www.varalaaru.com
A portal for
South Indian History
 
73 இதழ்கள்...
1009 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
சேரர் கோட்டை
அத்தியாயம் 35

இத்தொடரின் இதர அத்தியாயங்கள்
இதுதான் வாழ்க்கை !


மேற்கு வானில் கதிரவன் மெல்ல மெல்லச் சாய்ந்துகொண்டிருந்தான்.

அவன் வானில் தீட்டியிருந்த செஞ்சாந்துச் சித்திரத்துக்கு இணையாக அதுவரை பூமியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்துகொண்டிருந்த சிதையின் நெருப்பு மெல்ல மெல்ல அவிந்து அடங்கத் துவங்கியிருந்தது. அக்கினி பகவான் தனக்கு இரையாக்கப்பட்ட அந்த மனித உடலை எந்தப் பற்றுதலுமின்றி சிறிது சிறிதாக உள்வாங்கிக்கொண்டிருந்தான். எத்தனையோ ஆசைகளை - அபிலாஷைகளை - இன்பங்களை - துன்பங்களை - எதிர்பார்ப்புக்களை - ஏமாற்றங்களை - நம்பிக்கைகளை - துரோகங்களை - எண்பது வருடங்கள் பார்த்துப் பார்த்து அனுபவித்த அந்த உடல், மெல்ல மெல்லச் சாம்பலாகிக்கொண்டிருந்தது.

"இதுதான் வாழ்க்கை. இதுதான் மரணம். இதுதான் அநித்தியம். இதுதான் சூனியம். ஒன்றுமில்லாத பரவெளி. பிரபஞ்சம். எல்லையில்லாததொரு நீர்ப்பரப்பின் சிறு குமிழிதான் உன்னுடைய மனித வாழ்க்கை ! ஆகையால், மனிதா.... இங்கே எதையும் சேர்ப்பதற்கு அவசியமேயில்லை. ஏனெனில் கொண்டு செல்லப்போவது ஒன்றுமில்லை. உன்னுடைய கஷ்டங்களும் கவலைகளும் வாழ்க்கையின் அநித்தியத்துக்குமுன் அற்றமற்றதாகிவிடுவதை நீ உணரவில்லையா ? எதற்காக நீ அழுகிறாய் ? எதற்காக சிரிக்கிறாய் ? இரண்டுமே வேடிக்கையாகத் தெரியவில்லை ?" என்றெல்லாம் அவிந்துகொண்டிருந்த அந்த நெருப்பின் நாவுகள் உலகத்தாருக்கு உபதேசிப்பதைப்போன்றதொரு பிரமை நமக்கு உண்டாகிறது.

அந்தப் பூவுடலுடன் வைத்து எரிக்கப்பட்ட அகில் மற்றும் சந்தன மரங்களின் வாசம் காற்றில் கும்மென்று வீசியது. என்றாலும் மனதிற்குக் கனமான அந்தச் சூழலின் தன்மை காரணமாக நறுமணத்தின் இனிமையை நம்மால் இரசிக்க முடியவில்லை. ஏனோ மனமெங்கிலும் ஒரு பாரமாகவே தோன்றுகிறது. எதையும் பேசத்தோன்றவில்லை.

எரிந்துகொண்டிருந்த சிதைக்கு சற்று தூரத்தே தென்பட்ட சிறு நதியின் கரையில், ஒரு பாறையின்மேல் பட்டதிரியும் அவரது தம்பியர் இருவரும் பக்கத்திற்கொருவராக அமர்ந்திருந்தார்கள். அவர்களின் மனோநிலையும் ஏறக்குறைய நம்முடைய மனோநிலையையே ஒத்திருப்பதைப்போல் காண்கிறது. நீண்ட நேரத்திற்கு ஒருவரும் ஒருவருடனும் பேசமுயற்சிக்கவில்லை.

கடைசியில் ஒரு வழியாகப் பாறையிலிருந்து மண்ணில் கால்பதித்த வாமனர், பட்டதிரியின் தோளில் கைவைத்தார்.

"கிளம்பலாம் அண்ணா - மிகவும் நேரமாகிவிட்டது... நாளை காலையில் நாம் அனைவரும் சாலையில் இருந்தேயாகவேண்டும் !"

"இல்லை தம்பீ - கிளம்புவதற்குமுன் நான் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுள்ளது... நீங்கள் இருவரும் இப்படி என்முன் வந்து அமருங்கள் !"

தம்பியர் இருவரும் பாறையிலிருந்து எழும்பி முன்தெரிந்த புல்தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்தார்கள்.

"அண்ணனின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய படிப்பினையைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. நமக்கு அணுக்கமானவர்களுடன் - மிக நெருக்கமானவர்களுடன் - நமது அத்யந்த இரகசியங்களை ஒரு கட்டத்தில் பகிர்ந்துகொண்டுவிடவேண்டும். ஒருவருக்கும் கடைசிவரை தெரியவே கூடாது என்று நாம் நினைக்கும் விஷயங்களைத்தவிர மற்றவற்றை நல்லதொரு தருணத்தில் பகிர்ந்துகொண்டுவிடுவது நல்லது. ஏனெனில் மனிதவாழ்க்கை மிகவும் அநித்தியமானது. யாருக்கு எப்போது என்ன நேரும் என்பதைச் சொல்லவே முடியாது.....

அண்ணன் என்னிடம் ஒரு மிக முக்கியமான விஷயத்தை நேற்று வரை மறைத்துவிட்டார் என்று தெரிகிறது. மரணப் படுக்கையில்தான் அதனை என்னிடம் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று தோன்றியிருக்கிறது ! ஆனால் விதி அவரை முந்திக்கொண்டது - கடைசிவரை என்னிடம் அந்தச் செய்தியை அவரால் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை ! மிகப் பெரிய தவறு செய்துவிட்டோமே என்னும் எண்ணத்துடன்தான் அவர் போய்ச் சேர்ந்தார் !"

"என்ன அண்ணா சொல்கிறீர்கள் ! அவர் உங்களிடம் ஒரு விஷயத்தை மறைத்து வைத்தாரா... நம்பவே முடியவில்லையே !"

"ஆம் நம்பமுடியாத செய்திதான் - ஆனாலும் உண்மை. அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தப்பட்ட இரகசியமாக இருந்தால்கூட நான் கவலைப்படமாட்டேன். ஆனால் அது அப்படிப்பட்ட விஷயமல்லவென்று தோன்றுகிறது.... அதனால்தான் அவர் கூறிய அத்தனை செய்திகளையும் அது சம்மந்தமாக எனக்குத் தெரிந்த அத்தனை பின்னணித் தகவல்களையும் அதனுடன் பின்னிப் பிணைந்த என்னுடைய சொந்த வாழ்வின் சில நிகழ்வுகளையும் உங்களுடன் இன்றே பகிர்ந்துகொள்வதென்று முடிவு செய்துவிட்டேன்....!"

அச்சுதன் நம்பூதிரி முதல் முறையாக வாயைத் திறந்தார்.

"நீங்கள் கூறுவதும் சரிதான் அண்ணா ! உங்களின் மனோநிலை எங்களுக்குப் புரிகிறது..... அண்ணன் உங்களிடம் முக்கியமான விவகாரங்களை அத்தனை தூரம் மறைத்திருக்க வேண்டாமென்றுதான் எனக்கும் தோன்றுகிறது...."

"முதலில் ஒரு சில முடிவுகளை எடுப்பதும் பின்னர் அதற்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவதும்தான் அவருடைய பாணி. கடைசியில் அதே பாணியில்தான் அவரது முடிவும் அமைந்தது. கிடக்கட்டும். மலைநாட்டின் சாலை ஆசான்களும் ஆச்சாரியர்களும் பூவுடல் உகுத்துப் பொன்னுடல் பெற்று வாழும் வீர சொர்கத்தில் அவருக்கும் ஒரு இடம் நிச்சயம் இந்நேரம் கிடைத்திருக்குமென்பதில் ஐயமில்லை. மேற்கொண்டு ஆகவேண்டியதைச் சிந்திப்பதுதான் சிலாக்கியமானது... " என்று துவங்கிய பட்டதிரி, முதல்நாள் தமையனார் இறுதியாகக் கூறிய வார்த்தைகளையும் கடைசியில் எழுதிக்காட்ட முயன்ற வாக்கியத்தையும் முடிந்தவரை நினைவுகூர்ந்தார்.

வாமனரும் அச்சுதனும் வாயைப் பிளந்தவாறு அவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

"அவர் கூற வந்த விஷயம் மிகப் பயங்கரமானதாக இருக்கும் போலிருக்கிறதே அண்ணா ! எப்படியாவது நாம் அனைவரும் முயன்று அதனைக் கண்டறிந்தேயாக வேண்டும்.....!"

"நிச்சயமாக. ஆனால் சம்மந்தா சம்மந்தமில்லாமல் அவர் பேசிய பல வாக்கியங்களையும் என்னால் திருப்திகரமாக ஒரு இழைக்குள் கொண்டுவர முடியவில்லை. முதலில் தம்பிராட்டியைப் பற்றிப் பேசினார் - அவள் நம் குலத்தை வேரறுத்துவிடப் போவதாகக் கூறினார்.... பின் சட்டென்று பதினெட்டு வருடங்களுக்கு முன் ஒரு காரியத்தைச் செய்தேன் என்றார்.. அது என்னவென்று கூறவில்லை.... பின் அதற்கும் முற்பட்ட காலத்திற்குச் சென்று எங்களின் பயிற்சி ஆசானான இரவிநீலி பட்டதிரி மரணப் படுக்கையில் கூறிய சிலவற்றை நினைவுகூர்ந்தார்..... எல்லாவற்றுக்கும் நிறைவாக அவர் இறுதியாகச் சொல்லவந்த அந்த விஷயம்..... சரச.... அல்லது சரட.... தம்பிகளா ! என் மண்டை வெடித்துவிடும் போலத் தெரிகிறது !"

அந்த மூவரில் சற்றே நிதானம் மிக்கவரான வாமனர் தலைகுனிந்து கண்மூடி நீண்டதொரு சிந்தனையில் மூழ்கினார்.

இருள் முழுவதுமாகக் கவிந்துவிட்டிருக்க, வானில் தாரகைகள் வெளியே வரலாமா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தன. ஒரு சில அவரசக்குடுக்கை நட்சத்திரங்கள் அதற்குள் முணுமுணுக்கவும் ஆரம்பித்துவிட்டன. நதியிலிருந்து புறப்பட்ட வாடைக்காற்று சில்லென்று அவர்களது மேனியைத் தழுவிவிட்டு அவர்களது மேலாடைகளையும் செல்லமாக அவிழ்த்தெறிந்துவிட்டுப் போனது.

"அவர் முதலில் பிராட்டியைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறார் - ஆகையால் அதிலிருந்தே ஆரம்பிப்போம் அண்ணா !" என்ற வாமனர் ஒரு சில கணங்கள் இடைவெளி விட்டுவிட்டுத் தொடர்ந்தார்.... "உங்களின் தனிப்பட்ட இளவயது வாழ்க்கையைப் பற்றியோ திருமணம் பற்றியோ தம்பிராட்டியார் பற்றியோ இதுவரை நாங்கள் உங்களிடம் கேட்டதில்லையண்ணா... உங்களுக்கும் அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இதுவரை வாய்க்கவில்லை. அரசல் புரசலாக எங்களுக்கும் பல விவகாரங்கள் தெரியும். என்றாலும் உங்களின் திருவாயால் நடந்தவற்றைக் கேட்டறிவது அனைவருக்கும் நல்லதென்று தோன்றுகிறது.... ஆகையால் நீங்கள் தவறாக நினைத்துக்கொள்ளவில்லையென்றால்....."

"இதில் தவறாக நினைத்துக்கொள்வதற்கு என்ன தம்பீ இருக்கிறது ! கசப்பான சில பழைய நினைவுகளை அசைபோடுவதற்கு பயந்துகொண்டுதான் நான் அவற்றை உங்களுடன் இதுவரை பகிர்ந்துகொள்ளவில்லையே தவிர உங்களிடம் எதையும் மறைக்கவேண்டுமென்று ஒருபோதும் நினைத்ததில்லை.... தம்பிராட்டியாரைப் பற்றி நீங்கள் ஆதியோடந்தமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் என்னுடைய இளைமைக்காலத்தின் ஒரு சில ஏடுகளைப் புரட்டியாகவேண்டும்...ஆக, இனி நான் சொல்லப்போவதை கவனமுடன் செவிமடுப்பீர்களாக !"

பட்டதிரியின் பார்வை அவர்களுக்கெதிரே விரிந்த அந்த நதியைக் கடந்து வயல்கள் மரங்கள் செடிகொடிகளைக் கடந்து கீழ்வானவெளியின் இருட்டில் எங்கோ நிலையில்லாமல் குத்திட்டு நின்றது. அவரது மனமோ வாயுவேக மனோவேகமாகப் பலப்பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றது.

எத்தனையோ இன்ப துன்பங்களையும் எதிர்பாராத திடுக்கிடும் நிகழ்வுகளையும் ஏந்தி நின்ற அவரது இளவயது வாழ்க்கை இத்தனை காலத்திற்குப் பின் திரும்பிப் பார்க்கும்போது "நமது வாழ்விலா இத்தனையும் நடந்தன !" என்று அவருக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது.....

சற்று பயமாகக்கூட இருந்தது !

(தொடரும்)

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter