www.varalaaru.com
A portal for
South Indian History
 
73 இதழ்கள்...
1009 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
சேரர் கோட்டை
அத்தியாயம் 31

இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
மாயை தெளிந்தது


மனம் இருவேறு நிலைகளில் செயல்படுகிறதென்பதை மெய்ஞானம் மட்டுமல்ல - விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. ஒன்று தூல மனம்(Concious mind), மற்றது சூட்சும மனம்(Sub concious mind). இரண்டும் இருவேறு தளங்களில் இயங்குகின்றன.

நாம் பெரும்பாலும் தூல மனத்துடன்தான் நம்மை இணைத்துக்கொள்கிறோம். இந்தத் தளம் அறியாமை நிறைந்தது. கண்களால் காணும் புறப்பொருட்கள் கொடுக்கும் அறிவும் வறட்டுக் கல்வியறிவு கொடுக்கும் ஞானமும்தான் இதில் மிச்சம். தூல மனம் கண்களால் காண்பவற்றை மட்டுமே உள்வாங்கிக்கொள்கிறது. அதனை மட்டுமே நம்புகிறது. எல்லாருடனும் எல்லாவற்றுக்கும் தர்க்கம் செய்கிறது. நம்முடைய தன்முனைப்பை முனைமழுங்காமல் பாதுகாப்பது தூல மனம்தான். வித்யா கர்வமும், "தான்" என்ற அகம்பாவமும் இந்த மனத்திலிருந்துதான் வேர்பரப்பிக் கிளைவிரித்து விஷ விருட்சமாக வானளாவ வளர்கின்றன.

ஆனால் நல்ல வேளையாகத் தூல மனத்தோடு மட்டும் மனித இனம் படைக்கப்படவில்லை. அது இயங்கும் வேறொரு தளமும் உண்டு. அதனை சூட்சும மனம் என்று குறிப்பிடுகின்றார்கள். தூல மனம் மேகம் எனில் சூட்சும மனம் வானம். தூல மனம் ஒரு துளி நீரெனில் சூட்சும மனம் சமுத்திரம்.

சூட்சுமத் தளத்தில் செயல்படும்போது "தான்" என்னும் அகம்பாவம் முற்றிலும் கரைந்துபோய் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்தப் பேரியக்கத்துடன் மனம் இணைகிறது. அந்த இணைப்பினால் வெளியில் பரந்துகிடக்கும் பேரறிவும் ஆற்றலும் தனிமனதிற்குக் கிடைக்கிறது. மிகப் பெரிய பிரம்மாண்டமான ஏரியிலிருந்து ஒரு வாய்க்காலை வெட்டிவிட்டால் அதில் எத்தனை ஆவேசத்துடன் நீர் பாயுமோ அத்தனை வேகத்துடன் பிரபஞ்ச ஆற்றல் அந்த நிலையில் தனிமனதிடம் பாய்கிறது.

வலிமையற்ற மனதிற்கு அந்தப் பேராற்றலைத் தாங்கும் சக்தி கிடையாது. அதனால் முதலில் மனதின் வலிமையையும் ஆக்கத்தையும் வளர்த்துக்கொண்டு அதற்குப் பிறகு சிறிது சிறிதாகத்தான் பயிற்சியின் மூலம் அந்தப் பிரபஞ்ச சக்தியைத் தொடமுயற்சிக்க வேண்டும். பின் மெல்ல மெல்ல நிரந்தரமாக நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

பரத கண்டத்தில் தோன்றிய அத்தனை ஞானிகளும் முனிபுங்கவர்களும் யோகிகளும் வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகக் கண்டது இந்த இணைப்பையே. வேதங்களும், வேதங்களுக்கு அடுத்தபடியாக அவற்றின் அங்கங்களாகத் தோன்றிய ஆரண்யகங்களும், உபநிடதங்களும் அடிநாதமாக இந்த ஒரு கருத்தைத்தான் பதிவு செய்துள்ளன. இந்த இணைப்பை சுருக்கமாக "யோகம்" எனும் சொல்லால் குறிப்பிடுவார்கள். "யோகம்" என்னும் சொல் "யுஜ்" என்னும் வேர்ச்சொல்லிலிருந்து உண்டானதாக ஞானி ஓஷோ தெரிவிக்கிறார். இதற்கு "இணைத்துக்கொள்ளுதல்" என்று அர்த்தம்.

தனி மனித மனம் பிரபஞ்ச அறிவுடன் தன்னை இணைத்துக்கொள்ளவேண்டுமென்பதற்காக நான்கு சீரிய வழிமுறைகளை உருவாக்கினார்கள் - இவை முறையே ஞான யோகம், இராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என்று பெயர் பெறும். வாழ்க்கையின் ஒரே நோக்கம் - இறுதி நோக்கம் - இது ஒன்றே ஒன்றுதான் எனும் எண்ணம் அழுத்தமாக நமது சிந்தனைகளில் வேரூன்றியிருப்பதால்தான் பழங்காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை நாம் விஞ்ஞானிகளை அதிகம் உருவாக்காமல் மெய்ஞ்ஞானிகளை உருவாக்கி வருகிறோம். பரதக் கண்டம் உருவாக்கிய அளவிற்கு அத்தனை மெய்ஞ்ஞானிகளை உலகின் வேறு எந்தக் கண்டமும் எந்தக் காலத்திலும் உருவாக்கியதில்லை !

முறையான யோகப் பயிற்சி இல்லாமலேகூட ஒரு சில சமயங்களில் கணநேரத்திற்கு நாம் நம் மனதைப் பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் நேர்வதுண்டு. பேருந்தில் சாதாரணமாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோதுதான் உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளுள் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன்னுடைய மிகப்பிரபலமான ஒட்டுறவுத் தத்துவத்தை (Theory of Relativity) முதன் முதலில் கூறினாராம் ! கணிதமேதை இராமானுஜன் பல சிக்கல் மிகுந்த கணிதப் பயன்பாடுகளை அனாயசமாக யோசிக்காமல் எழுதிக்கொண்டே போவாராம்... இப்படிப் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ஆச்சரியங்களெல்லாம் தனி மனித மனம் பிரபஞ்ச மனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டதினால்தான் சாத்தியமாயிற்று.

இவ்வளவு ஏன் ? நமது இயல்பு வாழ்க்கையிலேயே கூட அவ்வப்போது மின்னலைப் போல் ஒரு கணம் இந்தப் பிரபஞ்சப் பேரறிவை உணரும் சந்தர்ப்பங்கள் பல வாய்க்கத்தான் செய்கின்றன. நாம்தான் அவற்றைக் கூர்மையாகக் கவனிப்பதில்லை. "நினைத்துக்கொண்டேயிருந்தேன் - நீங்களே வந்து விட்டீர்கள் ! உங்களுக்கு நூறு ஆயுசு..." என்கிறோமே - வந்தவரைப் பற்றிய அந்த நினைப்பு எவ்வாறு வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா ?

கதைக்கு நடுவே சூட்சும மனம் பற்றிய மேற்கூறிய நீண்ட விளக்கத்தினை நாம் இப்போது வழங்கியதற்குக் காரணமுண்டு. ஏனெனில் கச்சிப்பட்டு ஐஞ்சந்தி துர்க்கையாரின் அருளால் ஒரு சில கணங்களுக்கு மழபாடியார் பிரபஞ்சப் பேறாற்றலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் பேறடைந்தார்.


***********************************************************************************************


அதுவரை நடந்து முடிந்த அத்தனை சம்பவங்களும் கண நேரத்தில் மழபாடியாரின் மனதில் வந்து போயின.

"வேறு விதமாக யோசி ! வேறு கோணத்தில் அணுகிப்பார் !"

"இப்படித்தான் ஏதாவது நடக்குமென்று அப்போதே அருள்மொழிவர்மரிடம் எச்சரித்தேன்...!" - பிஷுவின் வார்த்தைகள்....அப்படியெனில்..? முன்பே இது தீர்மானிக்கப்பட்டுவிட்டதா ? அதாவது... இப்படித்தான் நடக்கவேண்டுமென்றே அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டதைப்போலத் தெரியவில்லை?

"வேறு விதமாக யோசி !

இப்படித்தான் நடக்கவேண்டுமெனில் - எதிரிகளிடம் நாம் சுமந்துவந்த ஓலைகள் நம்பகமான முறையில் அகப்பட்டேயாகவேண்டுமெனில்....நிச்சயம் பல முன்னேற்பாடுகளைச் செய்துதானாகவேண்டும். முறிகளை வழக்கமான ஓலைத்தூக்கிகளிடமோ ஒற்றர்களிடமோ அனுப்பாமல் அனுபவம் அற்றவர்களிடம் - அடையாளம் எளிதாகக் காணப்படக்கூடியவர்களிடம் அனுப்பியாக வேண்டும். அடையாளம் ! ஆஹா... இதனை எவ்வாறு நாம் சிந்திக்கத் தவறினோம் ?? மணியனார் சற்றே சிவந்த மேனியர் - நாமோ மாநிறம். தனியொருவராக நானோ அவரோ சென்றிருந்தால் அடையாளம் காண்பது கடினம். ஆனால் இருவராகச் சேர்ந்து - அதிலும் பிரபலமான இராஜபாட்டையில் உயர்ஜாதி அரேபியப் புரவிகளில் ஒருசேரப் பயணித்தால் - நாம் சென்ற பாதையை விசாரித்து அறிவது அத்தனை கடினம் அல்லவே ? அடக் கடவுளே ! இதற்காகத்தான் நாகைக் கடகத்திலிருந்து அவசர அவசரமாக இந்தப் பணிக்காக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டோமா ??? இதற்காகத்தான் பிஷு கண்டிப்பாக இருவரும் சேர்ந்தேதான் பயணம் செய்யவேண்டுமென்று நாகையில் கூறினாரோ ??

தொண்டியில் நம்மைப் பிடிக்க முயன்றவர்கள் எதிரிகள்தான்... அத்தனை துல்லியமாக நம்மை அந்த சத்திரத்தில் அவர்கள் பிடித்ததும் சாத்தியம்தான். ஏனெனில், நாம் அங்குதான் தங்கப்போகிறோம் என்கிற செய்திதான் பிஷுவிற்குத் தெரியுமே ! ஏதோ இரகசியச் செய்தியைக் கசியவிடுவதைப்போல் ஒற்றர்களின் மூலம் அவரே நமது இருப்பிடத்தை எதிரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கலாம். பின் நம்மைக் காப்பாற்ற முயன்றது எதற்காக ? ஒருவேளை.... அப்போதுதான் இவை நிஜமாகவே மிக முக்கியமான ஓலைகள் என்பதை எதிரிகள் நம்புவார்கள் என்பதற்காகவா ? ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது - அதாவது, பிஷு நம்மைக் காப்பாற்றினாரே தவிர அந்தச் சத்திரத்திலிருந்த ஒருவரிடமும்.. ஏன், அந்த அடியாட்களிடம்கூட... தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. எதிரிகள் ஏதோ நாம்தான் அவர்களின் ஆட்களைப் பொறுத்திருந்து தாக்கி வீழ்த்திவிட்டதாக நினைக்கக்கூடும். அப்படியெனில்....? பிஷு நம்முடன் சம்மந்தப்பட்டிருப்பது எதிரிகளுக்குத் தெரியாது. தெரியக்கூடாது. ஏனெனில் ??? நானும் கம்பன் மணியனாரும் இந்த நாடகத்தில் அத்தனை முக்கியப் பாத்திரங்கள் அல்லர். முக்கியமானவர் இந்த பிஷு ஒருவரே ! இதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் கற்பிக்க முடியும்.... அதாவது....

பரமன் மழபாடியார் நிமிர்ந்த அந்தக் கணத்தில் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டிருந்த கம்பன் மணியனார் வாளை உருவி பிஷுவின் காலடியில் வைத்தார். மண்டியிட்டார்.

"தேரரே ! நான் வெறும் வீரன். எதிரிகளைப் போர்க்களத்தில் நேருக்கு நேராக சந்திப்பதே எனது பணி. இந்த ஒளிவு-மறைவுத் தாக்குதல்களெல்லாம் எனக்குப் புதியவை. பழக்கமற்றவை. என்னுடைய பணியில் நான் தோற்றுவிட்டேன் என்பதை முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தோல்வியை வெற்றியாக மாற்றுவேன். அந்தப் பண்டிதனைத் தேடி இரவோடிரவாகக் குருகூர் செல்வேன். உலகின் எந்த மூலையில் அவன் ஒளிந்துகொண்டிருந்தாலும் அவனைப் பிடித்து உங்கள் காலடியில் ஒப்படைப்பேன. இந்தப் பணியில் ஒருவேளை நான் தவறுவேனாகில் இதே வாளால் எனது சிரத்தை அரிந்து கொற்றவைக்குப் படைக்கிறேனென்று என் வாளின் ஆணையாக....."

ஓங்கி உயர்ந்த மணியனாரின் வலது கரத்தை மழபாடியார் அப்படியே தாங்கிப் பிடித்தார் - "சத்தியம் செய்து விடாதீர்கள் ! பின் பிஷுவும் பேரரசரும் இதுவரை பட்ட பாடு வீணாகிவிடும் - பலமணி நேரம் சிந்தித்துத் தீட்டப்பட்ட திட்டம் வீணாகிவிடும். இதோ ! இதுவரை நம்மை மிரட்டிக்கொண்டிருந்த தேரரின் முகம் அஷ்ட கோணல்களையும் அடைந்திருப்பதைப் பாருங்கள்....."

பிஷு ஆனந்த தேரர் ஆச்சரியத்துடன் மழபாடியாரை நோக்கினார் - "எ...என்ன சொல்ல வருகிறீர்கள் ?"

மழபாடியார் அந்த நிலையிலும் தைரியமாகச் சிரித்தார் - "ஆனாலும் இத்தனை தூரத்திற்கு எங்கள் இருவரையும் விளையாட்டு பொம்மைகளாக்கியிருக்க வேண்டாம் ! நடந்தவற்றைச் சொன்னால் என்னுடைய நண்பரால் அதனைத் தாங்கிக்கொள்ளவே முடியாது !"

மழபாடியாரின் சொற்கள் கம்பன் மணியனாரைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்தின - "பரவாயில்லை - சொல்லுங்கள் ! ஏற்கனவே மிகவும் மனம் நொந்து போயிருக்கிறேன். மேற்கொண்டு என் மனதைப் புண்படுத்தும் வகையில் எதுவும் கூறிவிட வேண்டாம் !"

"எதற்காக நொந்து போக வேண்டும் மணியனாரே ! நம்மை அனுப்பி வைத்த காரியம் நல்ல முறையில் நிறைவேறிவிட்டது - அதற்காக மகிழ்வதுதானே நியாயம் ?"

"நீங்கள் பூடகமாகப் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! சற்றே விளக்கமாகச் சொல்வீர்களா ?"

"இந்த விவகாரத்தில் முதலிலிருந்தே எனக்குப் பல சந்தேகங்கள் இருந்தன - அவற்றுக்குத் தெளிவான விளக்கங்கள் இதுவரை கிடைக்கவேயில்லை. இன்றுதான் மாயை விலகியது - வெளிச்சம் பிறந்தது. மணியனாரே ! மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த பிஷுவும் பேரரசருமாகச் சேர்ந்து நம்மிருவரையும் பகடைக்காய்களாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்..."

"பகடைக்காய்களா ? என்ன சொல்கிறீர்கள் ?"

"ஆம் ! உங்களிடம் கொடுக்கப்பட்ட முறிகள் தவறான நபர்களுக்குத் தவறான செய்திகளுடன் எழுதப்பட்ட பொய்யான ஓலைகள். எதிரிகளின் கைகளில் சிக்கவேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட ஓலைகள். இந்த நாடகத்தை உண்மையென்று நம்பவைக்கத்தான் நீங்களும் நானும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஒற்றர்களிடமோ ஓலைத்தூக்கிகளிடமோ கொடுத்தனுப்பவேண்டிய ஓலைகளை உங்களிடம் கொடுத்ததும், உங்களைத் தனியாக அனுப்பாமல் கூடவே என்னையும் சேர்த்துவிட்டதும்கூட அந்த நாடகத்தின் ஒரு பகுதிதான். ஒரு குருடன்கூட நாம் சென்ற பாதையை விசாரித்துப் பின்தொடர்ந்துவிடலாம்.... என்ன தேரரே, நான் சொல்வது சரிதானா ?"

பிஷுவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது - ஆச்சரியமும் மெல்லிய மகிழ்ச்சியும் அதில் தெரிந்தன. "மேலே சொல்லுங்கள் !" என்றார் அவர் மெல்ல.

"தொண்டியில் நாம் சரியாக அடையாளம் காணப்படவேண்டும் என்பதற்காகவே குறிப்பிட்ட சத்திரத்தில் தங்கவைக்கப்பட்டோம். நாம் இரகசியமாக இராஜாங்க ஓலைகளைச் சுமந்து செல்கிறோம் எனும் செய்தி அடுத்ததாக எதிரிகளுக்கு ஏதோ ஒரு முறையில் தெரிவிக்கப்பட்டது. அது இன்னதென்று இன்னமும் எனக்கு விளங்கவில்லை. திட்டமிட்டபடியே எதிரிகள் ஒரு திருட்டு நாடகத்தை நடத்தி நம் ஓலைகளைக் கவர முயன்றார்கள் !"

"அப்போது இவர் எதற்காக நம்மைக் காப்பாற்ற வந்தார் ? எதிரிகள் ஓலைகளை அபகரித்துக்கொண்டு செல்லட்டும் என்று விட்டுவிட வேண்டியததானே ?"

"நல்ல கேள்வி ! இந்த நாடகம் முற்றிலும் நம்பகத் தன்மை வாய்ந்ததாக நடைபெறவேண்டுமெனில் எதிரிகள் நமது ஓலைகளை எளிதில் கைப்பற்றிவிடக்கூடாது. அது மிக முக்கியம். ஒன்றைக் கவனித்தீர்களா ? பிஷு நம்மை அங்கே சொல்லிவைத்ததைப் போல் சரியான நேரத்தில் காப்பாற்றினாரே தவிர தொடர்ந்து நம்முடன் பயணப்படவே இல்லை..... நம்மை நிலவழியில் விட்டுவிட்டு அவர் நீர்வழியைப் பின்பற்றினார். ஏனெனில், எதிரிகளின் கவனம் நம்மீது முழுவதுமாகப் படிந்திருந்தால் அவரை ஒருவரும் கவனிக்கமாட்டார்கள் இல்லையா ? என்னுடைய யூகங்கள் சரியெனில் உண்மையான ஓலைகளைக் கொண்டு செல்வது நாமல்ல - இந்த தேரர்தான் !"

"காம்போஜத்துக் கப்பலில் இவர் பிரயாணம் செய்கிறார் என்று கொற்கையில் நமக்கு வழிகாட்டிய பிஷு புகன்றதும் நானும் சிறிது குழம்பிவிட்டேன். சில நாட்களுக்கு முன்னர்தானே இவர் நமது தாய்மண்ணில் கால்பதித்தார் அதற்குள் பிரயாணமா ?.....ஆஹா ! ஒருவேளை அவ்வாறு இருக்குமோ ? " - வாய்பிளந்து நின்றுவிட்டார் மணியனார்.

"எ...என்ன சொல்கிறீர்கள் ? - இப்போது மழபாடியார் சற்றே குழப்பமடைந்தார்.

"இந்தத் திட்டத்தின் சூத்திரதாரி யார் என்பது இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது. நீங்கள் குறிப்பிட்டதைப்போல் பிஷுவோ பேரரசரோ இந்தத் திட்டத்தைத் தீட்டவில்லை. அந்தப் பெருமையை இவர்களுக்குக் கொடுக்காதீர்கள் ! இதன் சூத்திரதாரி கொற்கைக் கடலில் நங்கூடம் பாய்ச்சி நிற்கும் அந்த மாகலத்தில் இருக்கிறார் !"

(தொடரும்)

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter