பார்க்கவ ஷேத்திரம்
காலைக் கதிரவன் மெல்லப் புலர்ந்துகொண்டிருந்த பொழுது.
அனந்தபுரத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்த காந்தளூரின் மகாதேவர் திருக்கோயிலின் முன்பில் விரிந்த சிறு மைதானத்தில் பன்னிரண்டு அல்லது பதினான்கு பிராயமே நிரம்பிய சிறுவர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கக் காண்கிறோம். இருபத்தியொரு பேர் கொண்ட வரிசையாக மூன்று வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர்களின் முன்புறம் நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அந்தச் சிறுவர்கள் நிற்கும் வரிசையை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். தாடி மீசையும் விரிசடையுமாகக் காணப்பட்ட அவர்களின் நெற்றியில் மிகப்பெரியதொரு சந்தனப் பொட்டு துலங்கிற்று. கண்களில் சதா சர்வகாலமும் ஒரு பரபரப்பும் கூர்மையும் தென்பட்டன. அவர்களின் ஒருவன் நீண்ட வாளையும் மற்றவன் பெரியதொரு கேடயத்தையும் ஏந்திக்கொண்டிருந்தான்.
முன்குடுமி வைத்திருந்த அந்தச் சிறுவர்களின் பார்வை அடிக்கடி மகாதேவர் அம்பலம் என்றழைக்கப்படும் திருக்கோயில் வளாகத்தில் படிவதிலிருந்து அங்கிருந்து வரப்போகும் யாரையோ அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பது புலப்பட்டது.
அந்தப் பகுதியில் படிந்திருந்த மெளனத்தைக் கலைத்துககொண்டு "டாங் !" என்ற ஒன்றை மணியோசை மகாதேவர் அம்பலத்திலிருந்து எழுந்ததும் அந்த இரு இளைஞர்களும் பரபரப்பாகி விட்டார்கள்...."சிறுவர்களே ! நேர்ப் பார்வையுடன் விறைப்பாக நில்லுங்கள் - ஆச்சாரியார் வரப்போகிறார் ! அடேய் - மூன்றாம் வரிசையில் பின்னால் நிற்பவர்களுக்கு எத்தனை முறை சொல்வது ? நேராக நிற்கப் போகிறீர்களா இல்லையா ?"
இளைஞர்களின் பரபரப்பு சிறுவர்களின் மனத்தில் மேலும் பயத்தை விளைவித்தது. அவர்களின் கண்கள் அச்சத்தைக் தேக்கி நின்றன.
சிறிது நேரத்தில் திருக்கோயில் கோபுர வாயிலிலிருந்து நான்கு பெரியவர்கள் வெளியில் வந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் மைதானத்தை நோக்கி நடைபோட, மற்றவர்கள் தெற்கே செல்லும் வீதியில் கால்பதித்தார்கள்.
மைதானத்தை நோக்கி நடந்த முதியவர் வயதாகிவிட்டாலும் திடகாத்திரமான மேனியுடன் விளங்கினார். அவரது முன்நெற்றியில் உறுதியாக முடியப்பட்டிருந்த முன்குடுமியானது அவரது அசைவுகளுக்கு ஆட்படாமல் நின்றது. அவருடைய நெற்றியையும் உடலின் பல பாகங்களையும் மகாதேவர் கோயிலின் உஷத் கால பூஜை முடிந்து விநியோகிக்கப்பட்டிருந்த சந்தனமும் திருநீறும் அலங்கரித்தன. வலது கரத்தில் ஒரு பெரிய கைத்தடியை ஏந்தி கம்பீரமாக அவர் நடந்து வருவதைப் பார்த்தால் சிறுவர்களைப்போலவே நமக்கும் மெல்லிய மரியாதையும் பயமும் ஏற்படுகின்றன.
ஆச்சாரியார் என்கிற விகுதிப் பெயரால் மட்டுமே மரியாதையுடன் குறிப்பிடப்பட்ட அந்த முதியவரின் பார்வை அங்கும் இங்கும் போகாமல் நேராக அந்த மைதானத்தின்மீதே படிந்திருந்தன. அவருடைய கால்களும் அந்தப் பகுதியை நோக்கியே ஒருமுகமாக நடைபோட்டன. வெகு விரைவில் சிறுவர்கள் அணிவகுத்து நின்ற பகுதியை அடைந்து விட்டார் அவர்.
அவர் வந்து நின்ற அடுத்த நிமிடம் அந்தச் சிறுவர்கள் அனைவரும் சொல்லி வைத்ததைப்போல் கைகூப்பி முகமன் தெரிவித்து குருவணக்கம் சொன்னார்கள்.
ஆச்சாரியார் சற்று நிதானமாக நின்றிருந்தவர்கள் அனைவரையும் நோக்கினார். அவருடைய கண்கள் சிறுவர்களின் கண்களை நேருக்கு நேராக சந்தித்தன. ஒவ்வொருவரின் மனத்தையும் ஊடுருவி அதிலுள்ள இரகசியங்களனைத்தையும் கிரகித்துக்கொண்டு விடுவதுபோல் அமைந்திருந்தது அவருடைய பார்வை. அந்தப் பார்வையின் தீட்சிண்யத்தைத் தாங்க முடியாமல் ஒருசில சிறுவர்கள் தலையைக் குனிந்துகொண்டார்கள். அப்படிக் குனிபவர்களைப் பார்த்து மெல்லிய முறுவலொன்று ஆச்சாரியாரின் முகத்தில் முகிழ்த்தது.
அந்தச் சிறுவர்களுக்கு முன் நேராக அவர் நின்றுகொண்டார். கைத்தடியை கீழே வைத்துவிட்டுக் கரம்குவித்தார். கண்மூடினார். சில கணங்களில் ஆதவன் மேகங்களை விலக்கிக்கொண்டு கீழ்த்திசையில் மகாதேவர் அம்பலத்திற்குப் பின் காட்சி கொடுக்க, அந்தக் கிரணங்கள் ஆச்சாரியாரின் தலையின் பின்னால் மெல்ல விரிந்தன.
இந்தக் கணத்திற்காகக் காத்திருந்தவர் போலும் ஆச்சாரியார் கம்பீரமான குரலில் கீழ்க்கண்ட பொருளில் அமைந்த வடமொழி ஸ்லோகத்தை முழங்கினார்....
"மூவுலகிற்கும் ஒளிகொடுக்கும் ஆதித்தனாகிய சூரிய தேவனைப் பிரார்த்தனை செய்கிறேன்....! ஏழு புரவிகள் பூட்டிய இரதத்தில் ஊர்ந்து கருணை மிகக் கொண்டு இந்தப் பூவுலகின் உயிர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் சூரிய தேவன், என்னுடைய பிரார்த்தனையை இரக்கம் கொண்டு ஏற்கட்டும்... அவனுடைய ஒளி பொருந்திய தேஜஸ் என்னுடைய உடலில் இறங்கட்டும் ! இன்றைய பொழுது எனக்கும் என் சுற்றத்தாருக்கும் என்னை நம்பியிருக்கும் பிற உயிர்களுக்கும் நன்றாக அமையவேண்டுமென்று சூரிய தேவனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்... ஓம் ! ஓம் !ஓம் !"
அவருடைய கவர்ச்சி மிகுந்த கட்டைக் குரல் அந்தச் சிறுவர்களைக் கட்டிப் போட்டது. எதுவும் செய்யத் தோன்றாமல் கைகூப்பியபடியே நின்றார்கள் அவர்கள்.
"சிறுவர்களே ! இன்று நீங்கள் பழம் பெருமை மிக்க கல்வி கேந்திரமாகிய காந்தளூர்ச்சாலையில் வித்யாரம்பம் செய்வதற்காகக் கூடியிருக்கிறீர்கள். மலைநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொறுக்கியெடுக்கப்பட்ட தேஜஸ்விக்களான உங்களின் முகத்தில் பொலியும் அறிவுக்களையையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மிகுந்த கண்களையும் கண்டு பூரித்துப் போகிறேன்.
நான் காந்தளூர்ச்சாலையின் மூத்த ஆச்சாரியர்களுள் ஒருவன். என் பெயர் திருநாராயண பட்டதிரி. இன்றிலிருந்து இரண்டு மண்டல காலங்களுக்கு நான் உங்களுக்கு ஆச்சாரியனாக இருந்து எனக்குத் தெரிந்த வித்தைகளைக் கற்றுவிப்பேன். எப்போதும் புதிதாகச் சாலையில் சட்டர்களாகச் சேரும் மாணவர்களின் முதல் இரண்டு மண்டலங்களை நான் எடுத்துக்கொண்டு விடுகிறேன். நல்ல தெளிவான உறுதியான ஆழமான கருத்துக்களை முளையிலேயே விளைவித்துவிடுவதுதான் என் நோக்கம்.
மாணவர்களே ! உங்களிடம் நான் நிறையக் கேள்விகள் கேட்பேன். கேள்விகள் ஆரோக்கியமானவை. தெளிவற்ற ஞானத்திலிருந்து தெளிந்த ஞானத்திற்குக் கேள்விகள் நம்மை இட்டுச் செல்கின்றன. நீங்களும் என்னைக் கேள்விகேட்கலாம் - ஒரு வரம்புக்குட்பட்டு. எனக்குத் தெரிந்தவரையில் நானும் அதற்கு பதிலளிக்க முயல்கிறேன்.
இப்போது முதல் கேள்வி - இங்கு நீங்களெல்லோரும் எதற்காகக் கூடியிருக்கிறீர்கள் ?"
"புகழ்மிக்க காந்தளூர்ச்சாலையில் சேர்ந்து சட்டர் ஆவதற்கு !" - ஒரு சிறுவன் உற்சாகமாகப் பதில் சொன்னான்.
"ஆஹா ! மிகச்சரி. இப்போது நீ சொன்ன பதிலிலிருந்து பல கேள்விகள் இயல்பாக எழுகின்றன. இந்த சாலை என்பது என்ன, சட்டன் ஆவது என்பது என்ன, எதற்காக நீ சட்டன் ஆக வேண்டும், சாலை எதற்காக சட்டர்களை உருவாக்க வேண்டும்... இப்படிப் பல கேள்விகள். இவற்றை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டால்தான் நாளை மனமுவந்து ஐம்புலன்களையும் பயிற்சியில் செலுத்த முடியும். செய்துகொண்டிருக்கும் வித்யையின் உயரிய நோக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்வதுதான் நல்ல சட்டன் ஆவதற்கு முதற்படி !"
அவர் மெல்ல அந்தக் கூட்டத்தைச் சுற்றி நடக்கத் துவங்கினார். பேசியபடியே விறைப்பாக நின்ற ஒவ்வொருவரையும் கண்களால் எடை போட்டார்.... மிகக் கவனமானவன், கவனம் குறைவானவன், கவனம் முழுவதும் சிதறி வேறெங்கோ பராக்கு பார்த்துக்கொண்டிருப்பவன் என்று அத்தனை பேரையும் மனதில் குறித்துக்கொண்டார். ஒரே வாரத்தில் இந்த அறுபத்து மூன்று பேரின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது.
"இந்தக் கேள்விகளுக்கு நானே பதிலளிக்கிறேன்.... மிகக் கவனமாகக் காது கொடுத்துக் கேளுங்கள். கவனம் சிதறினால் முதல் நாளே சாலையிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் !"
அத்தனை சிறுவர்களும் மெல்ல திடுக்கிட்டு தத்தம் கவனத்தை பட்டதிரியின் வார்த்தைகளில் குவித்தார்கள்.
"நண்பர்களே ! நாம் மலைநாடான புண்ணிய பூமியை பரசுராம ஷேத்திரம் அல்லது பார்க்கவ ஷேத்திரம் என்று காரணத்தோடு அழைக்கிறோம். பரமாத்மாவின் அம்சமாக ஜமதக்னி முனிவரின் புத்திரனாக அவதரித்தவரும் ஷத்திரியர்களின் இன்னல்களிலிருந்து இந்த உலகத்தைக் காப்பதற்காக இருபத்தியோரு முறை போர் தொடுத்தவரும் அந்த இராஜாக்களின் உதிரம் நிரம்பிய குட்டையில் கம்பீரமாக நின்று பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்தவருமான ஸ்ரீ பரசுராமன் தன்னுடைய வீரம் மிகுந்த கோடாரியினால் ஸ்தாபிதம் செய்யப்பெற்ற பிரம்ம ஷேத்திரம் இந்த பூமி. வடக்கிலிருந்து ஷத்திரியர்களின் இன்னல்கள் தாங்க முடியாமல் தெற்கே இடம் புகுந்த அந்தணர்களுக்கென்று தனி இடம் வேண்டுமென்று கடலுக்குள் மூழ்கிக்கிடந்த இந்த பூமியை வெளிக்கொணர்ந்தார் ரிஷிபர்யனான பார்க்கவ இராமன்.
கொண்டு வந்த கையோடு கோகர்ணத்திலிருந்து குமரி முனைவரை அறுபத்தி நான்கு கிராம ஷேத்திரங்களை உருவாக்கினார். இவற்றுள் முப்பத்தியிரண்டு கிராமங்கள் மலைநாட்டிலும் மேலும் முப்பத்தியிரண்டு கிராமங்கள் துளு நாட்டிலும் அமைந்திருந்தன.
கங்கைக் கரையிலிருந்து தாங்கள் துரத்தப்பட்டதைப்போல் இந்த பூமியிலிருந்தும் நாங்கள் துரத்தப்பட்டு விட்டால் என்செய்வது ? என்று நம்முடைய பிதாமகர்கள் அந்த அவதார புருஷரை வினவினார்கள்.
அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா ?
வேதவித்தகர்களே ! இந்த பூமி உங்களுடையது. இந்த மண்ணின் ஒவ்வொரு துகளும் உங்களுடையது. ஆக இதனைக் காத்து இரட்சிக்கும் பொறுப்பும் உங்களுடையதே ! ஆக, இந்த பூமியில் மட்டும் நீங்கள் உங்கள் வருணத்திற்குரிய கடமைகளில் மட்டும் ஈடுபட்டால் போதாது. அந்தணர்களாக மட்டுமின்றி ஷத்திரியர்களாகவும் நீங்கள் இங்கே அவதாரமெடுக்க வேண்டும் ! அதற்கான உரிமையை நான் இப்போதே அளிக்கிறேன் ! உங்களில் ஷத்திரிய தர்மத்தை ஏற்பதற்குச் சித்தமாயிருப்பவர்கள் முன்னே வாருங்கள் !
அவருக்கு முன்னால் கூடிநின்ற அந்தணர்கள் மிகுந்த குழப்பமும் மனக்கிலேசமும் அடைந்தார்கள். சமித்துக்களால் வேள்வித்தீயில் நெய்வார்க்கும் கையினால் வாளைப் பிடிக்க முடியுமா ? என்னும் சஞ்சலம் அவர்கள் மனத்தை ஆக்கிரமித்தது. அத்தனை பெரிய கூட்டத்தில் ஒருவர் - ஒரே ஒருவர் - மட்டும் தைரியமாக முன்வந்தார்....
அவர் யார் தெரியுமா ?"
கம்பீரமாக உரத்த குரலில் பட்டதிரி அந்தக் கேள்வியை வீசிவிட்டு நாலாபுறங்களிலும் சுற்று நோக்கினார். "தெரியுமா ? தெரியுமா ?" என்று பூமியின் நானா திசைகளிலும் அந்தக் கேள்வி பட்டுத் தெறித்து எதிரொலித்தது போன்றதொரு பிரமை எழுந்தது.
சிறுவர்கள் வாயைப் பிளந்தபடி ஒன்றும் பேசத் தோன்றாமல் அவரையே நோக்கி நின்றார்கள்.
"அவர்தான் திரிவிக்கிரம நம்பூதிரி ! என்னுடைய முப்பாட்டனுக்குப் பாட்டனுக்கும் முப்பாட்டன் !
திரிவிக்கிரம நம்பூதிரியின் கரங்களில் பார்க்கவ இராமன் தான் அதுவரை காத்து வந்த ஷத்திரிய தர்மத்தை இந்த பூமியில் காக்க வேண்டுமென்று தாரை வார்த்தார். அந்தத் தாரையின் ஸ்பரிசம் நம்பூதிரியின் கரங்களில் ஆயிரம் யானைகளின் பலத்தை ஏற்றியது ! அவரைத் தொடர்ந்து மேலும் மூவரும் இராமனிடம் நேரடியாக இந்த தர்மத்தைக் காப்பதாக உறுதிபூண்டார்கள்.
அந்தணர்கள் வாள்பிடிக்க வேண்டுமெனில் அவர்களுக்கு முறையான பயிற்சி தேவையென்பதால் இந்த நால்வரையும் ஆசான்களாக்கி நான்கு முக்கிய சாலைகளை மலைநாட்டில் ஏற்படுத்தினார் பரசுராமன். இந்த நான்கு சாலைகளிலும் அமைக்கப்படவேண்டிய களரி அல்லது களம், கொடுக்கப்படவேண்டிய பயிற்சிகள், காவல் புரியவேண்டிய தெய்வங்கள் என்று எல்லாமே அக்காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்டன....
சிறுவர்களே ! வீரம் மிகுந்து ஷத்திரிய தர்மத்தைக் காப்பேன் என்று எழுந்து நின்ற முதல் வீரரான திரிவிக்கிரம நம்பூதிரி ஸ்தாபிதம் செய்ததுதான் நமது காந்தளூர்ச்சாலை ! மீதமுள்ள மூன்று சாலைகளுமே நமது முறைகளை ஒட்டித்தான் தமது செயல்பாடுகளை வரையரை செய்துகொண்டுள்ளன.... இதனைத்தான் காந்தளூர் மரியாதை என்று குறிப்பிடுவார்கள் ! சிறுவர்களே... தனுர் வேதத்தில் நிகரற்று விளங்கிய திரிவிக்கிரம நம்பூதிரிகளின் புனிதமான பாதங்கள் நடமாடிய மண்ணில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்..... அவர் ஸ்தாபித்த சாலையில் இன்று நீங்கள் வித்யாரம்பத்திற்காக சேர்ந்திருக்கிறீர்கள்....."
சிறுவர்களுக்கு மெய் சிலிர்த்தது....!
"ஒன்றை நன்றாக மனதில் கொள்ளுங்கள்.... வெறும் பிறப்பினால் ஒருவன் எந்த தர்மத்தையும் சார்வதில்லை. ஒருவன் பிறக்கும்போது எந்த வருணத்தானாகவும் பிறப்பதில்லை. அவனுடைய வளர்ப்பு, செயல்பாடுகள், முன்கர்ம வினை இவற்றால்தான் ஒருவன் தனக்குரிய சுதர்மத்தை அடைகிறான் ! ஆக, பிறப்பினால் நீங்கள் அந்தணர்களாகவோ ஷத்திரியர்களாகவோ ஆகிவிடுவதில்லை....
இராஜரிஷியாகிய விசுவாமித்திரர் ஒரு ஷத்திரியர். என்றாலும் தன்னுடைய வலிமையான தபஸ்ஸினால் அவர் அந்தண நிலையை அடைந்தார். பார்க்கவ இராமனான பரசுராமன் அந்தணராகப் பிறந்தும் கார்த்த வீர்யார்ஜூனக் கும்பல்களின் கொட்டத்தை ஒழிப்பதற்காக ஷத்திரிய தர்மத்தை மேற்கொண்டார். பிறப்பால் அந்தணரான துரோணாச்சாரியார் தனுர்வேதப் பயிற்சியில் ஈடுபட்டு இணையற்ற ஷத்திரியராக விளங்கினார். வைணவத்தின் ஆழ்வார்களில் பலரும் பல குலங்களில் அவதரித்தவர்களென்பதை நினைவூட்டுகிறேன் - ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பக்தி செய்து கேசவனின் பாதார விந்தங்களை அடைந்தார்கள்.... பிறப்பால் வேளாளராகப் பிறந்த நம்மாழ்வாரின் திருவாய்மொழியைத்தான் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலைநாட்டிலும் ஓதிவருகிறோம்...
ஆக பிறக்கும் குலங்களாலும் கோத்திரங்களாலும் ஒருவன் எந்த நிலையையும் அடைந்துவிடுவதில்லை. இதனை உணர்ந்த நமது முன்னோர்கள் அக்காலத்தில் புதுமையான திட்டமொன்றை வகுத்தார்கள். அதாவது பிறப்பால் ஒருவன் இந்நாட்டின் மன்னனாகிவிட முடியாது. அதாவது மணிமுடி தரித்ததொரு மன்னருக்குத் தலைமகனாகப் பிறப்பதாலேயே மலைநாட்டின் முடி அவனுக்குக் கிடைத்து விடாது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நான்கு சாலைகளும் கூடி நடந்தும் வீர தீர விளையாட்டுக்களில் அவன் கலந்துகொண்டு ஜெயித்தாகவேண்டும். அப்படி ஜெயிப்பவரே மலைநாட்டின் பெருமாள் அரசராகப் பதவியேற்க முடியும். வெகு காலத்திற்கு நடைமுறையிலிருந்த இந்த வழக்கம் பின்னர் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது. அரசர்கள் இல்லாத காலங்களில் படை நிர்வாகத்தை சாலையும் மந்திரிகளின் நிர்வாகத்தை நான்கு தளிக்காரர்களும் ஏற்றுக்கொள்வதுண்டு....
ஆக, இன்னாருக்கு மகனாகப் பிறப்பதால் நீங்கள் அடைவது எதுவுமில்லை. அந்த முதல் பிறப்பு வெறும் உடலின் பிறப்பு. அதற்கு மேலான அர்த்தங்களொன்றும் கிடையாது. இரண்டாவது பிறப்பு என்றொரு அதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது. இருபிறப்பாளன் என்று பொருள்படும் துவிஜன் என்னும் சொல்லுக்கு அர்த்தம் "உண்மையான பிறப்பை அடைந்தவன்" என்றுதான் கொள்ள வேண்டும்.
சிறுவர்களே ! இன்று முதல் நீங்கள் புகழ்மிக்கக் காந்தளூர்ச் சாலையின் சட்டர்களாகப் பிறப்பெடுத்திருக்கிறீர்கள். சாலையின் தர்மத்தைக் காக்க உங்களின் உடல், பொருள், ஆவி, சொத்து, சுகங்கள் முதலான அனைத்தையும் தியாகம் செய்வதற்கு நீங்கள் தயாராயிருக்கவேண்டும் ! செய்வீர்களா ? சாலைக்காக இத்தனை தியாகங்களை நீங்கள் செய்வீர்களா ?"
இரு கைகளையும் மேலே உயர்த்தி ஆக்ரோஷமாக வினவினார் பட்டதிரி.
"செய்கிறோம் ஆச்சாரியாரே ! நிச்சயமாகச் செய்கிறோம் !" என்று சிறுவர்கள் உறுதியளித்தார்கள்.
இந்தக் கட்டத்தில் இரு இளைஞர்களில் ஒருவன் மெல்லக் குனிந்து ஆச்சாரியாரின் காதுகளில் ஏதோ புகன்றான்.
"இன்னும் இரு நாழிகை நேரத்தில் வந்து சந்திக்கிறேன் - அவரை அங்கேயே இருக்கச்சொல் !" என்று பதிலளித்தார் பட்டதிரி.
(தொடரும்...)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|