www.varalaaru.com
A portal for
South Indian History
 
73 இதழ்கள்...
1009 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
சேரர் கோட்டை
அத்தியாயம் 16

இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
வளங்கெழு தொண்டி


சங்ககாலம் தொட்டே தொண்டிப் பட்டினமானது பாண்டியர்களின் முக்கியக் கடற்கரை நகரமாகப் புகழ்பெற்றிருந்தது. முசிறி, கொற்கை முதலான துறைமுகப் பட்டினங்களுக்கு அடுத்தபடியாக தொண்டியின் வாணிபம் அக்காலத்தில் அமைந்திருந்தது.

சங்ககாலப் புலவரான அம்மூவனார் ஒரு நாள் தொண்டித் துறைமுகத்துக்கு வருகை புரிந்தார். அலைகள் ஆர்பரிங்குங் கடலும் அக்கடலுக்கு அஞ்சாமல் மீன்பிடித்து வரும் பரத்தவரும் அவர்கள் கொண்டு செல்லும் வலைகளை அடிக்கடி அறுத்துக்கொண்டு வெளியில் ஓடிவிடும் மாபெரும் மீன்களும் அதன் காரணமாக அடிக்கடி தைக்கப்பட்டுக்கொண்டிருந்த புதிய மீன்வலைகளும் கரையின் ஒரு ஓரத்தில் செப்பனிடப்பட்டுக்கொண்டிருந்த படகுகளும் கட்டு மரங்களும் கரைக்கு சற்றுத் தள்ளி அடர்த்தியாக வளர்ந்திருந்த புன்னை மரங்களும் அதில் கூக்குரலெழுப்பிக்கொண்டிருந்த பறவையினங்களும் அவருடைய கண்களைக் கவர்ந்தன.

அவர் சென்ற நாளில் பெரும் சுறாவொன்று திசைதெரியாமல் தடுமாறிக் கரையில் அகப்பட்டுக்கொண்டு உயிரை விட்டுவிட்டது. அதனை அதிகாலையில் கண்ட பரத்தவச் சிறுவன் ஒருவன் ஓடிப்போய் அவன் தந்தையிடம் தெரிவித்திருக்கிறான். அவனுடைய தந்தை தன்னுடைய சுற்றத்தாருடன் வந்து சுறாவின் உடலை பகிர்ந்து அண்டை அயலாருக்கெல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அன்று முழுவதும் சுறா இறைச்சி நெருப்பில் வேகும் நாற்றத்தில் (நாற்றமென்றால் அக்காலத்தில் மணம் என்று பொருள் !) அந்தக் கடற்கரையே முங்கிக் குளித்தது. இத்தகு அருமையான நெய்தல் நிலக் காட்சிகளை ஒரு பார்வையாளராய் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த அம்மூவனாருக்கும் ஒரு துண்டு சுட்ட சுறா இறைச்சியும் சிறிதளவு தயிரும் மதிய உணவாகக் கிடைத்தன ! தொண்டியின் அனுபவங்கள் அவருடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன.

பின்னாளில் நெய்தல் நிலத்தின் தலைவனுக்கு தலைவியின் நலனை உரைக்கப் புகுங்கால் தொண்டி அனுபவங்கள் அவருக்கு அருமையான உதாரணங்களாய் அ¨ந்துவிட்டன...

....
குருஉத் திரைப் புணரி உடைதரும் ஏக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி,
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே....


"தலைவனே ! அலைகள் மோதி மணல் மேட்டை உடைக்கப் படகுகளை செப்பனிட்டு புதிய வலைகள் செய்யும் மீனவர்கள், மணல் மேட்டுக்கரையில் ஒதுக்கப்பட்ட சுறாமீனை மணம் கமழ சுற்றிலும் உள்ள எல்லோருக்கும் பிரித்துத் தரும் வளமுடைய தொண்டி மாநகர் போலத் தலைவியின் நலன் மிகச் சிறந்ததாகும்..." என்று பாடினார் அவர். இப்பாடல் அகநானூற்றுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இப்பழம் வாணிப நகரானது நமது கதை நடக்கும் காலத்தேயும் நல்லதொரு புழக்கத்தில் இருந்த பாண்டிநாட்டுத் துறைமுகப் பட்டினமாக விளங்கியது (94). பாண்டிய அரசியல் வன்மையின் வளர்பிறைத் தேய்பிறைக் காலங்களைப்போல் அதன் முக்கியத்துவமும் வாணிப நலனும் மாறி மாறி வளர்ந்தும் தேய்ந்தும் வந்தன.


(94) நாம் இங்கு குறிப்பிடும் தொண்டி தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையருகில் அமைந்துள்ள நகரமாகும். சங்ககாலத் தொண்டி மாநகரும் இதுவும் ஒன்றா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே உள்ளது. கேரளத்தின் மேற்குக்கரையில் முசிறி துறைமுகத்துக்குமேல் பரதப்புழா நதியின் முகத்துவாரத்தில்தான் பண்டைய தொண்டி அமைந்திருந்தது என்பதாக ஒரு சாரார் சொல்கின்றனர்



***********************************************************************************************


மார்கழி மாதத்தின் கிருஷ்ண பட்சத்துத் தசமியின் இருள் நகர்மேல் கவிந்து ஒரு ஜாமமும் ஒரு நாழிகையும் கழிந்துவிட்ட அந்த முன்னிரவு நேரத்திலும் தொண்டித் துறைமுக மாநகரின் தெருக்களில் போக்குவரத்து குறைவின்றிக் காணப்பட்டது. வீடுகள் தோறும் மாடங்களிலும் சாளரங்களிலும் பெரும் அகல் விளக்குகள் மார்கழிக் குளிருக்கு அஞ்சாமல் எரிந்துகொண்டிருந்தன. அவ்விளக்குகளின் பெரிதான அளவைப் பார்த்தாலே அவை இரவு முழுவதும் எரிவதற்காக ஏற்றப்பட்டுள்ள நந்தா விளக்குகள் என்பது தெளிவாகும். அக்காலத்தில் இதுபோன்ற நந்தா விளக்குகள் அல்லது அணையா விளக்குகளைக் கோயில்களிலும் மற்ற பொது இடங்களிலும் ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. திருக்கோயில்களுக்கு நந்தா விளக்களிக்கும் நிவந்தங்கள் கல்வெட்டுக்களில் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன. பகல் - இரவு என்னும் பாரபட்சமின்றி எந்நேரமும் நிலவும் வணிகப் போக்குவரத்தை மனதில் கொண்டே இப் பெருவிளக்குகள் தொண்டிநகரெங்கிலும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன என்பதாக யூகிக்கிறோம்.

கடற்கரையிலிருந்து நகரப் பகுதிக்குச் செல்லும் தொண்டியின் முக்கியச் சாலையான ஸ்ரீவல்லபன் திருவீதியில் இரு புறங்களிலும் கூட்டம் ஜேஜே என்று நெட்டித் தள்ளியது. பிற்காலப் பாண்டியப் பேரரசர்களுள் ஒருவரான் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபரின் பெயரைத் தாங்கி நின்ற அந்த வீதியில் சாவகம், கடாரம், மாப்பளம், சீனம் முதலான வெளிநாட்டு வணிகர்கள், அராபிய வியாபாரிகள், கலிங்கம், கோசலம், காஷ்மீரம், உஜ்ஜயினி முதலான வட தேசத்து வணிகர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் காணப்பட்டார்கள். வல்லபன் திருவீதியின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த துறைமுகத்தில் மாலை நேர சுங்கப் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பத் தலைப்பட்ட எண்ணற்ற உள்ளுர் அரசாங்க அலுவலக ஊழியர்கள் நெரித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் ஜனத்தால் பெருந்தொல்லைக்கு ஆளாக நேர்ந்தது.

திருவீதி முடிந்து துறைமுகப் பகுதிகள் துவங்கும் இடத்தில் அமைந்திருந்த பாண்டிமாதேவிப் பேரங்காடியிலும் கூட்டத்திற்குக் குறைவில்லை. பாய்மரங்கள் விரித்த பெருங்கலங்களில் பற்பல நாடுகளிலிருந்தும் வந்திறங்கியிருந்த அதியற்புதமான பொருட்கள் பல அங்கே மலிவு விலைக்கு விற்கப்பட்டன. பொருட்கள் வந்திறங்கியவுடன் குறுகிய கால இலாபம் சம்பாதித்துவிடும் நோக்கில் பல வணிகர்களும் அங்கேயே கடைவிரித்துத் தத்தம் பொருட்களை விற்றுவிடத் தலைப்பட்டார்கள். கப்பற் பிரயாணத்தில் சற்றே சேதமடைந்துவிட்ட பொருட்கள் அரை விலைக்கும் கால் விலைக்கும் விற்கப்பட்டன. அவற்றுக்கு உள்ளுர்வாசிகளிடம் அதிக கவர்ச்சியிருந்தது.

பேரங்காடிக்கும் வல்லபன் திருவீதிக்கும் இடைப்பட்ட சிறியதொரு மணல் மேட்டில் ஒரு கூத்தாடி செப்படு வித்தைகள் செய்து காண்பித்துக்கொண்டிருந்தான். மளமளவென்று ஒரு நீளமான தாம்புக்கயிற்றை அவன் வானை நோக்கி வீசி எறிவதையும் அதனைப் பிடித்துக்கொண்டு ஏழு வயதுச் சிறுவன் சரசரவென்று மேலேறி அந்தகார இருட்டில் காணாமற்போவதையும் பெருங் கூட்டமொன்று வாயைப் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. கூத்தாடியின் மனைவி போன்று காணப்பட்ட பெண்மணியொருத்தி பார்வையாளர்களைச் சுற்றிச் சுற்றி வந்து சிறியதொரு மூங்கில் குடலையில் கழஞ்சுகளை வசூல் செய்துகொண்டிருந்தாள்.

மணல் மேட்டைத்தாண்டி அமைந்திருந்த பகுதியில் வரிசையாக சாமக்கோள் ஆருடக்காரர்களும், நாடிக் கணியர்களும், நிமித்தகர்களும் ஜோஸ்யர்களும் வரிசையாக அமர்ந்து வாடிக்கையாளர்களின் ஷேம இலாப கிரகப் பார்வைகளை விரித்துரைத்துக்கொண்டிருந்தார்கள். பல்வேறு நாட்களின் தசா இலட்சணங்கள், கோள் நிலைகள், பாதசாரங்கள் முதலான விபரங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு இன்னாருடைய ஜென்ம நட்சத்திரத்துக்கு விதை விதைக்க ஏற்ற நாள் எது, அறுவடைக்கு ஏற்ற நாள் எது, விவாஹத்திற்கு ஏற்ற நாள் எது, தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாள் எது என்பதையெல்லாம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கூறுகிறவர்கள் ஒரே ஒரு மாடையை மட்டும் வாங்கிக்கொண்டு பலன்களை சட்டென்று கூறினார்கள். மேல்விபரங்கள் கேட்பவர்களை அவர்கள் ஜோஸ்யர்களிடம் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

பேரங்காடிக்குச் சிறிது மேற்கே அமைந்திருந்த பகுதிகளில் வரிசையாகப் பற்பல சத்திரங்களும் விடுதிகளும் அமைந்திருக்கக் காண்கிறோம். அவற்றுள் ஒரு சில விடுதிகள் இலவச இரவு போஜன சாலைகள் போலும்... ஏனெனில் காவியுடை தரித்த பஞ்சபட்ச பரமானந்தப் பரதேசிகள் அவற்றில் கணிசமான அளவில் தென்பட்டார்கள். வேறு சில விடுதிகளோ நல்ல அமைப்புடன் பெருந்தனத்து வணிகர்கள் தங்கும் வாணிப விடுதிகள்போலத் தெரிந்தன. அவற்றுள் நுழைய எல்லோருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஏறக்குறைய எல்லா விடுதிகளிலுமே மனிதர்கள் போவதும் வருவதுமாக இருந்ததால் அந்தப் பகுதியே ஒரு சந்தைக்கடைபோல் காட்சியளித்து. இரு விடுதிகளுக்கும் சத்திரங்களுக்கும் இடையே நிலவிய இருட்டில் பரத்தையர் போக்குவரத்தும் இதர நிழல் விவகாரங்களும்கூட நடந்தேறிக்கொண்டிருக்கலாமோ என்னவோ....

விடுதிகளுள் சுமாரான வசதிகளுடன் தென்பட்ட மாறனாதிச்சன் சத்திரத்தின் வாயிலில் நாகைப் புறம்படியில் இரண்டு நாட்களுக்கு முன் நாம் விட்டுவிட்டு வந்த நண்பர்களிருவரும் மிகுந்த அலுப்புடனும் கலைந்த கேசத்துடனும் சொருகும் விழிகளுடனும் காட்சியளித்தார்கள். அவர்களின் கடிவாளத்திற்குக் கட்டுப்பட்டு அவர்களினருகே நின்றிருந்த அந்த இரண்டு அராபியப் புரவிகளும்கூட வாயெல்லாம் நுரை தள்ளி மிகுந்த அயற்சியுடன் நிலைகொள்ளாமலே நின்றிருந்தன. சத்திரத்தின் வாயிலில் நின்றுகொண்டிருந்த மத்தியஸ்தரொருவர் "வாருங்கள் ! வாருங்கள் ! வழக்கமான அறைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன - வணிகர் தங்கும் அறைகள் மட்டுமே உள்ளன... கட்டணம் இரண்டு பொற் கழஞ்சுகள் ! இரண்டே பொற் கழஞ்சுகள் ! தங்க விரும்புவோர் வரலாம் ! வாருங்கள் ! வாருங்கள் ! " என்று கூவிக்கொண்டிருந்தார். "ஓரிரவு தங்குவதற்கு இரண்டு பொற் கழஞ்சுகளா ! பகற்கொள்ளையாக அல்லவா இருக்கிறது !" என்று சத்திரத்தைக் கடக்கும் உள்ளுர்வாசிகள் மனதாரச் சபிப்பதை அந்த மனிதர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நண்பர்களிருவரும் அவரை நெருங்கினார்கள்.....

"ஐயா ! வரவேண்டும்... வரவேண்டும்..."

"இரண்டு நாட்களுக்குத் தங்கிக்கொள்கிறோம் - இந்தாருங்கள் இரு கழஞ்சுகள்...."

"அடேய் செண்பகநாடா- எங்கே போய்த் தொலைந்தாய் ! மிகவும் களைத்திருக்கும் இந்த இரு புரவிகளுக்கும் உடனே நீரும் கொள்ளும் காட்டு ! ஐயா - நீங்கள் வாருங்கள்...."

"சாப்பாடு ஏதாவது உள்ளதா...."

"ஆஹா ! இரவுச் சோறும் மீன் குழம்பும் மற்றும் ஆமைக் கறியும் (95) தயாராக உள்ளன.... ஒருவருக்கு நாற்பது மாடைகள்...."


(95) அக்காலத்தில் ஆமைக் கறியுண்பது கடற்கரை நகரங்களில் பிரபலமாக இருந்தது.


"என்ன.... நாற்பது மாடைகளா !" - பரமன் மழபாடியாரால் நடந்துகொண்டிருக்கும் அக்கிரமத்தைப் பொறுக்க முடியவில்லை போலும்....

"அதை ஏன் கேட்கிறீர்கள் ! தொண்டியில் பொருட்களின் விலை அத்தனை தூரத்திற்குப் பாழாகிக் கிடக்கிறது....." என்று ஒரு பெரிய இராமாயணமே படிக்க ஆயத்தமானவரை இளையவர் மடக்கி "கிடக்கட்டும் - ஸ்நானத்திற்கு வெந்நீர் இரண்டு திவலைகளில் அறைக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள் !" என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு அகன்றார்.

மத்தியஸ்தரை ஒரு அனல் பார்வை பார்த்துவிட்டுப் பரமன் மழபாடியாரும் இளையவரைத் தொடர்ந்தார்.


***********************************************************************************************


ஒரு கட்டு வெற்றிலையை வாயில் அதக்கிக்கொண்டு வாயிலுக்கு விரைந்த விடுதியின் மத்தியஸ்தர், மீண்டும் தன்னுடைய பழைய பணியில் ஈடுபடத் துவங்கினார்...

"வாருங்கள் ! வாருங்கள் !.... இன்னும் இரண்டே இரண்டு அறைகள்தான் மீதமுள்ளன...."

நிகழ்வுகள் எதுவுமின்றி ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று நாழிகைகள் கழிந்தபின்..... ஒரு கருத்த பாண்டி நாட்டு மனிதன் அவரை நெருங்கினான்.

அவனைக் கண்டவுடன் மத்தியஸ்தரின் வாயெல்லாம் பல்... "என்ன வேலா ! சாவகத்திலிருந்து புதிதாக "சரக்கு" ஏதாவது வந்திருக்கிறதா... ஒரு பிழி நமது பக்கம் தள்ளி விடுகிறது...."

"உஸ்.... சப்தம் செய்யாதே ! இது வேறு விவகாரம்....."

"வாருங்கள் ! வாருங்கள் ! (பின் மெல்லிய குரலில்) என்ன விவகாரம் ?"

அந்தக் கறுப்பு மனிதன் புகன்றது சந்தையின் இரைச்சலில் நமது காதுகளில் சரியாக விழவில்லை.....

"இரண்டே கழஞ்சுகள்... இரண்டே கழஞ்சுகள்..... வாருங்கள் ! (மெதுவாக) சரியான தகவலுக்கு என்ன பரிசு ?"

மீண்டும் அந்தக் கறுப்பு மனிதன் புகன்றது நமது காதுகளில் விழவில்லை. வேண்டுமென்றே மெதுவாகப் பேசுகிறான் போலும்..

"என்ன, நாற்பது கழஞ்சுகளா !"

"உஸ்.... சப்தம் செய்யாதே என்று சொன்னேனா இல்லையா ! மெதுவாக..... நான் கேட்கும் தகவல்..."

"அப்பனே ! நான் இன்றைக்கு நரி முகத்தில் முழித்திருக்கிறேன் போலும். விடுதியில் வியாபாரம் கன ஜோர் ! வந்த இலாபம் போதாதென்று இப்போது சுளையாக நாற்பது பொற்கழஞ்சுகள் வேறு...."

"அப்படியென்றால்..... "

"நீ தேடிக்கொண்டிருக்கும் இரு மனிதர்களும் தற்சமயம் இருக்குமிடம் எனக்குத் தெரியும் என்று அர்த்தம்...." - கண்களைச் சிமிட்டினார் அவர்.

(தொடரும்...)

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter