www.varalaaru.com
A portal for
South Indian History
 
73 இதழ்கள்...
1009 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
சேரர் கோட்டை
அத்தியாயம் 26

இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
தக்கோல வீரர்


சேரர் கோட்டையில் இதுவரை...


தென் மலைநாட்டுப் பகுதியில் திரு அனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள விழிஞம் துறைமுகம். அத்துறைமுகத்தருகே ஒருகாலத்தில் ஆய்வேள் அரசர்களின் கோட்டையாகத் திகழ்ந்த பழங்காலக் கட்டுமானமொன்றில் இரவில் மலைநாட்டின் குறுநில மன்னர்களான நாடுவாழிகளின் கூட்டம் நடைபெறுகிறது. அவர்களின் தலைவரைப்போன்று விளங்கும் வள்ளுவநாட்டின் நாடுவாழியார் சோழர்கள் அனந்தபுரத்தின் காந்தளூர்ச்சாலையைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதைத் தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து பலவிதமான விவாதங்களும் தானைத் தலைவர் என்னும் இரகசியத் தலைவரைப் பற்றிய பேச்சுக்களும் எழுகின்றன. இறுதியில் எந்த முடிவையும் எடுக்காமல் கலைகின்றனர்.

தமிழகத்தின் மேற்குக் கடற்கரை நகரமான நாகப்பட்டினத்தில் சோழர் படைத் தளபதி இராஜராஜப் பல்லவராயரும் தொண்டை மண்டலத்தின் சேனானி நாயகமான கம்பன் மணியனாரும் பேரரசர் அருள்மொழி வர்மரையும் இராஜராஜ மாராயரையும் சந்திக்கின்றனர். அமண்குடியாரான கிருஷ்ணன் இராமனை பேரரசர் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். மலைநாட்டு அரசியல் எழுச்சி மற்றும் காந்தளூர்ச் சாலைப் படையெடுப்பைப் பற்றி கம்பன் மணியனாருக்கு விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அனைவரும் நாகை விஹாரையின் ஆச்சாரியரை இது சம்மந்தமாகச் சந்திக்கச் செல்கின்றனர். அவர் கூறும் யோசனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அருள்மொழிவர்மரின் முன்னாள் சிநேகிதரான பெளத்த பிஷு ஒருவர் நாகையின் கடற்கரையில் வந்திறங்குகிறார். அவருடைய தலையிடலின் பேரில் கம்பன் மணியனாரும் நாகைக் கடகத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த வீரரான பரமன் மழபாடியாரும் தென்பாண்டி நாட்டிற்கு இரகசிய ஓலைகளுடன் கிளம்புகின்றனர்.

இடையே பாண்டி மண்டலத்தில் குறண்டியூரில் தன்னுடைய பெரிய தகப்பனாரின் திதிக்காக பள்ளிப்படைக்கு விஜயம் செய்யும் பாண்டிய குலத்து இளவலையும் அமைச்சரையும் கூலிப்படைகள் பிடிக்க முயல்கின்றன. ஆனால் அவர்கள் தப்பித்து விடுகிறார்கள். தொண்டி துறைமுக நகரில் ஒரு விடுதியில் தங்கியிருக்கும் கம்பன் மணியனாரையும் பரமன் மழபாடியாரையும் எவரோ கடத்த முயல்கிறார்கள். பிஷு அவர்களைக் காப்பாற்றுகிறார். அடுத்ததாக கொற்கைத் துறைமுகத்தில் தன்னைச் சந்திக்கச் சொல்கிறார்.

திருஅனந்தபுரத்தின் காந்தளூர்ச் சாலையில், ஆச்சாரியரான திருநாராயண பட்டதிரியை வள்ளுவ நாடுவாழியார் சந்தித்து நடக்கப்போகும் படையெடுப்பைப் பற்றி விவாதிக்கிறார். ஆச்சாரியார் அவருக்கு வேண்டிய தகவல்களைத் திரட்டித்தருவதாக உறுதியளிக்கிறார். தஞ்சையில் ஒரு இரகசிய உருவம் புரவிப்படை வீரனை உளவறியச் சொல்லி வற்புறுத்துகிறது. இராஜராஜப் பல்லவராயரின் அறையில் நடக்கும் முக்கிய சம்பாஷணைகளை மிக இரகசியமாக ஒட்டுக் கேட்கிறது.

ஓலையைக் கொண்டு செல்லும் நண்பர்களிருவருக்கும் எதிர்பாராத சோதனைகள் ஏற்படுகின்றன. தவிர்க்க இயலாமல் அவர்களின் பயணத்தில் தேவநாக பண்டிதரென்னும் முதியவர் சேர்ந்து கொள்கிறார். அவர் பேரில் மழபாடியாருக்குப் பெருத்த சந்தேகங்கள் உண்டாகின்றன. தஞ்சையில் பேரரசர் அருள்மொழிவர்மர் தமது செல்லக் குழந்தைகளுடன் சிறிது நேரம் அளவளாவுவதற்காக அவர்களை சித்திரக்கூடத்திற்கு அழைத்து வருகிறார்.

இனி....



***********************************************************************************************


"ஆக, விஹாரையின் அமைதியான சூழலில் பொறுமையிழந்துவிடாமல் அந்த அமைதியை நன்கு உள்வாங்கிக்கொண்டாயானால், மிகுந்த பயனை அடையலாம்..."

"சரி அப்பா !"

"அனுபமா(108) ! நீ எப்படியம்மா இருக்கிறாய் ?"


(108) முதல் பராந்தகரின் இரண்டாவது பெண்ணின் பெயர் அனுபமா. அருள்மொழிவர்மர் தனது பெண்ணுக்கும் அவ்வம்மையின் பெயரை வைத்திருந்ததாகக் கொள்க


மூத்த பெண் அவரை நிமிர்ந்து பார்த்தது... "மகாதேவர் அருளினால் நன்றாக இருக்கிறேனப்பா !"

சற்று திகைப்புடன் அருள்மொழிவர்மர் அவளை நோக்கினார். சாதாரணமாக எல்லோரையும்போல் "நன்றாக இருக்கிறேன் !" என்று சொல்லாமல் மிகக் குறிப்பாக "மகாதேவர் அருளினால் நன்றாக இருக்கிறேன்" என்று சொல்லும் வயதா இது ? அனுபமா சாதாரணப் பெண்ணல்ல என்று அவருக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. இன்று அந்த எண்ணம் மிகுதியாகவே வலுப்பெற்றது.

சிறு வயது முதலே பக்குவம் நிறைந்த பெண்ணாக தெய்வ பக்தியையும் சிவநெறியையும் சிந்தையில் தேக்கிய செல்வியாகவே அவள் அவருக்குக் காட்சியளித்திருக்கிறாள். வளரும் பருவத்திற்கேற்ற விளையாட்டுத்தனங்கள் அவளிடம் காணப்படவில்லை. எப்போதும் ஏதோ சிந்தனை வடிவாகவே காட்சியளிப்பாள். தளிக்குளத்தார் ஆலயத்தின் சரஸ்வதி பண்டாரத்திலிருந்து (109) எக்கச்சக்கமான ஓலைக்கட்டுகளைத் தருவித்து எப்போதும் எதையாவது படித்தபடிதான் காட்சியளிப்பாள். "உங்கள் பெண்ணுக்குக் கல்வி கற்றுத்தர எங்களால் ஆகாது ! நாங்கள்தான் அவளிடம் நிறையக் கற்க வேண்டியிருக்கிறது !" என்று அத்தனை சோழநாட்டுப் பண்டிதர்களும் கைவிரித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் தமிழில் இருந்த பெரும்பாலான நூல்களைப் படித்துமுடித்துவிட்டதனாலோ என்னவோ சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதத்தின் பக்கம் அவளது கவனம் தற்போது சென்றிருக்கிறது. வடமொழி இலக்கியங்களை அனாயசமாகப் பயிலத்துவங்கியிருக்கிறாள். இன்னும் சிறிது நாட்களில் நாட்டிலிருக்கும் சமஸ்கிருதப் பண்டிதர்களை வம்புக்காக வாதம் செய்ய அழைத்தாலும் வியப்பில்லை.


(109) நூலகம்


"மிக்க மகிழ்ச்சியம்மா ! தளிக்குளத்தார் அருளினால் நீ சிவநெறியிச் சிறந்து விளங்குவாய் !" என்று மனதார வாழ்த்தினார் அருள்மொழிவர்மர். திருமணப் பிராயமடைந்துவிட்டாலும் இவளை எவன் கையிலும் பிடித்துக்கொடுக்கமுடியுமென்று அவருக்குத் தோன்றவில்லை. அம்மாதிரியான சிந்தனைகள் இவளுக்கு ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. இவளுடைய அன்னையோ அன்றாடம் இவளைப்பற்றிப் புலம்பிக்கொண்டிருக்கிறாள்....

அன்று அந்த சித்திரக்கூடத்தில் அருள்மொழிவர்மர் எதனை மனதில் நினைத்துக்கொண்டு அவ்வாறு வாழ்த்தினாரோ, நாமறியோம். ஆனால் அவருடைய அமர வாக்கு பிற்காலத்தில் அப்படியே பலித்தது. திருமணம் - குழந்தை - குட்டிகள் - மூப்பு - மரணம் - என்னும் வழக்கமான வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் சிவநெறியில் ஒழுகும் பெரும் பேறடைந்தாள் இந்த "நடுவிற் பெண்" (110). கல்வெட்டுக்கள் இவளை "மகாதேவர் அடிகள்" என்னும் பொருளில் அமைந்த "மாதேவடிகள்"(111) எனும் விகுதிப் பெயரால் பெருமைப்படுத்துகின்றன.


(110) திருவலஞ்சுழி கல்வெட்டு இவரை இப்படி அன்புடன் அழைக்கிறது
(111) மாதேவடிகள் என்ற பெயரில் "அடிகள்" என்னும் பின்னொட்டை வைத்து இவரை பெ ளத்தராகவும் ஜைனராகவும் அடையாளம் காணபது தவறென்றே தோன்றுகிறது. சிவபக்தியிற் சிறந்த செம்பியன் மாதேவியாரை "மாதேவடிகளான ஸ்ரீ செம்பியன் மாதேவியார்" என்று கோனேரிராஜபுரம் கல்வெட்டுக்கள் குறிக்கும். சிவநெறியாளரான பழுவேட்டரையரை "அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவன்" என்று பழுவூர்க் கோயில் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. முதல் பராந்தகரின் புதல்வரான கன்னரத் தேவரின் தேவியார் பெயர் பூதி மாதேவடிகள் என்பதும் ஈண்டு கருதத்தக்கது


"அனுபமா ! உன்னையும் இளையவளான சிறிய குந்தவையையும் திருவல்லத்திற்கு சிலகாலம் அனுப்பி வைக்கும்படி அக்கனிடமிருந்து அன்புக் கட்டளை பிறந்திருக்கிறது ! காஞ்சியிலிருந்து உங்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் தருவிக்கப்படுவார்கள் !"

காஞ்சி என்ற பெயரைக்கேட்டதும் அனுபமாவின் முகம் மிகப்பெரிதாக மலர்ந்தது ! ஏனெனில் வடமொழிப் பண்டிதர்கள் பலரும் அங்கிருப்பதாக அவள் கேள்விப்பட்டிருந்ததுதான். அத்தையாரின் புத்தி கூர்மையை எண்ணி வியந்தாள் அந்தப் பெண். ஆனால் இளையவளுடைய முகமோ அதற்கு நேர் மாறாக பெரிதும் வாட்டமடைந்துவிட்டது. தஞ்சை, பழையாறையில் இருக்கும் அவளுடைய விளையாட்டுத் தோழிகளை விட்டுப் பிரியும் நினைவே அவளது இருதயத்தை இரண்டாகப் பிளப்பதுபோல் இருந்தது.... கண்கள் சில நொடிகளில் கலங்கியேவிட்டன !

"அக்காவுடன் நானும் போய்த்தான் ஆக வேண்டுமா அப்பா ?"

"ஆம் அம்மா ! நிச்சயம் நீயும் போகத்தான் வேண்டும். உங்கள் நலனில் என்னைவிட - உங்கள் அன்னையை விட - அத்தையாருக்கே அதிக அக்கறை உண்டென்பதை நான் சொல்லியா தெரியவேண்டும் ?"

அந்தப் பேதைப் பெண் மேற்கொண்டு ஒன்றும் பேசத்தோன்றாமல் நின்றாள்.. கண்களிலிருந்து மட்டும் கரகரவென்று கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. அழுதுகொண்டே "சரி அப்பா !" என்றாள்.

வாழ்க்கையில் எத்தனையோ இன்ப துன்பங்களைச் சந்தித்திருந்த மாமன்னரின் பக்குவப்பட்ட மனதையே அந்தச் சிறு பெண்ணின் கண்ணீர் அசைத்துப்பார்த்துவிட்டது என்பது அவருடைய முகபாவங்களிலிருந்து புரிந்தது. தம்மைச் சார்த்தவர் எவருக்கும் - அது தம் மக்களாகட்டும் அல்லது குடிமக்களாகட்டும் - சிறு துன்பம் நேர்வதையும் பொறுக்கமாட்டாத மனம் படைத்தவராக இருந்தார் அந்த அதிசய மனிதர்.

"அழாதே அம்மா ! உன் எண்ணங்கள் எனக்குப் புரிகின்றன. வேண்டுமானால் உனக்காக நான் ஒரு ஏற்பாடு செய்கிறேன். அது என்னவெனில், உன்னுடன் உன்னுடைய அணுக்கமான தோழிகள் நால்வரை உன்னுடன் வல்லத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கும்படி அக்கனிடம் பரிந்துரைக்கிறேன். சந்தோஷம்தானே !"

அவ்வளவுதான். வாடி வதங்கியிருந்த தாமரை முகம் பளிச்சென்று பிரகாசமடைந்துவிட்டது ! என்ன செய்வதென்று அவளுக்குத் தோன்றவில்லை... நொடியில் தன்னுடைய பிரச்சனையைத் தீர்த்து வைத்துவிட்டாரே தந்தையார் என்று மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே அவளை ஆட்கொண்டன. "அப்பா ! அப்பா !" என்று அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அன்பு முத்தமொன்றும் ஈன்றாள் அந்தப் பெண். விகல்பமறியாத அந்தச் சிறு குழந்தையின் அன்பு அந்தக் கணத்தில் அருமொழிவர்மரை முழுவதுமாகக் கட்டிப்போட்டது. அவளுடைய முதுகை மெல்ல வருடிக்கொடுத்தார் அவர்.

"மிக்க மகிழ்ச்சியம்மா ! கதை கதையென்று நச்சரித்துக்கொண்டிருந்தாயே... அதனைத் துவங்கலாமா ?"

"சீக்கிரமே துவங்குங்கள்.... நல்ல சண்டை நிறைந்த கதையாகச் சொல்லுங்களப்பா !" என்றாள் அவள். சேனைகளின் அணிவகுப்பு - போர்முனை - கடுமையான கத்திச்சண்டைகள் - வீரதீர பராக்கிரமங்கள் நிறைந்த கதைகளே குந்தவைக்குப் பிரியமானவையாக இருந்தன.

"அதிக சண்டை வேண்டாமப்பா - அது போன்ற பல கதைகளை நீங்கள் கூறிவிட்டீர்கள். பக்தி மணம் கமழும் நாயன்மார் அல்லது ஆழ்வார்களின் கதை எதையாவது கூறுங்களேன் !" என்றாள் மூத்தவள். இளையவள் வடக்கு என்றால் இவள் தெற்கு என்பதுதான் வழக்கம்.

"ம்ஹூம் ! உங்களிடம் கதை கேட்டுப் பல நாட்களாகின்றன. சண்டைகள் நிறைந்த கதைதான் முதலில். அதற்குப் பின்பு வேண்டுமானால் பக்திக் கதையெல்லாம் சொல்லுங்கள்...."

"சரி, உங்கள் இருவருக்குமே திருப்தியளிக்கும் வகையில் ஒரு கதை சொல்கிறேன். ஆனால் நான் சொல்லப்போவதை கதையென்று குறிப்பிடுவது தவறு. இந்தப் புனித மண்ணில் சில காலத்திற்கு முன் நிஜமாகவே ஜீவித்திருந்த மகாபுருஷர் ஒருவரின் நம்ப முடியாத நிஜ வரலாறம்மா இது ! வாருங்கள் என்னுடன்...." என்றபடி எழுந்த பேரரசர், சபாநாயகர் மண்டபத்திற்கு வடக்கே அமைந்திருந்த அறைகளை நோக்கி நடக்கத்துவங்கினார். அவருடைய செல்வங்களும் காவலர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

செண்டு வாயில் சித்திரக்கூடமானது வடவாயில், தென்வாயில் என்று இரு பெரும் வாயில்களைக் கொண்டிருந்தது. தென் வாயிலுக்கெதிரே புரவி லாயமும் அதனையொட்டி அரண்மனையின் மதிற்சுவரும் வடவாயிலுக்கெதிரே அரண்மனை உத்தியான வனமும் அமைந்திருந்தன. வாயில் அமைப்பில்லாத கிழக்குப் பகுதி நேரே அரண்மனையின் பிற பகுதிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டது. இப்பகுதியின் வழியாகத்தான் நமது கதை மாந்தர்கள் கூடத்திற்குள் புகுந்தார்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சித்திரக்கூடத்தின் வடவாயிற் பகுதியையொட்டி அமைந்திருந்த அறைகள் சோழர் குலத்தின் மூத்தோர் பலருடைய வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் சித்திரங்களைக் கொண்டிருந்தன. குறிப்பாக விஜயாலயச்சோழர், முதலாம் ஆதித்த சோழர், முதலாம் பராந்தகச் சோழர் முதலானோருடைய கால நிகழ்வுகளைக் குறிப்பிடும் சித்திரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அருள்மொழிவர்மர் பலமுறை பலரையும் இந்த அறைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குள்ள சித்திரங்களை விதவிதமாக விளக்கியிருக்கிறார்.மேற்குறிப்பிட்ட மூன்று பேரரசர்கள் மீதும் அவருக்குத் தீராத பிரேமை இருந்தாற்போல் காணப்பட்டது. எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அவருக்கு அம்மூவரின் சரித்திரங்கள் அலுப்புத் தரவில்லை.

வாயிலிலிருந்து மூன்றாவதாக அமைந்திருந்த அறைக்குள் நுழைந்த பேரரசர், தக்கோலப் பெரும்போரைக் காட்சியாகச் சித்தரிக்கும் மிகப் பெரிய சித்திரத்திற்கு முன்பு நின்றார். அவரைத் தொடர்ந்து மூவரும் அவருக்குப் பின்னால் வந்து நின்று கொண்டார்கள். காவலர்கள் சித்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் விளக்குகளை சற்றுத் தள்ளிப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.

"செல்வங்களே ! இத்தக்கோலப் பெரும்போரை நான் பலமுறை உங்களுக்கு விளக்கியிருக்கிறேன்.... சோழ சைனியமும் இராஷ்டிரகூட சைனியமும் அலைகடலெனத் திரண்டு நின்று தொண்டை மண்டலத்தில் திரு ஊறல் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட தக்கோலத்தை இரணகளமாக்கியதை மிக விளக்கமாக பல சமயங்களில் எடுத்துரைத்திருக்கிறேன். அப்பெரும்போரில் முதலாம் பராந்தகரின் வீரப் புதல்வர் இராஜாதித்தர் அரும்பெரும் வீரச்செயல்கள் பலபுரிந்து பொன்னுடல் நீக்கிப் புகழுடம்பெய்தி சோழர் வரலாற்றில் "ஆனைமேற்துஞ்சியச் சோழர்" என்னும் பட்டம் பெற்றதையும் விளக்கியிருக்கிறேன்.

தக்கோலப் பெரும்போர் வரலாற்றை மட்டும் மாற்றியமைக்கவில்லை. பலரது வாழ்க்கையையும்கூட மாற்றியமைத்தது. அதில் ஒருவர் மிக முக்கியமானவர். இதோ பாருங்கள் !" - வழக்கமாக அனைவரின் பார்வையையும் கவரும் இராஜாதித்தரையும் அவர் ஆரோகணித்திருந்த யானையையும் விடுத்து போர்க்களத்தின் மறுகோடியை அருள்மொழிவர்மர் சுட்டிக்காட்டினார்...

"உண்மையில் போர் எவ்விதம் நடந்ததோ அதனை இவ்வோவியத்தின் சைத்திகர்(112) ஆழமாகப் புரிந்துகொண்டு மிகச் சிறப்பாக எழுதிக்காட்டியிருக்கிறார். வழக்கமான போர்க்களங்களில் களத்தின் ஒரு முனையில்தான் மிக உக்கிரமான தாக்குதல் இரு சாராருக்கும் நடக்கும். இரு சேனானி நாயகங்களும் அங்குதான் நேருக்கு நேராக மோதிக்கொள்வார்கள். ஆனால் தக்கோலப் பெரும்போரில் களத்தின் இரு முனைகளில் இராஷ்டிரகூடச் சைனியங்கள் உக்கிரம் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சோழ சைனியம் இராஜாதித்தரைப் போன்று வேறொரு மகாவீரரையும் தன் பக்கத்தில் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்...


(112) சித்திரக்காரர்


கங்கர் மற்றும் இராஷ்டிரகூட சைனியங்களைப் பந்தாடிய அந்த மாவீரர் இவர்தான் !"

அவர் சுட்டிய இடத்தில் தாடி மீசையுடன் இளைஞரொருவர் சைனியத்தின் முன்பு நின்று இரு கரங்களிலும் வாளேந்தி அனாயசமாகச் சுழன்றுகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த சோழர் படையில் ஏராளமான யானைகளும் அவற்றின் அம்பாரிகளில் ஆயிரக்கணக்கான வீரர்களும் கையில் வில் அம்புடன் தயாராக நின்றார்கள்.

"என்னுடைய பாட்டனாரான அரிஞ்சயச் சோழர் சாதாரணமாக யாரையும் எளிதில் புகழ்ந்துவிடமாட்டார். ஆனால் அவரே இவ்வீரரைப் பற்றி பல நேரங்களில் மிகவும் சிலாகித்துப் பேசியிருக்கிறார். தக்கோலத்துப் போரில் அவரும் கலந்துகொண்டிருந்ததால் இவ்வீரரின் வாள்வீச்சை நேரே காணும் பாக்கியம் அவருக்கு வாய்த்தது. என் பாட்டனார் கூறிய அந்த நிஜ வரலாற்றை இன்றுவரை நான் வேறு யாருடனும் பகிர்ந்துகொண்டதில்லை... வீரமும் பக்தியும் இணைந்து ததும்பும் அவ்வீரரின் வரலாற்றை நீங்கள் அனைவரும் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டுமென்பதால் உங்களுக்காக இன்று எடுத்துரைக்கிறேன்....."

அறையின் வாயிலில் நிழல் ஆடியது. வேறு யாரும் அதனை கவனிக்காவிட்டாலும் அருள்மொழிவர்மரின் கூர்மையான கண்கள் அதனைக் கவனித்துவிட்டன. அடுத்த கணம் வாயிலுக்கருகில் ஒரு காவலன் தென்பட்டான். அவன் மாராயரின் தனிச்சேவகத்தைச் சேர்ந்தவன் என்பது அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவருக்குப் புரிந்து போயிற்று.

"மாராயரிடமிருந்து முறி வந்திருக்கிறது - அதனை வாங்கிக்கொண்டு வா !" என்று அருகிலிருந்த காவலனிடம் புகன்றார். அவன் தலையை வணங்கிவிட்டு வாயிலுக்குச் சென்று முறியை வாங்கிக்கொண்டு வந்தான்.

அதில் எழுதப்பட்டிருந்தவை மிகச்சில வரிகள்தாம்...

"சோழச் சக்ரவர்த்திகள் சமூகத்திற்கு வணக்கம். மலைநாட்டிலிருந்து நமது ஒற்றன் ஐங்கரன் பல முக்கியச் செய்திகளுடன் இன்று காலை வந்து தஞ்சையை வந்தடைந்துள்ளான். அவனும் நானும் பல்லவராயருடன் தங்களை உடனடியாக சந்திக்க விரும்புகிறோம். எங்கு சந்திப்பதென்பதை இதனைக் கொண்டுவரும் எனது தனிச்சேவகனிடம் தெரியப்படுத்தவும் - குரவன் இராஜராஜ மாராயன்"

"நண்பகல் விருந்துக்கு நமது உணவுச்சாலைக்கு வந்துவிடச் சொல் !" எனத் திருவாய்மொழியாகத் தனது உத்தரவைத் தெரிவித்துவிட்டு மீண்டும் ஓவியத்திற்கே திரும்பினார் பேரரசர்.

"அது ஒரு காலம்... சேர நாட்டின் பெருமாள் அரசரான ஸ்தாணு இரவியும் நமது பெரும்பாட்டனார் முதலாம் ஆதித்தரும் மிக நெருக்கமான உறவு பூண்டு ஒழுகிய காலம்....." எனத் துவங்கி அருள்மொழிவர்மர் கூறிய அந்நீண்ட அதிசய வரலாற்றினை தற்போதைக்கு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாமைக்கு மிகவும் வருந்துகிறோம்.

சம்பவங்கள் விறுவிறுப்படைந்துகொண்டிருப்பதால் நாம் தொடர்ந்து கதைப்போக்கிலேயே பயணப்படவேண்டியுள்ளது.

(தொடரும்)

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter