http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 102

இதழ் 102
[ டிசம்பர் 2013]


இந்த இதழில்..
In this Issue..

2013 ஆண்டிற்கான மாமன்னன் இராஜராஜன் விருது
Thirumeyyam - 8
மாமண்டூர் நரசமங்கலம் குடைவரைகள் - 01
ஒரு கல், ஒரு கண்ணாடி
மரபுக் கட்டடக்கலை - 02
தனித்து விடப்பட்ட சோழர் காலத் திருமால்
விட்டலாபுரம் விட்டல கிருஷ்ணன் திருக்கோயில்
ஆலமர் செல்வன் பெற்ற கொடை
இதழ் எண். 102 > கலையும் ஆய்வும்
விட்டலாபுரம் விட்டல கிருஷ்ணன் திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
கண்ணனின் பல்வேறு வடிவங்களைத் திருக்கோயில்களில் சிற்ப வடிவில் காண்கிறோம். அவற்றுள் ஒரு வடிவமான விட்டலருக்காக எடுக்கப்பட்ட தொன்மையான திருக்கோயில் விட்டலாபுரத்தில் அமைந்துள்ளது. சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் புதுப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.



கோயில் நுழைவாயில் முழுமையடையாத கோபுரத்துடன் விளங்குகுகிறது. நுழைந்தவுடன் காண்பது பலிபீடம் மற்றும் கொடிக்கம்பம். அடுத்து பெரிய திருவடியான கருடன் சன்னிதி. கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் 'செவ்வன் மகன் முத்தி சதாசேர்வை' என்கிற கல்வெட்டுப் பொறிப்பு காணப்படுகிறது. செவ்வன் என்பவனுடைய மகன் இக்கொடிக்கம்பத்தை நிறுவியிறுக்க வேண்டும்.



அடுத்துள்ள விட்டலர் திருமுன் கருவறை, மகாமண்டபம், முன் மண்டபம், என்கிற அமைப்புக்களை உடையதாக விளங்குகிறது. முன்மண்டபத்தில் நான்கு தூண்கள் காணப்படுகின்றன. திருமுன்னிற்குள் நுழைவதற்குப் பக்கவாட்டுப் படிக்கட்டுகளின் வழியே மேலே செல்ல வேண்டும்.



கருவறையில் விட்டலர் தமது இரு தேவியர்களுடன் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். இரண்டு கரங்களுள் இடக்கரம் சங்கேந்தி நிற்க வலக்கரம் அருள்புரியும் (வரதஹஸ்தம்) விதமாக அமைந்துள்ளது. அழகிய புன்னகையுடன் அமைந்துள்ள விட்டலரின் திருமுக தரிசனம் காணக்கிடைக்கிறது.



திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் சந்தானலட்சுமித் தாயார் திருமுன் அமைந்துள்ளது. வடக்குத் திருச்சுற்றில் ஆண்டாள் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருமுன், ஸ்ரீதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருமுன் அமைந்துள்ளது. அடுத்து விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) இராமாநுஜர் எழுந்தருளியுள்ள சன்னிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்றில் பலவிதமான மலர்ச் செடிகள், துளசி நந்தவனம் அமைக்கப்பட்டுச் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது.

இத்திருக்கோயில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்திருக்கோயில் முன்பு வழிபாடின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைப் புதுப்பிக்கும்போது கிடைத்த கற்திருமேனிகள், கல்வெட்டுக்கள் ஆகியவை கோயில் வளாகத்தின் வடகிழக்கு மூலையில் பீடத்தின் மீது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக அமைந்துள்ளன.



விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் காணக்கிடைக்கும் அம்மன்னரின் கல்வெட்டில் (கி.பி. 1518) ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் முகந்தனூர் நாட்டுத் திருக்கழுக்குன்ற பற்று பேரம்பாக்கத்துச் சீமையான ஜனநாத நல்லூரான வைப்பாக்கம் விட்டலாபுரத்திலிருக்கும் சுரகொண்டைய தேவ சோழ மகாராசனான குலசேகரய்யன் விட்டலாபுரம் என்கிற ஊரை உருவாக்கி விட்டலேசுவரன் கோயிலுக்குத் திருவாராதனை திருப்பணிக்கு நிலம் அளித்த செய்தி கூறப்படுகிறது. நில எல்லைகளைக் குறிப்பிடும்போது புதுப்பட்டினம், ஆலங்குப்பம், நாரணப்பையன் குப்பம், வைப்பாக்கம் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன.



இக்கோயிலின் மகாமண்டபத் தெற்கு குமுதப்படையில் காணப்படும் சதாசிவராயர் காலக் கல்வெட்டில் (கி.பி. 1570) இராமராசய்யன் ஆணையின்படி உய்யால நல்ல திம்ம நாயகன், வாலு நாயகன், அண்ணாப்பிள்ளை நாயகன் ஆகியோர் தங்களுடைய தாய் தந்தையர் நலனுக்காக விட்டலாபுரம் விட்டலேசுரவருக்குத் திருத்தேர் திருநாளுக்கும் திருப்பணிக்குமாக வெங்கம்பாக்கம், குன்றத்தூர், குழி நாவலகத்தி, மேலப்புன்னகப்பட்டு, ஆகிய ஊர்களைத் தானமாக அளித்த செய்தி கூறப்படுகிறது. இச்செய்தியினால் இக்கோயிலில் திருத்தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றதை அறியமுடிகிறது.

மேலும் இக்கோயிலில் காணப்படும் விஜயநகர மன்னன் சீரங்கதேவன் (கி.பி. 1630) கல்வெட்டில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்காக பல கிராமங்களை அளித்த செய்தி கூறப்படுகிறது.

இவ்வாறாக 16ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட விட்டலாபுரம் விட்டலேசுவரர் திருக்கோயிலில் நூறாண்டுகளுக்கும் மேலாக சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வந்தன என்பதை கல்வெட்டுச் சான்றுகளால் அறிகிறோம்.

தமிழ்நாட்டில் விட்டல கிருஷ்ணனுக்காக எடுக்கப்பட்ட தொன்மையான தனிக்கோயில் என்கிற சிறப்புடன் விட்டலாபுரம் திருக்கோயில் விளங்குகிறது. ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஆண்டாள் சன்னிதிக்கு எதிரே ரங்கவிலாச மண்டபத்திலும் விட்டல கிருஷ்ணனுக்காக தனிச்சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் போற்றிச் சிறப்பாகப் பராமரிக்கப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயிலை அனைவரும் கண்டு மகிழ்வோம்!

கல்வெட்டு ஆதாரங்கள்;
1. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு - 2006. கல்வெட்டு எண்கள் 1/2002 முதல் 5/2002 வரை
2. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 18, 117, 118, 119 - 1932-33, 1934-35this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.