காந்தளூர்க் களரி
அந்த நீண்ட கூர்மையான வாட்களிரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டிருந்தன. கண நேரம் அசந்தாலும் ஒன்று மற்றதைத் தாக்கி வீழ்த்திவிடக்கூடும்... ஆனால் அதற்கு இடங்கொடாமல் அந்த வாட்களைப் பிடித்திருந்த கரங்கள் எச்சரிக்கையோடு மோதலை எதிர்பார்த்துக் காத்திருந்தன.
முதல் தாக்குதலை யார் நிகழ்த்தப்போவது என்னும் எதிர்பார்ப்பு காற்றில் இருந்தது.
ஒரு வாள் காந்தளூர்ச் சாலையின் மூத்த ஆச்சாரியரான திருநாராயண பட்டதிரியின் இடது கரத்தில் திகழ்ந்தது. அவருடைய வலது கரம் பெரியதொரு மரக் கேடயத்தைப் பிடித்திருந்தது. வாள் பிடித்த கரத்தை சற்றே முன் நீட்டி, கேடயம் தாங்கி நிற்கும் கரத்தை பின்வைத்து இடது காலை உறுதியுடன் பூமியில் முன் ஊன்றி நிற்கும் அவரது அஸ்வ வடிவு(129) நிலையை கூடிநின்ற மாணவர்கள் வியப்புடனும் மரியாதையுடனும் நோக்கி நின்றார்கள். இச்சிறுவர்களை நாம் சில காலத்திற்கு முன் திரு அனந்தபுரத்தின் காந்தளூர் மகாதேவர் திருக்கோயில் மைதானத்தில் சந்தித்தது நினைவிற்கு வருகிறது.
(129) நிற்கும் நிலை வடிவு என்னும் சொல்லால் குறிப்பிடப்படும். கஜ வடிவு, ஸிம்ஹ வடிவு, சர்ப்ப வடிவு என்று பல வடிவுகள் உண்டு
திருநாராயண பட்டதிரிக்கு எதிராக தைரியமாக வாள்பிடித்து நிற்கும் மனிதரை நாம் முதல் முறையாகக் காண்கிறோம்.
இவர் இளைஞர். சிவந்த மேனியர். பிராயம் முப்பதிலிருந்து நாற்பதுக்குள் இருக்கலாம். நீண்ட சிகை நன்றாக இறுக்கிப் பின்புறம் மடிக்கப்பட்டிருக்க, நெற்றி நிறைய சந்தனமும் திருநீறும் அப்பிக் கிடந்தன. முகத்தில் அடர்த்தியான தாடி, மீசை. சிவந்து நிற்கும் கண்கள் ஏறக்குறைய வெறியேறிக் கிடந்தன. கழுத்தில் பெரியதொரு ருத்திராட்ச மணி துலங்க, மார்பின் குறுக்கே முப்புரிநூல் ஓடியது. உறுதியாக இடையில் இறுக்கப்பட்டு பின்புறம் மடித்துக் கட்டப்பட்ட வெண்ணிற ஆடை அவருடைய தோற்றத்தின் கம்பீரத்தைப் பன்மடங்கு உயர்த்திக் காட்டியது. இவரது முக ஜாடை ஏறக்குறைய பட்டதிரியை ஒட்டியிருந்தாலும் அவரினும் இளைமையாகத் துலங்கும் இந்த வீரர் யாராயிருக்கக்கூடும் என்னும் வியப்பு மேலிடுகிறது.
இவர்கள் இருவரும் நிற்கும் இடமானது சற்று வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். பூமியின் மட்டத்திலிருந்து ஏறக்குறைய நான்கு அடிக்குப் பெரியதொரு பள்ளம் தோண்டப்பட்டிருக்க, அந்தப் பள்ளத்தின் மத்தியப் பகுதியில்தான் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இதனைப் பள்ளம் என்று சொல்வதை விட நீண்ட பெருங்குழி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் - ஏனெனில் குழியின் நீள அகலங்கள் ஏறக்குறைய நாற்பத்தியிரண்டு அடிக்கு இருபத்தியொரு அடியைத் தொட்டுவிடும்.
நீண்டிருந்த குழின் நாற்புறங்களிலும் ஏறக்குறைய நான்கு அடி உயரத்திற்கு மண்சுவர். சுவருக்கு மேல் மூங்கில் கழிகளால் அமைக்கப்பட்டிருந்த குறுக்குச்சட்டங்கள் நாற்புறங்களிலும் எழும்ப, உயரே தென்பட்ட மர உத்தரங்களுக்கு மேல் தென்னை ஓலைகளால் வனையப்பட்டிருந்த கூரை.
குழியின் தென் மேற்கே ஈசான மூலையில் பெரியதொரு மேடையைக் காண்கிறோம். அதில் பல அடுக்குகள் தென்படுகின்றன. அந்த அடுக்குகள் ஒவ்வொன்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, அதன் பக்கமாக ஒரு சில ஆயுதங்களும் சாற்றி வைக்கப்பட்டுள்ன. இந்த இடத்தின் வித்தியாசமான அமைப்பை நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லையே ?? ஒரு வேளை.... ஒரு வேளை.... இது காந்தளூர்ச் சாலையின் மிகப் புனிதமான இடமாகக் கருதப்படும் குழிக்களரியாக(130) இருக்குமோ?
(130) கேரளத்தின் குழிக்களரிகள் அன்றிலிருந்து இன்றுவரை இதே மரபில்தான் வடிவமைக்கப்படுகின்றன
மேற்கொண்டு இந்த இடத்தைப் பற்றி யோசிப்பதை சற்று நிறுத்திக்கொள்வோம். ஏனெனில், இந்தச் சிறு நேர இடைவெளியில், காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்துவிட்ட அந்த இளைஞர், தன்னுடைய பிடிவாளால் பட்டதிரியைத் தாக்கத்துவங்கிவிட்டார்....
காற்றில் பளீர் பளீரென்று நெருப்புப் பொறிகள் கிளம்பின. சளார் ! சளார் ! பளார் ! பளாரென்று என்று இரண்டு வாட்களும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் சப்தம் அந்தப் பிராந்தியத்தையே ஒரு உலுக்கு உலுக்கிற்று. இளைஞர் ஆவேசமாகத் தாக்கினாலும் அந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சுபவரா என்ன பட்டதிரி ? மிக இலாவகமாக அந்தத் தாக்குதல்களை எதிர்கொண்டார்.
ஒவ்வொரு முறையும் இளைஞர் தன்னுடைய சக்தியையெல்லாம் பிரயோகித்து பட்டதிரியின் வாளைக் காற்றில் பறக்கவைக்க முயல்வதும் பட்டதிரி அவரது சக்தியை ஏதோ ஒரு திசையில் திருப்பி விரயமாக்குவதுமாகவே கழிந்தது. இளைஞர் அதனை நன்றாக உணர்ந்தவராகவே காணப்பட்டார் - என்றாலும் தொடர்ந்து பட்டதிரியின் வாளை வீழ்த்தும் முயற்சியை அவர் கைவிடவில்லை. இந்த முறை இல்லையென்றால் அடுத்த முறை என்னும் மனவுறுதி அவரது முகத்தில் தெரிந்தது.
தாக்குதல் மிகக் கடுமையாகிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் பூமியிலிருந்து ஒரு ஹூங்காரத்துடன் வானில் எழும்பி, அந்தரத்தில் மோதிக்கொண்டார்கள் ! சில சமயங்களில் இளைஞர் மட்டும் வானில் பறந்து தாக்க, பட்டதிரி பூமியில் கால்களை அரை மண்டி நிலையில் மடக்கி வட்டச் சுவடடித்தபடியே(131) அவரை எதிர்கொண்டார். நடந்த அத்தனை தாக்குதல்களிலும் இளைஞர் வாளை அதிகம் உபயோகப்படுத்தினாரென்றால் பட்டதிரி கேடயத்தையே அதிகம் நம்பியிருந்தார். எத்தனையோ உக்கிரத்துடன் பலப்பல வழிகளில் முயன்றும் பட்டதிரியின் வாளை வீழ்த்த முடியவில்லை.
(131) கால் வைக்கும் நிலை களரி பரிபாஷையில் சுவடு எனப்படும்.
நேரம் செல்லச் செல்ல இளைஞரின் கரங்களில் ஆவேசம் குறைந்தாற்போல் காணப்பட்டது. எத்தனை ஆற்றல் மிக்கவராக இருந்தாலும், ஒரு கட்டத்தில் சக்தி முழுவதும் செலவழிந்துபோய் கரங்கள் பலவீனப்படும் நிலை ஏற்படுமல்லவா ? அந்த நிலைதான் அவருக்கு ஏற்பட்டது. அவருடைய கணநேர பலவீனத்தையும் மனத்தளர்ச்சியையும் எப்படியோ கண்டறிந்துவிட்ட ஆச்சாரியார் திருநாராயண பட்டதிரி, இதற்காகவே காத்திருந்ததுபோலும் தன்னுடைய வாளை சரேலென்று ஒருவரும் எதிர்பாராத கணத்தில் குறிப்பிட்ட விசையோடு பாய்ச்சினார் !
இளைஞர் அவருடைய தாக்குதல் இன்னதென்று சுதாரித்துக்கொண்டு தன்னைத் தற்காத்துக்கொள்ள முயல, பிரயோகிக்கப்பட்ட சக்தி முழுவதும் இளைஞரின் வாளில் பாய்ந்து, அது உக்கிரமானதொரு சப்தத்துடன் இரண்டாகப் பிளந்து வீழ்ந்தது ! அது மட்டுமல்ல... பட்டதிரியின் வாள் நுனி அவரது மார்பிலும் மெல்லிய கீறலை ஏற்படுத்திவிட்து.
கூடிநின்ற சிறுவர்கள் இயல்பாகக் கைதட்டத் துவங்கினார்கள். ஆனால் அடுத்த கணமே ஆச்சாரியாரின் கண்களிலிருந்து பொங்கிய கனலைக் கண்டு அதனை பயத்துடன் நிறுத்திக்கொண்டார்கள்
இளைஞர் வாளின் பிடியைத் தூர வீசிவிட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கத் தோல்வியில் கண்மூடி மண்டியிட்டு நின்றார். அவருடைய தலை துவண்டு குனிந்தது.
"வாமனா ! மிக அற்புதமாகப் போரிட்டாய்... வருத்தப்படவேண்டிய அவசியமே இல்லை ! அந்த வாள் உன் கால்களை வாரிவிட்டுவிட்டது - அதற்கு நீ என்ன செய்வாய் ?" - பட்டதிரி அந்த இளைஞரை எழுப்பி அவரின் தோள்களை வாஞ்சையுடன் கட்டித் தழுவினார்.
"நான் மிகவும் நேசித்த வாள் அண்ணா அது ! சிறுவயது முதல் அதனைப் பேணி வந்திருக்கிறேன் - அதுவே உங்களின் தாக்குதலைத் தாங்கமுடியாமல் பிளந்துவிட்டதே என்பதுதான் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது !"
"தம்பீ ! இன்றைக்கு நான் பிரயோகித்த வீச்சு சற்று விசேஷமானது. "நரசிம்ஹப் பிரயோகம்" என்று இதற்குப் பெயர். நானே இதனைப் பலகாலமாக உபயோகித்ததில்லை. உடலின் ஜீவசக்தி மற்றும் மனதின் பிராணசக்தி - இந்த இரண்டையுமே சரிவிகிதத்தில் உபயோகித்து மிக நுட்பமாக எச்சரிக்கையுடன் பிரயோகிக்க வேண்டிய வீச்சு இது. சற்று தவறினாலும் இது ஏவிவிட்டவனையே பதம் பார்த்துவிடும் !
நான் சாலையில் படிக்கும் காலத்தே ஏறக்குறைய இருநூறுபேர் - நான்கு நான்கு கலங்களாக(132) - எங்கள் ஆச்சாரியாரிடம் பயிற்றிருப்போம். அப்போது நான் தைத்திரிய சரணத்தாரின் (133) தலைவனாக இருந்தேன். அந்த இருநூறு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கே மாணவர்களுக்குத்தான் அவர் இதனைச் சொல்லிக்கொடுத்தார். மரணப் படுக்கையில் அவர் இந்தப் பிரயோகத்தைச் சொல்லிக்கொடுத்துவிட்டு எங்கள் நால்வரையும் எச்சரித்தது மறக்க முடியாமல் மனதில் பதிந்திருக்கிறது.... "நாராயணா ! இது மிக மிக நுட்பமானதொரு பிரயோகம். தகுந்தவர்களுக்கு மட்டும்தான் இதனை சொல்லிக்கொடுக்கவேண்டும். இல்லையேல் பெரும்பாவம் வந்துசேரும் ! எச்சரிக்கையோடு இரு...."
நான் என்னுடைய ஆயுட்காலத்தில் ஒருவருக்கு மட்டும்தான் அதனை போதித்தேன் - அதுவே பெருவினையாக முடிந்தது. நரசிம்ஹப் பிரயோகத்தின் விசேஷம் என்னவென்றால்....."
(132) கலங்கள் - பிரிவுகள் (133) தைத்திரிய சரணத்தார் என்பது கலங்களில் ஒரு பிரிவு. பார்க்க ஆய்வேளரசர் கோக்கருந்தடக்கரின் பார்வதிசேகரபுரச் செப்பேடு
குழியின் கிழக்கு திசையில் அமைந்திருந்த குடிசை வாயிலில் நிழலாட - பட்டதிரியின் பேச்சு தடைபட்டது.
"ஆச்சாரியாருக்கும் நம்பூதிரிக்கும் வணக்கங்கள் ! தடங்கலுக்கு மன்னிக்க வேண்டும்.. பார்வதிசேகரபுரத்திலிருந்து தகவல் வந்திருக்கிறது. தமையனாருக்கு மீண்டும் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது போலிருக்கிறது.... தங்களையும் தம்பிமார்களையும் உடனடியாக அழைத்து வரும்படி ஆக்ஞை !"
பட்டதிரியின் முகம் எல்லையில்லாத மனவேதனையை ஒரு கணம் வெளிப்படுத்திற்று. அடுத்த கணமே சமாளித்துக்கொண்டவராய் "வாமனா ! அச்சுதனையும் உடன் கூட்டிக்கொண்டு விரைவாகக் கிழக்கு வாயிலுக்கு வந்து சேர் ! சட்டர்களே - இன்றைய பயிற்சி முடிந்தது. அனைவரும் களரியை விட்டு அமைதியாக நீங்கி விடுதிக்குச் செல்லுங்கள் ! நாளை மீண்டும் சந்திப்போம்...." என்று உத்தரவிட்டுவிட்டு விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு வெளியேறினார் அவர்.
வாமனன் என்று ஆச்சாரியாரால் ஒருமையில் அழைக்கப்பட்ட வாமனன் நம்பூதிரி என்ற அந்த இளைஞர் தன்னுடைய உடைந்த வாளையும் அண்ணனின் வாளையும் மிகுந்த மரியாதையுடன் களரியின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, கலைந்து செல்லும்படி சிறுவர்களுக்குக் சைகை காண்பித்தார். அவர்கள் தத்தம் கலத்து மாணவர்களுடன் ஒரு வரிசையை ஏற்படுத்திக்கொண்டு மெல்ல வெளியேறினார்கள். அனைவரும் வெளியேறியபின் அவர் ஒரு பெருமூச்சுடன் களரியை விட்டு வெளியே வந்து நின்று ஒரு கணம் சுற்றுவட்டாரத்தை நோக்கினார். அவரது விழிகளின் வழியே நாமும் அந்த சுற்றுப்புறங்களை நோக்கி நிற்கிறோம்....ஆஹா ! இதுதான் காந்தளுர்ச் சாலை என்று தென்னாடு முழுவதும் அறியப்பட்டிருக்கும் கல்வி கேந்திரமா என்ன ?
அந்தக் குடிசைக்கு வெளியே விரந்து பரந்திருந்த பெரியதொரு மைதானத்தில் பல்வேறு பிராயத்து இளைஞர்கள் வரிசை வரிசையாக வெவ்வேறு உடற்பயிற்சி முறைகளில் குழுக்களாக ஈடுபட்டிருந்தார்கள். நாகைக் கடகத்தில் நாம் கண்ட குழுப்பயிற்சிக் காட்சிகளுக்கும் இங்கே நாம் காணும் காட்சிகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் தென்படுகின்றன. நாகைக் கடகத்தில் வீரர் குழுக்கள் தனித்தனியே மல்யுத்தம், சிலம்பம், வாள்சண்டை முதலான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார்களென்றால் இங்கோ இளைஞர்கள் நான்கே பிரிவுகளாகத்தான் பிரிந்து நின்றார்கள். கடகப் பயிற்சியில் ஆயுதங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் இங்கோ ஆயுதங்களை அதிகமாகப் பயன்படுத்தாமல் கைகளையும் கால்களையும் பல்வேறு நிலைகளில் உயர்த்தியும் மடக்கியும்தான் பயிற்சி செய்கிறார்கள் (134). இவர்களனைவரும் பயின்றுகொண்டிருப்பதுதான் தொடு வர்மம், படு வர்மம், தட்டு வர்மம் என்று பல்வேறு பிரிவுகளைக் கொண்ட தென்னகத்தின் மிகப்பழமையான "வர்மக் கலை" போலும் !
(134) மலைநாட்டுக் களரிப் பயிற்சி முறையை வடக்கத்திய முறை, தெற்கத்திய முறை என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். வடக்கத்திய முறையில் ஆயுதப் பயன்பாடு அதிகம் - ஆனால் தெற்கே அது கிடையாது. தெற்கத்திய முறை மலைநாட்டின் தென்பகுதிகளில் - குறிப்பாக வேணாடு, அனந்தபுரம், வள்ளுவநாடு, நாஞ்சில் நாடு முதலான பகுதிகளில் அதிகம் பயிற்றுவிக்கப்பட்டது.
மைதானத்திற்கு வடக்கிலும் தெற்கிலுமாய் நீண்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகள் தெரிகின்றன. அவை பெரும்பாலும் மண் கட்டிடங்களாக விளங்காமல் கேரளத்திற்கே உரித்தான மரக் கட்டுமானங்களாகத் திகழ்வதைக் காணமுடிகிறது. மைதானத்திற்குக் கிழக்கே நீண்டிருக்கும் மதிலுக்கு மத்தியில் சாலையின் முக்கிய வாயில் அமைந்திருப்பதையும், அந்த வாயிலுக்கு மேல் மலைநாட்டுப் பாணியில் ஒரு நிலை கோபுரம் எழுவதையும் கண்டு களிக்கிறோம்.
மைதானத்தின் தென் மேற்கே அக்னி மூலையில் அமைந்திருந்த களரியின் வாயிலில் நின்றுகொண்டு இக்காட்சிகளைக் கண்ணாரக் கண்ட வாமனரின் பார்வை அவர் நின்ற திசைக்கு நேர் எதிரே வடகிழக்கு மூலையில் படிந்தது. அங்கே ஒரு மாணவர் குழுவிற்கு மத்தியப் பிராயத்திலிருந்த இளைஞரொருவர் பயிற்சியளித்துக்கொண்டிருந்தார். ஆச்சாரியார் குறிப்பிட்ட அச்சுதன் ஒருவேளை இவராகவே இருக்கக்கூடும்.
வாமனர் நேராக அவரை நோக்கி நடக்கத் துவங்கினார். அவர் மைதானத்தைக் கடக்கும்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்களும் அவர்களைப் பயிற்றுவித்துக்கொண்டிருந்த ஆசான்களும் மரியாதையுடன் தலைவணங்குவதிலிருந்து வாமனருக்கு சாலையில் செல்வாக்கு மிகுந்திருப்பது புலனாகின்றது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞரை நெருங்கி வாமனர் ஏதோ புகன்றதில், அவர் மாணவர்களுக்கு ஒருசில உத்தரவுகள் இட்டுவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பினார்.
சிறிது நேரத்தில் மூன்று புரவிகள் சாலையின் வாயிலிருந்து கிளம்பி நாஞ்சில் நாடு அமைந்திருந்த தென் திசையில் வேகமாகப் பயணிக்கத் துவங்கின.
(தொடரும்)
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|