www.varalaaru.com
A portal for
South Indian History
 
73 இதழ்கள்...
1009 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
சேரர் கோட்டை
அத்தியாயம் 09

இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
போர்த்தளபதி


விடாமல் பேசிக்கொண்டிருந்ததால் பல்லவராயருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

"சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள் - வெய்யில் ஏறிவிட்டது. தோப்பிற்குச் செல்ல வேண்டியதுதான் !" என்ற அருள்மொழிவர்மர் சைகை காட்ட, திருமெய்க்காப்பு வீரர்கள் தத்தம் உடைமைகளை எடுத்துக்கொண்டு தோப்பை நோக்கி நடக்கத் துவங்கினார்கள். பேரரசரும் மற்றவரும் அமர்ந்திருந்த தரைவிரிப்பை ஒரு ஊழியன் மடித்துத் தோப்பிற்குக் கொண்டு சென்றான்.

அடுத்த சில நிமிடங்களில் சபை மீண்டும் தோப்பில் கூடிவிட்டது.

"தோப்பிற்குள் இளநீர் கிடைத்தால் எடுத்து வாருங்கள் !" என்று ஆணையிட்டார் அருள்மொழி. உடனே நான்கு வீரர்கள் வணங்கிவிட்டு தோப்பிற்குள் நுழைந்தார்கள்.

"மேற்கொண்டு தொடருங்கள் பல்லவராயரே !" என்றார் இளையவர் அந்த சில நிமிட இடைவெளியைப் பொறுக்கமாட்டாமல்.

"சொல்கிறேன்.... நாராயண பட்டதிரியின் திட்டம் என்னவெனில் சேரநாட்டின் அரசியல் அமைப்பை ஒத்த ஒரு நிலையை தென்னகத்தின் மூன்று இராஜ்ஜியங்களிலும் உருவாக்குவது !"

"என்ன சொல்கிறீர்கள் ?"

"சேர நாட்டை வெளிப்படையாகப் பெருமாள் அரசர்கள் ஆள்வதுபோல் தெரிந்தாலும் உண்மையில் அங்கு வலிமை வாய்ந்த அரசியல் சக்திகளாகத் திகழ்வது நாலுதளிக்காரர்களும் நாடுவாழிகளும்தாம் ! இவர்கள் இருவரும் ஆட்டிவைத்தபடிதான் பெருமாள் அரசர் இயங்க வேண்டும். தளியதிகாரிகள் எனும் பெயரில் அரசரின் பிரதிநிதி நாலுதளிக்காரர்களின் கூட்டங்களில் கலந்து கொண்டேயாக வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு இயங்கித்தான் ஆகவேண்டும். அதேபோல் நாடுவாழிகளுள் பலமுள்ளவர்களாக விளங்கும் வள்ளுவ நாடாழ்வார், இராம நாடாழ்வார், வேணாடாழ்வார் முதலானோரும் பெருமாள் அரசரை ஆட்டிப் படைக்கக்கூடியவர்களே... இது சோழ - பாண்டி மண்டலங்களின் அரசியல் நிலைக்கு முற்றிலும் மாறானது. இங்கு காலங்காலமாக மணிமுடிதரித்து சிங்காதனத்தில் அமரும் அரசருக்கே முழு அதிகாரமும் உண்டு. நாடுவாழிகளுக்கு இணையாக இங்குள்ள சிற்றரசர்கள் மன்னருக்கு வருடாந்திரக் கப்பம் செலுத்தியாக வேண்டும்... நாலுதளிக்காரர்களுக்கு இணையான சக்தி தமிழகத்தில் ஒருபோதும் இருந்ததில்லை !"

"பின் எவ்வாறுதான் சேர நாட்டின் அரசியல் நிலையை இங்கு உருவாக்க முயன்றார்கள் ?"

"இங்குதான் பட்டதிரியின் மூளை அளவிற்கதிகமாக வேலை செய்திருக்க வேண்டும். ஆதித்தர் கொலையாவதற்கு முன்பே ஒரு சில சிற்றரசர்கள் இவர்களுக்கு மறைமுக ஆதரவு தருவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். இது சற்றே அவல நிலைதான் - ஆனால் உண்மை. அவர்கள் சொன்னதுபோலவே ஆதித்தர் கொலையாகி மதுராந்தகர் பட்டத்திற்கு வரவே மேலும் பலருக்கு நீலி கூட்டத்தாரின் வலிமையில் நம்பிக்கை பிறந்தது ஒரு துரதிருஷ்டம். என்றாலும் எல்லோரும் சோரம் போய்விடவில்லை ! வழிவழியாக ஒரு சில குறுநாடுகள் சோழ மன்னருக்கு மட்டும்தான் விசுவாசமாக இருப்போம் என்று பிடிவாதமாக இருந்துவிட்டன... அவர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளை உண்டாக்கினார்கள் இவர்கள்...

நாலுதளிக்காரர்களுக்கு இணையாக யாரை நிறுத்துவது ? என்று யோசித்தபோதுதான் தில்லை மூவாயிரவர் அவர்கள் எண்ணத்தில் உதித்தார்கள். நாலுதளிக்காரர்களுக்கு இணையாக மலைநாட்டுப் பின்புலம் கொண்ட தில்லையின் மூவாயிரவரை முன்னிறுத்திவிட்டால் ? பின் அத்தனை திருக்கோயில்களும் ஏறக்குறைய அவர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். தில்லை சோழமண்டலத்தின் சைவத் திருத்தளிகளில் தலையாய திருக்கோயிலாக விளங்குவதால் இது சாத்தியப்படலாம் என்று நினைத்தார்கள். இதனால்தான் தில்லைக்கருகில் கீழச்சாலை என்று ஒரு சாலையே ஸ்தாபிதம் செய்யப்பட்டது ! தில்லையில் இவர்களுக்கு ஆதரவும் இருந்தது - எதிர்ப்பும் இருந்தது. அதனால் தங்கள் திட்டங்களை மெல்ல மெல்லத்தான் இவர்களால் செயல்படுத்த முடிந்தது.

கிட்டத்தட்ட இதற்கு இணையான நிலை பாண்டி தேசத்திலும் உருவாக்கப்பட்டது. இதற்கு அவர்கள் சக்திவாய்ந்த அமைப்பாக விளங்கிய மல்லிகார்ஜூனர் மடத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் ! இது மடத்தை ஆதரித்துவந்த கொடும்பாளூர் இருக்கு வேளிர் அரசர்களுக்கு கடும் அதிருப்தியை விளைவித்தாலும் மடத்தில் உள்ளவர்கள் கேட்கவில்லை.

உத்தமச் சோழரும் பாண்டித் தேவரும் நெருக்கமானார்கள். பாண்டியர் அமரபுஜங்க தேவர் பெயரில் இறை நிவந்தம் கொடுத்துக் கல்லில் பொறித்து வைக்கும் அளவிற்கு நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் சளுக்கப் படையெடுப்பு நிகழ்ந்தது.... அதற்குப்பின் நிகழ்ந்தவைதான் உங்களுக்குத் தெரியுமே !"

அருள்மொழி புன்சிரிப்புடன் கிருஷ்ணன் இராமனை நோக்கினார் - "அமண்குடியாரே ! இங்கு நம்முடன் ஒன்றுமறியாதவர்போல் அமர்ந்திருக்கும் கம்பர் சளுக்கப் போரில்தான் எனக்கு அறிமுகமானார். போரில் நான் கலந்துகொள்ளாவியலாவிட்டாலும் இவருடைய வீரத்தைப் பற்றிப் பெரிதும் கேள்விப்பட்டேன். என்றாவது ஒருநாள் இவருடைய வாளுக்கும் தினவெடுத்த தோள்களுக்கும் நல்லதொரு வேலை கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன்... இத்தனை காலம் கழித்து இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது !"

என்ன சொல்கிறீர்கள் ? என்பதுபோல் இளையவர் அருள்மொழிவர்மரைக் குழப்பத்துடன் நோக்க, பல்லவராயர் அவருடைய தோள்களில் கைவைத்து அழுத்தி "சேரநாட்டுப் படையெடுப்பை முன்னின்று நடத்தப்போகும் வீரத்தளபதி இவர்தான் !" என்றார் கிருஷ்ணன் இராமனைப் பார்த்து.


***********************************************************************************************


அந்த நண்பகல் நேரத்தில் "கறைமலி கடல்சூழ் நாகை" (68) யின் துறைமுகம் மிகச் சுறுசுறுப்புடன் காணப்பட்டது. கீழத்திசை நாடுகளிலிருந்து கிளம்பி வந்திருந்த நூற்றுக்கணக்கான கலங்கள் கரையிலிருந்து சில காத தூரங்களில் கல் நங்கூரம் (69) பாய்ச்சி நின்றிருந்தன. கலங்களுக்கும் கரைக்கும் இடையில் அமைந்திருந்த தண்ணீர் பிரதேசத்தில் சிறியதும் பெரியதுமாக பல்வேறு படகுகள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தன. இச் சிறு படகுகளில் துடுப்பு வலித்துக்கொண்டிருந்த படகோட்டிகள் அத்தனை அவசரத்திலும் அடுத்தவரின் படகுகளின் மேல் மோதிவிடாமல் சாதுரியத்துடன் கிடைத்த இடைவெளிகளில் நுட்பமாகத் தத்தம் சிறு கலங்களைச் செலுத்திக்கொண்டிருந்தனர். இந்த அபரிமிதமான போக்குவரத்தின் காரணமாக கடல் நீர் அப்பகுதிகளில் பெரிதும் கலங்கிக் காணப்பட்டது.

கடலுக்கு அருகில் அமைந்திருந்த உப்பங்கழிகளில் (70) பணி துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. உப்பைத் தூர்க்கும் பணியில் தன்னை மறந்து ஈடுபட்டிருந்த சிறுவன் தற்செயலாகக் கடலை நோக்கினான். நோக்கியவன் வாயைப்பிளந்து நோக்கியபடி அசையாமல் நின்றான். அவன் அப்படி எந்தக் காட்சியைக் கண்டு தன்னை மறந்து நிற்கிறான் என்பதை அறிய விரும்பி நாமும் அவன் கண்கள் வெறிக்கும் திசையை நோக்குகிறோம். ஆஹா ! நாம் காண்பதென்ன ?


(68) கருமையான கடல் சூழ்ந்த நாகை என்று பொருள் படும். அப்பர் பெருமானின் திருப்பதிகம்
(69) அக்காலத்தைய கப்பல்களில் பெரிய - கூரிய கற்கள் நங்கூரங்களாகப் பயன்படுத்தப்பட்டதை அகழ்வாராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்
(70) நாகையின் உப்பங்கழிகள் தேவாரத்தில் குறிக்கப்பட்டுள்ளன


நாகைக் கரையிலிருந்து விரிந்த கருங்கடலில் ஏறக்குறையப் பத்து காத தூரத்தில் தன்னுடைய பிரம்மாண்டமான பாய்மரங்களை விரித்து வைத்தபடி இராட்சதக் கலமொன்று துறைமுகத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அதுவரை அங்கே நின்றிருந்த கலங்களெல்லாம் அந்தக் கலத்தின் பிரம்மாண்டத்திற்கு முன் சிறு பொம்மைகளெனக் காட்சியளித்தன. அத்தனை பெரிய கலத்தை கரைக்கு அருகில் கொண்டு வரமுடியாதாகையால் மாலுமிகள் வெகு தூரத்திலேயே நங்கூரம் பாய்ச்சிவிட்டார்கள். கலம் நிறுத்தப்பட்டுவிட்டதன் அறிகுறியாகப் பாய் மரங்கள் இறக்கப்பட்டு முக்கியப் பாய்மரத் தண்டின் மீது கலக்கொடி விறுவிறுவென்று ஏற்றப்பட்டது. இடைவிடாமல் அடித்துக்கொண்டிருந்த காற்றில் படபடவென்று அடித்துக்கொண்டபடி உச்சியைத் தொட்டுவிட்ட அக்கொடியில் காணப்படும் அரச இலச்சினையிலிருந்து அது காம்போஜ நாட்டிலிருந்து வந்திருக்கும் கலம் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

அப் பெருங்கலம் நின்று நிதானித்து பாய் மரங்களை இறக்க ஆரம்பித்த அடுத்த நொடியிலேயே மலரை மொய்க்கத் தேனீக்கள் விரைவதுபோல் நாகைத் துறைமுகத்தில் நின்றிருந்த பல்வேறு படகுகள் அந்தக் கப்பலை நோக்கி உற்சாகமாக விரையலாயின. சரக்குகளைக் கரையேற்றும் சிறு படகுகளுக்காகக் காலையிலிருந்தே காத்துக்கொண்டிருந்த மற்ற கலங்களின் பதிகள் "அடடா ! சைலேந்திர விஜயம் வழக்கமாக வரும் நேரத்தைவிட சற்று விரைவில் வந்து சேர்ந்துவிட்டது போலிருக்கிறதே... சரியாய்ப்போயிற்று ! இனி நமக்கு சரக்குப் படகுகள் கிடைத்த மாதிரிதான் !" என்று நொந்துகொண்டார்கள்.

இவ்வாறு அந்தத் துறைமுகத்தில் இருந்த அத்தனை மனிதர்களின் கவனத்தையும் சில நொடிகளில் கவர்ந்துவிட்ட ஸ்ரீ சைலேந்திர விஜயம் என்னும் பெருங்கலத்தின்மீது நாமும் பார்வையைச் செலுத்துவோமாக.

பெருங்கலத்தின் நாற்புறங்களிலும் ஊழியர்கள் நின்றுகொண்டு மிகப்பெரிய வெண்சங்குகளைக் குவித்த வாய்க்குள் பொருத்தி "பூம் !" என்று சப்தமெழுப்பினார்கள். அது கலத்தின் பல தளங்களிலும் "நின்றும், இருந்தும், கிடந்தும்" பொருந்தியிருந்த பயணிகளைத் தட்டியெழுப்புவதற்கான ஓசை போலும். சங்கொலியைத் தொடர்ந்து தளங்களின் நாற்புறங்களிலும் துரிதமான நடமாட்டங்கள் தென்பட்டன. பயணிகள் தத்தம் பொருட்களை வாரிச் சுருட்டிக்கொண்டு கரையிறங்கத் தயாராகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறோம். ஓ ! துறைமுகப் படகுகளெல்லாம் சரக்குக் கலங்களை விட்டுவிட்டு இப்பெருங்கலத்தை ஆவலுடன் நெருங்குவதன் காரணம் இப்போதுதான் புரிகிறது. சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு மொத்தமாக ஒரு தொகையைக் கலபதிகள் பேசிவிடுவார்கள். அதில் படகோட்டிகளுக்கு அதிக லாபம் கிடைக்காது. ஆனால் காம்போஜத்தின் கலம் நூற்றுக்கணக்கான மனிதர்களைச் சுமந்து வந்திருந்திருந்த பயணிகள் கலம் ஆதலால் ஒவ்வொரு பயணியையும் கரைசேர்க்க சிறு தொகையை படகுக்காரர்கள் பெறலாமல்லவா ? நான்கு நான்கு பயணிகளாகக் கரைசேர்த்தால்கூட ஓரிரு நாழிகைகளில் எட்டு அல்லது பத்து கழஞ்சுகள் சேர்த்து விடலாமே !

சைலேந்திர விஜயத்தின் நாற்புறங்களிலும் கயிற்று ஏணிகள் மெல்லக் கடலில் இறக்கப்பட்டன. இவற்றைப் பிடித்துக்கொண்டு மெல்ல இறங்கினால் நேராகக் கீழே காத்திருக்கும் படகுகளில் கால்பதித்துவிடலாம். முதியோர், குழந்தைகள் மற்றும் பெண்டுகளுக்காக தனித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவர்களால் கயிற்று ஏணியைப் பிடித்துக்கொண்டு கீழிறங்க முடியாதாகையால் கலத்திலேயே இருந்த சிறு படகுகளில் இருத்தி மெல்லக் கடலில் இறக்கிவிட்டுவிட வேண்டியதுதான்.

ஏறக்குறைய ஒரு நாழிகை நேரத்தில் துறைமுகத்தின் பல்வேறு படகுகளும் சைலேந்திர விஜயத்தை நெருங்கிவிட்டிருந்தன. படகுகள் நெருங்கும் நேரத்தில் கலத்தின் பல்வேறு தளங்களிலும் அமைந்திருந்த கதவங்கள் திறக்கப்பட, பயணிகள் குபுகுபுவென்று ஈக்களைப்போல் அவசர அவசரமாக வெளியில் வந்து கலத்தின் மேல்தளத்தில் நின்று கொண்டார்கள். "அமைதி ! அமைதி ! மெதுவாகச் செல்லுங்கள் !" என்று மாலுமிகள் நாற்புறங்களிலும் நின்றுகொண்டு தொண்டை வறளக் கதறினாலும் அவர்களின் வார்த்தைகளை செவிமடுப்பாரில்லை. பலப்பல நாட்களாகக் கடலில் பிரயாணம் செய்து அலுத்திருந்தவர்களுக்கு நிலத்தை துரிதமாகத் தொட்டுவிடும் பேராவல் எழுந்தது இயல்பே அல்லவா ?

படகுகளில் இறங்குவதற்காகக் தளத்தில் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் ஒரு குழு நமது கவனத்தைக் கவர்கிறது. மழித்த தலைகளுடனும் காவியுடையுடனும் காணப்படும் அக்குழு காம்போஜத்திலிருந்து தமிழகத்திற்குக் கிளம்பி வந்திருக்கும் பெளத்த பிஷுகளைக் கொண்ட குழு என்பது முதல் பார்வையிலேயே புரிந்து போகின்றது....

மற்ற பயணிகளைப் போல் படகுகளில் இறங்க அதிக அவசரம் காண்பிக்காமல் நின்று நிதானமாக நாற்புறங்களிலும் பார்வையைச் செலுத்துகிறார்கள் அந்த பிஷுக்கள். அவர்களது வதனத்தில் மெல்லிய புன்னகை எப்போதும் படிந்திருக்கக் காண்கிறோம். தங்களைச் சுற்றி நிற்கும் மக்களின் பரபரப்பே அவர்களின் புன்னகைக்குக் காரணம் போலும். "மிக அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பின், மெதுவாகச் செல்லவும். மிக மிக அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பின் மிக மிக மெதுவாகச் செல்லவும்" என்னும் பண்டைய பெளத்த மொழிக்கேற்ப இவர்களின் அங்க அசைவுகளில் அவசரம் சிறிதும் படியவில்லை. இவர்களின் நிதானமே மற்ற மக்களிடமிருந்து இவர்களைப் பெரிதும் வேறுபடுத்திக் காட்டுகிறது. நாகையில் நாம் பதரதிட்ட விஹாரையில் முன்பு கண்ட பிஷுக்களுக்கும் இவர்களுக்கும் உடையலங்காரங்களில் பல்வேறு மாறுபாடுகள் தெரிகின்றனதான்...என்றாலும்... இவர்கள் அந்நியர்களாகத் தோன்றவில்லையே ! இந்த முகங்கள் மிகவும் பழகிய முகங்களாகத் தெரிகின்றனவே ! இதென்ன அதிசயம் ?

குறிப்பாக அந்தக் குழுவில் சற்றே இளைய பிராயத்தினராகத் தோன்றும் ஒரு பிஷுவின் முகம் நமக்கு மிகவும் பழக்கமான எவருடைய முகத்தையோ ஞாபகப்படுத்துவதைப்போல் காண்கிறது.... ஆனால் இன்னார் என்று குறிப்பாக அடையாளம் காண்பது இயலாததாக இருக்கிறது. அந்த இளைய பிஷு தன் அருகில் நின்றவரிடம் தலையைக் குனிந்து மெல்ல ஏதோ வினவ, அவர் "விஹாரை நடைதூரத்தில்தான் அமைந்துள்ளது - எளிதில் அடைந்துவிடலாம் !" என்று விடை பகன்றார். அடடா ! இந்த பிஷுக்கள் இருவரும் தமிழில் அளவளாவிக்கொள்கிறார்களே... ஒருவேளை இந்த இருவருமே தமிழ் மண்ணில் பிறந்தவர்கள்தானோ !

அவசரத்தில் இருந்த பயணிகள் முதலில் வந்த இருபது - முப்பது படகுகளில் ஏறிப்புறப்பட்டுவிட, அதற்குப் பின் வந்த படகுகளில் பிஷுக்கள் ஏறிக்கொண்டார்கள். முதல் படகில் மூத்த பிஷுக்கள் ஏறிக்கொள்ள அதற்கடுத்த படகில் வயதில் இளையவர்கள் ஏறிக்கொண்டார்கள். சிறிய தள்ளாட்டத்துடன் கிளம்பிய அந்தப் படகுகள் மெல்ல மெல்ல கரையை நோக்கிச் செலுத்தப்பட்டன. காற்று எதிர் திசையில் அடித்துக்கொண்டிருந்ததால் கடலலைகள் அவர்களை மீண்டும் மீண்டும் சைலேந்திர விஜயத்தின் பக்கமே ஒதுக்கப் பார்க்க, அவற்றின் பிடிவாதத்தை சரிக்கட்டியபடிதான் படகோட்டிகள் தங்கள் படகுகளைச் செலுத்த முடிந்தது..

தாம் அமர்ந்திருந்த படகு கடலில் நகரத்துவங்கிய சில நொடிகளிலேயே அந்த இளைய பிஷு நேராக நிமிர்ந்து கைகளைக் கட்டியபடி நின்று கொண்டார். அவரது பாதங்கள் படகின் இரு பக்கங்களிலும் அமைந்திருந்த மரச்சட்டங்களில் உறுதியாக ஊன்றப்பட்டன. அவர் எழுந்து நிற்பதைக் கண்ட படகுக்காரன் "வேண்டாம் சாமி ! காற்று பலமாக எதிர்த்திசையில் அடிக்கிறது... படகின் ஆட்டத்தில் தவறிப்போய் கடலில் விழுந்து விடுவீர்கள் ! என்று எச்சரித்தான். அவனுடைய எச்சரிக்கைக்கு பதிலாக ஒரு மெளனப் புன்னகை மட்டும் வழங்கப்பட்டது. தான் அத்தனை தூரம் எச்சரித்தும் பிடிவாதமாக நிற்கிறாரே இந்தத் துறவி... என்று நினைத்துக்கொண்டே படகுக்காரன் துடுப்பு வலிப்பதில் கவனம் செலுத்தத் துவங்கினான்.

படகு சிறிது தூரம் கடலில் செலுத்தப்பட்ட பின்தான் அந்தத் துறவி நிற்பதன் காரணம் அவனுக்குப் புரிபட்டது. "விர்....விர்...." என்று விடாமல் சுழன்றடித்துக்கொண்டிருந்த மேல் காற்றில் மற்ற படகுகளெல்லாம் அப்புறமும் இப்புறமும் ஏகத்துக்கு அலைக்கழிக்கப்பட, அவர்களுடைய படகு மட்டும் அதிக ஆட்டங்களுக்கு உட்படாமல் சென்றது. காற்றின் திசைக்கும் கடலலைகளின் சுழற்சிக்கும் ஏற்றவாறு தனது உறுதியான பாதங்களில் தகுந்த எதிர் அழுத்தங்கள் கொடுத்து அந்தப் படகின் அல்லாட்டங்களை முடிந்தவரையில் சீராக்கிக்கொண்டிருந்தார் அந்த பிஷு ! அவருடைய உதவியினால் மற்ற படகுகளைவிட எளிதாக அந்தப் படகு கரையை நெருங்கிக்கொண்டிருந்தது. படகோட்டி நன்றி பொங்கும் விழிகளால் அவரைப் பார்த்தான்...அதற்கும் அதே பழைய மெளனப் புன்னகைதான் பதில்!

அந்நிய நாட்டிலிருந்து அன்று காலை வந்திறங்கியிருந்த பல்வேறு சரக்குகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓரிடத்தில் அவர்கள் கரையிறங்கினார்கள். படகோட்டி அந்த இளம் பிஷுவை ஆவலுடன் நெருங்கி "சிறு வயது முதல் படகோட்டிக்கொண்டிருக்கிறேன் நான். நாகையின் கடலும் காற்றும் எனக்கு மிகவும் பழக்கமானவை. இருந்தாலும் இத்தனை எதிர்க்காற்றில் என்னால் நிச்சயம் உங்களைப்போல் தாக்குக்கொடுத்து நின்றிருக்க முடியாது. எவ்வாறு இந்த வித்தையைச் செய்தீர்கள் ?" என்று வினவினான்.

பிஷு அவனுடைய தோளைப் பிரியத்துடன் தொட்டு அழுத்தினார்...."காற்று வேறு நான் வேறு அல்ல அப்பா ! படகின் மீது நின்ற அந்தக் கணங்களில் நான் காற்றாகவே நின்றேன் ! எதிர்த்து நிற்கவில்லை... புரிகிறதா ?"

புரியவில்லை என்பதாகத் தலையை ஆட்டினான் படகோட்டி.

அவர் சிரித்தார். மெளனமாகத் திரும்பி கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த பதரதிட்ட விஹாரையை நோக்கி மற்ற பிஷுக்களுடன் மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

(தொடரும்...)

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter