http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 16

இதழ் 16
[ அக்டோபர் 16 - நவம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்றளி கட்டிய காரணம்
பகவதஜ்ஜுகம் - 5
கோயில்களை நோக்கி - 4
பனைமலையில் ஒரு மாலைப்பொழுது
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம் - 2
சிந்து வெளியில் முருகன் - திரு. ஐராவதம் மகாதேவனின் மறுமொழி
ஜி.என்.பாலசுப்ரமணியம்
சங்கச் சிந்தனைகள் - 4
இதழ் எண். 16 > ஆலாபனை
ஜி.என்.பாலசுப்ரமணியம்
லலிதாராம்
செப்டம்பர் 24-ஆம் தேதி, கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த இசைக் கருத்தரங்கில் ஜி.என்.பி-யைப் பற்றி பேச ஒரு வாய்ப்புக் கிட்டியது. அக்கருத்தரங்கில் வெளியான ஆய்வுக் கோவையில் இக்கட்டுரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. டபுள் லைன் ஸ்பேசிங்கில் ஐந்து பக்கத்திற்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டியிருந்ததால் பல விஷயங்களை மேலோட்டமாகவே இக்கட்டுரை தொடுகிறது. By no standards this could be considered a research article. Just an attempt to show the tip of the ice berg.



ஜி.என்.பாலசுப்ரமணியம்

கர்நாடக இசைக் கச்சேரி முறையை தமிழுக்கு ஒப்பிட்டோமெனில், அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் கச்சேரிகள் தொல்காப்பியத்திற்கிணையாகும். தொல்காப்பியம் படித்தவர் பலரிருப்பினும், காலத்தை கடந்து நிற்கும் வெண்பாக்களையும் அகவல்களையும் படைத்திருப்பவர் சிலரே. அதே போல், அரியக்குடி இராமானுஜர் ஐயங்கார் அமைத்துக் கொடுத்த கச்சேரி முறையை பின்பற்றியவர் பலரெனினும், இசையுலகில் என்றுமழியாச் சுவடை விட்டுச் சென்றவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் முதன்மையாக விளங்குபவர் 'ஜி.என்.பி' என்று பரவலாய் அழைக்கப்பெற்ற கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம்.

ஜி.என்.பி என்னும் இசையுலக இளவரசரின் தோற்றம், ஜி.வி.நாராயணசாமி ஐயர் விசாலம் அம்மாள் தம்பதியினரின் வீட்டில், 1910-ஆம் வருடம் ஜனவரி 6-ஆம் நாள் நிகழ்ந்தது. பார்த்தசாரதி சங்கீத சபையின் காரியதரிசியாகவும் ம்யூசிக் அகாடமியின் 'experts commitee' உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த நாராயணசாமி ஐயரின் வீட்டில், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், பல்லடம் சஞ்சீவ ராவ், பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் போன்ற சங்கீத ஜாம்பவான்களின் கூட்டம் எப்பொழுதும் குழுமியிருக்கும். இச்சூழலில் வளர்ந்த ஜி.என்.பி-யின் மனம் சங்கீதத்தின்பால் ஈர்க்கப்பட்டதில் ஆச்சரியமொன்றுமில்லை.

1957-ஆம் வருடம் வெளியான 'My First Concert' என்ற ஜி.என்.பி-யின் கட்டுரையில் (தமிழாக்கம் பின்வருமாறு), "நான் பிறந்த நாள் முதல் எனைச் சுற்றியிருந்த சூழல் சங்கீத மயமாகவே இருந்தது. இதனால் எனது சங்கீத ஞானமும் அதன் பால் இருந்த ஈர்ப்பும் கிளைவிட்டு நாளுக்கு நாள் வளர்ந்தபடியிருந்தது. என் வீட்டிலிருந்தபடியே அற்புதமான சங்கீதத்தைக் கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. நல்ல சங்கீதத்தில் ஊறியதன் பயனாய் சஹானா, செஞ்சுருட்டி, பேகடா, சாவேரி போன்ற இராகங்களை பிழையின்றி பாட முடிந்தது. ஒரு குருவிடம் சென்று முறையாகப் பயிலாவிடினும் எனக்கு ஸ்வர ஞானம் சிறு வயதிலேயே கைகூடியது. இதற்குக் காரணம் பெரியோர்களின் ஆசியே என்பது என் கருத்து.", என்கிறார். ஜி.வி.நாராயணசாமி ஐயர் தனது மகன் வழக்கறிஞராவதையே விரும்பினாரெனினும் ஜி.என்.பி-யிடமிருந்த சங்கீத தாகத்தை உணர்ந்தவராய் சங்கீத சிக்ஷையுமளித்தார். அந்நிலையில், அவர் குடியியிருந்த வீட்டில் இன்னொரு பகுதியில் வயலின் வித்வான் மதுரை சுப்ரமணிய ஐயர் குடியேர, அவரிடமும் சில காலம் ஜி.என்.பி சங்கீதம் பயின்றார்.

1928-ஆம் வருடம், மயிலை கபாலீசுவரர் கோயில் வசந்த உத்சவத்தில் ஏற்பாடாகியிருந்த முசிறி சுப்ரமண்ய ஐயரின் கச்சேரி தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தாகிவிட, அக்காலத்தில் இசைத் தோண்டில் ஆழ்திருந்த ஏ.கே.இராமசந்திர ஐயரும் மதுரை சுப்ரமணிய ஐயரும், நாராயணசாமி ஐயரிடம் ஜி.என்.பி-யின் கச்சேரிக்கு அனுமதியளிக்க வேண்டினர். நாராயணசாமி ஐயர் முதலில் சிறிது தயங்கினாலும், பின்பு அனுமதியளித்தார். சங்கீத வித்வானாவதையே இலட்சியமாய் கொண்டிருந்த ஜி.என்.பி-க்கு இவ்வாய்ப்பு மகிழ்வளித்தாலும், முசிறி சுப்ரமணிய ஐயர் போன்ற ஜாம்பவானின் இடத்தை தன்னால் நிரப்ப முடியமா, என்ற அச்சமும் கூடவேயிருந்தது. ஜி.என்.பி, மானசீக குருவாக உருவகித்திருந்த அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் இசையுலகப் பயணம், திருப்பரங்குன்றத்தில் புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பிள்ளை ஏற்பாடு செய்திருந்த மதுரை புஷ்பவனத்தின் கச்சேரி ரத்தான பொழுது, அங்கிருந்த இளைஞரான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி புகழின் உச்சியை அடைய வைத்த நிகழ்வை, மதுரை சுப்ரமண்ய ஐயர் எடுத்துரைத்தவுடன், ஜி.என்.பி-யின் தயக்கம் தளர்ந்து கச்சேரிக்குத் தயாரானார். அக்கச்சேரியைக் கேட்ட கே.எஸ்.முத்துராமன் தனது புத்தகத்தில், "ஜி.என்.பி பாடிய பந்துவராளியும், பைரவியும், அடாணாவும் ஒரு மஹாவித்வானின் இசை சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டின", என்கிறார்.

ஜி.என்.பி என்று நினைத்ததும் மனதில் முதலில் தோன்றுவது அவரின் கந்தர்வ குரல்தான். ஆழ்ந்த சங்கீத ஞானமும், அதீத கற்பனையும், அக்கற்பனையில் தோன்றுவதையெல்லாம் வெளிக்கொணரக் கூடிய அதிசயக் குரலும் கொண்ட அபூர்வ கலவையே ஜி.என்.பி. இக்கூற்றிற்கு அவர்தன் இளம் வயதில் கொடுத்திருக்கும் 'வாசுதேவயனி' கிராம்போன் ரிக்கார்டு ஒன்றே சான்று. வெளியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்றும் மக்களிடையில் பிரபலாமாக இருக்கும் இப்பாடலை வர்ணிக்க வார்த்தையில்லை. கல்யாணி இராகம் ஒரு பிரவாகம் போன்றது. அதன் முழு ஸ்வரூபமும் பல மணி நேரம் பாடினால் கூட முழுமையாய்க் கொண்டு வருவது துர்லபம். பத்து நிமிடத்திற்குள், ஒரு மின்னல் வேக ஆலாபனை, மத்யம கால கீர்த்தனை, ஸ்வர ப்ரஸ்தாரம் எல்லாம் பாடி, கேட்பவர் மனதில் நிறைவை ஏற்படுத்தியிருக்கும் ஜி.என்.பி-யின் அந்த ஒரு வெளியீடே அவரின் இசையாற்றலுக்கு தக்கச் சான்று.

இன்று கேட்கக் கிடைக்கும் ஜி.என்.பி-யின் கச்சேரிகளை பலமுறை அலுக்காமல் கேட்டிருப்பவன் என்னும் முறையில், அவரது கச்சேரியைப் பற்றிய சில குறிப்புகள் பின் வருமாறு. கச்சேரிகளில் ‘களை கட்டுதல்’ என்றொரு பதம் உண்டு. அதை விளக்க முயல்வது வீண் முயற்சி. அதன் பொருள் உணர ஜி.என்.பி-யின் கச்சேரியின் முதல் உருப்படியைக் கேட்டால் போதும். அவரது கச்சேரிகளில் இன்று நமக்கு அதிகம் கேட்கக் கிடைப்பது அவரது கடைசி 10 வருட வாழ்வில் பாடிய கச்சேரிகளே. அவற்றை மட்டும் ஆராய்ந்தால், விறுவிறுப்பான வர்ணம் அல்லது ‘யோசனா’, ‘தெலிசி ராம’ போன்ற மின்னல் வேகக் கீர்த்தனை அல்லது ‘வாதாபி கணபதிம்’ போன்ற மத்யம காலக் கீர்த்தனை, அல்லது சஹானா போன்ற ரக்தி ராகத்தில் அமைந்த ‘ஈ வசுதா நீவண்டி’ போன்ற கீர்த்தனை, என்று பல வகைகளில் கச்சேரி தொடங்கும். எப்படித் தொடங்கினும் கச்சேரியைக் களை கட்டும்படிச் செய்வது அவரது தனிச் சிறப்பாகும்.

அரியக்குடி இராமனுஜ ஐயங்காரின் பத்ததியின் படி மத்யம காலக் கீர்த்தனங்களே ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் நிறைந்திருக்கும். சவுக்க கால கீர்த்தனங்களும் கச்சேரியின் விறுவிறுப்பை குறைத்திடா வண்ணம் இடம் பெறும். ஜி.என்பி-யின் கற்பனையைப் பறைசாற்றும் வகையில் ஒரே இராகத்தின் ஆலாபனை கச்சேரிக்கு கச்சேரி அல்லது அவர் பாடும் கீர்த்தனத்திற்குக் கீர்த்தனம் மாறுபடும். அவரது ஆலாபனைகள் இரசிகரைக் குழப்பாமல், முதல் பிடியிலேயே இராக ஸ்வரூபத்தை தெளிவாகக் காட்டிவிடும். பல பிரபலமான இராகங்களில் புதிதாய் சில பிரயோகங்கள் பாடியிருப்பதும் (உ.தா கல்யாணி, காம்போஜி ராக ஆலாபனைகள்), அந்நாளில் புழக்கத்திலில்லா இராகங்களை புழக்கத்திற்கு கொண்டு வந்திருப்பதும் (உ.தா: மாளவி, செஞ்சு காம்போஜி, காபி நாராயணி, டக்கா, தீபகம்) ஜி.என்.பி-யின் பல இசைத் தொண்டுகளுள் குறிப்பிடத்தக்கவை. வாழ்நாள் முழுவதும் தன்னையொரு மாணவனாகவே கருதிக் கொண்ட ஜி.என்.பி, தனது கடைசி காலம் வரை புதிய கீர்த்தனங்கள் கற்றபடியிருந்தார். 'சோபில்லு', 'சரஸ சாம தான', 'மறுகேலரா', 'தாமதமேன்', 'ப்ரோசேவா', 'மா ரமணன்' போன்ற பாடல்களைப் பிரபலப் படுத்தியதுடன், பல கீர்த்தனங்களில் நிரவல், கல்பனை ஸ்வரம் பாடுவதிலும் பல புதுமைகள் புரிந்துள்ளார். உதாரணமாக, 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' பாடலில் பெரும்பான்மையானவர்கள் நிரவலுக்கு எடுத்துக் கொள்ளும் இடம் 'வாசவாதி சகல தேவ' என்பதாகும். ஜி.என்.பி-யின் நுண்ணறிவு 'தாபத்ரய ஹரண' என்னும் இடத்தில் 'தா பா' என்னும் ஸ்வராக்ஷரப் பிரயோகம் ஒளிந்திருப்பதைவுணர்ந்திருக்கிறது. இதே போல 'மீனாக்ஷி மேமுதம்', 'நிதி சால சுகமா' போன்ற பாடல் நிரவல்களிலும் ஜி.என்.பி-யின் கற்பனைத் திறன் உள்ளங்கை நெல்லிக்கனி. கல்பனை ஸ்வரங்கள் பாட அவர் தேர்ந்தெடுக்கும் இடத்தின் பொருத்தம் பலரின் பாராட்டைப் பெற்றவொன்று. ஜி.என்.பி-யின் சங்கீதத்தில் லயத்தில் உறுதியான பிடியிருப்பினும், ஸ்வரம் பாடும் பொழுது சர்வ லகு முறையையே பின்பற்றப் பட்டு இராக பாவம் கெடா வண்ணம் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும்.

ஜி.என்.பி-யின் இசையுலகிற்குப் பல புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்திருப்பினும், அவற்றுள் குறிப்பிடத்தக்கது 'ஸ்ருதி பேதம்' அல்லது 'கிரஹ பேதம்' ஆகும். நமது நாட்டின் இசை வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஒரு தாய் இராகத்தின் கிரஹ பேதத்திலிருந்து பிறந்தவையே பல இராகங்கள் என்று இலக்கியங்களின் மூலம் தெரிய வருகிறது. காலப் போக்கில் வழக்கொழிந்து போன இம்முறையைக் கச்சேரியில் ஜி.என்.பி பிரயோகித்த பொழுது பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, ஜி.என்.பி-யின் செயலில் தகுந்த நியாயம் இருப்பதாக முத்தையா பாகவதர் தலைமையில் குழுமியிருந்த அறிஞர் குழு முடிவு கூறியது. ஓர் ராகத்தில் 'ஸ்ருதி பேதம்' செய்யும் பொழுது அதுவரை உருவாக்கிய பாவம் கெடாமல் இருப்பது அவசியம். இக்கம்பி மேல் நடக்கும் வித்தையில் தேர்ச்சி பெற்ற முதல் கலைஞர் ஜி.என்.பி எனலாம்.

ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் பிரதான உருப்படியாக 'ராகம் தானம் பல்லவி' பெரும்பாலும் இடம் பெறும். பெரும்பாலும் இப்பகுதிக்கு முன் 'நெனருஞ்சினானு', 'விடஜால', 'ராமசந்திரம் பாவயாமி' போன்ற அதி துரித கீர்த்தனை இடம் பெறும். கச்சேரி களை கட்டி, குரலும் நல்ல பதத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜி.என்.பி பல பகுதிகளாய் பிரித்துக் கொண்டு ஒரு இராகத்தை ஆலாபனம் செய்வது வழக்கம். ஓவியர், தான் வரையப் போகும் விஷயத்தை சில கீற்றுகளாய் முதலில் நிரப்புவது போல, விஸ்தரிக்கப்படும் இராகத்தின் ஸ்வரூபம் சில கீற்றுகளில் காட்டப்படும். இரண்டாம் கட்ட ஆலாபனையில் மந்திர ஸ்தாயியில் உள்ள பிரயோகங்களில் கவனம் செலுத்தப்பட்ட, நாதஸ்வரப் பாணியில் பல அழகிய ஸ்வரக் கோர்வைகள் கோக்கப்படும். மூன்றாம் கட்டமாக தார ஸ்தாயிப் பிரயோகங்கள் இடம் பெறும். அவரது சங்கீத வாழ்வின் உச்சியில் இருந்த சமயத்தில் தார ஸ்தாயி தைவதம், நிஷாதம் போன்ற எட்டாக் கனிகளைக்கூட எட்டிப்பிடிக்கும் அற்புதக் குரலாய் அவர் குரல் விளங்கியதென்று அவர் கச்சேரிகளைக் கேட்ட பலர் கூறுகின்றனர். தார ஸ்தாயி ப்ரயோகங்களைத் தொடர்ந்து குரலை முதலில் பம்பரமாய் சுழலவிட்டு, அதன் பின் ராட்டினமாய் மூன்று ஸ்தாயிகளிலும் சுழலவிட்டு, கடைசியில் ஓர் சூறாவளி போல் ராகத்தின் பல இடங்களில் சஞ்சரித்து கேட்பவர் மனதில், அந்த ராகத்தில் பாட இனி ஒன்றுமில்லை என்னும் நிறைவு ஏற்படும்படியான சூழலை உருவாக்கிவிடும். குறைந்த பட்சம் 40 நிமிட ஆலாபனைக்குப் பின் விஸ்தாரமான தானமும் அதன் பின் பல்லவியும் பாடுவார். பல்லவிக்கு எடுத்துக் கொள்ளும் இராகங்களில் கல்யாணி, தோடி, காம்போஜி, பைரவி போன்ற கன இராகங்கள், தேவ மனோஹரி, சஹானா, ஆந்தோளிகா போன்ற அதிகம் பாடப்படாத இராகங்கள் என்று பல வகைகளில் பாடியிருக்கிறார். பல்லவியமைப்பும் 2 களை, 4 களை போன்ற கடினமான அமைப்பில் பாடியிருப்பினும் பல ஒரு களை பல்லவிகளும் பாடியிருக்கிறார். ஆலாபனை, தானம், ஸ்வரப்ரஸ்தாரம் அனைத்துமே இராக ஸ்வரூபத்தை வெளிக் கொணரும் பொருட்டேயிருக்கும். பல்லவிக்கு ஸ்வரம் பாடும்பொழுது வரும் இராகமாலிகை ஸ்வரங்களுக்கு இரசிகர்களிடையில் அதீத வரவேற்பிருந்தது.

ஜி.என்.பி கச்சேரிகளில், பல்லவியைத் தொடர்ந்து வரும் பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது. பல இராகங்களில் அழகிய படப்பிடிப்பாய் விளங்கும் விருத்தங்கள், ஸ்லோகங்கள் தவிர அவரே மெட்டமைத்த 'திக்குத் தெரியாத காட்டில்', 'சொன்னதைச் செய்திட சாகசமா', போன்ற துக்கடாக்கள் இடம் பெறும், கச்சேரி முடியும் பொழுது பாமரரும் பண்டிதரும் மன நிறைவுடன் செல்வதென்பதுறுதி.

சாரீர அமைப்பைப் போலவே சரீர அமைப்பும் பெற்றிருந்த ஜி.என்.பி, திரைப்படத்துறையில் 1934 முதல் 1937 வரை 'சகுந்தலை', 'ருக்மாங்கதன்', 'பாமா விஜயம்', 'உதயணன் வாசவதத்தா' போன்ற திரைப்படங்களில் நடித்தும் பாடியும் பெரும் பிராபல்யம் அடைந்தார். இவரது வாழ்வில் பல கௌரவங்களைப் பெற்றிருப்பினும் 1958-ஆம் வருடம் சங்கீத கலாநிதி பட்டத்தை இவருக்கு வழங்கி மியூசிக் அகாடெமி பெருமை தேடிக் கொண்டது. வாகேயக்காரராய் ஜி.என்.பி இசைக்கு ஆற்றிய தொண்டு அளப்பெரியதாகும். ‘சிவ சக்தி’, ‘அம்ருத பேஹாக்’ போன்ற அரிய இராகங்களிலிம், பிரபலமான இராகங்களில் சில அரிய பிரயோகங்கள் உபயோகித்தும், மிஸ்ர ஜம்பை போன்ற சுட்பமான தாள அமைப்பிலும் அவர் அமைத்திருக்கும் கீர்த்தனங்கள் இன்று பரவலாய் பாடப்படுகின்றன. ஜி.என்.பி, பாடகராக மட்டுமல்லாமல் சங்கீத ஆச்சாரியராகவும் மிகவும் பிரபலமாக இருந்தவராவார். அவரது பாணியை நிலை நிறுத்தும் வண்ணம் எம்.எல்.வி, திருச்சூர் இராமசந்திரன், தஞ்சாவூர் எஸ், கல்யாணராமன் போன்ற சிஷ்யர்களை இசையுலகிற்குத் தந்த பெருமையும் ஜி.என்.பி-யைச் சேரும். பாடகராய், வாகேயக்காரராய், குருவாய், நடிகராய் பல சாதனை புரிந்த ஜி.என்.பி-யின் வாழ்க்கை 55 வருட காலம் மட்டுமேயிருந்தது இசையுலகின் துர்பாக்யம் ஆகும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.