|
|
|
www.varalaaru.com
A portal for South Indian History
73 இதழ்கள்... 1009 படைப்புக்கள் !
|
|
Home
About US
Font Problems
|
|
|
சேரர் கோட்டை அத்தியாயம் 19
கோகுல் சேஷாத்ரி
|
|
இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
|
தாக்குதல் தொடருமா?
காந்தளூர்ச் சாலை மகாதேவர் திருக்கோயில் வளாகத்திற்குள் அமைந்திருந்த கூத்தம்பலம் என்னும் மேடையின் கிழக்கே மறைவானதொரு இடத்தில் வள்ளுவ நாடுவாழியார் திருநாராயண பட்டதிரிக்காக இருப்புக்கொள்ளாமல் காத்துக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மெல்ல எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தன. பார்வை ஓரிடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் தாவிற்று. மகாதேவர் கோயிலுக்கு அந்தக் காலை நேரத்தில் வருகை தந்துகொண்டிருக்கும் பக்தர்களைப் பார்ப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவு - ஏனெனில் மேடையின் ஓரத்திலேயே தொடர்ந்து ஒடுங்கிக்கிடந்தார் அவர்.
சிறிது நேரத்தில் மேடையின் ஓரத்தில் அரவம் கேட்டது. தன்னுடன் வந்திருந்த இளைஞனை படிக்கட்டுக்கருகில் நிற்கச் சொல்லிவிட்டு மேடையில் ஏறினார் பட்டதிரி.
"வணக்கம் !"
"வரவேண்டும் - வரவேண்டும் - ஏன் சாலைக்கே நேரடியாக வந்திருக்க வேண்டியதுதானே ? அங்கு சந்தித்திருக்கலாமே ?"
"காரணம் வேறொன்றுமில்லை. மகாதேவரை தரிசனம் செய்து நீண்ட காலமாகிறது - அதனால்தான் அம்பலத்திற்கு விஜயம் செய்தேன். அப்போதுதான் நீங்களும் அருகிலிருக்கும் மைதானத்தில் வித்யாரம்பத்திற்காகக் கூடியிருக்கிறீர்களென்பது தெரிந்தது - செய்தி அனுப்பினேன்...."
"நன்று நன்று - வீட்டில் அனைவரும் சுகம்தானே ?"
"நல்ல சுகம் - உங்களின் பெண்கள் இருவரும் தமையனாரும் தம்பிகளும் நலமா ?"
"மகாதேவரின் அருளால் ஒரு குறைவும் இல்லை...."
"நாடுவாழிகளின் இரகசியக் கூட்டம் விழிஞத்தின் ஆய்வேள் அரண்மனையில் நடந்ததென்று நீங்கள் அனுப்பிய செய்தி கிடைந்தது.... கூட்டத்தின் முடிவுகள் எவ்வாறு அமைந்திருந்தன ?"
"குழப்பமாக முடிந்தது - உறுதியாக ஒரு முடிவும் எடுக்காமல் கலைந்தோம்...."
"அடடா...."
"பெரியவர் இராமவாழியை நான் பேச விட்டிருக்கக்கூடாது... தேவையற்ற பல பழைய குப்பைக்களைக் கிளறி கூட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டார்...."
"பெரியவரை நொந்துகொள்ள வேண்டாம் - அவர் கிளப்பவில்லையென்றால் வேறு எவராவது கிளப்பியிருப்பார்கள். பழையவற்றைப்பற்றிப் பேசுவது தவறல்ல - ஆனால் புதிய சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருப்பதை மனதில் கொண்டால் போதும்...."
"முதலில் பாண்டியரை சோழன் தாக்கியதற்குப் பின்னணியிலிருக்கும் சில தகவல்களை விவரித்தேன். மதுரையை நாசம் செய்தவன் நேராக மலைநாட்டிற்குத்தான் படையெடுப்பான் என்பதைச் சொன்னேன்... அந்தப் படையெடுப்பின் முதல் கட்டமாக காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்கும் திட்டமிட்டிருக்கிறான் என்று கூறினேன்... இந்தக் கட்டத்தில் இராமவாழியார் புகுந்து பழைய தகவல்களை விவரிக்கிறேன் என்று உங்களின் குடும்பத்தாரை உள்ளிழுத்துவிட்டு விட்டார்....."
"முதலில் காந்தளூர்ச் சாலை என்னும் ஸ்தாபனம் எங்களின் ஒரு குடும்பத்தாருக்கு மட்டும் உரியது அல்ல என்பதை நாடுவாழிகளும் மற்றவர்களும் உணர வேண்டும். நமது கேரள பூமியின் கலாச்சார அடையாளங்களுள் அதுவும் ஒன்று. அதனைத் தாக்குவதென்பது ஒவ்வொரு மலைநாட்டவரையும் அவமானப்படுத்தும் செயல்... இந்த ஸ்தாபனத்தின் பிதாமகராக அறியப்படும் திரிவிக்கிரம நம்பூதிரியின் வழித்தோன்றல்கள் என்கிற வகையில் எங்களின் குடும்பம் சாலையுடன் நெருக்கமான உறவு பூண்டுள்ளது. வழிவழியாக எங்களின் குடும்பத்தார் இந்த வலிய சாலையின் மேன்மைக்காகப் பாடுபட்டுள்ளனர்... ஆனால் இன்றைய நிலையில் காந்தளூர்ச் சாலை தனிப்பட்ட குடும்ப நலன்களுக்கு அப்பாற்பட்டது என்கிற உண்மையை அவர்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்...."
"தலைவரிடமிருந்து வேறு ஏதாவது செய்திகள் பிறகு வந்தனவா ? குறிப்பாக எந்த விதமான தாக்குதல் நடைபெறப் போகிறது ? மலைநாட்டின் எந்தப் பகுதிகள் தாக்கப்படப்போகின்றன - எவ்வாறு தாக்கப்படப்போகின்றன... என்பதைப்பற்றி ....."
"ஒரு தகவலுமில்லை - இந்த விஷயத்தில் சோழனுக்கே இன்னும் தெளிவேற்படவில்லை...."
"தாக்குதல் தெற்குப் பகுதிகளின் மீதுதான் நடைபெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?"
"அதில் சந்தேகமேயில்லை.... வடக்குப் பகுதிகளையோ மகோதகையையோ நேரடியாகத் தாக்குமளவிற்கு சோழனுக்கு இன்னமும் மதி கெட்டுவிடவில்லை... அவன் கோபமெல்லாம் இப்போது எங்களின் மீதுதான் - குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் என்மீதும் என் மைத்துனர்கள் மீதும் எங்களின் குடும்பத்தின் மீதும்தான்...."
"உங்களின் குடும்பத்தார் மீது உள்ள கோபத்தைச் சாலையின் மீது காட்டுவானேன் ?"
"நாடுவாழியாரே ! மலைநாட்டில் நாம் போற்றிப் புரக்கும் சாலை என்னும் ஸ்தாபனத்தைக் கண்டு சோழன் பயப்படுகிறான். ஒவ்வொரு சாலையிலும் தனக்கெதிராக மலைநாட்டவர் எங்களின் தூண்டுதலினால் அணிதிரள்வதாகக் கற்பனை செய்து கொள்கிறான்.... உத்தமச் சோழ தேவருக்கும் நமது குடும்பத்தாருக்கும் நிலவி வந்த நெருக்கம் அவனது சந்தேகத்தைத் தூண்டிவிட்டுவிட்டது.... நாடுவாழிப் படைகளுக்கும் ஆயிரத்தவர் படைகளுக்கும் சாலைகளுக்கும் இடையில் நிலவும் நட்புறவு அவனுக்கு வேம்பாகக் கசக்கின்றது ! ஒரு நல்ல நாள் பார்த்து நாமெல்லோரும் அணிதிரண்டு வந்து அவனை அழித்துவிடுவோமென்று நினைத்துக்கொள்கிறான்.... அப்படி நாம் ஓரணியாகத் திரளாமல் பார்த்துக் கொள்வது அவசியம்... அதன் முதல்கட்டமாக மலைநாட்டின் சாலைகள் அழித்தொழிக்கப்பட வேண்டும்..."
"மலைநாட்டின் பகுதிகளைத் தாக்காமல் சாலைகளை மட்டும் தாக்குவதென்பது எப்படி நடைபெறும் ?"
"நாடுவாழிகளான நீங்களெல்லோரும் சோழனுடன் ஒத்துழைத்தால் முடியும்..... உங்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆரல்வாய்மொழிக் கணவாய் வழியாக சோழனின் படைகள் மலைநாட்டிற்குள் நுழைவதை அனுமதித்தால் முடியும்...."
"அது நடக்காத காரியமாயிற்றே...."
"அப்போது உங்களைத் தாக்கி வள்ளுவ நாட்டின் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை...."
"கணவாயைத் தாண்டுமுன் சோழர் படைகளை அடியோடு நாசம் செய்வதைத் தவிர வேறு வழி எங்களுக்கும் இல்லை...."
"நீங்கள் நினைத்தால் அது நிச்சயம் முடியும் - கணவாயின் அமைப்பை நான் நன்கறிவேன். உங்களின் அனுமதியின்றி அதனைக் கடப்பது இயலாத காரியம்தான் - நாடுவாழியாரே ! இந்தத் தாக்குதலிலிருந்து நீங்கள் சாலைகளை மட்டும் காப்பாற்றவில்லை... ஒட்டுமொத்த மலைநாட்டையுமே காப்பாற்றுகிறீர்கள் ! இந்த மண்ணின் அரசர் முதல் ஆண்டி வரை உங்களுக்குக் கடன்பட்டவர்களாகிறார்கள்...."
"ஆனால் என்னுடைய படைகளை மட்டும் வைத்துக்கொண்டு இதனை சாதிக்க இயலாது பட்டதிரியாரே ! எனக்குப் பல விதங்களிலும் உதவி தேவைப்படுகிறது...."
"என்னென்ன விதமான உதவிகள் தேவை ? சொல்லுங்கள்...."
"முதலில் சோழனின் நிலப்படை, நீர்ப்படை பற்றிய துல்லியமான விபரங்கள்... நம்மை எதிர்க்க வரும் படைகளின் எண்ணிக்கை எத்தனை, தஞ்சையிலேயே தங்கப்போகும் படைகள் எத்தனை.... இந்தக் கேள்விகளையெல்லாம் விபரமாகத் தெரிவிக்கும்படி தலைவருக்கு முறியெழுதி அனுப்பியுள்ளேன்...."
"நீர்ப்படையாவது ஒன்றாவது... அவற்றைத்தான் உத்தமர் காலத்தில் முடக்கிப்போட்டாயிற்றே ! வெறும் நிலப்படைதான். தலைவருக்கு நீங்கள் எழுதிய ஓலை ஒரு பக்கம் இருக்கட்டும். நமது விசுவாசிகள் இன்னமும் சோழ இராஜாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள் - அவர்களின் மூலம் இது சம்மந்தமாக ஏதாவது செய்தி திரட்ட முடிகிறதா என்று பார்க்கிறேன்...."
"பார்க்கிறேன்.." என்று பட்டதிரியின் வாயிலிருந்து சாதாரணமாக வார்த்தைகள் வராது. அப்படி வந்துவிட்டால் காரியம் முடிந்துவிட்டது என்று பொருள். வள்ளுவனார் அதனை அறிவார்.
"இரண்டாவதாக, தெற்கே நாஞ்சில் நாட்டுப் பகுதிகளில் படையெடுப்பு நடைபெறும் பட்சத்தில் எங்கே எவ்வாறு சோழப் படைகளை நசுக்குவது என்பதற்கான துல்லியமான திட்டம்... இதில் தங்களின் யோசனைகளை நான் பெரிதும் வரவேற்கிறேன்....."
"செய்து விடலாம்...."
"மூன்றாவது - இது மிக முக்கியமானது. சோழர் படைகளை நாம் எதிர்க்கும் பட்சத்தில் மலைநாட்டுப் படையினரில் எத்தனை பேர் நமக்கு ஆதரவாகப் படைவீரர்களை அனுப்புவார்கள், யார் யார் வெறும் வாய்மொழியாகவே ஆதரவைத் தெரிவித்துவிட்டு மெளனமாயிருக்கப் போகிறார்கள் என்னும் தகவல். இதனைக் கொண்டுதான் நமது திட்டங்களும் தாக்குதல்களும் அமையும் !"
"இது சற்று சிக்கலானது.... யோசிக்க வேண்டிய விஷயம்....."
"இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்றுதான் கோட்டையில் கூட்டத்தைக் கூட்டினோம் - கடைசியில் அது பயனற்ற வகையில் முடிந்தது...."
"இல்லை - நீங்கள் ஒட்டு மொத்த நாடுவாழிகளையும் ஒரே இடத்தில் கூட்டி இந்தக் கேள்விக்கு விடைகாண முயலாதீர்கள். முதலில் தென்பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளின் உடையவர்களை மட்டும் மனதில் வையுங்கள் - நேரடியாக பாதிக்கப்படப்போகிறவர்கள் அவர்கள்தான் !"
வள்ளுவ நாடுவாழியார் மெல்லச் சிந்தனையில் மூழ்கினார்.
***********************************************************************************************
தஞ்சை உள்ளாலையின் ஒரு பகுதியாக அமைந்திருந்த வீரசோழன் திருமாளிகையையொட்டி சோழப் படைகளின் மிகப்பெரிய குதிரைக் லாயமொன்று அமைந்திருந்தது. போர்க்காலங்களுக்கென்றே சிறப்பான பயிற்சி பெற்ற அரேபியப் புரவிகள் அங்கே நூற்றுக்கணக்கில் புரக்கப்பட்டன.
முன்னிரவு துவங்கி ஒரு ஜாம நேரம் கழிந்துவிட்ட அந்தப் பொழுதில் அந்தப் பகுதிகளில் நடமாட்டங்கள் பெரிதும் குறைந்துவிட்டிருந்தன. தூங்காமல் அந்த நேரத்தில் முழித்துக்கொண்டிருந்த ஒரிரு புரவிகளின் லேசான கனைப்பைத் தவிர வேறு சப்தங்களெதுவும் அங்கே கேட்கவில்லை. பகலில் அந்தப் பகுதிகளில் காவல் புரியும் வீரர்களில் பாதிக்கும் குறைவானவர்களே இரவு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதனால் லாயத்தின் பல்வேறு பகுதிகளும் அமைதியிலும் அந்தகாரத்திலும் மூழ்கியிருந்தன.
லாயத்தின் மேற்குப்பகுதியில் இருள் பெரிதும் மண்டியிருந்த ஒரு பகுதியில் ஒரு உருவம் அங்குமிங்கும் பார்த்தபடி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உற்றுக் கவனித்தால் அந்த உருவம் ஒரு பெரியதொரு அங்கியை முக்காடாகத் தலையிலிருந்து கால்வரை போர்த்திக்கொண்டிருப்பது தெரியும். எச்சரிக்கையோடு நகர்ந்தாலும் குழப்பங்களின்றி அந்த உருவம் குறிப்பிட்டதொரு பாதையில் நடப்பதைப் பார்த்தால் அந்தப் பகுதி அந்த உருவத்திற்குப் பரிச்சயப்பட்டதாகவே காணப்பட்டது.
லாயத்தின் மேற்குப் பகுதியில் காவலிருந்த வீரன் இருளடைந்திருந்த பகுதிகளை விட்டுவிட்டு தீப்பந்தமொன்று எரிந்துகொண்டிருந்த கொட்டிலுக்கடியிலில் நின்றுகொண்டு மெல்லப் புகையிலையை அதக்கிக்கொண்டிருந்தான்.
சற்று தூரத்திலிருந்து அவனை அணுகிக்கொண்டிருந்த உருவத்திற்கு அந்த வீரனின் பின்புறமே தெரிந்தது. அங்கும் இங்கும் கண்களை ஓட்டிய அந்த மர்ம உருவம் சட்டென்று கீழே கிடந்த சிறு கல்லை எடுத்து அந்த வீரனுக்கருகில் எறிந்தது.
வீரன் சற்றே திரும்ப, அவனது முகத்தைக் கவனித்துக்கொண்டது உருவம். உறுதியுடன் அவனை மெல்ல அணுகியது. தனக்கருகில் ஏதோ அரவம் கேட்பதையுணர்ந்து அந்த வீரன் சுதாரித்துத் திரும்புவதற்குள்... அவனது வாய் கழுத்துக்கருகிலிருந்து நீண்ட மாயக் கரங்களால் மூடப்பட்டுவிட்டது !
"உஸ்.... பலதேவா ! சப்தம் செய்யாதே - நான்தான்....!"
இந்தக் குரல்..... இந்தக் குரல் ! பலதேவன் என்றழைக்கப்பட்ட வீரன் திடுக்கிட்டுப்போய்த் திரும்பி "நான்தான் என்றால்....."
"நானேதான் !" - சட்டென்று தீப்பந்தந்தை ஒரு கணம் அணுகி முக்காட்டை விலக்கிக் காட்டியது அந்த உருவம். சற்று தூரத்திலிருந்து இவர்களிருவரையும் கவனித்துக்கொண்டிருக்கும் நம்மால் அந்த உருவத்தின் முகதரிசனத்தை துரதிருஷ்டவசமாகப் பெறமுடியவில்லை....
அடுத்த கணமே முக்காடு மீண்டும் அந்த உருவத்தின் தலையைப் போர்த்திவிட்டது !
"தாங்களா..... இந்த நேரத்திலா ? ஐயோ - ஆபத்தாயிற்றே...."
"உஸ்.... நான் சொன்னபடி செய்தாயானால் உனக்கு ஒரு ஆபத்தும் நேராது.... பலதேவா ! என்னைப் பற்றி உனக்கு நன்றாகத் தெரியுமில்லையா...."
பலதேவனின் கரங்கள் மெல்ல நடுங்கத் துவங்கிவிட்டன.
(தொடரும்...)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|
|
|
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
|