http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 89

இதழ் 89
[ நவம்பர் 16 - டிசம்பர் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

திரும்பிப்பார்க்கிறோம் - 36
Mangudi
Kulalakottaiyur
நல்லூர் மாடக்கோயில்
சேக்கிழாரும் அவர் காலமும் - 4
இதழ் எண். 89 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப்பார்க்கிறோம் - 36
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணிக்கு,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னுடன் உரையாட முடிந்ததில் மகிழ்கிறேன். கோகுல், கமலக்கண்ணன், ராம், கிருபாசங்கர் கூட்டிணைவு வரலாறு டாட் காம் உயிர்க்க உதவியிருக்கிறது. உண்மைகளை உறவுகளுடன் பகிர்ந்துகொள்ள இந்த இணைய தள இதழ் வாய்ப்பான வாயிலாக அமைந்துள்ளது. வரலாற்றுக்கென இந்த ஓரிதழேனும் வளமாக, தொடராக வருதல் வேண்டும். வரும் என்று உறுதியளித்துள்ளனர் என் அன்புத் தம்பியர்.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் ஆய்வுகளில் மூழ்கியிருந்த நேரமது. உச்சித்தளம், சிகரம் கண்டு மலைப்போடும் உவகையோடும் அந்த எழிலார்ந்த விமானத்தோடு நாங்கள் உறவாடத் தொடங்கியிருந்தோம். விமான இரண்டாம் தளச் சாந்தார நாழியில் இராஜராஜரால் உருவாக்கப்பட்டிருந்த கரணச் சிற்பங்களை ஆய்வு செய்த பட்டயக் கல்வி மாணவர் பொன்மணிக்கு ஆடல், கரணம் குறித்த அடிப்படைத் தெளிவு ஏதும் கிடையாது. பள்ளிக் கல்வி மட்டுமே பெற்றிருந்த அவருக்கு அவை தொடர்பான நூல்களைத் தந்து படிக்கச் செய்திருந்தேன். ஆர்வமும் செயல் திறனும் இருந்தமையால் 15 நாட்களில் கரணங்களைப் பற்றிய அடிப்படைகளை அவரால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அவருடைய கட்டுரைக்காகத் தனிப்பட்ட முறையில் சில நாட்கள் இராஜராஜீசுவரம் செல்ல நேர்ந்தது. விமானத்தின் இரண்டாம் தளச் சாந்தார நாழியில் ஒவ்வொரு கரணமாகக் காட்டி அதன் நுட்பங்களைப் பொன்மணிக்கு விளக்கிய அனுபவம் எனக்கே பெரும் பயனளித்தது. பின்னாளில் என் முனைவர் ஆய்வேட்டிற்குத் தேவையான பல தரவுகளைப் பொன்மணிக்கென நான் தயாரித்த ஆய்வுக் குறிப்புகளில் இருந்தே பெற்றேன்.

தொடக்கத்தில் மிகுந்த தயக்கத்துடன் கரணங்களை அணுகிய பொன்மணி நாளாக நாளாக அச்சிற்பங்களோடு அணுக்கமானார். கட்டுரையைத் தயாரித்தபோதும் அவ்வப்போது தோன்றிய ஐயங்களை அகற்றிக்கொள்ள நளினியிடமும் என்னிடமும் அவர் கலந்துரையாடியது நினைவில் உள்ளது. திருச்சுற்று மாளிகையின் ஒரு பகுதியை ஆய்வு செய்த இலலிதாம்பாள் ஆர்வத்தின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்ப்பதற்கே நளினியின் பெரும்பகுதி நேரம் ஒதுக்கப்பட்டது.

அன்பும் பணிவும் நிரம்பிய இலலிதாம்பாள் எங்கள் மையத்திற்குப் பெருஞ் சொத்தாக விளங்கினார். அவருடைய வடமொழிஅறிவு மைய ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவியது. தமக்குத் தெரியாதனவற்றைத் தஞ்சாவூரைச் சேர்ந்த வடமொழி அறிஞர்களிடம் கேட்டுப் பெற்றுத்தருவார். தஞ்சாவூரைச் சேர்ந்த அவர் கோயிலூரில் பணியாற்றிக் கொண்டிருந்த போதும் வகுப்புகளுக்குத் தவறாமல் வந்துவிடுவார். களப்பயணங்களின்போது அவரது இசை மழையில் நனைவது எங்கள் பேறாக இருந்தது. தஞ்சாவூர் ஆய்வில் இலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. எண்திசைக் காவலர்களைப் பற்றிய பல அரிய புராணச் செய்திகளை அவர் வழிப் பெற முடிந்தது. ஆய்வு நாட்களின்போது ஒருமுறை அவர் இல்லத்திற்குச் சென்று அவரது பெற்றோர் திரு. இல. இராமச்சந்திரன், திருமதி ந. பாக்கியலட்சுமி இவர்களைச் சந்தித்து மகிழ்ந்தோம். இலலிதாம்பாளின் தம்பி பத்மசேகரன் அவரது துணைவியார் இரமா இருவரும் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

ஓவியங்களை ஆய்வு செய்த பேராசிரியர்கள் அதற்கென நிறைய நூல்களைப் பயின்றதுடன் அவற்றை எனக்கும் காட்டி மகிழ்ந்தனர். சோழர் ஓவியங்கள் அமைந்திருந்த நான்கு சுவர்ப் பகுதிகளில் இரண்டைத் திருமாறனும் இரண்டை இராதாகிருட்டிணனும் தேர்ந்தனர். ஆய்வு நாட்களின்போது இருவரும் ஓவியக்கூடத்திலேயே இருந்து தகவல்களைச் சேகரித்தனர். முதல் தளத்தைத் தேர்ந்திருந்த வீராசாமிக்கு ஐயம் வரும்போதெல்லாம் நான் உடனிருக்க வேண்டியதாயிற்று. துடிப்பு மிக்க இளைஞரான அவர் கண் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மையத்தின் கூட்ட நாட்களிலும் வகுப்புகளின்போதும் அவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. எந்த வேலையையும் தயங்காமல் செய்யக் கூடியவர். பல நாட்கள் என்னுடனேயே உணவருந்தி எங்கள் இல்லத்திலேயே அவர் தங்கியதுண்டு. ஆறுமுகத்துக்கு ஓர் உதவியாளர் போல வீராசாமி அமைந்தமை எங்கள் அனைவருக்குமே மகிழ்வளித்தது. வகுப்புகள், கூட்டங்கள் தொடர்பான வரவு செலவுக் கணக்குகள் அனைத்தும் அவர் பொறுப்பில் விடப்பட்டிருந்தன. அவற்றைச் செம்மையாகப் பார்த்துக் கொண்டார். எனக்கும் என் வாழ்வரசிக்கும் அவர் மீது தனிப்பட்ட அன்பும் மிகுந்த நம்பிக்கையும் இருந்தன. பல களப்பயணங்களுக்கு நளினிக்குத் துணையாக வீராசாமி சென்றிருக்கிறார். அவருடைய உதவும் பாங்கு குறித்து நளினி மகிழ்ச்சியுடன் பல முறை பேசியுள்ளார். அவரும் இராமகிருஷ்ணனும் இரட்டையர்கள் போல இருந்தனர்.

திருக்கோயில் அருங்காட்சியகத்தைத் தலைப்பாகத் தேர்ந்திருந்த இராஜேந்திரதேவன் எறும்பியூருக்கு அருகிலுள்ள கொதிகலன் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். வீடு உறையூரில் இருந்தது. ஆர்வமும் துணிவும் நிரம்பிய அந்த இளைஞரின் உழைப்பு மதிக்கத்தக்கது. அவருடைய கட்டுரை உருவாக என்னால் இயன்ற வரை துணையிருந்தேன். செல்வி இலட்சுமி வளனார் கல்லூரியில் முதுநிறைஞர் பட்ட வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். பைஞ்ஞ்ீலிக் கோயிலைத் தம்முடைய ஆய்வேட்டிற்கான பொருளாகக் கொண்டிருந்த இலட்சுமியும் துணிவும் ஊக்கமும் உடையவர். வகுப்புகளின்போது அதிக அளவில் கேள்விகள் கேட்பவர் அவராகவே இருப்பார்.

இலட்சுமியின் ஆய்வேடு தொடர்பாக நெறியாளருடன் சிக்கல் ஏற்பட்டபோது நானே கல்லூரி சென்று நெறியாளரையும் துறைத் தலைவரையும் சந்தித்து இலட்சுமியின் நிலையை விளக்கி அவர் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பதைப் புலப்படுத்தி ஆய்வு நெறிமுறைகளை ஒட்டியே அவரது ஆய்வு நிகழ்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்து வந்தேன். அவரும் இலலிதாம் பாளும் ஏறத்தாழ ஒரே பகுதியில் ஆய்வு செய்தமையால் ஆய்வுக்காலம் முழுவதும் இருவரும் ஒன்றாகவே இருந்தனர்.

ஆய்வுகள் நிறைவுற்ற நாளன்று அனைவரும் கூடிப் படம் எடுத்துக்கொண்டோம். ஆய்வில் ஈடுபட்ட அனைவர் உள்ளங்களிலும் மகிழ்வு நிறைந்திருந்த அளவிற்கு வருத்தமும் இருந்தது. அந்த வருத்தம் இனி இது போல் கூடிப் பணியாற்றுவது எப்போது என்பது பற்றியதாகவே அமைந்தது. ஒரு மாத காலமாக ஒரு குடும்பம் போல் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் வாழ்ந்த அந்த ஆய்வு வாழ்க்கை எங்கள் மையத்தின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகவே அமைந்தது. தஞ்சாவூருக்குப் பிறகு பட்டயக்கல்வி முடியும்வரை வேறெந்தக் கோயிலையும் இப்படி அனைவரும் இணைந்து ஆராயும் சூழல் உருவாகவே இல்லை.

மாணவர்கள் அனைவரும் அவரவர் தேடிச் சேகரித்திருந்த தரவுகளைத் தொகுத்து கட்டுரைகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கைந்து முறை அனைவரும் கூடிக் கலந்துரையாடினோம். ஒவ்வொரு மாணவரையும் அவரது கட்டுரையுடன் தனித்தனியே நானும் நேர்முகம் கண்டேன். அறிஞர் அரங்கில் நிகழப்போகும் கருத்தரங்கம் என்பதனால் மிகுந்த பொறுப்புணர்வுடனும் பிழைகள் வந்துவிடக்கூடாதே என்ற கவலையுடனும் கட்டுரைகளைக் கவனத்துடன் சரிசெய்தோம். கட்டுரைகளின் சொற்றொடர்கள் ஒழுங்குற அமையுமாறு பேராசிரியர்கள் பார்த்துக் கொண்டனர். அதனால், ஒவ்வொரு கட்டுரையும் இரண்டல்லது மூவர் பார்வைக்கு உட்பட்டே தயாரானது.

கருத்தரங்க நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் அனைவரும் இறுதி செய்யப்பட்ட தங்கள் கட்டுரைகளுடன் என்னை இல்லத்தில் சந்தித்தனர். எல்லோருக்குமே அவரவர் கட்டுரையில் நிறைவு இருந்தது. அடுத்த நாள் அனைத்துக் கட்டுரைகளும் சிறக்க வாசிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் பிரிந்தோம். 21. 10. 1990 ஞாயிறன்று காலை 8. 30 மணி அளவில் என் இல்லத்தமைந்த இதழியல் இளங்கோவன் நினைவரங்கில் பயில்வோரின் இரண்டாம் கருத்தரங்கம் தொடங்கியது. பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ச. முத்துக்குமரன் தலைமையேற்றார். உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் பேராசிரியர் சோ. சத்தியசீலன் சிறப்புரையாற்றிக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். நான் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கியதோடு மாணவர்களின் உழைப்பாற்றலையும் வெளிப்படுத்தினேன்.

முதல் அமர்வுக்கு மஜீது தலைமையேற்றார். திருமாறன், இராதாகிருட்டிணன், பொன்மணி கட்டுரைகள் அவ்வமர்வில் அமைந்தன. தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் கோ. தெய்வநாயகம் இரண்டாம் அமர்விற்கு தலைமையேற்றார். வீராசாமி, இராமகிருஷ்ணன், இராஜேந்திரதேவன் கட்டுரைகள் அவ்வமர்வில் படிக்கப் பட்டன. நளினி தலைமைப் பொறுப்பேற்ற மூன்றாம் அமர்வில் அகிலா, இலட்சுமி, தமிழரசி இவர்கள் கட்டுரை வாசித்தனர். நான்காம்அமர்விற்கு ஸ்ரீதரன் தலைமை வகித்தார். நளினி, பொன்மணி, கோபாலன் கட்டுரை வழங்கினர். கோபாலன் என் விமானப் பயணத்தை உள்ளது உள்ளபடி எடுத்துரைத்தார். அக்கட்டுரை படிக்கப்பட்டபோது அவையே ஆர்வத்துடன் கவனித்தது.

இறுதி அமர்வுக்குத் தயாளன் தலைவராக இருந்தார். இலலிதாம்பாள், அகிலா, தமிழகன் இவர்தம் கட்டுரைகள் அவ்வமர்வில் அமைந்தன. மாலை 6. 15க்கு நிகழ்ந்த நிறைவு விழாவிற்கும் பேராசிரியர் முத்துக்குமரனே தலைமையேற்றார். 'தொல்லைகளிடையே தொல்லியல் ஆய்வு' எனும் தலைப்பில் கா. இராசன் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொல்லியல்துறை அலுவலர்கள் அனைவரையும் பாராட்டி, அவர்தம் ஒத்துழைப்பிற்கும் உணர்விற்கும் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்த பிறகு அவர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பைத் தெரிவிக்கும் முகத்தான் தலைவரைக் கொண்டு துண்டு அணிவிக்கச் செய்தோம். அந்த நிகழ்ச்சி தொல்லியல் துறை நண்பர்களைப் பெருமைப்படுத்தியதுடன் எங்களையும் மகிழ்விற்கு ஆளாக்கியது.

கருத்தரங்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்து நாளிதழின் திரு. இராமன் அரசு, நாள் முழுவதும் எங்களுடன் இருந்து கருத்தரங்கைப் பெரிதும் இரசித்தார். நாங்கள் சற்றும் எதிர்பாராத முறையில், 'Little Known Details About Big Temple' என்ற தலைப்பில் நான்கு பத்திச் செய்தியாகக் கருத்தரங்க நிகழ்வு முழுவதையும் விரிவான முறையில் 2. 9. 1990 அன்று வெளியான இந்துவில் அவர் பதிவுசெய்திருந்தார். அந்தச் செய்தியின் விளைவாக இராஜராஜீசுவரம் பற்றிய பல உண்மைகள் அறிஞர்களைச் சென்றடைந்தன.

பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வருமாறு என்னை அழைத்திருந்தார். தென்னிந்திய வரலாற்றுப் பேராசிரியர்களுக்கென நிகழ்த்தப்பட்ட புத்தொளிப் பயிற்சியின் நிறைவு விழாவில், 'Rajarajisvaram Certain Revelations' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நிறைவுரையாற்றினேன். நான் தெரிவித்த புதிய தரவுகள் குறித்துப் பேராசிரியர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அனைத்திற்கும் களஆய்வில் கண்டவாறு விடையிறுத்தேன். கூட்ட முடிவில் எங்கள் ஆய்வு முடிவுகளை அனைவரும் போற்றி ஏற்றனர்.

ஆகஸ்டு இறுதியில் குன்றக்குடித் திருமடத்தில் இருந்து தவத்திரு அடிகளார் பெருந்தகை பேசினார். திருவண்ணாமலையில் அவர்கள் ஆதீன குருமூர்த்தக் கோயில் இருப்பதாகவும் அக்கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு கல்வெட்டுகளையும் படிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டவர், திருவண்ணாமலையில் தங்கிக் கல்வெட்டுகளைப் படிக்க உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் கூறினார். அதற்காக 2. 9. 1990 அன்று நான், நளினி, இராமகிருஷ்ணன், வீராசாமி ஆகிய நால்வரும் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டோம். கோயிலருகே எங்களை எதிர்கொண்ட திருமடத்து அன்பர் திரு. பா. சுந்தர் உணவளித்த பிறகு குருமூர்த்தக் கோயில் வளாகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த 36 வரிக் கல்வெட்டை நானும் நளினியும் இணைந்து படித்தோம்.

திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணிப் பண்டார சன்னதியின் சீடர் அருணாசலத் தம்பிரான் திருமடத்திற்குச் சொந்தமான நிலத்தின் அளவும் மடத்தில் இருந்தவாறு தம்பிரான் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் கி. பி. 1687ல் முடிவு செய்யப்பட்டுக் கல்வெட்டில் பதிவாகியிருந்தன. நாங்கள் கல்வெட்டுப் படித்துக் கொண்டிருந்தபோதே அடிகளார் அங்கு வந்தார். கல்வெட்டின் பாடத்தைக் கேட்டதும் மகிழ்ந்து பாராட்டியவர் கோயில் வளாகத்திற்குள்ளும் ஒரு கல்வெட்டு இருப்பதாகக் கூறி அதையும் படித்தளிக்கக் கேட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலைக் கோயிலில் கரணச் சிற்பங்கள் இருப்பதால் அவற்றையும் அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய விழைந்த நான் அடிகளாரிடம் வேண்டுகோள் வைத்தேன். வேண்டிய நாட்கள் இருந்து ஆய்வு செய்யுமாறு கூறியதுடன் நாங்கள் அங்குத் தங்கும் நாட்களில் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருமாறு திருமடத்து அன்பர்களுக்கு அவர் உத்தரவிட்டார். கோயில் விருந்தினர் விடுதியில் எங்களுக்கு அறை தரப்பட்டது. சற்று நேர ஓய்விற்குப் பிறகு கோயில் வளாகத்தில் இருந்த கல்வெட்டையும் படித்தளித்தோம். தெய்வ சிகாமணிப் பண்டாரத்தின் மடத்துக்குக் கறித்தோட்டம் விட்டது தொடர்பான அந்தக் கல்வெட்டு 8 வரிகளில் அமைந்திருந்தது. அன்றிரவு உணவுக்குப் பிறகு கோயில் கோபுரத்தின் உட்புறம் இடம்பெற்றிருந்த கரணங்களை ஆய்வு செய்தோம்.

3. 9. 1990 திங்களன்று காலை 6. 50க்கெல்லாம் தயாராகி வடக்குக் கோபுரத்தை அடைந்தோம். அங்கிருந்த கரணச் சிற்பங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து குறிப்புகள் எடுத்தோம். அவற்றைப் பற்றிய பொதுக்கருத்துக்களாக, 'மேற்கொண்டை, செவிகளில் பனையோலைக் குண்டலம், விரிப்புடனான குட்டைப் பாவடை, மார்புக்கச்சு, கைவளைகள், தாள்செறி, முகத்தில் மலர்ச்சியோ, அசைவுகளில் நளினமோ இல்லாத தோற்றம் என ஆடற்பெண்கள் அமைய, அருகில் சிறிய அளவிலான ஓர் ஆண்வடிவம். அது தாளம், மத்தளம் (பலவகை), இடக்கை, வீணை இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் இசைக்கலைஞராகக் காட்சி. சில ஆண்வடிவங்கள் கையை உயர்த்திப் போற்றி மெய்ப்பாட்டில். இவ்வடிவங்கள் பெரும்பாலும் ஆடற்பெண்ணின் இடப்புறத்தே. இவர்கள் இடம்பெற்றுள்ள சதுரங்கள் 19-20 செ. மீ. அகலமும் 34. 35 செ. மீ. உயரமும் கொண்ட சாலைக் கோட்டமென அலங்கரிக்கப் பட்டுள்ளன' என்று என் நாட்குறிப்பில் எழுதியுள்ளேன். இராமகிருஷ்ணன் ஓவியர் என்பதால் அந்தச் சதுரங்களில் ஒன்றை அது இருக்குமாறு போலவே என் நாட்குறிப்பில் வரைந்து தந்தார்.

வடக்குக் கோபுரப்பணியை இடையில் நிறுத்திவிட்டுச் சிற்றுண்டிக்குச் சென்றோம். பகல் 11 மணி அளவில் அப்பணி முடிவுறவும் மேற்குக் கோபுரத்திற்குச் சென்றோம். அங்கும் கரணச் சிற்பங்கள் இருந்தமையால் வடக்குக் கோபுரத்தை ஆராய்ந்தாற் போலவே அங்கும் பணி மேற்கொண்டோம். கரணச் சிற்பங்கள் மட்டுமல்லாமல் பிற சிற்பங்களும் அங்கிருந்தன. மதிய உணவிற்குப் பிறகு திருவண்ணாமலையிலிருந்து 17 கி. மீ. தொலைவில் உள்ள ஆவூர் சென்றோம். அங்குப் பாறையில் அமைந்திருந்த சிறிய அளவிலான திருமால் குடைவரையை ஆய்வு செய்தோம். 2. 04 மீ. உயரமுள்ள பாறையில் 1. 29 மீ. உயரச் சிற்பமாகத் தாமரை மீது நிற்கும் கோலத்தில் திருமால் உருவாகியிருந்தார். அவர் வலப்புறத்தே 97 செ. மீ. உயரச் சிற்பமாகக் கருடனும் இடப்புறத்தே 1. 03 மீ. உயரச் சிற்பமாக அடியவர் ஒருவரும் தனித்தனித் தளங்களில் இருக்குமாறு வடிவம் பெற்றிருந்தனர்.



சடைமகுடம் நீள்செவிகள், கண்டிகை, நிவீத முப்புரிநூல், உருத்திராக்க வளைகள் அணிந்து வலக்கையைத் தொடைமீது இருத்தி, இடக்கையில் மலர்மொட்டுடன் காட்சிதந்த கருடாசன அடியவரின் முகம் வல ஒருக்கணிப்பில் இருந்தது. கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், பட்டாடை, இடைக்கச்சு, நிவீத முப்புரிநூல் அணிந்தவராய் நின்ற திருமாலின் பின்கைகளில் சங்கும் எறிநிலைச் சக்கரமும் அமைய, முன்கைகளில் வலக்கை காக்கும் குறிப்பிலும் இடக்கை கடியவலம்பிதத்திலும் இருந்தன.

திரு. இல. தியாகராஜன் மே 8ம் நாளன்று தினமணியில் வெளியிட்ட, 'பல்லவர் குடைவரைக் கோயில் ஒரு புதிய கண்டுபிடிப்பு' என்ற செய்தியைப் படித்த இராமகிருஷ்ணன், அது தியாகராஜன் கூறியிருக்குமாறு மகேந்திரவர்மர் காலக் குடை வரை அன்று என்பதைச் சிற்பங்களின் தோற்றநிலை, ஆடை, அணிகலன்கள் கொண்டு மறுத்து தினமணிக்கு மடல் எழுதியிருந்தார். அம்மடல் 23. 5. 1990 அன்று வெளியாகியிருந்தது. இவ்விருவர் கூற்றில் எது சரி என்று அறிவதற்காகவே நாங்கள் அன்று ஆவூர் சென்றிருந்தோம். அந்தப் பயணம் பயனுடையதாக அமைந்தது. சிற்பங்களை விரிவாக ஆராய்ந்த நிலையில் அக்குடைவரை மகேந்திரவர்மர் குடைவரை அன்று என்ற இராமகிருஷ்ணனின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு வந்தோம். திரு. தியாகராஜன் இறக்கைகளுடன் இருந்த கருடனையும் அடியவராகவே கருதி எழுதியிருந்தார். வரதராசப் பெருமாள் கோயில் என்றழைக்கப்பட்ட அக்குடைவரையின் முன் பிற்கால மண்டபங்கள் உருவாகியிருந்தன. கோயிலைப் பார்க்க ஆவூர் திரு.இராதாகிருஷ்ணன் உதவினார்.

அவ்வூரிலேயே சிதைந்த நிலையில் இருந்த திருஅகத்தீசுவரம் உடைய நாயனார் கோயிலையும் கண்டோம். இரவு உணவுக்குத் திருவண்ணாமலை திரும்பினோம். செப்டம்பர் 4ம் நாள் காலை கிழக்குக் கோபுரத்தையும் தொடர்ந்து மதியத்திற்கு மேல் தெற்குக் கோபுரத்தையும் பார்வையிட்டோம். அன்று மாலை மண்டகப்பட்டுச் சென்று மகேந்திரரின் குடைவரையைப் பார்த்த பிறகு இரவு உளுந்தூர்ப்பேட்டையில் தங்கினோம்.

அடுத்த நாள் காலை விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோயிலுக்குச் சென்றோம். உதவி ஆணையரின் அனுமதி பெற்றுக் கோபுரங்களில் இருந்த கரணச் சிற்பங்களை ஆராய்ந்து குறிப்பெடுத்தோம். திருவண்ணாமலைச் சிற்பங் களுக்கும் விருத்தாசலம் சிற்பங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இங்குள்ள சதுரங்களில் சிலவற்றில் இரண்டு ஆடற்பெண்களும் சிலவற்றில் ஆடற்பெண் ஒருவர், இசைக்கலைஞர் ஒருவர் என இருவரும் சிலவற்றில் ஆடற்பெண் மட்டும் தனியராகவும் காட்டப்பட்டுள்ளனர். இசைக்கருவிகள் பொதுவாகத் தாளம் அல்லது இடக்கையாகவே அமைந்துள்ளன.







செப்டம்பர் 5ம் நாள் ஆடுதுறை குற்றம் பொறுத்த ஈசுவரர் திருக்கோயிலுக்குச் சென்றோம். அக்கோயிலின் மண்டபக் கூரையில் ஓவியத்தொடர்கள் விளக்கங்களுடன் இருந்தன. சிவபெருமானின் ஊர்த்வதாண்டவக் கோலம் நிருத்தத் தாண்டவம் என்ற குறிப்புடன் காணப்பட்டது. சில ஓவியத் தொடர்கள் விளக்கம் எழுதுவதற்கான இடங்களை மட்டும் கோடிட்ட நிலையில் கொண்டிருந்தன. ஆனால், எழுத்துக்கள் இல்லை. நளினி சில கல்வெட்டுகளைப் படித்தார். இக்கோயிலில் ஓவியங்களைக் கண்டறிந்த செய்தி 30. 9. 1990 தினமணியில் வெளியானது. விக்கிரமங்கலம், திருக்கோட்டியூர், ஆடுதுறை என மூன்றிடங்களில் ஓவியங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் வாய்ப்பு 1990இல் அமைந்ததில் நானும் நளினியும் அகிலாவும் பெரிதும் மகிழ்ச்சியடைந்தோம்.

31. 8. 1990 அன்று திரு. முத்து சுப்பிரமணியன், சிராப்பள்ளி ஆவணக் காப்பக உதவி ஆணையர் எனக்கொரு மடல் அனுப்பியிருந்தார். அதில், சிராப்பள்ளி மண்டல சரித்திர கால ஆவணங்கள் ஆய்வுக்குழுவின் உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு என்னை அரசு நியமித்திருப்பதாகத் தகவல் இருந்தது. நான் மறுநாளே அலுவலகம் சென்று உதவி ஆணையரைச் சந்தித்து எதிர்காலத் திட்டங்கள் பற்றி வினவினேன். சிராப்பள்ளி மாவட்டத் தகவல் சுவடித் தயாரிப்புப் பணியை எதிர்கொள்ளவிருப்பதாகவும் அதற்கு என் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தேவையானபோது தகவல் தருமாறு கூறி விடைபெற்றேன்.

ஆகஸ்டுத் திங்களில் பொள்ளாச்சி திரு. நா. மகாலிங்கம் சிராப்பள்ளியில் நிகழ்த்திய தேவார மூவர் விழாவில் பங்கேற்று உரையாற்றினேன். அந்த உரையில் உளம் நிறைந்த திரு.மகாலிங்கம், 'தேவாரமும் கல்வெட்டும் என்ற தலைப்பில் மிகவும் சிறப்பாக உரையாற்றி அனைவரையும் மகிழ்வித்தீர்கள். தாங்கள் மருத்துவத்துறையில் பணிபுரிந்து கொண்டும் அதே சமயம் கல்வெட்டு ஆராய்ச்சியில் கொண்டிருக்கிற புலமை கண்டும் மிகவும் வியக்கிறேன். வாழ்த்துக்கள்' என்று என் பணிகளைப் பாராட்டி 10. 8. 1990ல் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதே மாதத்தில் திருப்பத்தூர்ப் பணியும் தொடர்ந்தது.

இந்து திரு. இராமன் அரசு அரியலூருக்கு அருகில் இருந்த உடையார்பாளையம் பயறணீசுவரர் கோயில் குடமுழுக்கைக் கருத்தில் கொண்டு, அக்கோயில் பற்றிக் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டார். கோயிலாருக்கு எங்கள் வருகையை அறிவித்து உரிய ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கூறினார். அதனால் 13. 9. 1990 அன்று நாங்கள் உடையார்பாளையம் சென்றோம். கோயிலை ஆய்வு செய்ததுடன் கோயிலின் அறங்காவலராக இருந்த உடையார்பாளையம் ஜமீன்தார் திரு. பெரிய குழந்தை இராஜாவையும் நேர்முகம் கண்டோம். மிகுந்த ஏழ்மையில் இருந்த அப்பெரியவர் அதைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் மிடுக்குடன் நேர்முகம் தந்தார். அவர் வீட்டில் இருந்த ஒளிப்படங்களும் கலைப்பொருட்களும் மட்டுமே அவரை ஜமீன்தாராகப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

அவர் துணையுடன் கோயிலில் நாங்கள் பார்த்த ஆடவல்லான் செப்புத்திருமேனி கீழ்ப்பகுதியில் இசைக்கலைஞர்களைக் கொண்டிருந்தது. குடமுழவுடன் ஒருவரும் தாளங்களுடன் மற்றொருவரும் காட்சியளித்தனர். 'எங்கள் ஊரில் மாறுபட்ட கோலத்தில் பிள்ளையார் சிற்பம் ஒன்று உள்ளது. நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும்' என்று கூறி, எங்களை வில் வளைத்த விநாயகர் திருமுன்னுக்கு அழைத்துச் சென்றார். பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்தி, கரண்டமகுடராய், இடம்புரியராய் நின்றகோலத்தில் காட்சி தந்த விநாயகரின் முன்கைகள் வில்லை வளைத்துப் பிடித்த அமைப்பில் காட்டப்பட்டிருந்தன. திரு. பெரிய குழந்தைராஜா கூறியவாறே அது போன்ற பிள்ளையார் வடிவத்தை நாங்கள் அதுகாறும் பார்த்ததில்லை.

உடையார்பாளையப் பணி முடிந்ததும் கோவிந்தப்புத்தூர் கங்கஜடாதரர் கோயில் சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு ஏற்பட்ட மாறுபட்ட அனுபவத்தைப் பற்றித் திரும்பிப்பார்க்கிறோம் முதல் தொகுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். அருமை யான சிற்பங்களும் சோழர் காலக் கல்வெட்டுகளும் நிறைந்திலங்கும் கங்கஜடாதரர் கோயில் காணவேண்டிய கோயில்களுள் ஒன்றாகும். அங்கிருந்து ஜெயங்கொண்ட சோழபுரம் சென்று சிவன்கோயிலைப் பார்வையிட்டோம். கல்வெட்டுத் துணுக்கொன்றைப் படித்ததாக நினைவு.

ஊர் திரும்பியதும் நாங்கள் சேகரித்த தகவல்களைத் தொகுத்துக் கட்டுரை வடிவில் இராமன் அரசுவிடம் அளித்தேன். அவர் தாம் ஏற்கனவே பெற்றிருந்த தகவல்களுடன் கட்டுரைத் தரவுகளையும் ஒன்றாக இணைத்து இந்து நாளிதழில் உடையார்பாளையம் பயறணீசுவரர் திருக்கோயிலைப் பற்றி அருமையான கட்டுரை ஒன்றை வெளியிட்டார். செப்டம்பர்த் திங்கள் இறுதியில் 'ஆய்வுக் கட்டுரை எழுதுவது எப்படி?' என்பது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த வகுப்புடன் காந்தி பணிமாற்றம் காரணமாகப் பட்டயக் கல்வியைத் தொடரும் வாய்ப்பிழந்தார். அனபாயன் படிப்பின் காரணமாக வகுப்பிலிருந்து விலகினார். அக்டோபர்த் திங்கள் 5, 13ம் நாட்களில் சைவ இலக்கியங்கள் குறித்து இராதாகிருட்டிணன் வகுப்பெடுத்தார்.

மாலைமுரசு தீபாவளி மலரில் வெளியிடுவதற்காக அதன் ஆசிரியர் திரு. இரா. ஜேசு வடியான் கட்டுரை கேட்டிருந்தார். அக்கட்டுரை தீபாவளி, கல்வெட்டுகள் இரண்டையும் இணைத்து அமையின் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவருடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட நிலையில் ஒளிவிழா பற்றிய தமிழர் சிந்தனைகளையும் அவை தொடர்பான இலக்கிய, புராணச் சான்றுகளையும் கல்வெட்டு களையும் தேடித் தொகுத்துக் கட்டுரையாக்கி அளித்தேன். 'கல்வெட்டில் தீபாவளி' என்ற தலைப்பில் மாலைமுரசு தீபாவளி மலரில் (16. 10. 1990) இடம்பெற்ற அக்கட்டுரையின் முதன்மையான தகவல்கள் சிலவற்றை இங்கு நினைவுகூரலாம்.

�தீபஆவலி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். ஒளி சிந்தும் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து ஒளிச் சுடரைப் போற்றிக் கொண்டாடும் பண்டைய மரபு சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அகநானூற்றில் வரும் அவ்வையாரின் பாடல், இலை தழைகள் ஏதுமின்றிச் சென்னிறப் பூக்களாய்ப் பூத்துக் குலுங்கும் இலவமரத்தின் காட்சி ஆரவாரம் மிக்க மகளிர் கூட்டம் மகிழ்ந்து கூடி ஏற்றிய அழகிய சுடர்களை உடைய நீண்ட விளக்கு வரிசை போலக் காட்சியளிப்பதாகக் கூறுகிறது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ, கார்த்திகை மீனுக்குரிய கார்த்திகைத் திங்களில் ஏற்றி வைக்கப்படும் நீளமான விளக்கு வரிசைகள் போலக் கோங்க மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். கார்த்திகை மாத முழு நிலவின் போது தீபஆவலி கொண்டாடப்பட்டதாக நக்கீரர் கூறுகிறார். இந்தத் தீபஆவலி அனைவரும் கூடியிருந்து கொண்டாடும் விழாவாக அமைந்தது. பிரிந்தவர்கள் கூடுவதற்கும் புதிய இணையர் சேர்ந்து மகிழ்வதற்கும் குடும்ப உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் ஓரிடம் கூடிக் களிப்பதற்கும் இவ்விழா காரணமாக அமைந்தது.

சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட இவ்விழா பக்தி இலக்கியக் காலத்திலும் செழுமையுடன் கொண்டாடப்பட்டது. சம்பந்தரின் திருமயிலைத் திருப்பதிகம், தொல்கார்த்திகை நாளன்று தையலார் கொண்டாடும் விளக்கீடு என்று இந்த விழாவைக் குறிப்பிடுகிறது. சீவகசிந்தாமணியும் இவ்விளக்கீடு விழாவைச் சுட்டுகிறது. மக்கள் உள்ளங்களில் ஆர்த்தெழும் மரபுப் பெருமைகளின் வடிகால்களாய்த் தோற்றமெடுக்கும் திருவிழாக்கள் நாளடைவில் இனக்கலப்பால், மொழிக் கலப்பால், பண்பாட்டுக் கூட்டுறவால் திசைமாறியோ, உருமாறியோ, புதுவடிவெடுத்தோ கொண்டாடப்படுவதுண்டு. சங்க காலம் தொட்டுச் சோழர்கள் காலம்வரை கார்த்திகையில் கொண்டாடப்பட்ட தீவஆவலி, வடபுலத் தாக்கத்தால் நாயக்க, மராத்திய மன்னர்களின் காலத்தில் இரண்டு விழாக்களாக மாறி ஒன்று தொடர்ந்து கார்த்திகையிலும் மற்றொன்று ஐப்பசியிலுமாக அமைந்தன.

திருவரங்கத்துக் கல்வெட்டொன்று கேரள மன்னனான இரவிவர்மன் ஒளித் திருநாளைக் கொண்டாடிய தகவலைத் தருகிறது. குடந்தை சார்ங்கபாணி கோயிலில் உள்ள கல்வெட்டும் தீபஆவலித் திருநாளில் பெருமாளுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதாகக் கூறுகிறது. காளத்திக் கோயிலில் உள்ள கல்வெட்டு தீபஆவலி நன்னாளில் இறைவனுக்குத் திருமுழுக்கும் வழிபாடும் படையலும் அளிக்கப்பட்டதாகக் கூறுகிறது.' இக்கட்டுரையைப் படித்த பேராசிரியர் முத்துக்குமரன் 'சிதறிக் கிடக்கும் தரவுகளை மாலை போல் தொகுத்துத் தந்துள்ளீர்கள்' என்று பாராட்டியமை மகிழ்வளித்தது.

அக்டோபர்த் திங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வதாக இருந்தது. தினமணி கோபாலன் அக்கோயில் பற்றிக் கட்டுரை அளிக்குமாறு கேட்டிருந்தார். கோயில் நிருவாகத்தின் அனுமதி பெற்று நானும் நளினியும் அங்கு ஆய்வு செய்ததுடன், கல்வெட்டு ஏதேனும் கிடைக் கிறதா என்று தேடிப்பார்த்தோம். துணுக்குகளைக் கூடக் காண வில்லை. அதனால், கோயில் தொடர்பான செய்திகளை மட்டும் தொகுத்துக் கட்டுரையாக்கிக் கோபாலனிடம் தந்தேன். எக்ஸ்பிரஸ், தினமணி இரண்டு நாளிதழ்களிலும் அக்கட்டுரை 30. 10. 1990 அன்று வெளியாகியிருந்தது.

சமயபுரத்துக்கு அருகிலுள்ள கல்பாளையத்தில் கல்வெட்டு இருப்பதாகப் புரத்தாக்குடி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த புலவர் குழந்தைசாமி தகவல் தந்தார். உடன் நாங்கள் அங்குச் சென்றோம். ஊரின் புறத்தே வயற்காட்டு மேட்டில் புதைக்கப்பட்ட நிலையில் இருபுறத்தும் கல்வெட்டெழுத்துக்களுடன் கற்பலகை ஒன்றும் அருகே சிவலிங்கமும் காணப்பட்டன. அந்தச் சிவலிங்கத்தை வாகாய்த் தழுவியபடி மரம் வளர்ந்திருந்தது. ஊர் மக்களால் சந்தியப்பன் கல் என்றழைக்கப்பட்ட பலகைக் கல்வெட்டை ஊரார் உதவியுடன் அகழ்ந்தெடுத்துப் படித்தோம்.

கல்வெட்டுப் பலகையின் முன்புறத் தலைப்பின் நடுவில் சங்கும் சக்கரமும் பொறிக்கப்பட்டிருந்தன. சக்கரத்தின் வலப்புறம் கலப்பையும் அடுத்து உடுக்கை, குத்துவிளக்கு இவையும் இருந்தன. சங்கின் இடப்புறம் குத்துவிளக்கு மட்டுமே காணப் பட்டது. சித்ரமேழிப் பெரியநாட்டார் அமைப்பைச் சேர்ந்ததாக அமைந்திருந்த அக்கல்வெட்டு அவர்களைக் குறிக்கும் கலப்பையையே தலைப்பில் கொண்டிருந்தது.

வடகரை இராஜராஜ வளநாட்டைச் சேர்ந்த கானக்கிளியூர், திருப்பிடவூர், பாச்சில், வள்ளுவப்பாடி நாட்டுப் பகுதிகளின் நிருவாகப் பொறுப்பில் இருந்த நாட்டார், திருப்பிடவூர்ப் பிள்ளையார் திருவேப்பந்தெற்றி உடையார் திருமண்டபத்தில் கூடி மூன்றாம் இராஜராஜ சோழரின் 26ம் ஆட்சியாண்டில் நிறைவேற்றிய அறக்கட்டளையின் தரவுகளைக் கல்வெட்டுக் கொண்டிருந்தது. கற்கடக நாயற்று அபரபக்ஷத்து புதன்கிழமை அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் மகாப்பிரதானியான நல்லண்ணன் போசள ராஜ்யத்துக் குறுவத்தில் சிங்கப் பெருமாளையும் அவர் தமக்கை அக்கச்சி அக்கன் யாதவப் பெருமாளையும் எழுந்தருளுவித்ததாகக் குறிப்பிடும் கல்வெட்டு, அவ்விறைத் திருமேனிகளுக்காக ஜனநாதநல்லூர் கொடையளிக்கப்பட்டதையும் நாட்டார் அவ்வூரை இறையிலியாக்கித் தந்ததையும் கூறுகிறது.

ஜனநாதநல்லூர் மூன்றாம் இராஜராஜரின் 25ம் ஆட்சியாண்டில் நிகழ்ந்த போர்களால் குடிகளின்றி, உழுவாரும் இன்றிப் பாழ்பட்டிருந்தது. அவ்வூரில் மீண்டும் குடியமர்த்தி, உழுதொழிலை வளர்வித்து, நிலங்களைப் பண்படுத்தி, பிறகே, அதைக் கொடையளித்துள்ளனர். ஏற்கனவே திருவிடையாட்டம், பள்ளிச்சந்தம், ஐயன்பாத்தி, பிடாரிப்பட்டி எனப் பல்வேறு தெய்வங்களுக்குக் கொடையாகத் தரப்பட்டிருந்த நிலப்பகுதிகளைக் கவனமுடன் நீக்கி எஞ்சிய பகுதியே கொடையளிக்கப்பட்டது. ஆவணத்தை எழுதியவராக நாட்டுக் கணக்கு குறுக்கை உடையான் குலோத்துங்க வேளான் கையெழுத்திட்டுள்ளார்.



பல நாடுகளின் பெயர்களையும் ஊர்களின் இருப்பிடத்தையும் நாட்டார் பெருமக்களையும் அடையாளப்படுத்திய அக்கல்வெட்டின் சிறப்புக் கருதிப் பேராசிரியர் எ. சுப்பராயலு நளினியை ஒரு கட்டுரை அமைக்குமாறு வழிப்படுத்தினார். பைஞ்ஞ்ீலி ஆய்வின்போது கிடைத்த கோபுரக் கல்வெட்டின் துணையோடு கல்பாளையம் கல்வெட்டுத் தரவுகளை முறைப்படுத்திக் கட்டுரை தயாரித்தார் நளினி. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் அக்கட்டுரை படிக்கப்பட்டது. 25. 11. 1990 அன்று வெளியான தினமலரில், '800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்ரமேழி பெரிய நாட்டார் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு' என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளியானது.

(வளரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.