http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 109

இதழ் 109
[ ஜூலை 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 6
Kudumiyanmalai - 3
நாகை சட்டைநாதர் மாடக்கோயில்
கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில்
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன்
இதழ் எண். 109 > கலையும் ஆய்வும்
கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில்
ஆசிரியர் குழு
கொங்கு நாட்டின் ஒரு பகுதியை வளப்படுத்தும் அமராவதி ஆற்றின் கரையில் பத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டுச் சிறப்பு மிக்க திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்று திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு அருகில் மடத்துக்குளம் வட்டத்தில் அமைந்துள்ள கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயிலாகும், உடுமலைப்பேட்டையிலிருந்து கணியூர் வழியாக பழனி மற்றும் தாராபுரம் செல்லும் சாலையில் சுமார் 23 கி.மீ. தொலைவில் கடத்தூர் அமைந்துள்ளது. நகரப்பேருந்துகள்
இவ்வூருக்கு வந்து செல்கின்றன.




பசுமையான வயல்கள், தென்னை மரங்கள் மருத மரங்கள் சூழ அமராவதி ஆற்றின் கரையில் இயற்கை மிகுந்த சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது குறிப்பித்தக்கது. கோயிலில் திருமணத் தடை நீங்கச் சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்வதால் இத்தலம் தென் திருமணஞ்சேரி என்று சிறப்பிக்கப்படுகிறது.

இறைவன் - இறைவி

இத்திருக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் சுயம்பு வடிவான இறைவனை மருதீசர், மருதுடையார், மருந்தீசர், மருதவன ஈசுவரர், அர்ச்சுனேசுவரர் என்றும் இறைவியை கோமதி அம்மன் என்றும் மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.

திருக்கோயில் அமைப்பு

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் அருகே அமராவதி ஆறு வளைந்தோடுகிறது. அதிகாலியில் சூரிய ஒளி அமராவதி ஆற்று நீரில் பட்டு சுயம்பு வடிவான இறைவன் மீது படும் அற்புதக் காட்சி இத்தலத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.




கிழக்கு வாயிலில் மூன்று நிலைக் கோபுரம் அமைந்துள்ளது. திருச்சுற்றில் வலம்புரி வினாயகர், வள்ளி-தெய்வானை சமேதராக முருகன், பைரவர் ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன. வாயிலில் பலிபீடமும், நந்தி மண்டபமும் காணப்படுகின்றன. இறைவன் கருவறை அமைந்துள்ள விமானத்திற்குமுன், அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் அமைந்துள்ளன. கருவறையின் தெற்குக் கோட்டத்தில் வெள்ளை நிறப் பளிங்குக் கல்லால் அமைந்த தட்சிணாமூர்த்தியின் வடிவம் வழிபடப்பெறுகிறது. இத்திருமேனி காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர். விமானத்தின் தெற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி இறைவியின் சன்னிதி அமைந்துள்ளது.




வரலாற்றுச் சிறப்பு

வழிபாட்டுச் சிறப்புமிக்க திருக்கோயிலாக விளங்கும் கடத்தூர்க் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுக்களைக் கொண்டுள்ள திருக்கோயிலாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் காணப்படும் 60க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இன்று கடத்தூர் என்று அழைக்கப்படும் இவ்வூர் 'கரைவழி நாட்டு கடற்றூரான ராசராச நல்லூர்' என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. திருக்கோயில் இறைவன் 'ஆளுடையார் திருமருதூருடையார் கோயில் மருதவனப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோயில் கொங்கு சோழ அரசரான மூன்றாம் வீர சோழன் (கி.பி.1187) காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. இவ்வரசரைத் தொடர்ந்து வீரநாராயணன், வீர இராஜேந்திரன், விக்கிரம சோழன் ஆகிய கொங்கு சோழ அரசர்களும் இத்திருக்கோயிலுக்குப் பல்வேறு தானங்கள் அளித்துச் சிறப்பித்துள்ளனர்.




கல்வெட்டுச் செய்திகள்

கட்டுமான உறுப்புக்களும் தானமளித்த பொதுமக்களும்

திருக்கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், நந்திமண்டபம், கோபுரம் ஆகியவற்றில் அமைந்துள்ள தூண் கல்வெட்டுக்ள் பல்வேறு பொதுமக்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. இவற்றின் வழி இக்கோயிலின் தூண்கள், அரைத்தூண்கள், உத்திரம், நிலைக்கால், போதிகை போன்ற உறுப்புக்களை அரசரது படைவீரர்கள், அரசு அதிகாரிகள், நாட்டிய மகளிர், வெள்ளாளர், தவசியர் முதலான பொதுமக்கள் பலரும் தானமாகச் செய்தளித்துள்ளனர் என்கிற அரிய தகவலை அறியமுடிகிறது. ஒரு திருக்கோயிலின் பல்வேறு கட்டுமான உறுப்புக்கள் அக்காலத்தில் எவ்வாறு அறியப்பட்டன என்பதை அறிந்துகொள்ளவும் இக்கல்வெட்டுக்கள் பெரிதும் உதவுகின்றன.

விமானத்தில் பங்களித்தோர்

1. வலது நிலைக்கால் - கோயில் அரசு அதிகாரி திருநீறு பெற்றான் சுந்தரவானந்தக் கூத்தன் ஆன வீரசோழக் குருகுலராயன்
2. வெளிவாசல் - கரைவழி நாட்டுக் கடற்றூர் இருக்கும் வெள்ளாளன் காளிகேசி இட்ட உத்திரம்.

அர்த்த மண்டபக் கட்டுமானத்தில் பங்களித்தோர் பற்றிய கல்வெட்டுக்கள்

1. முத்தவாள் குதிரைச் சேவகப் படை வளவன் ஆழ்க்கொண்டான் அபிமுத்தன் ஆன செம்பியன் மாராயன்
2. படைவளவன் வெள்ளப்ப நாட்டுக் குமரன் குமரன்
3. மலையாளப் படையில் நாடுபெற்றான் வழுவாதான் திருத்தன் ஆன திருநீலகண்டப் பல்லவரையன்
4. கடற்றூரில் தவசியரில் காவன் மாறன்
5. மலையாளன் கருமாக் கோடன் குமரன் கண்டன்
6. கடற்றூர் வெள்ளாட்டிக் கோவன் கோவிசமஞ் செய்தார் தங்கை இட்ட அரைத்தூண்
7. ஆயிரவற்கு நாயகஞ் செய்வார்களில் கண்டன் இராசாதிச்சன் முடிகொண்ட சோழப் பல்லவரையன் இட்ட நிலைக்கால்
8. கடற்றூர் நின்ற நிலை ஆயிரவர்க்கு நாயகம் செய்வார்களில் சங்கரன் சாத்தன் சேர விச்சாதிரப் பல்லவரையன் (இத்திருவாசலும் புறவாய் முகவணை உத்திரமும் செய்வித்தேன்)

நந்தி மண்டபக் கட்டுமானத்தில் பங்கு பெற்றோர் பற்றிய கல்வெட்டுக்கள்

1. சாமந்தரில் தேவன் தோழன் ஆன விலாட சிங்கதேவன்
2. கடற்றூர் மன்றாடி உய்யான் திருவேகம்பமுடையான்
3. அகம்படி வீரசோழ அனங்க கூற்றன் இட்ட தூண்
4. கடற்றூர் மன்றாடி வஞ்சி வேளான் இட்ட தூண்

முன் மண்டபக் கட்டுமானத்தில் பங்காற்றினோர் பற்றிய கல்வெட்டுக்கள்

1. கடற்றூர் சந்தன் போத்தனான மருதன் காமிண்டன் இட்ட அரைத்தூண்
2. கடற்றூரான ராசராச நல்லூரிலிருக்கும் பெருமாள் வேளத்தில் பெண்டுகளில் உடையான் தேவி இட்டத்தூண்
3. வெங்கல நாட்டு (கருவூர்) காச்சுவக் குறிச்சியில் மலையாளன் கறுப்புக் கோடன் குமரன் கண்டன் இட்டத்தூண்
4. மூத்தவாள் நாயகஞ் செய்வார்களில் உலகன்தேவன் ஆன அரிஞ்சயன் பல்லவரையன்

மடைப்பள்ளிக் கட்டுமானத்தில் பங்காற்றினோர் பற்றிய கல்வெட்டுக்கள்

1. பெருமாள் வேளத்தில் பெண்டுகளில் ஆதிச்சன் உடைச்சியேன் ஆளுடையார் திருமருதூருடையார் கோயில் திருமடைப்பள்ளித் திருநிலைக்கால் இட்டேன்.

கோபுரத்தில் பங்காற்றினோர் பற்றிய கல்வெட்டுக்கள்

1. கடத்தூர் மன்றாடிக் காவன் காவனான நரையனூர் நாட்டு வேளான் இட்ட தூண்
2. படைவளவன் பாலைக்காட்டுச் சேரி வெள்ளாளர்களில் குறிச்சியார் பிரிவைச் சேர்ந்த குமரம் குமரன் இட்ட தூணும் போதிகையும்
3. கொழுமத்தைச் சேர்ந்த வேளத்துப் பெண்டுகளில் செங்கண்மால் சொக்கி இட்ட தூண்
4. வெள்ளப்ப நாட்டுத் தேவியார் சேரி கோளன் இராமனன் ஆன அழகிய மாணிக்கப் பல்லவரையன்
5. கடற்றூர் தவசியரில் காவன் மாறன் ஆன அரசு பாடத் திறந்தான் இட்ட தூண். (அரசு பாடத் திறந்தான் என்பது திருமறைக்காடு இறைவனைக் குறிப்பிடும். திருநாவுக்கரசர் பாட இறைவன் கதவு திகழ்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பொதுமக்கள் பெயர் வைத்துக்கொண்டது ஆராயத்தக்கது)
6. மூத்தவாள் குதிரைச் சேவகப்படை வளவஞ் சமரன் மாராயன் இட்ட அரைத்தூண் ஒன்று
7. கடற்றூர் நின்ற நிலை ஆயிரவரில் படைவளவஞ் ஞெய்வார்களில் இராமன் குமரனான கலிகடிந்த சோழப் பல்லவரையன் இட்ட தூணும் போதிகையும்
8. கடற்றூர் வெள்ளாளன் கள்ளன் பறையன் நரவீர கேரளச் சிலை செட்டி இட்ட திருநிலைவாய், முகவனை, உத்திரமும் திருக்கதவும் இட்டேன்.
9. கடற்றூர் மன்றாடிகளில் கோவன் ஆன நரைய காணாட்டு வெள்ளான் இட்ட தூண்
10. கடற்றூர் மன்றாடிகளில் காவன் சொக்கனான தேவன் இட்ட தூண்
11. கடற்றூர் மன்றாடி உய்ய சந்திரவேழமுடையான் இட்டத்தூண்
12. திருமருதுடையார் தேவரடியாரில் சொக்கன் வெம்பி இட்டத்தூண் - போதிகை

சனிக்கிழமை எண்ணைக் காப்பு

இக்கோயிலில் இறைவனுக்கும் இறைவி, வினாயகர், சேத்திரபாலப் பிள்ளையார் (பைரவர்) ஆகிய தெய்வங்களுக்கும் சனிக்கிழமைதோறும் எண்ணெய்க் காப்பு சாத்த தானம் அளிக்கப்பட்டது. இத்தானம் இக்கோயில் சிவப்பிராமணர் 'சைவ சக்கரவர்த்தி விக்கிரம சோழ பட்டன்' என்பவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இவ்வழிபாடு நடைபெறும்பொழுது திருப்பதியம் பாடப்பட, அதற்கேற்ற நாட்டியமும் நடைபெற்றது. இவ்விரு கலைஞர்களையும் பாடு பாத்திரம் என்றும் ஆடு பாத்திரம் என்றும் கல்வெட்டு குறிப்பிடுவது சிறப்பு.

சந்தியாதீபம்

இக்கோயிலில் சந்தி வேளையில் தீபமேற்றப் பலர் தானமளித்துள்ளனர். இதற்கு அச்சு என்று அழைக்கப்பட்ட காசு வழங்கப்பட்டது. இத்தானமளித்தோர் பெயர்கள்..
1. அருளாளப் பெருமாளான அஞ்சாத கண்டப் பிரம்மராயன்
2. செங்கதிர் செல்வன்
3. புரவுவரியாரில் ஆளவந்தான் விலன் விலாடராயன்

ஆரம்

இறைவனுக்கு அணிவிக்க ஆரம் கொடையாக இரண்டு கழஞ்சு பொன் அளிக்கப்பட்டது. அளித்தவர் குமரன் சாத்தன் ஆன விசையதநளஞ்சியப் பல்லவரையன் ஆவார்.

திருநாளும் மடமும்

இக்கோயில் திருநாளுக்கும் மடத்துக்கும் அரிந்தவன் பல்லவரையன்., வீர்ராசேந்திர கிடாரத்தரையன் ஆகியோர் நிலம் தானமளித்துள்ளர்.

மாலைத் தானம்

கடத்தூரைச் சேர்ந்த வெள்ளாளன் கோவன் அரையனான அரைசுக்கட்டி என்பவனால் இறைவனுக்குக் கருமுகை மலரால் ஆன மாலை சாத்த நிலம் தானமளிக்கப்பட்டது.

அப்பமுது

கோயிலில் நடைபெறும் கார்த்திகைத் திருநாளின்போது இறைவனுக்குப் படைக்க அப்பமுது செய்ய நிலம் தானமாக அளிக்கப்பட்டது. மேலும் அப்பமுது செய்வதற்குத் தேவையான அரிசி, நெய், சர்க்கரை (கருப்புக்கட்டி), மிளகு, எண்ணை, கடுகு, ஆகியவற்றுக்காக குமரன் குமரதனஞ்சிய பல்லவரையன் அச்சுக் காசுகளை கோயில் சிவப்பிராமணரிடம் அளிக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது.

தைப்பூசம்

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நடத்த நிலம் தானமளிக்கப்பட்ட செய்தி கொங்குச்சோழர் வீர்ராஜேந்திரன் (கி.பி.1237) காலத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் இவ்வூரின் நாட்டுப்பிரிவு 'கரைவழி நாட்டு பிரம்மதேயம் ஜெயங்கொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்து சபையோம் கடற்றூரான ராசராச நல்லூர் ஆளுடையார் திருமருதுடையார்க்கு தைப்பூசத் தன்மத்துக்கு' எனக் குறிப்பிடப்படுகிறது.

தண்ணீர்ப்பந்தல்

சோழமண்டலத்து வடகரை இராசராச வளநாட்டு பஞ்சவன் மாதேவியான குலோத்துங்க சோழ சதுர்வேதி மங்கலத்தர் கடத்தூரில் தண்ணீர்ப்பந்தல் வைக்க நிலம் தானமளிக்கப்பட்ட செய்தி ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

சட்டிச்சோறு

இக்கோயில் சிவப்பிராமணர்கள் ஆன இராஜராஜ பட்டர் மகன் விக்கிரம சோழ பட்டனும் தம்பியான இராராப்பட்டனும் திருமடவிளாகத்தில் இருக்கும் நிமந்தக்காரரிடம் காசு (அச்சு) 12 பெற்றுக்கொண்டு நிமந்தக்காரர் தன்மமாக கோயிலுக்கு வழிபாடு செய்ய வருபவர்களுக்கு 'இரண்டு சட்டிக்கு இரு நாழி அரிசிச் சோறு' அளிப்பதாகக் கூறும் செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

அதிராஜராஜன் சந்தி

கோயில் அர்த்த மண்டபத் தெற்குச்சுவரில் காணப்படும் கல்வெட்டில் அதிராஜராஜன் என்பவர் தமது பெயரால் ஒரு வழிபாடு நடத்த நிலமளித்த செய்தி காணக்கிடைக்கிறது. இதனை 'நம்பேரால் அதிராஜராஜந் சந்தி' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.

உவச்சக்காணி

கோயிலில் இசைக்கருவிகள் வாசிக்க உவச்சப்புறமாக நிலம் தானமளிக்கப்பட்டுளது ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

திருவெம்பாவைத் திருத்தாள் கூட்டம்

இத்திருக்கோயிலில் திருவெம்பாவைப் பாடல்கள் ஓத கொங்கு சோழர் வீர ராஜேந்திரன் காலத்தில் குமரன் குமர தனஞ்சியப் பல்லவரையன் என்பவரால் தானமளிக்கப்பட்டது. திருவெம்பாவை பாடுவாரை இக்கல்வெட்டு 'திருவெம்பாவைத் திருத்தாள் கூட்டம்' என்று குறிப்பிடுவது சிறப்பு.

பிரமேக நோய் தீர்ப்பு

கொங்கு சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் (கி.பி.1302) ஆட்சியின்போது விக்கிரம சோழ திருபுவன சிங்கன் என்பவனுக்கு 'பிரமேகம்' என்கிற நோய் (சர்க்கரை நோய்?) வந்து துன்பப்பட்டான். கடத்தூர் மருதுடையாரை வேண்டித்தொழ அந்நோய் இறைவன் அருளால் நீங்கியது. எனவே அவன் இறைவனுக்கு அமுது செய்ய வாய்ப்பாக நிலமளித்த செய்தி மகாமண்டபக் கல்வெட்டில் காணப்படுகிறது. இறைவழிபாட்டினால் நோய் நீக்கப்பெற்ற செய்தி இக்கல்வெட்டின் சிறப்பம்சம் ஆகும்.

கேரள அரசர் மக்கள்

வீரகேரள அரசனான வீரநாராயண தேவர் மக்களில் இராஜாதிராஜ தேவன் என்பவன் கடத்தூர் கோயிலில் வழிபாட்டிற்காக மூன்று அச்சு தானமளித்த செய்தியை ஒரு கல்வெட்டு பதிவு செய்கிறது.

மிக அரிய பல கல்வெட்டுச் செய்திகளைத் தாங்கி நிற்கும் கடத்தூர்த் திருக்கோயில் தமிழ்நாட்டு வரலாற்றின் பக்கங்களில் தனியிடம் பெற்று விளங்கும் திருக்கோயில்களுள் ஒன்று என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க..

1. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தொகுதி 1 (2006) - பதிப்பாசிரியர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர், உதவிப் பதிப்பாசிரியர்கள் - அர. பூங்குன்றன், இரா.ப. கருணானந்தன், பெ.கௌதம்புத்திரன் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு. பக்கம் 157 - 236.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.