மோசம் போனோம் !
அறையின் உள்ளிருந்து "வாருங்கள் !" என்றொரு குரல் கேட்டது. அது ஆனந்த தேரரின் குரல்தான்.
அவர்களை அழைத்து வந்த பிஷு, அறைக்கதவை மெல்லத் திறந்து "தேரருக்கு மாலை வணக்கங்கள். உங்களைத் தேடி இந்த நண்பர்களிருவரும் வந்துள்ளனர். நீங்களெல்லோரும் உரையாடிக்கொண்டிருங்கள் - நான் பகவானின் பிரசாதங்களுடன் சிறிது நேரத்தில் வருகிறேன் !" என்று புகன்றுவிட்டு மறைந்தார்.
அது ஒரு எளிய அறை. அதன் ஒரு கோடியில் பெரிய தீபமொன்று தன் பரந்த வெளிச்சத்தை தாராளமாக அறைமுழுவதும் பரவவிட்டிருந்தது. அந்த தீபத்தின் எண்ணையில் சுகந்தப் பொருட்கள் கலந்திருந்ததாலோ என்னவோ அந்த அறை முழுவதுமே ஒரு மெல்லிய நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்தது. அறையின் உச்சியில் அமைந்திருந்த சாளரங்களின் வழியாக வான் தாரகைகளுள் சில, அவர்கள் மூவரையும் சிறிது நேரம் முறைத்துப் பார்த்தன.
ஆனந்த தேரர் முடிந்தவரை தன்னை அமைதியுடன் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ள முயன்றாலும் அவரது மனதில் பொங்கிக்கொண்டிருந்த பெரும் பரபரப்பு முகத்தில் தெளிவாகவே தெரிந்தது.
"நண்பர்களே ! ஏன் இத்தனை தாமதம் ? இன்னும் ஒரு முகூர்த்த நேரம் தாமதமாக வந்திருந்தீர்களானால் என்னைச் சந்தித்திருக்க முடியாது !" என்ன நடந்தது ??"
"அது... ஒன்றுமில்லை. புரவிகளுள் ஒன்றுக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது....." என்று துவங்கிய மணியனார் தொண்டியிலிருந்து கொற்கைவரை அவர்கள் இருவரும் வந்து சேர்ந்த வரலாற்றை மிகச் சுருக்கமாக விளக்கினார். பெரிதும் முயன்றும் புதிய மனிதரொருவர் அவர்களுடன் பாதிப் பயணத்தில் சேர்ந்துகொண்டதை அவரால் மறைக்க முடியவில்லை.
"என்ன... புதிய மனிதருடன் சேர்ந்துகொண்டு பயணப்பட்டீர்களா ? தெரியாதவர்களுடன் ஒருக்காலும் பிரயாணம் செய்யவேண்டாம் என்று நாகையில் ஒன்றுக்கு நூறுமுறை படித்துப் படித்துக் கூறியிருந்தேனே.... அதையும் மீறியா செயல்பட்டீர்கள் ?"
"அது... வேறு வழியின்றி அவ்வாறு செய்யவேண்டியதாகிவிட்டது. புரவிகளுக்கு வைத்தியம் செய்த அந்தப் பெரியவர் தன்னைத் திருக்குருகூர் வரை அழைத்துச் சென்றால்தான் ஆயிற்று என்று நிர்பந்தித்துவிட்டார்..."
"குருகூருக்குச் செல்வதற்கு ஆயிரம் வழிமுறைகள் உள்ளனவே - உங்களுடன் சேர்ந்துகொண்டுதான் பிரயாணப்படவேண்டுமென்பதில்லையே... இதில் ஏதோ சூதுவாது மறைந்துள்ளதென்பது நிச்சயம். ஓலைகள் பத்திரம்தானே ?"
"மிக மிக ஜாக்கிரதையாக வைத்திருக்கிறேன் !"
"எங்கே, ஓலைச்சுருளை எடுங்கள் !"
பரமன் மழபாடியாருக்கு வயிற்றிலிருந்து ஒரு பந்து எழும்பி மேலண்ணத்தை அடைந்தது. அடிமனதில் எங்கோ ஏதோ பெரியதொரு தவறு நேர்ந்துவிட்டது என்னும் எண்ணம் அவருக்குக் குருகூரிலிருந்தே தோன்றிக்கொண்டிருந்தது. தற்போது அது உறுதிப்பட்டது.
"இதோ !" - மழபாடியாரிடம்கூடக் காட்டாமல் சர்வபத்திரமாகத் தன்னுடைய மெய்ப்பைக்குள் ஒளித்துவைத்திருந்த பித்தளை ஓலைச்சுருளை கம்பன் மணியனார் பயபக்தியுடன் தேரரிடம் நீட்டினார்.
தேரர் அந்த ஓலைச் சுருளை உடனடியாகப் பிரிப்பார் - உள்ளிருக்கும் பனை முறிகளை ஆராய்வார் என்று இருவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை ! மாறாக, ஓலைகளைத் தாங்கியிருந்த பித்தளைச் சுருளை நேராக விளக்கொளியில் சென்று ஆராய்ந்தார். எப்போதும் சாந்தி நிலவும் அவரது முகம் கடுகடுவென்று மாறியது...
"நண்பர்களே ! ஏமாந்துவிட்டீர்கள். முறிகள் பறிபோகவில்லையென்பதென்னவோ உண்மைதான். ஆனால் ஒலைச்சுருள் திறக்கப்பட்டிருக்கிறது - முறிகளில் எழுதப்பட்டிருக்கும் செய்திகள் படிக்கப்பட்டுவிட்டன !"
கம்பன் மணியனாரின் முகம் சொல்ல முடியாத விகாரத்தை அடைந்தது.... "என்ன.... என்ன சொல்ல வருகிறீர்கள் தேரரே ?"
"ஒருக்காலும் நீங்களோ இந்த வீரரோ ஓலைச்சுருளைப் பிரிக்கவில்லையே ? நாகையில் உங்களிடம் சுருளைக் கொடுக்கும்போதே நான் சொல்லும்வரை இதனைத் திறக்க வேண்டாம் என்று கூறியிருந்தது நினைவில் உள்ளதுதானே ?"
"நிச்சயமாகப் பிரிக்கவில்லை - சொல்லப்போனால் இந்த ஓலைச்சுருளை இவரிடம் காண்பிக்கக்கூட முயலவில்லை... மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தேன்...."
"அப்படியானால் அந்தப் புதிய மனிதன்தான் ஓலைச்சுருளைத் திருடி முறிகளைப் படித்திருக்கிறான் என்றாகிறது. நண்பர்களே ! பெருந்தவறு செய்து விட்டீர்கள்...."
"எப்படி ஓலைச்சுருள் திறக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்தீர்கள் ?" என்று வினவினார் மழபாடியார். அவரது மனதிலும் பெரியதொரு பாரம் ஏறிவிட்டது. என்னதான் ஓலைகளை மணியனார் சுமந்தாலும் அவருக்குப் பாதுகாவலாக இருக்க வேண்டிய கடமையிலிருந்து அவர் தவறியவராகிறார் இல்லையா ?
"இதோ பாருங்கள் !" என்று அவர்களை தீபத்திற்கருகில் அழைத்துச் சென்ற ஆனந்தர், பித்தளைச் சுருளின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டினார். "இரகசியமான இராஜாங்க ஓலைகள் குறிப்பிட்ட இடம்வரை பத்திரமாகச் சென்று சேருகின்றனவா - அல்லது இடையில் பிரித்துப் படிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்டறியப் பல வழிமுறைகளைக் கையாளுவார்கள். அதில் ஒரு வழியைத்தான் நான் கையாண்டேன்... இதோ இங்கிருக்கும் சிறு கோடுகளைக் கவனியுங்கள் ! ஓலைச்சுருள் முழுவதுமாக மூடப்பட்டபின் இந்தக் கோடு இடப்பட்டது. அதனால் சுருளில் இருபகுதிகளிலும் இந்தக் கோடு நேராக இசைந்திருந்தது. தற்போது அந்த இசைவு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது - அவசர அவசரமாக எவரோ ஓலைச்சுருளைத் திறந்து முறிகளைப் படித்துவிட்டு மீண்டும் பத்திரமாக உங்கள் கச்சில் சொருகிவிட்டிருக்கிறார்கள்....."

பித்தளை ஓலைச்சுருள்
"நயவஞ்சகன் !" என்று பற்களை நறநறவென்று கடித்தார் மணியனார். பண்டிதரை அந்த இடத்திலேயே கண்டதுண்டமாக வெட்டிப் போட்டுவிடவேண்டுமென்கிற வெறி அவருக்கு உண்டானது. காரிப்புத்தூர் சத்திரத்தில் அவர்கள் மூவரும் தங்கிய இரவு தன்னை மறந்து சிறிது நேரம் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டது நினைவுக்கு வந்தது. அந்த நேரத்தில் மெல்ல ஓலைகளை எடுத்துப் படித்திருக்கிறான் அந்த வஞ்சக வேடதாரி ! ஓலைக்குழல் வைத்திருந்த இடம் காலையில் விழித்தபோது சிறிது கலைந்திருந்தது... அது நமது உறக்கத்தினால் ஏற்பட்டது என்றல்லவா நினைத்துவிட்டோம் ! நாம்தான் உறங்கிவிட்டோமென்றால் நமக்குக் காவலாக வந்த மழபாடியாருமல்லவா சேர்ந்து உறங்கிவிட்டார் ! ஒருவேளை ஒருவர் மாற்றி ஒருவர் முறைவைத்துக்கொண்டு உறங்கியிருக்க வேண்டுமோ ? அடடா - முதல் பணியில் முக்கியப் பணியில், இத்தனை தூரம் நாம் தோல்வியடைந்திருக்க வேண்டாம் ! இனிப் பல்லவராயரின் முகத்தில் விழிப்பது எப்படி ? ஐயோ ! பேரரசரின் நம்பிக்கையை முழுவதுமாகக் குலைத்துவிட்டேனே....
தலையில் கையை வைத்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டார் அவர்.
மழபாடியாரின் மனமும் தாங்கமுடியாத வேதனையில் சட்டென்று உள்மடங்கி உட்கார்ந்துவிட்டது. இதுபோன்ற மிகச் சங்கடமான தருணங்களில் - சம்பவங்கள் கைமீறிப்போய் துன்பம் தலைக்கேறிவிடும் வேளைகளில் - அவர் செய்வது ஒன்றே ஒன்றுதான். மனதில் அவரது குலதெய்வமான கச்சிப்பட்டு ஐஞ்சந்தி துர்க்கா தேவியை(125) முழுவதுமாக வரிப்பது. அவளது பாதார விந்தங்களில் சிந்தையைச் செலுத்துவது. "நல்லதோ கெட்டதோ - என்னால் செய்யக்கூடியவற்றை செய்துவிட்டேன்... இனிமேல் நீதான் !" என்று பாரத்தை அவள்மேல் போட்டுவிடுவது.
(125) காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் துர்க்காதேவி
"அந்தப் புதிய மனிதர் யார் ? அவரது அங்க அடையாளங்கள் என்ன ? அவரைப் பற்றிய முழு விபரங்களையும் கூறுங்கள் !" - தேரரின் குரலில் தெரிவது இகழ்ச்சியா என்ன ? இவ்வாறெல்லாம் பேசக்கூடியவரில்லையே அவர் ?
"கழிக்குடியின் பாசுபத மடத்தைச் சேர்ந்த துறவியாக அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் - அவரது குடும்பம் பண்டைய பாண்டிய இராஜாங்கத்துடன் நெருங்கிய தொடர்ப்பிலிருந்திருக்கும் போலிருக்கிறது. தற்சமயம் அந்தத் தொடர்புகள் அற்றுவிட்டன... வைத்தியத்தில் தேர்ச்சி பெற்றவராகக் காணப்பட்டார். குறிப்பாக அசுவ வைத்தியத்தில் அவரது தேர்ச்சி நன்றாகவே உள்ளது. கருத்த மேனியர் - நல்ல உயரம், உடல்வாகு - வயது ஐம்பத்திஐந்து பிராயத்திற்கு மேல் இருக்கும் - நரைத்த மீசை தாடி - அவரது பெயர் தேவநாக பண்டிதர் !" - இடிந்துபோய் உட்கார்ந்திருந்த மணியனார் மெல்லிய குரலில் பதிலிறுத்தார்.
"என்ன பெயர் சொன்னீர்கள் ?"
"தேவ... நாக... பண்டிதர் !"
"ஆஹா ! மோசம் போனோம் ! முற்றிலுமாக மோசம் போனோம் ! யாரிடம் ஒருபோதும் நமது இரகசிய ஓலைகள் அகப்படக்கூடாதோ அவரிடமே ஓலைகளை ஒப்படைத்திருக்கிறீர்கள் நண்பர்களே... இனி அந்த பகவான் சாக்கிய முனிதான்(126) நம்மைக் காப்பாற்ற வேண்டும் !"
(126) சாக்கியர் குலத்தில் உதித்ததால் புத்த பகவானை சாக்கிய முனி என்றும் குறிப்பிடுவார்கள்
மழபாடியாரின் மனதில் தேவி தோன்றினாள். சிரித்தாள்.
"இப்படி என்னை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டாயே அம்மா ! அரசர் என்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றுவதில் இத்தனை பெரிய தோல்வியா ? ஒரு எச்சரிக்கை - ஒரு குறிப்பு - கொடுத்திருந்தால்கூட விழித்துக்கொண்டிருந்திருப்பேனே..." - அழாக் குறையாகப் புலம்பித் தள்ளினார் மழபாடியார்.
"அடேய் மழபாடி ! பரம்பரை பரம்பரையாக என்னை வழிபட்ட குடும்பமடா உன்னுடையது. நீ உன் பாட்டனின் அம்சம். அதனால்தான் அவனைப்போலவே நீயும் என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறாய்.... உன்னையா கைவிட்டுவிடுவேன் ? ஒருபோதும் கிடையாது. மாயை உன் கண்களை மறைக்கிறது... அதனால்தான் நாகையில் கிளம்பிய நாள்முதல் நான் உன் உள்மனதிற்கு அனுப்பும் செய்திகளை கவனிக்காமல் மேம்போக்காக நடந்துகொண்டிருக்கிறாய். ஒன்று சொல்கிறேன் கேள் ! அந்தப் பண்டிதன் மட்டுமல்ல - இந்த பிஷுவும் உங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான் ! நன்றாக சிந்தித்துப்பார்... எதற்காக உன்னை அவசர அவசரமாக இந்தப் பயணத்தில் சேர்க்க வேண்டும் ? இத்தனை முக்கியமான ஓலைகளை அனுப்ப உங்களைப் போன்ற ஏமாளிகளை விட்டால் வேறு ஆட்களா கிடைக்கவில்லை ? சரி, கொடுத்ததுதான் கொடுத்தாயிற்று - பின் எதற்காக துறைமுகம் துறைமுகமாக உங்களை இவன் சந்தித்துக்கொண்டிருக்கிறான் ? ஒன்றாவது ஏற்றுக்கொள்ளக்கூடியதைப்போல் தெரிகிறதா ? நன்றாக சிந்தித்துப்பார் ! உன் குருநாதன், அந்த செண்பகத் தோட்டத்துக் கிழவன் - படித்துப் படித்து உபதேசித்த தர்க்கவாத அடிப்படைகளை உபயோகித்துப்பார்.... மலைத்துப் போய் நிற்காதே ! இன்னமும் குடி முழுகிவிடவில்லை - அந்த அளவிற்குப் போவதற்கு நானும் விடமாட்டேன் ! நீ உன் புத்தியை சற்று உபயோகப்படுத்து... வேறு விதமாக, வேறு கோணத்தில் இதனை அணுகிப்பார் ! இந்த நாடகத்தில் உனக்குக் கொடுக்கப்பட்ட பங்கு என்ன என்பது உனக்கே மெல்ல மெல்லப் புரியும் !"
"இப்படித்தான் ஏதாவது நடக்குமென்று அப்போதே அருள்மொழிவர்மரிடம் எச்சரித்தேன்...!" என்று ஏதோ கூறத் துவங்கிய பிஷு தாம் பேசிக்கொண்டிருப்பதை சிறிதும் கவனிக்காமல் ஏதோ தியானத்தில் நிற்பதுபோல் கண்மூடி அசையாமல் நிற்கும் மழபாடியாரை ஆச்சரியத்துடனும் கோபத்துடனும் கவனித்தார்...
கோபத்துடன் என்றா கூறினோம் ? பின் அவருடைய கடைவாயின் இறுதியில் ஒரு சிறிய புன்னகை ஒளிந்துகொண்டிருப்பதுபோல் தோன்றுகிறதே ? அர்த்தமற்ற இவரது நடத்தைக்கு என்னதான் பொருள் ??
பழம்பெருமை மிக்க கொற்கை சங்கிராம விஹாரையின் நாயகரே ! நீங்களாவது இங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்பதை சற்றே விளக்கிச் சொல்லுங்களேன்....
(தொடரும்)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|