|
|
|
www.varalaaru.com
A portal for South Indian History
73 இதழ்கள்... 1009 படைப்புக்கள் !
|
|
Home
About US
Font Problems
|
|
|
சேரர் கோட்டை அத்தியாயம் 14
கோகுல் சேஷாத்ரி
|
|
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
|
நடக்காத காரியம் !
மணி சப்தம் கோயிலுக்குச் சற்று தூரத்தில் மரத்தடியில் ஒளிந்து கொண்டிருந்த சடையமாறருக்கும் கேட்டது. நிச்சயம் ஏதோ பிரச்சனைதான் - அதில் சந்தேகமில்லை. அரையனாருக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி திரும்பிப்பாராமல் அவர் இப்போது ஓட்டம் பிடித்தாக வேண்டும்.
ஆனால் வீரம் இயல்பாகவே கைவரப்பெற்ற சடைய மாறரால் அவ்விதம் அரையனாரை விட்டுவிட்டு ஓடமுடியவில்லை. சட்டென்று தன்னுடைய வில்லில் அம்பு பூட்டினார். சுற்றுப்புறமெங்கிலும் இருள் சூழ்ந்திருந்ததாகையால் ஒன்றும் புலப்படவில்லை. இருந்த ஒரே ஒளி சுந்தர பாண்டிய ஈச்சுரத்து மகாதேவருக்கருகில் எரிந்துகொண்டிருந்த ஒரே நுந்தா விளக்கு (82) மட்டும்தான்....
(82) நந்தா விளக்கு என்பது நுந்தா விளக்கு எனத் திரிந்து வழங்கப்பட்டது. அணையா விளக்கு என்று பொருள்படும்.
...இல்லை. இப்போது அதுவும் அணைந்து விட்டது !
***********************************************************************************************
மணியோசை எழும்பிய சில கணங்களில் தன்னைச் சுதாரித்துக்கொண்ட அரையனார், அடுத்த கணம் ஒரே பாய்ச்சலில் தனது வாளால் கர்ப்பக் கிருகத்து விளக்கை அணைத்தார். சுற்றிலும் அந்தகாரம் அடுப்பங்கரியைப்போல் சூழ்ந்துகொண்டது. கோயிலைச் சுற்றி சடசடவென்று நடமாட்டங்கள் கேட்கத்துவங்கின. அடுத்த சில கணங்களுக்கு கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த குழப்பம் நீடித்தது. "பிடி ! பிடி !" "ஏய், இந்தப் பக்கமாக வா ! தப்பிவிடப் போகிறான் !" "ஐயோ - விட்டுவிடுங்கள் !" போன்ற குரல்கள் ஏககாலத்தில் எழுந்தன.
கோயிலின் வாயிலிலிருந்து அவசர அவசரமாக - ஏறக்குறைய கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்டதைப்போல் - வெளியில் வந்து விழுந்த உருவத்தை வாயிலின் இரு பக்கங்களிலும் காத்துக்கொண்டிருந்த கைக்கூலிகள் தங்களுடைய நீண்ட வாளால் வெட்டி வீழ்த்தினர். அடுத்த கணமே அவர்கள் இருவர் மார்பிலும் அம்புகள் பாய்ந்து அவர்களைச் சாய்த்தன....
கோயிலிலிருந்து முன்வந்த உருவத்தின் பின்னொட்டே மற்றொரு பெருத்த உருவம் வெளியில் வந்தது ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தது. இந்த உருவம்... ஏறக்குறைய அரையனாருடையதைப் போலில்லை ? அப்படியானால் இதற்கு முன் வெளியில் வந்து உயிரை விட்டது... அடக்கடவுளே ! அந்தக் குறண்டியூர்ப் பெரியவரா !
பெருத்த உருவத்தின் வாயிலிருந்து ஒரு பிரத்யேக சீழ்க்கையொலி கிளம்பிற்று. அவ்வளவுதான் - அந்த ஒலிக்காகவே காத்திருந்ததுபோல் தூரத்திலிருந்து அம்புமழை பொழிய ஆரம்பித்துவிட்டது ! அடடா - வீரர்கள் பிடித்திருந்த வாட்கள் மட்டுமே மின்னும் அந்த இருட்டில் அந்த வாட்களை அடையாளமாக வைத்துக்கொண்டே அம்புகள் தொடுக்கப்படுகின்றனவே.....
சில கணங்களில் வெளியில் வந்துவிட்ட அந்தப் பருத்த உருவம் நேராக ஆலமரத்தடியை நோக்கி ஓட்டம் பிடித்தது ! கோயிலின் வாயிலுக்கருகில் மேலும் நான்கு வீரர்கள் உயிரை இழந்து வீழ்ந்தார்கள். கோயிலில் மீண்டும் விளக்கை ஏற்றி அதில் தனது தீப்பந்தத்தைப் பற்றவைத்துக்கொண்டு வீரர்களின் தலைவன் வெளியில் வந்து பார்த்தபோது தன் பக்கத்தில் ஏற்பட்டிருந்த சேதத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
வெகு தூரத்தே இரு புரவிகளின் வேகமாகக் கிளம்பும் குளம்படிகள் அவனுக்குக் கேட்டன.
***********************************************************************************************
"தப்பியது தம்பிரான் புண்ணியம் !"
"இல்லை - எப்படியும் தப்பியிருப்போம். அவர்கள் சோழனின் ஒற்றர்படை வீரர்களே அல்ல..."
"என்ன சொல்கிறீர்கள் அரையனாரே ?"
"சோழனின் ஒற்றர்படை இப்படிக் கூட்டமாக வந்து ஆளைப் பிடிக்க முயலாது. தந்திரமாக நரிபோல் அணுகி இரையை வலைக்குள் வீழ்த்துவார்கள். ஆனால் இங்கிருந்தவர்கள் கூலிப்படைகளைப்போலச் செயல்பட்டார்கள். ஆட்களைப் பார்த்தாலும் சோழ நாட்டவரைப்போலில்லை - இந்தப் பகுதி ஆட்களாகத்தான் தெரிகிறார்கள். அவசர அவசரமாக சுற்றுப்புறங்களில் ஆட்களைப் பொறுக்கியெடுத்து அமைக்கப்பட்ட கூலிப்படை இது...."
"இத்தனை அவசரமாக நம்மைப் பிடிக்க முயல்வது யார் ?"
"தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நான் அப்போது அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும்...."
"சரியாய்ப் போயிற்று..."
"தானைத் தலைவரிடம் இந்த நிகழ்வைத் தெரிவிப்போம் - என்ன சொல்கிறாரென்று பார்க்கலாம்...."
"சரி, கழிந்தது கழியட்டும் - ஒழிந்தது ஒழியட்டும். பற்பல ஆபத்துக்களையும் மீறிக் குறண்டியூருக்கு வந்து பெரிய தந்தையாரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டாயிற்று. அடுத்தது என்ன ?"
"மலைநாட்டின் இரகசிய இடமொன்றில் அமரபுஜங்கப் பாண்டி தேவரைச் சந்திப்பதுதான். அதற்குமுன் தெற்கே சுந்தரபாண்டியபுரத்தில் நாம் சேர்த்திருக்கும் படைகளை அவரவர் பகுதிகளுக்கே அனுப்பிவிட்டு அடுத்த உத்தரவு வரும்வரை காத்திருக்கச் சொல்ல வேண்டும். அதற்கும் முன்னதாக இங்கு நடந்த சம்பவங்களனைத்தையும் முறியாக எழுதி...."
"பாண்டியபுரப் படைகளின் எண்ணிக்கை எனக்குக் கவலையைக் கொடுக்கிறது, மானாபரணரே ! மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டாயிரம் பேர் தேறுவார்கள்...."
"கவலைப்படாதீர்கள் இளவலே ! வள்ளுவனாரிடம் கணிசமான படைகள் குவிந்திருக்கின்றன. எப்படியாவது சோழனைச் சூடேற்றிவிட்டு தெற்கே இழுத்து விட்டுவிட்டோமென்றால் வெற்றி நமதே !"
"எப்படி அத்தனை உறுதியாகச் சொல்கிறீர்கள் ?"
"நீங்களே ஒருமுறை நாஞ்சில் நாட்டிற்கு நேரில் சென்று அங்கே வள்ளுவனார் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்வையிட்டீர்களானால் புரிந்துகொள்வீர்கள்...."
"அது சரி, நாம் சரிவரத் தயாராகுமுன் நமது உண்மையான நோக்கங்களை எதிரிகள் புரிந்துகொண்டு எச்சரிக்கையடைந்துவிட்டால் ?"
"அதற்காகக்தானே காந்தளூர்ச் சாலையை களத்தில் இழுத்து விட்டது ! இளவலே - ஒன்று கூறுகிறேன். அதனை நன்றாக நினைவில் வைத்திருங்கள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பலகீனம் உண்டு. வீராதி வீரர்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஏதோ ஒரு விஷயத்தில் - ஏதோ ஒரு இடத்தில் - அனைவருமே பலகீனமானவர்களாகிவிடுகிறோம். மகா வீரராக விளங்கிய உங்கள் தந்தையாருக்கும் ஒரு பலகீனம் இருந்தது. அதை நான் குறிப்பிட வேண்டாம் - உங்களுக்கே தெரியும் ! அந்த பலகீனத்திற்கு விலையாகக் கடைசியில் அவர் தம் இன்னுயிரையே இழக்க வேண்டி வந்தது என்பதையும் மறந்திருக்க மாட்டீர்கள்.....அருள்மொழி வர்மனுக்கும் ஒரு மிகப் பெரிய பலகீனம் உண்டு. அந்த பலகீனத்தைத்தான் இப்போது நாம் சரிவரப் பயன்படுத்த நினைக்கிறோம்...."
"வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் இதில் எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை. நாம் நினைக்கும்படியெல்லாம் நடக்குமளவிற்கு அவன் அத்தனை பெரிய முட்டாளாயிருப்பானென்று நான் நினைக்கவில்லை...."
"மற்ற விஷயங்களில் எப்படியோ தெரியாது. ஆனால் சாலை விவகாரத்தில் அருள்மொழியின் சிந்தனா சக்தியை அளவில்லாத கோபம் மறைக்கிறது...."
"இத்தனை வருடங்களுக்கு மேல் மனதில் ஞாபகத்தில் வைத்திருக்குமளவிற்கு அது என்ன அத்தனை கொடூரமான மரணமா என்ன ?"
"கொடூரம்தான் இளவலே - மிகக் கொடூரமான மரணம். நிதானமாகத் திட்டமிட்டு நன்கு நிறைவேற்றப்பட்ட கொடூரம் அது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் முற்றிலும் எதிர்பார்க்காத ஆட்களால் நிறைவேற்றப்பட்டதால்தான் அந்த மரணம் இன்றுவரை அருள்மொழியை பாதிக்கிறது..... ஆனால் ஆதித்தனுக்கு அப்படிப்பட்டதொரு மரண தண்டனையை நிறைவேற்றியது முற்றிலும் நியாயமானதுதான். இளவலே ! தகனத்தின்போது உங்களது தந்தையாரின் உடலில் தலை இல்லை. ஆதித்தனின் கட்டளையின் பேரில் சோழநாட்டு வீரர்கள் வெட்டிக்கொண்டுபோய் விட்டதாகச் சொன்னார்கள். எங்கள் எல்லோருக்கும் இரத்தம் கொதித்தது ! "சோழன் தலைகொண்ட" வீரபாண்டியன் என்று உங்களின் தந்தையார் பட்டம் பூண்டதென்னவோ உண்மைதான். ஆனால் வேறு எந்தவிதமான இழிவான காரியத்திலும் ஈடுபடவில்லை. சோழன் என்ன செய்தான் தெரியுமா ? வெட்டப்பட்ட தலையை எல்லோரும் பார்க்கும்படி தஞ்சைக் கோட்டை வாயிலில் சொருகிவைத்தான்(83) ..."
(83) இராஜேந்திர சோழரின் எசாலம் செப்பேடுகள் இந்நிகழ்வுக்குச் சான்று பகர்கின்றன
"இப்போது நீங்கள் என்னுடைய பலகீனமான பக்கத்தைத் தொட்டுவிட்டீர்கள்.... தந்தையாருக்கு ஈமக்கடன்களைக்கூடச் சரியாகச் செய்யமுடியாததை நினைத்தால் எனக்கும் கோபம் தலைக்கேறிவிடுகிறது.... புத்தி சிந்திக்கும் திறனை இழந்துவிடுகிறது.... ஆனது ஆகட்டும் என்று நரகத்திற்கே சென்று அந்த ஆதித்தனை வெட்டி வீழ்த்தவேண்டுமென்று வெறியுண்டாகிறது.....ஹ...."
அந்தச் சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்காகத் தலையை அப்புறமும் இப்புறமும் சிலுப்பிக்கொண்டார் சடையமாறர்.
"சரி, பழையதை அதிகம் கிளற வேண்டாம். நடக்க வேண்டியதைப்பற்றிப் பேசுவோம்...."
"மலைநாட்டில் அமரபுஜங்கர் இப்போது எங்கே இருக்கிறாரென்பது உமக்குத் தெரியுமா ?"
"அது பரம இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது - எல்லோரும் மகோதகைப் பட்டினத்திற்கருகில் உள்ள காட்டுப்பகுதிகளில் சகல வசதிகளுடனும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லிக்கொள்கிறார்கள்... எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது...."
"சேரநாட்டு வேந்தர் பாஸ்கரர் இரவிவர்மன் திருவடி நமக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பாரா ?"
"உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவர் இருதலைக்கொள்ளி எறும்பாகத்தான் இருக்கிறார். சோழருடன் பகிரங்கமான பகையையும் போரையும் அவர் விரும்பவில்லையென்றுதான் சொல்லவேண்டும்.... ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் நட்புறவை நாடவும் அவர் தயாராகத்தான் இருப்பார்..."
"அது ஆபத்தாயிற்றே...."
"நிச்சயமாக. அதனால்தான் பகிரங்கமாக இருவரும் எந்த அரசியல் உறவும் பூண்டுவிடாமலிருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது...."
"இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் சோழனுடைய நிலைபாடு என்ன ? நாம் என்னென்னவோ திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்க அவன் சட்டென்று அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு விட்டால்....?"
"அது நடக்காத காரியம்..."
"எப்படி அத்தனை உறுதியாகச் சொல்கிறீர்கள் ?"
"இவர்கள் இருவரும் பகிரங்க உறவு பூண முடியாமல் காந்தளூர்ச் சாலை விவகாரத்தை நாம் நந்திபோல் முன்னிறுத்திவிட்டோம்..... இராஜதந்திரம் இராஜதந்திரம் என்றெல்லாம் பேசுகிறார்களே - இதனைவிட மிகச்சிறந்த இராஜதந்திரத்தைப் பார்க்க முடியுமா ? அஹ்....ஹ்....."
கெக்கலித்துச் சிரித்தார் அரையன் மானாபரணர்.
"எனக்கும்கூட காந்தளூச்சாலையை இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தியதை சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. இரவிநீலி குடும்பத்தாரை அருள்மொழி வீரநாராயணபுரத்திலிருந்து நாடுகடத்தியதோடு பிரச்சனை முடிந்ததல்லவா ? பின் சாலை எவ்வாறு இதில் சம்மந்தப்படுத்தப்பட்டது ?"
"மூன்று விதமான காரணங்களால் சாலை இந்த விவகாரத்தோடு சம்மந்தப்படுத்தப்படுகிறது. முதலாவது - ஆதித்த கரிகாலனைக் கொலை செய்வதற்கான திட்டம் முழுவதும் சேரநாட்டின் காந்தளூர் வலிய சாலையில்தான் வகுக்கப்பட்டது. இரண்டாவது - அந்தத் திட்டத்தை அன்று செவ்வனே வகுத்துக் கொடுத்தவர் சாலையின் இன்றைய ஆச்சாரியர்களுள் ஒருவரான திருநாராயண பட்டதிரி. மூன்றாவது - ஆதித்தனைக் கொலை செய்ததைப் போலவே அருள்மொழியையும் தீர்த்துக்கட்ட இப்போது சாலையில் திட்டம் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.... அவ்வளவுதான் விஷயம் !"
"என்ன... நிஜமாகவா ? அருள்மொழியைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறதா ?"
"ஆமாம்....அருள்மொழியை அகற்றிவிட்டு அல்லது பரலோகத்திற்கு அனுப்பிவிட்டு மதுராந்தகன் கண்டராதித்தனை சோழநாட்டின் அரசனாக முன்னிறுத்துவது என்பதுதான் பட்டதிரியின் திட்டம்...."
"இந்தச் செய்திகளெல்லாம் பரம இரகசியங்களல்லவா ? சோழர்களுக்கு எப்படித் தெரிந்தது ?"
"நாம் தெரியவேண்டுமென்று நினைத்ததால் தெரியப்படுத்தினோம்....அஹ்...ஹ்..." - மீண்டும் அரையனாரிடமிருந்து அதே கெக்கலிப்பு.
"என்ன சொல்கிறீர்கள் ?"
"எதிரிகளுக்கு நாம் விரும்பும் ஒருசில தகவல்கள் தக்கபடி போய்சேரும்படி பார்த்துக்கொள்வதுதான் நமது ஒரே பணி... சமீபத்தில் நடந்த மதுரைப் படையெடுப்பில்கூட ஒரு ஓலைத்துணுக்கை விட்டுவிட்டு வந்தோம். அதனை அவர்கள் கைப்பற்றி வைத்துக்கொண்டு திருநாராயண பட்டதிரியை நேரடியாக மிகப்பெரியதொரு சதியில் இந்நேரம் சம்மந்தப்படுத்தியிருப்பார்கள்..... இளவலே ! காந்தளூர்ச் சாலையை அருள்மொழியால் தாக்காமல் இனி இருக்கவே முடியாது - சாலைப் பெருமக்களாலும் அருள்மொழியை எதிர்க்காமலிருக்க முடியாது - அத்தனை தூரத்திற்கு இருவரையும் நாம் இதில் முன்னிழுத்துவிட்டு விட்டோம் !"
"ஏதோ நேரில் பார்ப்பதுபோல் நடந்துகொண்டிருப்பவைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்...?"
"உண்மைதான் - நமது கண்கள் சோழநாடெங்கிலும் இப்போது வியாபித்துள்ளன.... அருள்மொழியின் ஒவ்வொரு அசைவையும் நாம் துல்லியமாகக் கவனித்து வருகிறோம்...." - அரையன் மானாபரணரின் முகத்தில் அபூர்வமானதொரு ஒளி தோன்றி மறைந்தது.
"சரி, இன்றிரவு எங்கு தங்குகிறோம் ?"
"இரவு எத்தனை நேரமானாலும் சோளாந்தகச் (84) சதுர்வேதி மங்கலத்தை அடைந்து குலசேகரக் கிழார் வீட்டிலேயே தங்கிவிடுவோம் - மற்ற இடங்களில் தங்குவது ஆபத்து !"
(84) சோழாந்தகன் அல்லது சோளாந்தகன் என்னும் பெயர் இடைக்காலப் பாண்டியப் பேரரசில் பிரசித்தமானது. மதுராந்தகன் (மதுரையின் அந்தகன்) என்னும் பெயருக்கு எதிராக உருவான பெயர் இது. இப்பெயரைப் பாண்டிய அரசர்களும் அரசியல் அதிகாரிகளும் பூண்டுள்ளனர்
***********************************************************************************************
பின்னிரவு நேரத்தில் இருவரும் சதுர்வேதி மங்கலத்தை அடைந்தபோது அங்கு முக்கியமானதொரு செய்தி அவர்களுக்குக் காத்திருந்தது.
(தொடரும்...)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|
|
|
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
|