http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 56

இதழ் 56
[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
புவனேசுவர விளக்கு
Elephant - The War Machine
திரும்பிப்பார்க்கிறோம் - 28
திருத்தங்கல் குடைவரை
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
அழகி
அவர் - பகுதி 8
Thirumeyyam - 3
Silpi's Corner-08
அவர் இல்லாத இந்த இடம் . . .
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
தசரூபகத்தில் நாட்டியம்
SMS எம்டன் 22-09-1914
இதழ் எண். 56 > இலக்கியச் சுவை
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
க.சங்கரநாராயணன்
பூதிவிக்ரமகேஸரியின் கொடும்பாளூர் கல்வெட்டு

கல்வெட்டுக்களாகப் பதியப்பட்ட செய்திகளில் பல வடமொழிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. சில முழுதும் வடமொழியிலேயே அமைந்திருக்கின்றன. சில கல்வெட்டுக்களின் காப்பியச் சுவை வடமொழியில் உள்ள காப்பியங்களுக்கு நிகராகத் திகழ்கிறது. இத்தகைய கல்வெட்டுகளில் முதலில் வெளியிடப் பட்டவை மொழிபெயர்ப்போடும் குறிப்புக்களோடும் வெளியிடப் பட்டன. பிறகு வெறும் குறிப்புரையோடு வெளியிடப் பட்டன. பிந்தைய தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகள் சிறு குறிப்புரையோடு மொழிபெயர்ப்புமின்றி வெளியிடப் பட்டுள்ளன. அத்தகைய கல்வெட்டுக்களில் ஒன்று கொடும்பாளூரில் உள்ள பூதிவிக்ரமகேஸரியின் வடமொழிக் கல்வெட்டு. கொடும்பாளூரை ஆண்ட இருக்கு வேளிர் மன்னர்களின் மரபைத் தரும் இந்தக் கல்வெட்டு மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதனில் அடங்கிய விவரங்களை ஈண்டு காண்போம். (பின்வரும் வரிகள் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதியில் வெளியானதேயன்றி நேரில் என்னால் கள ஆய்வு செய்யப் பட்டதல்ல. ஆகவே கள ஆய்வின் போது மாறுபட்ட பாடங்கள் தோன்றுமாயின் தற்போதே தலைவணங்குகிறேன்.)

1.கல்வெட்டு அமைந்துள்ள இடம்

திருச்சி மாவட்டத்தில் குளத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ளது கொடும்பாளூர் என்னும் சிற்றூர். இவ்வூரில் மூவர் கோவில் என்று புகழ்பெற்ற கோவிலொன்று அமைந்துள்ளது. அதன் கருவறையின் தெற்குச் சுவரில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது.

2.பதிப்பு வரலாறு

இந்தக் கல்வெட்டு 1907 ஆம் ஆண்டறிக்கையின் 129 ஆம் எண்ணாக குறிப்பிடப் பட்டிருந்தது. அதன் பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி இருபத்து மூன்றில் 129 ஆம் எண்ணாகப் பதிப்பிக்கப் பட்டது. இதன் பதிப்பாளராக ஸ்ரீ.ஜீ.வீ.ஸ்ரீனிவாஸ ராவ் அவர்களும் பொதுப்பதிப்பாளராக முனைவர்.ஜீ.எஸ். கை அவர்களும் இருந்தனர்.

3.குறிப்புரை தரும் தகவல்கள்

இந்தக் கல்வெட்டு வடமொழியில் பழைய க்ரந்த எழுத்துக்களாலானது. இது கொடும்பாளூரை ஆண்ட தலைவர்களின் மரபைத் தருகிறது. இதன் முதல் வரி அழிந்து பட்டதால் குலமுதல்வனின் பெயர் அறியக்கூடவில்லை. அவன் எதிரிப் படையிலிருந்து யானைப் படையைக் கைப்பற்றியது தெளிவாகிறது. அவனுடைய குலத்தில் பரவீரஜித் வீரதுங்கன் பிறந்தான். அவனுடைய மகன் இணையற்ற (அனுபம) அதீவீரன். அவனுடைய மகன் ஸங்கக்ருத். அவனுக்கு ந்ருபகேஸரி மகனாகப் பிறந்தான். அவனுடைய மகன் பரதுர்கமர்த்தனன். அவன் பெருமை மிக்க வாதாபியை வென்றவன். அவனுக்கு ஸமராபிராமன் பிறந்தான். அவன் அதிராஜமங்கலத்தில் நிகழ்ந்த போரில் சளுக்கியைக் கொன்றவன். அவன் சோழமன்னனின் மகளான அனுபமையை மணந்தவன். அவனுடைய மகன் பூதி எனப் பட்டவன். அவன் போரில் தன்னுடையப் பராக்ரமத்தால் விக்ரமகேஸரி என வழங்கப் பட்டான். அவன் பல்லவனோடு போரிட்டு அந்தப் படையினர் குருதியால் காவிரி நீரை செந்நீராக்கியவன். அவன் வீரபாண்டியனை வென்று வஞ்சிவேளையும் அழித்தவன். அவன் தன் மனைவியரான கற்றளி மற்றும் வரகுணையோடு கொடும்பாளூரில் வாழ்பவன். முதல்மனைவியினிடத்தில் பராந்தகவர்மன் மற்றும் ஆதித்யவர்மனைப் பெற்றெடுத்தவன். அத்தகைய பூதிவிக்ரமகேஸரி தனக்காக ஒன்று, தன் மனைவியருக்காக இரண்டு என்று மூன்று கற்றளிகளை பரமேச்வரனுக்காக்க் கொடும்பாளூரில் உருவாக்கியிருக்கிறான். அதனை மதுரையின் மல்லிகார்ஜுனரின் மடத்திற்குப் பரிசாக அளித்தான். அவர் காளாமுக சைவர்களின் ஆசிரியர். அவருக்கு 50 துறவியருக்கு உணவளிக்க பதினோரு சிற்றூர்களையும் தானமாக அளித்தான்.

இந்த பூதிவிக்ரமகேஸரி என்னும் மன்னன் முதலாம் ஆதித்ய சோழனின் சிற்றரசன் என்று மற்றைய கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கிறது. இவனே தென்னவன் இளங்கோவேள் என்று அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இவன் பல்லவன்படையைச் சீரழித்த நிகழ்வு முதலாம் ஆதித்ய சோழன் சுமார் கி.பி 890 க்கு முன்பு அபராஜித பல்லவனை போரில் வீழ்த்திய நிழ்வாகவே இருக்கலாம் என்றும் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு கொள்ளும் போது வீரபாண்டியனைக் கொன்றதாகக் கூறுவது பொருத்தமற்றதாகிறது. இரண்டாம் ஆதித்யகரிகாலன் வீரபாண்டியனை வீழ்த்தியது (1908 ஆண்டறிக்கை, இரண்டாம் பாகம் 88 ஆம் பத்தி) 70 ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. ஆகவே இவன் முதலாம் பராந்தக வீரநாராயணனின் சமகாலத்தவனாகவும் பாண்டிய வழியைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். (K.V. Subrahmanya Iyer QJMS Vol XLIII, Nos 3&4)

4.கல்வெட்டு வரிகள்

(வரி 1) ............... नाथगजयूथहरः पुरासीत्। तद्वंश्यः परवीरजीन्मळवजिच्छ्री
(வரி 2) वीरतुंगोमुतो जा(तो)स्मादतिवीर इत्यनुपमस्तस्मादभूत्सं
(வரி 3) घकृत् अस्माच्छ्रीनृपकेसरी विवदृधे यो बाल एवोरगै
(வரி 4) स्तत्सूनुः परदुर्ग्गमर्द्दन इति ख्यातस्स वातापिजित्। तस्य समराभिरा
(வரி 5) मः पुत्रस्सुत्रामतेजसः अधिराजमंगलाजौ यो निजघान च
(வரி 6) ळुक्किम् तस्याच्युतस्य कमलेव सरस्वतीव पत्मोत्भ(द्भ*)वस्य गिरिजे(व)
(வரி 7) हरस्य साक्षात् प्रेयस्यभूदनुपमेति यथार्त्थनाम्ना श्रीचोळराज
(வரி 8) दुहिता यदुवंशकेतोः। तस्यामस्य बभूव भूतिमपराम्मीनामळाख्या
(வரி 9) न्दधन् श्रीमान्विक्रमकेसरीति समरे लब्धान्यनामा नृपः। कावेरी
(வரி 10) वारीशोणम् समकृतरुधिरैः पल्लवस्य ध्वजिन्याः यो वीरोः(रो*)
(வரி 11) वीरपाण्ड्यं व्यजयत समरे वञ्चिवेळन्तकोभूत्। मत्तारिसामजा(न्*)
(வரி 12) हत्वा वसन्विक्रमकेसरी कॊटुम्बाळूप्पुरादी(*द्री)न्द्रमाळिकाविवरोदरे।
(வரி 13) विद्वत्कल्पतरौ क्षितीश्वरकरद्वद्वा(न्द्वा*)म्बुजेन्दौ भुवं यस्मिन् शासति
(வரி 14) मेदिनी(म्) जयरमाश्रीकीर्त्तिवाग्वल्लभे तैक्षण्यन्नेत्रयुगे भु(भ्रु*)वोश्चल
(வரி 15) नता केशेषु कार्ष्ण्यन्तनौ तन्वितान्तनुताभवत् स्तनयुगे चान्न्यो(न्यो*)
न्य
(வரி 16) (सम्बा)धनम्। तस्याभूत् देव्यौ कற்றळि वरगुणसमाह्वये सत्यौ
(வரி 17) कற்றळिरभवज्जननी परान्तकादित्यवर्मणो(णः*) कम्रकम्राणाम् आत्रेय
(வரி 18) गोत्रजस्श्री(श्श्री)मान्माधुरो(न)गेन्द्रपारगः विद्याराशेस्तपोराशेश्शि
(வரி 19) ष्यो श्र(स्य*)मल्लिकार्जुनः। (स्थान)त्रयमुत्थाप्य प्रितिष्ठाप्य महेश्वरम्
(வரி 20) स्वनाम्ना प्रिययोर्न्नाम्ना सोदात् बृहन्मठम्। तस्मै कालमुखा
(வரி 21) ख्यानयतिमुख्याय यादवः प्रादादेकादशग्रामविनिबन्धं बृहन्मठम्।
(வரி 22) पञ्चाशतामसितत्क्र(सीत्तत्र*) तपोधनानाम् भुक्त्यै ब्र(बृ*)हन्मठम्...(गु)र
(வரி 23) वे स राजा नैवेद्यगन्धकुसुमाक्षतधूपदीपताम्बूल..............................
(வரி 24) ............................................................महेश्वरस्य।
(* - இக்குறியிட்டவை என்னுடைய திருத்தங்கள்)


5. விளக்கம்
.................... नाथगजयूथहरः पुरासीत्। 1
......................... நாதகஜயூதஹர: புராஸீத்.

தலைவனின் யானைப்படையை கவர்ந்தவன் இருந்தான்.

तद्वंश्यः परवीरजीन्मळवजिच्छ्रीवीरतुंगोमुतो
जा(तो)स्मादतिवीर इत्यनुपमस्तस्मादभूत्संघकृत्।
अस्माच्छ्रीनृपकेसरी विवदृधे यो बाल एवोरगै
स्तत्सूनुः परदुर्ग्गमर्द्दन इति ख्यातस्स वातापिजित्। 2
தத்-வம்ஶ்ய: பரவீரஜின்-மளவஜித்-ஸ்ரீவீரதுங்கோ-முதோ
ஜாதோ-அஸ்மாத்-அதிவீர இதி அனுபம: தஸ்மாத் அபூத் ஸங்கக்ருத்.
அஸ்மாத் ஸ்ரீந்ருபகேஸரீ விவத்ருதே யோ பால ஏவ உரகை:
தத்-ஸூனு: பரதுர்க்கமர்த்தன இதி க்யாத: ஸ வாதாபிஜித்

வ்ருத்தம்(பாவகை) - ஶார்தூலவிக்ரீடிதம் (அடிக்கு பத்தொன்பது எழுத்துக்கள்)

அந்த வம்சத்தைச் சேர்ந்தவனான பரவீரஜித்(எதிரி வீர்ர்களை வென்றவன்) மழவர்களை வென்றவன். அவனிடமிருந்து வீரதுங்கன்(வீரத்தில் உயர்ந்தவன்) பிறந்தான். அவனிடமிருந்து அதிவீரன்(பெரும் வீரன்) என்னும் இணையற்றவன் (அனுபமன்) தோன்றினான். அவனுக்கு ஸங்கக்ருத்(சங்கத்தைச் உருவாக்கியவன்) பிறந்தான். அவனிடமிருந்து ஸ்ரீந்ருபகேஸரீ(அரசர்களுள் சிங்கம் போன்றவன்) என்பவன் பிறந்தான். அவன் சிறுபிராயத்திலேயே நாகங்களால் வளர்க்கப் பட்டவன். அவனுடைய மகனாக பரதுர்க்கமர்த்தனன்(எதிரிகளின் கோட்டைகளை அழிப்பவன்) என்னும் புகழ்பெற்றவன் பிறந்தான். அவன் வாதாபியை வென்றவன்.

तस्य समराभिरामः पुत्रस्सुत्रामतेजसः।
अधिराजमंगलाजौ यो निजघान चळुक्किम्।। 3
தஸ்ய ஸமராபிராம: புத்ர: ஸுத்ராம-தேஜஸ:
அதிராஜமங்கள-ஆஜௌ யோ நிஜகான சளுக்கிம்

வ்ருத்தம் – அனுஷ்டுப் (அடிக்கு எட்டெழுத்துக்கள்)

அவனுக்கு ஸமராபிராமன்(போர்க்களத்தில் மனம் கவர்பவன்) என்பவன் மகனாவான். அவன் இந்திரனையொத்த வலிமை கொண்டவன். அவன் அதிராஜமங்கலத்தில் நடந்த போரில் சளுக்கியைக் கொன்றவன்.

तस्याच्युतस्य कमलेव सरस्वतीव पत्मोत्भ(द्भ*)वस्य गिरिजे(व) हरस्य साक्षात्।
प्रेयस्यभूदनुपमेति यथार्त्थनाम्ना श्रीचोळराजदुहिता यदुवंशकेतोः।। 4
தஸ்ய அச்யுதஸ்ய கமலேவ ஸரஸ்வதீவ
பத்மோத்பவஸ்ய கிரிஜேவ ஹரஸ்ய ஸாக்ஷாத்
ப்ரேயஸீ அபூத் அனுபமா இதி யதார்த்த-நாம்னா
ஸ்ரீசோள-ராஜ-துஹிதா யது-வம்ஶ-கேதோ:

வ்ருத்தம் – இந்த்ரவஜ்ரா (அடிக்கு பதினோரு எழுத்துக்கள்)

யதுவம்சத்தின் கொடி போன்ற அவனுக்கு அச்யுதனுக்குத் திருமகளைப் போலவும் தாமரையில் தோன்றிய நான்முகனுக்குக் கலைமகளைப் போலவும் சிவபெருமானுக்கு மலைமகளைப் போலவும் சோழமன்னின் மகளான அனுபமா மனைவியானாள். அவள் பெயர் தகுந்த பொருளை உடையது (அனுபமா - உவமையற்றவள்).

तस्यामस्य बभूव भूतिमपराम्मीनामळाख्यान्दधन्
श्रीमान्विक्रमकेसरीति समरे लब्धान्यनामा नृपः
कावेरीवारी शोणम् समकृतरुधिरैः पल्लवस्य ध्वजिन्याः
यो वीरोः(रो*)वीरपाण्ड्यं व्यजयत समरे वञ्चिवेळन्तकोभूत्। 5
தஸ்யாம் அஸ்ய பபூவ பூதிம் அபராம் மீனாமளாக்யாம் ததன்
ஸ்ரீமான் விக்ரமகேஸரீ இதி ஸமரே லப்த-அன்ய-நாமா ந்ருப:
காவேரீ-வாரி சோணம் ஸமக்ருத ருதிரை: பல்லவஸ்ய த்வஜின்யா:
யோ வீரோ வீரபாண்ட்யம் வ்யஜயத ஸமரே வஞ்சிவேளந்தகோ அபூத்

வ்ருத்தம் – முதலிரு அடிகள் சார்தூல விக்ரீடிதம்
இறுதியிரு அடிகள் ஸ்ரக்தரா (அடிக்கு 21 எழுத்துக்கள்)

அவனுக்கு அந்த மனைவியினிடத்தில் மீனாமழன் (மீனவன் வேள்?) என்றும் பூதி என்றும் பெயர் படைத்த திருவுடையவன் பிறந்தான். அவன் போரில் விக்ரமகேஸரி என்னும் வேறு பெயரைப் பெற்றவன். அவன் பல்லவர்களின் படையின் குருதியால் காவேரி நீரை சிவப்பாக்கினான். போரில் வீரபாண்டியனை வென்ற வீரன். வஞ்சிவேளுக்குக் கூற்றானவன்.

मत्तारिसामजा(न्*)हत्वा वसन्विक्रमकेसरी
कॊटुम्बाळूप्पुरादीन्द्रमाळिकाविवरोदरे। 6
மத்தாரி-ஸாமஜான் ஹத்வா வஸன் விக்ரம-கேஸரீ
கொடும்பாளுப்-புராத்ர-இந்த்ர-மாளிகா-விவரோதரே

வ்ருத்தம் - அனுஷ்டுப்

மதம் கொண்ட எதிரியானைகளைக் கொன்ற விக்ரமகேஸரி (வீரமுடைய சிங்கம் அல்லது அந்தப் பெயருடையவன் என்று சிலேடை) கொடும்பாளூரில் மலைகளில் இந்திரன் போன்ற மாளிகையின் குகை போன்ற நடுவறையில் வீற்றிருக்கிறான் (இந்தச் செய்யுளில் வினைச் சொல் இடம் பெறவில்லை).

विद्वत्कल्पतरौ क्षितीश्वरकरद्वद्वा(न्द्वा*)म्बुजेन्दौ भुवं
यस्मिन् शासति मेदिनी(म्) जयरमाश्रीकीर्त्तिवाग्वल्लभे।
तैक्षण्यन्नेत्रयुगे भु(भ्रु*)वोश्चलनता केशेषु कार्ष्ण्यन्तनौ
तन्वितान्तनुताभवत् स्तनयुगे चान्न्यो(न्यो*)न्य-(सम्बा)धनम्।। 7
வித்வத்-கல்ப-தரௌ க்ஷிதீஶ்வர-கர-த்வந்த்வ-அம்புஜ-இந்தௌ புவம்
யஸ்மின் ஶாஸதி மேதினீம் ஜய-ரமா-ஸ்ரீ-கீர்த்தி-வாக்-வல்லபே
தைக்ஷண்யம் நேத்ர-யுகே ப்ருவோ: சலனதா கேஶேஷு கார்ஷ்ண்யம் தனௌ
தன்விதாம் தனுதா அபவத் ஸ்தனயுகே ச அன்யோன்ய-ஸம்பாதனம்

வ்ருத்தம் - ஶார்தூலவிக்ரீடிதம்

அறிஞர்களுக்கு கற்பகத்தருவும் புவியாளும் மன்னர்களின் கையாகிய தாமரையிணைகளுக்கு நிலவும் (நிலவைக் கண்ட தாமரையைப் போல கைகள் குவிவது நயமாகக் கையாளப் பட்டுள்ளது.) வெற்றித் திருமகள், செல்வம், புகழ், கல்வி ஆகியவற்றிற்குத் தலைவனுமான அந்த அரசன் புவியை ஆளும் போது (பெண்களின்) கண்களில் மட்டுமே கொடுங்கூர்மையும், புருவங்களிணையில் சலனமும், கேசங்களில் கருமையும், உடலில் மெலிவும், கொங்கையிணைகளில் ஒன்றுக்கொன்று மோதலும் நடைபெற்றன. (மக்களின் மனத்தில் இல்லை என்பது பொருள்)


तस्याभूत् देव्यौ कற்றळिवरगुणसमाह्वये सत्यौ।
कற்றळिरभवज्जननी परान्तकादित्यवर्मणो (कम्रकम्राणाम्।।) 8
தஸ்ய அபூத் தேவ்யௌ கற்றளி-வரகுண-ஸமாஹ்வயே ஸத்யௌ
கற்றளி அபவத் ஜனனீ பராந்தக-ஆதித்ய-வர்மணோ கம்ரக்க(கம்ரகம்ராணாம்)

வ்ருத்தம் – ப்ருஹதி (ஜாதி)

அவனுக்கு கற்றளி வரகுணா என்ற பெயருடைய இரு பதிவ்ரதைகள் மனைவியையிருந்தனர். அவர்களில் கற்றளி பராந்தகவர்மன், ஆதித்யவர்மன் என்னும் இருவருக்குத் தாயானாள். (இங்கு கம்ரகம்ராணாம் (மிக்க அழகியவர்களுக்கு) என்னும் சொல் பாவிலக்கணப்படி எங்கும் சேராமல் தொக்கி நிற்கிறது.)

आत्रेयगोत्रजस्श्री(श्श्री)मान्माधुरो(न)गेन्द्रपारगः।
विद्याराशेस्तपोराशेश्शिष्योश्र(स्य*) मल्लिकार्जुनः।। 9
ஆத்ரேய-கோத்ரஜ: ஸ்ரீமான் மாதுரோ நகேந்த்ர-பாரக:
வித்யாராஶே: தபோராஶே: ஶிஷ்யோ அஸ்ய மல்லிகார்ஜுன:

வ்ருத்தம் - அனுஷ்டுப்

ஆத்ரேயகோத்ரத்தில் பிறந்தவரும் திருவுடையவரும் மதுரையைச் சேர்ந்தவரும் நகேந்திரத்தில் (நகேந்திர என்றால் மலைகளில் இந்திரன் என்பது பொருள். ஆயின் இங்கு பொருந்தவில்லை. ம்ருகேந்த்ர என்றிருந்தால் சைவ ஆகமத்தையேனும் குறிக்கும். இதன் பொருள் சரிவர விளங்கவில்லை). வித்யாராசி மற்றும் தபோராசியின் சிஷ்யரான மல்லிகார்ஜுனர் இருந்தார்.


(स्थान)त्रयमुत्थाप्य प्रितिष्ठाप्य महेश्वरम्
स्वनाम्ना प्रिययोर्न्नाम्ना सोदात् बृहन्मठम्। 10
ஸ்தான-த்ரயம் உத்தாப்ய ப்ரதிஷ்டாப்ய மஹேஶ்வரம்
ஸ்வநாம்னா ப்ரியயோ: நாம்னா ஸ அதாத் ப்ருஹன்-மடம்

வ்ருத்தம் - அனுஷ்டுப்

அவன் தன் பெயராலும் தன் மனைவியர் பெயராலும் மூன்று கோயில்களை எடுப்பித்து அவற்றில் மஹேச்வரனை ப்ரதிஷ்டை செய்தான். பெரும் மடத்தையும் அளித்தான்.


तस्मै कालमुखाख्यानयतिमुख्याय यादवः
प्रादादेकादशग्रामविनिबन्धं बृहन्मठम्। 11
தஸ்மை காலமுக-ஆக்யான-யதி-முக்யாய யாதவ:
ப்ராதாத் ஏகாதச-க்ராம-வினிபந்தம் ப்ருஹன்-மடம்

வ்ருத்தம் – அனுஷ்டுப்

யதுவம்சத்தில் தோன்றிய அவன் காளாமுகர் என்னும் பெயர்கொண்ட துறவிகளில் முக்கியமானவரான அவருக்கு பதினோரு சிற்றூர்களை நிவந்தமாகக் கொண்ட பெரும் மடத்தை அளித்தான்.



पञ्चाशतामसितत्क्र(सीत्तत्र*) तपोधनानाम्
भुक्त्यै ब्र(बृ*)हन्मठम्.....(गु)रवे स राजा
नैवेद्यगन्धकुसुमाक्षतधूपदीपताम्बूल........
.............................................महेश्वरस्य। 12
பஞ்சாஶதாம் ஆஸீத் தத்ர தபோதனானாம்
புக்த்யை ப்ருஹன்மடம் குரவே ஸ ராஜா
நைவேத்ய-கந்த-தூப-தீப-தாம்பூல..................
.................................................................மஹேஶ்வரஸ்ய

வ்ருத்தம் – வஸந்ததிலகா (பாவிலக்கணம் பிறண்டுள்ளது)

அங்கு அந்த மடத்தில் ஐம்பது தபோதனர்களுக்கு உணவிடுவதற்காகவும் பரமேச்வரனின் நைவேத்யம், வாசனைப் பொருட்கள், தூபம், தீபம், தாம்பூலம் முதலியவற்றிற்காகவும் தனது குருவிடம் அந்த அரசன்(தானமளித்தான்).

6.குறிப்பு

குறிப்புரை பரவீரஜித் என்பதும் வீரதுங்கன் என்பதும் ஒருவனையே குறிப்பிடுவதாக் கொள்கிறது. ஆயின் அமுதோ(இவனிடமிருந்து) என்பதை முன்னிறுத்திப் பார்க்கும்போது பரவீரஜித்தின் மகன் வீரதுங்கன் என்று கொள்வதே பொருத்தமாகிறது.
இங்கு பல்லவஸ்ய த்வஜின்யா: என்பதனால் அபராஜிதவர்மனின் காலத்தை நோக்கி பூதி விக்ரமகேஸரியின் காலத்தை எடுத்துச் செல்ல வேண்டி வருகிறது. ஆனால் எழுத்தியலின் அடிப்படையில் இதனைக் கண்டராதித்யனின் காலத்திற்கு முன்பு கொண்டு செல்லவியலவில்லை. ஆகவே பல்லவஸ்ய என்பதற்குப் பதிலாக வல்லபஸ்ய என்றிருந்தால் ராஷ்ட்ரகூட படையெடுப்பைக் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று பேரா.நீலகண்ட சாஸ்த்ரியார் குறிப்பிடுகிறார். (சோழர்கள் 156-157).this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.