http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 51

இதழ் 51
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு கொடுக்கும் பாடங்கள்
காவற்காட்டு இழுவை!
தொட்டான்! பட்டான்!
திரும்பிப் பார்க்கிறோம் - 23
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 5
Virtual Tour On Kundrandar Koil - 3
அவர் - ஐந்தாம் பாகம்
கடமை... முயற்சி... பெருமிதம்... நெகிழ்வு...
மான்விழியே!! அள்ளும் அழகே!!
சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!
இதழ் எண். 51 > இதரவை
கடமை... முயற்சி... பெருமிதம்... நெகிழ்வு...
ச. கமலக்கண்ணன்


அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.


ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து, அதில் முன்னேறும்போது வாழ்த்துச் சொல்பவர்களுக்கு மட்டும் நன்றி கூறினால் போதாது. அவ்வழியை அமைத்துத் தந்தவர்களையும், அதில் ஏற்கனவே பயணித்து, கற்களையும் முட்களையும் அகற்றித் தந்தவர்களுக்கும் நன்றி கூறவேண்டும் என்று ஐராவதியை ஆரம்பித்தபோது தலையங்கத்தில் எழுதியிருந்தோம். விடாமுயற்சியுடன் போராடி இன்று அந்தக் கடமையை வெற்றிகரமாக முடித்த பெருமிதத்தில் ஐராவதி வெளியீட்டு விழா அனுபவங்களை இந்தக் கட்டுரையில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்தமாதம் ஐராவதி நூல் உருவாக்கத்தில் நாங்கள் பெற்ற அனுபவங்களை மட்டும் எழுதியிருந்ததால், இதை அதன் தொடர்ச்சி என்றுகூடக் கொள்ளலாம்.

ஐராவதியை அச்சுக்கு அனுப்பிவிட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டு முடித்தபோது, அடுத்த கடமைகளான விழா ஏற்பாடுகளும் வரலாறு.காம் பொன்விழா இதழ்த் தயாரிப்பும் முன்னே வந்து நின்றன. நான், கோகுல், இலாவண்யா ஆகிய மூவரும் இல்லாவிட்டாலும், லலிதாராமும் கிருபாஷங்கரும் கலைக்கோவன், நளினி, அரசு, பால.பத்மநாபன், சீதாராமன் மற்றும் செல்வமூர்த்தி ஆகியோருடைய துணையுடன் எந்தவிதத் தடங்கலுமின்றி ஏற்பாடுகளைச் செய்து முடித்தார்கள். இதுபோன்றதொரு குழு அமைந்தால் இன்னும் எத்தனையோ சாதிக்கலாம் என்ற எண்ணம் மேலும் வலுப்பட்டது. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, எதை எப்படிச் செய்தால் சிறப்பாக அமையும் என்று ஆராய்ந்து, அடுத்தவர் செய்யும் தவறுகளை அவர்கள் சங்கடப்படாத முறையில் எடுத்துக்கூறி, Compliments each other என்றும் Together Everyone Achieves More (TEAM) என்றும் கூறப்படும் ஆங்கிலத்தொடர்களுக்கு உதாரணமாக அமைந்திருக்கும் எங்கள் குழுவினரைப் பெற என்ன தவம் செய்தோம் என்று நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உளம் பூரித்துப் போகிறோம். இதை வார்த்தைகளில் விவரிப்பது இயலாது. வரலாற்றை நேசிப்பது என்ற ஒரேயொரு ஒற்றுமையைத் தவிர எங்கள் அனைவருக்கும் பொதுவான இழை ஏதுமில்லை. தனித்தனி மரங்களான எங்களை இணைத்து வைத்திருப்பதும் இந்த இழைதான். இன்னும் பல நல்ல உள்ளங்களை நண்பர்களாகப் பெற்றுத் தருவதும் இதே இழைதான்.

விழா ஏற்பாடுகளின்போது சிற்சில சோர்வுகள் ஏற்பட்டன. அப்போதெல்லாம், "நல்ல எண்ணத்துடன் ஒரு நல்ல வேலையைச் செய்யும்போது எல்லாமே நன்றாக நடக்கும். இடையில் ஏற்படும் தடங்கல்களும் ஏதாவது ஒரு நன்மையில்தான் கொண்டுபோய்ச் சேர்க்கும்" என்று ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார் பேராசிரியர் மா.ரா.அரசு. பின்னர் அவர் கூறியபடியே நடந்ததுதான் சிறப்பு. அரங்கம் முன்பதிவு செய்வதில் இவரைச் சற்று சிரமப்படுத்திவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். "எங்கெங்கேயோ இருந்துகொண்டு ஒரு நல்ல செயலைச் செய்கிறீர்கள். இதைக்கூடச் செய்யமாட்டேனா?" என்றுகூறி ஒரு அருமையானதொரு அரங்கை முன்பதிவு செய்துகொடுத்தார்.

ஏற்பாடுகளைக் கவனிப்பதில் எங்களுக்குச் சிறிது உதவ முடியுமா என்று கேட்டபோது, "முடியுமா என்றெல்லாம் கேட்கவேண்டாம். என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். முடித்துத் தருகிறோம்." என்று ஒருமித்த குரலில் ஒலித்து எங்களுக்குப் பக்கபலமாக இருந்தனர் சீதாராமனும் பத்மநாபனும். விருந்தினர்களை அழைப்பது, தேனீர் விருந்து, விருந்தினர்களுக்குப் போக்குவரத்து ஏற்பாடுகள், அரங்கினுள் இணைய இணைப்பு என்று எங்களுக்குத் தோள்கொடுத்த தோழர்கள் இந்த இரட்டையர்கள். இந்த விழாவுக்கு மட்டுமல்ல. எங்களின் மற்ற பயணங்களின்போதும் தனிப்பட்ட முறையிலும் இன்முகத்துடன் உதவியிருக்கிறார்கள்.

வரலாற்றாய்வில் முழுமையாக ஈடுபட ஆரம்பிக்காவிடினும், மனைவியின் வரலாற்றாய்வுக்காகத் தன் ஓய்வு நேரத்தை அர்ப்பணித்த செல்வமூர்த்தி அவர்கள் லே-அவுட் பணிகளில் சற்றுத் தொய்வு ஏற்பட்டபோது, நாங்கள் கேட்காமலேயே உதவ முன்வந்தார். ஐராவதி மின்புத்தகம் தயாரித்துத் தந்தது முதல் விழா நிகழ்வுகளைப் புகைப்படக்கருவிக்குள் சிறைப்பிடித்தது வரை இன்முகத்துடன் உதவிய இவரை, சீதாராமனின் க்ளோனிங் எனலாம். இக்கட்டுரையில் நீங்கள் காணும் அனைத்துப் புகைப்படங்களும் அவர் எடுத்தவைதான்.

'வேரென நீயிருந்தால் நான் வீழ்ந்து விடாதிருப்பேன்' என்று நாங்கள் அடிக்கடி நினைக்கும் வண்ணம் எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து, கையில் இருப்பதுடன் திருப்தியடைந்து விடாமல், இன்னும் இன்னும் என்று உயரப்பறக்க விழையும் எங்களுக்குக் கீழே விரித்துப் பிடிக்கும் வலையாகவும், ஏற்றிவிடும் ஏணியாகவும், இந்த இலக்கை அடைந்து விட்டீர்களா, அடுத்து அதோ அந்த இலக்கு என்று வழிகாட்டியாகவும் இருக்கும் கலைக்கோவன் மற்றும் நளினி ஆகியோருக்கு நாங்கள் என்ன வார்த்தை சொல்லி நன்றி சொல்லிவிட முடியும்?

ஆகஸ்ட் முதல் வாரத்தில் டோக்கியோவில் விமானம் ஏறுவதற்கு முன்பே அரங்கம் முன்பதிவு செய்வது, விருந்தினர்களை அழைப்பது, அழைப்பிதழ் அச்சிடுவது என்று பாதிக்கும் மேற்பட்ட பெரும்பணிகள் முடிவடைந்திருந்தன. லலிதாராம் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும்போது கிடைத்த சில வாரங்கள் இந்த ஏற்பாடுகளுக்குப் பேருதவியாக இருந்தது. பெரம்பூரிலிருந்து வேளச்சேரிக்கு அடிக்கடி சென்று திரு, ஐராவதம் மகாதேவன் அவர்களைச் சந்தித்து, நூலாக்கத்திலும் பிழைதிருத்தத்திலும் எங்களுக்கிடையே இருந்த தகவல் தொடர்பு இடைவெளியைப் போக்கியது பெரும்பணி. அவர் மகாதேவனிடம் எடுத்த ஓர் அருமையான பேட்டி ஐராவதியில் இடம்பெற்றுள்ளது.

வரலாறு.காமின் தொழில்நுட்ப மூளையான கிருபாஷங்கரும் தன் பணிச்சுமை மிகுந்த அலுவலக வேலைகளுக்கிடையில் வரலாற்றுக்காகவும் நேரம் ஒதுக்கி, பொன்விழா இதழ் வெளியிடும் வலைப்பக்கத்தையும் இதழ் பதிவேற்றத்தையும் கவனித்துக்கொண்டது பாராட்டப்பட வேண்டியதாகும். எத்தனையோ தடவைகள் நாங்கள் அனைவரும் வற்புறுத்தியபோதும் இன்னும் வரலாறு.காம் இதழில் இவர் எழுத ஆரம்பிக்கவில்லை. பின்னாலிருந்து உதவி செய்தாலே போதும் என்று எளிமையாக மறுத்துவிடுவார். எப்படியும் எழுத வைத்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உடல்கள் அமெரிக்காவிலிருந்தாலும் உள்ளத்தால் சென்னையில் குடிகொண்டிருந்த கோகுலும் இலாவண்யாவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாமல் போனது ஒரு பெரும்குறையே. இப்படியொரு அரிய நிகழ்வில் இவர்கள் இருவர் மட்டும் கலந்துகொள்ள முடியவில்லையே என்பது எங்கள் எல்லோருக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. லே-அவுட் பணிகளில் கோகுல் தன் வலதுகை மணிக்கட்டு வலியையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக உழைத்ததும் இலாவண்யா கட்டுரைகளின் பிழைத்திருத்தத்தில் உதவியதும் ஐராவதியின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் பாராட்டுதற்குரியவை.

ஆகஸ்ட் 15ம் தேதி நெருங்கிக்கொண்டிருக்கும்போதே வாசகர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்துகொண்டிருந்தன. 16ம் தேதி பொழுது புலர்ந்தது. முந்தையநாள் பனைமலையிலிருந்து திரும்புவதற்கு இரவு தாமதாகியிருந்தாலும் அடுத்தநாள் எந்தவிதமான அலுப்பும் இல்லாமல் ஒரு நிலைகொள்ளாது தவிக்கும் மனதுடன் ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். முதன்முதலில் நிறைய அறிஞர் பெருமக்களை அழைத்து ஒரு விழா நடத்தப்போகிறோம். எந்தச் சிக்கலுமின்றி நல்லபடியாக முடியவேண்டுமே என்று ஒரு பிரசவ வேதனையுடனே ஒவ்வொரு நிமிடமும் கழிந்தது. மதியம் அலமு அச்சகத்திற்குத் தொலைபேசி செய்து நிலவரத்தைக் கேட்டபோது அச்சுப்பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன என்று தகவல் வந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வழியில் நூல்களை அள்ளிக்கொண்டோம். ஐந்தரை மணி விழாவிற்கு நான்கரை மணிக்கே ஏற்பாடுகளை முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தபோது அரங்கம் நிரம்பியிருந்தது. 140 பேர் அமரக்கூடிய அரங்கில் ஒரு 70 அல்லது 80 பேர் வந்தாலே அதிகம் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு, ஒரு மணி நேரத்துக்கு முன்பே அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்ததைப் பார்த்தபோது, வரலாற்றைப் போற்றும் தமிழர்கள் இன்னும் குறைந்துபோய்விடவில்லை என்ற நிறைவு ஏற்பட்டது.

தேனீர் விருந்தின்போது ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டும் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துக்கூறிக்கொண்டும் இருந்தார்கள். அரங்கத்திற்கு வெளியில் வேகமாகச் செயல்பட்ட இணைய இணைப்பு, அரங்கினுள் ஏனோ சோம்பலாகித் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டது. இதனால் வெளிநாட்டிலிருக்கும் வாசகர்கள் நேரடி ஒளிபரப்பைக் காணவியலாமல் போய்விட்டது. வரவேற்பை நளினியும் சுமிதாவும் கவனித்துக்கொள்ள, புத்தக விற்பனையை அகிலா மற்றும் இலலிதாம்பாள் ஆகியோர் பொறுப்பெடுத்துக்கொள்ள, கலைக்கோவன் தொகுத்து வழங்க, ஐந்தரை மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. கலைக்கோவன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை ஒவ்வொருவராய் அழைக்க, மேடை தனக்குரிய கம்பீரத்தையும் பொலிவையும் பெறத்தொடங்கியது.

வரவேற்புரையில் லலிதாராம் மகாதேவனுடன் பணியாற்றிய அறிஞர்கள் விழா எடுப்பதைக் காட்டிலும், இந்த இளைஞர்கள் இவ்விழாவை எடுத்தது எந்த வகையில் பொருத்தமானது என்பதைத் தெளிவுபட உரைத்தார். மதுரை மணியின் கச்சேரிக்குச் சுப்புடு எழுதும் விமர்சனத்தைவிட, ஒரு கைவண்டி இழுப்பவன் கச்சேரிக்காகத் தன் தொழிலுக்கு விடுப்பு அளிப்பதுதான் சிறந்த பாராட்டு என்றார். இவ்விழா எடுக்கப்பட்டதன் நோக்கம் மகாதேவனின் ஐம்பதாண்டுகால ஆய்வுப்பணிகளைப் பாராட்டுவதற்கு மட்டுமன்று. வரலாற்றை முக்கியப் பாடமாக எடுத்துப் பயிலாமல், வேதியியலையும் சட்டத்தையும் பயின்ற ஒருவர் வரலாற்றுத்துறையில் இத்தனை தூரம் சாதிக்க முடியும் என்றால், இளங்கலை அல்லது முதுகலையில் வரலாற்றைப் படிக்காமல் தன்னாலும் வரலாற்றாய்வில் ஈடுபட முடியுமா என்று தாழ்வுமனப்பான்மையில் தவிப்பவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதற்காகவும்தான்.

இனி விழா நிகழ்வுகளைப் புகைப்படங்களின் வாயிலாகக் காணலாம்.



சென்னைப் பல்கலைக்கழகப் பவளவிழா அரங்கு


விருந்தினர்களுக்கும் வரலாறு.காம் வாசகர்களுக்கும் வரவேற்பு


ஐராவதி மற்றும் பிற வரலாற்று நூல்கள் விற்பனை


பார்வையாளர்களில் ஒருபகுதி. மூன்றாவது வரிசையில் முனைவர்.சம்பகலக்ஷ்மி அவர்கள்






நிறைந்த அரங்கு


நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் முனைவர்.இரா.கலைக்கோவன்


சிறப்பு விருந்தினர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கிறார்


விழாநாயகர் திரு. ஐராவதம் மகாதேவன்


அருகருகே இரண்டு (தொல்லியல்) இமயங்கள். பேராசிரியர்.எ.சுப்பராயலு


முதல்படியைப் பெறவிருக்கும் முனைவர்.ஆ.இரா.வேங்கடாசலபதி


ஐராவதி மின்புத்தகத்தை வெளியிடவிருக்கும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆணையாளர் முனைவர்.க.அருள்மொழி


மின்புத்தகத்தைப் பெறவிருக்கும் முனைவர்.சு.இராசவேலு


வரலாறு.காம் ஐராவதம் மகாதேவன் சிறப்பிதழை வெளியிடவிருக்கும் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் திரு.த.பிச்சாண்டி


மகாதேவன் சிறப்பிதழைப் பெறவிருக்கும் பேராசிரியர்.மா.ரா.அரசு


ஆன்றோர் நிறைந்த அவை


தமிழ்த்தாய் வாழ்த்து


விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்கும் உரை நிகழ்த்தும் லலிதாராம்


ஐராவதி உருவான வரலாறு எடுத்துரைக்கப்படுகிறது




திரு. ஐராவதம் மகாதேவனுக்குப் பொன்னாடை போர்த்துகிறார் கல்வியியல் அறிஞர் முனைவர்.வா.செ.குழந்தைசாமி


திரு. ஐராவதம் மகாதேவனுக்குப் பொன்னாடை போர்த்துகிறார் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் திரு.த.பிச்சாண்டி


பேராசிரியர்.எ.சுப்பராயலுவுக்குப் பொன்னாடை போர்த்துகிறார் பேராசிரியை.மு.நளினி


பேராசிரியர்.ஆ.இரா.வேங்கடாசலபதிக்குப் பொன்னாடை போர்த்துகிறார் பேராசிரியை.அர.அகிலா


முனைவர்.க.அருள்மொழிக்குப் பொன்னாடை போர்த்துகிறார் வரலாற்றாய்வாளர் திருமதி.சுமிதா


முனைவர்.சு.இராசவேலுவுக்குப் பொன்னாடை போர்த்துகிறார் வரலாற்றாய்வாளர் திரு.சு.சீதாராமன்


திரு.த.பிச்சாண்டிக்குப் பொன்னாடை போர்த்துகிறார் வரலாற்றாய்வாளர் திரு.பால.பத்மநாபன்


பேராசிரியர்.மா.ரா.அரசுவுக்குப் பொன்னாடை போர்த்துகிறார் வரலாற்றாய்வாளர் திரு.ச.கமலக்கண்ணன்




ஐராவதி நூல் வெளியிடப்படுகிறது


நூலை வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார் பேராசிரியர்.எ.சுப்பராயலு


நூலின் முதல்படி பெற்று உரை நிகழ்த்துகிறார் பேராசிரியர்.ஆ.இரா.வேங்கடாசலபதி


ஐராவதியில் பதிவாகும் திரு.மகாதேவனின் 'ஆட்டோகிராஃப்'


ஐராவதி மின்புத்தகம் வெளியிடப்படுகிறது




மின்புத்தகத்தை வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார் முனைவர்.க.அருள்மொழி




மின்புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்தும் முனைவர்.சு.இராசவேலு




ஏற்புரை வழங்குகிறார் திரு.ஐராவதம் மகாதேவன்


ஐராவதிக்கு உதவியவர்கள் பாராட்டப் பெறுகிறார்கள். முதலில் எங்கள் தொழில்நுட்பமூளை திரு.சு.கிருபாஷங்கர்


விழா ஏற்பாடுகளில் உதவிய திரு.சு.சீதாராமன்


விழா ஏற்பாடுகளில் உதவிய திரு.பால.பத்மநாபன்


ஐராவதி மின்புத்தகம் உருவாக உதவிய திரு.செல்வமூர்த்தி


ஐராவதியைக் குறித்த நேரத்தில் நேர்த்தியாக அச்சிட்டுத் தந்துதவிய அலமு அச்சகம் திரு.இராமநாதன்


திரு.ஐராவதம் மகாதேவனுக்கு வலதுகையாகவும் இடதுகையாகவும் விளங்கும் திருமதி.இராமலக்ஷ்மி


வரலாறு.காம் மின்னிதழின் பொன்விழா இதழை வெளியிடக் காத்திருக்கும் திரு.சு.கிருபாஷங்கர்




பொன்விழா இதழை வெளியிடுகிறார் திரு.த.பிச்சாண்டி




பொன்விழா இதழ் அச்சுப்பிரதியும் வெளியிடப்படுகிறது




50வது இதழை வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார் திரு.த.பிச்சாண்டி




வரலாறு.காம் நடந்ததும் நடப்பதும் பற்றி உரைக்கிறார் பேராசிரியர்.மா.ரா.அரசு




நன்றியுரை நவில்கிறார் பேராசிரியை.அர.அகிலா


நாட்டுப்பண்


அழைப்பிதழில் இருந்த வரிசைப்படியே எல்லா நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தாலும், கூடுதலாகச் சில நிகழ்வுகளும் சில மாற்றங்களும் நிகழ்ந்தன. வரலாறு.காம் பொன்விழா இதழைப் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த எங்கள் பெரியண்ணன் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களால் தவிர்க்கவியலாத காரணங்களால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாகப் பேராசிரியர் மா.ரா.அரசு அவர்கள் இதழைப் பெற்றுக்கொண்டார்.

ஐராவதியும் மின்புத்தகமும் உருவாக எங்களுக்குத் துணைநின்ற நல்ல உள்ளங்களை ஆன்றோர் நிறைந்த அவையில் பாராட்ட விரும்பினோம். முன்கூட்டியே சொன்னால் மறுத்துவிட வாய்ப்புண்டு என்பதால் கடைசிநிமிடம் வரை அவர்களுக்குத் தெரியாமலேயே வைத்திருந்தோம்.

இலக்கிய நோக்கில் சொல்லவேண்டும் என்றால், திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களின் செவிலி. மருத்துவ நோக்கில் சொல்லவேண்டுமென்றாலும் அதுதான். திரு.மகாதேவன் அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து பாதுகாத்துவரும் அவரது உறவினர் திருமதி.இராமலக்ஷ்மி அவர்களை இந்த நல்ல நேரத்தில் பாராட்டி உரிய முறையில் சிறப்புச் செய்து நன்றிகூறவேண்டும் என்று எண்ணினோம். இதுவும் கடைசிவரை அவருக்குத் தெரியாமலேயே இருந்தது.

சமீபத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி அன்பளித்துத் துவங்கிவைத்த கல்வெட்டாய்வாளர்களுக்கான முதல்விருது தொல்லியல் இமயம் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரங்கினுள் இருந்த அனைவரும் எழுந்து நின்று எழுப்பிய கரவொலி இத்தீர்மானத்தை முழுமனதுடன் அனைவரும் ஆதரித்ததைக் காட்டியது. தலைமைச்செயலகம் வரை கேட்டிருக்கும் என்று நம்புகிறோம்.

நிகழ்ச்சி முடிந்ததும் திரு.ஐராவதம் மகாதேவன் எங்களிடம் வந்து, 'நீங்கள் எனக்குச் செய்துள்ள இத்தகைய அரிய பணிக்கு நான் எப்படிக் கைம்மாறு செய்யப்போகிறேன்?' என்று நெகிழ்ந்துபோனார். 'ஐயா, இந்தப் பணிப்பாராட்டு மலரே தாங்கள் தமிழுக்கும் வரலாற்றுக்கும் செய்த தொண்டுக்கான கைம்மாறுதான். இதற்கு மீண்டும் ஒரு கைம்மாறு தேவையில்லை.' என்றோம். உண்மைதானே!! தமிழுக்காகவும் வரலாற்றுக்காகவும் தம் வாழ்நாளையே அர்ப்பணித்த ஓர் அறிஞருக்குச் சிறப்புச் செய்வதுதானே நமது கடமை? ஒரு பெரிய கடமையை முடித்திருக்கிறோம் என்ற மனநிறைவு எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முன் வரலாறு.காம் தனது அரையாண்டு நிறைவைத் தஞ்சைப் பெரியகோயில் வளாகத்தில் கொண்டாடியிருந்தாலும், இத்தனை அறிஞர்களை அழைத்துப் பெரிய அளவில் நடத்துவது இதுதான் முதல்முறை. எங்கள் அனுபவமின்மையால் ஏற்பட்ட சிறுசிறு குறைகளை மன்னித்து மனநிறைவுடன் பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இவ்விழா பற்றிய செய்திகளைப் பதிவுசெய்த தினமணி, இந்து, தினமலர் மற்றும் அமுதசுரபி இதழ்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி. வணக்கம்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.