http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 74

இதழ் 74
[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வழிபாடிழந்த திருக்கோயில்கள்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 2
அழிவின் விளிம்பில் சோழர்காலக் கற்கோயில்
மிருதங்கம் - ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 2
அசையும் பாவை
இதழ் எண். 74 > பயணப்பட்டோம்
தமிழுடன் 5 நாட்கள் - 2
ச. கமலக்கண்ணன்
முதல்நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் முற்பகல் பொது அரங்கத்திலும் பிற்பகல் அவிநாசி சாலையில் 'இனியவை நாற்பது' ஊர்வலத்தைப் பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையிலும்தான். காலை சுமார் 9 மணியளவில் பொது அரங்கத்தினுள் நுழைந்தவுடன் அதிசயித்துப் போனோம். கிட்டத்தட்ட ஓர் அரண்மனையில் இருக்கும் கலைநிகழ்ச்சிக் கூடம் போலிருந்தது. மிக நேர்த்தியான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. குளிர்சாதன வசதி மட்டும் இல்லை. கோவைக்கு அது தேவையும் இல்லை. அரங்கத்தின் முன்பகுதியிலிருந்து பல பிரிவுகளாகப் பிரித்திருந்தார்கள். முதல் பிரிவில் அரசு உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் அவர்தம் குடும்பங்களும் அமர. அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள். அடுத்துப் பத்திரிகையாளர்கள். அவர்களுக்குப் பின்னர் ஊடக உபகரணங்கள். அதன் பின்னால் அறிஞர்கள். பின்னர் பொதுமக்களுக்கான இடம். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வழிகள். அதற்கேற்றாற்போல் பாதுகாப்பு ஏற்பாடுகள். அரங்கத்தினுள் எங்கிருந்து வேண்டுமானாலும் காணும்படி மேடையைநோக்கிய ஒளிப்படக் கருவிகளும் அவற்றை ஒளிபரப்பும் காட்சிப்பெட்டிகளும் (அருகில் நடக்கும் நிகழ்ச்சியை அருகில் இருப்பவர்களுக்குக் காட்டும் பெட்டிகளுக்குத் 'தொலை' தேவையா என்ன?) நிறுவப்பட்டிருந்தன. அங்கிருந்த காவலர்களிடம் விசாரித்தபோது, அரங்க ஏற்பாடுகள் தஞ்சை சிவா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனவாம்.

மேடைக்கு வரவேண்டியவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தவுடன் டாக்டர். சுதா சேஷைய்யன் அவர்கள் தன் இனிய குரலில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார். முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. ஏன் தமிழுக்காக நடத்தப்படும் ஒரு மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடாமல் தேசியகீதம் பாடப்பட்டது என்று அறிஞர்கள் மத்தியில் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டு, ஒருவேளை குடியரசுத்தலைவர் வந்திருப்பதால் அவ்வாறு இருக்கலாம் என்று சமாதானம் ஏற்பட்டு அடங்கியது. குடியரசுத்தலைவர் இருந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? தமிழர்கள் மட்டும் கூடும் இடத்தில் அவர்களுக்குள்ளேயே கள்ளக்காதல் போலப் பாடிக்கொள்ளவேண்டிய பாடலா அது?

தொடக்கவுரை, வரவேற்புரை எனச் சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு, துணை முதல்வர் பேசவந்தார். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் தமிழ்மொழியின் சிறப்புகளாகப் பட்டியலிருந்த தொன்மை, முன்மை, எண்மை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, தனிமை, இனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறு 'மை'களை வரிசையாக எடுத்துரைத்தபோது, அரங்கம் அதிர்ந்தது. அஸ்கோ பர்போலாவும் ஜார்ஜ் ஹார்ட்டும் தமிழில் பேச முயன்றும் பாரதியை மேற்கோள் காட்டியும் கைதட்டல்களை அள்ளிச் சென்றார்கள்.

முதல்வர் பேசி முடித்தவுடன் குடியரசுத்தலைவர் உரையாற்ற வந்தார். பேசி முடித்துச் சற்று நேரம்வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டம் மெதுவாக ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. அப்போதுதான் எல்லோரும் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள். பின்னாலிருந்து சீருடையணிந்த ஒரு கூட்டம் மேடையை நோக்கிக் கடலலை போல் வந்து கொண்டிருந்தது. பொதுமக்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் என்றெல்லாம் கடலலை பாகுபாடு பார்க்குமா என்ன? கிடைத்த இடங்களிலெல்லாம் புகுந்து துவம்சம் செய்து முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் சற்று ஆடித்தான் போனார்கள். நம்மவர்களுக்கே வியப்பாக இருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் பேசும்போது கூட்டம் ஒருவித ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருக்கும். இப்போது உணர்ச்சி பொங்கும் உரையும் ஆற்றப்படவில்லை. எதற்காக இந்த ஆர்ப்பரிப்பு? முன்னோக்கிச் சென்ற கூட்டம் ஓரிடத்தில் நின்று கையை உயர்த்தி ஆட்டிவிட்டுக் கலையத் தொடங்கியது. அது என்ன இடம் என்று பார்த்தபோதுதான் எல்லோருக்கும் புரிந்தது. கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவுக் கருவிகள் வைக்கப்பட்டிருந்த இடம்தான் அது. கையை ஆட்டிவிட்டு, பக்கவாட்டில் திரும்பிப் பார்த்துக் காட்சிப்பெட்டியில் தெரிகிறதா என்று உறுதி செய்துகொண்டபோதுதான் கூட்டம் முன்னோக்கிச் சென்ற ஆர்வத்துக்கான காரணம் தெரிந்தது.

தொடக்கவிழா முடிவடைந்தபின்னர், பொதுமக்களுக்குக் கொடிசியா வளாகத்துக்கு வெளியேயும் அறிஞர்களுக்கு உள்ளேயும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த உணவரங்கங்களுக்கு அவரவர்கள் வைத்திருந்த அழைப்பிதழ்கள் மற்றும் அடையாள அட்டையின் வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். உணவகத்தின் இரு தளங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தாலும் தேவையான அளவு பரிமாறும் மேடைகளை அமைத்துப் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். தினமும் உணவுக்கூடங்களை உணவு ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் உணவு இடைவேளை முடியும்வரை சுற்றிச்சுற்றி வந்து ஏதாவது குறை இருக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருந்தார். அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்ததால் உணவை வழங்கியவர்கள் (கோவை அன்னபூர்ணா என்று எழுதப்பட்டிருந்தது, ஆனால் அசைவ உணவும் பரிமாறப்பட்டது எப்படி என்று புரியவில்லை) மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டார்கள்.

மதிய உணவை முடித்தபின், ஸ்தபதி வே.இராமன் அவர்கள் சில தொல்லியல்துறை அறிஞர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். திரு. தயாளன், திரு. மா.சந்திரமூர்த்தி ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. நாகப்பட்டினம் இராமச்சந்திரன் அவர்களும் கண்ணில் தென்பட்டார். வருவாய்த்துறை அதிகாரியான அவருக்குச் சிறப்பு அனுமதியளித்திருந்தார்கள். அடுத்த நாள் தொடங்கப்போகும் ஆய்வுப் பொழிவுகளுக்கான அரங்கங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். 27 அரங்குகளுக்கும் ஔவை, இளங்கோ, பெருஞ்சித்திரனார், கோவூர்கிழார் என்று பழந்தமிழ்ப் புலவர்களின் பெயர்களைச் சூட்டியிருந்தார்கள். அரங்கங்கள் நன்றாகக் குளிரூட்டப்பட்டுப் பல்கலைக்கழகத்திலிருக்கும் அரங்கம் போல உயர்ந்த தரத்தில் இருந்தன. அறைக்கு வெளியிலிருந்து சப்தங்கள் உள்ளே வராவண்ணம் அடுத்த அறையில் பேசுவது இங்கே கேட்காவண்ணம் துல்லியமான Sound proof ஒலியமைப்பைச் செய்திருந்தார்கள். வெள்ளைத்துணியால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள், மடிக்கணினி, ஒளிப்பெருக்கி (Projectorக்கு இச்சொல் சரியா?), பெருந்திரை, கம்பியில்லா ஒலிவாங்கி என ஒவ்வொரு அரங்கும் 120 பேர்வரை அமரும் வண்ணம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ம.இராஜேந்திரன் அவர்களைப் பாராட்டத் தோன்றியது.

அங்கிருந்த சங்கத்தமிழ் நிகழ்வுகளை விளக்கும் ஓவியங்களைப் பார்த்துவிட்டு, மணி 3ஐ நெருங்கிய போதுதான் இனியவை நாற்பது ஊர்வலம் 4:30க்குத் தொடங்கப்போவது நினைவுக்கு வந்தது. வெளியே ஓடிவந்து பேருந்தில் ஏறிச்செல்லலாம் என்று பார்த்தால், ஒரு பேருந்தையும் காணவில்லை. காலையில் இங்குதானே இறக்கி விட்டார்கள்? மதியம் உணவருந்த வந்தபோதுகூட நின்று கொண்டிருந்தனவே! அங்கிருந்த காவலர் ஒருவரிடம் விசாரித்தால், ஊர்வலத்தைக் காணும் மேடைக்குச் செல்லும் பேருந்துகள் 2 மணிக்கே புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காக விமான நிலையத்திலிருந்து அண்ணாசிலை வரை அவிநாசி சாலையில் போக்குவரத்தைத் தடை செய்துவிட்டதால் இங்கிருந்து வேறு பேருந்திலும் செல்ல முடியாது என்றார். சரவணம்பட்டி, கணபதி வழியாகத் தங்கும் விடுதிக்குச் செல்வதற்கு வேண்டுமானால் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார். எங்களைப் போலவே இன்னும் கணிசமானோர் அங்குத் திரண்டிருந்ததால், அனைவரும் அப்பேருந்தில் ஏறி, அவரவர் விடுதியை அடைந்தோம். பாதிவழியில் இறங்கிக் குறுக்கு வழியில் அவிநாசி சாலையை அடைந்து ஊர்வலத்தைப் பார்த்து விடலாம் என்று இருந்தவர்களின் எண்ணத்தையும் போக்குவரத்து நெரிசல் தவிடுபொடியாக்கியது. விடுதியை அடைந்து சன் அல்லது கலைஞர் தொலைக்காட்சியில் பார்ப்பதுதான் ஒரே வழி என்று மனதைத் தேற்றிக் கொண்டோம். ஆனால் காந்திபுரத்தை அடைவதற்குள் மணி 5ஐ நெருங்கிவிட்டது. நானும் நண்பர் நாகப்பட்டினம் இராமச்சந்திரனும் அறைக்குள் நுழைந்த போதுதான் பொதிகையில் ஒளிபரப்பு ஆரம்பமாகியிருந்தது. அரசுத்துறைகளின் தாமதத்தில்கூடச் சில நன்மைகள் ஏற்படலாம் என்று புரிந்தது. பின்பு ஊர்வலத்தை நேரில் பார்த்துவிட்டு வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான், கூட்ட நெரிசலில் சரியாகப் பார்க்க முடியவில்லை எனவும், தொலைக்காட்சியில் பார்த்திருந்தால் வர்ணனையுடன் சிரமம் ஏதுமின்றிப் பார்த்திருக்கலாம் என்றும் புலம்பினார்கள்.

அடுத்தநாள் காலை ஆய்வரங்குகள் தொடங்கின. குடந்தையிலிருந்து நண்பர்கள் சீதாராமன், பால.பத்மநாபன், கோகுல் ஆகியோர் வந்து சேர்ந்தார்கள். முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களும் முனைவர் மு.நளினியும் வந்து சேர்வதற்கு மதியம் ஆகிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பே ஆய்வரங்க நிகழ்ச்சி நிரல் கைக்குக் கிடைத்துவிட்டபடியால், எங்கள் ஆர்வத்துக்கு உகந்த பொழிவுகளைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு அரங்கமாகச் செல்ல ஆரம்பித்தோம். சீதாராமனும் கோகுலும் தற்காப்புக் கலையான களரி பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றைக் கேட்கப் போனார்கள். பொழிவு முடிந்ததும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அறிஞர்கள் கட்டுரை வாசித்தவரைக் கேள்விகள் என்னும் மான்கொம்பினால் ரத்தக்களரியாக்கியதைப் பார்த்துவிட்டு வந்து புலம்பினார்கள். அன்றைக்கு என்னுடைய நல்லநேரமோ கெட்டநேரமோ தெரியவில்லை. அன்றைக்கு நான் எந்தெந்தக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேனோ அவர்களில் ஒருவர்கூட வரவில்லை. திட்டமிட்ட எதையும் கேட்க முடியாவிட்டாலும், தற்செயலாக நல்ல சில கட்டுரைகளைக் கேட்க முடிந்தது. அடுத்தடுத்த நாட்களும் பெரும்பாலும் இப்படியே போயின.

சங்ககாலத்தில் பெண்களின் இல்லற மாண்பும் பதிபக்தியும் பற்றி ஒரு பெண்மணி கட்டுரை வாசித்தார். அக்கட்டுரையின் கடைசிவரியை அவர் வாசிக்காமலேயே இருந்திருந்தால், இவ்வரிகள் இக்கட்டுரையில் இடம்பெறாமலேயே போயிருக்கும். 'இக்காலத்துப் பெண்களும் அக்காலத்தைப் போலவே கணவனையும் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டால் வீடும் நாடும் நன்றாக இருக்கும்' என்று பொருள்படும்படியான வரியைப் படித்து முடித்ததும், அங்கு குழுமியிருந்த பெண்ணியவாதிகள் அனைவரும் சேர்ந்து பெண்ணியம் என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் நீங்கள் எவ்வாறு இப்படிச் சொல்லலாம் என்று அவரைக் கூடிக் கும்மியடித்து விட்டார்கள். அவரும் எவ்வளவோ சமாளித்துப் பார்த்தார், முடியவில்லை. சிலர் அவருக்கு ஆதரவாகக் குரலெழுப்பிப் பார்த்தார்கள். பெரும்பான்மையினராக இருந்த பெண்ணியவாதிகள்முன் எதுவும் செல்லுபடியாகவில்லை. பிறகு நடுவர் தலையிட்டு ஒருவாறாகப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து, அடுத்த கட்டுரையாளரை அழைத்தார்.

'தஞ்சையில் 108 கரணங்கள்' என்ற தலைப்பிலமைந்த சிற்பக்கலை தொடர்பான அரங்குக்குச் சென்று அமர்ந்தோம். பெரியகோயிலில் ஏன் 81 சிற்பங்கள் மட்டும் முழுமையாக இருக்கின்றன என்பதற்கான காரணத்தைத் தன் ஆய்வுக்கட்டுரை மூலமாக விளக்கினார் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்மணி. இதற்குமுன் இந்தப் பொருளில் ஆய்வு செய்த அறிஞர்கள் எல்லாம் 108 கரணங்கள் ஏன் நிறைவு பெறவில்லை என்பதற்கு, போர், கங்கைகொண்ட சோழபுரம் கட்டுமானப்பணி, இராஜராஜரின் மூப்பு போன்ற கற்பனை முடிவுகளைக் கூறினார்களாம். ஆனால் இவர் ஆய்வு செய்தபோது உண்மை புலப்பட்டதாம். முதலாம் இராஜராஜர் மிகச்சிறந்த கலாரசிகர். கலைகளை வாழவைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே வாழ்ந்தவர். எனவே, 108 சிற்பங்களைச் செதுக்கவேண்டும் என்ற தன் கனவை நிறைவேற்றாமல் இருந்திருக்கமாட்டார். அவர் காலத்தில் அதை முழுவதுமாக முடித்துவிட்டார். ஆனால் பின்னால் நடைபெற்ற எதிரிகளின் படையெடுப்பால் 81 கரணங்கள் தவிர மீதமுள்ளவை சிதைக்கப்பட்டுவிட்டன. இதுதான் அவரது ஆய்வு காட்டும் முடிவு. கேள்விகள் கேட்கலாமா என்று கேட்டபொழுது, நேரமின்மை காரணமாகக் கேள்வி பதில் பகுதியை அமர்வின் இறுதியில் நேரமிருந்தால் வைத்துக்கொள்ளலாம் என்று நடுவர் மறுத்துவிட்டார். அந்த அமர்வில் திட்டமிட்டிருந்த அனைவரும் கட்டுரைகளை வாசித்து முடித்ததும், கேள்வி நேரம் ஆரம்பித்தது. அதில் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள் அக்கட்டுரையில் இருந்த தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தினார். செதுக்கப்பட்டுச் சிதைக்கப்பட்ட சிற்பத்துக்கும் செதுக்காமலேயே விடப்பட்ட கற்பலகைக்கும் உள்ள வித்தியாசம் மிக எளிதாகப் புலப்படக்கூடியது. பெரியகோயிலின் 2ம் தளத்திலுள்ள கரணச்சிற்பங்களை முதல்முறையாகப் பார்ப்பவர்கூட செதுக்கப்படாத கற்பலகைகளின் தடிமனையும் செதுக்கப்பட்ட சிற்பங்களின் தடிமனையும் ஒப்பிட்டு, 27 கரணங்கள் செதுக்கப்படவே இல்லை என்ற முடிவுக்குத்தான் வருவார். இந்நிலையில், செதுக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டது என்று எப்படித் தைரியமாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கட்டுரை வாசிக்கத் தோன்றுகிறது என்பது இன்றுவரை எங்களுக்குக் கேள்வியாகவே இருக்கிறது. செம்மொழி மாநாட்டில் மட்டுமல்ல, இன்னும் சில கருத்தரங்கங்களிலும் ஆய்வு நூல்களிலும் இதுபோன்ற அபத்தமான முடிவுகள் ஏராளம். இவற்றை வாசிப்பவர்களுக்கு எழுதியவர்களைப் பற்றி எத்தகைய எண்ணம் ஏற்படும் என்பதை எழுதும்முன் சற்று யோசிக்கவேண்டும்.

'ஊடகத்தமிழ்' என்ற தலைப்பில் அமர்வு நடந்துகொண்டிருந்த அரங்குக்குள் நுழைந்தோம். கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் தமிழை எவ்வாறு சிதைக்கிறார்கள் என்பதைப்பற்றிப் பொழிவு நடத்திக்கொண்டிருந்தார். மக்கள் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போலவே இருந்தாலும், மிகப் பரவலாகச் செய்யப்படும் இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டியது பயனுள்ளதாக இருந்தது. உதாரணமாக, தொடர்ச்சியாகச் சொன்னார் என்பதைக் கோர்வையாகச் சொன்னார் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறோம். ஆனால் அது தவறாம். கோவையாகச் சொன்னார் என்பதுதான் சரியாம். மாலையாகக் கோத்தல் என்பதே சரியாம். இது புதிய தகவலாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு இந்திரா பார்த்தசாரதி அவர்களின் 'சுதந்திரபூமி' நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் 'கோவையாக' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தது கண்டு வியந்தேன். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தாலும், தமிழிலும் இலக்கணப் பிழையின்றி எழுதுகிறாரே என்று வியப்பு ஏற்பட்டது. அதேபோல், முந்நூறு என்பதை முன்னூறு என்று எழுதுவது தவறு என்றும் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் கூறினார். 'நான் உனக்கு முந்நூறு ரூபாய் கொடுத்தேன்' என்றால்தான் 300 ரூபாய் கொடுத்ததாக அர்த்தமாம். 'நான் உனக்கு முன்னூறு கொடுத்தேன்' என்றால், முன்பு 100 ரூபாய் கொடுத்ததாகத்தான் அர்த்தமாம். இலக்கணப்பிழையால் 200 ரூபாய் நட்டமாகிவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதேபோல 'சின்னத்திரை' என்பது தவறாம். தொலைக்காட்சிப் பெட்டியைக் குறிப்பிடும்போது சின்னதிரை என்பதுதான் சரியாம். சின்னம்+திரை=சின்னத்திரை. ஆனால் சின்ன+திரை=சின்னதிரை. இன்னொரு வியப்படையச் செய்யும் பொருள் 'மற்றும்'. ஆங்கிலத்தில் சில சொற்களை வரிசையாகச் சொல்லும்போது கடைசிச் சொல்லுக்கு முன்னர் and சேர்த்துச் சொல்வோம். தமிழிலும் இதுபோல் 'மற்றும்' சேர்த்துச் சொல்கிறோம். ஆனால் தமிழ் இலக்கணப்படி மற்றும் சேர்க்கவேண்டிய தேவை இல்லையாம். ஆங்கிலப் பழக்கத்தை அப்படியே தமிழ்ப்படுத்துவதால் இப்பிழை ஏற்படுகிறது என்று கூறினார். இதைப் பிழை என்று கூறமுடியாவிட்டாலும், தமிழ் இலக்கணப்படி இது தேவையற்ற பயன்பாடு என்றார். அதேபோல இன்னொரு சர்ச்சைக்குரிய பயன்பாட்டையும் கூறினார். ஆசிரியர், பேராசிரியர் என்பனவற்றுக்குப் பெண்பாலாக ஆசிரியை மற்றும் பேராசிரியை ஆகியவற்றைக் கூறுகிறோம். ஆனால் இது சரியான பால்மாற்றம் இல்லையாம். ஆசிரியன் என்பதன் பெண்பால் ஆசிரியை என்பது சரி. ஆனால் மரியாதை விகுதியான 'அர்' இருபாலருக்கும் பொது என்ற விதியின் அடிப்படையில் இருபாலரையும் ஆசிரியர், பேராசிரியர் என்றே குறிப்பிடலாம் என்றார். இதுபோல இன்னும் ஏராளமான பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்தார். அப்போது குறிப்பெடுக்க இயலாததால், கட்டுரையிலுள்ள அனைத்துக் குறிப்புகளையும் அறிந்துகொள்ள, ஆய்வு மலர் வெளியிடப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

இவைதவிர வேறு சர்ச்சைக்குரிய விவாதங்கள் ஏதாவது நடந்ததா?

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.