http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 16

இதழ் 16
[ அக்டோபர் 16 - நவம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்றளி கட்டிய காரணம்
பகவதஜ்ஜுகம் - 5
கோயில்களை நோக்கி - 4
பனைமலையில் ஒரு மாலைப்பொழுது
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம் - 2
சிந்து வெளியில் முருகன் - திரு. ஐராவதம் மகாதேவனின் மறுமொழி
ஜி.என்.பாலசுப்ரமணியம்
சங்கச் சிந்தனைகள் - 4
இதழ் எண். 16 > பயணப்பட்டோம்
பனைமலையில் ஒரு மாலைப்பொழுது
ம.இராம்நாத்
பனைமலை தமிழக கோயில் கட்டுமான வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டு நிற்கும் கோயிலைத் தாங்கி பெருமை பெற்ற மலை.

விதவிதமாக வெவ்வேறு வடிவங்களில் கோயில் கட்டுமானத்தை வளர்த்திச் சென்ற கலாரசிகர் இராஜசிம்ம பல்லவரின் முத்தாய்ப்பு படைப்புக்களான அதிரண சண்டேஸ்வரம் , தர்மராஜ இரதம் , கடற்கரைக் கோயில்கள் (மாமல்லை) - காஞ்சி கையிலாயநாதர் கோயில் என்னும் வரிசையில் பனைமலை தலகிரீஸ்வரர் ஆலயமும் இடம்பெறுகிறது.

சாலைப் பத்திகளை அங்காலயங்களாக முன்னிழுத்து ஜாலம் காட்டும் பல்லவக் கலைக்கோயிலை பார்ப்பது என்று முடிவுசெய்து தளவானூர், மண்டகப்பட்டு, எண்ணாயிரம், பிரம்மதேசம் என்றெல்லாம் சுற்றிவிட்டு ஒருவழியாக மாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் பனைமலை கோவிலை அடைந்தோம். கோவிலை அடைந்த பிறகு களைப்பு தொற்றிக்கொள்ள வழியில் வாங்கிய பழங்களை காலிசெய்து விட்டு இதுவரை வாழ்க்கையில் காணாத கலைச்செல்வங்களை காணப்போகும் புது வலிமையுடன் மலை ஏறினோம்.

செல்லும் வழி

விழுப்புரத்திலிருந்து, செஞ்சி செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலையிலிருந்து சுமார் 1/2 கி.மீ. தூரம், பசுமையான வயல் வெளிகளுக்கு இடையே செல்லும் பாதையில் நாம் சென்றால் அங்கே தலகிரீஸ்வரர் கோவில் அடிவாரத்தை அடையலாம். அடிவாரத்தில் நாம் வந்த களைப்பு நீங்க இயற்கையின் பரிசாக புங்கை வன மரம் நன்றாக வளர்ந்து, நிழல் பரப்பிகொண்டு உள்ளது. அடிவாரத்தில் நாம் படிகள் ஏறுவதற்கு முன்பாக ஒரு சிறிய கோவிலைக் காணலாம். அந்த சிறிய கோவிலின் தூண்களில் பார்வதி சிவனை வழிபடுவது போன்ற பல காட்சிகள் புடைப்புச்சிற்பமாகச் செதுக்கபட்டுள்ளன.

படிகள்

நாம் கோவிலை சென்றடைய ஏதுவாக, இயற்கையின் கொடையைக்கொண்டே மலையில் உள்ள பாறைகளை சிறிய படிகளாக அமைத்துள்ளனர். ஏறும்போது எளிதாக இருந்தாலும் இறைவனை தரிசித்து விட்டு கீழிறங்கி வரும் பொழுது சிறிது கவனமாகவே இருக்க வேண்டியுள்ளது.





திருக்கோயில்


படிகளில் இருறமும் மலைகளுக்கே உரித்தான சிறிய அழகான சுனைகளைக் காணலாம். இடது பக்கச் சுனையில் அல்லி கொடி மற்றும் மலர்களையும் காணலாம். வலது பக்கச் சுனையை அடைய பாதையிலிருந்து விலகி சில படிகள் கீழே சென்றால் சிறு மீன்கள் நீந்தி விளையாடுவதையும் காணலாம். கோவிலின் மேற்கு பக்கத்தில் மிகப்பெரிய சுனை ஒன்றும் உள்ளது. படிகளில் ஏறும் பொழுது வலது பக்க கற்களில் சிறிய அளவில் கணபதி படிமங்களை செதுக்கியுள்ளனர்.

அமைப்பு

கிழக்கு நோக்கி கருவரை. முன் மண்டபத்துடன் கூடிய கருவறையின் பக்கங்களில் பக்கத்திற்கொன்றாக மூன்று அங்காலயங்களும் வலது பக்கத்தில் சிறிது உயர்ந்த மேடையும் உள்ளன. கருவரையை சுற்றிக்கொண்டு வரும் பொழுது இடது பக்கம் இரண்டு சிறிய சன்னிதிகள் பூட்டிய நிலையில் உள்ளன. இடது பக்கத்தில் சற்று தள்ளி அம்மன் தனிக்திருமுன் உள்ளது. இதன் கட்டுமானத்தை கொண்டு பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கருதலாம்.

பத்ர சாலா விமானம்

இது ஒரு கலப்பு விமானம். பாதபந்த தாங்கு தளத்துடன் கூடிய முத்தள வேசரம். கீழே எண்பட்டையாக ஆரம்பித்து, மேலே வட்டமாக முடிந்துள்ளது. சாலைப்பத்தி மட்டும் மூன்று 3 பக்கங்களிலும் வெளியே இழுக்கப்பட்டு மூன்று தனி அங்க ஆலயங்கள் ஆக்கப்பட்டுள்ளன. கோயில் கட்டுமானத்தில் விதவிதமான மாதிரிகளை உருவாக்கிப் பார்க்கும் ஆர்வம் இராஜசிம்ம பல்லவருக்கு சற்று அதிகம்தான் !





விமானம்


கருவறை

இங்கு கிழக்கு பார்த்த வண்ணம் உள்ள கருவறையின் முகப்பில் உள்ள வாயிற்காவலர்களில், வலப் பக்கம் சூலத்தேவரும், இடப் பக்கம் ஒரு வாயிற்காவலரும்(மஹாகாளர் ?) உள்ளனர்.





வாயிற்காவலர்



சூலத்தேவர் இடது கால் தரையில் பதித்தும், வலது கால் சிறிது மடக்கி தரையில் லேசாக ஊன்றிய நிலையில், இரண்டு கைகளுடன் காட்சிதருகிறார். இரண்டு கைகளிலும் வளையல்களும், முப்பட்டை கங்கணமும், அதற்கு மேல் யாளி முக பட்டயமும் அணிந்துள்ளார். தோள்களின் மீது முடி கற்றையாக உள்ளது போல காட்டப்பட்டுள்ளது. இடையில் பட்டாடை. கழுத்தில் சரப்பளி மற்றும் உருத்திராட்ச மாலை. தலையில் யாளியுடன் - வேலைப்பாடு மிகுந்த கிரீடம். அதற்குப்பின் காணப்படும் சூல இலைகள்.

இடப்பக்கத்து காவலர் கால் தரையில் பதித்தும், வலது கால் சிறிது மடக்கி தரையில் லேசாக ஊன்றிய நிலையில், இரண்டு கைகளுடன் உருள்பெருந்தடியுடன் காட்சிதருகிறார். இரண்டு கைகளிலும் வளையல்களும், கங்கணமும் யாளி முக பட்டயமும் அணிந்துள்ளார். சூலதேவரிடம் காணப்படாத வேலைப்பாடு மிகுந்த உதரபந்தத்தோடு காணப்படும் இவர் இடது கையை மடக்கிய நிலையில் உருள்பெருந்தடியின் மீது இருத்தி வலக்கையால் எச்சரிக்கிறார்.





பூதகணம்


வாயிற்காவலருக்கு எதிரில் பக்கத்திற்க்கு ஒரு பூதகணம் என இரண்டு பூதமும் உட்கார்ந்த நிலையில் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு சங்கு ஊதிக்கொண்டு தெரிகின்றன. பிற்காலக் கோவில்களில் பொதுவாக காணப்படும் பூத வரி இக்கோயிலில் காணக்கூடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.





சோமாஸ்கந்தர்


கருவரையில் உள்ள லிங்கத்தின்மீதுள்ள அலங்காரத்தினால், அது 8/16 பட்டைகள் கொண்ட தாரலிங்கமா அல்லது வழக்கமான உருள் வடிவமா என்பதைக் கண்டறிய இயலவில்லை. கருவறை லிங்கத்திற்குப் பின் வழக்கமான பல்லவர் பாணியில் சோமாஸ்கந்தர். சிவபெருமான் உமை மற்றும் முருகனுடன் பட்டாடை உடுத்தி, சுகாஸனத்தில் இன்பமாக அமர்ந்துள்ளார். தலையில் கிரீடமும், மார்பில் முப்புரி நூலும், உதரபந்தமும்(மார்பையும், வயிற்றையும் பிரிக்கும் இடத்தில் அணியப்படும் ஆபரணம்) காணப்படுகின்றன. கருவரையில் போதிய வெளிச்சம் இல்லாத்தலும், மூர்த்தத்தின் மேல் படிந்துள்ள ஒட்டடையின் உபயத்தாலும் இதற்குமேல் அவரை சரிவர கவனிக்கமுடியவில்லை. பார்வதி சன்னவீரம் அணிந்து, இரண்டு கைகளுடன், வலது கையில் மலரேந்தி காணப்படுகிறார். இவரது மடியில் முருகன்.

கருவரை தாண்டி முக மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் தென்படுகின்றன. அர்த்தமண்டபத்தில் ஒரு பக்கம் பிரம்மாவும் மற்றொரு பக்கம் விஷ்ணுவும் தென்படுகின்றனர். கருவறை தேவகோஷ்டங்களில் வழக்கமாக காணப்படும் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு முதலிய படிமங்களுக்குப் பதிலாக அனைத்து கோஷ்டங்களிலும் தாராலிங்கங்கள் தென்படுவது கவனிக்கவேண்டிய அம்சம். ஏனெனில் இங்கு சாலைப் பத்திகள் அனைத்தும் அங்க ஆலயங்கள் ஆக்கப்பட்டுவிட்டன அல்லவா ? ஆலயம் என்றால் லிங்கம் வேண்டுமே ? இவற்றில் இரு லிங்கங்கள் கிழக்கு நோக்கியும், ஒன்று மேற்கு நோக்கியும் உள்ளது.

அர்த்த மண்டபத்து நான்முகன் - திருமால்





திருமால்



திருமால் இலக்குமி சமேதராக பட்டாடை உடுத்தி, சுகாஸனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். தலையில் கிரீடம். வலது காதில் பனை ஓலைக் குண்டலம். இடது காதில் வட்ட வடிவில் குழை. கழுத்தில் சரப்பளியும், மார்பில் முப்புரி நூலும் தெரிய மார்புக்கும் வயிற்றுக்குமிடையில் உதரபந்தம்.வலது முன்கரம் கருவறைப் பெருமானைப் போற்ற இடக்கரம் மடித்துக் காணப்படுகிறது. பின்கரங்களில் சங்கும் சக்கரமும்.

இலக்குமி ஆபரணம் அதிகம் இன்றி, பட்டாடை உடுத்தி, இரண்டு கைகளுடன், வலது கையில் மலரேந்திக் காணப்படுகிறார்.





நான்முகன்



பிரம்மனும் சரஸ்வதியுடன் பட்டாடை உடுத்தி, சுகாஸனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளனர். தலையில் வேலைப்பாடுடன் கூடிய கிரீடம். காதில் பனை ஓலைக் குண்டலங்கள் - மார்பில் முப்புரி நூலும், உதரபந்தமும். திருமாலைப் போலவே இவரது வலக்கரமும் கருவரைப் பரம்பொருளைப் போற்றுகின்றது. கலைமகள் ஆபரணம் அதிகம் இன்றி, பட்டாடை உடுத்தி அமர்ந்துள்ளார்.

அங்காலயங்கள் - பல்லவ ஓவியங்கள்

தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கருவரையைச் சுற்றி அங்காலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு நோக்கியுள்ள சாலைப்பத்திக்கு சற்று கீழே - மகர தோரணமும், அந்த தோரணத்தில் சங்கு ஊதுவது போல ஒரு பூதமும் உள்ளது. மற்ற இரு திசைகளிலும் இது கிடையாது.





உமை ஓவியம்



வடபுறத்து அங்காலயத்தில்தான் இந்தக் கோவிலின் மதிப்பிட முடியா சொத்தான பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இன்றைக்கு காணும் நிலையில் கிழக்கு நோக்கி குஞ்சிதகரணர் (ஒருகால் தரையிலும் மற்றும் ஒருகால் தலைக்கு மேலே தூக்கிய நிலை) கோட்டோவியமாகத் தெரிகிறார்.தெற்கு பக்கத்து சுவரில்தான் அகில இந்தியப் புகழ்பெற்ற பல்லவர்கால உமை தெரிகிறார். ஒரு காலை சிறிய மேடை மேல் நிறுத்தி, ஒரு காலை தரையில் ஊன்றி ஒயிலாக நின்ற கோலத்தில் காட்சிதரும் உமையின் முகலாவண்யத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலது.

ஆலயத்தின் வாயிலிலிருந்து நோக்கினால் ஈசனின் ஆட்டத்தை உமை பார்ப்பது போல் தோன்றும். இதே அங்காலயத்தின் மேற்பரப்பில் ஓவியங்கள் முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளன.

கல்வெட்டுகள்

கோவிலைச் சுற்றி எல்லா பட்டிகையிலும் ராஜசிம்ம பல்லவனுடைய நீண்ட 'கிரந்த கல்வெட்டுகளை'க் காணலாம். கருவறையை அடையப் போடப்பட்டுள்ள தெற்கு பக்க படிக்கட்டுகளில் தமிழ் கல்வெட்டுகளைக் காணலாம். தமிழ் கல்வெட்டுகள் பிற்காலத்தைவை.





கல்வெட்டுக்கள்



விடைபெறல்

இங்கு உள்ள விமானம், கோபுரம், மகரதோரணம், வாயிற்காப்போர் மற்றும் பல இடங்களில் பல்லவர்களுக்கு பின்னர் வந்தவர்களால் சுதைப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பல இடங்கள் உடைந்த நிலையில் உள்ளதால் அதை சரி செய்வதற்க்காக சுதைப்பூச்சு போடப்பட்டிருக்கலாம்.





மயக்க மாலை



இந்த கோவிலுக்கு எப்போது சென்றாலும், மயக்கும் மாலைப்பொழுதை அங்கு இருந்து ரசிக்க வேண்டும். மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் பொழுது, கோவிலுக்கு முன்னர் பொங்கிப் பெருகும் வண்ணப் பச்சை கலந்த வயல்வெளிகள், கோவிலுக்கு ஒருபுறம் விரியும் மலை, இரு புறமும் தெரியும் நீர் நிலைகள்....

இராஜசிம்மன் மிகப்பெரிய ரசிகன் ! சந்தேகமேயில்லை...

கடைசியாக ஒரு சிறு குறிப்பு: பனைமலை சென்றடைய ஒரு வழிகாட்டியும் உள்ளார். மாம்! மேகக்கூட்டத்தினிடையில் அமர்ந்திருக்கும் நந்தி தான் அவர். பனைமலையை நோக்கியபடி அமர்ந்திருப்பார். அவர் நோக்கும் திசையில் நீங்கள் சென்றால் பனைமலையை எளிதில் அடைந்துவிடலாம். னால் ஒன்று மேகத்தினிடையில் ஒளிந்துகொண்டிருக்கும் அந்த நந்தியை கண்டுபிடிக்க நீங்கள் வெறும் கண்ணால் பார்த்தால் போதாது உங்கள் கலைக்கண்களைக் கொண்டுப் பார்க்க வேண்டும்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.