சங்கிராம விஹாரை
பகலென்றும் இரவென்றும் ஒரு நாளுக்கு இரு பொழுதுகள் இருக்கின்றன என்பதுகூட இந்த கொற்கை நகருக்குத் தெரியுமோ தெரியாதோ ! என்று இளையவரும் மழபாடியாரும் வியந்தார்கள். ஏனெனில் மாலை முடிந்து இரவு துவங்கி இரண்டரை நாழிகைகள் கழிந்து விட்ட அந்தப் பொழுதிலும் அக்கோநகரம் நாள் முடிந்துவிட்டதற்கான எந்த அறிகுறிகளையும் காண்பிக்காமல் விறுவிறுப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. வீதிகளில் ஜே! ஜே! என்று ஒரே கூட்டம்.
இருவரும் நகருக்குள் நுழைந்தவுடனேயே புரவிகளிடமிருந்து அவரோகணிக்க வேண்டியதாகிவிட்டது. அப்பெருங்கூட்டத்திற்கு நடுவே புரவிகளின் கடிவாளத்தைப் பிடித்தபடி நடப்பதே மிகக்கடினமான செயல் எனில் விட்டுக்கொண்டு செல்வது இயலாத காரியம் என்பதை சொல்லவேண்டியதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில்தான் துறவிகள் வசிக்கும் சங்கிராம விஹாரை அமைந்திருக்கும் - நகருக்குள் நுழையாமல் நேராக விஹாரைக்கு எளிதாகச் சென்றுவிடலாம் என்றெண்ணிய நண்பர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் ! அம்மஹாவிஹாரை கொற்கையின் மிக முக்கியப் பகுதியான துறைமுகப் பெருவீதியின் முனையில் அமைந்திருந்தது. அதனால் நகரின் நெரிசல் மிகுந்த மையப் பகுதிக்குள் செல்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
நகரவாசிகள் பலரும் தத்தம் வீடுகளின் வாயில்களில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவதையும் ஒரு சிலர் குலையோடு கூடிய வாழை மரங்களை நிலைக்கால்களில் கட்டி வைப்பதையும் வியப்புடன் நோக்கியபடியே நண்பர்கள் வீதிகளில் நடந்தனர். போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் கிடைக்கும் சிறு துண்டு இடத்தில் பெண்டுகள் தமது கலைத்திறமையை வண்ண வண்ணக் கோலங்கள் வரைந்து வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வீதிகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கம்பன் மணியனார் உள்ளுர்வாசி ஒருவரைப் பிடித்து "என்ன, ஏதாவது திருவிழா வருகிறதா என்ன ?" என்று விசாரித்தார்.
"என்ன தம்பீ ! எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.... அடுத்த இரண்டு நாட்களில் தை பிறக்கப் போகிறதே ! அதனை வரவேற்றுக் கொண்டாட வேண்டாமா.... கொற்கை வாணிப நகர்தான். அதற்காக அறுவடைத் திருநாளை நாங்களும் கொண்டாடக்கூடாதா என்ன...." என்று சரமாரியாகக் கேள்விக்கணைகள் வீசத்துவங்கிவிட்டார். அவரை சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் பெரும்பாடாகிவிட்டது.
"அட, தை பிறப்பது கூடத் தெரியாமலா சுற்றிக்கொண்டிருக்கிறோம் !" என்று வியந்தார் மணியனார். இத்தகைய சிக்கலான அரசாங்கப் பணிகள் வாழ்வின் சிறிய சந்தோஷங்களைக்கூட பறித்துக்கொண்டுவிடும் போலிருக்கிறதே... என்று அவருக்குத் தோன்றியது. அதனைத் தொடர்ந்து சிறுவயதில் திருப்பழனத்தில் அவரது பாட்டன் வீட்டில் வருடா வருடம் வெகு விமரிசையாகத் தைத்திருவிழாவைக் கொண்டாடியது அவரது நினைவுக்கு வந்தது.
அவரது பாட்டனாருக்கு நான்கு புதல்வர்கள் இரு பெண்கள். மணியனாரின் அன்னைதான் மூத்தவர். அதனால் மாமன்கள் அனைவரும் அவர் மீது சிறுவயது முதலே அன்பைப் பொழிந்தார்கள். அதிலும் தைத்திருவிழா என்று வந்துவிட்டால் கூடுதல் கொண்டாட்டம்தான் ! அனைவரும் குடும்பத்துடன் கிளம்பி நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே பாட்டன் வீட்டிற்கு வந்து சேர்ந்து விடுவார்கள். அந்தப் பெரிய வீட்டின் அத்தனை அறைகளும் மனிதர்களால் நிறைந்துவிடும். உக்கிராண அறையில் சமையல் ஏதோ கல்யாண வீட்டு விருந்தைப் போல் தயாராகிக்கொண்டிருக்கும். அறுவடையை எதிர்பார்த்து நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் வயல்களைப் பார்த்தாலே மனம் நிறைந்துவிடும். அடுத்த பத்து நாட்கள் விளையாட்டும் வேடிக்கையுமாகக் கழியும்.....
சட்டென்று காலம் பின்னோக்கிச் சென்றுவிடலாகாதா ? மீண்டும் பாட்டன் கையைப் பிடித்துக்கொண்டு வயல் வரப்புக்களையும் வாய்க்கால் கரைகளையும் சுற்றி வர மாட்டோமா ? என்று ஒரு கணம் மிகப் பெரிய ஏக்கம் உருவானது. இல்லை. காலம் ஒருபோதும் பின்னோக்கித் திரும்பப் போவதில்லை. இனி நாம் போக வேண்டியது வேறு பாதை. வேறு பயணம். பழைய சங்கதிகளை நினைத்துப் பார்க்கலாம்... மெல்ல அசைபோடலாம்.... தனிமையில் சிரித்துக்கொள்ளலாம். அவையெல்லாம் அழகு மிகுந்த நினைவுகள். அவ்வளவே.
மணியனாரின் மனம் இப்படிப் பாட்டன் வீட்டைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போனதெனில் மழபாடியாரின் மனமோ மிகவும் கனத்துப்போய்க் கிடந்தது. ஏனெனில் பல வருடங்களுக்குமுன் ஒரு அறுவடைத் திருவிழாவின் போதுதான் அவரது தந்தையார் மறைந்துபோனார். அவர் விட்டுவிட்டுச் சென்ற "தந்தை" என்னும் ஸ்தானத்தை இதுவரை வேறு எவராலும் நிரப்பமுடியவில்லை. தமது தந்தையாரைக் குறித்த ஏக்கங்கள் மிக ஆழமாக மழபாடியாரின் அடிமனதில் வேரூன்றிவிட்டிருந்தன. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால், மதுராவைக் கைப்பிடிப்பதில் எந்த சிக்கல்களும் ஏற்பட்டிருக்காதோ என்னவோ....
ஒவ்வொரு அறுவடைத் திருவிழாவின் போதும் அவரது வீட்டில் மட்டும் தந்தையாருக்கான திதி நடக்கும். மற்ற நாட்களில் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு வேலைகளில் மூழ்கிப்போகும் அவருடைய அன்னையார் அன்று ஒருநாள் மட்டும் மூலையில் உட்கார்ந்துவிடுவார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். அவ்வப்போது மெல்லிய விசும்பல் ஒலி கிழக்கு மூலையிலிருந்து எழும். "ஏன் இப்படி ? எங்களுக்கு மட்டும் ஏன் இந்த வேதனை ?" என்னும் கேள்வி அந்த விசும்பல்களில் தொக்கி நிற்கும். இந்தக் காட்சிகளைக் காணச்சகிக்காமல் மழபாடியார் வெளியில் சென்றுவிடுவது வழக்கம். அவருக்கும் அந்த இழப்பைப் பற்றிய வேதனை இருக்கத்தான் செய்தது. ஆனால் அதனை மனதின் ஒரு மூலையில் போட்டுப் புதைத்து விடவே அவர் முயன்றார். தன்னுடைய துன்பங்களை ஆடம்பரமான அழுகைகளின் மூலம் காட்டிக்கொள்வதோ சுயபச்சாதாபத்தின் மூலம் அடுத்தவர்களின் பரிதாபத்தைத் தேடிக்கொள்வதோ அவருக்கு ஆண்மை மிகுந்த செயல்களாகத் தோன்றவில்லை.
"சரி, நமக்கு இப்படி நேர்ந்துவிட்டது. நேராமலிருந்திருக்கலாம்தான் - ஆனால் நேர்ந்துவிட்டது. இந்தத் துன்பத்தை நான் சுமப்பேன். இதனை மட்டுமல்ல - வாழ்க்கை இனி என்மேல் ஏற்றி வைக்கப்போகும் அத்தனை சுமைகளையும் தைரியமாகச் சுமப்பேன். நான் ஆண்மகன். வீரன். வீரத்தில் நிகரற்றவரான குருகாடி செல்லக்கிழாரின் பேரன். என் உடம்பில் ஓடுவது அவர் உதிரம். நான் கடைசிவரை தலை நிமிர்ந்துதான் நிற்பேன்.... அத்தனை அடிகளையும் தைரியமாகத் தாங்குவேன். சிரித்தபடிதான் சாவேன் !" என்னும் கடுமையான மனவுறுதி அவரது மனதில் வேரூன்றிவிட்டிருந்தது.
தந்தையாரைப் பற்றிய நினைவுகளிலிருந்து மனதைத் திருப்பும் முகமாகப் பண்டிதரைப் பற்றிய யோசனைகளில் கவனத்தைக் குவிக்க முற்பட்டார் அவர். இயல்பாகவே பல கேள்விகள் அவரது மனதில் முகிழ்த்தன.
யார் அவர் ? குருகூருக்குச் செல்வதற்காக ஏன் நம்முடன் சேர்ந்துகொள்ள வேண்டும் ? பேச்சுத் துணைக்காகவா ? அல்லது நல்ல புரவியில் ஏறி விரைவாகப் பயணம் செய்யலாம் என்கிற எண்ணமா ? இத்தனைக்கும் பயணத்தில் புரவிகளை அவ்வளவாகப் பயன்படுத்தக்கூட இல்லை.... ஏதோ வேண்டுமென்றே நம்முடன் ஒட்டிக்கொண்டாற்போல் தெரிந்ததே ?
தற்செயலாகத்தான் நம்மை அவர் சந்தித்தாரா ? அல்லது அனைத்துமே திட்டமிடப்பட்டதொரு ஏற்பாடா ? அந்தத் திட்டத்தில் ஒரு பகுதியாகத்தான் புரவிகளுக்குக் காய்ச்சல் உண்டாக்கப்பட்டதா என்ன ??? நாம்தான் வேறு விதமாக அர்த்தம் கற்பித்துக்கொண்டோமா ? சேச்சே ! வாய்க்காலின் அருகே கருநாகம் கரையேறுவதையும் அதனைக் கண்டு புரவிகள் நடுநடுங்கியதையும் நாமே கண்டோமே ! நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக ஒரேயடியாகப் பண்டிதர் மீது பழிகூறலாமா ? அதுசரி, நம்முடன் அவர் எதற்காக இத்தனை மெனக்கெட்டு ஒட்டிக்கொள்ளவேண்டும் ? அது மிக மர்மமாகவல்லவா இருக்கிறது ?? ஓலைகளோ பத்திரமாக இருக்கின்றன என்று மணியனார் கூறிவிட்டார். பின் பண்டிதரின் நோக்கம்தான் என்ன ???
அடுக்கடுக்காக மனதில் எழும்பிய கேள்விகள் அவரைப் பெரியதொரு குழப்பத்தில் ஆழ்த்தின. அந்தக் கேள்விகளுக்கான விடைகளைச் சுமந்து நின்ற சங்கிராம விஹாரையானது அவர்களின் வரவுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்தது.
***********************************************************************************************
பெளத்தம், அந்நாளில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சிறிதளவு மிச்சமிருந்தது. வணிகர்கள் - அதிலும் குறிப்பாக கீழ்த்திசை நாடுகளுடன் சுறுசுறுப்பான வாணிபத்தில் ஈடுபட்டிருந்த பெருமக்கள் - பெளத்தத்தை ஆர்வத்துடன் பின்பற்றினர். இவர்களின் ஆதரவால் தமிழகத்தின் கிழக்குக் கரையோரத் துறைமுகப்பட்டினங்கள் பலவற்றிலும் பெளத்த விஹாரைகளும் சேதியங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
தென்னகத்தில் இவ்வாறு பரவலாகப் பின்பற்றப்பட்ட பெளத்தத்தை ஒருவகையில் "தமிழ்ப் பெளத்தம்" என்றே கூறலாம். ஏனெனில் தென்னகத்திற்கேயுரிய பலவிதமான இந்து மத மாண்புகளையும் மரபுகளையும் தன்னகத்தே உள்வாங்கிக்கொண்டுதான் இந்த மண்ணில் பெளத்தம் தழைத்தது. உதாரணமாக இங்கு அமைந்திருந்த விஹாரைகளில் பக்தர்களால் தானமாகக் கொடுக்கப்பட்ட வெண்கல பெளத்தப் படிமங்களைக் கூறலாம். நாகைப்பட்டினத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பெளத்தப் படிமங்கள் மட்டும் முந்நூறுக்கும் மேலிருக்கும் ! இந்தியாவில் - ஏன், தென்கிழக்கு ஆசியாவிலேயேகூட - இத்தனை படிமங்கள் ஒரே இடத்தில் கிடைத்ததாகத் தெரியவில்லை. பதினான்கு - அல்லது பதினைந்தாம் நூற்றாண்டுவரை பிழைத்திருந்த இந்தக் கலாச்சாரக்கூறு பின்னர் மறைந்தொழிந்தது நம்முடைய துரதிருஷ்டமே.
இத்தகைய பத்தாம் நூற்றாண்டு பெளத்தத்தின் சிறியதொரு அங்கமாக விளங்கிய சங்கிராம விஹாரையானது நாகையின் பிரம்மாண்டமான விஹாரைகளைப் போல் அல்லாமல் மிகச் சிறிய கட்டிடமாகவே காட்சியளித்தது. விஹாரையின் முன்புறத்தில் இயங்கிய முக்கிய வழிபாட்டுக் கூடத்தில் இரவு பகலென்று பாராமல் பக்தர்கள் குவிந்தவண்ணம் இருந்தார்கள். கடலில் பெரும்பயணம் மேற்கொள்வோர், சரக்குகளைக் கப்பல்களில் ஏற்றி அனுப்புவோர், உற்றார் உறவினர்களை வழியனுப்ப வந்தோர், வெளிதேசத்திற்குப் பொருள்தேடக் கிளம்புவோர், முதல் முறையாகக் கடற்பயணம் மேற்கொள்வோர், கடற்பயணங்களிலேயே வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்தோர் என்று பலவகைப்பட்ட பக்தர்கள் பகவானின் பாதாரவிந்தங்களில் தத்தம் பிரார்த்தனைகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள்.
அத்தனை பேரின் வேண்டுகோள்களையும் பொறுமையுடன் செவிமடுத்து, பதிலுக்கு தன்னுடைய முத்திரைப் புன்னகையையும், "தந்தோம் !" என்பதற்கு அறிகுறியாக அபயஹஸ்தக் கரங்களையும் காட்டி அமர்ந்திருக்கும் சங்கிராம விஹாரையின் நாயகர்(123) பல்லவர் காலத்தினர். அழகுக்குப் பேர் போனவர். கீழ்த்திசை நாடுகளின் வழிபாட்டு முறைக்கேற்ப அவருக்கு முன் பக்தர்கள் கால்களை வஜ்ராசனமாக மடித்து இரு கரங்களிலும் எரியும் நறுமண வத்தியை ஏந்தி மேலும் கீழுமாக விழுந்து விழுந்து வணங்குவதை காண்கிறோம்.(124)
(123) பெளத்தப் படிமங்களை "நாயகர்" எனும் சொல்லால் அக்காலத்தில் குறிப்பிட்டுள்ளனர். நாகையில் "அக்கசாலைப் பெரும்பள்ளி நாயகர் - பதினெண் விசயத்தார்க்கும் நாயகர்" எனும் பொறிப்புடன் பெளத்தப் படிமம் கிடைத்துள்ளது. (124) இன்றும் தாய்லாந்தில் இவ்வித வழிபாட்டுமுறை வழக்கத்திலிருப்பதைக் காணலாம்.
கூட்டம் மிக அதிகமாக இருந்தாலும் வழிபடுவோர் ஒரு பக்கம், வழிபாட்டிற்காக காத்து நிற்போர் ஒரு பக்கம், வழிபாட்டை முடித்துக்கொண்டு விஹாரையிலிருந்து கிளம்புவோர் ஒருபக்கமென்று அந்த பக்தர் குழுக்கள் ஒரு கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது வியப்பாகத்தான் உள்ளது. ஆங்காங்கே நிற்கும் பிஷுக்கள் மாறாத புன்சிரிப்புடன் அவர்களை நெறிப்படுத்துகின்றனர்.
இந்த வழிபாட்டுக் கூடத்தின் பின்புறம் அமைந்திருந்த பிஷுக்கள் தங்கும் விடுதியை மழபாடியாரும் மணியனாரும் அடைந்தார்கள். விடுதியின் வாயிலில் நின்றுகொண்டிருந்த காவி வஸ்திர பிஷுவானவர் அவர்களுக்கு முகமன் கூறி வரவேற்றார்.
"வரவேண்டும் ! வரவேண்டும் ! வழிபாட்டுக் கூடம் முன்னால் அமைந்துள்ளது... இங்கிருந்து நேரே சென்றால்...."
"மன்னிக்கவேண்டும் தேரரே ! நாங்கள் பகவானை தரிசனம் செய்ய வரவில்லை. எங்களுக்கு மிகவும் தெரிந்த பெளத்தத் துறவியொருவர் இங்கு எங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்... அவரை சந்திப்பதற்காக வந்தோம் !"
"ஓ ! அப்படியா... அவருடைய திருநாமமென்னவோ ?"
"அவருடைய பெயர் ஆனந்தர்...."
"அடடா, அது மிகப் பிரபலமான பெயராயிற்றே ! எங்கள் விஹாரையிலேயே பதினைந்து பேர் தேறுவார்களே.... வேறு ஏதாவது அடையாளங்கள், குறிப்புக்கள் உண்டா ?"
"அவர்.... காம்போஜத்திலிருந்து வந்தவர் ! நல்ல உயரம் - மெல்லிய உடல்வாகு.... மிகத் தெளிவான முகம் !"
"ஆஹா ! நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நேற்று மாலை காம்போஜம் சென்றுகொண்டிருக்கும் கலத்திலிருந்து வந்திறங்கிய பிஷு ஆனந்த தேரரை அல்லவா குறிப்பிடுவது போலத் தெரிகிறது ? நல்லது நல்லது - என்னுடன் வாருங்கள் !"
காம்போஜக் கலமா ? - என்று நண்பர்களுக்கு ஒரு கணம் வியப்பேற்பட்டது.
"வாருங்கள் - இந்தப் பக்கமாக வளைந்து வாருங்கள் ! வாயிற்படியின் உயரம் சற்று குறைவு, பார்த்து வாருங்கள் !" என்று வழிகாட்டிய பிஷு, தன் கரங்களில் ஒரு சிறிய தீபத்தை ஏந்தியபடி விஹாரையின் பல அறைகளையும் கடந்தார்.
அந்த விஹாரை பார்ப்பதற்குச் சிறியதாகத் தென்பட்டாலும், அதனுள் பல சிறிய அறைகள் கிழக்கிலும் மேற்கிலுமாக அமைந்திருந்தன. கொற்கைக்கு வந்து போகும் பெளத்தக் குடிமக்கள் ஓரிரு நாட்களுக்குத் தங்கிவிட்டுப் போகும் வசதிக்காக அவை கட்டப்பட்டிருந்தன போலும். ஆங்காங்கே அமைந்திருந்த சாளரங்களின் வழியே பளிச்சென்ற நிலவொளி தன் கிரணங்களை வாரியிறைத்தது.
"இரவு உணவு அருந்திவிட்டீர்களா ? அல்லது பகவானின் பிரசாதங்களை சிறிதளவு எடுத்து வரட்டுமா ?"
"உங்களுக்கு ஏன் வீண் சிரமம்...."
"இதிலென்ன சிரமம் இருக்கிறது ? பகவானின் பிரசாதங்களை உங்களுடன் பகிர்ந்துண்பதில் பெருத்த மகிழ்ச்சி மட்டுமே உண்டு ! இதோ - அவர் தங்கியிருக்கும் அறை..."
அவர்களின் கண்களுக்கு முன்விரிந்த அறையின் மரக்கதவத்தை மென்மையாக இரண்டுமுறை தட்டினார் பிஷு.
(தொடரும்)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|