அன்பில் திருமாளிகை
"பலதேவா ! எனக்கு விசுவாசமாக இருந்தவர்கள் என்றைக்குமே வீண்போனதில்லை. அதனை நீயே உணர்ந்திருக்கிறாய். தொண்டை மண்டலத்தின் அடையாளந்தெரியாத சேரியொன்றில் அனாதையாய் அலைந்துகொண்டிருந்த உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது யாரால் என்பது உனக்கே தெரியுமல்லவா ?"
"பழையவற்றை நான் மறக்கவில்லை ஐயா !"
"பின் என்ன தயக்கம் ? தொடர்ந்து உனது விசுவாசத்தைக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது ஒரு பெரிய பலப்பரிட்சை. இதில் நாம் ஜெயித்துவிட்டால் நீ இந்தப் புரவி லாயத்திற்கே தலைவனாக்கப்படுவாய்.. அதனை மனதில்கொள் !"
பலதேவன் ஒரு கணம் தன்னைப் புரவி லாயத்தின் தலைவனாகப் பாவித்துக்கொண்டான். முதல் வேலையாக அந்தத் திமிர் பிடித்த கங்காளனை வேலையை விட்டு நீக்க வேண்டும் ! என்ன பேச்சு பேசிவிட்டான் அவன்...
"....நான்.... என்ன செய்ய வேண்டும் ஐயா ?"
"சற்று அருகில் வா !"
பலதேவனின் காதோரத்தில் சில மந்திரங்கள் ஓதப்பட்டன.
"ஐயோ ! அது மிக ஆபத்தாயிற்றே - மாட்டிக்கொண்டால் என் மைத்துனன் தலை மண்ணில் உருள்வது நிச்சயம் ! என்னுடைய விசுவாசத்தைக் காண்பிக்க அவனை ஆபத்தில் மாட்டிவிடச் சொல்கிறீர்களே !"
"ஒரு ஆபத்தும் இல்லை - அவன் நீண்ட நாட்களாக வேளத்தில் பணியாற்றுகிறவன்... ஒரு சந்தேகமும் வாராது !"
"இருந்தாலும்...."
"பலதேவா ! விஷயம் கொஞ்சம் சிக்கலானது என்பதால்தான் இத்தனை தூரம் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். உன்னால் முடியாது என்றால் சொல்லிவிடு... எனக்கு இதனை முடித்துக்கொள்ள வேறு வழிவகைகளுண்டு...."
"ஐயனே ! கோபிக்க வேண்டாம்... முடிந்தவரையில் முயற்சிக்கிறேன். தாங்களை மறுபடியும் எங்கு சந்திப்பது ?"
"வரும் பெளர்ணமியன்று இதே இடத்தில் சந்திக்கிறேன் !"
"சரி !"
"எச்சரிக்கையுடன் நடந்துகொள் - வருகிறேன் !"
***********************************************************************************************
பலதேவன் என்றழைக்கப்பட்ட சோழர் குதிரை லாயத்தின் காவல் வீரனிடம் விடைபெற்றுக்கொண்ட அந்த முக்காட்டு உருவம் மெல்ல வந்த வழியே திரும்பி வீரசோழன் மாளிகையின் பின்புறத்தை அடைந்தது. பின் அம்மாளிகையின் மதிலையொட்டி மெல்ல நடக்கத்துவங்கியது.
இரவு துவங்கி ஒரு ஜாமமும் இரண்டு நாழிகைகளும் கழிந்துவிட்டிருந்த அந்தப் பொழுதில் சந்திரன் வானில் உதயமாகிவிட்டிருந்ததால் மெல்லிய நிலா வெளிச்சம் அந்தப் பகுதிகளில் பரவியிருந்தது. அந்த வெளிச்சம்கூட தன் மீது பட்டுவிடக்கூடாது என்பதுபோலும் அந்த உருவம் மாளிகையையொட்டி செழித்து வளர்ந்திருந்த பல்வேறு மரங்களின் நிழலிலேயே பதுங்கிப் பதுங்கி முன்னேறியது.
சிறிது தூரம் சென்றதும் வீரசோழன் திருமாளிகையின் தெற்கு மதில் பிரியுமிடம் வந்தது. இந்த இடத்தில் சற்றே நிதானித்த அந்த உருவம் மேற்கே இருளடைந்து கிடந்த மற்றொரு மாளிகையின் பின்புறத்தைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. அங்கு நடமாட்டங்கள் எதுவுமில்லையென்று உறுதியான பிறகு அந்தப் பகுதியை நோக்கி வேகவேகமாக நடக்கத்துவங்கியது.
வீரசோழன் திருமாளிகைக்கு மேற்கே அமைந்திருந்த அந்தப் பெருமதில் தனது பெரிய வளாகத்திற்குள் இருவேறு மாளிகைகளை உள்ளடக்கியிருந்தது. அதில் முதல் திருமாளிகையில்தான் அன்பில் ஆதூலர் சாலை செயல்பட்டுவந்தது. முன்னொரு காலத்தில் அருள்மொழிவர்மரின் தந்தையாரான பராந்தகர் சுந்தரச் சோழரிடம் முதல் மந்திரியாகப் பணியாற்றிய அன்பில் அநிருத்தப் பிரம்மாதிராஜர் அம்மாளிகையில் வசித்து வந்தார். அவருடைய காலத்திற்குப் பிறகும் அம்மாளிகையின் ஒரு சிறு பகுதியில் தொடர்ந்து வசித்து வந்த அவருடைய சந்ததியினர் பிரம்மாதிராயரின் நினைவாக ஒரு ஆதூலர் சாலையை அம்மாளிகையின் முன்புற அறைகளில் நடத்தி வந்தனர். பிரம்மாண்டமான அம்மாளிகையின் முன் அறைகள் இவ்வாறு உபயோகத்திலிருக்க, புழக்கடை மற்றும் நந்தவனம் அமைந்திருந்த பின் கட்டுப் பகுதிகளும் அங்கே அமைந்திருந்த பல்வேறு அறைகளும் புழக்கமின்றி இருளடைந்து கிடந்தன. காலப்போக்கில் நந்தவனத்தில் மண்டிவிட்ட மரங்களின் நீண்ட வேர்கள் மற்றும் செடிகொடிகளின் அகோரப் பசிக்கு அவ்வறைகளுள் சில இரையாகிக் கொண்டும் இருந்தன.
இவ்வாறு புழக்கம் அதிகமற்றுக் காணப்பட்ட அந்தப் பகுதியில் அந்த இரவு நேரத்தில் அந்த உருவம் அங்கும் இங்கும் பார்த்தவாறு முன்னேறுவது எதற்காக என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. மரங்களின் அடர்த்தி காரணமாக இருள்மண்டிக்கிடந்த அந்தப் பகுதிகளின் பல்வேறு அறைகளையும் கூர்மையாகக் கவனித்தவாறு முன்னேறிய அந்த உருவம் ஓரிடத்தில் பெரியதொரு மண்டபமும் அதனைத் தொடரும் முற்றமும் ஆரம்பிக்கும் பகுதியில் சற்று நிதானித்தது. மண்டபத்தையொட்டி அமைந்திருந்த ஒரு அறையின் சிறு வாயிற் கதவம் அதன் கவனத்தைக் கவர்ந்ததுபோல் தோன்றியது. மெல்ல முன்னேறித் திறந்திருந்த அந்த வாயிற்கதவத்தின் வழியாக தன் பெரிய உடம்பை உள்ளே நுழைத்துக்கொண்ட அவ்வுருவம், அடுத்த கணமே அறையின் கதவத்தைத் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு விட்டது.
வெளியே ஏகத்துக்கு இருள் மண்டிக் கிடந்தாலும் மூடிக்கிடக்கும் அந்த அறைக்குள் எவ்வாறு மெல்லி வெளிச்சம் வருகிறது என்று வியக்கிறோம் ! ஓ.... இப்போது புரிகிறது... அந்த அறையின் மேல்தளத்தில் சிறியதொரு திட்டி வாசல் அமைத்து அதன் வழியாகச் சந்திரனின் ஒளி உள்ளே வருவதுபோல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது போலும்....
உருவம் அறையின் வடமேற்குப் பகுதியை அடைந்து அங்கே பூமியில் காய்ந்த இலைகளினுடே துழாவி ஏதோ ஒன்றை... நாதாங்கி போலல்லவா தெரிகிறது ?... பிடித்து மேலிழுக்க... என்ன அதிசயம் ! அறையில் தரையோடு தரையாக அமைந்திருந்த கண்ணுக்குத் தெரியாத ஒரு கதவம் மெல்லத் தன் வாயைப் பிளந்தது. பூமியில் ஒரு பெரிய துவாரம்.
அந்த உருவம் தன் கால்களை மெல்ல உள்ளிறக்கி தட்டுத் தடுமாறிபடி படிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அந்த சுரங்க அறைக்குள் ஒரு வழியாக இறங்கி விட்டது. அது வெறும் சுரங்க "அறையா" அல்லது வேறு எங்காவது இட்டுச் செல்லும் சுரங்க "வழியா" என்பதை இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மெல்லத் தரையில் அமர்ந்து சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்ட அந்த உருவம், இருள் மண்டிக் கிடந்த அந்த அறையின் தெற்கு மூலையை நோக்கி நகர்ந்தது. அந்த உருவம் நகர நகரத்தான் அது நாம் நினைத்ததைப்போல் சிறிய அறையில்லை. மேலே மாளிகையில் எழும்பியிருக்கும் பல அறைகளையும் தாண்டிக்கொண்டு கீழே இரகசியமாக அமைக்கப்பட்டுள்ள நீண்டதொரு பாதாள அறை என்பது நமக்குப் புரிகிறது. மாளிகையின் கீழ் இப்படியொரு அறை எதற்காகவோ ? ஒரு வழியாகத் தெற்கு மூலையில் அறையை அடைத்து எழுப்பப்பட்டிருந்த நீண்ட சுவர் தென்பட்டது. அடடா, நாம் நினைப்பதைப் போல் சுரங்க வழியில்லை போலிருக்கிறதே இது ! வெறும் சுரங்க அறைதான் போலும்.... பாதாள அறை என்றும் குறிப்பிடலாம்.... நாற்புறங்களிலும் மூடியிருக்கும் இந்த நீண்ட இருட்டறைக்குள் இரவு நேரத்தில் இந்த உருவத்திற்கு அப்படியென்ன முக்கியமான காரியம் ?
சுவரை அடைந்ததும் தன் இடுப்பிலிருந்த பொருட்களை மெல்ல சப்தம் செய்யாமல் கீழே வைத்துவிட்டு கால்மடக்கிக் கீழே அமர்ந்த அந்த உருவம் நமக்கு முதுகைக் காட்டியபடி என்னவோ செய்ய, சிறிது நேரத்தில் அந்த அறைக்குள் மிக மெல்லிய வெளிச்சம் பரவியது. குறிப்பிட்டதொரு கடல் மீனின் எண்ணையால் எரிந்துகொண்டிருந்த அந்த சிறு விளக்கின் வெளிச்சம் மிக மிக மங்கலாகவே அந்த அறைக்குள் பரவினாலும் முன்பு படர்ந்திருந்த கும்மிருட்டை விரட்டுவதற்கு அது போதுமானதாகவே இருந்தது....
வெளிச்சம் பரவியதும்தான் அது எத்தனை பெரிய அறை என்பதை நாம் உணர்கிறோம்.... கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்குமாய் விரிந்து பரவும் இந்தச் சுரங்க அறை அம்மாளிகையின் கீழப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துள்ளதுபோல் தெரிகிறதே ! அது மட்டுமா ? அவ்வறையின் ஒரு மூலையில் பழைய துருப்பிடித்த ஆயுதங்களும் ஏராளமாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனவே.... ஆபத்துக் காலங்களில் ஆயுத அறையாகவும் இந்தப் பகுதி பயன்படுத்தப்பட்டிருக்குமா என்ன ? அன்பில் பிரம்மாதிராஜரின் அரசியல் மற்றும் சூழ்சித்திறன் பற்றிப் பலதும் கேள்விப்பட்டிருந்தாலும் அவரது பழைய மாளிகையில் இப்படியொரு அமைப்பை இந்த நேரத்தில் நாம் எதிர்பார்க்கவில்லையென்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்....
துரதிருஷ்டவசமாக வெளிச்சம் ஓரளவிற்குப் பரவும் இந்தப் பொழுதிலும் நமக்கு முகத்தைக் காட்டாமல் முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அந்த உருவத்தை இன்னமும் நம்மால் அடையாளம் காணமுடியவில்லை. என்றாலும் சராசரிக்கும் மேலான அதன் உயரமும், நீண்டு படர்ந்திருக்கும் திண்மையான தோள்களும், இறுக்கப்பிடித்து உயரே முடியப்பட்டிருக்கும் ஜடாபாரமும் நம்மைத் தயக்கத்திற்கும் அச்சத்திற்குமே உள்ளாக்குகின்றன.
அந்த உருவம் மெல்ல எழுந்து சுவற்றின் கையை வைத்துத் தடவித் தடவி எதையோ தேடியது. மூடிய அறையின் வெற்றுச் சுவற்றில் அப்படி எதைத்தான் தேடுகிறது ? மெல்ல மெல்ல முன்னேறியபடி அங்கும் இங்கும் கையை வைத்துத் தேடிய அந்த உருவம் ஓரிடம் வந்ததும் பளிச்சென்று முக்காட்டை முன்னிழுத்து விட்டுக்கொண்டு சுவற்றில் காதை வைத்துக் கேட்கத் துவங்கிது !
கடவுளே... இந்தச் சுவற்றில் ஏதோ ஒரு இரகசிய துவாரம் உள்ளது போலிருக்கிறதே.... இதில் காதை வைத்துக் கேட்டால்.....காதை வைத்துக் கேட்டால்..... இந்த பாதாள அறைக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள அறையின்....அறையாவது ? இந்தப் பாதாள அறைதான் அன்பில் திருமாளிகை முழுவதும் படர்ந்துள்ளதுபோல் தெரிகிறதே ? அப்படியென்றால், தற்போது நாம் நிற்கும் இடம் மாளிகையின் தெற்கு எல்லையாகவல்லவா முடியும் ? அப்படியெனில் ?
பக்கத்து மாளிகையில் ஏதோ ஒரு முக்கிய அறையில் நிகழும் உரையாடல்களையா இந்த உருவம் ஒட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறது ?
அது மட்டுமல்ல... பாதாள அறையின் ஒரு துவாரத்திலிருந்து மண்ணின் மேல் அமைந்துள்ள அடுத்த மாளிகையின் ஒரு கோடி அறையில் நடக்கும் உரையாடல்களைக் கேட்கவேண்டுமெனில்... இந்தத் துவாரம் பாதாள அறையின் சுவர்களினுடே மேலேறி அடுத்த மாளிகையின் கோடி அறையில் இரகசியமானதொரு இடத்தில் முடிந்தாக வேண்டும் ! இப்படிப்பட்டதொரு அமைப்பு பிரம்மாதிராஜரின் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருக்குமா என்ன ? ராஜர் அடுத்தவர் இரகசியங்களை ஒட்டுக்கேட்பதில் பிரியமுடைய ஆள்தான் ! அவரே இதனை ஏற்படுத்தியிருக்கலாம்... யார் கண்டது ?
அது சரி, தற்போது அன்பில் ஆதூலர் சாலை அமைந்திருக்கும் இந்தத் திருமாளிகைக்கு அடுத்ததாக அமைந்திருப்பது..... அடுத்ததாக அமைந்திருப்பது..... சிவ சிவா ! அம்பலவாணன் பழுவூர் நக்கனான இராஜராஜப் பல்லவராயர் வசிக்கும் குவளாலபுரத்து அரண்மனையல்லவா ? நாசமாய்ப் போயிற்று !
சப்தம் செய்யாமல் அந்த உருவத்தைப் போல் நாமும் நமது செவிகளை அந்த சுவற்றின் இரகசியத் துவாரத்தில் பதிப்போம். நமது சந்தேகம் சரிதான் ! மிக மிக மெல்லியதாக - ஆனால் கூர்ந்து கேட்டால் புரியுமளவிற்கு - பேச்சுக்குரல்கள் கேட்கின்றன.... இப்போது சற்றே உரக்கப் பேசிக்கொண்டிருப்பது - தளபதி மாராயர்தானே ?
***********************************************************************************************
"ஆக, நண்பர்களே ! அங்கும் இங்கும் வேறு வழியில்லையெனாதபடி இந்த நாஞ்சில் நாட்டுப் படையெடுப்பை நிகழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் !"
"மாராயரே ! நீங்கள் சொல்வது அவலை நினைத்து உரலை இடித்த கதையாக இருக்கிறது..... வாழையடி வாழையாகத் தொடரும் சேர-சோழ உறவின் வேர்களில் நேரடியாக வாளைப் பாய்ச்சும் இந்த அபாயகரமான படையெடுப்பு சேர-பாண்டியர் நெருக்கத்திற்கு மேலும் வழிவகை செய்வதோடு நம் படை பலத்தை பலகீனப்படுத்தி நமது பிற எதிரிகளான கங்கர்கள், நுளம்பர்கள், இராஷ்டிரகூடர்கள், மேலைச் சளுக்கர்கள் என்று அத்தனை பேரும் அணிதிரண்டு வந்து சோழ நாட்டை நாசம் செய்து விடவும் வழிகோலிவிடும் என்று அஞ்சுகிறேன்...."
"உங்கள் வெளிப்படையான பேச்சுக்கு மகிழ்ச்சி, இருக்கு வேளிரின் தலைவரே ! பிறருடைய அபிப்பிராயத்தையும் செவிமடுப்போம்.... மழவரையரே ! தென்னாட்டுப் படையெடுப்பைப் பற்றிய உங்கள் கருத்தென்ன ?"
"கொடும்பாளூராரின் கருத்துக்கு என் கருத்து நேர் மாறானது. இந்தப் படையெடுப்பை இப்போது நாம் முன்னின்று நடத்தவில்லையென்றால் அடுத்த சில திங்களில் பாண்டி நாட்டுப் படைகளும் நாஞ்சில் நாட்டுப் படைகளும் தஞ்சையை நோக்கி நகரத்துவங்கிவிடும்.... பின் போர் என்பது தவிர்க்க முடியாத செயலாகிவிடும்.... அதற்கு இப்போதே முன்னின்று அவர்களை சந்திப்பது நல்லது...."
"பழுவேட்டரையர் கண்டன் சத்ருபயங்கரன் என்ன நினைக்கிறார் ? பழுவூர் அரசருக்கு இக்கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்படவில்லையா என்ன ?"
"அவரது குடி சேர நாட்டைச் சேர்ந்தது ஆதலின் இப்படையெடுப்பு அவருடைய மனதுக்கு உகந்ததாக இல்லை. கூட்டத்தாரின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று ஓலையனுப்பிவிட்டார்.... பழுவூரின் இரணமுக இராமன் படை இப்போரில் கலந்துகொள்வது கூட சந்தேகம்தான் - ஏனெனில் அப்படையில் பல வீரர்களுக்கு மலைநாடுதான் தாய்தாடு ! "
"போர் என்று ஒன்று நிகழ்த்துவதற்கு முன்னால் தூதனுப்புவதுதான் மரபு - ஒப்புக்கொள்கிறீர்களா பல்லவராயரே ?"
"நிச்சயம் ! படையெடுப்பிற்குமுன் நாஞ்சில் நாட்டிற்கும் மகோதகைக்கும் தூது அனுப்பத்தான் வேண்டும்..."
"ஆய்வேள்களின் மறைவிற்குப் பிறகு மலைநாட்டின் தென்பகுதிகளில் நாடுவாழிகள் ஏறக்குறைய சுயேச்சையாக தத்தம் பகுதிகளில் அதிகாரம் செலுத்தி வருவதாகத்தான் கேள்விப்படுகிறோம்... அதனால் மகோதகைக்குத் தூது அனுப்ப வேண்டிய அவசியமில்லையல்லவா ?"
"நீங்களே ஏறக்குறைய சுயேச்சையாக என்று குறிப்பிட்டு விட்டீர்கள். உண்மை அதுதான். சேர அரசரான பெருமாளுக்குப் பெயரளவிலாவது ஒரு அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது.... அதனால் அவருக்கும் செய்தி தெரிவிப்பதே முறையாக இருக்கும்..."
"என்னவென்று செய்தி அனுப்புவதாக உத்தேசம் ?"
"காந்தளூர்ச் சாலையின் சட்டர்களைச் சோழப் படைகள் சந்திக்க விரும்புகின்றன என்று !" - பல்லவராயரின் குரல் ஏனோ சற்று தயக்கத்துடன்தான் ஒலித்தது.
(தொடரும்)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|