அந்தரங்க ஆலோசனைக்குழுவாக விளங்கியது மிகவும் குறிப்பிடத்தக்கது. நாலுதளிச்சபைக் கூட்டங்கள் அனைத்திலும் அரசரின் பிரதிநிதியாக "கோயிலதிகாரிகள்" என்றழைக்கப்பட்டவர் கலந்துகொள்வது வழக்கம். மேற்குறிப்பிட்ட கிராமங்கள் நான்கும் கேரளமெங்கிலும் படர்ந்திருந்த முப்பத்தியிரண்டு கிராமங்களுக்கும் தலைமைச் செயலகங்களாக விளங்கியதால் நாலுதளிச்சபை ஏறக்குறைய கேரளத்தின் வலிமை வாய்ந்ததொரு பிரிவினரின் ஒருமித்த குரலாகவே ஒலித்தது. தமிழகம் முழுவதும் அக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இருந்தும் கேரளத்தின் நாலுதளிச்சபைக்கு இணையான அரசியல் - சமுதாய அமைப்பு இங்கு தோன்றவேயில்லை என்பது கவனிக்கத்தக்கது.
(41) இது பரசுராமரைக் குறிக்கும் மலையாள சொற்பிரயோகமாகும். (42) இந்த 32 கிராமங்களும் வரலாற்றாசிரியர்களால் இன்றைய தேதியில் அடையாளங்காணப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது (43) இது திருவஞ்சைக்களக் கோயிலாகக் கொள்ளப்படுகிறது
***********************************************************************************************
கேரள அந்தணர்கள் சாலை அல்லது சாலா (வடமொழியில் ஜூவாலா) என்றழைக்கப்பட்ட சிறந்ததொரு கல்வி அமைப்பை ஏறக்குறைய நமது கதை நடக்கும் காலத்திற்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பாக உருவாக்கியிருந்தார்கள். இது கிட்டத்தட்ட பல்லவர்களின் கடிகா அல்லது கடிகை என்னும் கல்வியமைப்பை ஒத்திருந்தாலும் கேரளத்தின் கலாச்சாரப் பின்புலத்தையொட்டி பல்வேறு அம்சங்களில் வேறுபட்டும் செயல்பட்டது. சாலைகளில் கற்பிக்கப்பட்ட கலைகளுள் முக்கியமானது பண்டைய தனுர் வேதத்தையும் தென்னாட்டின் போர்முறைகளையும் இணைத்து கேரள ஆசான்கள் உருவாக்கியிருந்த புதுமையானதொரு ஆயுதப்பயிற்சி முறை ஆகும்.
அந்நாளில் தென்னகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதவிதமான சண்டைப் பயிற்சிமுறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. பொதுப் பயிற்சிகளான வாள் வித்தை, வில்வித்தை, மல்யுத்தம் சிலம்பம் முதலானவை தவிர பிராந்தியக் குழுக்களுக்கென்றமைந்த பிரத்யேக ஆயுதப் பயிற்சிகளும் தனியாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டன. உதாரணமாக பாண்டியரின் தென்னவன் ஆபத்துதவிகளுக்கென்று தனித்ததொரு பயிற்சிக்கூடம் செயல்பட்டதாக மூத்த வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் தெரிவிக்கிறார் (44) . கேரளத்தின் சாலை மையங்களில் கருக்கொண்ட இப்பிரத்யேகப் பயிற்சியானது முதுபெரும் ஆசான்களால் உருவாக்கப்பட்டு நுட்பமான முறையில் பயிற்றுவிக்கப்பட்டது (45).
உடல் - உடலின் பலம் - மனம் - மனதின் பலம் - உடல் மற்றும் மனதிற்கு அப்பாற்பட்ட பிராணசக்தி - என்னும் ஐந்தின் துணைகொண்டு (46) அற்புதமானமுறையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஆயுதப் பயிற்சியானது திருமணமாகாத பிரம்மச்சரிய இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. சாலையின் மாணவர்கள் பட்டர்கள் எனவும் பயிற்றுவிக்கும் ஆசான்கள் சட்டர்கள் எனவும் அழைக்கப்பட்டார்கள். பின்னாளில் உருவான சட்டாம்பிள்ளை என்னும் வார்த்தைக்குச் சட்டன் என்பதே வேர்ச்சொல்லாகும். மாணவர்கள் "கலங்கள்" என்றழைக்கப்படும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டார்கள். பவிஷிய சரணத்தார் கலம், தைத்திரிய சரணத்தார் கலம் என்று ஒவ்வொரு கலத்திற்கும் வேத ஆகமங்களையொட்டி ஒரு பெயர். பண்டைய சாத்திரங்கள், அரசியல் விவகாரங்கள், மருத்துவம், விஞ்ஞானம், மாந்திரீகம், வர்மம் என்று பல்வேறு பாடங்களும் நுண்கலைகளும் சாலைகளில் பயிற்றுவிக்கப்பட்டன.
அரசர்கள் சாலைகளுக்கு நிலங்களை நிவந்தங்களாகக் கொடுத்து ஆதரித்தார்கள். இவை சாலாபோகம் என்றழைக்கப்பட்டன. இதற்குப் பிரதியுபகாரமாக (நன்றி தெரிவிக்கும் முகமாக) சாலையின் சட்டர்களும் பட்டர்களும் போர்வீரர்களைப் பயிற்றுவித்திருக்கவேண்டும் - போர்களிலும் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. வேணாட்டின் பார்த்திவசேகரபுரத்தில் ஆய்வேளரசர் கோக்கருந்தடக்கன் ஒரு புதிய சாலை அமைத்ததையும் அதற்குச் சாலாபோகமாக நிவந்தங்கள் கொடுக்கப்பட்டதையும் பதிவு செய்யும் முக்கிய வரலாற்று ஆவணமே பார்த்திவசேகரபுரச் (47) செப்பேடுகளாகும். அந்நாளைய சாலைகளின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள இந்த ஆவணம் பெரிதும் பயன்படுகிறது. காந்தளூர்ச் சாலையின் செயல்பாடுகளை மாதிரியாகக் கொண்டு இச்சாலையின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
பார்த்திவசேகரபுரச் சாலைக்குத் தெற்கே புறத்தாய நாட்டில் அமைந்திருந்த கழிக்குடியில்(48) ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை என்றழைக்கப்பட்ட மற்றொரு சாலை செயல்பட்டது.
(44) பார்க்க : The Pandyan Kingdom, K.A.Nilakanda Sastri, Madras University Publication (45) இப்பயிற்சிமுறையே இந்நாள்வரை கேரளத்தில் பயிற்றுவிக்கப்படும் களரி என்னும் சண்டைப்பயிற்சி முறையின் மூலவித்தையாகும். அருகிவரும் ஆயகலைகளுள் இதுவுமொன்றுs (46) களரியைப் பற்றி பிலிப் ஸர்ரிலி என்னும் வெளிநாட்டுப் பேராசிரியர் ஒருவர் பலகாலம் ஆராய்ந்து "When body becomes all eyes" ("உடல் முழுவதும் கண்களானால்...") என்றொரு புத்தகம் வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தின் பெயரே இக்கலையையின் இயல்பை மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது (47) இன்றைய நாகர்கோயிலுக்கருகில் முன்சிறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது (48) இன்றைய கன்னியாகுமரி
***********************************************************************************************
இவ்வாறாக சேர அரசர்கள் நாடுவாழிகள் ஒரு புறம், ஆயிரத்தவர் மற்றொரு புறம், நாலுதளச்சபை வேறொரு புறம், இதர சக்திகள் இன்னொரு புறம் என்று பல்வேறு சக்திகளால் சூழப்பட்டிருந்தனர். இவர்களை அனுசரித்துக்கொண்டுதான் முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டி வந்தது. இந்தப் பின்புலத்தை ஆழமாக மனதில் நிறுத்திக்கொள்ளுமாறு வாசகர்களைக் கோருகிறோம். இதுவரை மலைநாட்டின் சுருக்கமான சமூக - அரசியல் பின்னணி விவரிக்கப்பட்டது. இனி கேரள - தமிழக அரசியல் உறவுகளைப் பற்றி ஒரு பறவைப் பார்வை பார்த்துவிட்டு மேலே நகர்ந்துவிடுவோம்.
***********************************************************************************************
பன்னெடுங்காலமாக கேரளம் தமிழகத்தோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளால் கேரளத்தின் குறுநில மன்னர்களும் இதர பிரிவினரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தனர். இக்குடியினருள் மிகத் தொன்மையானவர்கள் "தில்லை மூவாயிரவர்" என்று சுந்தரமூர்த்திப் பெருமானால் குறிக்கப்படும் சிதம்பரத்தின் தில்லைவாழ் அந்தணர்களாவர். இவர்கள் 64 நாயன்மார்களுள் ஒருவராகத் திருத்தொண்டர் தொகையில் குறிக்கப்படுவர்.

சிதம்பரம் திருக்கோயிலும் பொன்னம்பலமும் (இன்றும் சேரநாட்டில் கோயில் அம்பலம் என்றுதான் குறிக்கப்படுகின்றது)
சோழ அரசர்கள் தில்லையம்பதியின் பெருமானைத் தங்கள் குலநாயகம் (குலதெய்வம்) என்று குறித்தனர். சோழ இளவரசர் ஒருவர் அரசராகப் பதவியேற்கும்போது மணிமுடியை மன்னரின் முடியில் இருத்தும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே உரியதாம். ஆக சோழ அரசின் பட்டமேற்பு விழா வைபவம் தில்லையம்பதியின் நடராஜப் பெருமான் முன்னிலையில்தான் நடந்திருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. சிதம்பரத்திற்கருகில் அமைந்துள்ள கீழச்சாலை என்னுமிடத்தில் அந்நாளில் ஒரு சாலை அமைப்பு செயல்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
சிதம்பரத்தைத்தவிர திருச்சிக்கடுத்து அமைந்துள்ள பழுவூரிலும் (49) பலகாலமாகவே கேரள மரபினர் வாழ்ந்து வந்துள்ளனர் என்பது திருஞானசம்மந்தரின் பதிகத்தால் (50) தெளிவாகும். பழுவூரை மன்னுபெரும் பழுவூர் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பலகாலமாகவே இப்பகுதி பழுவூர் கேரள மரபைச் சார்ந்த பழுவேட்டரையர்கள் என்னும் குறுநில மன்னர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டு விளங்கியது. சோழவம்சத்து அரசர்களுக்கும் பழுவூர் வம்சத்தாருக்கும் நெருங்கிய அரசியல் உறவு அமைந்திருந்தது என்பதை அவர்களது மணவினைத் தொடர்புகளால் உறுதி செய்யலாம்.

பழுவூர் தென்வாயில் ஸ்ரீகோயில் - கேரள மரபையொட்டி இத்திருக்கோயில் ஸ்ரீ கோயில் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
(49) பழுவூர் இன்று திருச்சியிலிருந்து அரியலூருக்குச் செல்லும் சாலையில் மேலைப் பழுவூர் கீழைப்பழுவூர் என்று இரண்டு ஊர்களாகக் காட்சியளிக்கிறது. இவ்வூர்களில் அமைந்துள்ள அவனி கந்தர்ப்ப ஈசுவரகிருஹம், தென் வாயில் ஸ்ரீகோயில், ஆலந்துறையார் கோயில் முதலானவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பராமரிப்பின்மையினால் இவை மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன (50) மலைநாட்டு அந்தணர் புகழ்ந்தேத்தும் இறையே என்பதாக இவர் பழுவூர் இறைவனைப் பாடுகிறார்
***********************************************************************************************
பிற்காலச் சோழர்களில் மகாவீரராக விளங்கிய முதலாம் ஆதித்தசோழர் காலத்தில் கேரள - சோழ உறவு மிக நெருக்கமாக மலர்ந்தது. அவருடைய காலத்தில் சேரநாட்டை ஆண்ட ஸ்தாணு இரவிப் பெருமாளுடன் ஆதித்தர் நெருங்கிய நட்புப் பூண்டிருந்தார் என்பதை முன்னரே குறிப்பிட்டோம். இந்நட்புக்கு அந்நாளைய அரசியல் சூழல்களும் ஒரு காரணம் என்று குறிப்பிடுவதில் தவறில்லை. தில்லைஸ்தானத்தில் கிடைத்ததொரு கல்வெட்டில் ஸ்தாணுஇரவியும் ஆதித்த சோழரும் இணைந்து கங்க மன்னர் பிருதிவீபதியின் புதல்வர் விக்கியண்ணனுக்கு (போரில் புனைந்த வீரச்செயல்களைப் பாராட்டும் விதமாக) செம்பியன் தமிழ்வேள் என்னும் பட்டம் கொடுத்துச் சிறப்பிக்கும் முக்கியச் செய்தி காணக்கிடைக்கிறது.
இவ்வாறு ஆதித்தரின் காலத்தில் மலர்ந்த சேர-சோழ உறவு அவரது மகனான முதலாம் பராந்தகர் காலத்தில் மேலும் செழித்தோங்கியது. கிபி 907ல் பட்டமேற்ற பராந்தகர் ஸ்தாணு இரவியின் புதல்வியும் சேர இளவரசியுமான கோக்கிழானடிகளைக் கைப்பிடித்தார். பராந்தகருக்கும் சேர இளவரசியாருக்கும் பிறந்தவரே வம்சத் தலைமகனும் சோழ இளவரசருமான இராஜாதித்தராவார். சேர இராஜ குலத்தினர் தமது வம்சத்திலிருந்து பிறந்த கொழுந்து என்பதால் இராஜாதித்தரிடம் சிறப்பான பற்றுதல் கொண்டிருந்தனர். சோழ சைனியத்தின் வடதிசை மாதண்ட நாயகராக விளங்கிய இராஜாதித்தரின் படையமைப்பில் கேரள வீரர்களைக் கொண்டதொரு தனிப்படை இயங்கி வந்தது. இராஜாதித்தரின் அந்தரங்க மெய்க்காப்பாளராகவும் சேனானி தலைவராக விளங்கியவரும் மலைநாட்டின் வள்ளுவ நாடுவாழிகள் குடும்பத்தைச் சேர்ந்த மகாவீரர் நந்திக்கரைப்புத்தூர் வெள்ளங்குமரன் (51) ஆவார்.

வீரநாராயணபுரம் (காட்டுமன்னார் கோயில்) விண்ணகரம் - நாதமுனிகள் அவதரித்த இடம்
பராந்தகர் காலத்தில் உடையார்குடிக்கருகில் (52) வீரநாராயணபுரம் (53) என்னும் சதுர்வேதி மங்கலக் குடியேற்றமும் அதனையொட்டி அனந்தீசுவரம் என்னும் திருக்கற்றளியும் உருவாக்கப்பட்டன.இப்பகுதியில் பலகாலமாகவே புகழ்பெற்றதொரு திருமால் கோயில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆழ்வார்கள் இத்தலத்தின் வீரநாராயணப் பெருமானைப் பாடியுள்ளனர். இவ்வாறு கீழ்த்தளியான அனந்தீசுவரம் மேற்றளியான விண்ணகரக் கோயில் என்று சகல குணாதிசயங்களுடனும் உருவான இச்சதுர்வேதி மங்கலத்தில் மிகக் கணிசமான அளவில் கேரள அந்தணர்கள் குடியேறினார்கள். கடலையொத்த எழுபத்து நான்கு கணவாய்களுடன் கூடிய வீரநாராயண ஏரியை (54) இப்பகுதியில் வெட்டுவித்தவர் இளவரசர் இராஜாதித்தராவார். ஏரியின் கட்டுமானம் இப்பகுதியின் விவசாய நிலவரத்தைக் கணிசமாக வளமாக்க வருடத்திற்கு முப்போகம் காணக்கூடிய நிலையை வீரநாராயணபுரம் எய்திற்று.

வீரநாராயண ஏரி
இவ்வாறு நாளெரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சேர சோழர் உறவில் முதற்பெரும் விரிசலை ஏற்படுத்தியது தக்கோலப் பெரும்போர் ஆகும். முதலாம் ஆதித்த சோழர் இராஷ்டிரகூடத்து இளவரசியை மணந்து அவள் மூலம் கன்னரதேவன் என்றொரு மகனைப் பெற்றிருந்தார். கன்னரத் தேவன் பட்டமேற்காமல் பராந்தகர் சோழசிம்மாசனம் ஏறியது இராஷ்டிரகூடர்களுக்குப் பிடிக்கவில்லை. பகை முற்றியது. இராஷ்டிரகூடத்து மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தார். மிகக் கடுமையாக நடந்த இப்பெரும்போரில் கங்க அரசன் பூதுகன் யானை மீதிருந்த இளவரசர் இராஜாதித்தரைத் தாக்கிக்கொல்ல "யானை மேற் துஞ்சிய தேவர்" என்ற பெயரில் வரலானார் இளவரசர். தமது வம்சத்து இளவல் சோழசிங்காதனமேறப் போகிறான் என்கிற களிப்பில் நின்ற சேரரை இது கடுமையாகப் பாதித்தது.
(51) Travancore Archaeological Series Vol I Page 291.நந்திக்கரைப்புத்தூர் என்பது திருநந்திக்கரையைக் குறிக்கும் (52) இன்றைய தேதியில் இப்பதி காட்டு மன்னார் கோயில் என்றழைக்கப்படுகிறது (53) வீரநாராயணன் என்பது பராந்தகரின் பட்டப் பெயராகும். மக்கன்ஸி காலத்து ஓலைச்சுவடி நூலான கொங்கு தேச இராஜாக்கள் என்னும் புத்தகம் இவரை வீரசோழநாராயணன் என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது (54) இந்நாளில் ஏரியை வீராணம் ஏரி என்றழைக்கிறோம். தமிழகத்தின் அரசியல் புகழ்பெற்ற வீராணம் ஏரித் திட்டம் இந்த ஏரியிலிருந்து நீரை சென்னைக்குக் கொண்டுவரும் திட்டமேயாகும்
சோழநாட்டின் அரசியல் நிலவரமும் இதற்குப்பின் படிப்படியாக பலம் குன்றியே காணப்பட்டது. வடக்கே இராஷ்டிரகூடர்கள் நாளுக்கு நாள் பலம்பெற்று வளர்ந்துகொண்டிருந்தார்கள். தெற்கிலோ பாண்டியர் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்தார்கள். பராந்தகர் மிகவும் மெனக்கெட்டு இலங்கைவரை படையெடுத்துச் சென்றும் பாண்டிய குலதனமான "சுந்தர முடியையும் இந்திர ஹாரத்தையும்" கைப்பற்ற முடியவில்லை. இதற்கிடையில் கேரளத்துடன் தாய்வழியில் உறவு பூண்டிருந்த பாண்டிய அரசர் இராஜசிம்மர் மலைநாட்டில் அடக்கலம் புகுந்து அங்கேயே காலமானார். பராந்தகருக்குப் பின்வந்த கண்டராதித்தர் - அரிஞ்சய சோழர் - அரிஞ்சயரின் புதல்வரான இரண்டாம் பராந்தகர் என்று தொடர்ந்த சோழ இராஜ வம்சத்தில் சேர அரசாங்கத்துடனான உறவு முன்புபோல் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையென்றாலும் அதிகம் ஷீணமடைந்துவிடவும் இல்லை. இதற்குக் காரணம் கேரள வம்சத்தைச் சேர்ந்த பழுவேட்டரையர்கள் சோழருடன் நெருக்கமான அளவில் தொடர்ந்து உறவு பூண்டு வந்ததேயாகும்.
இரண்டாம் பராந்தகர் தமது காலத்தில் உரிய பிராயத்தை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வர் மதுராந்தகரை அடுத்த இளவரசராக அறிவிக்காமல் தனது தலைமகனான இரண்டாம் ஆதித்தரை இளவரசராகப் பட்டம் கட்டியது பல்வேறு மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்குமென்று தோன்றுகிறது. இதில் ஏதோ ஒரு வகையில் கடுமையான பாதிப்பையடைந்த உடையார்குடியின் கேரளத்து அந்தணர்கள் இரண்டாம் ஆதித்தரைக் கொலை செய்துவிட்டு மதுராந்தகர் உத்தமச் சோழர் என்கிற பெயரில் சோழசிம்மாதனமேற வழியேற்படுத்திக்கொடுத்தார்கள். இரண்டாம் ஆதித்தரின் தமையனான இளைஞர் அருள்மொழிவர்மர் தனது சிற்றப்பா மதுராந்தகர் சோழ மகுடத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனைத் தனது மனதினாலும் தீண்டுவதில்லையென்று திட்டவட்டமாக அறிவித்ததைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்துள்ளன (55).
உத்தமச் சோழரின் காலத்தில் பல நாடகங்கள் நடந்தேறின. வம்ச வம்சமாகச் சோழருடன் பகை பூண்டிருந்த பாண்டியருடன் உத்தமச் சோழரும் அவரது சுற்றமும் நெருக்கமாக கைகோர்த்துக்கொண்டார்கள் என்பது குத்தாலக் கல்வெட்டால் (56) சூசகமாக விளங்குகிறது. உத்தமரின் பத்தினியருள் ஒருத்தி பழுவூர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் சேர உறவும் நல்நிலையிலேயே தொடர்ந்தது.
படிப்படியாக பலவீனமடைந்துகொண்டிருந்த சோழசாம்ராஜ்ஜியத்தை மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாச்ரயர் கி பி 980ல் தாக்கியபோது (57) உத்தமச் சோழரால் அவரை வெற்றிகொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தபின் வேறு வழியின்றி உத்தமச் சோழர் விலகிக் கொள்ள கிபி 985ல் "இராஜராஜன்" என்னும் அபிஷேக நாமத்துடன் அருள்மொழிவர்மர் சோழசிங்காதனத்தில் அமர வழியேற்பட்டது.
(55) இந்தத் தகவலிலிருந்து நேரிடையாகப் பெறப்படும் செய்தி என்னவெனில் மதுராந்தகருக்குப் பட்டமேற்பதில் மிகுந்த ஈடுபாடு இருந்தது என்பதே (56) South Indian Inscriptions - ....இக்கல்வெட்டு அந்நாளையப் பாண்டிய அரசரான அமரபுஜங்கரின் பெயரில் ஒரு இறைத்திருமேனி வழங்கப்பட்டதையும் அதற்கு உத்தமச் சோழரைத் திருவயிறு வாய்த்த செம்பியன் மாதேவியார் நிவந்தம் கொடுக்கும் தகவலையும் பதிவு செய்கிறது (57) பார்க்க நீலகண்ட சாஸ்திரியாரின் "History of South India", சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு
பட்டமேற்ற கையோடு அருள்மொழி செய்த முதல்காரியம் தனது தமையனார் ஆதித்த கரிகாலர் கொலையில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டித்ததே ஆகும். இது ஏற்கனவே அவருக்கெதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்த அரசியல் சக்திகளை மேலும் கோபப்படுத்தியது.
அவர்கள் அமரபுஜங்கப் பாண்டியரைப் புரட்சிசெய்யத் தூண்டினார்கள். மதுரையில் மீண்டும் மீன்கொடி பறந்தது.
இராஜராஜர் சிறியதொரு மதுரைக்குப் படையெடுத்தார். அவர் மதுரையின் எல்லையில் கால்பதிக்கும் முன்னரே பாண்டியர் சேரநாட்டிற்குத் தப்பியோடிவிட்டதாகச் செய்தி கிடைத்தது. சரி, பாண்டியரைத்தான் பிடிக்க முடியவில்லை... அவரைத் தூண்டிவிட்ட சக்திகளையாவது ஒரு கை பார்த்துவிடுவோம் என்று களமிறங்கியவேளையில்தான் அந்தச் செய்தி அவருக்குக் கிடைத்தது...
ஓ ! எத்தனை பயங்கரமான செய்தி அது...
(தொடரும்...)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|