www.varalaaru.com
A portal for
South Indian History
 
73 இதழ்கள்...
1009 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
சேரர் கோட்டை
அத்தியாயம் 27

இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
ஐங்கரன் தகவல்கள்


தஞ்சை உள்ளாலை அரண்மனைப் பகுதிகளில் நடுநாயகமாக விளங்கும் பேரரசர் அருள்மொழிச் சோழரின் பிரத்தேக மாளிகைக்கு நம்முடன் உடனடியாக வரும்படி வாசகர்களை அழைக்கிறோம். அம்மாளிகையின் மேற்குப் பகுதியிலுள்ள மிலாடுடையார் திருநந்தவனத்திற்கருகில் உக்கிராண அறையையொட்டி அமைந்திருந்த உணவுச்சாலையை அடைவோம்.

சாலையின் மத்தியப் பகுதியில் அமைந்திருந்த முற்றத்தையொட்டிய நாழியில் நான்கு பலா மனைகள் இரண்டிரண்டாக எதிரெதிரே அமைக்கப்பட்டிருந்தன. அம்மனைகளுக்கு முன் நன்கு சுத்தம் செய்யப்பட்ட தலைவாழை இலைகள் இடப்பட்டிருந்தன. அவற்றில் மிகச் சிறிய அளவில் அன்னமும் சிறிதளவு நெய்யும் பறிமாறப்பட்டிருந்தது.

முதலாவது மனையில் அருள்மொழிவர்மரும் அதற்கடுத்த மனைகளில் பல்லவராயரும் மாராயரும் அமர்ந்திருக்க, நான்காவது மனையில் நாம் இதுவரை சந்தித்திராத புதிய மனிதர் ஒருவரையும் காண்கிறோம். இவரே மாராயர் தமது முறியில் குறிப்பிட்டிருந்த ஐங்கரனாக இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

நால்வரும் உணவருந்துமுன் மேற்கொள்ளவேண்டிய பிரார்த்தனைகளைச் செலுத்தியபின் உக்கிராணத்து வேளக்காரன் மணங்கமழும் பொன்னி வளநாட்டு அன்னத்தையும் கூடவே நெய்யையும் பறிமாறிவிட்டுச் சென்றான். அன்னத்தைத் தொடர்ந்து பல்வேறு கறியமுதுகள், இனிப்பு வகைகள், பணியாரங்கள் என்று பல உணவு வகைகளும் படையெடுத்து வந்து இலையை நிரப்பிவிட்டன.

அருள்மொழிவர்மர் தலையசைத்ததும் நால்வரும் மெல்ல உணவருந்தத் துவங்கினார்கள். வேளக்காரன் பணிவுடன் வாயிலுக்கருகில் நின்றுகொண்டான்.

"எத்தனை நாட்களுக்கு முன் மலைநாட்டிலிருந்து கிளம்பினீர் ?"

"ஏறக்குறைய ஒரு பட்சம் - பதினைந்து நாட்கள் இருக்கும் அரசே !"

"உமது பணி மிக சீரீயது ! வாழ்க !"

"எல்லாம் தங்களின் ஆசிகள்....."

"நீர் அவ்வப்போது அனுப்பிவந்த ஓலைகளின் செய்திகளை மாராயர் நம்மிடம் பகிர்ந்துகொண்டுதானிருந்தார். என்றாலும் ஓலையில் பல செய்திகளை உம்மால் குறிப்பிட முடியாமலே போயிருக்கலாம் என்று யூகிக்கிறேன்..."

"உண்மைதான் பேரரசே ! இதற்காகவே ஒரு நடை தஞ்சைக்கு நேரில் வந்து ஒருசில முக்கியச் செய்திகளைத் தெரிவித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்...."

"நன்று... நன்று.... மேலே சொல்லத் துவங்கும் !"

"நான் பெரும்பாலான நாட்களை வள்ளுவ நாடுவாழியாரைப் பின்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை அறிந்துகொள்வதிலேயே செலவழித்தேன். நாம் சேரநாட்டிற்குப் படையெடுக்கும் பட்சத்தில் நம்மை முன்னின்று எதிர்ப்பதற்கான எல்லா வேலைகளையும் அவர் மும்முரமாகக் கவனித்து வருகிறார். வேணாடுடையவரான கோவர்தன மார்த்தாண்டர், கொளத்து நாடுடையவர், வீரக்குறும்பொறையர் என்று பல நாடுவாழிகள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தென்மலைநாட்டின் ஒரே நுழைவாயிலான ஆரைவாய்மொழிக் கணவாயருகில் இவர்களின் படைகளனைத்தும் தண்டூன்றியுள்ளன..."

"...ம்.. மேற்கொண்டு சொல்லும் !"

"காந்தளூர்ச் சாலைக்கும் இவர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பும் நிலவுகிறது. அடிக்கடி சாலையின் ஆச்சாரியாரான திருநாராயண பட்டதிரியை வள்ளுவனார் சந்தித்துவிட்டு வருகிறார். சாலையின் மிக மூத்த சட்டர்கள் நாடுவாழிகளின் படைகளுக்கு அவ்வப்போது சிறப்புப் பயிற்சிகளும் அளித்து வருகிறார்கள். இதில் மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சம் என்னவென்றால் வழக்கமான போர்முறைகளை முற்றிலும் விடுத்து தொடுவர்மம், படுவர்மம், தட்டுவர்மம் முதலான வர்மப் பயிற்சி முறைகளையும் வஜ்ரம், தேக்கம் முதலான போர்முறைகளையும் சட்டர்கள் நாடுடைய படைகளுக்குக் கற்றுக் கொடுப்பதுதான்..... சாலையின் சட்டர்கள் இம்மாதிரியான பயிற்சிகளில் நிகரற்று விளங்குகிறார்கள்...."

"அறிவோம்...."

"வள்ளுவனார் ஒரு முக்கியக் கூட்டத்தை ஏறக்குறைய ஒரு திங்களுக்கு முன் விழிஞம் துறைமுகத்தில் கூட்டினார். அதில் நாடுவாழிகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்கள் அனைவருமே நம்மை எதிரிகளாகக் கருதுமாறு பல மொழிவுகளை முன்னுரைத்தார். ஆனால் அவரது அறைகூவல் எல்லோரிடமும் எடுபடவில்லை. ஏறக்குறைய இரு அணிகளாக அவர்கள் பிரிந்து நிற்கிறார்களென்றுதான் தோன்றுகிறது. ஆனால் வள்ளுவனாரின் பலமே அந்தக் கூட்டத்தில் அதிகமாக இருந்தது என்பது தெளிவு. எனினும் நிஜமாகவே போர் என்று வந்துவிட்டால் மேற்கொண்டு ஒருசில நாடுவாழிகளும் அவர் பின்னால் சேர்ந்துகொண்டால் வியப்பில்லை...."

"ஒருவேளை நாம் தென்பாண்டி நாட்டிற்குப் படையெடுத்துச் செல்லாமலே இருந்தால், அவர்கள் நம்மை நோக்கிப் படைகளை நகர்த்தும் சாத்தியக்கூறு உள்ளதா ?"

"தற்போதைக்கு இல்லை.... ஆனால் நிலைமை மாறினாலும் மாறிவிடலாம். நாடுவாழியாரால் நீண்ட காலத்திற்குப் அப்பெரும் படைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க இயலாது..."

வாயிலில் நின்றுகொண்டிருந்த உக்கிராணத்து வேளக்காரன் அன்னம் இலைகளில் குறைந்துவிட்டதை அறிந்து ஒருமுறை மீண்டும் வந்து அன்னம் வைத்துவிட்டுப்போனான்.

"படைகளுக்கான சாமக்கிரியைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிய முடிந்ததா ?" - பல்லவராயரின் கேள்வி இது.

"இல்லை - அந்தத் தகவல்களை என்னால் திரட்ட முடியவில்லை... ஆனால் தளவாடங்கள் பலவும் ஆரைவாய்மொழிக் கணவாய் வழியாகத்தான் வருகின்றன - அதாவது தென்பாண்டி நாட்டிலிருந்து ! ஆனால் இவற்றையெல்லாம் யார் இத்தனை மெனக்கெட்டு அனுப்பி வைக்கிறார்களென்பது தெரியவில்லை.... இதற்கான செலவினங்களுக்கு எந்தப் பொக்கிஷத்திலிருந்து நிதி திரட்டப்படுகிறதென்பதும் மர்மமாக இருக்கிறது...."

"...ம்....மேற்கொண்டு சொல்லுங்கள்..."

"இதுவரை நான் கூறிய தகவல்களெல்லாம் ஏறக்குறைய முன்பே முறிகளில் எழுதி அனுப்பியிருந்தவைதான். ஆனால் இனிமேல் கூறப்போகும் தகவல்கள் முறியில் குறிப்பிடப்படாதவை... மிக மிக இரகசியமானவை...."

"சொல்லுங்கள்...."

"தானைத் தலைவர் என்று ஒருவரைப் பற்றிய பேச்சு அடிக்கடி அவ்வட்டாரத்தில் கேட்கிறது. குறிப்பாக நாடுவாழியார் அவர் மூலம்தான் சோழ நாட்டில் நடக்கும் அத்தனை செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்கிறார்...."

வேளக்காரன் அன்னத்திற்குப் பறிமாறவேண்டிய நெய்ப்பாத்திரத்துடன் வந்தான்.

"அந்தத் தானைத் தலைவருக்குச் சோழநாடு முழுவதும் கண்களும் காதுகளும் உள்ளனவென்பதுபோல் தெரிகிறது.... பேரரசரின் அரண்மனை உட்பட தஞ்சையின் பல முக்கியப் பிரமுகர்களின் அரண்மனைகளிலும் அவருடைய உளவாளிகள்....."

வேளக்காரன் அருள்மொழிவர்மருக்கு நெய்யை விடும்போது தவறுதலாக சிறிது நெய் இலைக்கு வெளியே விழுந்துவிட்டது. அவருடைய முகபாவம் ஒரு கணம் - ஒரே ஒரு கணம் மாறிற்று. வேளக்காரன் பதறிப்போய் "மன்னித்துவிடுங்கள் பேரரசே ! மன்னித்துவிடுங்கள் ! கைத்தவறுதலாகக் கொட்டிவிட்டது - தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள் !" என்று பலமுறை மன்றாடி¡னான்.

"கைப்பிழை(113) அனைவருக்கும் நேரக்கூடியதுதான் - பதற்றப்படாதீர்கள் !" என்றார் அருள்மொழிவர்மர் அமைதியாக. வேளக்காரன் தோளிலிருந்த துண்டை எடுத்து சிந்திவிட்ட நெய்யை அவசர அவசரமாகத் துடைத்துவிட்டுப் போனான். அருள்மொழிவர்மர் பழைய மந்தகாசத்துடன் நின்றுவிட்ட அவர்களின் உரையாடலைத் தொடர்ந்தார்.


(113) கை தவறுதல் என்பதை கைப்பிழை என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.


"வள்ளுவ நாடுவாழியார் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக இப்படியொரு நாடகங்களை ஆடிக்கொண்டிருக்கிறார் ! தானைத் தலைவராவது மண்ணாவது.... அதெல்லாம் அவருடைய கற்பனை. எனக்கெதிராக மற்றவர்களைத் தூண்டிவிட இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை உருவாக்கி உலவவிடுகிறார் போலிருக்கிறது...."

"அ.....அப்படி இருக்குமென்றுதான் நானும் நினைத்தேன் பேரரசே.... சரியாகச் சொல்லிவிட்டீர்கள் !" - என்றான் ஐங்கரன். அவனது முகத்தில் சிறிதளவு குழப்பம் தெரிந்தது.

"...சோழநாட்டில் - குறிப்பாகத் தஞ்சையில் - நமக்கு விசுவாசமான மனிதர்கள்தான் இன்று உண்டு. உளவாளிகளும் ஒற்றர்களும் சென்ற ஆட்சியுடன் அழிந்தொழிந்துவிட்டார்கள். இந்த சோழ நாட்டு மண் அளிக்கும் உணவை உண்டு உயிர் வளர்க்கும் மக்கள் - பல தலைமுறைகளாக இங்கு குழந்தை குட்டிகளுடன் வந்து குடியேறியுள்ள மண்ணின் மைந்தர்கள் - நமக்கெதிராக ஒருபோதும் திரும்ப மாட்டார்கள் என்பதை மலைநாட்டின் நாடுவாழிகள் உணரும் காலம் அதிக தொலைவில் இல்லை !"

"சத்தியமான வாக்கு !"

"வள்ளுவனார் ஆயிரமாயிரம் படைகளை ஆரைவாய்மொழிக்கருகில் குவித்து வைக்கட்டும் - கவலையில்லை ! சோழ நாட்டுப் படைகள் அவற்றைப் போர் முனையில் சந்திக்கும் !"

"ஜெயம் ! ஜெயம் !" என்று வாழத்தினார் பல்லவராயர்.


***********************************************************************************************


விருந்து முடிந்ததும் நால்வரும் தாம்பூலம் தரிப்பதற்காக மிலாடுடையார் நந்தவனத்தையொட்டிய மண்டபத்தை அடைந்தனர். தாம்பூலத் தட்டை அங்கே வைத்துவிட்டு அகன்றுவிடுமாறு அருள்மொழிவர்மர் வேளக்காரனிடம் சைகை செய்யவே அவன் உடனே அகன்றுவிட்டான். மதிய வெய்யிலுக்கு மிகவும் இதமாக நந்தவனத்திலிருந்து மெல்லிய காற்று புறப்பட்டு அவர்களது திருமேனிகளை வருடிவிட்டுப் போனது. நல்ல தளிர் வெற்றிலைகள் நான்கைப் பொறுக்கி அவற்றில் சுண்ணம் தடவியவண்ணம் அருள்மொழிவர்மர் மெல்லிய குரலில் பேசத் துவங்கினார்.

"ஐங்கரனாருக்கு இன்னும் சில காலம் காந்தளூர்ச்சாலையில் வேலையில்லை போலிருக்கிறதே...."

"எ....என்ன சொல்கிறீர்கள் அரசே ? ஒன்றும் புரியவில்லையே...."

"நமது எதிரிகளை ஒற்றறிய காந்தளூர்ச் சாலை வரை செல்லவேண்டியதில்லை - நமது அரண்மனையைச் சுற்றிவந்தால் போதும் என்கிறேன் !"

அரண்மனைப் பாதுகாவல் பொறுப்பை ஏற்றிருந்த இராஜராஜப் பல்லவராயரின் முகம் ஆயிரம் தேள்கள் கொட்டியதைப் போன்ற அதிர்ச்சியை அடைந்தது ! என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் இவர் ???

"அரசே..."

"வேளக்காரன் நெய் விடும்போது அது தவறுதலாக இலைக்கு வெளியில் விழுந்ததே - அது எப்படி ஏற்பட்டதென்பதை யாராவது கவனித்தீர்களா ?"

"...இல்லை... பேச்சில் மூழ்கியிருந்ததால் கவனிக்கவில்லை... தாங்கள்தான் அது கைப்பிழையாக நேர்ந்துவிட்டது என்று கூறினீர்களே !"

"கைப்பிழை நேர்ந்ததென்னவோ உண்மைதான் - ஆனால் அது எவ்வாறு நேர்ந்ததென்பதை கவனிக்கவேண்டும். அப்போதுதான் ஐங்கரனார் தானைத் தலைவரைப் பற்றியும் அவருக்குத் தஞ்சை அரண்மனையெங்கிலும் இருக்கும் உளவாளிகள் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார். அதனைக் கேட்டதும் அந்த வேளக்காரனின் மெய் ஒரு முறை நடுங்கிற்று - அந்த மெய் நடுக்கம் கைக்கும் பரவிற்று.... அதனால்தான் நெய் தவறி விழுந்தது. சாதாரணமாக வேளக்காரர்கள் நமது பேச்சில் அணுவளவும் கவனம் செலுத்தக்கூடாதென்று மிகக் கண்டிப்பான விதியிருக்கிறது. அதையும் மீறி இவன் நாம் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருக்கிறான் என்று கொண்டாலும்கூட மேனி நடுங்கவேண்டிய அவசியமேயில்லை. அவனிடம் ஏதோ தவறிருக்கிறது. முன்பு அவனை எமது திருமஞ்சன சாலையில் சந்தித்திருக்கிறேன்... எப்போது உக்கிராண அறைக்கு மாற்றலாகி வந்தானென்று தெரியவில்லை...."

"அவனை உடனடியாகப் பிடித்துத் தோலை உரித்து....." - என்று பற்களை நறநறவென்று கடிக்கத் துவங்கினார் மாராயர். கோபத்தில் அவரது முகம் சிவந்துவிட்டது !

"ம்ஹூம்... அவ்வாறு செய்யக்கூடாது. தற்செயலாக இறைவன் நமக்கு இவனை அடையாளம் காட்டியுள்ளார். இதனை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். முதலில் இவனும் அந்தக் கூட்டத்தில் ஒரு உளவாளியா இல்லையா என்பதை சந்தேகத்துக்கிடமின்றி ஊர்ஜிதம் செய்துகொள்ளவேண்டும்.... பின்னர்...."

"பின்னர் ?"

அருள்மொழிவர்மரின் முகத்தில் மெல்லிய புன்னகை முகிழ்த்தது.... "அந்தத் தானைத் தலைவரைப்போலவே இவனைப் போன்ற துரோகிகளை நாமும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் !"

"என்ன சொல்ல வருகிறீர்களென்பது விளங்கவில்லையே ?"

"ஐங்கரனார் அடுத்த இருவாரங்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளைக் கூறுகிறேன். அதற்குப்பின் ஆகவேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசுவோம்.
முதலில் இந்த வேளக்காரன் விவகாரம். குற்றவாளியாய் இருக்கும் பட்சத்தில் அவனும் நம்மைப்போலவே எச்சரிக்கையடைந்திருப்பான் என்று தோன்றுகிறது - அதனால்தான் அப்போது நீங்கள் பேசியதற்கு நேர் மாறாக - தானைத்தலைவன் என்று ஒருவருமில்லை என்பதுபோல் - நான் பேசினேன். என்றாலும் அது எத்தனை தூரத்திற்கு பலிக்குமென்று தெரியவில்லை. அதனால் அவன் யாரையும் இன்னும் சில காலத்திற்குத் தொடர்புகொள்ள முயலமாட்டான். ஆனால் இவனை ஏவிவிட்டவனுக்கு இங்கு நடந்த நிகழ்ச்சிகள் தெரிய வாய்ப்பில்லை. என் அனுமானம் சரியாக இருந்தால் இவனை ஏவிவிட்டவன் சிறிது நாட்களில் பொறுமையிழந்துபோய் இவனைத் தொடர்புகொள்ள முயல்வான். அப்படித் தொடர்பு கொள்ள முயல்வது யார் ? அவர்தான் நீங்கள் முன்னர் குறிப்பிட்ட தானைத் தலைவரா என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். இது மிக முக்கியமான மிக ஆபத்தான சர்வ ஜாக்கிரதையாக முடிக்கவேண்டிய முதற் பணி.

அடுத்த கட்டமாக, கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் தஞ்சை அரண்மனையிலும் இராஜாங்கத்திலும் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று கவனிக்க வேண்டும். புரவுவரி திணைக்களம், ஆயுதசாலை, பொற்சாலை, ஆதுலர்சாலை என்று ஒரு இடத்தையும் விட்டு வைக்கக்கூடாது. இப்படிச் சேர்ந்தவர்களில் எத்தனை பேர் தகுதியான பின்புலம் அல்லது கண்டோலை இல்லாமல் பெரிய மனிதர்களின் வார்த்தைகளின் பேரில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அதில் உள்ளூரைச் சேர்ந்தவர்களைக்கூட ஒதுக்கிவிடலாம்... கிராமங்களிலிருந்து, வெளியூரிலிருந்து... வேறு மண்டலங்களிலிருந்து.... ஏழைகளாக இருந்து இங்கு பணிக்குச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பதை அறிவதுதான் முக்கியம். என்னுடைய அனுமானம் சரியென்றால், குறிப்பிட்ட வகையான ஆட்களுக்கு மட்டும் இரவிநீலி குடும்பத்தார் ஆதரவளித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏனெனில் புதிய ஆட்கள்தான் விசுவாசமாக இருப்பார்கள்... இது கடினமான பணி. மெதுவாகச் செய்யவேண்டிய பணி. அதனால் உமது உதவிக்காக நமது தனிச்சேவகத்திலிருந்து சில ஆட்களை வரவழைத்துக்கொள்ளலாம்.

மூன்றாவது... இரவிநீலி குடும்பத்தாருக்கு வேண்டப்பட்டவர்கள் யார் யார் என்பதையும் அவர்களுடைய பின்னணியையும் அவர்களில் எத்தனைபேர் தஞ்சை மற்றும் பழையாறையில் உள்ளனர், எத்தனை பேர் காஞ்சி மற்றும் பிற தலைநகரங்களில் உள்ளனர் என்று அறிந்துவரும் பணி. இதற்காக கிருஷ்ணன் இராமனை பத்து நாட்களுக்கு முன்னர் வீரநாராயணபுரத்திற்கு அனுப்பி வைத்தேன்... அவர் வந்தபின்தான் மேற்கொண்டு தகவல்கள் தெரியும்...."

"உத்தரவு அரசே ! தங்களின் சித்தம்போலவே செயல்படுகிறேன் !"

அருள்மொழிவர்மர் புன்னகைத்தார். "வெற்றியோடு திரும்பி வாருங்கள் !" என்று கையுயர்த்தி ஆசிகூறினார்.

(தொடரும்)

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter