|
|
|
www.varalaaru.com
A portal for South Indian History
73 இதழ்கள்... 1009 படைப்புக்கள் !
|
|
Home
About US
Font Problems
|
|
|
சேரர் கோட்டை அத்தியாயம் 12
கோகுல் சேஷாத்ரி
|
|
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
|
வீரத்தின் விளைநிலம்
பேரரசர் அருள்மொழி வர்மரும் பிஷூ ஆனந்த தேரரும் நீண்ட காலம் கழித்து ஒருவரையொருவர் சந்தித்த மகிழ்ச்சியில் சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நோக்கியது நோக்கியபடி நின்றார்கள்.
"இந்தப் பத்து வருடங்களில் அப்படியே இருக்கிறது உங்களின் தோற்றம் ! சிறிதுகூட மாற்றமில்லை..." என்று வியந்தார் பேரரசர்.
"உங்களின் வெளித்தோற்றத்தில் சிறிது மாற்றங்கள் வந்துவிட்டனதாம் - ஆனால் அந்தப் பழைய நட்பையும் நெருக்கத்தையும் இன்னமும் உங்களின் கண்களில் மிக நன்றாகவே தரிசிக்கிறேன்....சோறுடைத்த சோழநாட்டின் பேரரசரே ! தங்களுக்கு வணக்கம். காம்போஜ நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் ஏந்தி இந்த தட்ஷிண தேசத்தின் பெளத்த புண்ணியப் பதிகளை தரிசிப்பதற்காக பல நாட்கள் பயணம் செய்து வந்துள்ளோம்..." என்ற ஆனந்த தேரர் இருகரம் கூப்பினார்.
"தங்களையும் தங்கள் குழுவையும் தென்னாடு வரவேற்கிறது ! காலங்காலமாக இம்மண்ணில் வேர்கொண்டுவிட்ட தமிழ் பெளத்தர்களின் சார்பிலும் சோழநாட்டுப் பெருமக்களின் சார்பிலும் தங்களை வருக வருகவென்று வரவேற்கிறேன்.... தாங்கள் வந்த இந்த நல்ல நேரத்தில் இம்மண்ணில் அன்பும் சமாதானமும் தழைக்கட்டும் - ஓம் சாந்தி! " - பேரரசர் அந்தக் குழுவின் அத்தனை பிஷூக்களையும் நேருக்கு நேர் நோக்கி கரங்குவித்து பதில்வணக்கம் செய்தார்.
"தாங்களும் குழுவும் தற்போது எங்கு தங்கியிருக்கிறீர்கள் ?"
"சீனத்து விஹாரையில் எங்கள் பகுதிகளிலிருந்து வரும் பிஷூக்களுக்கென்று தனி அறைகள் சில உள்ளன - அங்குதான் தங்கியிருக்கிறோம் !"
"விஹாரையில் வசதிக்குறைவு ஏதேனுமிருந்தால் தெரிவியுங்கள் - சீர்செய்து விடலாம் !"
"புத்த பகவானின் கருணையினால் அவ்வாறு எதுவுமில்லை - தங்களின் அன்புக்கு நன்றி !"
"தேரரே ! தற்போது அக்கசாலையில் எனக்கு சிறிது வேலையிருக்கிறது, கிளம்ப வேண்டும். தங்களை இன்றுமாலை சந்திக்கலாமா ?"
"ஆச்சாரியார் இது பற்றிக் குறிப்பிட்டார். இன்று முன்மாலை நேரத்தில் பதர திட்ட விஹாரைக்கு ஒரு தியானப் பயிற்சிக்காக நாங்கள் அனைவரும் வருகிறோம். பயிற்சி முடிந்ததும் தங்களை சந்திப்பதற்காக நான் விஹாரையில் காத்திருக்கிறேன் !"
"மிக்க நல்லது. இன்றிரவே நான் தஞ்சைக்குத் திரும்ப வேண்டியுள்ளதால் இன்று மாலை நாம் கட்டாயம் சந்தித்து விடுவோம் !"
"நல்லது !" என்று பதிலளித்துவிட்டு சற்றே திரும்பிய பிஷூ ஆனந்தர் தலையைச் சற்றே குனிந்தபடி அவர்களுக்கு சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்த பரமன் மழபாடி என்றழைக்கப்பட்ட அந்த வீரனை கவனித்தார்.
"பேரரசர் கிளம்புவதற்கு முன் ஒரு கேள்வி ! இந்த வீரரின் பெயர் எப்படி தங்களுக்குத் தெரிந்தது ?"
"மழபாடியை இந்த நாகை அக்கசாலைக் கடகத்திற்கு அனுப்பியதே நான்தானே ! இவர் பல்லவராயரின் தனிச்சேவகத்தைச் சேர்ந்த வீரர் - மதுராபுரி படையெடுப்பு நிகழ்வதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு இவர் கொண்டுவந்த மிக முக்கிய தகவல்களால்தான் பாண்டிப் படையினரின் ஆயுதங்களைப் போருக்கு முன்பே பெருமளவு நம்மால் கைப்பற்ற முடிந்தது. அந்தப் போர் நமது பக்கத்தில் அதிக சேதத்தை உருவாக்காமல் வெற்றியை அளித்ததற்கு இவருடைய பங்களிப்பே முக்கிய காரணம் ! இந்த வீரருக்கு முறையான பயிற்சியை நாகைக் கடகம் அளிக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இவரை இங்கே அனுப்பினேன்.... என்ன மழபாடியாரே ! ஒன்றும் பேசாமல் நின்றுகொண்டிருக்கிறீர்கள் ?"
"சொல்ல வேண்டியதனைத்தையும் தாங்களே புகன்று விட்டீர்கள்...அரசே ! நாகைக் கடகத்தில் புதிய நுணுக்கங்கங்களையும் வாள்பயிற்சி முறைகளையும் முறையாகக் கற்று வருகிறேன்... கடகக் குழுத் தலைவர்களின் பயிற்சி முறைகள் இங்கு அற்புதமாக அமைந்துள்ளன..."
"சரி, பின் நான் கிளம்புகிறேன். தேரரே ! மாலை சந்திப்போம்..." என்று கூறிய பேரரசர் மெல்ல அவ்விடம் விட்டகன்றார்.
"கடகக் குழுத் தலைவரே ! நம்முடைய சங்கத் தோழர்களை இதற்கு மேல் காக்க வைப்பது நன்றாயிராது. அவர்களை அனுப்பி வைத்துவிட்டு ஒருசில வாள் சுழற்சிகளை உங்களுக்கு செய்து காண்பிக்கிறேன்..."
"மிக்க நன்றி தேரரே !"
***********************************************************************************************
பாண்டி மண்டலத்தின் வெண்டி நாட்டில் குறண்டியூர் (79) என்றழைக்கப்படும் சிற்றூரின் தென்கிழக்காக கடங்கன் வாய்க்காலையொட்டிப் பிரியும் சிறு பாதையில் இரு புரவிகள் மெல்ல நடைபயின்றுகொண்டிருந்தன. அந்த முன்மாலை நேரத்து இருட்டிலும் அப்புரவிகள் வழி தெரியாது தடுமாறி நிற்காமல் பாதையைக் கண்டுபிடித்துச் செல்வதிலிருந்து அவை அந்த இடத்துக்குப் பலமுறை முன்பு வந்திருக்கவேண்டுமென்று யூகிக்கிறோம்.
(79) இன்றைய இராமநாதபுரத்தில் பள்ளிமடை என்னும் பெயரில் அமைந்துள்ள கிராமம்
அந்த இரு புரவிகளிலும் ஆரோகணித்திருந்த மனிதர்களை நம்மால் அந்த இருட்டில் சரிவர அடையாளங்காண முடியவில்லை. என்றாலும் உத்தேசமாகத் தெரியும் உருவத்தைக் கொண்டு அவர்களில் ஒருவர் மத்திம வயதினரென்றும் மற்றவர் சற்றே வயதானவர் என்றும் கணிக்கிறோம். அவர்கள் சென்றுகொண்டிருந்த பாதை மிகக் குறுகலாகவே இருந்ததால் ஒருவரின் பின்னரே இன்னொருவர் புரவியைச் செலுத்த முடிந்தது.
"வழக்கம்போல ஆலமரத்தடியிலேயே புரவிகளைக் கட்டிவைத்து விடுவோமா ?" என்றார் முன்னால் சென்றுகொண்டிருந்தவர்.
"சற்றே மெதுவாகப் பேசுங்கள் ! சொல்லச் சொல்லக் கேட்காமல் பிடிவாதமாக இந்த ஆபத்தான நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள்...."
"என்ன கொடுமையடா இது ! நான் பிறந்த மண்ணில் - என் முன்னோரும் மூத்தோரும் தங்களின் உதிரத்தையும் உயிரையும் சிந்திய இந்தப் புண்ணிய பூமியில் - மாலை நேரத்து இருட்டில் ஒரு திருடனைப்போல நுழைகிறோமே என்று ஏற்கனவே நான் சங்கடத்தில் இருக்கிறேன்... இந்த இலட்சணத்தில் உரக்கப் பேசாதீர்கள் - மெதுவாகப் பேசுங்கள் - அங்கு செல்லாதீர்கள் - இங்கு சொல்லாதீர்கள் - என்கிற அடக்குமுறைகள் வேறு ! அரையன் மானாபரணரே... எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு !"
"மன்னிக்கவேண்டும் - இங்கிருக்கும் நிலைமை தெரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள்..... மண்டலமெங்கிலும் ஒற்றர்கள் விரிந்து பரந்து கிடக்கிறார்கள் !"
"ஆமாம் - ஆமாம் ! இந்தப் பாழும் காட்டுப் பிரதேசத்தில் அதோ அந்த ஆலமரத்திற்கடியில் சோணாட்டு ஒற்றன் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறான். வாரும் ! இருவரும் அவனிடம் சென்று நேரே அகப்பட்டுக்கொள்வோம். இப்படி அஞ்சியஞ்சி வாழ்வதை விட தஞ்சையின் பாதாளச்சிறையில் உயிரை விடுவது சிலாக்கியமானதுதான்...."
"பாண்டிய குலத்தின் வீரமிகு இளவலே ! சோழனின் பாதாளச் சிறையில் உயிரை விடுவதற்காகவா தாங்கள் பிறப்பெடுத்திருக்கிறீர்கள் ? விவேகமில்லா வீரம் ஆபத்தானது என்பதை நான் உங்களுக்குப் பலமுறை சொல்லியிருக்கிறேனல்லவா ? அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்ச வேண்டுமென்று திருவள்ளுவப் பெருமானே உரைத்திருக்கிறாரே.... ஒற்றர் நடமாட்டங்களைப் பற்றி நான் சொல்லியது தங்களுக்கு மிகையாகத் தெரியும்தான். ஆனால் என்றாவது ஒருநாள் என் கூற்றில் உள்ள உண்மையைத் தாங்களே உணர்வீர்கள்... மேற்கொண்டு இதுபற்றிப் பேசவேண்டாம். ஆலமரம் வந்துவிட்டது - புரவியை அதில் கட்டுங்கள்...."
"...நான் ஏதாவது கோபமாகப் பேசியிருந்தால் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். என் மனது அந்த அளவிற்கக் கசப்படைந்திருக்கிறது..."
"உங்கள் தந்தையாரின் அத்தனை குணங்களும் தங்களிடம் அப்படியே பதித்துள்ளன. அவரும் இப்படித்தான் கோபத்தில் என்னவெல்லாமோ பேசுவார் - பின் உடனே வருந்துவார். இது பாண்டிய குலத்தின் பிறவிக்குணம் போலும்...."
"கோபத்தை மட்டும்தான் தந்தையாரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறேன் போலும். பீடு ஓங்கிய அவருடைய வீரத்தில் ஒரு சிறிதாவது எனக்கிருந்திருந்தால் இப்படித் திருடனைப் போல் ஒளிந்து ஒளிந்து வாழ்வேனா ?"
"ஆஹா ! உங்களுடைய வீரத்தையா நீங்கள் குறைவாக மதிப்பிடுகிறீர்கள் ? இளவலே ! நீங்களே தடுக்க முயன்றாலும் தடைகொள்ளாமல் பொங்கும் வீரம் உமது உதிரத்தோடு ஒன்றியிருக்கிறது. ஆனால் உங்களுக்கான காலம் இன்னும் வரவில்லை. காலம் கருதி நடப்பவர்க்கு ஞாலமும் கைகூடும் என்கிற வள்ளுவர் பெருமானின் மொழியைத் தாங்கள் கேட்டறிந்ததில்லையா ? ஒவ்வொரு செயல்பாடும் காலத்தைக் கருதி செய்தல் வேண்டும். இன்றைய காலம் நமக்கு எதிரானதாக இருக்கிறது. நாளை காலம் மாறும். நல்லோரை பிறக்கும்.... அந்த நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்..."
"உண்மைதான் மானாபரணரே ! நம்பிக்கை ஒன்றுதான் என்னிடம் தற்போது மிச்சமுள்ளது !"
"உங்களின் தோளில் கிடக்கும் பட்டு வஸ்திரத்தையும் மணியாரங்களையும் இந்த ஆலமரப் பொந்திலேயே வைத்து விடுங்கள்.... வெற்றுடம்போடு கோயிலுக்குச் செல்வோம் !"
"குடியானவனைப்போல் தோற்றமளிப்பதற்காகவா ? சரிதான்.... பெரியப்பா ! என்னை மன்னித்து விடுங்கள். உங்களின் புண்ணியத் திதியன்று உங்களுக்காக எதுவும் கொண்டு வராமல் வெறும் கைகளை ஏந்தி ஒரு பிச்சைக்காரனைப்போல் வரும் இந்தச் சடையனை மன்னித்து விடுங்கள் !"
"இளவலே ! மனந்தளர வேண்டாம் ! வீரசுவர்கத்திலிருக்கும் சுந்தர பாண்டியரும் வீரபாண்டியரும் நம்மைப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் - உங்களின் நிலை¨யை அவர்கள் அறிவார்கள். இந்த ஆபத்தான காலத்திலும் பிடிவாதமாக தம் பள்ளிப்படையக் காண வரும் சோதரன் மகனை சுந்தர பாண்டியத் தேவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார் - கிளம்புங்கள். இன்னும் சிறிது நேரத்தில் கோயில் மூடப்பட்டுவிடும்...."
புரவிகளைக் கட்டிவைத்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டு இருவரும் அந்தக் காட்டுப் பாதையின் ஓரமாக ஊரை நோக்கி நடந்தார்கள்.
"மானாபரணரே ! நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்தப் புண்ணிய பூமியில் பல காலத்திற்கு முன்பு நடந்த அந்த வீரமிகுந்த பயங்கரப் போர்க்களத்தை நேரில் காணும் பாக்கியம் செய்தவரல்லவா நீர் !"
"என்ன இத்தனை நேரம் அந்தப் போர்க்களத்தைப் பற்றிய பேச்சு தங்களின் திருவாயிலிருந்து வரவில்லையே என்று எதிர்பார்த்தேன்... வந்துவிட்டது. நான் கொடுத்து வைத்தவன் அல்ல இளவலே - கொடுத்து வைத்தவனே அல்ல ! இந்தப் புண்ணிய பூமியில் அன்று வீரசுவர்கத்தையடைந்த எனது பாட்டனாரே கொடுத்து வைத்தவர்... ஆ ! எத்தனை பெரிய மாவீரர் அவர் ! ஒரு சூறாவளிபோல் அல்லவா சோழன் சைனியத்தை அன்று பந்தாடினார் ! ஒருவர் இருவரல்ல - கிட்டத்தட்ட பன்னிரண்டு பேர் அவரைச் ஒரேயடியாகச் சூழ்ந்துகொண்டு சாய்த்தார்களாம் ! சோழனின் வீரத்தைப் பார்த்தீர்களா ? அந்த நிலைமையிலும் பன்னிருவரில் நான்கு பேரின் கைகால்களைக் காவு வாங்கிவிட்டுத்தான் பாட்டனின் கரங்கள் ஓய்ந்தனவாம்....."
"மீண்டும் அந்தப் போர்க்களத்தைப்பற்றி விபரமாகத் தெரிவியுங்களேன்..."
"சிறுவயதிலிருந்து எத்தனையோ முறை இந்த வெண்டி நாட்டுப் போரைப் பற்றி நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் - நானும் சொல்லியிருக்கிறேன். என்றாலும் கேட்போரின் உள்ளத்தைச் சிலிர்க்கவைக்கும் அச்சரித்திரத்தை எத்தனை முறை சொன்னாலும் கேட்டாலும் அலுப்புத் தட்டுவதில்லைதான்... அதனால் சொல்கிறேன்....
இளவலே அப்போது எனக்கு மிகச் சிறிய வயது. பிராயம் எட்டு அல்லது பத்துதான் இருக்கும். சிறுவயதிலிருந்தே என் தந்தையாரைவிட என் பாட்டனாரிடம் அதிகப் பிரேமை எனக்கிருந்தது. அவர் அக்காலத்தில் மிகப் புகழ்பெற்ற வீரர். நான் பிறந்தபோது அவருடைய பெயரைத்தான் எனக்கும் வைத்தார்கள். வழிவழியாகத் தென்னவன் சேனானி நாயகமாயிருந்த வம்சம் எங்களுடையது. அந்த முறையில் என் பாட்டனார் மானாபரணரும் பாண்டிய சைனியத்தின் ஒரு பகுதிக்கு சேனானி நாயகமாயிருந்தார். அவருடன் நான் சிறு வயதில் பலமுறை வாட்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். "உடலை எப்போதும் நீ வஜ்ரம்போல வைத்துக்கொள்ள வேண்டும் !" என்று அடிக்கடி சொல்வார். ஏனெனில் அவருடைய மூத்த மகனும் என்னுடைய தந்தையாருமான வீரநாராயணர் சிறு வயது முதலே சீக்கில் விழுந்துவிட்டதுதான் காரணம். என் தந்தை சாதிக்கவேண்டியதையெல்லாம் நான் சாதிப்பேனென்று என் பாட்டனார் உறுதியாக நம்பினார். அதற்காகவே சிறப்பு பயிற்சிகளெல்லாம் எனக்கு அளிக்கப்பட்டன.
திடீரென்று ஒருநாள் பராந்தகனின் சோழப்படை அவனது மகன் உத்தமசீலியின் தலைமையில் பாண்டிமண்டலத்தைத் தாக்கியது. அப்போது பாண்டியப் பேரரசராக இருந்தவர்தான் உங்களின் பெரியப்பா சுந்தரபாண்டியத் தேவர். உங்களின் தந்தையார் வீரபாண்டியர் அப்போது தென்திசை மாதண்ட நாயகராக இருந்தார். அவருடைய தலைமையிலிருந்த மிகப் பெரிய படை வந்து சேர்வதற்குள்ளாகவே இங்கு போர் துவங்கிவிட்டதுதான் துரதிருஷ்டம்.
போருக்குக் கிளம்பிக்கொண்டிருந்த என் பாட்டனாரின் காலைக் கட்டிக்கொண்டு நானும் வருவேனென்று பிடிவாதம் பிடித்தேன். அவருக்கு அதில் பரம திருப்தி. போருக்குக் கிளம்புமுன் என்னிடம் அவர் ஒரு சத்தியப் பிரதிக்ஞை வாங்கிக்கொண்டார். அது என்னவெனில் ஒருவேளை அவர் போர்க்களத்திலிருந்து வரமுடியாமல் போக நேர்ந்துவிட்டால்...."
இந்த இடத்தில் அரையன் மானாபரணனாரின் உள்ளம் கலங்கி தொண்டை மிகவும் கம்மிவிட்டது. தோளிலிருந்த துண்டால் மெல்லத் தன் கண்களைத் துடைத்துக்கொண்டார் அவர். பாண்டிய இளவல் என்று அவரால் அழைக்கப்பட்ட சடையமாறர் அவருடைய தோள்களை மெல்லப் பிடித்து அவரை தேற்றினார்.
"சொல்லுங்கள் ! மேற்கொண்டு சொல்லுங்கள் ! அந்த வீரவரலாற்றை ஆயுள் முழுவதும் கேட்கவேண்டுமென்று ஆவலெழுகிறது எனக்கு... தொடர்ந்து சொல்லுங்கள் !"
"சொல்கிறேன்..." என்று பதிலிறுத்த அரையனார் அந்த வரலாற்றைத் தொடரலானார்.
(தொடரும்...)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|
|
|
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
|