http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 74

இதழ் 74
[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வழிபாடிழந்த திருக்கோயில்கள்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 2
அழிவின் விளிம்பில் சோழர்காலக் கற்கோயில்
மிருதங்கம் - ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 2
அசையும் பாவை
இதழ் எண். 74 > கலையும் ஆய்வும்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி
சென்ற இதழ்த் தொடர்ச்சி . . .

கல்வெட்டுகள்

விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதினொரு கல்வெட்டுகள் கள ஆய்வின்போது இக்கட்டுரையாசிரியர்களால் கண்டறியப்பட்டவை.

இம்முப்பது கல்வெட்டுகளுள் பதின்மூன்று, பள்ளி கொண்ட பெருமாள் குடைவரைக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ள சுந்தரபாண்டியன் மண்டபச் சுவர்கள், தூண், படிக்கட்டு இவற்றில் வெட்டப்பட்டுள்ளன. ஆறு கல்வெட்டுகள் சேனைமுதலியார் திருமுன் சுவர்களில் உள்ளன. கோபுரத் தாங்குதளத்தில் ஒன்றும் கோபுர வாயிலில் ஒன்றும் குளக்கரையில் ஆறும் உள்ளன. கிழக்குச் சுற்றில் உள்ள பலகைப் பாறையில் இரண்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. குடைவரை வளாகத்தின் ஒரே கல்வெட்டாய்ப் பாறையில் வெட்டப்பட்டிருப்பது புதிதாகக் கண்டறியப்பட்ட முதலாம் இராஜராஜரின் கல்வெட்டாகும்

பெருந்தேவிக் கல்வெட்டு

இவ்வளாகத்துள்ள கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டது படியமைப்பின் பிடிச்சுவர் போல வடிவமைக்கப்பட்ட பலகைப்பாறையில் காணப்படும் சுற்றுவெளிக் கல்வெட்டுதான். இப்பலகைப்பாறையில், படித்தறியமுடியாத நிலையில் அழிந்திருக்கும் மற்றொரு கல்வெட்டு முதலாம் இராஜராஜருடையது.

விடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி புதுக்கியதாகக் கூறும் இந்தக் கல்வெட்டு, அப்பெருமாட்டி எதைப் புதுக்கினார் என்பதைத் தெளிவுபடத் தெரிவிக்காதபோதும், தாம் புதுக்கியதற்கு உண்ணாழிகைப்புறமாக அவர் ஊரொன்றைத் தந்ததாகத் தகவல் தருவதால், தேவி புதுக்கியது கோயிலொன்றை என்று தெளியலாம். தாம் புதுக்கிய கோயிலுக்கு உண்ணாழிகைப் புறமாக அண்டக்குடி என்னும் ஊரைக் காராண்மை மீயாட்சி உள்ளடங்க அம்மை அளித்துள்ளார். இக்கல்வெட்டின் அடிப்படையில் பள்ளி கொண்ட ஆழ்வாரின் குடைவரையைப் புதுக்கியவர் பெருந்தேவியே என்று சிலர் கருதுகின்றனர்.27

குடைவரை வளாகத்தைப் பெருந்தேவி புதுக்கியிருந்தால், அவரது கல்வெட்டு பரங்குன்றம், சிற்றண்ணல்வாயில், கந்தன் குடைவரைப் புதுக்குக் கல்வெட்டுகள் போலக் குடைவரை வளாகத்திலேயே, குடைவரையின் ஓர் அங்கமாக இடம் பெற்றிருக்கும். மாறாக, இக்கல்வெட்டுத் தனிக் கல்லாகச் சுற்றுவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருபுறத்தே வடிவமைக்கப்பட்டு மறுபுறம் பாறையாக உள்ள இப்பலகைக்கல்லின் வடிவமைக்கப்பட்டபகுதி மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

நடுப்பகுதி பக்கப்பகுதிகளினும் உயரமாக அமைந்துள்ளது. அதன் இருபுற அமைப்பும் படியடுக்கொன்றின் புறச்சுவராக அது இருந்திருக்கலாம் எனக் கருதவைக்கிறது. பள்ளி கொண்ட பெருமாள் குடைவரை முகப்பையொட்டிப் பாறையிலேயே வெட்டி அமைத்த படியமைப்புப் பிடிச்சுவருடன் இருப்பதால், இப்பலகைக்கல் குடைவரை சார்ந்ததல்ல என உறுதிப்படுத்தலாம். எனில், இது எந்தக் கோயிலுக்குரியது எனும் கேள்வி எழுகிறது.

மெய்யம் சிவன்கோயில் வளாகத்திலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, மெய்யத்து மகாதேவர் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் இடையில் நிலவிய நெடுங்காலச் சிக்கல் தீர்க்கப்பட்டு, இரண்டு கோயில்களுக்கும் இடையே மதில்சுவர் எடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கி. பி. 1245ல் வெட்டப்பட்டுள்ள இவ்வைஷ்ணவ மாகேசுவரக் கல்வெட்டு, 'திருமெய்யத் தெம்பெருமான் நின்றருளிய தேவர் தேவதானம் அண்டக்குடி நான்கெல்லையும் பெருந்துறையும் பண்டாடு பழநடையே எம்பெருமான் நின்றருளிய தேவருதே ஆவதாகவும்' எனக் குறிப்பிடுவதுடன், குடைவரையிலுள்ள இறைவனைப் ' பள்ளி கொண்டருளிய ஆழ்வார்'எனக் கொண்டாடுகிறது. அதனால், மெய்யத்தில், பள்ளி கொண்ட பெருமாளுடன், பழங்காலந் தொட்டே நின்றருளிய கோலத்தில் ஒரு விஷ்ணு திருமேனி இருந்தமையை அறியமுடிகிறது. இத்திருமேனியை சிவன்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட முதல் இராஜராஜரின் கல்வெட்டொன்றும், 'நின்றருளின விஷ்ணு பட்டாரகர்' என்று குறிப்பிடுகிறது.

பெருந்தேவி புதுக்கிய கோயிலுக்கு அவரால் உண்ணாழிகைப் புறமாகத் தரப்பட்ட அண்டக்குடி, நின்றருளியதேவருடைய ஊராகப் பழங்காலந்தொட்டே இருந்துவந்ததாக வைஷ்ணவ மாகேசுவரக் கல்வெட்டில் தெளிவாகச் சுட்டப்படுவதால், பெருந்தேவி புதுக்கியது இந்நின்றருளியதேவர் திருக்கோயிலையே என்று உறுதிப்படுத்தலாம். 'பண்டாடு பழநடையே' எனும் பாண்டியக் கல்வெட்டின் சொல்லாட்சி கவனிக்கத்தக்கது.

இதே கோயில் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.

பெருந்தேவிக் கல்வெட்டு இருக்கும் இடம் நோக்கியும் அக்கல்வெட்டின் உள்ளீடு கொண்டும் புதிய கல்வெட்டின் தரவடிப்படையிலும் குடைவரைப் படியமைப்புத் தாய்ப்பாறைப் பிறப்பாக இருப்பது கொண்டும் மாகேசுவரக் கல்வெட்டு அண்டக்குடி வழி துணை நிற்பதாலும் பெரும்பிடுகுப் பெருந்தேவியின் பங்களிப்பு இவ்வளாகத்து நின்றருளிய தேவருக்கே, குடைவரைக்கு அன்று என முடிவு காணலாம்.

குடைவரை வளாகக் கல்வெட்டு

குடைவரை வாயிலின் இடப்புறமுள்ள பாறையின் மேற்பகுதியில் கட்டமைப்பில் சிக்கிய நிலையில் காட்சிதரும் முதலாம் இராஜராஜரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டு, பள்ளி கொண்ட பெருமாளைக் கிடந்தபிரான் என்று அழைக்கிறது. நாள்தோறும் எண்ணாழி அரிசி கொண்டு கிடந்த பிரானுக்கு இரண்டு வேளைத் திருஅமுது அளிக்க வாய்ப்பாகப் பெருந்தேவன்குடிக் குளத்திலிருந்து நீர்வரத்துப் பெற்ற நிலத் துண்டொன்று விலைக்குப் பெறப்பட்டு மெய்யம் சபையாரிடம் ஒப்புவிக்கப்பட்டது. கொடையாளியின் பெயரை அறியக்கூடவில்லை.

சுந்தரபாண்டியர் மண்டபக் கல்வெட்டுகள்

மண்டப வடசுவரின் வெளிப்புறம் உள்ள சடையவர்மர் மூன்றாம் வீரபாண்டியரின் (கி. பி. 1297 - 1342) 45ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,29 கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டுப் படைப்பற்றான மேலைக் குருந்தண்பிறையைச் சேர்ந்த வலையரில் ஒருவரான மூவன் காடப்பிள்ளைக்கு, அதே நாட்டைச் சேர்ந்த தேவதான பிரமதேயமான திருமெய்யத்து சபையார் எழுதித் தந்த பாடிகாவல் ஆவணமாக அமைந்துள்ளது.

மெய்யத்துப் பெரியகுளப்புரவு, வேங்கைக் குளப்புரவு, கட்டியார்க்குடிப்புரவு, குடிக்காட்டுப் பற்றுகள், சித்தாசான் புஞ்சைப் பற்றுகள், மெய்யத்துப் பற்றில் பாடிகாவல் முறைமையான உரிமைகள் ஆகிய அனைத்தும், வாளால் வழி திறந்தான் குளிகைப் பணம் இருநூற்றிற்கு விற்கப்பட்டன. பன்னிரண்டு அடிக் கோலால் அளக்கப்பட்ட இந்நிலத்துண்டுகளிலிருந்து ஆடிக்குறுவை, ஐப்பசிக் குறுவை என இருபோகத்திற்கும் எள், தினை, வரகு, வெற்றிலை, தெங்கு, கரும்பு ஆகியன விளைந்த விளைச்சலுக்கேற்ப வரி பெறப்பட்டது. சபை உறுப்பினர்களாகச் சுந்தரத்தோள் நம்பி, செல்ல நம்பி, திருமெய்ய நம்பி அனந்தர், சடகோபன் ஆண்ட பெருமாள் இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அதே சுவரிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சொக்கநாராயண நல்லூர் எனும் பெயரிலமைந்த ஊரைச் சொக்க நாராயணரான விசையாலயதேவர் மெய்யத்து இறைவனுக்குத் தேவதானத் திருவிடையாட்டமாகத் தந்ததாகக் கூறுகிறது. பெருமளவிற்குச் சிதைந்தும் தொடர்பற்றும் காணப்படும் இக்கல்வெட்டின் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.30

மண்டபத்தின் தென்சுவரிலுள்ள கல்வெட்டு,31 கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில், கி. பி. 1522ல், மெய்யத்து அழகிய மெய்யருக்கும் திருமெய்யத் தேவருக்கும் செல்லப்ப வீரநரசிங்கராய நாயக்கர் அளித்த கொடையைச் சுட்டுகிறது. இருதெய்வங்களுக்கும் உரியனவாக கானநாட்டிலிருந்த தேவதானம், திருவிடையாட்டம் தவிர, பண்டாரவாடையாகக் கிடந்த நிலத்தை முன்பு பிரித்தவாறே, அழகிய மெய்யருக்கு ஐந்தில் மூன்று பங்கு, மெய்யத்துத் தேவருக்கு ஐந்திலிரண்டு பங்கு எனப் பகிர்ந்தளிக்கும் இவ்ஆவணம், பெரும்பாலும் கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளது.

மண்டப மேற்குச் சுவரின் வெளிப்புறக் கல்வெட்டு32 சடையவர்மர் பராக்கிரம பாண்டியரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் (கி. பி. 1315 - 1334) வெட்டப்பட்டுள்ளது. கானநாட்டு மேலூரைச் சேர்ந்த சீராளதேவன் முனையதரையன் மக்கணாயனார், தம் மகன் சீராளதேவருக்கு வீடும் அடிமைகளும் காணியாட்சியாக நிலமும் தந்தமையை வெளிப்படுத்தும் இந்த ஆவணம், மேலூர் ஊர்க்கணக்கு உலகலங்கார மூவேந்தவேளானால் எழுதப்பட்டுள்ளது. மேலூர்க் குளத்தில் அனைத்து மடையால் நீர்ப்பாய்ந்து விளைந்த பற்றில் பதினேழு மா நிலம் காணியாட்சியாகத் தரப்பட்டது. மேலூர் நடுவில் தெருவில் தென்சிறகில் இருந்த மனையும் புழைக்கடையும் தேவிமங்கலத்தில் இருந்த மனையும் புழைக்கடையும் தரப்பட்டன.

தேவி, அவள் மகள் சீராள், அவள் தம்பி மக்கணாயன், அவள் சிறிய தாய் ஆவுடையாள், அவள் தம்பி சீராளதேவன், அவள் மருமகள் சீராள், பெரியநாச்சி மகன் திருமெய்ய மலையாளன், சிவத்த மக்கணாயன் ஆக எண்மர் அடிமையராகவும் வளத்தி மகள் மன்றி, அவள் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகள் பொன்னள், விளத்தி மகள் வில்லி ஆகியோர் பள்ளடியாராகவும் தரப்பட்டனர். நிலமும் மனைகளும் அடிமைகளும் பெற்ற சீராளதேவர் நிலத்திலும் மனைகளிலும் உயர்ப்பன உயர்த்தியும் குழிப்பன குழித்தும் வைப்பன வைத்தும் ஆண்டுகொள்வதுடன், நிலங்களுக்குரிய கடமை இறுத்தும் தேவதான திருவிடையாட்ட நிலங்களுக்குத் தரவேண்டியன தந்தும் அநுபவித்துக் கொள்ளுமாறு உரிமையளிக்கப்பட்டார்.

சீராளதேவன் முனையதரையன் மக்கணாயனார், முனையதரையன், வல்லநாட்டு வேளான், கோட்டையூர் உலகளந்த சோழக் கானநாட்டு வேளார், செங்குன்றநாட்டு வேளார், வாணாதராயர், கண்ணனூர் சுந்தரபாண்டியக் காலிங்கராயர், தெற்காட்டூர் வாணாதராயர், அழகிய திருச்சிற்றம்பலமுடையார் ஆனையார் ஆகிய ஒன்பதின்மர் இவ்ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதே மேற்குச் சுவரிலுள்ள சடையவர்மர் பராக்கிரம பாண்டியரின் மற்றொரு பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,33 முனையதரையர் மக்கணாயனார் தம் மனைவியின் உடன்பிறந்தாரான மேலை இரணியமுட்ட நாட்டுக் குளமங்கலத்தைச் சேர்ந்த திருவுடையார் பிறவிக்கு நல்லாருக்குக் காணியாட்சியாக நிலம் விற்பனை செய்த தகவலைத் தருகிறது. முனையதரையர் மனைவியின் பெயர் காண இனியார். அவரை மணந்தபோது திருமணச் செலவிற்காகப் பணம் இருநூறு தரவேண்டியிருந்தது.

கையில் முதல் இல்லாமையால் பணம் இருநூறுக்குமாக, முனையதரையர், தம் நிலத்தின் ஒரு பகுதியைக் காணியாட்சியாகப் பிறவிக்கு நல்லாருக்கு விற்றார். திருமணச் செலவைக் கல்வெட்டு 'கல்லியாண அழிவு' என்கிறது. இப்படி விற்கப்பட்ட நிலத்துண்டுகளுள் ஒன்று திருமெய்ய மலையாளரான விஷ்ணுவிற்குரிய திருவிடையாட்டமாகும். திருமாலைப்புறமாக அறியப்பட்ட இந்நிலம், உள்ளூர் எம்பெருமான் திருவிடையாட்ட நிலமான அரியாள் வயக்கல், உள்ளூர்ப் பிள்ளையார் தேவதானமான தாவலிமற்று ஆகிய நிலத்துண்டுகள் இருநூறு பணத்திற்கு விற்கப்பட்டன. மணமகளுக்கான அங்கபூஷணம் மற்றும் இதர செலவினங்களுக்காக ஐநூற்று நாற்பது பணத்திற்கு மேலும் சில நிலத்துண்டுகள் மக்கணாயனால் பிறவிக்கு நல்லார்க்கு விற்கப்பட்ட தகவலையும் இந்தக் கல்வெட்டால் அறியமுடிகிறது.

மண்டபத்தின் மேற்குச் சுவரில் வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே விபவ ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,34 கானநாட்டு நாட்டார், கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுத் தேனாற்றுப்போக்குச் சூரைக்குடியைச் சேர்ந்த திருமேனியழகியாரான விசையாலைய தேவரிடம் ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் விற்ற தகவலைத் தருகிறது. 'மாக்கல விலைப் பிரமாணம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் கையெழுத்தாளர்களின் ஊர்களாகக் கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கானநாட்டுப் படைப்பற்றுகளுள் ஒன்றாகச் செங்குன்றநாடு விளங்கியதையும் நாட்டு மரியாதி எனும் வரியினத்தையும் இவ்ஆவணம் வழி அறியமுடிகிறது.

அதே சுவரில் கி. பி. 1452ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டினால்35 கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுச் சூரைக்குடிச் செண்பகப் பொன்னாயினாரான பராக்கிரம பாண்டிய விசையாலையதேவர், மெய்யத்து மலையாளரான விஷ்ணு பெருமானுக்குச் செண்பகப் பொன்னாயன் சந்தி அமைக்க வாய்ப்பாகப் புலிவலத்திருந்த தம் வயலான செண்பகப் பொன்னாயநல்லூரில், ஏற்கனவே தரப்பட்டிருந்த தேவதானத் திருவிடையாட்ட இறையிலி போக எஞ்சியிருந்த நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலை அறியமுடிகிறது.

அதே சுவரில் கி. பி. 1669 தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ளஅரசர் பெயரற்ற மற்றொரு கல்வெட்டு,36 திருமலைச் சேதுபதி காத்த தளவாய் ரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக, அழகிய மெய்யருக்கு உதயகாலத்தில், 'ரகுநாத அவசரம்' என்னும் பெயரில் கட்டளையமைத்து, அதை நிறைவேற்ற வாய்ப்பாக ஊர் ஒன்றளித்த வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயர் பிள்ளையின் கொடையை எடுத்துரைக்கிறது.

கானநாட்டுக் கோட்டையூர்ப் புரவில் அநாதி தரிசாய்க் காடாக இருந்த புதுவயல், வலையன் வயல் உள்ளிட்ட நிலப்பகுதிகளை விலைக்குப் பெற்று அவற்றை வளமாக்கி, அந்தப் பகுதிக்கு ரகுநாதபுரமென்று பெயரிட்டுத் திருவாழிக்கல் நடுவித்துக் கோயிலுக்களித்த பிள்ளை, அறக்கட்டளையைக் காப்பாற்றும் பொறுப்பைக் கோட்டையூர் ஊரவரிடம் அளித்துள்ளார். சோதிடம், வைத்தியம் செய்வார்களுக்கு இந்நில வருவாயில் பங்கிருந்ததெனக் கருதுமாறு கல்வெட்டமைப்பிருந்த போதும், சிதைந்துள்ள வரிகள் தெளிவு காண இயலாது தடுக்கின்றன. குடிவாரம், மேல்வாரம், கடமை முதலிய வரியினங்களும் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளன.

அதே சுவரில் அதே ஆண்டுத் தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டு,37 பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறது. விஷ்ணுகோயில் ஸ்ரீபண்டாரரும் நிருவாகமும் இணைந்து வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயருக்கு இக்கோயில் திருவிடையாட்டமான மலுக்கன் வயக்கலை, திருக்கோகர்ணம் மின்னல் என்று அழைக்கப்பட்ட பணம் முந்நூறுக்கு விற்றனர்.

இரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக அழகியமெய்யருக்கு உதயகாலத்தில் ரகுநாத அவசரக் கட்டளையைச் சோலையப்பப்பிள்ளை தொடர்ந்து நடத்திவர அநுமதிக்கும் இந்த ஆவணம், அவருடைய நிருவாகத்திற்குக் கட்டளையாகக் கோயிலில் மூன்று படிச் சோறு பெற்றுக்கொள்ள அநுமதித் திருப்பதுடன், மலையப்பெருமாள் வீட்டுக்குத் தெற்கிலும் வேங்கைக் குளக்கரைத் திருவீதிக்கு வடக்காகவும் உள்ள மனையைக் கொள்ளவும் வழியமைத்துள்ளது.

அதே சுவரில் ரெளத்திர ஆண்டு புரட்டாசி மாதத்தில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,38 திருமெய்ய மலையாளரின் திருவிடையாட்டமான இருஞ்சிறை எனும் ஊரைத் திம்மப்ப நாயக்கர் காரியத்துக்குக் கர்த்தரான தளவாய் வைய்யப்ப நாயக்கரும் பெருமாள்கோயில் ஸ்ரீபண்டாரத்துக்குக் கடவாரும் இணைந்து திருப்பணிப்புறமாக நிருவகித்துத் திருப்பணி நடத்த ஏற்பாடானதாகத் தெரிவிக்கிறது.

அதே சுவரிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே பிரமாதி ஆண்டில் வெள்ளிக்கிழமை பெற்ற உத்திரட்டாதி நாளில் வெட்டப்பட்டுள்ளது. பிற பஞ்சாங்கக் குறிப்புகள் சிதைந்துள்ளன. குளத்தூர் வட்டம் திருவிளாங்குடிச் சிவன்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ள வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம்.

இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ
ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.

பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது.

இப்படி, இறையிலிக் காராண்மையாக, அனைத்து வரிகளும் நீக்கி, பொன்னிலும் புரவிலும் கழித்துக் கல்வெட்டித் தரும்படி நாட்டாருக்கு வீரவிருப்பண்ண உடையார் திருமுகம் அனுப்பியதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அதை ஏற்றுக்கொண்ட நாட்டார் கடமை, நாட்டு வினியோகம், ஊர் வினியோகம், அரசுக்கட்டு, பாடிகாவல், பஞ்சுபீலி, சந்துவிக்கிரகப் பேறு, தறியிறை, தட்டார் பாட்டம் உட்பட அனைத்து வரிகளும் நீக்கிப் பொன்னிலும் புரவிலும் கழித்துக் கல்வெட்டித் தந்தனர். எண்பத்து நான்கு மா நிலத்திற்கான புரவு அரையே அரை மா என்றும் இந்நில விழுக்காட்டிற்குக் கழிக்கும் புரவு ஏழு மா எனவும் கல்வெட்டுக் கூறுகிறது. ஊர்ப் புரவு நிலத்தில் இது கழித்துக் கொள்ளப்பட்டது.

இவ்ஆவணத்தில் கோட்டையூர் உலகளந்த சோழக் கானநாட்டு வேளார், மேலூர் முனையதரையர், கண்ணனூர் காலிங்கராயர், தெற்காட்டூர் வாணாதராயர், முனியந்தை உலகேந்திய வேளான், ஆதனூர் உகனையூர்க்குச் சமைந்த சேதியராயர், யானூர் உடையார், மருங்கூர் சுந்தரபாண்டியக் கானநாட்டு வேளார், மெய்யம் சுந்தரத்தோள் நம்பி, இளஞ்சாற்குச் சமைந்த சேதியராயர் ஆகிய நாட்டார்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இவர்களுடன் ஊர்க் கணக்குகளாக, விரையாச்சிலை ஊர்க் கணக்கு வைரக்கொழுந்து, செங்குன்றூர் நாட்டுக்குச் சமைந்த ஊர்க் கணக்குக் கானநாட்டுக் கணக்கு அழகியநாயன், மற்றோர் ஊர்க் கணக்கு அடைக்கலங்காத்தான் ஆகிய மூவர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கம் கோயிலைச் சுற்றிப் பல அகரங்கள் உருவானமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். அது போல் மெய்யத்து வளாகத்தில் கி. பி. 1399ல் ஓங்காரநாதத்து வேத மங்கலம் என்ற அகரம் சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரால் பன்னிருவரைக் கொண்டு உருவாக்கப்பட்டமை வரலாற்றிற்குப் புதிய வரவு.

புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைக் கண்ணுற்றபோது, வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. திருவிளாங்குடிக் கல்வெட்டில் அரியண உடையாரின் மகனாகக் குறிக்கப்படும் வீரவிருப்பண்ணரின் கி. பி. 1417ம் ஆண்டுக் கல்வெட்டு, மேலப்பனையூர் ஞானபுரீசுவரர் கோயிலில் உள்ளது.40 சூரைக்குடி விசையாலயதேவர் வீரவிருப்பண்ணரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் போலும்! மெய்யத்திலேயே அவரது வழித்தோன்றலான சொக்கநாராயண விசையாலயரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.41 அவற்றுள் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டதாகும்.

சுந்தரபாண்டியன் மண்டபத் தூணொன்றிலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டாக அமைந்துள்ளது. இறைவனை, 'மெய்யம் அமர்ந்த பெருமாள்' என்றும் 'மணஞ்சொல் செண்பக மெய்யர்' என்றும் கொண்டாடும் இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. மண்டபத்தின் கிழக்குப் படிக்கட்டுகளுக்கான தென்புறப் பிடிச்சுவரில் உள்ள கல்வெட்டு, 'இ
ந்தப் படியும் சுருளும் வீரபாண்டியதரையர் தன்மம்' என்கிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டுகளைப் பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.42

சேனைமுதலியார் திருமுன் கல்வெட்டுகள்

கோயில் வளாகத்தின் கிழக்குச் சுற்றிலுள்ள சேனைமுதலியார் திருமுன்னில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, கேரளசிங்க வளநாட்டுச் சூரைக்குடிச் சொக்க நாராயணரான விசையாலயதேவரும் திருநெல்வேலிப் பெருமாளான சுந்தரபாண்டிய விசையாலயதேவரும் கானநாட்டுத் தேவதான பிரமதேயமான திருமெய்யத்தில் எழுந்தருளியிருக்கும் மெய்யத்து மலையாளரின் திருவிழாவிற்கு முதலாகப் 'பச்சை வினியோகம்' எனும் வரியினமாய் வந்த பணம் முந்நூற்று முப்பத்துமூன்றையும் வழங்கிய தகவலைத் தருகிறது.43

அதே சுவரில் கி. பி. 1461ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றால்,44 அதலையூர் நாட்டு நியமப்பற்றுச் சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலய தேவர், மெய்யத்து மலையாளருக்கு, தம்முடைய பெயரால், தம்முடைய பிறந்த நாளில், 'சுந்தரபாண்டிய விசையாலய தேவன் சந்தி' என ஒன்றமைத்து, அது போழ்து தளிகை படைக்கவும் திருமாலை, திருப்பரிவட்டம் முதலாயின சாத்தவும் வாய்ப்பாக, கானநாட்டுப் படைப்பற்றான இளஞ்சார்ப் புரவில், இராகுத்த மிண்டன் வயலான சுந்தரபாண்டிய நல்லூரைத் திருவிடையாட்டமாக்கிக் கோயிலுக்கு சர்வமானியமாக அளித்த செய்தியைப் பெறமுடிகிறது.

அதே சுவரில் பெரிதும் சிதைந்தநிலையில் காணப்படும் கல்வெட்டு,45 மாத்தூரான ஸ்ரீகண்டசதுர்வேதி மங்கலத்து மேற்பிடாகையிலிருந்த கூத்தாண்டி வயலான மெய்ய மணவாள நல்லூர், மழநாட்டு ராமநாதபட்டன் மகன் திருமலைநாதன் உள்ளிட்டாருக்கு உதகபூர்வம் செய்து தரப்பட்ட தகவலைத் தருகிறது. நிலவிளைவுக்கேற்ப வரி தண்டப்பெற்ற வகைமையை எடுத்துரைக்கும் இக்கல்வெட்டால் உலகலங்காரன் என்னும் முகத்தலளவையின் பெயரும் கிடைத்துள்ளது. நத்தத்தில் குடியேறிய மக்களிடம் கடமை வசூலிக்கப் பெற்றது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் கொடையளித்தவரின் பெயரை அறியக்கூடவில்லை.

அதே சுவரில் செய ஆண்டு ஆனித்திங்கள் இருபதாம் நாள் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,46 பெருமாள் கோயில் ஸ்ரீபண்டாரத்தார், முனிசந்தை தட்டான் வீரன் வீரபாண்டிய ஆசாரி மகன் திருமேனி வீரபாண்டிய ஆசாரிக்கும் அரங்குளவன் மெய்ய மலையாள ஆசாரி உள்ளிட்டாருக்கும் கோவிந்த வயலில் பெருமாள் திருவிடையாட்டமான திருவிளக்குப்புற நிலம் தடி மூன்றைக் காணியாட்சியாகச் செய்தளித்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. வீரபாண்டிய ஆசாரி இக்கோயிலுக்கு ஒரு தாரையும் இரண்டு தவளைச் சங்கும் தந்துள்ளார். இவ்ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள ஸ்ரீபண்டார அலுவலர்களாக அழகிய மணவாளபட்டன், மெய்யம் அமர்ந்த பெருமாள்பட்டன், மெய்ய மணவாளபட்டன், கருணாகரபட்டன் ஆகியோர் அறிமுகமாகின்றனர். நாட்டுக் காரியமாக பல்லவராயனும் பண்டாரக் காரியமாகச் செயதீபராயனும் இருந்துள்ளனர்.

சேனைமுதலியார் திருமுன்னின் முகமண்டப மேற்குச் சுவரில் விகாரி வருடம் ஆடித்திங்கள் 29ம் நாள் வெட்டப்பட்டுள்ள 33 வரிக் கல்வெட்டு, இப்பகுதியில் நிகழ்ந்த கொலை ஒன்றை வெளிச்சத்திற்குக் கொணர்வதுடன் அது தொடர்பான தீர்வையும் தெரிவிக்கிறது. பதினேழாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள இக்கல்வெட்டில் மன்னர் பெயரோ, மெய்க்கீர்த்தியோ இல்லை.

கானநாட்டுக் கடியார் வயலில் அந்தரி பட்டர்கள் (கொற்றவை வழிபாட்டினர்) தங்களுக்குள் ஏற்பட்ட விரோதம் காரணமாக ஈசாண்டான் என்பவரைக் கொன்றனர். அந்தக் கொலை பற்றி அறிந்த மெய்யத்து இருகோயில் காணியாளரும் கானநாட்டு நாட்டவரும் உடன்கூடி வழக்கை விசாரித்துக் குற்றவாளிகளான எருமைபட்டன் உள்ளிட்டார் நிலப்பகுதிகளான பாண்டிய வேளான் வடகூறுநிலம் ஒரு மாவும் எங்குமாய் நின்றான் நிலமான மனம்பெரியவர் வயக்கல் நிலம் முக்காலும் கொண்டு அந்நிலத்துண்டுகளைக் கொலையுண்ட ஈசாண்டானின் மகன் மாக்கயானுக்கு உதிரப்பட்டியாகக் கல்வெட்டித் தந்து உரிமையாக்கியதுடன், மாக்கயான் அந்நிலப் பகுதிகளின் விளைச்சலில் இருந்து மாவுக்குக் கலம் நெல் கோயிலுக்குத் தரவேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். இந்த ஆவணத்தை எழுதிக் கையெழுத்திட்டவராக நாட்டுக் கணக்கு தென்னவதரையரின் பெயர் காணப்படுகிறது.47

திருமுன்னின் முகமண்டப உட்சுவரில் காணப்படும் பராக்கிரம பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியைத் தருவதுடன், இக்கோயிலில் அவர் பெயரால் உருவாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் சந்தியை வெளிச்சப்படுத்துகிறது. 'திருமெய்ய மலையாளன்' என்றழைக்கப்பட்ட நின்றருளிய தேவருக்கான சிறப்புப் பூசையாக அமைக்கப்பட்ட இச்சந்தியை நிறைவேற்ற வாய்ப்பாக மஞ்சக்குடிப் பற்றிலிருந்த சாத்தனூர், கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்டது.48

பிற இடங்களிலுள்ள கல்வெட்டுகள்

கோபுரத் தாங்குதளத்திலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, மல்லப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய செயலராக இருந்த நாராயப்பர் அய்யன், சிதிலமான திருமெய்யம் குளத்தைச் சீரமைத்த தகவலைத் தருகிறது.

கோபுரவாயிலின் மேற்கு நிலையில், 'வந்து வாழ்வித்த மெய்யன்' என்ற வாழ்த்துடன் தொடங்கும் முப்பத்தைந்து வரிப் புதிய கல்வெட்டில் மன்னர் பெயரோ, மெய்க்கீர்த்தியோ இடம்பெறவில்லை. சுபகிருது ஆண்டுத் தைத்திங்கள் 16ம் நாள் வெட்டப்பட்டிருக்கும் அக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு அதைப் பதினேழாம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம். ஒன்றிரண்டு இடங்களில் எழுத்துக்கள் சிதைந்தும் படிக்கவியலாமலும் இருப்பினும், முழுமையான தகவலைப் பெறமுடிகிறது.49

விருதராஜ பயங்கர வளநாட்டின் கொல்லர்க் காணியைப் பெற்றவராகக் கோட்டையூர்க் கொல்லன் அகத்தியன் பொன் சின்னானைக் கல்வெட்டு அறிமுகப்படுத்துகிறது. அவரது காணியைத் தச்சரும் தட்டாரும் கைப்பற்றிக் கொண்டமையால், நாட்டாரிடமும் கோயிலாரிடமும் கொல்லர் முறையிட, நாட்டாரும் தானத்தாரும் பிறரும் திருமெய்யம் சன்னதியில் கூடியிருந்து வழக்கை விசாரித்துக் கொல்லர்க் காணி பொன் சின்னானுக்கே உரியதென்று தீர்ப்புக்கூறி அதைக் கல்லிலும் வெட்டுமாறு செய்தனர்.

இத்தீர்ப்பு ஆவணத்தில் சாத்தப்பன் சேர்வைகாரர், நாட்டுக் கணக்கு பத்தையகிரிநாத பிரான், கொல்லர் பொன்சின்னான் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். மற்றொரு கையெழுத்தாளரின் பெயர் சிதைந்திருப்பினும், அவர் பெயரிலும் சேர்வைகாரர் என்ற பின்னொட்டே காணப்படுகிறது. கல்வெட்டின் இறுதி வாக்கியம், 'திருமெய்யம் துணை' என்று இறைக்காப்புக் காட்டி முடிகிறது.

சத்தியபுஷ்கரணியின் மேற்குச் சுவரில் சிதறிக் கிடக்கும் கல்வெட்டு சடையவர்மர் சுந்தரபாண்டியரின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. மிக நீண்ட அரச ஆணையாக விளங்கும் இக்கல்வெட்டு, குளத்தூர் என்னும் ஊரை உகிரையூர் அகத்தீசுவரர் தேவதான நிலங்கள், மனைகள், விருதராஜ பயங்கர விண்ணகரத்து எம்பெருமானின் திருவிடையாட்டம் ஆகியன நீக்கி, மீள்கூற்றத்துக் கீழ்க்கூற்றுச் செய்யானமான விக்கிரமபாண்டிய நல்லூர் பொன்பற்றி உடையார் எடுத்தகை அழகியார் சோலைமலைச் சொக்கரான பல்லவராயருக்குக் குடிநீங்காக் காராண்கிழமையாக நின்றருளிய தேவர் கோயில் நிருவாகத்தார் விற்ற தகவலைத் தருகிறது.

இவ்விற்பனைக்கான விலையாகப் புது வாளால் வழிதிறந்தான் பணம் நாலாயிரம் தரப்பட்டது. கல்வெட்டில் மாறாதான் அநுசந்தானம் உடையாரான திருப்பாணதாதர் நின்றருளிய தேவர் திருக்கோயில் நிருவாகியாகக் குறிக்கப்படுகிறார். அவருடன் ஸ்ரீவைஷ்ணவர்களும் ஸ்ரீகாரியம் செய்வார்களும் பணியிலிருந்தனர். புதுவராகன், புதுக்குளிகை எனும் காசுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'உலகலங்காறன் திருநந்தவனம்' என்ற பெயரில் குளத்தூரில் இறைக்கோயிலுக்குரிய பூந்தோட்டம் ஒன்று இருந்த தகவலும் கிடைக்கிறது.

திருநாமத்துக் குடிநீங்காக் காராண்கிழமையாகக் குளத்தூர் விற்கப்பட்டதாகக் கூறும் இந்த ஆவணம், கல்வெட்டில், 'காணி பிரமாணம்' எனச் சுட்டப்பட்டுள்ளது. ஆவணத்தில் திருநாவுடைய பிரான் தாதரும் கோயில் கணக்கு மெய்ய மணவாள மூவேந்தவேளாரும் கையெழுத்திட்டுள்ளனர். 'ஓலைக் குற்றம், எழுத்துக்குற்றம், சொற்குற்றம் மற்றும் எப்பேர்ப்பட்ட குற்றமும் அல்லது ஆவதாகவும்' என ஆவணம் முடிக்கப்பட்டிருக்கும் முறை, ஆவணம் எழுதுதலில் அந்நாளைய மக்கள் கைக்கொண்டிருந்த சொல்லாட்சி வகைமையை விளக்குவதுடன், கருதப்பட்ட குற்றங்களையும் வெளிச்சப்படுத்துகிறது.50

குடைவரையின் காலம்

திருமெய்யம் விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் கிடைத்திருந்தும் அவற்றின் துணையால் அவ்வளாகத்தின் தோற்றத்தை உறுதிபட அறியக்கூடவில்லை. கல்வெட்டுகளுள் கோயிலோடு நேரடியாகத் தொடர்புடையவை வளாகத்தில் இரண்டு இறைவடிவங்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. முதலாம் இராஜராஜரின் கல்வெட்டு அறிமுகப்படுத்தும் 'கிடந்தபிரானை' சிவபெருமான் குடைவரையில் காணப்படும் சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, 'பள்ளி கொண்டருளின ஆழ்வார்' 'கண்மலர்ந்தருளின எம்பெருமான்' என அடையாளப்படுத்துகிறது.

சிவபெருமான் குடைவரையிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள முதலாம் இராஜராஜரின் கல்வெட்டு, 'நின்றருளின விஷ்ணு பட்டாரகர்' என அறிமுகப்படுத்தும் நின்றகோலப் பெருமாளை, அதே கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, 'நின்றருளிய தேவர்' என்று உறுதிப்படுத்துகிறது.

பிற்காலக் கல்வெட்டுகளின் 'மெய்யத்து மலையாளர்' 'அழகிய மெய்யர்' எனும் அழைப்புகளுள், 'அ
ழகிய மெய்யர்' சத்தியமூர்த்திப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் உற்சவத் திருமேனியையும் 'மெய்யத்து மலையாளர்' அதே கோயிலில் உள்ள மூலவர் திருமேனியான நின்றருளிய தேவரையும் குறிக்கின்றன. பள்ளி கொண்ட ஆழ்வார் பிற்காலக் கல்வெட்டுகளில் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.

சிவன்கோயிலுக்கும் விஷ்ணுகோயிலுக்கும் இடையிலிருந்த பூசலை நேர்செய்து ஒப்பந்தம் ஏற்படுத்தும் சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, விஷ்ணுகோயிலின் முதன்மை இறைவடிவமாக முன் நிறுத்துவது நின்றருளிய தேவரையே என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். வளாக உரிமையுடையவராகப் பள்ளி கொண்ட ஆழ்வாரின் பெயர் இக்கல்வெட்டில் ஓரிடத்தும் இடம்பெறவில்லை. பிரிவினைகள் அனைத்தும் மகாதேவர், நின்றருளியதேவர் பெயர்களிலேயே நிகழ்ந்துள்ளன. இவை அனைத்தும் நோக்க, மெய்யம் விஷ்ணுகோயிலின் முதன்மைத் தெய்வமாகவும் முதல் தெய்வமாகவும் நின்றருளிய தேவரையே கொள்ளவேண்டியுள்ளது. அவருடைய கோயிலைப் புதுக்கி, அண்டக்குடியை உண்ணாழிகைப்புறமாக அளித்த பெருந்தேவியின் கல்வெட்டும் இக்கருத்திற்கு அரணாகிறது.

மெய்யத்திற்கெனத் தனிப் பாசுரங்களேதும் பாடப்படவில்லையெனினும்51 திருமங்கையாழ்வார் பிறதலங்களைப் போற்றிப் பரவியபோது, எட்டிடங்களில், 'திருமெய்ய மலையாளர், மெய்ய மலையாளர், மெய்யம் அமர்ந்த பெருமாள், மெய்ய மணாளர், மெய்யத்து இன்னமுத வெள்ளம்' 2 என்றெல்லாம் மெய்யத்து இறைவனை நினைவுகூர்ந்திருக்கிறார்.

திருமெய்யத்தில் முதலில் உருவானவர் நின்றருளிய தேவரே என்பது தெளிவான நிலையில் பெருந்தேவியின் புதுக்குக் கல்வெட்டுக் கொண்டும் மங்கையாழ்வாரின் பாசுரச் சுட்டல்கள் கொண்டும் நின்றருளிய தேவர் வளாகம் கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பே மெய்யத்தில் அமைந்திருந்ததெனக் கொள்ளமுடியும். பள்ளி கொண்ட ஆழ்வாரின் குடைவரைச் சிற்பங்கள், அமைப்புமுறை கொண்டு நோக்கும்போது, குடைவரையின் காலத்தை ஏறத்தாழக் கி. பி. எட்டாம் நூற்றாண்டு எனக் கொள்வதே பொருந்துவதாகும்.

குறிப்புகள்

27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் மற்றும் தந்திவர்மப் பல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், 'குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்' என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186.
28. New Indian Eகpress, 30. 5. 2006.
29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154.
30. The Hindu, 17. 8. 2003.
31. IPS: 735.
32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194.
33. IPS: 460.
34. IPS: 685.
35. IPS: 792.
36. IPS: 872.
37. IPS: 873.
38. IPS: 967.
39. IPS: 687.
40. IPS: 692.
41. IPS: 764.
42. தினமணி, 5. 8. 2003.
43. IPS: 764.
44. IPS: 800.
45. IPS: 893.
46. IPS: 923.
47. தினமணி, 5. 8. 2003.
48. The Hindu, 17. 8. 2003.
49. தினமணி, 5. 8. 2003.
50. மேற்படி.
51. இது திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடும் ஜெ. ராஜாமுகமது, அடைப்புக்குறிகளுக்குள் பெரிய திருமொழி என்று வேறு எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமடலிலும் ஓரிடத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஆகியோர், 'இ
ச்சிற்பக் காட்சி இக்குடைவரையைப் பெரிதும் அழகு செய்கின்றது. இதனைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இவ்விறைவனைத் 'திருமேய மலையாளன் எனக் குறிக்கிறார்' என்றெல்லாம் எழுதியுள்ளனர். மு. கு. நூல். ப. 240.
52. திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126) நாலாயிர திவ்யப் பிரபந்தம், ப. 799.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.